
லட்சிய சித்திரம்
சிம்னி விளக்கின் மண்ணெண்ணெயும்
தீர்ந்துபோன
மின்சாரம் இல்லாத இருட்டில்
யாரைப் பற்றிக் கொள்வதெனத் தெரியாமல்
சிறுவன்
ஒரு காகிதத்தை எடுத்து
அம்மாவை
குட்டித் தங்கையை
கோட்டுச் சித்திரமாக வரைந்தபடி
உறங்கிப் போனான்.
அவன் வரைந்த
உருவத்தில்
அம்மா சிரித்துக் கொண்டிருந்ததைப் பார்த்து
காலையில்
அவனுக்கு அதிசயம்.
000
அம்மா நாணாவில் ஸ்ரீ தேவி
அம்மா நாணா சூப்பர் மார்க்கெட்டில்
அலாஸ்காவைச் சேர்ந்த
பதப்படுத்தப்பட்ட டூனா மீன் டப்பாக்களை
பார்வையிட்டுக் கொண்டிருந்தார்
ஸ்ரீதேவி.
பாலாடைக்கட்டி வாங்குவதற்காகப்
எப்போதாவது போகும் நான்
அங்கே
தற்செயலாய்
என் பிரிய தேவதையைப்
பார்த்து
வணக்கம் வைத்தேன்.
இறந்தபிறகு யாருக்கும்
நான் அடையாளம் ஆவதில்லை.
அதனால் பெரிதாகத் தொந்தரவும் இல்லை.
நீங்கள் எப்படிப் பார்த்தீர்கள்?
என்றார்.
இறந்தவர்களோடு உலவக்கூடியவன்
என்று என்னை அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை.
எதிரேயுள்ள அடையார் கேட் விடுதியில்
தங்க நேரும்போதெல்லாம்
இங்கே கணவருக்காகவும் குழந்தைகளுக்காகவும்
வருவேன்.
தற்போது அதையும்
இடித்துவிட்டார்கள்
மும்பையில் குடியிருக்கச் சென்றபோது
நான் நீங்கிய சென்னை
முழுமையாக மாறிவிட்டது.
பெருமூச்செறிந்தார் ஸ்ரீ தேவி.
இங்கிலீஷ் விங்கிலீஷ் திரைப்படத்தில் நடித்தது தவிர
ரசிகனாக எனக்கு உங்கள் மேல் சிறுபுகார் கூட இல்லை
என்றேன்.
ஒடுங்கிய முகம், உடலுடன்
ஒரு யுவதியின் அம்மாவாக
நடித்ததில்
ராம் கோபால் வர்மாவுக்கும்
சங்கடமே!
என்ன செய்வது?
என்று அலமாரியைப் பார்த்தபடி சிரித்தார்.
மூன்றாம் பிறை படத்தில்
நீங்கள் வளர்த்த சுப்பிரமணி ஞாபகத்தில்தான்
எனது ப்ரௌனியை வளர்ப்பதாகச் சொன்னேன்.
சுடரும் பளிங்குக் கண்களில் ஆழம் கூடியது.
தண்ணீர் தொட்டியில் மூழ்கிய தருணத்தில்
வலி இருந்ததாவென்று கேட்டேன்.
சொல்லத் தெரியவில்லை
தெரிந்திருந்தால்
மீண்டும் பிறந்திருப்பேனே
என்று கையில் கூடையுடன் திரும்பி
விரைவாக மறைந்தார்.
அம்மா நாணா கடையில் நான் பார்த்த
ஸ்ரீ தேவி.
000
அவள் பெயர்
அவள் பெயர் தான் இந்த உலகில் நான் கேட்ட ஒலிகளிலேயே அழகானது- இத்தனை துயரங்களை அந்தப் பெயர் கொண்டவள் அளித்தபிறகும். அவள் உருவம், உடை, குரல், அவளைப் பற்றி வரும் செய்திகள். எல்லாம் என்னைக் கழுமுனைக் கூர்மையில் இருத்துவதாக இருப்பினும், அவள் பெயரை வாயில் மெல்லும்போதெல்லாம், எனது கபாலச்சுவர்கள் எரிவது உண்மைதான். எனினும், அவள் பெயர்தான் இந்த உலகத்திலேயே இனிமையானது என்பதில் எனக்குச் சந்தேகமேயில்லை.
தின்னத் தெவிட்டாது வயிறும் கனக்காத தின்பண்டத்தின் தீராத மென்சுவை அவள் பெயர். கருத்தின் எடையில்லாமல் காற்றில் மயங்கிக் குழையும் இறகு அந்தப் பெயர். மென் குறில், மென் நெடிலாய் உணர்வுக்கு ஏற்பச் சுருக்கி விரிக்க இயலும் அந்தப் பெயர்.
அவள் என்னிடமிருந்து எத்தனையோ தொலைவு சென்றபின்னும் அவளை எண்ணும்தோறும்- சுயம், இழியும் வாதையாக என் மேல் ஒழுகும்போதும்- தித்திக்கின்றதே அவள் பெயர்.
இப்படிச் சொல்வதில் எனக்கு வெட்கமேயில்லை. அவள் பெயரைப் போன்ற ஒன்றை நான் இக்கணம் வரைக் கடக்கவில்லை. பகலின் விளிம்புகளில் பொன்னின் ஜரிகையாகச் சுடரும் பெயர். அந்தியின் செந்தைலம். கடற்கரை மணலோடு குழையும் போது என்னுடன் சேர்ந்து சேர்ந்து குழைந்தது அந்தப் பெயர்.
ஆனால், அந்தப் பெயரை என்னால் வெளிப்படுத்த முடியாது. அதை உரிமையோடு சத்தமாகச் சொல்ல முடியாது. அந்தப் பெயரை வெளியே கூறினால் நான் மரித்துவிடுவேன்.
000
ஷங்கர்ராமசுப்ரமணியன், தமிழில் எழுதிவரும் கவிஞர், விமர்சகர். ‘இகவடை பரவடை, நிழல் அம்மா, ஆயிரம் சந்தோஷ இலைகள், கல் முதலை ஆமைகள் முதலிய கவிதைத்தொகுதிகள் வெளிவந்துள்ளன. பிறக்கும்தோறும் கவிதை, நான் பிறந்த கவிதை, நினைவின் குற்றவாளி ஆகிய கட்டுரைத் தொகுப்புகளையும் எழுதியுள்ளார். விக்ரமாதித்யன் கவிதைகள் ,‘அருவம் உருவம்: நகுலன் 100’ உள்ளிட்ட தொகுப்பு நூல்களின் ஆசிரியர்.