உயர்தல் : ஜனார்த்தனன் இளங்கோ

பறவைகளை பற்றிய ஈடுபாட்டினால் அவ்வப்போது பறவைகளை மையப்படுத்தி எழுதப்பட்ட கதைகள் என்று தனியே தேடி வாசிப்பது உண்டு. அப்படி சமீபத்தில் அமெரிக்க எழுத்தாளர் சாரா ஜீவெட்(Sarah Jewett) எழுதிய “A white heron” என்னும் சிறுகதையை வாசிக்க நேர்ந்தது. 

இங்கிலாந்தின் பெருநகர் ஒன்றில் வசித்துவந்த சிறுமி சில்வியா, தன்னுடைய பத்தாவது வயதில் பாட்டியுடன் அவளுடைய கிராமத்திற்கு சென்று வசிக்கும்படி ஆகிறது. அடர்ந்த காட்டை ஒட்டி இருக்கும் தன்னந்தனிமையான வீடு அவளுடைய பாட்டியினுடையது. சில்வியாவும் அவளது பாட்டியும் மட்டும் அவர்கள் வளர்த்துவரும் மாடுகளோடு அங்கு வசித்து வருகிறார்கள். அங்கு சில்வியாவின் பிரதான வேலை என்பது அந்த மாடுகளை தினமும் மேய்ப்பதற்காக கூட்டிச் செல்வதுதான். காட்டின் அந்த புதிய சூழலுடன் அங்கு வந்த கொஞ்ச நாட்களிலேயே அவள் ஒன்றிணைந்து விடுகிறாள். ஆனந்தமாக காலங்கழிக்கிறாள். அப்படி அந்தி மயங்கிய ஒரு கோடைக்கால நாளில் மாட்டை கூட்டிக்கொண்டு வீட்டிற்கு திரும்புகிற வழியில் எதிர்பாராத விதமாக ஒரு அந்நியரை எதிர்கொள்கிறாள். பார்ப்பதற்கு அச்சமூட்டும் தோரணையில் துப்பாக்கி ஏந்திய உயரமான அந்த இளம் அந்நியர், தான் காட்டில் வேட்டையாடும் போது வழிதவறி தொலைந்து விட்டதாகவும், அவளுடைய வீட்டில் ஒரு நாள் இரவு மட்டும் தங்குவதற்கு அனுமதி தரவேண்டும் என்றும் அவளிடம் உதவி கேட்கிறார். வேறுவழியின்றி சில்வியா அவரை பாட்டியிடம் கூட்டிச் செல்கிறாள். அவர் பணம் தருவதாகக் கூறியவுடன் பாட்டியும் உடனே அவர்களுடன் தங்குவதற்கு சம்மதம் தெரிவிக்கிறாள்.

அன்று இரவு உணவிற்கு பின்னர் பாட்டி அந்த அந்நியனிடத்தில் தன் குடும்பக் கதைகளை சொல்லத் துவங்குகிறார். பேச்சின் இடையே ஓரிடத்தில் இந்தக் காடு மொத்தமும்  சில்வியாவிற்கு அத்துபடி என்றும், அவளுக்கு தெரியாத மரம்,செடி கொடி என எதுவும் அங்கு இல்லை என்றும் பாட்டி குறிப்பிடுகிறாள். அதுவரை அசிரத்தையுடன் கேட்டுக்கொண்டிருந்த அந்த அந்நியர் அதைக் கேட்டதும் ஆர்வமடைகிறார். தான் ஒரு பறவையியளாளர் என்றும், சிறுவயதிலிருந்தே பறவைகளைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறுகிறார். தற்சமயம் ஆராய்சிக்காக வேண்டி பறவைகளை வேட்டையாடி அதன் உடல்களை பத்திரப்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கிறார். எனினும் அங்கு வலசை வந்திருக்கும் ஒரு வெள்ளை நாரையை மட்டும் இன்னும் வேட்டையாட முடியாமல் பல நாட்களாக தேடிக்கொண்டிருப்பதாகவும், அதைக் கண்டுபிடிக்க உதவும் பட்சத்தில் தன்னால் அவர்களுக்கு பணம் தந்து உதவமுடியும் என்றும் கூறுகிறார். அதைக் கேட்ட உடனேயே சில்வியாவின் இதயம் அடித்துக் கொள்கிறது. அவர் தேடும் அந்த வெள்ளை நாரையை தான் முன்பு ஒருமுறை பார்த்தது அவளுடைய நியாபகத்திற்கு வருகிறது. எனினும் அச்சமயம் வேறு எதுவும் சொல்லாமல் இருந்து விடுகிறாள். அடுத்த நாள் அவர் காட்டிற்கு வேட்டையாடப் போகும்போது அவளையும் துணைக்கு அழைத்துச் செல்கிறார். அங்கு அவர்கள் காணும் ஒவ்வொரு பறவையைப் பற்றியும் சில்வியாவுக்கு விரிவாக எடுத்துரைக்கிறார். அவர் பழகுவதற்கு எவ்வளவு இனிமையானவர் என்பதை அவள் உணர்ந்து கொள்கிறாள். தன்னுடைய சிறிய கத்தியை அவர் அவளுக்கு பரிசாகக் கொடுக்கிறார். அவளும் அதை மகிழ்ச்சியோடு வாங்கி பத்திரப்படுத்திக் கொள்கிறாள். மொத்த நாளிலும் ஒரு முறைகூட அவர் அவளை  பயமுறுத்தவோ தொல்லை செய்யவோ இல்லை என்பதை நினைத்துப் பார்க்கிறாள். அவர் வைத்திருக்கும் துப்பாக்கியை மட்டும் அவளுக்கு பிடிக்காமல் போகிறது. பறவைகளின் மேல் இவ்வளவு அன்பாகவும் ஆர்வமாகவும் இருப்பவர் எதற்காக அவற்றை வேட்டையாடுகிறார் என்பது மட்டும் அவளுக்கு புரியாமல் இருக்கிறது. அந்த நாளின் நேரம் செல்ல செல்ல, அவளுக்கு அவர் மீது பெருமதிப்பும், பிரேமையும் கூடிக்கொண்டே செல்கிறது. அவ்வளவு  வசீகரமான மகிழ்ச்சியான ஒரு மனிதரை தான் அதுவரையிலும் பார்த்திருக்கவில்லை என்று உணர்கிறாள். அந்தக் குழந்தையினுள் அக்கணம் வரை உறங்கிக்கொண்டிருந்த பெண்மையின் இதயம் காதல் கனவு கொண்டு சிலிர்க்கிறது.

அவரை சில்வியா உற்சாகமாக பின் தொடர, இருவரும் இணைந்து காட்டிற்குள் அலைந்து திரிகின்றனர். ஒருகட்டத்தில் அந்த வெள்ளை நாரையை கண்டுபிடிக்க முடியவில்லையே என்று அவருக்காக அவள் வருத்தம் கொள்ளத் துவங்குகிறாள். அவள் வீட்டில் இருந்து கொஞ்சம் தூரத்தில் இருக்கும் மிக முதிய பைன் மரம் அவள் நியாபகத்திற்கு வருகிறது. சமுத்திரத்தையும் பார்த்துவிடமுடிகிற உயரத்தில் இருக்கிறது அந்த மரத்தின் உச்சி. அதிகாலை வேளையில் அந்த மரத்தின் உச்சிக்கு ஏறிச்சென்று கவனித்தால், அந்த வெள்ளை நாரை தன் கூட்டைவிட்டு வெளியேறும் இடம் தெரிந்துவிடும் என்று தனக்குள் திட்டம் தீட்டிக் கொண்டு அன்றிரவு உறங்கச் செல்கிறாள். அடுத்தநாள் அதிகாலை யாருக்கும் தெரியாமல் வீட்டிலிருந்து கிளம்பி அந்த முதிய பைன் மரத்தை அடைகிறாள். கீழிருந்து பார்க்கும்போது அம்மரம் வின் வரையிலும் நீண்டிருப்பதாகப் படுகிறது அவளுக்கு. அவ்வளவு நெடிய பைன் மரத்தின் மேல் துணிந்து ஏறத் துவங்குகிறாள். அதிலுள்ள கூரிய முட்கள் அவள் ஆடையையும் உடலையும் சேர்த்து குத்திக் கிழிக்கிறது. மரத்தில் குடியிருக்கும் அணில்களும் பூச்சிகளும் அவள் ஏறும் வழியில் இருந்து பதறி விலகுகின்றன. வெறுங்கால்களால் மரத்தின் உச்சியை அடைகிறாள். அவள் மொத்த உடலும் நடுங்கிக்கொண்டிருந்தாலும் அவள் முகம் ஒரு நட்சத்திரத்தைபோல அப்போது பிரகாசமாக ஒளிவிடுகிறது. சூரியனின் பொன்னிற ஒளி தூரத்தில் தெரியும் கடலின் அடியில் இருந்து வெளிவரத் துவங்குகிறது. முன்பொருமுறை அந்த வெள்ளை நாரையை பார்த்த இடம் அனிச்சையாய் நினைவுக்கு வர அவள் அந்த இடத்தை திரும்பிப் பார்க்கிறாள். அங்கிருந்த பச்சை ஹெம்லாக் மரக்கிளைகளில் இருந்து புகை போல தன் வெள்ளை இறகுகளை நீட்டி அசைத்தபடி அந்த நாரை வெளிப்படுகிறது. நேராக அவள் அமர்ந்திருக்கும் அந்த முதிய பைன் மரத்தின் கிளையில் வந்து அமர்கிறது. கோடாக இரத்தம் கசிந்து சில்வியாவின் தோல் அங்கங்கே எரிந்து கொண்டிருக்கிறது. அவள் மூச்சடக்கி அசையாமல் அந்த நாரையைப் பார்த்தபடி இருக்கிறாள். தன் துணையை நோக்கி அழைப்பு விடுத்தபடி அந்தப் புதிய நாளுக்காக தன் இறகுகளை அலகால் நீவி தயார் செய்கிறது அந்த நாரை. சில கணங்களில் சட்டென்று பறந்து அதன் கூட்டிற்கு சென்று மறைகிறது. 

சில்வியாவுக்கு இப்போது வெள்ளை நாரையின் இரகசியம் தெரிந்து விட்டது. அதன் வசிப்பிடத்தை அந்த அந்நியரிடம் எப்படி தெரிவிப்பது என்று யோசனையில் ஆழ்ந்தபடி கீழே இறங்குகிறாள். வீட்டில் அவளைக் காணாமல் அவள் பாட்டியும் அந்த அந்நியரும் வாசலில் அவள் வருகைக்காக காத்து நிற்கின்றனர். சில்வியாவின் கிழிந்த உடையைப் பார்த்ததும் அவர் ஒருவாறு நடந்ததை ஊகிக்கிறார். ஆர்வம் மேலிட தன் கனிவான கண்களுடன் அவளைப் பார்த்தபடி பொறுமையாகக் காத்திருக்கிறார். அவள் ஆனால் எதுவும் பேசாமல் நிற்கிறாள்.  மகத்தான ஒரு உலகம் அதன் கைகளை அவள் பற்றிக் கொள்வதற்காக நீட்டுகிறது. அவள் அதைத் தட்டிவிடப் போகிறாளா? பொன்னிறமான காற்றில் அந்த வெள்ளை நாரை அவளிடத்தில் பறந்து வந்து அமர்ந்ததும், அவர்கள் இருவரும் அந்தக் காலைப் பொழுதையும் அலைகடலையும் ஒருசேரப் பார்த்ததும் அவள் ஞாபகத்திற்கு வருகிறது. அவளால் எதுவும் பேச முடியவில்லை. சில்வியா கடைசி வரை மொளனமாக நின்று விடுகிறாள். அந்த அந்நியர் ஏமாற்றத்துடன் கிளம்பிச் செல்கிறார்.

*

காஸ்டன் பஷிலார்ட்

அறிவின் தொடர் மேம்பாடு மனிதனை பரிணாம வளர்ச்சியில் முன்னோக்கி செலுத்திய வண்ணம் இருந்தாலும், அடிப்படையில் மனிதன் தன்னை உடலாகவே உணர வேண்டியிருக்கிறது.  உடலளவில் மனிதன் இன்றளவும் பாதிக்கப்படக்கூடிய வகையில், இப்புவியில் உள்ள ஏராளமான உயிரினங்களை விடவும் வலுவில் பலபடி குறைந்தவனாகவே இருக்கிறான். அறிவியலும் தொழில்நுட்பமும் மனித வாழ்வை மேம்படுத்த முடிந்தாலும், எல்லைக்குட்பட்ட  அவன் உடல் அவனை இம்மண்ணை விட்டு அகன்றுவிட முடியாதபடி பிணைத்து வைத்திருக்கிறது. இந்தப் பிடியில் இருந்து வெளியேறிவிட்டது போல மயக்கச் செய்யும் செயல்களை அவன் அவ்வப்போது செயற்கையாக உண்டாகிக்கொள்வது இந்த காரணத்தினால் தான். ஒருவர் இருசக்கர வாகனத்தின் வேகத்தை அதீதமாக முடுக்கும் போது, அங்கு உருவாகும் வேகம் பொளதீக உடலின் எல்லையை தற்காலிகமாக ரத்து செய்துவிட்ட உணர்வை அவரில் உண்டக்குகிறது. இந்த அனுபவத்தை அவரின் தன்னுணர்வோடு சேர்த்து அவருடைய உடலும் நேரடியாக உணர்வதால், அதிலிருந்து அவருக்கு கிடைக்கக்கூடிய இன்பநுகர்ச்சியும் அத்தனை வீரியமுடையதாக இருக்கிறது. மறுபுறம் உயரமும், உயரத்தை நோக்கிய நகர்வும் இதையொட்டியதொரு உணர்வை நம்முள் இயற்கையாகவே ஏற்படுத்துகிறது என்று சொல்லலாம்.

பிரெஞ்சு தத்துவவாதியும், கவிஞருமான காஸ்டன் பஷிலார்ட்(Gaston Bachelard), தன்னுடைய ‘The poetics of space’ நூலில் எவ்விதம் செங்குத்துப் பரிமாணமும்(verticality), உயரமும் தன்னுணர்வாக மனிதர்களுக்கு  மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது என்று குறிப்பிடுகிறார். “மேற்கூரையில் இருக்கும் பரணும், தரைத்தளமும் என இரு முனைகளாக துருவப்படுத்தப்படுவதன் வழியாக வீட்டிற்கு ஒரு செங்குத்துப்பரிமாணம் உருவாகிறது. இந்த இரு முனைகளும் நம் கற்பனையை இருவேறு விதத்தில் ஆழமாகத் தூண்டுகிறது. மேற்கூரை அதன் தேவையை தெளிவாகவே எடுத்துரைக்கிறது: மழையில் இருந்தும் வெயிலில் இருந்தும் நம்மை காக்கிறது. அதனால் மேற்கூரையின் அருகாமை நமக்கு பாதுகாப்பு உணர்வை அளிக்கிறது. அங்கு நமது சிந்தனை தெளிவு பெறுகிறது. உயரமான பரணின் மேல் இருக்கும் மரச்சட்டகங்களை பார்ப்பதே நமக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. மறுபக்கம் தரையும் அதன் அடிப்பகுதிகளும் நமக்குள் இருட்டையும், அச்ச உணர்வையும் ஏற்படுத்துகிறது… பரணுக்கு செல்வதற்காக மாடிப்படிகளின் வழியாக உயரத்திற்கு செல்லும்போது அது நம்மை ஆதாரமா உணர்வுநிலைக்கு இட்டுச்செல்கிறது. உயரத்தை நோக்கி நாம் நகர்வது ஏகாந்தமான தனிமையையும், விடுதலை உணர்வையும் நமக்கு வழங்குகிறது.”

‘தனிமை என்னும் பணியிடம்’ ’கட்டுரையில் மலையாளக் கவிஞர் கல்பற்றா நாராயணன் உயரத்தைப் பற்றி இப்படிச் சொல்கிறார்: “தொல்பழங்காலத்தில் நாம் உயரமான இடங்களில் வாழ்ந்தோம் என்பதாலா, அல்லது உயரம்தான் நமக்கு பாதுகாப்புணர்வை அளிக்கிறது என்பதாலா உயரத்திற்கும் தாழ்விற்கும் இன்று நாம் உருவகிக்கும் அர்த்தம் கிடைத்தது?”

எனில் இந்த உணர்வு தனிச்சையாகவே நம்முள் பொதிந்திருக்கிறதா? தரையில் உதைத்து அழும் குழந்தை நாம் தூக்கிக் கொண்டவுடன் அழுகையை நிறுத்தி விடுவது இதனாலா? சிறுவர்களாக இருந்தபோது நாம் எதற்காக எல்லாவற்றின் மேலும் ஓயாமல் ஏற முயன்று கொண்டிருந்தோம்? பெரும் கலக்கத்தின் போதும் கஷ்டத்தின் போதும் திருப்பதி மலையேறி தரிசித்து வந்தால் தெளிவு பிறக்கும் என்று நம் பாட்டி தீர்க்கமாக நம்பியது எப்படி? இன்று மலையேற்றத்தின் மீது மக்களுக்கு அபரிதமான மோகம் உண்டானதற்கு இதுவும் ஒரு காரணமா? 

அதேவேளை, உயரத்தின் அருகாமையில் நம்மால் ஏன் நீடித்து இருக்க முடிவதில்லை? அங்கு பாதுகாப்பற்றவர்களாக நாம் உணர்வது எதனால்? உயரம் உருவாக்கும் அச்சம் என்பது உண்மையில் அங்கு உருவாகும் ஆதாரமான தனிமையுணர்வையும் தெளிவையும் நாம் கைளாய முடியாமல் போவதால் ஏற்படும் தவிப்பு தானா?

யோசித்துப் பார்த்தால் பறத்தல் என்னும் செயல்பாடு ஒருவகையில் உயரத்தை நோக்கிய இடப்பெயர்ச்சி என்றாகிறது. பறவைகள், உயரத்தை எட்டும் நம் விழைவின் செயல்முறை வடிவமாக உருபெற்று விடுகிறது. சிறகடித்து பறந்தெழும் ஒரு பறவையைக் காணும் போது ஐயமின்றி அங்கு தனிச்சையாக நாமும் கற்பனையின் துணை கொண்டு உயர்ந்தெழுகிறோம். அதன் வழியே ஏகாந்தமான தனிமையையும், விடுதலை உணர்ச்சியையும் அடைகிறோம் – பொன்னிற காலைக் காற்று சூழ்ந்த அந்த முதிய பைன் மர உச்சியில் சில்வியா அடையப் பெற்றதைப் போல.

***

ஜனார்த்தனன் இளங்கோ

ஜனார்த்தனன் இளங்கோ, மென்பொருள் பொறியியலாளர். சொந்த ஊர் திருவாரூரைச் சேர்ந்த திருத்துறைப்பூண்டி. இலக்கியம் தவிர தத்துவம், கட்டிடக்கலை, பறவையியல் ஆகிய துறைகளில் ஆர்வமுண்டு.

1 Comment

  1. சிறப்பான கட்டுரை. அந்தக் கதையும் அதனை விவரித்த விதமும் அருமை.
    வாழ்த்துகள் ஜனார்த்தனன் இளங்கோ.

உரையாடலுக்கு

Your email address will not be published.