வழியம்பலம் (2) – எயிற்பட்டினம் – பெருமதில்சூழ் அகம் : பாண்டிச்சேரி தாமரைக்கண்ணன்

புதுச்சேரி தாண்டியவுடன் கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கிறது, மரக்காணம். முதல் நூற்றாண்டை சேர்ந்த “செங்கடல் செலவு” (Periplus of the Erythraean Sea) எனும் கிரேக்க, கடலோடி நூல் ஆப்பிரிக்கா, அரேபியா தொடங்கி இந்தியாவில் கங்கை, குமரி வரையிலான பல துறைமுகங்களை குறிப்பிடுகிறது. அதில் சுட்டப்படுகிற சோழ மண்டல கடற்கரைத் துறைகளான கமரா, பொதுகே, சோபட்மா ஆகிய நகரங்கள் முறையே காவிரிப்பூம்பட்டினம், புதுவையின் தெற்கிலுள்ள அரிக்கமேடு, மரக்காணம் என்று கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி,  மயிலை சீனி வேங்கடசாமி ஆகியோர் குறிப்பிடுகின்றனர்.

அப்படி நீண்ட வரலாற்று பின்னணி உடைய மரக்காணம் சிறுபாணாற்றுப்படையிலும் பாடப்பட்டுள்ளது. அரசன் நல்லியக்கோடனை காண, பாணன் இடைக்கழி நாட்டிலிருந்து செல்கிறான். பொருநருக்கும் புலவருக்கும் மறையோருக்கும் அடையா நெடுங்கதவம் உடையோன் நல்லியக்கோடன். அவனை நாடி பாணன் செல்லும் வழித்தடத்தில் முதலில் “எயிற்பட்டினம்” என்ற ஊர் வருகிறது. அதுவே இன்றைய மரக்காணம் என்று கருதப்படுகிறது. எயிற்பட்டினம் என்றால் “பெரிய மதில்களையுடைய பட்டினம்”  என்று பொருள்.  இந்த மதில்கள் வரலாற்றிலும் இலக்கியத்திலும் வாய்மொழி கதைகளிலும் பல்வேறு விதங்களில் பேசப்படுகின்றன.  

மதில்கள், மனித நாகரிகத்தில் ஊரென்றும் நாடென்றும் நிலப்பிரிவினைகள் நடந்து நிலஎல்லைகளை வகுத்த பின்னர் பகைவரிடமிருந்து காத்துக்கொள்ள எழுப்பப்பட்ட பெருஞ்சுவர்கள். தமிழ் இலக்கணம் கூறும் பன்னிரு திணைகளில் இரண்டான நொச்சியும் உழிஞையும் மதில்களோடு தொடர்புடையன. படையெடுத்து சென்று மதிலை சூழ்ந்து முற்றுகையிடுவது உழிஞைத்திணை; தன் நாட்டு மதிலை பகைவர்களிடமிருந்து காத்துக்கொள்வது நொச்சித்திணை. மதிலைக்கடக்க முயல்பவர்கள் உழிஞைக்கொடி சூடுவர்; தங்களுடைய கோட்டையை காப்பவர்கள் நொச்சிப்பூ சூடுவர்; இவ்விரு பிரிவினரின் செயல்களும் புறப்பொருள் வெண்பா மாலை உள்ளிட்ட இலக்கண நூல்களில் விவரிக்கப்பட்டுள்ளன. 

குளமுற்றத்து துஞ்சிய கிள்ளிவளவன் என்பவன் சங்ககால சோழ மன்னன். ‘யான்வாழும் நாளும் பண்ணன் வாழிய’ என்ற புகழ்பெற்ற பாடல் இந்த அரசன் இயற்றியதாக புறநானுற்றில் உள்ளது.   பல போர்களை நடத்திய கிள்ளி,  கூடல் நகரையும் வஞ்சியையும் வென்றவன். மலையமானை வென்றவன். போர்களில் இரக்கமற்றவனாக காட்டப்படும் இந்த அரசன் கொடையாளி என்றும் புலவர்கள் பாடுகிறார்கள்.  மதில்களுக்கு வெளியேயுள்ள அகழியில் முதலையும் மதில்களுக்கு உள்ளே யானையோடு  பகைவன் இருப்பது தெரிந்தும் அவன் நகரை தாக்கி அழிக்கும் ஆற்றல் கொண்டவன் என்று மாறோக்கத்து நப்பசலையார் பாடுகிறார்.

“…கராஅம் கலித்த குண்டு கண் அகழி,
இடம் கருங் குட்டத்து உடன் தொக்கு ஓடி,
யாமம் கொள்பவர் சுடர் நிழல் கதூஉம்
கடு முரண் முதலைய நெடு நீர் இலஞ்சி,
செம்பு உறழ் புரிசை, செம்மல் மூதூர்,
வம்பு அணி யானை வேந்து அகத்து உண்மையின்,
‘நல்ல’ என்னாது, சிதைத்தல்
வல்லையால், நெடுந்தகை! செருவத்தானே.”

எயில் என்ற பெயர்கொண்ட ஊர்கள் பக்தி இலக்கியத்திலும் பதிவாகியுள்ளன. திருச்செந்தூர் அருகிலுள்ள வைணவ திவ்யதேசத்தலம் தென்திருப்பேரை.  பிரபந்தத்தில் குறிப்பிடப்படும் பெயர் “திருப்பேரெயில்”. இத்தலத்தை நம்மாழ்வார் பாடியிருக்கிறார். தலைவி பராங்குச நாயகி, தாயாரை தோழியரை விட்டுவிட்டு தென் திருப்பேரெயில் வாழ் மகரநெடுங்குழைக்காதனை காணச்செல்ல துணிகிறாள்.  நம்மாழ்வார் நம் அகத்துறைப்பாடல்கள் கண்ட உச்ச உணர்வுகளை பக்தியில் புகுத்தியவர். பக்தியில்லாவிட்டால்கூட நம்மாழ்வார் பாடல்களின் காதல் உணர்வு கண்டு ஒருகணம் நீங்கள் விம்மியழலாம்.

பொதுவாக எயில் என்ற சொல் ஆரெயில் அல்லது பேரெயில் என்பது போன்று முன்னொட்டு பெற்று வருகிறது.  உக்கிரப்பெருவழுதி என்ற சங்ககால பாண்டியன் கானப்பேரெயில் என்ற இடத்தை வென்றவனாக அடையாளப்படுத்தப்படுகிறான். அவ்வூர் தேவாரத்தில் கானப்பேர் என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது. திருப்பேர், கானப்பேர் போன்ற இந்த ஊர்களின் பெயர்களை முன்னுதாரணமாக்கி  பேர், பேரை என்று முடியும் ஊர்களை பெரிய மதில்களால் பெயர்பெற்ற ஊர்கள் என்ற  கண்ணோட்டத்தில் ஆய்வுசெய்யலாம். திருவெண்ணெய்நல்லூர் அருகே இருக்கும் ஏமப்பேர் என்ற ஊரும் நினைவுக்கு வருகிறது. 

இப்பயணத்தில், வெடால் ஏரியிலிருந்து கிளம்பி மரக்காணம் செல்லும் வழியில் நல்லூரில் வைக்கப்பட்டிருந்த சிறுபாணாற்றுப்படை இயற்றிய நல்லூர் நத்தத்தனாரின் நினைவுச்சின்னத்தை பார்த்தோம். ஆற்றுப்படை போன்ற நூல்கள் இயற்றிய புலவர்கள் அரசர்களின் கொடைத்திறத்தை மட்டும் பாடவில்லை. வெவ்வேறு நிலத்தில் வாழும் குடிகளாகிய உமணர், எயினர், ஆயர், உழவர், குறவர் போன்றோர் வாழ்வு குறித்தும் பாடுகின்றனர். வறிய பாணன் அரசனை நாடிச்செல்லும் வழியில்  இக்குடிகள் வசிக்கும் நால்வகை நிலப்பகுதிகளும் காட்டப்படுகிறது. அவ்வழிச்செல்லும் பாணர்கள் பரிசு தேடிப்போகும் மன்னனின் பெயரைச்சொல்ல வேண்டும். அந்த வள்ளலின் பாணர்கள் நாங்கள் என்று சொன்னால் அந்த திணையின் மக்கள் மகிழ்ந்து அவர்கள் சமைக்கும் உணவுகளை, தயாரிக்கும் கள்ளை பாணர்களுக்கு அளித்து உபசரிப்பர்.

நல்லூர் நத்தத்தனாரின் நினைவுச்சின்னம்

ஆய்வாளர் ர.பூங்குன்றன் வேறோர் பார்வையை முன்வைக்கிறார். வேளிர் போன்ற சிறுகுடி மன்னர்கள் பெருவேந்தர்களாக வேண்டுமெனில் அவர்கள் அனைத்து நிலப்பகுதிகளையும் ஆள வேண்டும். வணிகத்திற்கு துறைமுகம் தேவை; செல்வங்களின் பிறப்பிடமான மலைவளம் வேண்டும்; நெல்விளையும் மருதமும், பெருவழிகள் நீண்டுசெல்லும் முல்லைப்பகுதியும் அவனது ஆளுகைக்குள்ளாக இல்லாவிட்டால் அவன் வம்பவேந்தனாக முடியாது. அது போலவே வெவ்வேறு குடிகளின் மக்களாலும் ஏற்கப்படவேண்டும். இந்த ஏற்பை பதிவுசெய்ய ஆற்றுப்படை இலக்கியங்கள் மேற்கண்ட உத்தியை இலக்கணமாக கொண்டிருக்கிறது. இதன் தாக்கம் தெய்வத்தைப்பாடும் முருகாற்றுப்படையிலும் கூட எதிரொலித்திருக்கலாம் நெய்தலின் செந்திலும் மருதத்தின் திருவேரகமும் பிற குறிஞ்சித்திணை படைவீடுகளோடு பாடப்பட்டுள்ளதை காண்கிறோம். நிலத்தையும் மக்களையும் ஆள ஓர் அரசன் மொழியில் நிலைக்க வேண்டியுள்ளது.

மரக்காணம், பூமீஸ்வரர் ஆலயம் நாங்கள் சென்றபோது திருக்குடமுழுக்குக்காக தயாராகிக்கொண்டிருந்தது. ஆயினும் பூமீஸ்வரரை தரிசிக்கமுடிந்தது.  முதலாம் ராஜராஜன் காலம் துவங்கி கல்வெட்டுகள் ஆலயத்தில் உள்ளன. பலிபீடத்திற்கு அருகே நவகண்ட சிற்பம் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. கருவறைக்கு இடப்பக்கம் அமைந்த அழகிய தூண்களை உடைய மண்டபம் அனைவரையும் கவர்ந்தது. தாராசுரம் ஆலயத்தில் இராஜகம்பீரன் மண்டபத்தில் கந்தபுராண காட்சிகள் அமைந்திருப்பது போல இந்த மண்டபத்திலும் தூண்கள் கதைகள் சொல்லின. கிராதார்ஜுனியமும், சிறுத்தொண்டர் கதையும் இரு தனித்தனி தூண்களில் முழுக்க வடிக்கப்பட்டுள்ளன. மனுநீதிச்சோழன் கதை சிற்பத்தை ஒரு நண்பர் கண்டுபிடித்துச்சொன்னார். பதினாறு கால் மண்டபம், ஆயிரங்கால் மண்டபம் என்று நமது புரிதலுக்காக வகைப்படுத்துகிறோம். ஆனால் உண்மையில் அந்த மண்டபங்கள், நாம் அறிந்ததும் அறியாததுமான எண்ணற்ற கதைபழுத்த மரங்கள் நிரம்பிய காடுகள்.

தேர்ச்சிற்பங்களாக இருந்திருக்கும் என்று நினைக்கக்கூடிய ஒன்றரை அடி உயர யாளியின் மரச்சிற்பம் ஒன்று மண்டபத்தில் கிடந்தது. பல்வேறு மிருகங்களின் கலவையாக இருந்த யாளி யானையை வேட்டையாடுகிறது. ஆற்றுப்படை நூல்களிலேயே யாளி ஓரிடத்தில் உவமையாக கூறப்படுகிறது. பொருநாறு கரிகாலனை கூறுகையில் பால்குடி மறவாத யாளி முதல் வேட்டையில் ஆண்யானையை வேட்டையாடியதுபோல இரு பெரும் அரசர்களை முதல் போரில் வீழ்த்தினான் என்கிறது. இந்த கற்பனைமிருகம் இல்லாத கோவில்கள் அரிது. காஞ்சி காமாட்சி தன் உற்சவத்தில் யாளி வாகனத்தில் ஒருநாள் பவனிவருகிறாள். கந்தபுராணத்தில் யாளி போன்ற தலையுடைய அசுரனான யாளிமுகன் வீரபாகுவுடன் சண்டையிடுகிறான். ஸ்ரீவைகுண்டம் ஆலயத்தில் திருவேங்கடமுடையான் மண்டபம் முழுக்க இருந்த சீற்றமிக்க யாளிகளை நினைத்துக்கொள்கிறேன். இந்தக் கனவு மிருகங்கள் ஏன் இவ்வளது தூரம் கலையில் செல்வாக்கு செலுத்துகின்றன. நாம் காணும் எந்த உயிராலும், அறிந்த எந்த ஆற்றலாலும் இதையெல்லாம் தாங்க முடியாது என்று சொல்வதற்காகவா யாளிகள் அனைத்தையும் தாங்கிநிற்கின்றன ?

மரக்காணம் ஆலயத்தின் பேரெயிலை கடந்தால் வெளியே ஒரு நாயக்கர் கால மண்டபம். அங்கு வெளிச்சுவர் தோறும் சிறிய சிற்பங்கள். நடனப்பெண்கள். அவர்களை சுற்றி பாடுவோர் இசைப்போர் மற்றும் பகடிக் கூத்தர். இந்த வரிசையிலும் கதைகள் இருக்கின்றன. பல நமக்கு புரிவதில்லை. இதேபோல சிற்பங்களின் வரிசை விரிஞ்சிபுரத்திலும் உள்ளது.  அ.கா.பெருமாள் தனது இராமாயணம் பற்றிய ஆய்வுகளில் ஒரு மாளிகையில் இருந்த இராமாயண ஓவியங்களை ஆவணப்படுத்தியிருப்பார். அவை தமிழகத்தில் வழங்கிய கதைகள் அல்ல. ஆந்திரத்தில் உள்ளவை. கதைகள் வெவ்வேறு நிலங்களை நோக்கி செல்லும் தன்மைகொண்டவை. ஒருவகையில் நாம் இந்த நாயக்கர் கால சிற்பங்களை முறையாக ஆவணப்படுத்தவில்லை என்பது உண்மை. வெளிச்சுவரில் கண்ணன் ஒரு கோபிகை மீது வண்ண நீர் பீய்ச்சுகிறான். வெகுநேரம் அந்த சிற்பத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். குழலுடன் இணைக்கப்பட்டிருந்த தோல் பை அழகர் ஆற்றிலிறங்கும் திருவிழாவில் நீர் பீய்ச்சும் தோப்பறையை நினைவுபடுத்தியது. 

தமிழக கோவில்களில் ஒருசடங்கு நடைபெறுகின்றது. அதற்கு ஊடல் உற்சவம் என்று பெயர். திருவண்ணாமலையில் திருவூடல் தெரு என்றே ஒன்றுள்ளது. இந்த உற்சவம் வைணவம், சைவம் இரண்டு கோவில்களிலும் வெவ்வேறு பெயர்களில் நடக்கும். பிரணய கலகம் என்றும் சொல்வார்கள். திருமால் அல்லது சிவபெருமான் வீதியுலா சென்று மீளுவார். கோவிலுக்குள் செல்ல அத்தெய்வத்தின் மனைவியான தாயார் அல்லது அம்மன் அனுமதிக்க மாட்டார். பேராலயத்திற்கு உரிமை கொண்ட அந்த தெய்வம்  வாசலில் நிற்க வேண்டும். இருவருக்கும் இடையே அடியார் ஒருவர் தூது செல்வார். ஒருகட்டத்தில் தலைவியான தெய்வம் தலைவனை வீட்டிற்குள் அனுமதிக்கின்றது. இது சங்க இலக்கியத்தின் மருதத்திணையின் பாற்பட்டது.

திருவரங்கத்தின் அழகியமணவாளர் பெருங்கோவில் விடுத்து உறையூர் சென்று சோழ குலத்தவளாகிய கமலவல்லியை மணம்கொள்கிறார். அடுத்தநாள் பங்குனி உத்திரம்; திருவரங்க கோவிலின் முதன்மை பெண்தெய்வமான ரங்கநாயகியின் நட்சத்திரம். நீள் மதிலரங்கம் திரும்பும் நம்பெருமாள் தாயார் சினத்தால் அவளது ஆஸ்தானத்திற்கு செல்லமுடியவில்லை. நம்மாழ்வார் தூது செல்கிறார்; பின்னர் நாயகி சினம் தணிந்து சேர்த்தி உற்சவம் நடைபெறுகின்றது.

ஐந்து அகத்திணைகளுக்கும் உணர்வுகள் உண்டு. மருதத்திணைக்கான உணர்வு ‘ஊடல்’. கோட்டைமதிலை காக்கும், வளைக்கும் புறத்திணைகளான நொச்சியும் உழிஞையும் அகத்திணையான மருதத்திணையின் ‘புறனாக’ அடையாளம் காட்டப்படுகின்றது. அகத்திணை உணர்வான ஊடலை மதில்காக்கும், வளைக்கும் புறத்திணைகளோடு ஒப்பிடுகிறது தமிழ் இலக்கியம்.  தன்னை விட்டு விலகிச்செல்கிறான் என்ற உணர்வு ஒரு மதில்போல எழுந்து நிற்கிறது. தனது அரண்களை தலைவி உள்ளிருந்து பூட்டி இறுக்கிக்கொள்கிறாள். தலைவன் அந்த பேரெயிலைக்கண்டு திகைத்து வெளியே நிற்கிறான்.  கிள்ளிவளவனின் போர் விவரணைபோல தலைவன் வெளியேயுள்ள அகழியின் முதலைகளை கடக்க வேண்டும்; உள்ளே இருக்கும் ஆற்றல்மிக்க யானை கட்டுக்குள் இருக்கவேண்டும். இருவரும் தங்கள் போரிலிருந்து வெளிவராது மதில் கடக்கப்படாது. தரையில் அல்ல அகத்தில்தான் ஓயாது போர்கள் நடக்கின்றன. அகவுணர்வை இப்படி புறம் வழியாக காட்டும் நுட்பம்தான் நம் மரபிலக்கியத்தின் செவ்வியல் குணம்.

நவீன இலக்கியத்திலும் பெருஞ்சுவர்கள் இல்லாமல் போய்விடவில்லை. பஷீரின் “மதிலுகள்” குறுநாவலின் கதைநாயகன் ஒரு சிறைக்கைதி. அவன் பெரிய மதில்சுவர்களுக்குள் அடைபட்டு கிடக்கிறான்.  எதிர்பாராதவிதமாக அவனை சூழ்ந்திருக்கும் மதில்களுக்கு அப்பால் பெண்களுக்கான சிறையில் உள்ள ஒருத்தி அவனுக்கு தோழியாகிவிடுகிறாள். வெறும் குரல் மட்டுமேயான நாராயணி அவனது அகஉலகை நிரப்புகிறாள். இருவரும் தங்கள் காதலை தெரிவிக்கிறார்கள். நேரில் பார்க்கவேண்டும் என்ற தவிப்பு அதிகரிக்கிறது, சிறைக்குள் உள்ள மருத்துவமனையில் சந்தித்துக்கொள்ள திட்டமிடுகிறார்கள். அவர்கள் சந்திக்கப்போவதற்கு முந்தைய நாள் எதிர்பாராதவிதமாக அவன் விடுதலை செய்யப்படுகிறான். தனக்காக காத்திருக்கும் அவளைவிட்டு விலகப்போகிறான், அவன் கண்முன்னே அந்த மதில்சுவர் வளர்ந்தபடியே இருக்கிறது. மதில்சுவரை  தாண்டிச்செல்ல விழையும்  தவிப்பு.  சுவரில்  முட்டி  முட்டி ஓலமிடுகிறான். அகழி முதலைகள் அந்த ஓலங்களை இன்னும் ஆழத்திற்கு கவ்வி இழுத்துச்செல்கின்றன.

“பேர் எயில் சூழ் கடல் தென் இலங்கை
      செற்ற பிரான் வந்து வீற்றிருந்த
பேரெயிற்கே புக்கு என் நெஞ்சம் நாடி
      பேர்த்து வர எங்கும் காணமாட்டேன்

ஆரை இனி இங்கு உடையம் தோழீ?
      என் நெஞ்சம் கூவ வல்லாரும் இல்லை
ஆரை இனிக்கொண்டு என் சாதிக்கின்றது?
      என் நெஞ்சம் கண்டதுவே கண்டேனே  

கண்டதுவே கொண்டு எல்லாரும் கூடி
      கார்க் கடல் வண்ணனோடு என் திறத்துக்
கொண்டு அலர் தூற்றிற்று அது முதலாக்
      கொண்ட என் காதல் உரைக்கில் தோழீ

மண் திணி ஞாலமும் ஏழ் கடலும்
      நீள் விசும்பும் கழியப் பெரிதால்
தெண் திரை சூழ்ந்து அவன் வீற்றிருந்த
      தென் திருப்பேரெயில் சேர்வன் சென்றே”

-திருவாய்மொழி

வழியம்பலம் (1) – மங்கலை – பாண்டிச்சேரி தாமரைக்கண்ணன்

பாண்டிச்சேரி தாமரைக்கண்ணன்

புதுச்சேரியில்  வசிக்கும் தாமரைக்கண்ணன்  தமிழ் இலக்கியம், பண்பாட்டு வரலாறு ஆகியவற்றில் ஆர்வம் கொண்டவர். இவர் எழுதிவரும் “ஆடல்” என்ற கட்டுரைத்தொடர் சிற்பவியல் வழியாக தமிழின் நாட்டார், செவ்வியல் நிகழ்த்துகலைகளை அதன் மூலங்களை ஆராயக்கூடியது. குருகு என்ற கலை-பண்பாட்டு மின்னிதழின் ஆசிரியர்களில் ஒருவர்.

1 Comment

  1. அருமை.அருமை…இலக்கியப் பயணம்தொடரட்டும்.
    வாழ்த்துகள்‌

உரையாடலுக்கு

Your email address will not be published.