
1 .
ஒரு ஸ்பரிசமாக நினைவில்கொள்
.
எப்படியும் நான் இல்லாமலாவேன்
இந்தச் சொற்களை வைத்துக்கொள்
உனக்கு
இன்னும் அதிகமாகக் கூட தேவைப்படலாம்
என்னிடம் இல்லை
ஒரு ஸ்பரிசம்போல
இந்தச் சொற்களை வைத்துக்கொள்
எப்படியும் இல்லாமலாக வேண்டும்
மீட்டெடுக்க முடியாதபடி
.
2.
பாழந்தி
.
புல்வெளிகள் எரியும் வெயிலில்
அழிவைப் பாடுகிறது காற்று
இன்று பெய்த மழையில் முளைத்த விதை
எந்த நூற்றாண்டின் ஞாபகத்தில்
பிளந்துகொள்கிறது
நான் மன்னிப்பு கேட்கிறேன் வானங்களிடம்
வானம் நீலங்களால்
மன்னிக்க விரும்பியது
போலத்தான் தோன்றியது
ஆனால்
அந்தியின்
மயக்கங்களின் பாழ்
..
3.
அருந்தும் கானல்கள்
.
காலம் உண்டது போக
நினைவு தின்றது போக
தாபம் அருந்தியது போக
வந்திருக்கிறேன்
நான் வீரனல்ல
என்னிடம் எந்த பிரச்சார அறிக்கைகளும் இல்லை
கொஞ்சம் வழிவிடுங்கள்
நான் போக வேண்டும்
இந்தக் கானல்களை அருந்தி மாளவில்லை
.
4.
திசையின் மலர்கள்
.
திசைகளில் அலைவது
எந்தக் காற்று
நீ மூச்சுவிடுகிறாய்
மேலும்
உயிரோடு இருக்கிறாய்
சின்னஞ் சிறிய விருப்பங்களின் மலர்கள்
பூக்கின்றன மனதில்
எந்த வேர்களின் இச்சை
இம்மலர்கள்
..
5.
ஒரு கடவுளை
எனக்குத் தெரியும்
.
எனக்குத் தெரியும்
ஒரு அன்பின் சம்மதித்திற்காக
தலைகீழாக தொங்கிக்
கொண்டிருப்பவர்களை
ஜன்னலைத் திறக்கும் காற்றுகள் வர
சுவர்களை பார்த்தபடி அமர்ந்திருப்பவர்களை
தனது அல்பத்தனத்திற்காக
யாருமறியா கண்ணால் கண்ணீர் சிந்துபவர்களை
எனக்குத் தெரியும்
ஒரு கடவுளை
அவர்
அவர்
எத்தனை மேன்மையானவர்
யாருடைய ஞாபகமும் இல்லாதிருந்தார்
.
6.
அந்த டாஸ்மாக் இடம் மாறிவிட்டது
.
விசாரித்தபோது
அந்த டாஸ்மாக் இடம் மாறிவிட்டது என்றார்கள்
நான் கடவுளை வேண்டிக்கொண்டேன்
அதே அழுக்கான சுவர்கள் தரைகள்
கடை திறந்து
அரை மணிநேரம்தான் இருக்கும்
ஒருவர் வாந்தி எடுக்கிறார்
நான் கடவுளை வேண்டிக்கொண்டேன்
இருப்பதிலேயே நல்ல பிரான்ட் சரக்கை வாங்கி அருந்தினேன்
அது கேவலமாக இருந்தது
ஒரு நல்ல சரக்குக்காக
நான் கடவுளை வேண்டிக்கொண்டேன்
ஓ , நல்ல சரக்கின் கடவுளே
நீ இந்த நகரத்தை ஆசீர்வதி
.
7.
நீயந்தி
.
மறைந்துகொண்டிருக்கும்
அந்தியா நீ
பறவைகளும் சூரியனும்
வீடு திரும்புகின்றன
புலன்கள் மயங்குகிற வெளிச்சம் படர்கிறது
எந்தப் பாடலும் நினைவிலில்லை
செல்கிற வாகனங்கள் சத்தம்
பெருமூச்சுவிடுகிறார்கள்
ஜன்னல்களை பார்த்தபடி
பிரிவுகளை தொட்டபடி
நீதான் அந்தியெனில்
யாரோ அதன் கீழ் நடக்கிறார்கள்
நிச்சயம்
ஜன்னல்களால் நினைத்துக்கொள்வேன்
.
8
பெருகுகிற இரவு
.
யாருமற்ற வனாந்தரங்களில்
வானை நோக்கி
தொழ உயரும் கரங்களுண்டு
தெய்வமற்ற பிரார்த்தனைகள் உண்டு
அன்பில்லாத பொழுதுகள் உண்டு
அர்த்தமற்றவைகளின்
நிம்மதியின்மைகள் உண்டு
திரும்ப வர வாசல்களற்ற
பாதைகள் உண்டு
தவளைகள் பாடும் அந்திகளில்
யார் யார் மனதையோ உண்டு
பெருகுகிற இரவு
.
9.
நிரந்தர தினம்
.
பரஸ்பரம் படுக்கையை பகிர்ந்துகொண்டவர்கள் அவர்கள்
இன்று என்னமோ
நிர்வாணமாக இருந்தபடியே
சண்டையிட்டுக்கொள்கிறார்கள்
உள்ளாடைகள் சிதறிக் கிடக்கின்றன
நிர்வாணமாக சிந்தப்படுகிற கண்ணீரில்
யாருமறியாத உப்பு கலந்திருந்தது
உடல்களில் இருக்கிறது
பரஸ்பரம் யாரும் அறிய முடியாத உவர்ப்பு
உப்பை நிரந்தரமாக விழுங்குகிறார்கள்
தினமும்
தினமும்

சதீஷ்குமார் சீனிவாசன்
சதீஷ்குமார் சீனிவாசன் தமிழில் எழுதிவரும் கவிஞர். தொடர்ந்து இணைய இதழ்களில் கவிதைகள், கட்டுரைகள் எழுதிவருகிறார். உயிர்மை இணைய இதழின் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார்.
புலன்கள் மயங்குகிற வெளிச்சம் படர்கிறது.. இச்சித்திரத்திலிருந்து விடுபட்டு உணர்வு இயல்பாவதற்குள் திக்குமுக்காடிப் போனேன்.
அனுபவத்துக்கு நன்றி சதீஷ்!