கேத்தரின் லீலா : சுரேஷ்குமார இந்திரஜித்

அவள் ரவிக்கையின் பின்புறம் முதுகின் சிறிய பகுதியை மட்டும் மறைத்திருந்தது. அந்த ரவிக்கைத் துணி நான்கு அங்குலம் அகலம் இருக்கலாம் என்று எனக்குத் தோன்றியது. கிட்டத்தட்ட முழு முதுகும் தெரிந்தது. இடுப்பிலிருந்து முதுகின் நீளம் கூடுதலாக இருப்பதை உணர்ந்தேன். குட்டையான, குண்டான பெண்களுக்கு முதுகு வசீகரமானதாக இருக்காது. உயரமான அளவான தோற்றம் உடைய பெண்களுக்கே முதுகு வசீகரமானதாக மாறுகிறது. ஆண்களின் பார்வையில் பெண்ணை இப்படிப் பார்ப்பது பெண்ணியத்திற்கு உகந்ததா என்ற கேள்வியை எழுப்பிக்கொண்டேன்.

இது ஒரு விசேஷ வீடு. அவள் அமர்ந்திருந்த வரிசைக்குப் பின்னால் உள்ள வரிசையில் ஓர் இடத்தில் நான் அமர்ந்திருந்தேன். முன்பக்கம் சென்று பார்க்கலாமா என்று நினைத்தேன். அவசரப்பட வேண்டாம்; சற்றுப் பொறுத்துப் பார்க்கலாம் என்று நினைத்தேன். முன்தோற்றம் ஏமாற்றமளிப்பதாக இருந்தால் என்ன செய்வது என்ற எண்ணம் ஏற்பட்டது. அவள் எழுந்து நின்றாள். நல்ல உயரம். வாய்ப்பைத் தவறவிடக் கூடாது என்று எழுந்து அவளைப் பார்க்கச் சென்றேன். நான் ஏமாற்றமடையவில்லை. நல்ல தோற்றம். போதுமான மார்பகங்கள். மூக்கு கூர்மையாக இருந்தது. முகத்தில் ஐரோப்பியச் சாயலைக் கண்டேன். ஆனால் இந்திய முகம். எழுந்திருந்தவள் சேரில் உட்கார்ந்தாள்.

அவள் பக்கத்தில் உட்கார்ந்திருந்தவர் என்னைப் பெயர் சொல்லி அழைத்தார். என்னைப் பெயர் சொல்லி அழைத்தவர் பங்காரப்பா. அவர் என்னுடன் படித்தவர். படிப்பு முடித்த பிறகு சில தடவைகள் சந்தித்திருக்கிறோம். பெரும்பாலும் தரமான ஹோட்டல் பார்களில். நான் அவர் அருகே சென்றேன். அவருக்கு அடுத்து இருந்த காலிச் சேரில் நான் உட்கார்ந்தேன். அந்தப் பெண்ணிடம் என்னை அறிமுகப்படுத்தினார்.

“இவர் பேரு அனந்தகிருஷ்ணன். முக்கியமான லாயர்” என்றார். அவள் என்னைப் பாரத்துச் சிரித்தாள்.

பிறகு அவளைப் பார்த்து “இவுங்க டாக்டர் கேத்தரின் லீலா” என்றார்.

சற்று யோசித்து, “எனக்கு என் மூதாதையர்கள் நிலங்கள் சம்பந்தமாகப் பல பிரச்சினைகள் இருக்கின்றன. எனக்கு நில சம்பந்தமான சிக்கல்களைப் புரிந்துகொள்ள முடியவில்லை. பல இடங்கள் எங்கே உள்ளன என்றே தெரியவில்லை. பத்திரங்கள் என்னிடம் இருக்கு. சில நிலங்கள் இன்னொருவர் பெயரில் இருக்கிறது. உங்களிடம் ஆலோசிக்க வேண்டும்” என்றாள் கேத்தரின் லீலா.

எனக்கோ சந்தோஷமாக இருந்தது. “நாம் சந்திப்போம். நான் உங்களுக்கு உதவி செய்கிறேன்” என்றேன்.

கண்களுக்கு மை தீட்டியிருந்தாள். திருத்தப்பட்ட புருவங்கள் கண்களுக்கு அழகூட்டின. நாங்கள் இருவரும் செல்போன் எண்களை அவரவர் போன்களில் பதிவுசெய்துகொண்டோம். பின்னர் பேசி, சந்திப்பது பற்றி முடிவு செய்துகொள்வோம் என்றும் சம்பந்தப்பட்ட நில ஆவணங்களை ஒன்றாகச் சேகரித்து வைப்பதாகவும் கேத்தரின் சொன்னாள். நான் ஒப்புக்கொண்டேன். எனக்கு வேறு சில வேலைகள் இருந்தன. அவளிடமும் பங்காரப்பாவிடமும் சொல்லிக்கொண்டு கிளம்ப ஆயத்தமானேன். அவள் எழுந்து நின்று என்னிடம் கைகுலுக்கினாள். நான் கையைப் பிசைந்துகொண்டே மண்டபத்தை விட்டு வெளியே வந்தேன்.

இரண்டு நாட்கள் கழித்து எனக்கு கேத்தரினிடமிருந்து போன் வந்தது. வரும் ஞாயிற்றுக்கிழமை இருவரும் அவள் வீட்டில் சந்திப்பது என்று முடிவு செய்தோம். நில ஆவணங்களை சேகரித்து வைத்திருப்பதாகத் தெரிவித்தாள்.

இடையில் ஒருநாள் நான் காரில் சென்றுகொண்டிருக்கும்போது பழங்காலப் பொருட்களை விற்கும் கடை ஒன்றைக் கண்டேன். காரை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தேன். கடை மிக அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தது. என் முன் ஒரு பெண் தோன்றினாள். பழங்காலச் சிலை வடிவிலிருந்தாள். கடை அவளுடையதாக இருக்கும் என்று நினைத்தேன். பழங்காலச் சிலை போன்ற அவள் வடிவே இக்கடையைத் துவங்குவதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். எனக்கு இவளைப் பார்த்ததும் கேத்தரின் நினைவு வந்தது. அவள் என்னிடம் வந்து, “என்ன வகையான பொருள் வேண்டும்” என்று கேட்டாள்.

நான் எந்த உத்தேசமும் இல்லாமல் தற்செயலாக இந்தக் கடையில் நுழைந்திருந்தேன். எனக்குச் சட்டென்று ஒன்றும் தோன்றவில்லை. “சிறிய புத்தர் சிலை இருக்கிறதா” என்று கேட்டேன். அவள் சில சிலைகளை எடுத்துக் காண்பித்தாள். விலை அதிகமாக இருப்பதாக எனக்குத் தோன்றியது. “நீங்கள் வெளிநாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவரா” என்று கேட்டேன்.

“ஆமாம். நாங்கள் யூதர்கள். கேரளாவில் நிறைய பேர் இருக்கிறார்கள்” என்றாள்.
நான் யூத ஆலயமான சைனகாக் (SHYNAGOGUE) -கைக் கொச்சியில் பார்த்திருப்பதாகக் கூறினேன். அவள் என்னைப் பார்த்துச் சிரித்தாள். என் கையிலிருந்த புத்தர் சிலையில் ஒட்டப்பட்டிருந்த விலையில் பாதி விலைக்கு அந்தச் சிலையைத் தருவதாகவும் என்னுடைய கேள்வி அவளுக்கு ஆச்சரியத்தைத் தந்ததாகவும் அதற்குப் பரிசுதான் இந்த விலைக் குறைப்பு என்றும் கூறினாள். நான் பணம் கொடுத்து அந்தச் சிலையை வாங்கினேன். அவள் என்னுடன் கைகுலுக்கினாள். நான் வெளியேறினேன்.

காரில் சென்றுகொண்டிருக்கும்போது கேத்தரினுக்கு வெளிநாட்டுப் பூர்வீகம் இருக்குமோ அல்லது அவளின் முன்னோருக்கு ஐரோப்பியக் கலப்பு இருக்குமோ என்று யோசித்தேன். கேத்தரின் முகத்தோற்றம் அவ்வாறு என்னை யூகிக்க வைத்தது.
நான் இப்போது கேத்தரின் வீட்டை நோக்கிக் காரில் சென்றுகொண்டிருக்கிறேன். நில சம்பந்தமான விவகாரங்களின் சிக்கல்களை அவிழ்ப்பது சிரமம். நீதிமன்றத்திற்குச் சென்றால் பல துணை ஆவணங்கள் தேவைப்படும். எவ்வளவு காலம் தீர்ப்புக்கு எடுத்துக்கொள்வார்கள் என்பது நமது அதிர்ஷ்டத்தைப் பொறுத்தது. நான் உயர் நீதிமன்றத்திற்குச் செல்லும் வழக்குகளை மட்டும் எடுத்துக்கொள்கிறேன். பல நில சம்பந்தமான வழக்குகளை உரிமையியல் நீதிமன்றத்தில்தான் தீர்த்துக்கொள்ள முடியும். பலவாறாக யோசித்தேன்.

கேத்தரின் வீட்டருகே காரை நிறுத்தினேன். கேத்தரின் கார் சத்தம் கேட்டுக் கதவைத் திறந்து கேட்டருகே நின்று என்னை வரவேற்றாள். என்னை வீட்டிற்குள் அழைத்துச் சென்றாள். வீடு அழகாகப் பராமரிக்கப்பட்டிருந்தது. கிறிஸ்துவின் படங்கள் இருந்தன. மில்க் ஸ்வீட், பக்கோடாவை சிறு தட்டில் வைத்து என் முன் வைத்தாள். அவள் செயல்கள் எல்லாம் நளினமாக இருந்தன.

நான் அவளிடம் கேட்டேன். “உங்கள் மூதாதையர்கள் யாராவது ஐரோப்பியக் கலப்பு உடையவர்களா. உங்களிடம் அந்தச் சாயல் உள்ளது.”

“நான் கேள்விப்பட்டதையும் எங்கள் குடும்பத்தில் மூத்தோர்கள் வழி வந்த கதைகளையும் வைத்து நான் சொல்கிறேன். அய்யா வைகுண்ட சாமி சாமித்தோப்பிற்கு வந்த குழுவில் எங்கள் மூதாதைகளில் ஒருவரும் இருந்தார். அவர் பாதுகாப்புக் குழுவில் ஆயுதத்துடன் இருந்தார். அய்யாவிற்கு அப்போது திருவனந்தபுரம் ராஜாவின் அச்சுறுத்தல் இருந்தது. அங்கு சில காலம் இருந்த பின்னர், அந்த ஒருவருக்கு ஈஸ்ட் இந்தியா கம்பேனியைச் சேர்ந்த அதிகாரி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த அதிகாரிக்கு உதவியாளர் போல அவர் இருந்திருக்கிறார். உதவியாளர் என்றால் எடுபிடி ஆள் போல. அந்த அதிகாரி பம்பாய் சென்றபோது அவரையும் அழைத்துச் சென்றுவிட்டார். சில ஆண்டுகளுக்கு முன்னர்தான் Bank of Bombay தோன்றியிருந்தது. அப்போது Bank of Madras, Bank of Calcutta என்று இரு பேங்குகள் இருந்தன. அவை எல்லாம் ஒரு கட்டத்தில் இணைந்து Imperial Bank என்று ஆகி, சுதந்திரத்திற்குப்பின் State Bank of India என்று ஆகிவிட்டது. நீங்கள் அந்த பேங்கில் கணக்கு வைத்திருக்கிறீர்களா.”

“ஆம். கணக்கு வைத்திருக்கிறேன்”

“அந்த மூதாதை போதுமான கல்வியறிவு இல்லாததால் பழைய Bank of Bombay யில் பியூன் போல இருந்திருக்கிறார். அந்த ஈஸ்ட் இந்தியா கம்பேனி அதிகாரி சேர்த்துவிட்டிருக்கிறார். அவருடைய வீட்டு வேலைகளையும் அந்த மூதாதை செய்திருக்கிறார். சற்று இருங்கள்” என்று சொல்லி உள்ளே இருந்த அறைக்குள் சென்றாள். பீரோவைத் திறக்கும் சத்தம் கேட்டது.

அவள் கையில் இருந்ததை எங்கள் முன் இருந்த மேஜையில் வைத்தாள். கிழக்கிந்திய கம்பேனி வெளியிட்ட ஒரு ரூபாய் நாணயம் இருந்தது. ஒரு பத்து ரூபாய் நோட்டும் இருந்தது. ஒரு ரூபாயை எடுத்துப் பார்த்தேன். நாணயத்தில் அழகான பெண்முகம் சிற்பம் போலிருந்தது. தலைமுடி அலங்காரம் நுட்பமாகப் பதிக்கப்பட்டிருந்தது. Victoria Queen என்று எழுதப்பட்டிருந்தது. மறுபக்கத்தில் One Rupee, East India Company 1840 என்று பதிக்கப்பட்டிருந்தது. இருபுறங்களிலும் வளைந்த கொடி வேலைப்பாடுகளுடன் பதிக்கப்பட்டிருந்தது. பத்து ரூபாய் நோட்டில் 1860 என்ற எண் இருந்ததால் அந்த ஆண்டில் வெளிவந்த நோட்டாக இருக்கலாம் என்று நினைத்தேன்.

எனக்கு அதிசயமாக இருந்தது. “இந்த நாணயமும் ரூபாய் நோட்டும் எப்படி உங்களிடம் வந்தது” என்று கேட்டேன்.

“இது பல தலைமுறைகளாக குடும்பத்தில் பராமரிக்கப்படுகிறது. என் தந்தையிடம் இருந்தது. அவர் இந்திய ராணுவத்தில் இருந்தார். அவருக்கு மகன் இல்லை. தற்போது என்னிடம் இருக்கிறது. என் மகன் லண்டனில் படிக்கிறான். எனக்குப் பின் இந்தப் பொக்கிஷம் அவனிடம் இருக்கும். இவற்றை வைத்திருக்கும் மரப்பேழையை பீரோவில் வைத்துவிட்டு வந்துவிட்டேன். போய் எடுத்து வருகிறேன்” என்று சொல்லி எழுந்தாள்.

அவள் கையில் மரப்பேழை இருந்தது. அவற்றை எடுதுதப் பேழையில் வைக்கும் முன் நான் அவற்றை இன்னொரு முறை பார்த்துக்கொள்வதாகச் சொல்லி வாங்கிப் பார்த்து அவளிடம் கொடுத்தேன். அவற்றை அவள் பத்திரமாக பேழையில் வைத்து உள்ளே கொண்டு சென்றாள். திரும்பி வந்து சேரில் உட்கார்ந்தாள்.

“Bank of Bombay-யில் வேலை பார்த்த அந்த மூதாதை ஆங்கிலேயப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். அவர்களின் மகனும் ஆங்கிலேயேப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். நீங்கள் கூறியபடி ஐரோப்பியச் சாயல் இல்லை; ஆங்கிலேயச் சாயல் என்று நினைக்கிறேன். ஒருவேளை ஆங்கிலப் பெண்ணுக்குப் பின்னால் ஐரோப்பியக் கலப்பு ஏதும் இருக்குமோ என்னவோ தெரியவில்லை. எனக்கு அவ்வளவு துல்லியமாகச் சாயலைக் கணிக்கத் தெரியாது.”

“நான் பொதுவாக ஐரோப்பியச் சாயல் என்றேன். எனக்கும் துல்லியமாகத் தெரியாது” என்றேன்.

“இப்படி வந்த தலைமுறைகளில் எங்கள் மூதாதையர்கள் இந்தியர்களாகவே இருந்தார்கள். பிறகு இந்தியர்களுக்குள்ளேயே சம்பந்தம் பண்ணிக்கொண்டார்கள். அந்தத் தலைமுறைகளில் முக்கியமானவர் சவரிமுத்து. அவர்தான் கொத்தனாராக இருந்து திருச்சியில் உள்ள Our Lady Lourdress Church-யைக் கட்டியவர். கோதிக் ஸ்டைலில் அந்தச் சர்ச் இருக்கும். திருச்சிக்குச் செல்லும்போதெல்லாம் அந்த சர்ச்சுக்கு நான் செல்வேன். அந்த சர்ச்சுக்குக் கீழ் ஒரு நிலவறை உண்டு. முக்கியமான பாதிரிமார்களை அங்கே அடக்கம் செய்வார்கள். எங்கள் மூதாதை சவரிமுத்து அந்தக் கலைநயமிக்க சர்ச்சைக் கட்டினார் என்பதற்காக அவர் இறந்தபின் அவரைக் கௌரவப்படுத்தும் விதமாக அந்த நிலவறையில் அவரை அடக்கம் செய்தார்கள். ஒருமுறை என் தாத்தா அந்த நிலவறைக்கு என்னைக் கூட்டிச்சென்று மாலை அணிவித்தார். இருங்கள். இதோ வந்துவிடுகிறேன்” என்று உள்ளே சென்றாள்.

அவள் கையில் ஒரு போட்டோ இருந்தது. அதை என்னிடம் காண்பித்தாள். அந்த போட்டோவில் நிலவறையில் உள்ள கல்லறைகள் இருந்தன.

நான் அந்த போட்டோவை அதிசயமாகப் பார்த்தேன். விசித்திரமான பின்னணி உடைய வித்தியாசமான முகச்சாயல் கொண்ட அழகான பெண் முன் நான் உட்கார்ந்திருக்கிறேன். அவள் சுரிதார் அணிந்திருந்ததால் அவளின் அழகான வெற்று முதுகைப் பார்க்க முடியவில்லை.

“அசாதாரணமான பின்னணி உடைய ஒரு பெண் முன் நான் இருக்கிறேன். உங்கள் மூதாதையர் வரலாறு ஆச்சரியமும் சுவாரஸ்யமும் உடையதாக இருக்கிறது. நான் இரண்டு நாட்களுக்கு முன் பழங்காலப் பொருட்கள் விற்கும் ஒரு கடைக்குத் தற்செயலாகச் சென்றிருந்தேன். அங்கே இருந்த பெண்ணின் சாயல் வித்தியாசமாக இருந்ததால் விசாரித்தேன். அவள் யூத இனத்தைச் சேர்ந்தவள். அவளிடம் பேசினால் வித்தியாசமான ஒரு வரலாறு கிடைக்கும் என்று நினைக்கிறேன்.”

“ஆம். இந்தியாவில், கேரளாவில் பல இடங்களில் தஞ்சமடைந்து அங்கேயே வசிக்கிறார்கள்.”

அவள் அந்தக் கல்லறைகள் உள்ள போட்டோவை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றாள். திரும்பி வந்து சேரில் உட்கார்ந்தாள். “உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்” என்றாள்.

“என்னைப் பற்றிச் சொல்லிக்கொள்ள விசேஷமாக ஏதும் இல்லை. என் தந்தை வக்கீலாக இருந்தார். என்னைச் சட்டம் படிக்க வைத்தார். நானும் வக்கீலாக இருக்கிறேன்” என்றேன்.

அவள் உள்ளே சென்று ஒரு தோல் பையை எடுதுத வந்தாள். உள்ளேயிருந்த நில ஆவணங்களை வெளியில் எடுத்தாள். அந்த ஆவணங்களை வாங்கிப் பார்த்தேன். பழங்காலக் கூட்டெழுத்தில் எழுதப்பட்ட அந்த நில ஆவணங்கள் படிப்பதற்கே சிரமமானது. இவற்றையெல்லாம் படித்துப் புரிந்துகொண்டு பழைய சர்வே எண்களுக்குப் புதிய சர்வே எண்களைக் கண்டறிந்து தற்போது யார் பெயரில் நிலம் இருக்கிறது என்று பார்க்க வேண்டும். பெரிய வேலையாக இருக்கும் என்று தோன்றியது. ஜூனியரிடம் கொடுத்துப் பார்க்கச் சொல்லலாம்.

“இந்த ஆவணங்களுக்கு ஜெராக்ஸ் நகல்கள் உள்ளதா” என்று கேட்டேன்.

“இருக்கிறது” என்று சொல்லி தோல் பைக்குள்ளேயே இருந்த ஒரு பைலை எடுத்து என்னிடம் கொடுத்தாள்.

“இவற்றை நிதானமாகத்தான் பார்க்க வேண்டும்” என்று சொல்லி அந்த பைலை வாங்கிக்கொண்டு எழுந்தேன்.

“நீங்கள் என் அலுவலகத்திற்கு வரவேண்டும். வரும்போது சேலை அணிந்திருக்க வேண்டும்” என்றேன்.

கேத்தரின் லீலா சிரித்தாள்.

000

சுரேஷ்குமார இந்திரஜித்

சுரேஷ்குமார இந்திரஜித்  தமிழில் எழுதி வரும் எழுத்தாளர். சிறுகதை, நாவல், குறுங்கதைகள், கட்டுரைகள், மதிப்புரைகள் எழுதி வருகிறார். ஆண் பெண் உறவுகளின் சிக்கல்கள், காமம், சமூக அவலங்கள் குறித்த கதைக்களங்களில் எழுதி வருபவர்.

தமிழ் விக்கியில்

2 Comments

  1. சுரேஷ்குமார இந்திரஜித் எழுதிய சிறுகதை ‘கேத்தரின் லீலா’ புதுமையானது.

    ஆண்களின் பார்வையை காலம்தோறும் அழகிய பெண்கள் வசீகரித்து கொண்டுதானிருக்கிறார்கள். ரசித்ததை மனசுக்குள் வைத்துக்கொண்டால் மனதிற்கு உகந்ததாக இருக்கும். அதை எழுத்தில் பதிவிட்டால் இலக்கிய அழகியலுக்கு உகந்தது.

    இக்கதையில் வரும் அனந்த கிருஷ்ணனின் பெண்ணின் வடிவம் மீதான பார்வையும், அது குறித்த வர்ணனையும் நேர்மையானது. அதைப் படிக்கையில் எங்கெங்கோ பார்த்த முகமும், முதுகும், மனக்கண்ணில் காட்சிக்கு வருகிறது.

    கதையின் ஆரம்பமும், முடிவும் அழகியலை மையம் கொண்டுள்ளது. இடையில் வருவது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தவை. இதுவரை எழுதப்படாத குறிப்புகளும், நிகழ்விடங்களுமாக நிஜ போட்டோக்களுடன் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இது சிறுகதையின் புதிய வடிவமாக பதிவு பெறுகிறது.

    குழந்தையின் ஹிருதயமும், இளைஞனின் உற்சாகமும், நடு வயதின் மனப்பக்குவமும், முதியவரின் அறிவுத்தெளிவும் கொண்ட சுரேஷ்குமார இந்திரஜித்தின் பார்வையும், பதிவும் தொடரட்டும். நன்றி!

    – A. கருணாகரன்.

  2. வண்ணதாசன் அவர்களின் பதிவில் கதை பற்றி அறிந்து வாசித்தேன். நன்றாக இருக்கிறது. கதையோட்டத்திற்கு ஏற்ற புகைப்படங்களை இணைத்தது சுவாரஸ்யம்.
    கதையில் வரும் இரண்டு மூன்று பாத்திரங் கள் இயல்பாக ரசனையாக இருக்கிறார்கள்.
    வக்கீல், கேஸோடு க்ளையண்டையும் முழுமையாகப் படித்து விடுவார் என்றே தோன்றுகிறது. வாழ்த்துகள்.

உரையாடலுக்கு

Your email address will not be published.