/

தாது வருஷப் பஞ்சம் : குமாரநந்தன்

எனக்கு விபரம் தெரிந்த நாளில் இருந்தே பள்ளி விடுமுறை என்றால் பாட்டி வீட்டுக்கு ஓடிவிடுவேன். எங்கள் வீடு ஒரு கிராமம் என்றால், பாட்டி வீடு பக்கத்து கிராமம். அதனால் அம்மாவும் எந்தக் கவலையும் இல்லாமல் பாத்துப் போயிட்டு வா என என்னைத் தனியாக அனுப்பி விடுவார்.

பாட்டியின் பேச்சில் எப்போதும் அந்தக் காலம் வந்துவிடும். அந்தக் காலத்தில் எல்லாம் எப்படி இருந்தது. மனிதர்கள் எப்படி இருந்தார்கள். அவர்கள் எப்படி நியாய தர்மமாய் நடந்து கொண்டார்கள். ஆச்சரியப்பட வைக்கும் தயாள குணம் அதே போல நம்ப முடியாத துரோகங்கள், ஏமாற்றுகள் போன்றவற்றையும் கதை கதையாகச் சொல்வார். இந்தக் கதைகளுக்கு நடுவே எப்படியோ தாது வருஷத்துப் பஞ்சம் என்கிற விஷயம் நுழைந்துவிடும். “தாது வருஷத்துப் பஞ்சத்த பாத்திருக்கியா?” என ஒரு அர்த்தமற்ற கேள்வியை என்னிடம் கேட்பார். பாட்டி நான் எப்படி பாத்திருப்பேன் என்பதுபோல அவரைப் பார்ப்பேன்.

“ஆமாம் அப்ப உங்க அம்மாவே பொறக்கல. எனக்கே அப்ப சின்ன வயசு. பஞ்சம்னா பஞ்சம் அப்படி ஒரு பஞ்சம் பொம்பளைங்க பேன் ஈத்தி குத்தினா அதில ரத்தமே வராது. மூட்டப் பூச்சியெல்லாம் வெள்ள வெளேர்னுதான் இருக்கும். பனண்டு  வருஷம் மழை இல்லைன்னா எப்படி இருக்கும் நீயே யோசிச்சிக்க. தரையெல்லாம் மண்ணு வறுத்து கொட்டினாப்புல இருக்கும். பூமியில ஒரு புல்லு, பூண்டு கள்ளிச்செடி, காரைச் செடி கூட இல்ல. அப்பவும் காட்டுப்பக்கம் ஏதாவது கிழங்கு இருக்குமான்னு தேடிக்கிட்டு ஆம்பளைங்க போவாங்க. என்ன கெழங்குன்னே தெரியாது. அதைக் கொண்டு வந்து வேவிச்சி தின்னுட்டு, விஷம் ஏறி எத்தன பேரு செத்திருக்காங்க தெரியுமா? எங்கியாவது தண்ணி தார பக்கம் கோரப்புல்லு மொளச்சிருந்தா அதைப் பிடுங்கி ஆட்டுப் புழுக்கயவிட சின்னதா இருக்கும் அந்தக் கெழங்க திம்பாங்க.”

இதையெல்லாம் சொல்லும்போதே பாட்டியின் கண்களில் கண்ணீர் வந்துவிடும். அதைப் பார்த்து நானும் அழுதுவிடுவேன். எப்பேர்ப்பட்ட கஷ்டத்தையெல்லாம் தாண்டி வந்திருக்கிறோம்.

பஞ்சத்தின் அந்த கோரப் படிமங்களோடு நான் வளர்ந்தேன். இளம் வயதில் சோமாலியா நாட்டில் நிலவும் கடும் பஞ்சத்தால், அந்நாட்டு மக்கள் எலும்புக் கூட்டின் மீது தோள் போர்த்தியது போன்ற உடலோடு உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நிற்கு ம் புகைப் படங்கள் செய்தித்தாள்களில் வந்தன. அதைப் பார்த்து நடுங்கிவிட்டேன்.  அந்தப் பேப்பரை எடுத்துக் கொண்டு போய் பாட்டியிடம் காட்டினேன்.

“அட சண்டாளப் பாவிகளா இந்த மாதிரிதான் அப்ப சனம் இருந்துச்சு” என்றாள். எனக்கு நடுக்கமாய் இருந்தது. பாட்டியும் இப்படி இருந்து மீண்டு வந்தவள் என்ற நினைவே என் இதயத்தைக் கிழித்தது.

பிறகு சில வருடங்கள் கழித்து, பஞ்ச காலத்தில் சோமாலியா மக்கள் இருந்ததைப் போன்ற கோலத்தில் சென்னை மக்கள் கேமராவை வெறித்தபடி இருக்கும் புகைப்படம் என்னை ஸ்தம்பிக்க வைத்தது.

கடைசி காலத்தில் அவருக்கு நினைவு தப்பிவிட்டது. என்னை யார் என்றே அவருக்குத் தெரியவில்லை.  கடைசி காலத்தில் நான் அவர் வீட்டுக்குப் போனபோது வாங்க சார் என்று முற்றிலும் அன்னிய மனிதனை வரவேற்பது போல என்னை வரவேற்றார். அவரிடம் எந்த நினைவும் இல்லை அல்லது எல்லா நினைவுகளும் குழம்பிப் போய் இருந்தன.

கடைசி சில மாதங்களாக அவருக்கு உணவு இறங்காததால், உடல் மெலிந்து கொண்டே இருந்தார். நம்ப முடியாத அளவுக்கு அவர் மெலிந்து கசங்கிய துணி போல அந்த சோமாலியா மக்களில் ஒருத்தி போல, பஞ்சகால புகைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பெண்ணைப் போல இருந்தார்.

அவர் இறந்து பத்து வருடங்கள் போல ஆகிவிட்டன. என்னை ஆக்கிரமித்திருந்த தாது வருஷத்துப் பஞ்சத்தின்  நினைகள் மங்கி மன இருளில் மூழ்க ஆரம்பித்தன.

சமீபத்தில் எதேச்சையாக ஒருமுறை தாது வருஷப் பஞ்சம் பற்றிய கட்டுரை ஒன்றைப் படித்தேன்.  அதில் அந்தப் பஞ்சத்தால் பாதிப்பு ஏற்பட்ட ஆண்டு 1876 – 78 எனப் போட்டிருந்தது.  எனக்கு என்னவோ ஒரு விஷயம் இடித்தது.

என் அம்மா பிறந்தது. ஆகஸ்ட் பதினைந்து 1947ல் சரியாக சுதந்திர தினத்தன்று. அவருக்கு மூத்த இரண்டு அண்ணன்கள். அவர்களுக்குப் பின் பத்து ஆண்டுகளுக்குப் பின் தான் பிறந்ததாக அம்மா சொல்லியிருக்கிறார். பாட்டியும் சொல்லியிருக்கிறார். அப்படியென்றால் பெரிய மாமா பிறந்தது 1937 ஆக இருக்கும். பாட்டியின் திருமணம் 1935ல் நடந்திருக்கலாம்.

தனக்கு சின்ன வயதிலேயே கல்யாணம் நடந்துவிட்டதாகவும், வயதுக்கு வந்த ஓராண்டிலேயே பெரிய மாமா பிறந்துவிட்டதாகவும் பாட்டி சொல்லியிருக்கிறார்.  அதன்படி அவர் 1935ல் பிறந்தார் என்றால், 34 அல்லது 33 மூன்றுக்கு முன்பாக அவருக்கு திருமணம் நடந்திருக்கும். அப்போது அவருக்கு பதினைந்து வயது என்றால் கூட அவர் 1918 க்கு முன் பிறந்திருக்க வாய்ப்பில்லை.

ஆனால், அவர் எப்படி தான் பிறப்பதற்கு ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளுக்கு முன் நிலவிய பஞ்சத்தால் பாதிக்கப்பட்டவரானார் என்ற புதிரின் சுழலுக்குள் நான் முடிவற்று விழுந்து கொண்டே இருக்கிறேன்.

குமாரநந்தன்

குமாரநந்தன் சிறுகதைகள், கவிதைகள் புனைபவர். பகற் கனவுகளின் நடனம் என்ற கவிதைத் தொகுப்பும், பதிமூன்று மீன்கள், பூமியெங்கும் பூரணியின் நிழல், நகரப் பாடகன், மகா மாயா ஆகிய நான்கு சிறுகதைத் தொகுப்புகளும் வெளியாகி உள்ளன. சேலம் அருகே மல்லூரில் வசிக்கிறார்.

2 Comments

  1. செவி வழி கேட்ட கதையை தன் காலத்தில் நடந்த கதையாக உருவகப்படுத்தி நம்ப ஆரம்பித்ததின் விளைவாக இது நேர வாய்ப்பு உள்ளது. செவி வழியாக கடத்தப்பட்ட மகாபாரத ராமாயண கதைகளை போல இந்த பஞ்சகாலமும் உங்கள் வார்த்தையில் மனதில் பசுமரத்தாணி போல் கேட்கக் கேட்க கேட்க பதிந்துதால் தானே அந்த காலத்தில் வாழ்ந்ததாக அவர் கற்பனை செய்து கொண்டார்.

  2. அகழ் ஆசிரியர் குழுவினருக்கு,

    இதைக் கதையாகக் குறிப்பிடும் காரணம் அலசு அலசு என்று அல்சியும் புலப்படவில்லை. அனுபவம் என்கிற வ்கையிலும் இது சேர்த்தி இல்லை; ஏன், ஒரு செய்தியாளரின் குறிப்பு எனும் வகைமைக்குள்ளும் வந்து அமர மறுக்கிறது.

    ஏதாவது வெளியிட்டே ஆக வேண்டும் என்பதைப் போல உங்களின் செயல்பாடு இருக்கிறது.

    கவனமாக இருங்கள்.

    – தமிழ்மொழி சக்திவேல்
    கோபிசெட்டிபாளையம்

உரையாடலுக்கு

Your email address will not be published.