
எதிர்பாராத பயங்கரச் சத்தத்தில் உடல் தூக்கிவாரிப்போட்டதோடு அவன் கண்கள் அநிச்சையாகச் சத்தம் வந்த திசையில் திரும்பின. விபத்தை ஒரு வட்டமான பரப்பென்று வைத்துக் கொண்டால், அதன் மையம் ஏற்கனவே நிகழ்ந்து முடிந்திருந்தது. அதைச் சுற்றியுள்ள விளிம்பு இவன் திரும்பியபோது, இவன் பார்வைக்கு முன்பாக தொடர்ந்து கொண்டிருந்தது. ஒரு லாரியின் சக்கரம் அந்த பெண்ணின் கால்களின் அருகே நின்றிருந்தது. தன்னை அறியாமல் அவன் குரல்வளையிலிருந்து விசித்திரமான சத்தம் எழுந்தது. அது அவனையே திடுக்கிடச் செய்தது. அது போல பல அலறல்கள் பலவித தூரங்களிலிருந்து கேட்டன. அவன் கால்கள் ஈர்க்கப்பட்டவை போல சம்பவ இடத்தை நோக்கி ஓடிக் கொண்டிருந்தன. இவை எல்லாமே கண் இமைக்கும் நேரத்தில் நடந்திருந்தன. இப்போது அந்த லாரி சட்டென அங்கிருந்து கிளம்பிச் சென்றது.
எல்லோரும் திகைத்துப் போய் பதற்றத்தில் உலறிக் கொண்டும், வாய்க்கு வந்தபடி திட்டிக் கொண்டும் இருந்தனர். யாரோ அம்புலன்ஸ்க்குப் போன் செய்தனர். அந்தப் பெண் ரத்தச் சகதியாய் கிடந்தாள். அவள் வலது கால் முறிந்து கிடந்தது. அதைப் பார்த்ததும் இவனுக்கு மயக்கம் வந்தது. தலையைப் பிடித்துக் கொண்டு அங்கிருந்து விலகி நடக்க ஆரம்பித்தான். திடீரென சுயநினைவு வந்தவனாய் தான் நடந்து கொண்டிருப்பதை உணர்ந்து நின்றான். எவ்வளவு தூரம் எவ்வளவு நேரம் அப்படி நடந்து வந்தான் என்று தெரிந்துகொள்ள நினைத்து திரும்பிப் பார்த்தான். சம்பவ இடம் எங்கே என்றே தெரியவில்லை. இவன் தன்னைச் சுற்றி பார்த்துக் கொண்டான். விபத்திற்கு சம்பந்தம் இல்லாத வழக்கமான இயக்கங்களோடு தனி உலகம் போல இருந்தது அந்த இடம். அவன் வியப்புடனும் குழப்பத்துடனும் தான் இப்போது எங்கே போக வேண்டும் என்கிற நினைவை மனதுக்குள் தேட ஆரம்பித்தான்.
அவன் மனம் முழுவதும் அந்தக் காட்சிதான் ஆக்கிரமித்திருந்தது. ஆத்திரமும் கோபமும் அலை அலையாய் எழுந்தன. ஆனால் அவை யார் மீது பாய்வது என்று தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தன. தவறு யார் மீது? அந்த லாரி டிரைவர் மீதா? அந்தச் பெண் மீதா? அவன் அதிவேகத்தில் வந்திருக்கலாம், அல்லது அவள் எதிர்பாராதவிதமாக சாலையில் குறுக்கிட்டிருக்கலாம். உண்மையை யூகிக்க முடியவில்லை. யார் மீது கோபம் கொள்வது என்று தெரியாமல் அவன் அனைத்தின் மீதும் கோபப்பட்டான். இந்த சமூக அமைப்பு, நகரமயமாதல், நகர உள் கட்டமைப்பில் இருக்கும் போதாமைகள் குளறுபடிகள், அரசாங்கத்தின் விட்டேத்தித் தனம், மனிதர்களின் பொறுப்பின்மை எல்லாவற்றின் மீதும் அவன் கோபம் பொங்கிப் பரவியது. அந்த உணர்வுக்கு நடுவே அவள் வலி தேங்கிய முகத்தோடு மயங்கி இருக்கிறாளா இறந்துவிட்டாளா என தெரியாத வகையில் கிடந்தாள்.
இதே நினைவுகளோடும், கோபத்தோடும் அவன் அலுவலகம் போய்ச் சேர்ந்தான். மதியத்திற்கு மேல் தலைவலி எடுத்தது. அலுவலகத்தில் சொல்லிக் கொண்டு வீட்டுக்குக் கிளம்பினான்.
தினம் தினம் எத்தனை விபத்துகள் எத்தனை உயிரிழப்புகள் எவ்வளவு சேதங்கள், இதெல்லாவற்றையும் மனிதனால் சரி செய்யவே முடியாதா? மேலும் மேலும் ஆயாசம் கூடிக்கொண்டே வந்தது. அதே சமயம் தூங்கவும் முடியவில்லை. தூங்கி எழுந்தால் தான் இதிலிருந்து ஓரளவாவது மீள முடியும். ஆனால், எப்படித் தூங்குவது, அந்த முறிந்த கால், அவள் முகம், அடர்ந்த ரத்தம்.
மாலையில் ரகுபதி அவனைப் பார்க்க வந்தான். “ஏன் குணா என்னாச்சி. ஆபீஸ்ல காலையில இருந்தே நீ சரியா இல்லை. உடம்பு சரியில்லையா? மாத்திரை சாப்டியா தூங்கினியா?”
அவனுக்கு வெடித்து விடும்போல தலை வலித்தது. “ரகு எனக்கு தூக்க மாத்திரை வாங்கிட்டு வந்து தர்றியா? என்னால தூங்க முடியல” அவன் கண்களில் இருந்து கண்ணீர் திரண்டு விழுந்தது.
ஏன்டா என்னடா ஆச்சி? ரகு ஆச்சரியமாய் அவனைப் பார்த்தான். அவன் அருகில் வந்து உட்கார்ந்து அவனை மெதுவாக படுக்கையில் சாய்த்தான். இதமாக தலைலைப் பற்றி தேய்த்துவிட்டான்.
குணா காலையில் நடந்ததை சொன்னான்.
இதுக்கா இவ்வளவு தூரம் அலட்டிக்கிற? ரகுவின் அந்த கேள்வி குணாவை திடுக்கிட வைத்தது. “டேய் என்னடா நீ வண்டி ஏத்தி கொல்றதெல்லாம் சாதாரணம்ங்கற மாதிரி சொல்ற” என்றான்
“வண்டி ஏத்தி கொல்றது சாதாரண விஷயம் இல்லடா. ஒரு ஆக்சிடெண்ட் அது ரொம்ப சாதாரணம். எப்ப வேணும்னாலும் எங்க வேணும்னாலும் எது வேணும்னாலும் நடக்கும். இந்த நிமிஷத்தில இருக்கறவங்க அடுத்த நிமிஷம் இருப்பாங்கன்றதுக்கு எந்த உத்திரவாதமும் இல்லை.”
“விபத்தை எதுவுமே செய்ய முடியாது அப்படிங்கறதுதான் மனிதனோட கண்டுபிடிப்பா?”
“விபத்தே நடக்கக் கூடாதுன்னா டைம் மெஷின்ல எதிர்காலத்தில இருந்து வந்து தடுத்தாதான் உண்டு”.
குணா அந்த அலட்சியத்தைக் கண்டு சட்டென முகம் சுழித்தான். அவன் முகத்தில் உடனே வெளிச்சம் அடித்தது. “அதுதானே? எதிர்காலத்தில இருந்து வந்தா விபத்தை தடுத்திடலாம் இல்ல?”
“டேய் முட்டாள் மாதிரி பேசாத. அதெல்லாம் எந்தக் காலத்திலும் சாத்தியம் இல்ல.” ரகு சிரித்துக் கொண்டே தொடர்ந்தான். “அப்படி ஒன்னைக் கண்டுபிடிச்சிட்டா? இந்த உலகத்தில எப்ப விபத்துன்னு ஒன்னு நடந்துச்சோ அப்போதிலிருந்து எல்லாத்தையும் மாத்திடலாம். போர்களை மாத்திடலாம். மன்னர்களின் இறப்புகளை, நாடு அடிமைப் பட்டிருந்ததை எல்லாம் மாத்திடலாம். எல்லோரும் எல்லாத்தையும் மாத்திகிட்டே இருந்தா அப்புறம் காலம்ங்கற விஷயத்துக்கே அர்த்தம் இல்லாம போயிடும்.”
ரகு இப்படியெல்லாம் சிந்திப்பான் என்பதை குணா எதிர்பார்க்கவில்லை.
ரகு பிளாஸ்க்கை எடுத்துப் போய் காபி வாங்கி வந்து கொடுத்தான். தலைவலி மாத்திரை ஒன்றை போட்டுக் கொள்ளச் செய்து அவனைப் படுக்க வைத்தான். “பேசாம தூங்கு எல்லாம் சரியாப் போயிடும். விபத்து உன் கண் முன்னால நடந்ததாலேயே அதுக்கு நீ இவ்வளவு ரியாக்ட பண்ற. உன் கண்ணுக்குத் தெரியாம எவ்வளவோ நடக்குது. அதுக்கல்லாம் நீ எந்த ரியாக்டும் பண்றதில்லைங்கறத ஞாபகத்தில வச்சிகிட்டீன்னா எந்த குழப்பமும் இருக்காது.”
ரகுபதி போனபின் குணாவுக்கு விபத்தைப் பற்றிய நினைவுகள் மெல்ல மங்கி, கால இயந்திரம் பற்றிய எண்ணங்கள் முழு வீச்சில் மனதை ஆக்கிரமித்தன.
கால இயந்திரம் மனிதக் கற்பனையாய் மட்டுமே இருக்க சாத்தியமில்லை. அது நிச்சயம் கண்டுபிடிக்கப்படும். எளிய பயண்பாட்டுக்குரிய ஒன்றாய் மாறும். குணா எதை எதையோ கற்பனை செய்தான். தூக்கத்தில் அவனே ஒரு கால இயந்திரத்தில் வந்து அந்த விபத்து நடக்கும் இடத்தில் அது நடக்காமல் சமயோசிதமாய் தடுத்தான். அந்தப் பெண் மகிழ்ச்சியாய் அவனுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாள். தூக்கம் தெளிந்துவிட்டது. ஆச்சரியமாய் இருந்தது. இப்படி ஒரு கனவு ஏன் வர வேண்டும்.
அவன் கனவுகளைப் பற்றி இவ்வளவு காலமாக எதுவும் யோசித்ததில்லை. ஆனால், இப்போது அவனுக்கு ஆச்சரியமாய் இருந்தது. அவன் காலத்திலேயே கால இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டுவிடுமா? நான் அதை இயக்குவேனா? ஆனால் இது கனவுதானே? கனவுதான் என்றாலும் குறிப்பாக இப்படி ஏன் கனவு வர வேண்டும்…அவனுக்கு ஒரே யோசனையாய் இருந்தது. சட்டென்று எல்லாம் பைத்தியக்காரத் தனமாயும் இருந்தது.
அதீத புனைவுகளை சட்டென மனம் கைவிட்டது. அவன் இப்போது தனக்கு வெளியில் இருப்பவற்றை நேரடியாகப் பார்த்தான் அதன் மீது எண்ணங்களை பூசாமல் வெறுமனே இருந்தான். இந்த தளர்வு நிலைதான் அவனுக்கு தேவையாய் இருந்தது. மனம் சோர்ந்துவிட்டது போல. அதனால் தான் அமைதியாய் இருக்கிறது.
மறுநாள் காலையில் கண் விழித்தபோது, புத்துணர்வாய் உணர்ந்தான். குளித்து சாப்பிட்டுவிட்டு, பைக்கை எடுத்துக் கொண்டு ஆபீசுக்கு கிளம்பினான்.
அவன் வீடு இருக்கும் சந்திலிருந்து மூலை திரும்பியதும் கொஞ்ச தூரத்தில் இருக்கும் பேக்கரிக்கு எதிரே குறுக்காக நீண்டு செல்லும் பிரதான சாலையில் தான் நேற்று அந்த விபத்து நடந்திருந்தது. அப்போது அவன் டீ குடிப்பதற்காக அறையிலிருந்து நடந்து வந்திருந்தான்.
நேற்றைய நிகழ்வை காலம் அப்போதே மூடி மறைத்துவிட்டு வெகுதூரம் சென்றுவிடடதைப் போல இருந்தது அந்த இடம். நேற்று அப்படி ஒரு சம்பவம் நடந்ததற்கான எவ்வித அறிகுறியோ சிறு தடயமோ அங்கே இல்லை. சிதறிக் கிடந்த கண்ணாடிச் சில்லுகள் கூட அங்கே இல்லை. அவனுக்கு வியப்பாய் இருந்தது. தன்னுடைய சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள அருகில் இருந்தவரிடம் “நேத்து காலையில இங்க ஒரு ஆக்சிடெண்ட் நடந்துச்சே?” என்றான்.
அவர் அவனை ஆச்சரியமாகப் பார்த்தார். “நேத்து அப்படி எதுவும் இங்க நடந்த மாதிரி தெரியலையே” என்றார். வேறு யாரிடமாவது கேட்கலாமா என்று பார்த்தான். ஆனால், இதை ஏன் நான் தோண்டித் துருவி விசாரிக்க வேண்டும்? அப்படி எதையும் துருவித் துருவி ஆராய்ந்தால் நடந்ததற்கு மட்டுமல்ல நடக்காத விஷயங்களும் கூட நடந்திருக்கக் கூடும் என்பதைப் போல ஆதாரங்கள் கிடைக்க ஆரம்பிக்கும். அவனுக்கே அவனுடைய கண்டுபிடிப்பு விசித்திரமாய் இருந்தது. அமைதியாக நிம்மதியாக அலுவலகத்திற்குப் போனான்.
வழக்கமான வேலைகளைத் துவங்கிய கொஞ்ச நேரத்தில் அந்த விபத்து நடக்காமல் இருந்திருக்க வாய்ப்பில்லை என்றது அவன் மனக் குரல். தொடர்ந்து அந்த நிகழ்வை துல்லியமாக அவனுக்குள் திரையிட்டுக் காட்டி, இது எப்படி நடக்காத ஒன்றாய் இருக்க முடியும்? என்றது.
நடக்கவில்லை என்று யார் சொன்னது? நடந்ததுதான். ஆனால், அது மாற்றப்பட்டுவிட்டது.
உனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா? நிஜமாகவே நீ இதை நம்புகிறாயா?
ஏன் இருக்க முடியாது இப்போது எனக்கு வயது முப்பது இன்னும் இருபது அல்லது முப்பது ஆண்டுகள் நான் இருக்க மாட்டேனா? அந்தக் கால கட்டத்தில் கால இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கக் கூடாதா? அதில் வந்து இந்த நாளில் என் மனப் பாதிப்புக்கு காரணமான அந்த சம்பவத்தை நான் மாற்றி இருக்கக் கூடாதா? காலத்தில் இதுதான் நடக்க வேண்டும் இது நடக்காது நடந்திருக்க முடியாது என்று முடிவு செய்ய நீ யார்? முக்காலமும் அறிந்தவனா?
அவன் மனம் அவனை வியப்புடன் பார்த்தது. “நீ நிஜமாகவே இதை நமபுகிறாயா? நீ பைத்தியக் காரன் ஆக வேண்டும் என்று முடிவு செய்துவிட்டாயா? அடப் பைத்தியமே?”
அவனுக்கு அவன் மனதின் நடவடிக்கைகள் சுத்தமாக பிடிக்கவில்லை. இந்த மனம் தான் வைத்ததுதான் சட்டம் என்பது மாதிரி நடந்து கொள்கிறது. இதன் கொட்டத்தை அடக்க வலுவான இன்னொரு சம்பவம் நடக்க வேண்டும். ஆனால், அது இதுபோல விபத்தாய் இருக்கக் கூடாது. வேறு ஏதோ ஒன்று வலுவானதாக கேள்வி கேட்க முடியாததாக இந்த மனதின் வாயை அடைப்பதாக… அப்படி ஒன்று நடக்குமா?
அடுத்தடுத்த நாட்கள் வழக்கம் போல சென்றன. அவன் கூச்சலுக்குப் பயந்துவிட்டதைப் போல அவன் மனமும் சில நாட்கள் அமைதியாய் இருந்தது. பத்து நாட்கள் போல கடந்தபின், “எதிர்காலத்தில் உன் கால இயந்திரம் ரிப்பேராய் இருக்குமோ?” என்று நையாண்டியாய் கேட்டு சிரிக்க ஆரம்பித்தது.
“இப்போது இங்கே என்ன நடந்துவிட்டது? கால இயந்திரத்தில் வந்து சரி செய்ய? நீ பைக்கில் பெட்ரோல் இருப்பதைப் பற்றி கவனிக்காமல் போனதற்காக எதிர்காலத்தில் இருந்து பெட்ரோல் கொண்டு வந்து ஊற்றி, உன்னைக் கஷ்டப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சொல்ல வருகிறாயா?”
“அப்படியில்லை இரண்டு நாட்களுக்கு முன் முடிவடைந்த உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா தான் கோப்பையை வெல்லும் என்று உன் எதிர்காலத்திலிருந்து தகவல் வந்திருந்தால் உலகம் முழுவதும் நடந்த ஆன்லைன் பெட்டிங்கில் நீ கோடி கோடியாய் சம்பாதித்திருக்கலாமே?”
“ஆமாம் அதற்கு சில லட்சங்களாவது உன்னிடம் பணம் வேண்டுமே? அதையும் எதிர்காலத்திலிருந்து கொண்டு வந்து தரச் சொல்கிறாயா?”
“ஏன் தந்தால் என்னவாம்?”
“உன் புத்தி ஏன் இப்படி அற்பமாய் இருக்கிறது?”
குணாவின் சந்தேகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கிவிட்டன. அவனுடைய யூகங்களை நினைத்து அவனுக்கே சிரிப்பாய் வந்தது. மனிதர்கள் எப்போதும் சரியாகவே மட்டும்தான் சிந்திப்பார்கள் என்று ஒன்றும் இல்லையே. பைத்தியக்காரத்தனமாக சிந்தனைகளும் சகஜம்தானே, உண்மைதான் சொல்லப்போனால் பைத்தியக்கார சிந்தனைகள் தான் அதிகம்.
அவன் சின்ன வயதிலிருந்து இதுபோல என்னன்னவெல்லாம் பைத்தியக்காரத்தனமாக நினைத்துக் கொண்டிருந்தோம் என்று நினைவுகளை கிளறிக் கிளறிப் பார்த்தான்.
அவர்கள் ஊர் முனியப்பன் கோவில் கிணற்றில் ஏழு கொப்பரைகளில் இருக்கும் தங்கக் காசுகள், ஊர் எல்லையில் இருக்கும் சின்ன கரட்டின் உச்சியில் இருக்கும் பெருமாள் கோவில் குகைக்குள் செல்லும் பாதையில் சென்றால் திருச்செங்கோட்டு மலைக்குப் போய்விடலாம் என்ற செய்தியை உண்மையென்று நம்பியது. சின்ன வயதில் பேய்களைக் கட்டி அவற்றை ஏவல் அடிமைகளாக வைத்துக் கொள்ள முடியும் என்ற நம்பியது. ஆண் பெண் ஓணான்களைக் கொன்று சுடுகாட்டில் வைத்து பூஜை செய்து தயாரித்த மை கிடைத்தால் அதை ஒரு ரூபாய் நோட்டில் தேய்த்து பயன்படுத்தும்போது அது எங்கே இருந்தாலும் தன் பாக்கட்டுக்கே வந்துவிடும் என்று நம்பியது. அதற்காக ஓணான்களை நோட்டமிட்டது. சுடுகாடு வீட்டுக்கு பக்கத்திலேயே இருந்ததால் அந்த பூஜையை எளிதில் செய்துவிட முடியும் என்று நம்பியது. ஒரு மூலிகையை பிழிந்து கண்ணில் தேய்த்துக் கொண்டால் மண்ணுக்கடியில் இருக்கும் புதையல்களைப் பார்க்க முடியும் என்று நம்பியது. சஞ்சீவி வேரை தொடையில் வைத்து தைத்துக் கொண்டால் எங்கிருந்தாலும் மாயமாய் மறைந்து நினைத்த இடத்துக்குப் போக முடியும் என்று நம்பியது… அவனுடைய நினைவுகள் நீண்டு கொண்டே போனது.
அதுபோலத்தான் இதுவும் எல்லாம் அந்தந்த காலத்திற்கு அந்தந்த வயதிற்கு அந்ததந்த அறிவிற்கு ஏற்ற நம்பிக்கைகள்.
குணாவால் இன்னும் சரியாகத் தூங்க முடியவில்லை. ஆழ்ந்த உறக்கத்துக்கு செல்லும்போது, தடாரென துல்லியமாய் கேட்கும் ஓசையில் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்துவிடுகிறான். கொட்டிக் கிடக்கும் ரத்தம், அங்கம் சிதைந்திருக்கும் உடல்கள் ஏன் இந்தக் காட்சிகள் அவன் நினைவில் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன. அவனுக்கு என்னதான் ஆயிற்று ஒன்றும் புரியவில்லை. சில சமயங்களில் அந்தக் காட்சிகளைக் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து அப்படியே தூங்க முயற்சிக்கும்போது, அவை மேலும் சகிக்க முடியாத காட்சிகளாக மாறுகின்றன. அவன் சரியாகத் தூங்கி பல நாட்கள் ஆகிவிட்டன. இனி தன்னால் தூங்கவே முடியாது என அவனுக்குப் பயமாய் இருந்தது.
அன்று வழக்கம் போல காலையில் அவன் வண்டியில் போகும்போது, அந்த விபத்து நடந்த இடத்துக்கு அருகே, அந்தப் பெண் ஸ்கூட்டியில் போவது போல இருந்தது. ஆச்சரியமும் சந்தோஷமும் அவனைப் புரட்டி எடுத்தன.
அடுத்தநாளும் முதல்நாள் போலவே அவள் அந்த இடத்தை கடந்து சென்றாள். சந்தேகமே இல்லை அது அவள்தான்.
அப்படியென்றால் உண்மையிலேயே அந்த விபத்து நடக்கவில்லையா? இல்லை நான் நம்பியது போல கால இயந்திரத்தில் எதிர்காலத்தில் இருந்து வந்த நான் அந்த விபத்தை நடக்காமல் செய்துவிட்டேனா?
இப்பொழுதெல்லாம் கனவுகளில் அந்த கொடூரம் சற்று குறைந்திருந்தது. ஆனாலும் ஏனோ அவனுக்கு தூக்கம் வருவதில்லை. அது அவனுக்கு ஒரு பிரச்னையாகவும் இல்லை என்பது தான் அவனுக்கு விசித்திரமாக இருந்தது.
அன்றும் அதே போல அந்தப் பெண்ணை தொலைவில் பார்த்தபோதுதான் அவனுக்கு சந்தேகமாக இருந்தது. தினமும் இந்தப் பெண் எப்படி சரியாக தன் கண்ணில் படுகிறாள். அதுவும் மிக அருகிலோ அல்லது வெகு தூரத்திலோ செல்வதில்லை. சரியாக அவனால் அடையாளம் தெரிவது போலவும் தெரியாதது போலவும் இருக்கும் ஒரு குழப்பமான தூரத்தில் அவள், அவன் சீக்கரமே போனாலும் அல்லது கொஞ்சம் தாமதமாகப் போனாலும் அதே தூரத்தில் அதே போல போவதன் மர்மம் என்ன?
இந்தக் குழப்பம் அவனுடைய கொஞ்ச நஞ்ச தூக்கத்தையும் பறித்துவிட்டது. ஆனால் அவன் பலமாக சந்தேகப்பட்ட நாளுக்கு அடுத்த நாளில் இருந்து அவளை சாலையில் அந்த குறிப்பிட்ட தொலைவில் கடந்து செல்வதைப் பார்க்க முடியவில்லை. இன்னொரு முறை அப்படி அவள் தென்பட்டால் என்ன ஆனாலும் சரி அவளைப் பின் தொடர்ந்து போய் அவள் எங்கேதான் போகிறாள் எனப் பார்த்துவிட வேண்டும் என குணா நினைத்திருந்தான்.
இன்றும் அவள் தென்படவில்லை. அதெப்படி தான் அவள் நடமாட்டத்தை சந்தேகப்பட்ட நாளில் இருந்து அவள் காணாமல் போயிருப்பாள்? என்பது குணாவுக்கு புரியாத புதிராய் இருந்தது. சில சமயம் தற்செயலாய் நடப்பதே விசித்திரமானதாக மாறிவிடுமா? ஆமாம். ஒன்றுமே கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் அதை தற்செயல் என்று சொல்லி சமாதானம் ஆகிவிட வேண்டியதுதான் இல்லையா? அவனுக்கு சிரிப்பாய் வந்தது.
ஆனால், கொஞ்சதூரத்தில் ஒரு பெண் சாலையோரமாக ஸ்கூட்டியை தள்ளிக் கொண்டு போவது அவன் கண்ணில் பட்டது. அந்த நொடியே அது அவள்தான் எனத் தெரிந்துவிட்டாலும், கிட்டே நெருங்க நெருங்க அது ஊர்ஜிதமாகிக் கொண்டே வருவதைக் கண்டு அவன் திகைத்தான்.
அவளுக்கு சில அடிகள் முன்னால் சென்று வண்டியை நிறுத்தி திரும்பிப் பார்த்து “என்ன ஆச்சி?” என்றான்.
அவள் “தெரியல வண்டி அப்படியே ஆப் ஆயிடிச்சி. ஸ்டார்ட் ஆக மாட்டேங்குது. பக்கத்தில எங்கியாவது மெக்கானிக் ஷாப் இருக்கா?” என்றாள். லேசாக மூச்சு வாங்கினாள்.
“நீங்க எவ்வளவு தூரம் இப்படி தள்ளிகிட்டு கஷ்டப்படுவீங்க? இருங்க இங்க பக்கத்தில ஒரு கடையில நிறுத்திட்டுப் போலாம். மெக்கானிக் இங்க வந்து பாப்பாங்க இல்லாட்டி வண்டிய டோ பண்ணிகிட்டுப் போய் ஷெட்ல வச்சி பாத்துடுவாங்க” என்றான். அருகில் இருந்த கடைக்கு முன்னால் வண்டியை விட்டுவிட்டு அவளை அழைத்துக் கொண்டு மெக்கானிக் ஷாப்புக்குப் போனான்.
அதன்பிறகு அவர்கள் நண்பர்களாகிவிட்டார்கள். கொஞ்ச நாளிலேயே அவன் அவளிடம் தன் காதலைச் சொன்னான். அவன் எதிர்பார்த்த மாதிரியே அவள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
சீக்கிரமே அவன் அவளைத் திருமணம் செய்து கொண்டான். ஒருமுறை அவள் விபத்துக்குள்ளாகிவிட்டதாகவும், அதை அவன் நேருக்கு நேராக பார்த்ததாகவும், மிகவும் மோசமாக அடிபட்டிருந்த அவளை எதிர்காலத்தில் இருந்து டைம் மெஷினில் வந்து அந்த விபத்திலிருந்து அவளைக் காப்பாற்றியதாகவும், அதனால் தான் அவள் இன்னும் இந்த பூமியில் தப்பிப் பிழைத்திருக்கிறாள் என்பதையும் அவன் அவளுக்கு கதை கதையாய்ச் சொன்னான். அதை அவள் கண்களில் கண்ணீர் வழிய ஆச்சரியத்தோடும் நன்றியோடும் கேட்டுக் கொண்டிருந்தாள்.
000

குமாரநந்தன்
குமாரநந்தன் சிறுகதைகள், கவிதைகள் புனைபவர். பகற் கனவுகளின் நடனம் என்ற கவிதைத் தொகுப்பும், பதிமூன்று மீன்கள், பூமியெங்கும் பூரணியின் நிழல், நகரப் பாடகன், மகா மாயா ஆகிய நான்கு சிறுகதைத் தொகுப்புகளும் வெளியாகி உள்ளன. சேலம் அருகே மல்லூரில் வசிக்கிறார்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
தற்செயல் விசித்திரமாவது தான் அபத்தம் போல. அந்த அபத்தத்தை மிகவும் சீரியசாக உங்கள் கதைகளில் பரிசீக்கிறீங்க குமார நந்தன்.
நன்றி ஷங்கர்