
என் முன்னே கேத்தரின் லீலா உட்கார்ந்திருந்தாள். சேலை கட்டியிருந்தாள். முதுகுப்பக்கம் நன்கு தெரியுமாறு ரவிக்கை அணிந்திருந்தாள். அவள் இங்கு வந்து அமர்ந்த நிகழ்வின் ஏதோ சில கணங்களில் நான் அவளின் முதுகைப் பார்த்திருந்தேன்.
அவள் ஏற்கெனவே என்னிடம் கொடுத்திருந்த நில ஆவணங்களின் நகல்களையும் பத்திர நகல்களையும் படித்துப் பார்த்து, தற்போதைய நிலையையும் பார்த்துச் சில குறிப்புகள் வைத்திருந்தேன். அது தொடர்பாக நான் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக அவளிடம் ஆவணங்களைக் காண்பித்து விளக்கினேன். நேரில் சென்று கிராம நிர்வாக அலுவலர் உதவியுடன் இடங்களைக் கண்டறிய வேண்டும் என்று கூறினேன். அவருக்குச் சில விபரங்கள் புரிந்து சில விபரங்கள் புரியாததை அவளின் முகக்குறிப்புகளிலிருந்து அறிந்தேன். நான் அவளின் சொந்த வாழ்க்கை பற்றி அறிய ஆவலாக இருந்தேன்.
அவள் சொன்னாள். “என் கணவருக்கும் எனக்கும் விவாகரத்து ஆகிவிட்டது. பையன் அவரோடு லண்டனில் படித்துக்கொண்டிருக்கிறான். வீடியோ காலில் அவனுடன் பேசிக்கொள்வேன். அவரிடம் அவன் இருப்பதுதான் வசதியானது.”
“உங்கள் கணவர் விவாகரத்திற்குப் பின்னர் மறுமணம் செய்துகொண்டாரா.”
“இல்லை. அவர் செய்துகொள்ள மாட்டார் என்றுதான் நினைக்கிறேன்.”
அதுபற்றி நான் ஒன்றும் சொல்லவில்லை. “நீங்கள் கொடுத்த பத்திரங்களின் மூலமாக பெரிய குடும்ப வரலாறே தெரிகிறது. பிள்ளைகள் விபரங்கள், மனைவி, தாய், தந்தை பற்றிய விபரங்கள், சொத்து யாரிடமிருந்து பெற்றது என்பது தொடர்பான விபரங்கள் என்னைக் கடந்த காலங்களுக்குள் கொண்டுசென்றுவிட்டது.”
கேத்தரின் எழுந்து நான் புத்தகங்கள் அடுக்கி வைத்திருந்த ரேக்குகளைப் பார்வையிட்டாள். நான் பின்னால் நின்று அவள் முதுகைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அவள் சுற்றிப் பார்த்துவிட்டு வந்து நாற்காலியில் உட்கார்ந்தாள்.
“லண்டனில் படிக்கும் உங்கள் பையன் இந்தியாவுக்கு வருவானா” என்று கேட்டேன்.
“என் முன்னாள் கணவர் ஜான் பார்த்திபன் அழைத்து வந்தால்தான் உண்டு. எப்போது நடக்கும் என்று தெரியவில்லை. அந்தப் பையன் ரிச்சர்ட் என் வயிற்றில் பிறந்தவனில்லை. நான் கிறிஸ்டோபர் என்பவரைச் சந்திக்க நேர்ந்தது. அவருக்கும் அவர் மனைவிக்கும் பிறந்தவன்தான் ரிச்சர்ட். நான் சந்தித்தபோது கிறிஸ்டோபரின் மனைவி இறந்திருந்தாள். கிறிஸ்டோபரும் ரிச்சர்டும் தனித்து இருந்தார்கள். எங்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்துகொண்டோம். எங்கள் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகச் சென்றுகொண்டிருந்தது. அது என் வாழ்வின் வசந்த காலம். கிறிஸ்டோபருக்குப் புற்றுநோய் ஏற்பட்டது. நான் கூட இருந்து கவனித்துக்கொண்டேன். அது என் வாழ்வின் மகிழ்ச்சியற்ற காலம். ரிச்சர்டை என் வயிற்றில் பிறந்த பையன் போல வளர்த்தேன். சில வருடங்களில் கிறிஸ்டோபர் இறந்துவிட்டார். நானும் ரிச்சர்டும் தனித்து விடப்பட்டோம். எனக்கு ஜான் பார்த்திபனுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. அவர் ரிச்சர்டுடன் என்னை ஏற்றுக்கொள்வதாக இருந்தால் திருமணம் பண்ணிக்கொள்ளலாம் என்று சொன்னேன். அவர் என்மேல் காதல்வயப்பட்டிருந்தார். நாங்கள் திருமணம் செய்துகொண்டோம். ரிச்சர்டும் ஜானும் ஒருவர் மேல் ஒருவர் பாசமுடையவர்களாக ஆனார்கள். நான் கண்டிப்பானவள் என்பதாலோ என்னவோ ரிச்சர்டு என்னைக் காட்டிலும் ஜானுடனே அதிக ஒட்டுதலுடன் இருந்தான். காலம் மகிழ்ச்சியாகக் கடந்தது. எனக்கும் ஜானுக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு பின்னர் பெரிதாகியது. பிரிந்துவிடலாம் என்று முடிவு செய்தோம். ரிச்சர்டை நான் வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். ஜானுடன் இருக்கவே ரிச்சர்ட் விரும்பினான். ஜானும் ரிச்சர்டை அவருடன் வைத்துக்கொள்வதாகக் கூறினார். எனக்கும் அந்தப் பையனை வளர்ப்பது சிரமம் என்று தோன்றியது. நாங்கள் பிரிந்துவிட்டோம். ஜானுடன் ரிச்சர்ட் இருந்துவிட்டான். ஜான் இன்னொரு திருமணம் செய்தாலும் ரிச்சர்டை நன்றாகக் கவனித்துக்கொள்வார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. ஜானுக்கு காந்திஜி மீது அபரிமிதமான பற்று உண்டு. அவர்கள் குடும்பத்திற்கே காந்தியப் பின்னணி உண்டு. ஜானின் தாத்தா ஆல்பிரட் ஆனந்தம் காந்திஜியின் உப்புச் சத்தியாக்கிரகத் தண்டி யாத்திரையில் காந்திஜியுடன் நடந்து சென்றவர். பிரிட்டிஷ் காவலர்களின் தடியடியில் பாதிக்கப்பட்டவர். பின்னர் உடல் நலிவுற்று இறந்துவிட்டார். ஜானின் தந்தை பீட்டர் சந்திரன் தீவிரமான காங்கிரஸ்காரர். சுதந்திரப் போராட்டத்தில் பலமுறை சிறை சென்றவர்.
எனக்குத்தான் ஜானுடன் இசைந்து செல்ல முடியவில்லை என்று நினைக்கிறேன். அவரும் நானும் விவாகரத்து பெற்றது தவறு என்று இப்போது எனக்குத் தோன்றுகிறது. ரிச்சர்டை அவர் எப்போதும் கைவிட மாட்டார். அவருடைய வாழ்நெறி அதற்கு இடங்கொடுக்காது. நான் தனி ஆளாக இருக்கிறேன். என் உறவினர்கள் இந்தியாவின் பல இடங்களில் இருக்கிறார்கள். இந்தச் சொத்துகளையெல்லாம் கண்டறிந்து மீட்டு அவற்றை என்ன செய்வது, எனக்கு ஒன்றும் புரியவில்லை.”
“தேவையான சொத்துகளை வைத்துக்கொண்டு பிறவற்றை விற்று ஏதாவது தொழில் தொடங்கலாம். நீங்கள் மருத்துவத் தொழிலை முழுநேரமாக வைத்துக்கொள்ளாமல் தொழிலை நிர்வகிக்கலாம். நான் உங்களுக்கு உதவி செய்கிறேன்” என்றேன்.
“நீங்கள் எப்படி எனக்கு உதவமுடியும். நீங்கள் வக்கீல் தொழில் செய்கிறீர்கள். பல ஜூனியர்களை வைத்து வேலை செய்கிறீர்கள். உங்கள் குடும்பம் பற்றி எனக்குத் தெரியாது. குடும்பம் அதற்கு இடம் கொடுக்க வேண்டும்” என்றாள்.
“என் தந்தை இறந்துவிட்டார். தாயார் என் கூட இருக்கிறார். ஒரு சகோதரி திருமணமாகி பம்பாயில் குடும்பத்துடன் இருக்கிறாள். எனக்கு இன்னும் திருமணமாகவில்லை” என்று வெட்கத்துடன் கூறினேன்.
கேத்தரின் திகைத்துப் போய் உட்கார்ந்திருப்பது எனக்குத் தெரிந்தது. எனக்கு இன்னும் திருமணமாகவில்லை என்பது அவளுள் திடுக்கிடலை ஏற்படுத்தியிருக்கும் என்று நினைக்கிறேன். கீழே குனிந்து லேசாகப் பார்த்து சேலையை இழுத்துவிட்டுக்கொண்டாள்.
“ஏன் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறீர்கள். பெர்சனல் என்றால் சொல்ல வேண்டாம்” என்றாள்.
“நானும் ஒரு பெண்ணும் காதலித்தோம். அப்போது என் தந்தை உயிருடன் இருந்தார். அவருக்கு அந்தப் பெண்ணை நான் திருமணம் செய்துகொள்வதில் விருப்பம் இல்லை. அந்தப் பெண்ணின் வீட்டிலும் என்னைத் திருமணம் செய்துகொள்வதை எதிர்த்தார்கள். நாங்கள் சில வருடங்கள் காத்திருந்தோம். பிறகு இரு வீட்டிலும் சம்மதம் கிடைத்தது. திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமண நாளிற்கு முந்தைய நாள் அவள் ஒரு விபத்தில் இறந்துவிட்டாள். அழகான அறிவான பெண். அதற்குப்பின் திருமண எண்ணம் எனக்கு ஏற்படவில்லை” என்றேன்.
“உங்கள் குடும்பப் பின்னணி பற்றிச் சொல்லுங்கள்” என்றாள்.
“என் தந்தை பிரபலமான வக்கீல்களில் ஒருவராக இருந்தார். என் தந்தை பெயர் சச்சிதானந்தம். அசைவம் சாப்பிடுபவர்கள். என் தாத்தா பரமார்த்தலிங்கம் வாழைக்காய் மொத்த வியாபாரம் செய்தார். பெரிய மண்டி வைத்திருந்தார். நூற்றுக்கணக்கான வாழைத்தார்களை அடுக்கி வைத்திருப்பார்கள். விவசாயிகள் மாட்டுவண்டியில் கொண்டுவந்து வாழைத்தார்களை இறக்குவார்கள். இடையில் ஏஜெண்டுகள் இருப்பார்கள். விற்பனையிலும் ஏஜெண்டுகள் இருப்பார்கள். சிக்கலான வலைப்பின்னலாக இருக்கும். நான் தேவையில்லாததைச் சொல்லிக்கொண்டு போகிறேன்… அவருக்கு வள்ளலார் மீது பற்று ஏற்பட்டது. குடும்பத்தில் அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிட்டார். வள்ளலாரை வணங்கினார். வருடம்தோறும் வேனில் அரிசி மூட்டைகளை ஏற்றி வடலூரில் உள்ள அன்னதான சபைக்கு தானம் செய்வார். வேனில் ஏறி கூடவே செல்வார். தாத்தாவின் மறைவிற்குப்பின் வாழைக்காய் வியாபாரத்தை அவரின் தம்பி எடுத்துக்கொண்டார். அந்தத் தம்பி அதற்காகக் கணிசமான பணம் எங்களுக்குக் கொடுத்தார். என் தந்தை சச்சிதானந்தத்திற்கு வக்கீல் தொழிலில் கிடைக்கும் வருமானமே அதிகமாக இருந்தது. தாத்தா மறைவிற்குப்பின் என் தந்தை வள்ளலாரை வழிபடுவதை நிறுத்தவில்லை. பிற கடவுள்களையும் வழிபடுவார். வள்ளலாரின் அன்னதான சபைக்கு வருடந்தோறும் அரிசி மூட்டைகளை அனுப்பினார். என் தந்தை மறைவிற்குப்பின் நானும் அரிசி மூட்டைகளை அனுப்பி வருகிறேன். என் அம்மாவிற்கு கிருஷ்ண பக்தி அதிகம். என் தந்தையை வற்புறுத்தி ‘நேர்ந்துகொண்டேன்’ என்று சொல்லி என் பெயரை ‘அனந்த கிருஷ்ணன்’ என்று வைத்துவிட்டார்கள். எனக்குக் கடவுள் வழிபாட்டில் நம்பிக்கை இல்லை. கடவுள் வெறுப்பு இல்லை. வேடிக்கை பார்ப்பேன். இதுதான் எங்கள் குடும்பப் பின்னணி. எதற்காக இதைக் கேட்கிறீர்கள்” என்றேன்.
“தெரிந்துகொள்ளத்தான்” என்றாள். பிறகு, “ஒரு பெண்ணைக் காதலித்து, திருமணம் நிச்சயிக்கப்பட்டு, திருமணத்திற்கு முந்தைய நாள் அவள் விபத்தில் இறந்துவிட்டதாகச் சொன்னீர்கள். அவள் பெயர் என்ன என்று நான் தெரிந்துகொள்ளலாமா” என்றாள்.
நான், “அவள் பெயர் லீலா” என்றேன்.
கேத்தரின் லீலா திடுக்கிட்டு என்னைப் பார்த்தாள். இருவரும் ஒருவரையொருவர் நன்றாகப் பார்த்துக்கொண்டோம். அவள் கைவிரல்களை மேஜை மேல் வைத்திருந்தாள். நான் அவள் கைவிரல்கள் மீது என் கைவிரல்களை வைத்தேன். அவள் கையை எடுத்துக்கொள்ளவில்லை.
***

சுரேஷ்குமார இந்திரஜித்
சுரேஷ்குமார இந்திரஜித் தமிழில் எழுதி வரும் எழுத்தாளர். சிறுகதை, நாவல், குறுங்கதைகள், கட்டுரைகள், மதிப்புரைகள் எழுதி வருகிறார். ஆண் பெண் உறவுகளின் சிக்கல்கள், காமம், சமூக அவலங்கள் குறித்த கதைக்களங்களில் எழுதி வருபவர்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
கேத்தரின் லீலா – 2.
வணக்கம் .
இதே தலைப்பில் சுரேஷ்குமார இந்திரஜித், கடந்த டிசம்பர் 13அகழ் இணைய இதழில் ‘கேத்தரின் லீலா’ என்றொரு கதை எழுதியிருந்தார். அக்கதையின் துவக்கத்தில், கேத்தரின் லீலா சேலை கட்டியிருந்தாள்; அது அவளின் வசீகரமான முதுகை காட்டியது என்று இருக்கும். பின்னர், இருவருக்குமான மற்றொரு சந்திப்பில் அவள் சுரிதார் அணிந்திருப்பாள். அனந்தகிருஷ்ணன் ஏமாற்றமடைந்து, அடுத்த நமது சந்திப்பில் சேலை கட்டி வாருங்கள் என்று அவளிடம் கூறியபடி, முதல் கதை முற்றுப்பெற்றிருந்தது.
கதையின் ஊடே பெரும் வரலாறுகள் இடம் பெற்று இருக்கும். அவைதான் கதையின் சாராம்சம். ஒரு அழகியல், வரலாற்றுக் கோட்டுச்சித்திரத்தை ஒரு அளவோடு நிறுத்தி வாசகனின் கற்பனையில் மேலும் சித்திரத்தை நீட்டிக்க வாய்ப்பு கொடுத்திருந்தது .
கேத்தரின் லீலா 2 – சிறுகதையில் முதல் கதையின் சித்திரத்தை படைப்பாளியே மேலும் வரைந்திருக்கிறார். இக்கதையின் முதல் வரியே … கேத்தரின் லீலா சேலை கட்டி வந்திருந்தாள், என்று உள்ளது. கேத்தரின் லீலா, அனந்தகிருஷ்ணன் உரையாடலில், இருவரும் தங்கள் முன்கதை குறித்து பரஸ்பரம் தெரிவிக்கின்றனர். உரையாடலில் சில வரலாறுகள் வருகின்றன. அனந்தகிருஷ்ணன், அவள் கைவிரல்கள் மீது தன் கை விரல்களை வைக்கிறார். அவள் கையை எடுத்துக்கொள்ளவில்லை. இந்த காட்சியோடு கேத்தரின் லீலா 2 எனும் இந்த சிறுகதை முற்றுப்பெறுகிறது.
கேத்தரின் லீலா, கேத்தரின் லீலா 2 ஆகிய இரு கதைகளும் முழுக்க, முழுக்க ஆண் பெண் ஈர்ப்பு சம்பந்தப்பட்டதல்ல. மேலே நான் கூறிய அம்சங்கள் இக்கதைகளில் ஒரு மேற்பூச்சுதான் . உள்ளே இக்கதைகள், பெரும் வரலாற்றுப் பேரலை கொண்டது.
வரும் மாதங்களில் கேத்தரின் லீலா 3, 4, 5, 6, 7, 8 என்று சுரேஷ்குமார இந்திரஜித் நீடித்தால், ஒரு குறுநாவலாகவும் வடிவெடுக்கும். அப்போது இக்கதைகளை வரிசைக்கப்பாற்பட்டு படித்தாலும் புதிய சிறுகதையின் முழுமை கிடைக்கும். இக்கதை சில தருணங்களை, காட்சிகளை வரலாறுகளை அழகியலோடு வெளிப்படுத்துகிறது. அகழ் இணைய இதழுக்கும், சுரேஷ்குமார இந்திரஜித்திற்கும் நன்றி !
– A. கருணாகரன்.