வழியம்பலம் : மங்கலை- பாண்டிச்சேரி தாமரைக்கண்ணன்

சிறுவயதில் மழைநாளில் அடுப்படியில் அமர்ந்தபடி கேட்ட கதை ஒன்றுண்டு. ஒரு கிராமத்தில் கணவனும் மனைவியும் அவர்களின் ஏழு குழந்தைகளும் வசிக்கிறார்கள். கணவனுக்கு உளுந்தவடை தின்ன நீண்ட நாளாக ஆசை. சந்தையிலிருந்து ஆழாக்கு உளுந்து வாங்கி மனைவியிடம் தந்து வடை வேண்டுமென்கிறான். பிள்ளைகள் தூங்கட்டும் உங்களுக்கு வடை சுட்டு தருகிறேன் என்கிறாள் மனைவி, அவர்கள் விழித்திருந்தால் இவர்கள் இருவருக்கும் ஏதும் எஞ்சப்போவதில்லை. பிள்ளைகள் உறங்கியவுடன் ஊறப்போட்ட உளுந்தை கல்லுரலில் ஆட்டுகிறாள் மனைவி, மாவை வழித்தெடுக்கையில் முதல் பிள்ளை விழித்து விடுகிறது. எண்ணெய் சட்டியை அடுப்பில் ஏற்றுகையில் அம்மையிடம் அருகில் வந்து எனக்கும் வடை வேண்டுமென்கிறது,  அவளோ அமைதியாக இரு உனக்கு மட்டும் வடை தருகிறேன் வேறு யாரிடமும் சொல்லிவிடாதே என்கிறாள். வடையை கையில் வாங்கிய பிள்ளைக்கு சந்தோசம் பிடிபடவில்லை,  யாரிடமாவது சொல்லாவிட்டால் தான் வடை தின்ற பெருமை வெளியே தெரியாமலே போய்விடுமே. சூடான வடையை தனது தம்பியின் காலில் வைக்கிறாள், அவன் விழித்துக்கொள்கிறான். அவனும் அடுப்படிக்கு வந்து நிற்கிறான். அம்மைக்கு மூத்தவள் மீது வெலம் வருகிறது. என்ன செய்ய, அடுத்த வடையை விநியோகிக்கிறாள். ஒன்றன்பின் ஒன்றாக அனைத்துப்பிள்ளைகளும் வடையைத் தின்கின்றன. கடைசியில் கணவனுக்கு தவிட்டு வடைதான் எஞ்சுகிறது. மழையோடான கதைகள் எல்லாம் போர்வைக்கடியின் இளஞ்சூடாக நினைவில் எஞ்சும் இனிமைகள்.

நண்பர்களுடன் பயணம் சென்று வெகுநாட்களாகிவிட்டது, நானும் சமீபத்தில் புதுச்சேரிப்பகுதியிலிருந்து விழுப்புரத்துக்கு வீடு மாற்றிவிட்டேன். புதுவை நண்பர்களுடன் ஒரு பயணம் போகலாம் என்று முடிவு செய்தோம். மரக்காணத்திலிருந்து திண்டிவனம் வரை என்றால் இந்த நாற்பது கிலோமீட்டர் பயணம் என்ன பெரிய அதிசயம் எனலாம்,  ஆனால் அது சங்க கால பாணன் ஒருவன் சென்ற வழித்தடம்.

சங்க இலக்கியம் பாட்டும் தொகையும் என்று இரண்டாக பகுக்கப்பட்டிருக்கின்றது, எட்டுத்தொகை மற்றும் பத்துப்பாட்டு. பாடல்கள் பத்தும் இசைத்தன்மையுடைய நீள் கவிதைகள் என்று கொள்ளலாம்.  பத்தில் ஆற்றுப்படை நூல்கள் ஐந்து. பாணர்கள் அரசர்களை கண்டு, பாடல்கள் பாடி பரிசில் பெறுகிறார்கள். ஊருக்கு செல்லும் வழியில் வறிய பாணர்கள் வருவதைக்கண்டு புரவலனிடம் செல்லும்படி வழிகாட்டுகிறார்கள். வடை தின்ற பிள்ளை போல இங்கு வழிகாட்டுபவனும் பாணன்தான்.

திருமுருகாற்றுப்படை முருகக்கடவுளை  நக்கீரர் பாடியது, நக்கீரர் மதுரையை சேர்ந்தவர். சோழன் கரிகால் பெருவளத்தானை முடத்தாமங்கண்ணியார் பாடிய நூல் பொருநர் ஆற்றுப்படை. பொருநாறு பாடியவர் பெண்பாற்புலவராகவும் இருக்கலாம் என்பது ஆய்வாளர்கள் கருத்து. ஏனைய மூன்று ஆற்றுப்படை நூல்களும் வடதமிழக சங்க கால அரசர்கள் மீது பாடப்பட்டவை. சொல்லப்போனால் இந்த நாடுகள் மூன்றும் ஒன்றுக்கொன்று நூறு கி.மீ தொலைவுக்குள் உள்ளவை. பெரும்பாணாற்றுப்படை காஞ்சியின் அரசன் தொண்டைமான் இளந்திரையனை பாடுவது. மேலும் இரு நூல்களில் மலைபடுகடாம் என்னும் கூத்தராற்றுப்படை செங்கண்மா அரசன் நன்னனையும் சிறுபாணாற்றுப்படை கிடங்கில்நாட்டு நல்லியக்கோடனையும் பாடுவன. இவ்விரண்டு நூல்களில் இடம்பெற்றதாலேயே சிறிய நிலப்பரப்பை ஆண்ட நன்னன், நல்லியக்கோடன் என்னும் இந்த இரு அரசர்களும் அவர்தம் ஆட்சியும் இன்றும் நம்மால் நினைக்கப்படுகின்றன.

சிறுபாணன் சென்ற பெருவழி என்னும் தனது கட்டுரையில் மயிலை சீனி வேங்கடசாமி சிறுபாணாற்றுப்படை குறிப்பிடும் வழித்தடத்தை விவரிக்கிறார். மேலதிக தரவுகளுடன் எழுத்தாளர் விழுப்புரம் கோ செங்குட்டுவன் இந்த தடத்தை குறித்து எழுதியிருக்கிறார். இவர்களது எழுத்துக்கள்தான் இப்பயணத்திற்கு தூண்டுதல், ஆனால் சிறுபாணாற்றுப்படை என்னும் சங்க நூல் மனதில் நிற்கக்காரணம் எனக்குப்பிரியமான நாஞ்சில்நாடன். ஒருமுறை அவர்  பேசுகையில் சிறுபாணாற்றுப்படை பற்றி சொல்லிக்கொண்டே இருந்தார். ஓங்கு நிலை ஒட்டகம் பற்றியும் பீமனது சமையல் நூல் பற்றிய குறிப்பையும் சொன்னார். பாணர்களை, அவர்களது பசியையும் இந்தத்தலைமுறையில் பேசிப்பேசி எங்களுக்கு கையளித்துச்செல்லும் பெரும்பாணன் அவர்.

நெடுஞ்சாலையிலிருந்து விலகி வெடால் ஆலயத்திற்கு செல்ல வண்டியை திருப்பினோம். ஆற்றுப்படுத்த பரிசில் பெற்ற பாணர்கள் யாரும் தென்படாததால் உள்ளூர்க்காரர்களிடம் வழிகேட்டோம். சோழர் காலத்தை சேர்ந்த சிவன் ஆலயமான வடவாமுகேஸ்வரர் ஆலயம் வெடால் என்னும் சிற்றுரில் உள்ளது, இரண்டு காரணங்களால் இக்கோவில் முக்கியமானது. ஒன்று அது செங்கல் தளி, இரண்டாவது அது தூங்கானை மாடக்கோவில். மகாபலிபுரத்தில் பஞ்சபாண்டவர் ரதம் என்றழைக்கப்படும் ஒற்றைக்கல் தேர் சிற்பங்களில் ஒன்றாக இந்த தூங்கானை மாடம் என்னும் கஜபிருஷ்ட விமான அமைப்பை பார்த்திருக்கலாம். தொண்டை மண்டலத்தில் இவ்வகைக்கோவில்கள் அதிகம். அப்பரும் சம்பந்தரும் பாடிய பெண்ணாகடம் தேவாரத்தலம் திருத்தூங்கானை மாடம் என்றே அழைக்கப்பட்டது. இன்றளவும் அக்கோவிலின் விமான அமைப்பும் அதுதான்.

தேவா திருவடி நீறென்னைப்

பூசுசெந் தாமரையின்

பூவார் கடந்தையுள் தூங்கானை

மாடத்தெம் புண்ணியனே.

-அப்பர் தேவாரம்

கஜபிருஷ்ட விமானம்

மரத்தடி, மன்று முதலிய இடங்களில் துவங்கிய கடவுள் வழிபாட்டில்  நிகழ்ந்த மாற்றமாக ஒருகாலகட்டத்தில்  ஆலயங்கள் கட்டப்பட்டன. மரம், செங்கல், சுதை, உலோகம் இவை கொண்டு கோவில்கள் எழுந்தன. செங்கற்களால் கட்டப்பட்ட கோவில்கள் காலப்போக்கில் சிதைவுற்றதை கண்டபின் கருங்கற்களால் கல்தளிகள் எடுப்பிக்கப்பட்டது.  கல் தளிகள் எழுந்தபின்னரும் அவற்றிற்கு ஈடாக செங்கல் கோவில்களை கோவிலின் அனைத்து உறுப்புகளோடும் கட்டுதல் ஒருகாலத்தில் மிகுந்த விருப்புடன் செய்யப்பட்டுள்ளது. பாலூர் அருகிலுள்ள சென்னப்பநாயக்கன்பாளையம் புஷ்பகிரி மலையாண்டவர் ஆலயம் மிக அருமையான செங்கல் கோவில்பணி. நாயக்கர் காலப்பணி என்று கருதப்படுகிறது, கல்கோவில் தோற்றுவிடும் அழகு. இக்கோவில் வீரசைவ மரபினரால் வழிபடப்பட்டது, பேராசிரியர் நடுவீரப்பட்டு வேல்முருகன் இந்த கோவிலைப்பற்றி நிறைய பேசுபவர்.

வெவ்வேறு காலகட்டத்தில் எழுந்த செங்கல் கோவில்களை இன்றும் தமிழகத்தில் காணலாம். அவை முழுவதும் செங்கல்லாக இருக்காது, விமானம் மட்டும் செங்கல் பணியாக இருக்கும் அல்லது அடித்தளத்திலிருந்து கல்தூண்களை வைத்து சுவர்ப்பகுதியை செங்கல் கொண்டு கட்டியிருப்பார்கள், இப்படி பல வகை. சாளுவன்குப்பம் முருகன் ஆலய அடித்தளம், வேப்பத்தூர் பெருமாள் ஆலயம், ஆலக்கிராமம் சிவன் ஆலயம்,  திருவெள்ளறை ராஜகோபுரம், திருமூலத்தானம் வெளி ஆலயம் இவையாவும் கண்முன்னே வருகின்றன. அடித்தளம் மேல் எழுந்த செங்கல் பணி அத்துடன் தூங்கானை மாடம் என்பது வெடால் ஆலயத்தின் தனித்துவம்.

வெடால் ஆலயத்தின் முகப்பிலேயே அழகிய நந்தி நான்கடி உயர பீடத்தில் இருந்தது. கோவில் பூட்டியிருந்தது வெளிச்சுற்றில் தெய்வங்கள் செங்கல் கோட்டத்தில் பதிந்திருந்தன. சிலைகள் சோழர் பாணி என்றெல்லாம் கூறுமளவிற்கு செம்மையானவை அல்ல. கோவிலின் முன்பே உள்ள ஒரு உருவமற்ற கல்லில் அழகிய கல்வெட்டு இருந்தது. சுற்றில் சண்டேசர் தனியே அமர்ந்திருந்தார். கோவிலின் விமானம் சிதைவுற்றிருந்தாலும் அழகு குன்றவில்லை. கட்டிடக்கலை மாணவர்களுக்கு இதுபோன்ற கோவில்கள் ஒருவகையில் சிறந்த வாய்ப்பு. வெடால் ஆலயத்தின் அருகே பெரிய ஏரி உள்ளது, அங்கு சென்று சிறிதுநேரம் நீர்ப்பறவைகளை பார்த்துக்கொண்டிருந்தோம். உடன் பயணித்த நண்பர்கள் விஷ்ணுவுக்கும் திருமா அண்ணனுக்கும் பறவைகளை இனங்கண்டு சொல்வதில் சிறிய போட்டி இருந்தது.

வெடால் கோவிலில் உள்ளே சென்றவுடன் கண்ணில் பட்டது பக்கவாட்டில் இருந்த தவ்வை சிலை. அமர்ந்திருக்கும் பெரிய தவ்வையின் இருபுறத்திலும் அவள் பிள்ளைகளான மாந்தனும் மாந்தியும் மாந்தன் எருமை முகத்துடன் கையில் தடியுடன் நிற்க, காகக்கொடியின் கீழ் கால்மடங்கி பணிந்து அமர்ந்திருக்கிறாள் மாந்தி.  மூத்தவள் என்னும் ஜ்யேஷ்டா தேவிக்கு தமிழகம் முழுவதும் சிலைகள் உள்ளன. வல்லம் குடைவரையில் உள்ள தவ்வை காலம் அறியப்படும் பழைய சிலையாகலாம்.  பல்லவ அரசன் இராசசிம்மன் கட்டிய காஞ்சி கைலாசநாதர் ஆலயத்திலும் பனைமலை தாளகிரீஸ்வரர் ஆலயத்திலும் தவ்வை உண்டு. வைணவத்தில் லட்சுமிக்கு மூத்தவளாக காட்டப்படும் தவ்வை புராணங்களில் வறுமைக்கும் நோய்க்குமானவள். நமது பொது நம்பிக்கையும் அப்படித்தான், மூதேவி என்பவள் சோம்பலை விளைவிப்பவள், திருக்குறளும் அதையேதான் சொல்கிறது.

ஆனால் நாம் காணும் தவ்வை சிலையின் சிற்ப இலக்கணம் அவ்வாறல்ல. வயதானவளாக, வடிவற்றவளாக, அவலட்சணமாக அவள் சிலை வடிக்கப்படவில்லை. ஆரம்ப கால தவ்வைகள் எல்லாரும் பெருத்த வயிறும் முலைகளும் கொண்டு தனித்தமர்ந்தவர்கள். வயிற்றின் மடிப்புகள் உள்ளிட்ட உடலமைப்பு அவளை பிள்ளைபெற்றவளாகவே காட்டுகிறது. அதற்கடுத்த காலகட்டத்தில் அவள் தனது இரு குழந்தைகளுடன் வடிக்கப்படுகிறாள். வலக்கை அருளும்படியோ மலர் கொண்டோ அமைந்திருக்கும். அழகிய ஆசனமும், தாமரை பீடமும், நிதிக்குவைகளும் கூட சிலைகளில் காட்டப்படுவதுண்டு. தவ்வைக்கு காகக்கொடியும் துடைப்பச் சின்னமும் சிலைகளில் இடம்பெறுகிறது. மிகச்சில இடங்களில் அவளது கழுதை வாகனமும் காட்டப்பட்டுள்ளது. வளத்தின் கடவுளாக தவ்வை திகழ்ந்துள்ளாள் என்பதை பயணிக்கும்தோறும் நாம் உணரமுடிகிறது .  வடதமிழகத்தில் கோவில்கள் தவிர்த்தும் பலஇடங்களில் வெட்டவெளி சிற்பங்களாக தவ்வை அமர்ந்திருக்கிறாள். வெள்ளிக்கிழமைகளில் புதுத்துணி அணிவித்து, ‘படைத்து’ வழிபடும் மக்களுக்கு தவ்வை ஒரு அம்மன், அவர்களுக்கு எல்லா அம்மன்களும் ஒன்றுதான். மங்கலமானவள் காப்பவள் அம்மை இதுதான் கைகூப்பும் மனங்களின்  குரல்.

வெடால் தவ்வை அழகிய கரண்டை மகுடம் உடையவள்,  கிரீடம் தெய்வம் என்பதன் அடையாளங்களில் ஒன்று. பெரிய அழகிய முகம், விரிந்த காதுகளில் வட்டமான காதணிகள். வலக்கையில் பற்றிய மலர் ஒன்று தோளில் துவண்டு நிற்கிறது. கழுத்தில் அணிகள், கொற்றவைக்கு காட்டப்படும் சன்ன வீரம்போல இருபிரிகளாக இறங்கிச்செல்வது உபவீதமாகவும் இருக்கலாம். அழகிய இடக்கை தொங்கும்படி புஜத்தில் ஒரு வளையம், மணிக்கட்டு துவங்கி வளையல்கள் நிரம்பிய தொடிக்கை. ஏழுலகும் ஈனும் பேழை வயிறு கொண்ட மோடி, மாமுகடி. வற்றாத பென்னம் பெரியமுலைகள். அவையும் தாண்டி பெரியவளான அவளுக்கு காட்டப்பட்ட இளங்கழுத்து அதன் நடுவே அழகாக வடிக்கப்பட்ட மங்கள அணியான திருப்பூட்டு. 

ஒரே கடவுளின் பெயர் வசவுக்கு பயன்படுவதாக இருக்கிறது ஆனால் அதன் வடிவம் மங்கலம் ததும்புவதாக இருக்கின்றது. நாம் மொழிகளை கண்டுகொள்வதற்கும் முன்பிருந்து நம்மை தொடர்பவை வடிவங்கள், அவை நம் கனவுகளை ஆள்பவை. தமிழகத்தில் சில இடங்களில் உள்ள விசிறிப்பாறைகள் தாய் தெய்வம் என்று ஆய்வாளர்களால் மதிப்பிடப்படுகின்றன. அவையே ஸ்ரீவத்சம் மற்றும் கஜலட்சுமி என்றும் சிற்ப வடிவாக வளர்ந்திருக்கலாம் என்ற கருதுகோள் ஒன்றுள்ளது. இணையாகவே தவ்வை வடிவமும் தாய்தெய்வ வடிவங்களில் இருந்து கிளைத்த ஒன்றாகலாம். சான்றாக, திருக்கோவிலூர் வட்டத்திலுள்ள ஆ.கூடலூர் ஊரிலுள்ள தவ்வையின் வலது மேல்புறத்தில் அழகிய ஸ்ரீ வத்ஸ முத்திரை உள்ளது. வரலாறும் பண்பாடும் தன் திசைகளை மாற்றிச்செல்லும் நதிகள், முன்பு ஆற்றின் தென்திசையிலிருந்த ஓரிடம் இப்போது வடக்கிலிருக்கும். நன்மையையும் தூய தீமையும் ஒன்றேயான வடிவிலிருந்து ஜனித்த வேறுவேறு தெய்வங்கள். கண்ணுக்கு தெரியும் வடிவத்தோடு நாம் அந்த மூலத்தையும் வணங்குவோம்.

மங்கலை செங்கலசம் முலையாள் மலையாள் வருணச்
சங்கலை செங்கைச் சகலகலாமயில் தாவு கங்கை
பொங்கலை தங்கும் புரிசடையோன் புடையாள் உடையாள்
பிங்கலை நீலி செய்யாள் வெளியாள் பசும் பெண்கொடியே

விசிறிப்பாறை ( புகைப்படம்: தினமணி ஈ பேப்பர்)
பாண்டிச்சேரி தாமரைக்கண்ணன்

புதுச்சேரியில்  வசிக்கும் தாமரைக்கண்ணன்  தமிழ் இலக்கியம், பண்பாட்டு வரலாறு ஆகியவற்றில் ஆர்வம் கொண்டவர். இவர் எழுதிவரும் “ஆடல்” என்ற கட்டுரைத்தொடர் சிற்பவியல் வழியாக தமிழின் நாட்டார், செவ்வியல் நிகழ்த்துகலைகளை அதன் மூலங்களை ஆராயக்கூடியது. குருகு என்ற கலை-பண்பாட்டு மின்னிதழின் ஆசிரியர்களில் ஒருவர்.

உரையாடலுக்கு

Your email address will not be published.