
முதலாம் டரண்டினோ
ஆதியிலிருந்தே உப்பு காரம் பற்றிய தெளிவோடிருந்தார்
- உமா துர்மன் உருவான கதை
அகண்ட வானும்
திரண்ட மண்ணுமாய்
படைத்த உலகம் இருண்டு கிடக்க
’லைட்ஸ்’ என்று சத்தமிட்டு
ஒளி சமைத்தார் முதலாம் டரண்டினோ
நிலமென்றும்
கடலென்றும் பேர் வைத்து
அது நலமென்று கண்டாரவர்.
புற்பூண்டும்,
கனிமரமும் முளைத்தெழவே
டரண்டினோ அதை நல்லதென்றார்.
பெருஞ்சுடரால் பொடிமீனால்
வானகத்தை அலங்கரித்து
அதுவும் நல்லதென்றே அவர் கண்டார்.
நான்காம் நாள் ஆயிற்று.
நீர்த்திரளில் உயிரினங்கள்
நிலவெளியில் விலங்கினங்கள்
பரவெளியில் புள்ளினங்கள்
படைத்தவை யாவும்
நல்லதென்று கண்டார் டரண்டினோ.
ஆறாம் நாள் ஆயிற்று.
படைத்துப் பழகிவிட்ட டரண்டினோ
கையை வைத்துக்கொண்டு
சும்மாயிருக்காமல்
களிமண்ணைப் பிசைந்து ஊதி
பிராட் பிட்டை உண்டாக்கினார்.
இன்ப வனத்துள்ளே
பழ மரங்கள் நட்டு வைத்து,
பசியோடு அவனை விட்டு,
ஒரு மரக்கனியை மட்டும்
உண்ணக்கூடாதென்றார் டரண்டினோ
பிராட் பிட்டும்
அதைஉண்பதில்லை
என்றே பதிலுரைக்கவும்
டரண்டினோ சலிப்புற்று
உறங்குவது போல் நடித்தார்.
அப்போதும் ப்ராட் பிட்
அவரது வார்த்தையை
மீறாதிருந்தான்.
இது நல்லதில்லை
என்று கண்ட டரண்டினோ
எழுந்து போய்
அவனது விலாவில் மிதித்து
எலும்பை உடைத்தார்.
அப்போது பூமி விறுவிறுப்பாக சுற்றத்துவங்கிற்று.
000
- ஜேமி ஃபாக்ஸ் ஆடை அணிந்த கதை
டரண்டினோ
’ஆதி மனிதா எங்கே இருக்கிறாய் ?’ என்று கேட்டார்.
ஜேமி ஃபாக்ஸ் ’உமது குரலைக் கேட்டேன்,
அம்மணமாய் இருந்ததால் ஒளிந்து கொண்டேன்’ என்றான்.
’நீ அப்படி இருப்பதாக உனக்குச் சொன்னது யார்?
நாம் உனக்கு விலக்கியிருந்த மரக்கனியைத் தின்றாயோ?’
என்று வினவினார் டரண்டினோ
’’எனக்குத் துணையாய் நீர் தந்த பெண்ணே
அம்மரத்தின் கனியைக் கொடுத்தாள், நானும் தின்றேன்’ என்றான் ஜேமி
டரண்டினோ, கெர்ரி வாஷிங்டனை நோக்கி
’நீ ஏன் அவ்வாறு செய்தாய்?’ என்று கேட்டார்.
கெர்ரி ’பாம்பு என்னை வஞ்சித்ததால் தின்று விட்டேன்’
என்று பதில் சொன்னாள்.
அப்பொழுது அவர் வெகுவேகமாக திரும்பி
சாமுவேல் ஜாக்ஸனைப் பார்த்து,
’நீ மேலும் மேலும் சுவாரஸியத்தைக் கூட்டுகிறாய் அற்புதம்..அற்புதம் !‘
என்று மெச்சிக் கொண்டார்.
000
- டரண்டினோ கொலைக்குத் தூண்டுகிறார்.
டரண்டினோ
வெட்டாந்தரையாய் தாகித்திருந்தார்.
மைக்கேல் மேட்சனின் குடும்பமோ
நிழலில் இன்புற்றிருந்தது.
டிகாப்ரியோ ஆடு மேய்ப்பவன் .
கிறிஸ்டோஃப் வால்ட்ஸ் பயிரிடுபவன்.
வால்ட்ஸ் விளைச்சலின் பலனை
டரண்டினோவுக்கு காணிக்கையாய்ச் செலுத்த
டிகாப்ரியோவோ கொழுத்த ஆடுகளைக் கொடுத்தான்.
ஆடுகளை ஏற்றுக்கொண்ட டரண்டினோ
வால்ட்ஸை கண்ணோக்கவில்லை.
சினம் கொண்ட அவன் வயல்வெளியில்
சகோதரனைக் கொன்று போட்டான்.
உதிரம் நிலத்தை நனைத்த பொழுது
வனாந்திரங்களதிர டரண்டினோ சிரித்தார்.
வயல் நண்டுகள் சப்புக் கொட்டின.
000

ஜான் சுந்தர்
ஜான் சுந்தர். எழுத்தாளர், மேடைப்பாடகர், இசைக் கலைஞர், கவிஞர். கவிதைகள், சிறுகதைகள் எழுதி வருகிறார். சொந்த ரயில்காரி, பறப்பன திரிவன சிரிப்பன, நகலிசைக்கலைஞன் முதலிய நூல்கள் வெளிவந்துள்ளன. தமிழ் விக்கியில்