அரிசங்கர் குறுங்கதைகள்

 காத்திருப்பு

அவர்கள் என் இடத்தைச் சுத்தப்படுத்தி அலங்கரிக்க ஆரம்பித்திருந்தார்கள்.
வருடத்திற்கு ஒருமுறை இது வழக்கம்தான். ஒரு குறிப்பிட்ட தினத்திற்கு என் சொந்தங்கள் அனைவரும் என்னை வந்து சந்திப்பார்கள். எனக்கு அதில் எந்தவொரு ஆர்வமும் இல்லை. ஆரம்பத்தில் அவர்கள் வரவை எதிர்நோக்கிக் காத்திருப்பேன். ஆனால், இப்போதெல்லாம் சலிப்பாக உள்ளது. ஆனால், அதே நாளில் அவளும் அங்கே வருவாள்.

அவளுக்கான அந்த காத்திருப்பு மட்டுமே என் ஒரே சந்தோஷம். அவளை எனக்கு என் சிறுவயதிலிருந்தே தெரியும். அவளைப் பார்க்கும்போதெல்லாம் எனக்குள் ஏதோ ஒன்று நிகழும். அப்போதும் சரி, இப்போதும் சரி. அவள் முடி நரைத்திருந்தாலும், உடல் தளர்ந்துவிட்டாலும், அவள் எப்போதும் என் அவள்தானே.

அந்த நாள் வந்தது. நான் எதிர்பார்க்காத, பார்க்க விரும்பாத அனைவரும் வந்தனர். என்னைச் சுற்றியிருந்த அனைவரையும் பார்க்கச் சொந்தங்கள், நண்பர்கள் வந்திருந்தனர். என் கண்கள் அவளை மட்டுமே தேடியது. அவள் வரவில்லை. நான் காத்திருந்தேன். வந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் புறப்பட ஆரம்பித்தார்கள். ஆனால், அவள் வரவேயில்லை. எனக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது. பக்கத்தில் இருந்த பிரான்சிஸ் ஆறுதல் சொன்னான். அவன் மிகவும் நல்லவன். அவன் தான் அவளது கணவனாக இருந்தவன். அவனுக்கு நான் அவளைக் காதலித்ததும், எங்களால் சேரமுடியாததும் தெரிந்திருந்தது. பிரான்சிஸ் என் அருகில் வந்து, “உனக்கு ஒரு ஆச்சர்யம் காத்திருக்கிறது,” என்று சொல்லிவிட்டு சென்றான்.

அவன் என்னவோ உளறுகிறான் என்று நான் கண்டுகொள்ளவில்லை.

அன்றிலிருந்து மூன்றாவது நாள் என் இடத்திற்கு அருகில் அவள் நின்றுகொண்டிருந்தாள். எனக்கு பதற்றமானது. இது உண்மைதானா என்று சந்தேகமாக இருந்தது. பிரான்சிஸ் சொன்ன ஆச்சர்யம் இதுதானா? எங்கே அவன்? நான் மெல்ல அவள் அருகில் சென்றேன். அவள் என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் முகத்தில் இருந்தது கோபமா, வெட்கம் கலந்த சிரிப்பா என்று என்னால் எதையும் ஊகிக்க முடியவில்லை. அவள் கண்கள் என்னை அசைவில்லாமல் பார்த்துக்கொண்டிருந்தன. நான் அவள் அருகில் சென்றேன். எனக்கு நா எழவில்லை. என்ன பேசுவது? எப்படி தொடங்குவது? மெதுவாக, “எப்போ?” என்றேன்.

“இது மூன்றாவது நாள்,” என்றாள்.

“ஓ… அதனால் தான் கல்லறைத் திருவிழாவுல உன்னைப் பாக்க முடியலயா?”

“நான் அதுக்கு முதல் நாளே இங்க வந்துட்டேன். உன்னால் தான் என்ன உணர முடியல.”

“பிரான்ஸில் கூட இருந்ததால இருக்கலாம்.”

அவள் பதிலேதும் சொல்லவில்லை. எனக்கு எப்படி பேச்சைத் தொடர்வதென்று தெரியவில்லை. ‘எப்படி இருக்க?’ என்று இறந்து போனவளைப் பார்த்து கல்லறையில் வைத்து கேட்பது முட்டாள்தனமாக பட்டது. ஆனாலும், அவளிடம் பேச வேண்டும். அவளை விட்டுப் பிரிந்த நாற்பது ஆண்டுகளும், என் உடலைவிட்டுப் பிறந்த இந்த இருபது ஆண்டுகளும், இதற்கு மட்டுமே என் மனம் ஏங்கிக்கொண்டிருந்தது. இருந்தாலும், என்ன பேச வேண்டுமென்று தெரியவில்லை. மெதுவாக அவளிடம் சென்றேன்.அவள் நிமிர்ந்து என்னைப் பார்த்தாள். “நல்லபடியாகத்தானே செத்துப்போன?” என்றேன். அவள் சத்தமாகச் சிரித்தாள்.

வீடு

வாடகை வீட்டில் இருப்பவர்கள் ஒவ்வொருவருக்கும் சொந்த வீடு வாங்குவதற்கு ஒவ்வொரு காரணம் இருக்கும். கௌரவம். ஆசை. வீட்டு ஓனர்களின் நச்சரிப்பு என பல காரணங்கள் இருக்கும். முக்கியமாக வீட்டு ஓனர்களின் நச்சரிப்பு. இதை செய்யாதே, அதை செய்யாதே, எத்தனை மணிக்கு வா, வராதே, இத்தனை மணிக்கு போ, பார்க்காதே, பேசாதே, சத்தம் போடாதே, குதிக்காதே, ஆணி அடிக்காதே, டீவியை சத்தமாக பார்க்காதே என பல பல. எனக்கும் ஒரு காரணம் இருந்தது பல வருடங்களுக்கு முன். என் பாட்டி இறந்தது. இறப்பதற்கு முன் அவர் ஒரு முதியோர் விடுதியில் இருந்தார். அவர் முதியோர் இல்லத்திற்குச் சென்ற பின் நாங்கள் புது வீடு மாறி இருந்தோம். அந்த வீட்டிற்கு அவள் வரவே இல்லை. அதன் காரணமாக அவள் பிணத்தை எடுத்து வர அந்த வீட்டு உரிமையாளர் ஒப்புக்கொள்ளவே இல்லை. பாட்டிக்குப் பிறகு இறந்து போக இன்னும் நிறைய பேர் இருந்தோம். நானுமே கூட தயாராக தான் இருக்கிறேன். ஆனால் என் பிணத்தை வைக்க என் வீட்டு உரிமையாளர் ஒப்புக் கொள்வாரா என்று தெரியவில்லை. என்னுடன் வாழ்ந்து, என்னுடன் பழகி, ஒரு பக்கம் என்னை கடைசியாக ஒரு முறை பார்க்க விரும்புபவர்களுக்கும் நான் சில நிமிடம் அவர்கள் முன் படுத்து கிடக்க ஒரு இடம் வேண்டும். அதற்காகத்தான் எனக்கும் ஒரு வீடு வேண்டும் என்ற ஆசை.

என்னைப்போல என் மகளுக்கும் புதிய சொந்த வீட்டிற்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதேபோல் அவளுக்கும் ஒரு காரணம் இருந்தது. அவளுக்கு என்னுடனும் என் மனைவியுடனும் ஓடியாடி விளையாட வேண்டும். துதிக்க வேண்டும். ஆட்டம் போட வேண்டும். முதல் மாடியில் வீட்டு உரிமையாளர் இருக்கும்போது இரண்டாவது மாடியில் இதையெல்லாம் எப்படி செய்வது. ஒரு முறை அவள் எதற்காகவோ குதித்துக் கொண்டிருந்தபோது வேகமாக வந்த வீட்டு உரிமையாளர் அம்மா அவளை குதிக்காதே என்று சத்தம் போட்டுவிட்டு சென்றார். அந்த இரவு முழுக்க அவள் அழுது கொண்டே இருந்தாள். கண்ணீர்த் துளியை அடுக்கி வைத்து வீடு கட்ட முடியாதே. அப்போது என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.

ஆனால் எங்களுக்கும் நேரம் வந்தது. நாங்களும் ஒரு வீடு கட்டினோம். உண்மையில் பல இன்னல்களுக்கு இடையில் கட்டினோம். சந்தோஷமாக குடி புகுந்தோம். ஒரு நாள், நான் உட்கார்ந்துகொண்டு இருந்தபோது என் மகள் துள்ளி குதித்தபடி ஓடி வந்தாள். சந்தோஷமாக குதித்துக் கொண்டிருந்தாள். நான் ஏதோ ஒரு ஞாபகத்தில் அவளிடம் “குதிக்காதே ஹவுஸ் ஓனர் திட்ட போறாங்க” என்றேன். குதித்துக் கொண்டிருந்தவள் அமைதியானாள். என் மனைவியை என்னை அதிச்சியாகப் பார்த்தாள். என் மகள் என்னிடம் “அப்பா நீங்க தானே ஹவுஸ் ஓனர் யார் என்ன திட்ட போறாங்க” என்றாள் சிரித்துக் கொண்டே. நானும் அமைதியாக யோசித்தேன் ‘ஆம், நான்தான் ஹவுஸ் ஓனர் யார் திட்டுவது’. அவள் மீண்டும் குதிக்கத் தொடங்கினாள். எனக்குள் என்னென்னவோ தோன்றியது. நான் யாராகவோ மாறினேன்.  மீண்டும் அவளிடம், “குதிக்காதே என்றேன்”. “ஏன்பா” என்றாள். “ஏன்னா நான் ஹவுஸ் ஓனர்” என்றேன்.

ஜிலேபி

நான் அந்தப் போட்டோ ஃப்ரேமைச் சுற்றியிருந்த பேப்பரைப் பிரித்தேன். அது அப்பாவினுடைய போட்டோ. ஃப்ரேம் செய்யப்பட்டு வந்திருந்தது. அப்பா இறந்து ஒரு வாரம் ஆகிறது. அப்பாவினுடைய ஒரு பழைய நல்ல புகைப்படத்தை எடுத்து அதை சரி செய்து பிரேம் செய்திருந்தோம். நான் புகைப்படத்தில் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று ஒரு முறை பார்த்துவிட்டு, அதற்காக ஆணி அடித்து தயாராக இருந்த சுவற்றில் மாட்டினேன். நான் எப்போது அறைய விட்டு வெளியே வந்தாலும் அல்லது வீட்டிற்குள் நுழைந்தாலும் அப்பாவின் புகைப்படம் என் கண்ணில் படும்படியே இருந்தது. திடீரென்று ஒரு நாள் இரவு தாகம் எடுக்க நான் அறையிலிருந்து வெளியே வந்த போது புகைப்படத்தில் அப்பா இல்லை. எனக்கு தூக்க கலக்கத்தில் தான் ஏதோ அப்படி தெரிந்துவிட்டது என்று நினைத்து கண்களை கசக்கி விட்டு பார்த்தேன். அப்போதும் புகைப்படத்தில் அப்பா இல்லாமல் வெறும் வெள்ளை நிற பின்னணி மட்டுமே இருந்தது. நான் வேகமாக அறைக்குள் ஓடி என் மனைவியை எழுப்பினேன். அவளை இழுத்துக் கொண்டு வந்து பார்த்தபோது புகைப்படத்தில் அப்பா இருந்தார். ஆனால், ஏதோ ஒரு மாற்றம் இருப்பது போல் ஏன் எனக்கு மட்டும் தோன்றியது. நான் அவளிடம் திட்டு வாங்கிவிட்டு மீண்டும் போய் படுத்துக் கொண்டேன். அப்போதிலிருந்து தொடர்ந்து இரவுகளில் புகைப்படத்தை கண்காணிக்கத் தொடங்கினேன். எப்போது தண்ணீர் குடிக்கச் சென்றாலும், எப்போது சிறுநீர் கழிக்கச் சென்றாலும், என் பார்வை அப்பாவின் புகைப்படத்தின் மீதே இருந்தது. பலமுறை அப்பா புகைப்படத்திலிருந்து காணாமல் போயிருந்தார். அனைத்தும் இரவுகளில் மட்டும்தான். நான் அதை கண்டும் காணாமல் சென்றுவிட்டு திரும்பி மீண்டும் வந்து பார்க்கும்போது அப்பா புகைப்படத்தில் இருப்பார். ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு மாற்றம் இருந்து கொண்டிருப்பதை நான் பார்த்துக் கொண்டுதான் இருந்தேன். இதை எப்படியாவது கண்டுபிடித்து ஆக வேண்டும் என்று முடிவு செய்து அப்பாவின் புகைப்படத்திற்கு நேர் எதிராக ஒரு சிறிய ரகசிய கேமராவை பொருத்தினேன். இரண்டு நாட்கள் நான் அப்பாவை கண்காணிக்காமல் இருந்தேன். கேமரா மட்டுமே தொடர்ந்து அப்பாவை கண்காணித்துக் கொண்டிருந்தது.

ஒரு நாள் இரவு வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் கேமராவில் இருந்த காட்சியை கணினியில் பொருத்தி பொறுமையாக பார்த்துக் கொண்டிருந்தேன். சரியாக இரவு ஒரு மணிக்கு அப்பா புகைப்படத்திலிருந்து மெல்ல வெளியே வந்தார். சுற்றி ஒருமுறை பார்த்துவிட்டு நேராக ஃப்ரிஜைத் திறந்து ஓர் இனிப்பை எடுத்து வாயில் போட்டுக்கொண்டார். அப்போது நான் வெளியே வருவதைக் கவனித்து ப்ரிஜ்ஜின் பின்னால் ஒளிந்துகொண்டார். நான் அறைக்குள் சென்றதும் வேகமாக சென்று புகைப்படத்தில் ஏறினார். அப்பொது அதில் மாட்டியிருந்த மாலை அவர் காலைத் தடுக்கியது. சிரமப்பட்டுதான் உள்ளே சென்றார். நான் அந்த இடத்தைவிட்டு நகர்ந்ததும் மறைத்து வைத்திருந்த ஜிலேபியை எடுத்து வாயில் போட்டுக்கொண்டார். சிறு வயதிலிருந்தே சக்கரை வியாதியோடு வாழ்ந்தவர். தனது இறுதி காலத்தில் சாவோடு கடுமையாக அவர் போராடிய நாட்கள் என் நினைவு அடுக்கிலிருந்து பொங்கி கண்ணீராக வெளியேறியது. மறுநாள் காலை கடைக்குச் சென்று இனிப்புகள் வாங்கிக்கொண்டு வந்து அப்பாவின் போட்டோவின் முன்னாலிருந்த மேஜையில் வைத்தேன். பிறகு அவர் போட்டோவில் மாட்டியிருந்த மாலையைக் கழட்டியெறிந்தேன்.

அரிசங்கர்

அரிசங்கர் புதுச்சேரியைச் சேர்ந்தவர். பிரபஞ்சனுக்குப்பின் பாண்டிச்சேரி வாழ்க்கையை எழுதும் குறிப்பிடத்தக்க படைப்பாளியாக அரிசங்கர் கருதப்படுகிறார்.  பதிலடி, ஏமாளி, உடல், சப்தங்கள் ஆகிய  சிறுகதைத் தொகுப்புகளையும், மாயப்படகு, பார்க்காடி, பாரிஸ், உண்மைகள் பொய்கள் கற்பனைகள் மற்றும் மாகே கஃபே ஆகிய நாவல்களையும் வெளியுட்டுள்ளார்.

தமிழ் விக்கியில் 

2 Comments

  1. முதலில் எழுத்துப்பிழை இல்லாமல் படைப்புகளை பதிவேற்றுவதற்கான முயற்சிகளைச் செய்யுங்கள். தாய்மொழியில் வெளியிடுகிறீர்கள். அதை சரியாகச் செய்ய இயலாதா.

உரையாடலுக்கு

Your email address will not be published.