/

தவிப்பின் முகம் : புஷ்கின் கவிதைகள்

தமிழில் : வயலட்

புஷ்கின் சிலை, டில்லி.

புஷ்கினின் “மூக்குப்பொடி போடும் இளம் அழகிக்கு” கவிதையைக் குறித்து நண்பர்களிடம் சொல்லும்போது முதலில் சிரித்தபடியே சொன்னேன். ஏனெனில் இக்கவிதை என்னை ஒருநாள் முழுக்க சிரிக்க வைத்தது. மூக்குப்பொடி நமக்கு சிரிக்கும் விசயமாகியிருக்கிறது என்பது மட்டுமே காரணமல்ல; அது புஷ்கினுக்கும் தெரியும். “இந்த மூக்குப்பொடியை வயதான பேராசிரியர்களும் போர்வீரர்களும் கிழவிகளும் பயன்படுத்தட்டும், ஆனால் நீயுமா?” என்றுதான் புஷ்கினும் அந்த முரணின் முன் நிற்கிறார். அதைக் கடந்து தன்னை அந்த முரணுக்கும் தவிப்புக்கும் முழுக்க ஒப்புக் கொடுக்கிறார். குறிப்பாக “விதி கருணையற்றது, போதும்!” என்ற அறிவிப்புக்குப் பின்னரும் “நான் மட்டும் அந்த மூக்குப்பொடியானால்” என்ற அந்தக் கற்பனை அவரை விடுவதாகயில்லை. இதை ஒரு வேடிக்கை கவிதையாகவோ, தவிப்பின் கவிதையாகவோ வாசிப்பது நம் கையில்தான் இருக்கிறது.

இந்தத் தவிப்பை நேரடியாக, ‘சின்சியராக’ எதிர்கொள்ள முடியாதவர்களாகிவிட்டோமா என்ற கேள்வி யோசிக்கவைத்தது. இந்தத் தவிப்பை நேரடியாக எதிர்கொள்ள நாம் முகத்தை இழக்கவேண்டுமா?

போன மாதம் டெல்லி சென்றிருந்தபோது புஷ்கினின் சிலையைதான் முதல் வேலையாகச் சென்று பார்த்தேன். புஷ்கின் மிக அழகிய மனிதன். சோவியத் காலத்தின் பரிசளிக்கப்பட்ட அச்சிலை அவரளவே அழகானது. தன் அழகை அறிந்த மனிதனின் ரசிக்கத்தக்க திமிர் வெளிப்படும் சிலை அது. பின்னால் கைகளைக் கட்டிக்கொண்டு நிற்கும் அச்சிலையின் புகைப்படங்களில் அதன் பின்பக்கத்தைப் பார்க்கமுடியவில்லை. எனவே முதலில் அதன் பின்னால் சென்று புஷ்கின் ஒரு கையால் இன்னொன்றைப் பிடித்திருக்கும் அழகையே பார்த்தேன். டெல்லியின் தெருக்களில், விரையும் வாகனங்கள், மாசடைந்த காற்று இவற்றுக்கிடையே வானத்தைப் பார்த்தபடி நின்ற பெரிய புஷ்கின் வேறொரு காலத்தை நிச்சயம் நினைவுபடுத்தினார். செயிண்ட் பீட்டஸ்பர்கில் இருந்து டெல்லி மிக தூரம் இல்லையா புஷ்கின்? பாடும் பறவை கவிதையில் வேறொரு நிலத்தில் எப்படி வாழ்வது என்பதையும் புஷ்கின் நமக்குச் சொல்லிச் சென்றிருக்கிறார். பின் நகரங்களைப் பற்றியும்.

நான் உன்னைக் காதலித்தேன் என்ற அவரது கவிதை பிரபலமானது. ரஷிய மூலத்தின் ஒலியில் அதன் தவிப்பு இன்னும் மிக அழகாக வெளிப்படும். ஆனால் வழமையான காதல் கவிதைகளை விட, இல்லை, நம் காலத்தின் சில புகழ்பெற்ற காதல் படங்களை விட இவற்றில் சிறப்பாக, வித்தியாசமாக என்ன இருக்கிறது? இந்த தவிப்பை நாம் கேள்விகேட்கப் பழகியிருக்கிறோம், இதன் காரண காரியங்களை அலசப் பழகியிருக்கிறோம். அவை நம் நன்மைக்கே. அந்தக் கேள்விகள் பயனளிப்பதே. ஒரேயொரு வித்தியாசம் இவற்றுக்கு புஷ்கினின் முகம்.

கடைசியாக ஆக்கிரமிப்பாளனின் சிலை கவிதை போல புஷ்கினின் முகத்தில் அப்படியொரு இரண்டாம் முகத்தைத் தேடிக் கிடைக்கவில்லை என்பதே கவிஞனாக அவன் வெற்றி என்று கொள்வதா?

-வயலட்

000

மூக்குப்பொடி போடும் இளம் அழகிக்கு

இதெப்படி? காதல் தேவதையின் ரோஜாக்கள்
அழகிற் சிறந்த டியுலிப் மலர்கள்
மணமிகுந்த மல்லிகை, பள்ளத்தாக்கின் லில்லி
இவை இல்லையா உன் மார்பிள் மார்பில்—
முன் நீ அதிகாலையின் வாசத்தை முகர்வாய்
இப்போது இந்த காய்ந்த களையை
காலத்தின் தேவைக்கு சாம்பல் பொடியாக
ஆக்கப்பட்டிருக்கும் இதை!
வெள்ளை முடி கொண்ட ஏதோ பேராசிரியனின்
மனது லத்தீன் உரைநடையில் ஆழ்ந்திருக்க
தன் சாய்வு நாற்காலியில் கூன் முதுகுடன்
நிற்காது தொடரும் இருமலோடு, தன் நோய்க்கு தீர்வாக
இதை எடுத்து மரியாதைக்குரிய தன் மூக்கில் அடைக்கட்டும்.
நீண்ட மீசையுள்ள யாரோ ஒரு குதிரைவீரன்
செவ்வானத்தில் சூரியனெழுவதைப் பார்த்தபடி
கனவுகளோடு தன் அறையை
புகையால் நிரப்பட்டும்;
தன் இளமையை இழந்த யாரோ ஓர் அழகி
காதலிலிருந்து ஓய்வுபெற்று, அன்பின் நிழல் நீங்கி
சுருங்காத உடல்பாகங்களை தேடிச் சோர்ந்தபடி
ஆடைகள் இறுகப் பிடித்து நிறுத்தும் உடலுடன்
பிரார்த்தித்து, கொட்டாவி விட்டு, புலம்பியபடி
தாராளமாக தன் விரல்களில் கிள்ளி எடுத்து ஆசுவாசம் பெறட்டும்;
ஆனால், என் அழகியே… உனக்கிதில் அப்படியொரு விருப்பம்…
நான் மட்டும் – கற்பனையில் ஆற்றலால், மூக்குப்பொடியானால்
உன் மூக்குப்பொடி டப்பாவில் அடைந்து
நீ எனை நுள்ளி எடுத்து
உன் மென்மையான விரல்களில் – ஆனந்தம்! நான் சிதறி விழுவேன்
உன் பட்டாடைகளுக்குள்
உன் மென்மையான வெண் மார்புகளில்
விழுந்து விழுந்து…
இல்லை, வெறும் கனவு. ஆனந்தம் எனக்கல்ல
விதி கருணையற்றது. போதும்!
ஓ, நான் மட்டும் அந்த மூக்குப்பொடியானால்!

000

பாடும்பறவை

வெளிநாட்டில், நம்பிக்கை இழக்காமல்
என் தாய்நிலத்தின் சடங்கொன்றைக் கடைபிடித்தேன்:
வசந்தத்தின் விழாவுக்கு
பாடும்பறவையொன்றை கூண்டிலிருந்து விடுவித்தேன்.
ஒருவழியாய் நிம்மதி ;
கடவுளை எப்படிக் குற்றஞ்சொல்ல?
ஒரு உயிருக்கு அப்படியொரு பரிசளிக்கும் ஆற்றல்
எனக்கிருக்கும் போது!

000

பெரும்புகழின் நகர், ஏழ்மையின் நகர்,
அருளின் சேவையின் பொருள்,
வெண் சுண்ணாம்பையும் சலிப்பையும் கிரானைட்டையும்
கடும் குளிரையும் சுவர்க்கம் சேமிக்குமிடம் –
இருப்பினும் உனையெண்ணி ஏங்குகிறேன் நகரே
உன் தெருக்களில் சிலநேரம் காணும்
சிறிய பாதங்களையும் பொன்னிற முடிக்கற்றைகளையும்
எண்ணி ஏங்குகிறேன்.

000 

நான் உன்னை காதலித்திருக்கலாம் அக்காதல் சுடர் இன்னும் முழுக்க அணைந்துவிடவில்லை; எனினும் அது உன்னை துன்புறுத்த விடமாட்டேன், உன்னை துயரிலாழ்த்தும் விழைவில்லை. என் காதலுக்கு நம்பிக்கையோ சொற்களோ இருந்ததில்லை பொறாமையும் கோழைத்தனமும் மட்டுமே இருந்தன. என் காதல் உண்மையானது, மென்மையானது. அப்படியொரு காதலை கடவுள் உனக்கு வேறு யார் வழியேனும் அருளட்டும்.

000 

ஆக்கிரமிப்பாளனின் சிலை

தவறில்லை – அதுவும் திட்டமிடப்பட்டதே:
அந்த மார்பிள் வாயில்
கலையின் கரங்கள் ஒரு புன்னகையைப் போட்டிருக்கின்றன
உறைந்த புருவத்தில் கோபத்தை.
இந்த இரட்டை முகம் புனைவல்ல
அவன் இப்படித்தான், இந்த ஆட்சியாளன்:
அவன் முகம் ஒரு நடக்கும் முரண்
அவன் வாழ்க்கையில் ஒரு கோமாளி.

வயலட்

எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான வயலட் பெங்களூருவில் உள்ள ஒரு சிறார் பதிப்பகத்தில் தமிழ் பதிப்பாசிரியராக பணியாற்றுகிறார். வயலட்டின் சிறுகதைகள் ‘ஊதா ஸ்கர்ட் கதைகள்’ (2017) என்ற தொகுப்பாக வெளிவந்திருக்கின்றது. எனில் என்ற இணைய இதழின் ஆசிரியர் குழுவில் இருந்தவர். இவர் மொழிபெயர்த்த கவிதைகள், கதைகள் இணைய, அச்சுப் பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. காலச்சுவடு வெளியிட்ட ஹுவான் மனுவேல் மார்க்கோஸின் ‘குந்தரின் கூதிர் காலம்’ (2017) என்ற பராகுவே நாவலை இவர் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்துள்ளார்.

உரையாடலுக்கு

Your email address will not be published.