சல்மான் ருஷ்டியின் ‘கத்தி’ : ஷங்கர்ராமசுப்ரமணியன்

காலச்சுவடு வெளியீடு

ஓர் இலக்கியப் படைப்பு மீது 30 வருடங்களாகத் தீராத வன்மம் கொண்டு அலைகிறது ஒரு பழி. பின்னர் அப்பழியின் வடிவம் ஒரு கத்தியாகிறது. அந்தப் படைப்பை எழுதிய எழுத்தாளன் மீது, தன் வன்மத்தை ரத்த வரிகளாக நிகழ்த்துகிறது. அந்தக் கத்தியிலிருந்து, உயிர்தப்பி மீண்ட நினைவுகளின் பதிவுதான் சல்மான் ருஷ்டியின் ‘கத்தி’. கருத்தியல் ரீதியான, கலாசார அடிப்படையிலான, அடையாள அடிப்படையிலான குறுகல்வாதங்களும் தூய்மைவாதங்களும் கூர்மையான கத்தியாக மாறிய பயங்கரத்தை இந்நூல் விவரிக்கிறது.

சல்மான் ருஷ்டியின் புத்தகத் தலைப்பு கூறுவதைப் போலவே, கொலை முயற்சி மீதான ஆழ்தியானங்களே இப்புத்தகம். சல்மான் ருஷ்டி மீது இஸ்லாமிய அடிப்படைவாதிகளிடம் சர்வதேச அளவில் குரோதம் ஏற்படுவதற்கும் கோமேனியின் மரண ஆணைக்கும் காரணமான ‘சாத்தானின் வசனங்கள்’ நூலை, அவரைக் கத்தியால் குத்திய இளைஞன் ஹதி மதார் இரண்டு பக்கங்களுக்கு மேல் படித்திருக்கவில்லை. சல்மான் ருஷ்டியை கொலை செய்ய முயற்சிப்பதற்கு அவரைப் பற்றிய இரண்டு யூட்யூப் காணொளிகள் போதுமானவையாக இருந்திருக்கின்றன.

சாத்தானின் வசனங்கள் நூல் பிரசுரமாகி 33 வருடங்கள் ஆகிவிட்டன. சல்மான் ருஷ்டியின் வாழ்க்கையிலும் உலக மக்களின் வாழ்க்கையிலும் தலைகீழ் மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. சுதந்திரமான சிந்தனைகளுக்கும் அதை வெளிப்படுத்தும் கலைஞர்கள், சிந்தனையாளர்களுக்கும் பாதுகாப்பான இடமென்று கருதப்படும் அமெரிக்காவின் நியூ யார்க் மாகாணத்தின் வடகிழக்குப் பகுதியில் ஷெடாக்வ வட்டரங்கத்தில் பெரிய பாதுகாப்போ அச்சுறுத்தலோ இல்லாத அந்தரங்கமான சூழலில் ஹதி மதாரின் கத்தி தன்னை நோக்கி விரைந்துவருவதைக் கூர்ந்து சல்மான் ருஷ்டி பார்ப்பதன் வழியாக இந்த நினைவுப் பதிவு தொடங்குகிறது.

சல்மான் ருஷ்டி பல நொடிகளுக்கு முன்பாகவே தன்னைக் கொலைசெய்ய வருபவனைப் பார்த்துவிடுகிறார். ஆனால், முதுகைக் கூடத் திருப்பாமல் பார்த்துக் கொண்டே இருக்கிறார். “சரி, நீதான் அது. இந்தத் தருணம்தானே உனக்கு வேண்டும், எடுத்துக்கொள். ஆக, இறுதியில் அது வந்துவிட்டது. மேன்மைமிக்க அந்த நிகழ்வு” என எதிர்கொள்கிறார்.விதிவசப்பட்டது போல சல்மான் ருஷ்டி, அந்தக் கொலைமுயற்சியை எதிர்கொள்கிறார். தாக்குதலுக்கு வந்தவன் தனது உடலில் இயங்கிய 27 நொடிகள் அந்தரங்கமானது என்கிறார். கத்திக்கு இருக்கும் அந்தரங்கம் துப்பாக்கிக்கு இல்லை என்றும் நம்மிடம் பகிர்கிறார்.

தாக்குதலைச் சற்று முன்னரே அறிந்திருந்தும் சல்மான் ருஷ்டி ஏன் செயல்படவில்லை என்று உறவினர்களும் நண்பர்களும் சம்பவத்துக்குப் பிறகு அவரிடம் கேட்கின்றனர். ஒரு திடமான நிச்சயமான எதார்த்தத்துக்குள் வன்முறை என்னும் நிகழ்ச்சி அரங்கேறும்போது அங்கேயிருப்பவர்களை புதிய எதார்த்தத்தை புரிந்துகொள்ள முடியாதவண்ணம் குழப்பிவிடுகிறது என்ற பதில் தவிர ருஷ்டிக்கு வேறெந்த பதிலும் இல்லை.

எழுத்தாளர்கள், வாசகர்கள் கூடியிருக்கும் மேடையில் உரை நிகழ்த்துவதற்காக காத்திருந்த சல்மான் ருஷ்டியின் உடல் மீதும் இப்படித்தான் வன்முறை ஏற்கெனவே இருந்த எதார்த்தத்தை நொறுக்கி முன்னேறியது. சல்மான் ருஷ்டியின் வலதுபக்கத் தாடை அவன் கையால் முதலில் தாக்கப்படுகிறது. அடுத்து கழுத்தில் கத்தி இரண்டு முறை பாய்கிறது. அடுத்து மார்பில் காயம். நெற்றியில் காயம். கல்லீரலைக் கிட்டத்தட்ட சேதாரப்படுத்தி விட்டது. மூளையில் இன்னும் ஒரு மில்லிமீட்டர் கூடுதலாக இறங்கியிருந்தால் ‘கத்தி’ என்ற இந்தப் படைப்பே கிடைத்திருக்காது. வலது கண் நிரந்தரமாகப் பறிபோகும் அளவுக்கு கண்ணில் சேதம்.

மருத்துவமனையில் நினைவு திரும்பியவுடன் அந்தக் கொலையாளியுடன் அந்தரங்கமாகச் செலவிட்ட 27 நொடிகள் மீதான தியானத்தை நம்மிடம் பகிர்கிறார் ருஷ்டி. அந்த 27 வினாடிகளில் பரமண்டலங்களிலிருக்கும் எங்கள் பிதாவே என்ற மந்திரத்தைச் சொல்லிவிடலாம். மத ரீதியானதைத் தவிர்த்தால், சேக்ஸ்பியரின் 14 வரிக்கவிதைகளில் ஒன்றை எளிதாகப் படித்துவிடலாம். ஆனால் கொலைக்கு முயற்சித்த தாக்குதலாளியுடன் தான் செலவிட்ட அந்தரங்கத்தையும் தனக்கு நெருக்கமான வாசகன் தன் எழுத்தின் மீது செலுத்தும் அந்தரங்கத்தையும் ஒருங்கே நினைவுகூர்கிறார், ருஷ்டி.

கத்தியை ஒரு கருத்துருவமாக பல தூக்கமற்ற இரவுகளில் யோசித்துப் பார்த்திருக்கிறார் ருஷ்டி. மொழியும் ஒரு கத்திதான் ;அது உலகத்தை வெட்டி அதன் அர்த்தத்தை, அதன் அகத்தில் நடக்கும் வேலைகளை, அதன் ரகசியங்களை, அதன் உண்மைகளை வெளிக்காட்டக்கூடியது என்கிறார். படிப்பவர்களின் கண்களைத் திறந்து அழகை உருவாக்கக் கூடியது மொழி என்கிறார். அத்துடன் மொழிதான் என்னைத் தாக்கவரும் ஆயுததாரியுடன் சண்டையிடுவதற்கான கத்தி என்றும் சொல்கிறார்.

போர்ஹேயின் சிறுகதை ஒன்றில் வருவதுபோல, கையில் வைத்திருப்பவனுடையதல்ல; ஆயுதத்திலேயே வன்மமும் பழியும் காலம்காலமாக உறைந்திருக்கிறதென்பதைப் போல, தனக்கென்று உயிர்வந்ததைப் போல, சல்மான் ருஷ்டியின் உடலின் மீது குத்தியும் வெட்டியும் தனது ஆட்டத்தை கத்தி நிகழ்த்திக் கொண்டிருந்திருந்ததாகச் சொல்கிறார் ருஷ்டி.

கடவுளோ மதமோ ஏதுமற்ற வேசிமகன் என்று தன்னைப் பற்றிக் கேலியாக விவரிக்கும் சல்மான் ருஷ்டி, மரணத்தின் முனையில் இயற்கையை மீறிய எந்தப் புலன்கடந்த அனுபவமும் நிகழவில்லை என்று கூறுகிறார். “என் உடல் இறந்துகொண்டிருந்தது, தன்னோடு என்னையும் எடுத்துக்கொண்டு போகிறது. உடல் சார்ந்த தீவிரமான உணர்வு அது.”

ஆன்மாவின் அழிவின்மையில் நம்பிக்கை இல்லாதவனான தனக்கு இந்த கொலைமுயற்சி சம்பவம் அதை உறுதிப்படுத்தியதென்றும் கூறுகிறார். உடலும், ‘நானும்’ மரணத்தின் விளிம்பிலேயே அந்தச் சம்பவத்தில் இருந்ததாகவும் ருஷ்டி பகிர்கிறார்.

அற்புதங்கள் என்று எதிலுமே நம்பிக்கை இல்லாத சல்மான் ருஷ்டி தனது மறுபிழைப்பு ஒரு அற்புதம் என்று சொல்லப்படுவதை முரண்நகையாகத் தெரிந்தாலும் நம்புகிறார்.கலையும் எழுத்தும் தொடர்ந்து வைதீகத்துக்கு சவால் விட்டு வெல்லும் அற்புதம் என்கிறார். தனது மறுபிறப்பை தான் எழுதிய சொற்களின் வெற்றி என்றும் தனது விஜயநகரம் நாவலின் கதாபாத்திரத்தைச் சுட்டிக்காட்டுகிறார்.

“காலம் ஒப்புக்கொண்ட கருத்துகள் தன்னுடைய எதிரிகள் என்பதைக் கலை அறியும். ஒப்புக்கொள்ளப்பட்ட கருத்துகள் என்பவை அர்த்தமிழந்த தேய்வழக்குகளே. அவற்றைப் போன்றவையே சித்தாந்தங்களும். கண்ணுக்குத் தெரியாத வானத்துக் கடவுள்களின் ஒப்புதலைச் சார்ந்தவை, அப்படிச் சாராதவை என்று அவை இரண்டு வகைகளில் உள்ளன. சிந்திக்கவும் ஒன்றைப் புதுக்கிளர்ச்சியோடு பார்க்கவும் நம்முடைய உலகத்தைப் புதுப்பிக்கவுமான நமது திறன், கலை இல்லாவிட்டால் வாடி உதிர்ந்துவிடும்”

அந்தக் கொலைத் தாக்குதல் நடைபெற்று சுற்றியிருந்த விருந்தினர்கள் பார்வையாளர்களால் தாக்குதலுக்கு வந்தவன் தடுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் தரையில் சல்மான் ருஷ்டி கிடக்கும்போது சத்தம்போட்டு அழுததை எல்லாரும் பார்த்திருக்கின்றனர். ஆனால், மருத்துவமனையில் தனக்கு நிகழ்ந்த தாக்குதல் சம்பவத்தை நினைவுகூரும் ருஷ்டி வலி எதையும் உணரவில்லை. தனது நினைவில் வலியின் பதிவு மட்டும் இல்லாமல் போனதை விந்தையோடு குறிப்பிடுகிறார்.

கொலை மூர்க்கத்தோடு கத்தியால் தாக்கிக் கொண்டிருப்பவனை நிராயுதபாணிகளாக இருந்த விருந்தினர்களும் பார்வையாளர்களும் பாய்ந்து பின்விளைவு எதையும் பொருட்படுத்தாது தடுத்த நடவடிக்கையை மாபெரும் வீரச்செயல் என்று வர்ணிக்கிறார். கூட்டத்துக்குப் பாதுகாவலாக வந்த முன்னாள் தீயணைப்புப் படை வீரர், ருஷ்டியின் கழுத்திலிருந்து வழியும் ரத்தத்தை தனது கட்டைவிரலால் பொத்தி அடைக்கிறார். கழுத்து தமனியிலிருந்து வெளியே பாயும் ரத்தம் உயிர் ரத்தம் என்பதை உணர்ந்து அந்தக் காரியத்தைச் செய்கிறார். அவரை ருஷ்டி, திரு.கட்டைவிரல் என்று அழைக்கிறார்.

நவீன உலகின் மகத்தான ஆயுதங்களோடு உலகம் முழுவதும் மற்றமை மீது உயிர் பெற்றிருக்கும் மாபெரும் வெறுப்புக்கும் அதை முறியடித்த பயன்கருதாத நேசத்துக்கும் இடையில் மீட்கப்பட்ட ஒரு எழுத்துக் கலைஞனின் கதைதான் ‘கத்தி’. சாத்தானின் வசனங்கள் மீதும் அதை எழுதியவன் மீதும் வைக்கப்பட்ட அவதூறைப் பற்றி அவர் சொல்லும்போது, நகைச்சுவை உணர்வு கொண்டவர்களுக்கும் நகைச்சுவை உணர்வு இல்லாதவர்களுக்கும் இடையேயான சண்டை என்று குறிப்பிடும் ருஷ்டி, தன்னைக் கொலை செய்தவனுக்கு சிரிக்கத் தெரியாததனாலேயே கத்தியை எடுத்து கொல்ல முயல்வது சாத்தியமானது என்று விமர்சிக்கிறார்.

“கலை, தன்னை ஒடுக்குபவர்களைக் கடந்து அது நீடித்து நிற்கிறது. கவிஞர் ஓவிட், அகஸ்டஸ் சீஸரால் நாடுகட்டதப்பட்டார்; ஆனால் ஓவிட்டின் கவிதை ரோம சாம்ராஜ்யத்தைக் கடந்து வாழ்கிறது. கவிஞர் மாண்டல்ஸ்டாமின் வாழ்க்கையை ஜோசஃப் ஸ்டாலின் சிதைத்தார்; ஆனால் அவருடைய கவிதை சோவியத் யூனியனைத் தாண்டி நிற்கிறது. ஜெனரல் ஃபிராங்கோவின் அடியாட்களால் கவிஞர் லோர்கா கொலை செய்யப்பட்டார்; ஆனால், அவருடைய கலை ஃபிராங்கோவின் அரசியல் கட்சியான ஃபலாஞ்சின் பாசிசத்தைத் தாண்டி நிலைத்திருக்கிறது.”

கதைகள் ஒன்றுக்கொன்று நடத்தும் உலகப்போர் காலகட்டத்துக்கு நாம் வந்து சேர்ந்திருக்கிறோம் என்று ருஷ்டி உரைக்கிறார். எதார்த்தம் குறித்த மாறுபட்ட விளக்கங்களுக்கிடையிலான போர் என்று வலியுறுத்தும் ருஷ்டி அதனுடன் எப்படி போராடுவது என்பதை நாம் பயிலவேண்டிய அவசியமுள்ளதாகவும் சொல்கிறார்.

ரஷ்யாவில் ஒரு கொடுங்கோலன் தோன்றி உக்ரைனை அந்தக் கொடூரம் பாதித்துள்ளதைச் சுட்டிக்காட்டுகிறார். உக்ரைன் மக்களை நாஜிக்கள் என்று குற்றம்சாட்டுமளவுக்கு அந்த கதை சென்றுவிட்டது. அமெரிக்காவோ மத்திய கால மனநிலைக்குச் சென்று கருப்பின மக்கள், பெண்களின் உடல் மீது வல்லாதிக்கத்தைச் செலுத்த தொடங்கியுள்ளதை எடுத்துக்காட்டுகிறார். பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய மதவெறுப்புக் கருத்துகளை இந்தக் கதைகள் நியாயப்படுத்துவதைக் குறிப்பிட்டு, இந்தியாவில் எழுச்சிபெறும் இந்து மதவாதம் மற்றும் அதன் அரசியல் சர்வாதிகாரம், வன்முறை மூலம் ஜனநாயகத்தை படிப்படியாகச் சிதைத்து வருவதையும் சுட்டிக்காட்டுகிறார். இந்திய வரலாறு இதனால் பொய்யான கதைகளுக்குள் சிக்கிக் கொண்டுள்ள துயரத்தை பகிர்கிறார்.

சர்வாதிகாரிகள், ஜனரஞ்சகத் தலைவர்கள், முட்டாள்கள் சொல்லும் கதைகளை எப்படி எதிர்கொள்வது? அவர்கள் சொல்லும் கதைகளை செல்லாமல் போகச் செய்யும் வலுவான கதைகளை நாம் சொல்ல வேண்டும். மனிதர்கள் வாழ விரும்பும் கதைகளை நாம் சொல்லவேண்டும் என்கிறார்.

சல்மான் ருஷ்டி தன் மீது நடந்த கொலைமுயற்சிக்கு முன்பு டிஷானி  தோஷிக்குக் கொடுத்த நேர்காணலொன்றின் வழியாக நம் காலத்தில் நாம் எதிர்கொள்ளும் இன்னொரு நெருக்கடியையும் சுட்டிக்காட்டுகிறார்.“தூய்மைவாதம் குறித்து எப்போதெல்லாம் பேச்சு தொடங்குகிறதோ அதனோடேயே இன்னொரு புறத்தில் மக்களும் சாகத் தொடங்குகிறார்கள்”.

ஜெர்மனியில் எப்போது நாஜிக்கள் இனத்தூய்மைவாதம் குறித்துப் பேசத்தொடங்கினார்களோ அதை, பெரும் இனப்படுகொலை ஒன்று தொடர்ந்ததை நினைவுகூர்கிறார். வாழ்க்கையை அதுபோகும் இயல்பில் கலந்து அழுக்காகவே விட்டால் என்ன என்று கேட்கிறார்.

குழந்தைகளும் நாய்க்குட்டிகளும் காதலும் அழுக்கு, தூய்மையற்றதற்கு அருகில் தானே வாத்சல்யமாக இருக்கின்றன. கலந்து உழைக்கும்போது கலந்து விளையாடும்போது அழுக்கும் வியர்வையும் சேரத்தானே செய்கிறது.நாம் அழுக்காக, தூய்மையின்றி இருந்தால் தான் என்ன? என்று சல்மான் ருஷ்டி கேட்பதன் மூலம், நாம் பிறரைக் கொல்லாமல் இருந்தால் என்ன என்றும் கேட்கிறார்.

நாம் எல்லாரும் நம்மை மிகக் குறுகலான வகையில் வரையறுத்துக் கொள்ள இந்த நாட்களில் நிர்பந்திக்கப்படுகிறோம். நமது சுயம் என்பது அப்படி வரையறுத்துவிட முடியாதது என்பதை வெளிப்படுத்தும் வடிவம்தான் நாவல் என்கிறார் சல்மான் ருஷ்டி. ஒரு நபரிடம் இருக்கும் சுயங்கள் மிகவும் சிக்கலானவையும் சில சமயங்களில் ஒன்றுக்கொன்று முரண்பட்டவையும் கூட என்கிறார்.

மனித சுயம் என்பது பலபடித்தானது என்ற கருத்துதான் இலக்கியத்தின் அடிநாதம் என்கிறார். நாவலின் வரலாற்றில் நிகழ்ந்த மகத்தான கதாபாத்திரங்களின் அடிப்படையும் இதுதான் என்கிறார் சல்மான் ருஷ்டி. 

“போர் நடைபெறுவது போர்க்களத்தில் மட்டுமல்ல. நாம் வாழும் கதைகளும் சர்ச்சைக்குரிய நிலப்பரப்புகள்தான். ஜாய்ஸின் நாயகன் டெடாலஸ், தன் இனத்தின் சிருஷ்டிக்கப்படாத மனசாட்சியைத் தன் ஆன்மா என்னும் உலைக்களத்தில் காய்ச்சி உருவாக்க முயன்றதை நாமும் பின்பற்றலாம். பயங்கரத்தை எதிர்கொள்ளும்போது நாம் ஆர்ஃபியஸைப் பின்பற்றிப் பாடுவோம்; காலத்தின் போக்கும் மாறி, மேலான ஒருநாள் தொடங்கும்வரை பாடுவதை நிறுத்த வேண்டியதில்லை.”

000

ஒரு பேரிடர் நேர்ந்தபிறகு ஒருவருக்கு அகத்திலும் புறத்திலும் ஏற்படும் மாற்றங்களை மிக நுட்பமாக விவரிக்கிறது ‘கத்தி’.

சாத்தானின் வசனங்களுக்கு வந்த விமர்சனமும் அச்சுறுத்தலும் அடுத்தவந்த படைப்புகளின் அகத்தில் எந்த மாற்றத்தையும் எதிர்வினையையும் ஏற்படுத்தக்கூடாது என்பதில் கவனமாக இருந்ததாகக் கூறுகிறார். தனது படைப்பு ஒரு அச்சுறுத்தலுக்கு எதிர்வினையாகவும் ஆகக்கூடாது என்று கருதியிருக்கிறார். புத்தகங்கள் அவற்றுக்கேயுரிய பயணத்தைச் செய்யவேண்டியவே என்பதை அவரது நம்பிக்கை. தனது படைப்பு சுதந்திரத்தின் மீது அத்தனை விருப்புறுதியைக் கொண்டிருந்த ருஷ்டியின் உடல் மீதான தாக்குதல் அவரை அதற்கு முன்பு இல்லாத ஒரு நபராக மாற்றுகிறது.

உடல் முழுவது ஒழுகும் உறுப்புகள், ஒழுகும் நீர்மங்களைச் சேகரிக்கும் பைகளுடன் அவரது மருத்துவமனை வாழ்க்கை விவரிக்கப்படுகிறது. வலது கண்ணை நிரந்தரமாக இழந்து தண்ணீரை கிளாஸில் சிந்தாமல் ஊற்றுவதற்கு குணமடைந்தபிறகும் சிரமப்படுகிறார்.எல்லா உடல் பாகங்களும் ஓரளவு தேறி, மீண்டவுடன் மீண்டும் தாக்குதல் நடைபெற்ற ஷெடாக்வ வட்டரங்கத்தின் மேடையில் மனைவி எலிசாவுடன் வந்து நிற்கும்போது உணரும் மகிழ்ச்சியை ‘காயம்பட்ட மகிழ்ச்சி’ என்று நினைவுகூர்கிறார்.

000

ருஷ்டியைக் கொலைத் தாக்குதலிலிருந்து காப்பாற்றி அவரை இயல்புவாழ்க்கைக்கு மீட்ட ஆண்கள், பெண்களுக்கு இந்த நூல் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்தப் புத்தகத்தின் மையமாக சல்மான் ருஷ்டியின் காதல் கதை ஆழமாகப் பொதியப்பட்டுள்ளது. 30 வயது இடைவெளி கொண்ட கவிஞர், நாவலாசிரியர் எலிஸாவை, நான்கு ஆண்டுகள் தீவிரமாகக் காதலித்து திருமணம் நடந்த ஒரே ஆண்டில் கொலைத் தாக்குதலிலிருந்து உயிர்பிழைத்து எழுந்த ருஷ்டி தனது காதல் மனைவிக்கு எழுதிய நீண்ட காதல் கடிதமாகவும் இந்த நூலைப் படிக்கலாம்.கொலைத் தாக்குதலைப் போலன்றி சிறிய ரத்தம் தோய்ந்த சம்பவம் ஒன்றில்தான் சல்மான் ருஷ்டியும் அவர் காதலி எலிஸாவும் காதலின் ஆழமான விதிக்குள் பிணைக்கப்படுவதிலிருந்து இந்தக் காதல் கதை தொடங்குகிறது. சல்மான் ருஷ்டியின் எழுபதுகளைக் கடந்த தங்கை அண்ணனிடம் இன்னொரு காதல் வேண்டுமா இப்போது என்று கேட்கிறாள். வளர்ந்த மகன்கள் இருவருமே அப்பாவின் காதல் குறித்து சந்தேகத்துடனேயே ஒப்புக்கொள்கிறார்கள். பல்வேறு விதமான திருமணங்களில் கசந்து இனி உறவே வேண்டாமென்ற நிலையில் ஐந்தாவது துணையாக வந்த எலிஸாவை தனது வாழ்க்கையின் இறுதி நேசமென்றும் நிலைத்ததென்றும் பகிர்கிறார்.

தனது காதல் வாழ்க்கையின் மகிழ்ச்சிப் பொழுதுகளின் உச்சத்தில் சல்மான் ருஷ்டி கொலைத் தாக்குதலுக்குள்ளாகி, தப்பிக்கும் நினைவுகளைப் பகிரும் புத்தகம் இது. நேசம், பரிவு, நன்றியுணர்வு, நிச்சயமின்மை எல்லாவற்றையும் வெளிப்படுத்தும் ஊறுபடும் தன்னிலையாக இந்தப் புத்தகத்தில் சல்மான் ருஷ்டி துலங்குகிறார்.

அந்த வகையில் அவரைக் கொலைசெய்ய முயன்ற கொலையாளியைப் போலவே, நமக்கும் ‘கத்தி’ மிக அந்தரங்கமான நூல். சல்மான் ருஷ்டி எழுதிய மார்க்வெஸ் பற்றிய கட்டுரை தவிர வேறு புனைவுகள் எதுவும் படித்திராத எனக்கு, அவருடைய ‘கத்தி’ நெருக்கமும் மர்ம சுவாரசியமும் கொண்ட மொழியனுபவத்தைத் தருவதாக இருந்தது. ஆங்கிலத்தில் வெளியாகி ஒரு ஆண்டுக்குள்ளாகவே தமிழில் இதை  ஆர். சிவகுமார் மொழிபெயர்த்திருக்கிறார். அவர் இதனை ஆங்கில மொழியின் சாகசங்களில் ஒன்று என்கிறார்.

கத்தி, சல்மான் ருஷ்டி, தமிழில்: ஆர்.சிவக்குமார், காலச்சுவடு வெளியீடு

ஷங்கர்ராமசுப்ரமணியன், தமிழில் எழுதிவரும் கவிஞர், விமர்சகர். ‘இகவடை பரவடை, நிழல் அம்மா, ஆயிரம் சந்தோ‌ஷ இலைகள், கல் முதலை ஆமைகள் முதலிய கவிதைத்தொகுதிகள் வெளிவந்துள்ளன. பிறக்கும்தோறும் கவிதை, நான் பிறந்த கவிதை, நினைவின் குற்றவாளி  ஆகிய கட்டுரைத் தொகுப்புகளையும்  எழுதியுள்ளார். விக்ரமாதித்யன் கவிதைகள் ,‘அருவம் உருவம்: நகுலன் 100’ உள்ளிட்ட தொகுப்பு நூல்களின் ஆசிரியர்.

தமிழ் விக்கியில் 

உரையாடலுக்கு

Your email address will not be published.