சிலகவிதைகளும் சிலமொழிபெயர்ப்புகளும் : க.கலாமோகன்

சிலகவிதைகளும் சிலமொழிபெயர்ப்புகளும் : க.கலாமோகன்

ஓவியம் : திண்டுக்கல் தமிழ்பித்தன்

பூனையின் கதை

எனது பூனை விசித்திரமானது
சில வேளைகளில்
எனக்கு அருகில் வரும்
பல வேளைகளில் தூரத்தில் இருந்து
என்னைப் பார்த்துக் கொண்டிருக்கும்

நான் புத்தகம் வாசிப்பவன்
நான் ஓர் நூலை வாசித்தால்
அதனையே
எனக்கு அருகில் இருந்து
பார்த்துக் கொண்டிருக்கும்

எனது பூனை ஒருபோதும்
இறைச்சி வகைளைச் சாப்பிட்டதில்லை

ஓர் தடவை அதன் முன்
சார்டின் மீன் வைத்தேன்
அது என் முன் மறைந்தது
அந்த மீனை நானே சாப்பிட்டேன்

அந்தத் தினத்தில் அதன் முன்
கீரைக் கறியை வைத்தேன்
முழுவதும் அதனது வயிற்றுக்குள்

நான் அதிகம் சிரிக்காதவன்
எனது பூனை சிரித்ததை ஒருபோதுமே
நான் கண்டதில்லை

சரி, நானும் பூனையும்
ஒரு ரகம்
எனச் சிலவேளைகளில்
நான் நினைப்பதுண்டு

எனது பூனை
அதிகம் வெளியே போக விரும்புவதில்லை.
ஏன் என நானும் கேட்பதில்லை.

எனது பூனையின் நாடு
எது என்பது எனக்குத் தெரியாது.
அதனது தனிமை வாழ்வு
எனக்குள் அழுகையைத் தந்தது.

லூவர் மியூசியம் அருகில் இருந்த
பிராணிகள் கடைக்கு
சில நாள்களின் முன் சென்றேன்.
1200 ஈரோவுக்கு
ஓர் ஆண் பூனையை வாங்கினேன்.

நான் அதனுடன் சென்றபோது
எனது பூனை ஓர் நாயுடன்
முத்தமிட்டபடி இருந்தது

நான் வாங்கிய ஆண் பூனையையும்
எனது பூனை முத்தமிட்டது.

ஆம், எனக்கு அன்றுதான் தெரிந்தது
எது எனது பூனையின் காதல் என்பது.

000

எனது ஸ்டொக்காம் பயணம்

காடு எரிந்தென்ன
நாட்டினில் நால்வர்
தந்திக் கம்பத்தில் தொங்கி
உதிரம் கொட்டி
நிலத்தை நனைத்தென்ன
அம்மிகள் யுகத்தை
நிலை நிறுத்தத்தானே
எம்மவர் தோழ்களில்
ஏதேதோ ஏறின

வானைக் காட்டி
கற்பினைத் தேடும்
இந்த அருந்ததி யுகத்தில்தான்
எனது சிநேகிதி
கயிறையும் கிணற்றையும்
தேடும் மரபை மாற்றி
யோனியைக் கிழித்து
தனது நாள்களிற்கு
முற்றுப்புள்ளி வைத்தாள்

புணர்ச்சி எமக்குத் தடுக்கப்பட்டுள்ளது
புணரும் நாய்களைத் தேடி
எம்மவர் கல்களோடு

எமது யுகத்தின் எழுத்தாளன்
மனிதனல்லன்
அரக்கன்

நான் ஸ்டொக்காம் போகின்றேன்
இவனுக்கு நோபல் பரிசு
வழங்குங்கள் என்று கேட்க.

(1992 இல் தாயகம், கனடா இதழிலே பிரசுரமானது.)

000

Michel Heleyel கவிதைகள்

எனது மரணம்
எப்போது வருமாம்?
எனது மரணம் ஓர் இரவென்று
என்றுமே எனது வாழ்வில்
எப்போதும் சொன்னதில்லை.


எவர் எனது
மரணத்திற்கு முன்
மரணிக்காமல் இருக்கின்றாரோ
தான் எப்போது மரணிப்பாரோ
அப்போது மரணிப்பார்


மரணம்
மரணத்தினால் முடிந்து போகக் கூடாது
எது மரணம்
வெளியேயிருந்து திணிக்கப்ட்ட எதுவுமே


வாழ்வுள் போவதற்கும்
தனக்குள் நுழைவதற்குமாக
எப்போதுதான்
மரணிப்பதை நிறுத்திக் கொள்வோம்?

(Michel Heleyel, லெபனாலில் பிறந்து பிரான்ஸில் வாழ்பவர். மிகவும் சிறந்த மனித நேசமிக்க ஆய்வாளரான எனது நண்பரும்தான். பேசுவது குறைவு. தொடர்புகளும்தான். சிறந்த கவிதைகளை எழுதுவதில் வல்லவர். 1993 எக்ஸில், பிரான்ஸ் இதழில் நான் இவரது சில கவிதைகளை மொழிபெயர்த்தேன்.)

000

“சிறு சிறு கவிதைகள்”

வெளிச்சம்
அதிக வெளிச்சம்
எனது விழிகள் முன்
கறுப்புக் குண்டுகள்

கனவு எங்கே?
கடல் எங்கே?
நிலவே!
நீ என்னைச் சபிக்காதே!

நான் வரும்போது
எடுக்க மறந்த கோவணம்
எனக்காக இன்றும்
கோடியில் காத்திருக்குமா?

அர்த்தம்
எனது மொழிகளில் இல்லை
உனது விழிகளில் உள்ளது

நேசம் எனது நினைவில்
மறந்து விட்டது
பாதைகளைக் காட்ட வேண்டாம்

உனக்கு முன் எரிவது
நெருப்பு
எனக்கு முன் எரிவது
குளிர்
நாங்கள் சுவாசிப்பதோ
அகதிக் காற்று

எனது தேசத்தைத் தின்றது
நிலவுமல்ல
தீப்பந்துமல்ல
உனது குண்டுகளே!

உனது குடையின் மீது
மழைத் துளிகளும்
முத்தமிடத் தயங்கும்

நிறங்களை நேசி
போர்களை நேசிக்காதே!

(தமிழ்நாட்டின் தலித் இதழான “புதிய கோடாங்கி”யில் 2003 இல் வெளியான எனது கவிதை)

000

இரண்டு கதவுகள்

இரண்டு நாடுகளில்
இரண்டு நகரங்களில்
இரண்டு கதவுகளால்
காலையிலே நான் எனது
வேலைக்குப் போவேன்…
இளைத்தும் களைத்துப்போயும்
மாலையிலே நான் வீடு திரும்புவேன்
இங்கேயுள்ள எனது கதவின் மீது
நான் தட்டுகின்ற வேளையில்
அங்கேயுள்ள கதவின் பின்னேயிருந்து
சில சஞ்சலமடைகின்றனர்…
இங்கே என்னை முத்தமிடுபவன்
இப்படிக் கத்துகின்றான்:
“அப்பா! நல்வரவாகுக!”
அங்கே வெறுமையான கதவின் முன்
நட்டமரமாக நிற்பவன்
இப்படிக் கேட்கின்றான்:
“நீ எப்போது வருவாய்?
அது எப்போது?”

000

பஹ்ரி ஏர்டிங் (Fafri Erdinc) துருக்கியக் கவிஞர்.

(நோர்வே “சுவடுகள்” இதழில் 1993 இல் நான் மொழிபெயர்த்த கவிதை இது.

க. கலாமோகன்

இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து பிரான்சில் வசித்து வரும் தமிழ் எழுத்தாளர். கவிதை, சிறுகதை, நாடகம், மொழிபெயர்ப்புகளில் தொடர்ந்து இயங்குகி வருகிறார். சிதறுண்ட தன்னிலைக் கூறில், எங்கேயும் தன்னைச் சரியாக பொருத்திக்கொள்ளாத இயல்பில் தத்தளிக்கும் மனங்களை கதைகளாக்கி வருகிறார்

உரையாடலுக்கு

Your email address will not be published.