1) ஒளியுறுத்தல்
உதட்டைக் குவித்து
ஊதியணைப்பது
மாத்திரமே
ஒரே வழியல்ல!
நெய்யாகவோ
திரியாகவோ
தீயாகவோ
தீராது
எனில்,
எரிகிற விளக்கின்
முன்னால்
கண்ணாடியாகி,
ஒளி
ஒன்று நூறாக
பொலிய
உள்ளத்தை
கள்ளமின்றி
துலக்கிவைத்து
துணையிருங்கள்!
2)நினைவு ஊர்வலம்
என் பயண வழியில்
எங்கோ இடையில் வந்து சேர்ந்தவள்தான்
எட்டெடுத்து விரைந்து வந்து
இணையாக சேர்ந்து நடந்தாள்.
‘இப்போதுதான் என்னை
நீ பார்க்கிறாய்
ஆனால்
எப்போதிலிருந்தோ உன்னை
நான் அறிவேன்’
என்றவள்
என் வியப்பை
சற்றும் சட்டைசெய்யாமல்
வயதாகிவிட்டதால்
நம்புவதற்கு சிரமமாகத் தோன்றும்
தேவதைக் கதை ஒன்றை
திகட்டாமல் சொன்னாள்.
பருகப் பருகக் குறையாது
பெருகிடும் நீர்க்குடுவை
ஒன்றைப் பற்றிய
நினைவின் சித்திரமதை
ஈரம் மிளிரும் விழிகளோடு
அவள் விவரிக்கையில்
நம்பும் குழந்தையானேன் நான்.
என்னிருப்பில்
அப்படியொரு இதத்தை
அணுக்கமான இசைவை
அதுவரையிலும் நான் உணர்ந்தவனில்லை
எத்தனை காலம்
எவ்வளவு தொலைவு
எதுவும் தெரியாது
என்றாலும்
இத்துணையிருக்கும் மட்டும்
இனியில்லை
வழிநடைக் கவலை
என்றெண்ணி
ஆற்றியிருந்தபோது
கண்பார்க்க
முன்னால் நடந்தாள்
இரண்டடி கூடுதலாக
எடுத்துவைத்தால்
எட்டிப்பிடித்துவிடலாம்
என்றிருந்துவிட்டேன்
ஆனால்
அடுத்த திருப்பத்தில்
அரவமேதுமின்றி
அவள் மறைந்துபோனாள்
முதலிலும் இல்லை
முடிவிலும் இல்லை
இடையில் மாத்திரம்
இவ்வளவிற்கு நெருங்கி
எதற்கு வந்தாள்?
ஏன் சென்றாள்?
எவ்வளவிற்கு
இதற்கு நான் பொறுப்பு?
எறும்புகள் கூடி
இழுத்துச்செல்லும்
இறந்த பூச்சிகளின் சடலமாய்
இக் கேள்விகளின் புதிரை
இறுதிவரையும்
இறக்கிவைக்கமுடியாமலே
இனி சுமந்தலையவேண்டும்!
3)இரண்டகம்
நாய்க்கு வால்
என்றால்,
நானுக்கு சொல்தான்
எல்லாமும்.
அசையாத போது
அர்த்தம் அது மட்டுமே
ஆகவே குழப்பமில்லை;
அசையும் போதோ
அதனோடு கூடி வரும்
அனர்த்தம் அநேகம்.
ஆதலால்
நவில்தொறும்
நாளும் புதிதாக
பயின்று வரும்
உரைப்பார்க்குத் தக
உறுபொருள்.
க.மோகனரங்கன்
கவிஞராக அறியப்படும் க. மோகனரங்கன் விமர்சனம், மொழியாக்கத் துறையியிலும் தொடர்சியாக இயங்கிவருகிறார். மீகாமம்’, ‘அன்பின் ஐந்திணை’, ‘மைபொதி விளக்கு’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.