
இந்த வாழ்க்கையை எவ்வளவு முடியுமோ அவ்வளவு வெறுத்தான். இதெல்லாம் எப்போது துவங்கியது? இளம் வயதில் இருந்த அத்தனை மகிழ்ச்சியும் எங்கே போனது?, என அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.
இப்போது இந்த மனதைச் சரிசெய்யாவிட்டால் அது உடைந்துவிடும். இல்லை இல்லை அது ஏற்கனவே உடைந்துவிட்டது. உடைந்த அதன் சில்லுகள் தான் அவனை எல்லாப் பக்கங்களிலும் குத்தி புண்படுத்திக் கொண்டிருக்கின்றன.
அவனுடைய உலகத்தின் சுற்றளவு எவ்வளவு இருக்கும் என யோசித்துப் பார்த்தான்; அதில் இந்த வீடு இந்த தெரு இந்த ஊர் வேலைக்குப் போகும் நகரம் என ஒரு ஐம்பது கிமீ சுற்றளவில் (அதிலும் 30 கி.மீ அளவுக்கான இடம் இன்னும் அவனுக்குப் பரிச்சயமில்லை) அவன் உலகம் முடிந்திருப்பதைக் கண்டு, அவனுக்கு ஏமாற்றமாய் இருந்தது. அவ்வளவு தானா? வாழ்க்கையின் பெரும்பகுதி இங்கேயே முடிந்துவிட்டது. இன்னும் மிச்சமிருக்கும் வாழ்க்கையில் வேறு எங்கே போகப் போகிறோம்? அதுவும் இங்கேதான். இந்த சுடுகாடுதான் அவனுக்கு விதிக்கப்பட்டிருக்கும். அந்த மலங்காட்டில் இருக்கும் எட்டி மரத்தடியில் அவனைப் புதைத்துவிடுவார்கள் அவ்வளவுதான். அவனுக்கு கத்தி அழ வேண்டும் போல இருந்தது. தனக்கு விதிக்கப்பட்டிருக்கும் சுற்றுவட்டாரத்தைத் தாண்டி எங்கேயாவது ஓடிப்போய்விட வேண்டும் என ஆத்திரமாய் இருந்தது. உடல் முழுவதும் பெரிய விலங்குகள் பூட்டப்பட்டு பாதாளச் சிறைக்குள் தள்ளி விடப்பட்டவனைப் போல உணர்ந்தபோது, அவன் தன் சட்டையைப் பிடித்து பலம் கொண்ட மட்டும் இழுத்தான்.
இரவு நகர்கிறதா இல்லையா என்று தெரியவில்லை. வெகுநேரம் கட்டிலில் படுத்துக் கிடந்தான். இரவு கடந்திருக்கும் விடியும் நேரம் ஆகியிருக்கும் என நினைத்தவனாய், எழுந்து விளக்கைப் போட்டு மணியைப் பார்த்தான். இருபது நிமிடம் தான் ஆகியிருந்தது. என்ன அநியாயம் இது? அவன் சந்தேகத்தோடு கடிகாரத்தின் அருகில் சென்று உற்றுப் பார்த்தான். அது ஓடிக் கொண்டுதான் இருந்தது. ஆனாலும் அவனால் நம்பவே முடியவில்லை. மீதமிருக்கும் இரவை எப்படி கடக்கப் போகிறோம் என்று நினைத்துப் பார்க்கவே அவனுக்கு மலைப்பாய் இருந்தது. அதற்குப் பிறகு அவனுக்குத் தூக்கம் வரவில்லை. வீட்டுக்கு வெளியே இருக்கும் தெருவும் ஊரும் திடீரென வேறாய் மாறிவிட்டதைப் போல இருந்தது. இரண்டு புரமும் சீரான இடைவெளியில் அடர்ந்த மரங்களும் அழகிய வீடுகளும் கொண்டு அவன் மனதில் தோன்றிய அந்த தெருவைக் கண்டு மகிழ்ச்சியடைந்தவனாய் ஓடிப்போய் கதவைத் திறந்து பார்த்தான். ஆனால் வெளியே மூலையில் குட்டிச் சுவர் இருக்கும் அதே தெரு அதே வீடுகள் அவனை மௌனமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தன. அவன் வாசலிலேயே நின்று கொண்டிருந்தான் நிலா வெளிச்சத்தில் மின்னும் வீதியைப் பார்க்கப் பார்க்க மனதின் அடியாழத்தில் இருந்து மகிழ்ச்சி சுரந்து கொண்டு வந்தது. நீரோடையைப் போல வரும் மகிழ்ச்சியைக் கண்டு அவன் ஆனந்தமடைந்தான். திடீரென அது வெள்ளமாய் பெருகியது. “ஓ…” என சந்தோஷத்தில் கத்த வேண்டும் போல இருந்தது. அவன் உடல் குதிக்க ஆரம்பித்தது. குதித்துக் கொண்டே இருக்க வேண்டும் போல இருந்தது. சட்டென அந்த கட்டுப்பாடற்ற மகிழ்ச்சியைக் கண்டு அவன் பீதியடைந்தான்.
உள்ளே மீனா தூங்கிக் கொண்டிருப்பதைப் போல இருந்தது. தடதடவென உள்ளே ஓடி, படுக்கையைப் பார்த்தான். அது வெறுமையாய் இருந்தது. மீனா இங்கேதான் எங்கேயோ ஒளிந்து கொண்டிருப்பதாகத் தோன்றியது. மீனா.. மீனா… என்று கத்தினான். வாசலில் வந்து நின்று கொண்டு நிலா வெளிச்சம் படர்ந்த தெருவைப் பார்த்து மீனா.. மீனா… என்று அலறினான்.
பக்கத்து வீட்டிலிருந்து சுந்தரம் அண்ணனின் கணீரென்ற குரல் “டேய் சண்முகம் போய் படு போ” என அதட்டியது. அவன் பேசாமல் உள்ளே போய் படுக்கையில் சுருண்டு படுத்துக் கொண்டான்.
கண்களை மூடி கிடந்தவன்,, அறைக்குள் யாரோ உட்கார்ந்திருப்பதைப் போன்ற உணர்வில், திடுக்கிட்டு விழித்தான். எதிரே மீனா உட்கார்ந்திருந்தாள். அவள் கையில் ஒரு கண்ணாடி தம்ளர் இருந்தது. அதில் செக்கச் சிவந்த நிற பானம் ததும்பிக்காண்டிருந்தது. அறையில் ரத்தவாடை வீசியது. சண்முகம் பயந்து போய் அது என்ன என்றான் அவள் ஸ்ட்ராபெர்ரி ஜுஸ் என்றாள். அவன் இல்லை இல்லை ரத்தம் ரத்தம் என்றான். அவள் முகத்தில் கோபம் உயர்ந்துகொண்டு வந்தது. எழுந்து வந்து அவன் தலைமுடியைப் பிடித்து வளைத்து அவன் வாயில் அந்த திரவத்தை ஊற்றினாள். அது பழச்சாறா, ரத்தமா என்பதை அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. அது இனிப்பாய் இருந்தது கவிச்சை அடித்தது. வாந்தி வந்தது குமட்டினான். அவள் நீ ஒரு மிருகம் எனக் கத்திவிட்டு அறையைவிட்டு வெளியேறிப் போய்விட்டாள்.
அவன் அப்படியே தூங்கிவிட்டானா? அல்லது விழித்துக் கொண்டிருந்தானா? கண் விழித்தபோது அவன் வாழ்வின் மற்றுமொரு காலை நேரம் புதிதாக அவனுக்காக விடிந்திருந்தது. மனதில் எந்த சலனமும் இல்லை. எல்லாம் அமைதியாக இருந்தது. இரவு நடந்ததெல்லாம் அவனுக்கு ஆச்சரியமாய் இருந்தது. ஏன் என் மனதில் என்னென்னவோ சிந்தனைகள் இப்படி தறிகெட்டு ஓடுகின்றன? என்ற கேள்வியில் இருந்து அவனுடைய மன அதிர்வுகள் ஆரம்பமாகின. மீனா இங்கில்லாவிட்டாலும் அவள் இருந்ததைப் போலவே தத்ரூபமாய் இருந்ததே எப்படி என வியந்தான். ஒருவேளை இரவு மீனா இங்கே வந்தாளோ?
சுந்தரம் அண்ணன், சண்முகம் என்று குரல் கொடுத்துக் கொண்டே உள்ளே வந்தார். “ஏம்பா உனக்கு என்ன ஆச்சி. ராத்திரியெல்லாம் அப்படி கத்திகிட்டிருக்க. எம்பொண்டாட்டி என்ன கொல்றாங்கற தெருவுல நின்னுகிட்டு அப்பிடி பச்ச பச்சயா திட்டுற போய் டாக்டர் யாரையாவது பாருப்பா” என்றுவிட்டுப் போனார்.
சுந்தரத்தின் மனைவி சுசீலா வந்து “சண்முகம் ராத்திரி எதுக்கு உம் பொண்டாட்டிய போட்டு அந்த அடி அடிச்சிகிட்டிருந்த பாவம் அவ இந்த ஆம்பளைங்கள்லாம் என் இப்பிடி இருக்கீங்க” என்றாள்.
அவன் “அக்கா மீனா இங்க வீட்லயே இல்ல அவள எங்க நாம் போட்டு அடிச்சேன்?” என்றான். “ராத்திரி நீ அடிச்ச அடி தாங்க முடியாமத்தான் பொட்டிய தூக்ககிட்டுக் கிளம்பிட்டாளே எங்கிட்ட வந்து எவ்ளோ நேரம் அழுதா ராத்திரி விடிய விடிய தூக்கமே இல்ல. இங்க பாரு பொம்பளய அடிக்காத போய் அவள கூட்டிகிட்டு வந்து நல்லபடியா வச்சி குடும்பம் நடத்தப் பாரு” என்றுவிட்டுப் போய் விட்டார். அவன் மனதுக்குள் தளதள வென ஏதோ கொதிப்பது போல சத்தம் கேட்டது.
பசித்தது. காலை உணவாக மூன்று முட்டைகளை வறுத்து சாப்பிட்டான். அலுவலகத்துக்குப் போவதா வேண்டாமா என்று யோசித்தான். தாமோதரனைப் போய் பார்த்தால் ஏதாவது யோசனை சொல்வான் என்று தோன்றியது. அவனுக்குப் போன் செய்தான். அவன் சரி வா என்றான்.
வீட்டுக்குப் போக வேண்டாம் என்றும் தான் இப்போது மகாராஜா இன்னில் தங்கியிருப்பதாகவும் அங்கே வருமாறும் சொன்னான். வீடு இங்கேயே இருக்கும்போது, இவன் ஏன் மஹாராஜா இன்னில் தங்கியிருக்கிறான் என்று குழப்பமாய் இருந்தது. அந்த விடுதி பெரும் கோடீஸ்வரர்கள் தங்கும் விடுதி என்பதை நினைத்துப் பார்க்கும்போதே பொறாமையில் அவன் வயிற்றை என்னவோ செய்தது.
அந்த விடுதிக்கு முன் இவனுடைய ஸ்கூட்டி ஒரு சம்பந்தமில்லாத வஸ்துவைப் போல இருந்தது. விருந்தினர்களை வரவேற்க பொய்க்கால் குதிரை ஆட்டக்காரர்களும் செண்டை மேளக்காரர்களும் தயாராய் இருந்தனர். அடிக்கப்படாத மேளங்களும் ஆடப்படாத கால்களும் சேர்ந்திருந்த அமைதி விநோதமாய் இருந்தது. வரவேற்பரையில் ஒரு சிம்மாசனம் இருந்தது. வரவேற்பரைப் பெண் பீட்ரூட் நிற சேலையும் உதட்டுச்சாயமும் அதே நிறத்தில் ஐந்து பெரிய இதழ்கள் கொண்ட காதணியும் அணிந்து, இவனை மலர்ச்சியுடன் வரவேற்றாள். இவன் தாமோதரன் பேரைச் சொன்னவுடன் அவன் அறைக்கு போன் செய்து கேட்டுக் கொண்டு அவனை ஐந்தாவது மாடியில் இருக்கும் 320 எண் அறைக்குப் போகும்படி சொன்னாள்.
அது அறை இல்லை சூட். பிரமிக்கத் தக்க விசாலத்துடன் தனி வரவேற்பரையும் சமயலறையும் இரண்டு படுக்கை அறைகளும் கொண்டிருந்தது. திரும்பிய பக்கமெல்லாம் விலை உயர்ந்த பொருட்கள் வீற்றிருந்தன.
பச்சை நிற லெகங்கா அணிந்த வெள்ளை நிற பெண் ஒருத்தி கால்களற்ற முட்டை ஓடு போல் வளைந்திருந்த சோபாவில் அமர்ந்து இவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். தாமோதரன் சோபாவில் உட்கார்ந்து கொண்டு, இவனையும் உட்காரச் சொன்னான்.
“நீ ஏன் இங்க தங்கி இருக்கிற” என்றான். “என் வொய்ப் என்னை ரொம்ப சந்தேகப்படறா டார்ச்சர் பண்றா செத்துடலாம் போல இருக்கு” என்றான். இவன் மிகுந்த குழப்பத்தோடு அந்தப் பெண்ணைப் பார்த்தான். அவள் இப்போது ஏதோ ஆங்கில நாவல் ஒன்றில் மூழ்கியிருந்தாள். இவன் எப்படி இவ்வளவு வசதியானவனாய் ஆனான்? என்று எப்படி யோசித்தபோதும் பிடிபடவில்லை. இவன் யோசனையில் குறுக்கிட்டு என்ன விஷயம் என்றான்.
இவன் “மீனா வீட்டை விட்டுப் போயிட்டா” என்றான்.
அவன் ஏன் என்று கேட்டதற்கு தெரியல என்ற இவனுடைய பதில் இப்போது அவனுக்கு குழப்பத்தை தந்தது.
“சரி போய் கூப்பிட்டுப் பாக்கறதுதானே” என்றான். “நான் போய் கூப்பிட மாட்டேன். அவளாத்தானே போனா அவளே வரட்டும்” என்றான். தாமோதரன் அவனைப் பார்த்து ’உனக்கு எதுக்கு இவ்வாளவு ஈகோ?” என்றான்.
ஜீவா டைப் பேட்டில் இருந்து கைகளை எடுத்தான். இதுவரை டைப் செய்தது அவன்தானா? அல்லது தனக்குள் இருக்கும் வேறு யாரோவா என அவனுக்கு ஆச்சரியமாய் இருந்தது. இந்த பக்கங்களில் இருக்கும் எதையும் தான் முடிவு செய்யாதபோது இதெல்லாம் எங்கிருந்து வந்தது என அவனுக்கு குழப்பமாய் இருந்தது. இதிலிருக்கும் அவனுக்குத் தெரிந்த ஒரே ஒரு விஷயம் மீனா வீட்டில் இல்லை என்பதுதான். அது மீனா அல்ல மஞ்சுளா.
மஞ்சுளா கடந்த ஒரு வாரமாக வீட்டில் இல்லை. அவளுக்கும் அவனுக்கும் எந்த தகராறும் இல்லை. மன வருத்தமும் இல்லை. எப்போதும் ஏங்க ஏங்க என்றோ அல்லது மாமா மாமா என்றோ அவனை அழைத்தபடியே இருந்தாள். அவர்களுக்கிடையே மிகத் திருப்தியான உறவு இருப்பதால் தான் அவள் இப்படி தன்மீது இந்த அளவுக்கு மயக்கத்துடன் இருக்கிறாள் என்று அவன் நினைத்திருந்தான். இதுதான் ஈகோவா? இதுதான் அவனை விஷயம் தெரியாதவனாக மாற்றிவிட்டதா?
இல்லை அவள் என்னை பயங்கரமாய் முட்டாளாக்கியிருக்கிறாள். அவனுடைய கைகள் பரபரத்தன. இன்னும் என்னவாவது டைப் செய்ய வேண்டும் என ஆத்திரப்பட்டான். அந்த ஆவேசம் அவன் கதையை சின்னாபின்னமாக்கிவிடும் என்ற எண்ணம் அவன் கைகளைக் கட்டிப்போட்டது. கைகளை இறுக கட்டிக் கொண்டான். ஆனால் ஏதோ ஒரு விசை அவன் கைகளை இழுத்து டைப் பேடில் பதிய வைக்க போராடியது. அவன் எழுந்து வேகமாய் அறையை விட்டு வெளியேறினான். பாக்கெட்டில் இருந்த சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டான்.
கொஞ்சநேரம் நடந்தால் நன்றாயிருக்கும் போல இருந்தது. எழுந்து வீட்டை பூட்டிக் கொண்டு நடந்தான். மஞ்சுளா ஒரு மிகை பெண்மைத் தன்மை கொண்ட பெண். அவளைப் பார்க்கும்போது எந்த ஆணுக்கும் ஒரு ஈர்ப்பு ஏற்படும். அப்படியான ஒரு ஈர்ப்பு தன்னிடம் இருக்கிறதா? என அவன் தன்னையே கேட்டுக் கொண்டான். அவனிடம் மிகை ஆண்மைத் தன்மை இருப்பதாக சொல்ல முடியாது. முடியாது என்ன முடியாது இல்லை. வட்டமான முகம். சிவந்த உதடுகள். சிவந்த மெலிந்த தேகம். மென்மையான கேசம் இதெல்லாம் ஆண்களை மேலும் ஆழ்ந்த ஆண்களாய் காட்டவும் செய்யும்தான். ஆனால், இத்தன்மைகள் பெண்களை நினைவுபடுத்துவதாகவும் சொல்லலாம்தானே?
சட்டென அந்த எண்ணத்தை விட்டுத்தள்ளினான். அது அவனுக்குள் எப்போதும் உண்டாகும் விவாதம்தான். அதற்கும் மஞ்சுளாவோடு அவன் வாழ்ந்த வாழ்வுக்கும் அல்லது மஞ்சுளா தன்னை விட்டு பிரிந்ததற்கும் சம்பந்தம் இல்லை
ஆனால் மஞ்சுளா இப்போது சென்றிருக்கும் ஆண் என்னைப் போன்ற தோற்றம் உடையவன் இல்லையே? அகன்று உயர்ந்த தோள்கள், முரட்டு கைகள் அதில் சுருள்சுருளாய் அடர்ந்த முடிகள். முகத்திலோ உடலிலோ செய்கைகளிலோ பெண்மையை நினைவு படுத்தும் எந்த தடயங்களும் இல்லை.
அவன் ஆழ்ந்த சிந்தனையில் லயித்தவனாக நடந்து பேக்கரிக்கு சென்று லெமன் டீ குடித்துவிட்டு திரும்ப வந்து வீட்டைத் திறந்து லேப்டாப் முன்பு உட்கார்ந்து அதை இயக்கி டைப் பேடில் கைகளை வைத்துக் கொண்டிருந்தபோதுதான் அவனுக்கு சுயநினைவு வந்தது. திடுக்கிட்டு சுற்றும் முற்றும் பார்த்தான். தான் இப்போது வெளியே போய் விட்டு வந்தது உண்மையா அல்லது கற்பனையா என்று குழம்பினான். பின் பதட்டம் தனிந்தவனாக டைப் செய்ய ஆரம்பித்தான்.
“தாமு ஏதாவது ஐடியா சொல்லு. மீனாவ எப்படி சமாதானம் பண்றது?”
“முதல்ல மீனாவுக்கும் உனக்கும் என்ன பிரச்ன? அத சொல்லு.”
“மீனாவுக்கு இன்னொருத்தனோட காண்டாக்ட் இருக்கு.”
“சரி தொடர்பு இருக்குன்னா அப்புறம் எதுக்கு அவள சமாதானப் படுத்த என்ன வழின்னு கேக்கற? அது இருந்துட்டுப் போவுதுன்னு சொல்ல வர்றியா?”
“நா அப்படி சொல்ல வரல. இனிமே அவ இந்த மாதிரி நடந்துக்காம பாத்துக்கணும்.”
“இனிமே அப்படி நடந்துக்க மாட்டேன்னு அவ சொன்னா நீ நம்புவியா?”
….
“நம்ப மாட்டதானே? அப்புறம் எதுக்கு அவளை கூப்டுகிட்டிருக்க?”
“ஆனா எனக்கு வேற யாருகிட்டயும் தொடர்பு இல்லையே?”
“அது உன்னோட பிரச்ன”
“நா அந்த மாதிரி இருந்தா அவ சும்மா இருப்பாளா?”
தாமோதரன் பலமாக சிரித்தான். “டேய் முட்டாள் அதுக்கும் இதுக்கும் என்னடா சம்பந்தம். நீ மொதல்ல வெளிய போ. நீயெல்லாம் சேந்தும் இருக்க மாட்ட. பிரிஞ்சும் இருக்க மாட்ட.” என்றான்.
திடீரென போன் ஒலித்தது.
அவன் டைப் செய்வதை நிறுத்திவிட்டு போனை எடுத்தான். மஞ்சுளா
“கடைசியா என்னதான் சொல்ல வர்றீங்க?” என்றாள்.
அவன் ஒன்றும் சொல்லாமல் போனை வைத்துவிட்டான். மீண்டும் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தான். சிகரெட்டைக் குடித்து முடித்துவிட்டு மஞ்சுளாவுக்கு போன் செய்து, நீ அவங்கூடவே இருந்துக்க என்றான்.
அவள் “ஐயோ உங்களுக்கு என்ன பைத்தியமா? உங்க கூடயெல்லாம் இத்தன வருஷம் எப்படித்தான் குப்பை கொட்டினேனு எனக்கே ஆச்சரியமா இருக்கு. உங்க சந்தேகத்தில ஏதாவது லாஜிக் இருக்கா யோசிச்சிப் பாருங்க. ஏன் உங்க புத்தி இப்படி போவுது. இந்த லட்சணத்தில நீங்க கதை வேற எழுதறீங்க. போடா மயிருன்னு போயிடுவேன். ஆனா உங்க இன்னொசென்ட்தான் என்ன அப்படி செய்ய விடமாட்டேங்குது. எல்லா விஷயத்திலயும் எல்லார்கிட்டயும் இன்னசென்டா நடந்துக்கிற நீங்க இந்த விஷயத்தில மட்டும் ஏன் பைத்தியம் மாதிரி நடந்துக்கறீங்க. நாளைக்கி காலையில நான் வீட்டுக்கு வருவேன். திரும்பவும் நீங்க இப்படியே பேசிகிட்டிருந்தா. நான் பேன்ல சேலய கட்டி தொங்கிருவேன்.” மஞ்சுளா போனை வைத்துவிட்டாள்.
தாமோதரனிடம் இதை எப்படி சொல்வது என யோசித்தான். அவன் கால் மேல் கால் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்கும் விதமும் அந்த வெள்ளைக்காரியின் தெனாவெட்டும் அவனுக்குப் பிடிக்கவே இல்லை என்பதை இப்போதுதான் உணர்ந்தான்.
தாமோதரனின் மனைவி அவனைத் தேடிக் கொண்டு அந்த அறைக்கே வந்து விட்டதாகவும், அங்கிருக்கும் விலை உயர்ந்த பொருட்களை எல்லாம் அடித்து நொருக்குவதாகவும் டைப் செய்தான்.
அலுவலகம் தொடர்பான நினைவுகள் மனதுக்குள் முகிழ்க்கத் துவங்கியது. தொஞ்ச நேரம் அதிலேயே லயித்திருந்தான். இன்று அலுவலகம் விடுமுறை. நாளை வேலைக்குப் போனதும் தொடர வேண்டிய வேலைகளை மனதுக்குள் வரிசைப்படுத்தினான். போன் ஒலித்தது.
தாமோதரன் “டேய் ஜீவா என் வொய்ப் இங்க நான் தங்கி இருக்கிற எடத்துக்கே வந்துட்டாடா? அவளுக்கு எப்படி தெரிஞ்சது நீ சொன்னியா?” என்றான். ஜீவா குழப்பமாய் யோசித்தான். “எங்க மகாராஜா இன்னுக்கா?” என்றான். தாமோதரன் அதற்குள் போனை வைத்துவிட்டான். ஜீவா நன்றாக யோசித்தான். இந்த ஊரில் மகாராஜா இன் என்கிற பெயரில் அவ்வளவு பெரிய ஸ்டார் ஓட்டல் இல்லையே? அதுவும் இந்த தாமு ஒரு கவர்மெண்ட் கிளர்க் அவன் போய் அந்த மாதிரி ஓட்டல் சூட்டில் தங்குவதாவது? அவன் ஹோட்டல் பெயர் எதையும் சொல்லவில்லையே? தங்கி இருக்கிற இடம் என்றுதானே சொன்னான். அவன் திரும்பவும் தாமோதரனுக்கு போன் செய்தான். அவன் போனை எடுக்கவில்லை.
தாமோதரன் எப்போதும் என்னுடைய கதைகளை படித்ததில்லை. என்றாலும் அவனுடைய பெயரை அப்படியே கதையில் பதிவு செய்திருப்பது சரியாகப் படவில்லை. அவன் கதையில் தாமோதரன் என்ற பெயரை ஜெகன் என்று மாற்றினான்.
திரும்ப போன் ஒலித்தது. மஞ்சுளாவாகத்தான் இருக்கும். இனி உன்னோடு சேர்ந்து வாழமாட்டேன் என்று சொல்லப் போகிறாள் அவன் யோசனையோடு போனை எடுத்துப் பார்த்தான் அதில் மீனா என்றிருந்தது.
000

குமாரநந்தன்
குமாரநந்தன் சிறுகதைகள், கவிதைகள் புனைபவர். பகற் கனவுகளின் நடனம் என்ற கவிதைத் தொகுப்பும், பதிமூன்று மீன்கள், பூமியெங்கும் பூரணியின் நிழல், நகரப் பாடகன், மகா மாயா ஆகிய நான்கு சிறுகதைத் தொகுப்புகளும் வெளியாகி உள்ளன. சேலம் அருகே மல்லூரில் வசிக்கிறார்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
உளவியற் சிக்கல்கள் குறித்த இதுபோன்ற கதைகள் வாசிப்பதற்கு தொடர் நாட்டம் தருகின்ற போதிலும் அதில் உள்ளீடு இல்லை என்றால் வெறும் வார்த்தைகளால் கட்டமைக்கப்பட்ட பத்திகளாகவே இருக்கும். இங்கு மீனாவா, மஞ்சுளா வா, தாமோதரனா, ஜெகனா என்பது பிரச்சினையில்லை. வேறு ஏதாவது என்றாலும் அதுவும் முக்கிய பொருளாகப் பேசப்படவில்லை. நன்றி