ஒளி சூழ் தனிமை : சியாம்

Edward Hopper – Self Portrait

Music of Spheres

He was walking on a frozen road 
in his pocket iron keys were jingling
and with his pointed shoe absent-mindedly
he kicked the cylinder
of an old can
which for a few seconds rolled its cold emptiness
wobbled for a while and stopped
under a sky studded with stars.

‘Book of luminous things’ நூலில் செஸ்லா மிலோஸ், Jean Follain உடைய இந்தக் கவிதையை ‘Epiphany’ (திருக்காட்சி) என்ற தலைப்பிற்குள் சேர்த்திருக்கிறார். அதன் மூலச் சொல்லான Epiphaneia மானுடர் மத்தியில் தெய்வம் பிரசன்னம் ஆவதை குறிக்கிறது. அது, மின்னல் பொழுதில் பெருந்திறப்பு நிகழும் கணம். ‘நட்சத்திரங்கள் நிறைந்த வானத்தின் கீழ்’ என்ற வரி கவிதையை அத்தளத்திற்கு எடுத்துச் செல்கிறது. ஹாப்பர்(Edward Hopper) உடைய பல ஓவியங்கள், இக்கவிதை உருப்பெற்றது போல இருக்கின்றன. ஆனால் அந்த இறுதி வரியை சேர்த்துக்கொள்வதில் அவ்வோவியங்களுக்கு ஒரு தயக்கமோ மறுப்போ இருப்பதாக எனக்கு தோன்றுவதுண்டு.

சிறு வயதிலேயே சித்திரம் வரையும் திறமையை அடைந்த ஹாப்பர் வருமானத்திற்காக வணிக சித்திரங்கள் வரையும் காலத்திலும் ஓவியக் கலையை தீவிரமாக மேற்கொள்ளும் தவிப்பு அவருக்குள் இருந்துகொண்டிருக்கிறது. மனப்பதிவுவாதிகள்(impressionists) வண்ணங்களை கையாளும் முறையும் வெளிப்படுத்தும் பேசுபொருளும் அவரை ஈர்க்கின்றன. இன்று ஹாப்பரை ‘அமெரிக்க யதார்த்தவாத ஓவியர்’ என்று வரையறுத்தாலும், அவர் மேல் மனபதிவுவாதம் உண்டாக்கிய தாக்கம் மிக அதிகம். அவரது எண்பது வயதில் கூட, “நான் இன்னும் ஒரு மனப்பதிவுவாதியாக இருக்கிறேன் என்றே நினைக்கிறன்.” என்கிறார். ஹாப்பருக்கு நியூயார்க்கில் இருக்கும் போதே மனப்பதிவுவாதிகள் மேல் தோன்றும் ஆர்வம் அவர் 1906இல் ஐரோப்பாவிற்கு செல்கையில் தீவிரமடைகிறது. அவர் நியூயார்க்குக்கு திரும்பி, ஓவியம் வரையும்போது அவரது கித்தான் ஒளிரத் துவங்குகிறது. சூரிய ஒளியின் மேல் மனப்பதிவுவாதிகளுக்கு இருக்கும் தீராக் காதலை ஹாப்பரும் ஏந்திக்கொள்கிறார். அதுவரை அவரது வாழ்க்கையிலும் ஓவியங்களிலும் இருந்த தனிமை அந்த ஒளியுடன் முயங்கி வெளிப்படுகிறது.

ஹாப்பரது ஓவியங்களில் உள்ள தனிமை பற்றி பேசும்போது, அத்தனிமை அக்காலகட்டது அமெரிக்காவின் தனிமையாக அடையாளப்படுத்தப்படுகிறது. அது, அதிவேகமான வளர்ச்சிக்கும் உலக யுத்தத்தின் பீதிக்கும் இடையில் வாழும் அமெரிக்கவாசிகளின் தனிமை. அவர் ஓவியங்களில் இருக்கும் மனிதர்களின் தனிமையானது அக்காலகட்டத்தின் ‘நவீனயுக’ மனிதர்களின் தனிமை. ஆனால், அதே அளவுக்கு அது ஹாப்பரின் தனிப்பட்ட தனிமையும் கூடதான். ஹாப்பர், ‘மகத்தான கலை என்பது கலைஞனின் அகவய வாழ்வின் புறவய வெளிப்பாடு.’ என்கிறார். புதிய கண்டுபிடிப்பு ஒன்றும் அல்ல. ஆனால் ஹாப்பரின் தனிமை, அமெரிக்காவின் தனிமை எனும்போது ஹாப்பர் பின்னால் நகர்ந்துவிடுகிறார். ஹாப்பர் ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருந்தாலும் கூட அவரது தனிமையைதான் வெளிப்படுத்தி இருப்பார் என்றே தோன்றுகிறது. அவர் பள்ளிப் பருவத்தில் வரைந்த இந்த சித்திரத்திலேயே தனிமை பிரத்யட்சமாக வெளிப்படுகிறது.

மேலும், மோனே போன்ற மனபதிவுவாதியின் நிலக்காட்சி ஓவியத்தில் முயக்கமும் ஒத்திசைவும் அமைதியும் ‘ஏகாந்தமும்’ வெளிப்படுகையில், ஹாப்பரின் நிலக்காட்சி ஓவியங்கள் கூட ‘தனிமையையே’ பிரதிபலிக்கின்றன. சிறுவயதிலிருந்து தன்னியல்பாகவே ஹாப்பர் தனிமையிடம்தான் அடைக்கலம் கொள்கிறார். தன்னுடைய கலை மற்றும் அன்றாட உலகியல் வாழ்வை சீரமைத்து ஒழுங்குபடுத்திய தனது மனைவியுடன் கூட தன்னை பகிர்ந்துக்கொள்ள ஹாப்பரால் முடியவில்லை. தன்னிலிருந்து ஒரு துளியை பகிர்ந்துக் கொடுக்க இயலாத தனிமை அவருடையது. அவரை என்னால் நவீன யுக மனிதரின் பிரதிநிதியாக கருதமுடியவில்லை. அவருடைய பிரச்சனை, என்றும் இருக்கும் ‘ஹாப்பருடைய’ பிரச்சனை. ஒரு காலகட்டத்தின் சிக்கல் ஒரு கலைஞனின் மேல் கண்டிப்பாக ஆதிக்கம் செலுத்துகிறது. ஆனால், அச்சிக்கலின் தூண்டுதலின் வாயிலாக ஒரு கலைஞன் தன்னுடைய அசல் வெளிப்பாட்டை கண்டுணர்கிறான். அவ்வெளிப்பாடு அச்சிக்கலின் காலகட்டத்தைக் கடந்து சென்றுவிடுகிறது. ஆதலால், இதற்கு சற்று அழுத்தம் தர வேண்டிவருகிறது, ‘மகத்தான கலை என்பது கலைஞனின் அகவய வாழ்வின் புறவய வெளிப்பாடு.’ 

ஹாப்பரை மிகவும் கவர்ந்த ஓவியர்களுள் ஒருவர் டேகா(Edgar Degas). மனப்பதிவுவாதிகள் என்பவர்களே கித்தானை தூக்கிக்கொண்டு திறந்த வெளிக்கு சென்று வரைபவர்கள் என்ற தருணத்தில் டேகா குளியலறையையும் படுக்கை அறையையும் பாலே நடன மேடையையும் வரைந்தவர். நகர்புறத்தை வெளிப்படுத்த நினைக்கும் ஹாப்பருக்கு  டேகா தூண்டுதலாக அமைகிறார். பிரதானமாக டேகாவின் வடிவமைப்பு முறை ஹாப்பரின் மேல் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வடிவமைப்பு ரீதியில் புகைப்படத்தின் தன்மைக்கு அணுக்கமாக இருப்பவை டேகாவின் ஓவியங்கள். அந்தச் சாயல் கொண்டவை ஹாப்பருடைய ஓவியங்கள். அவரது ஓவியங்கள் அதிகமாக திரைப்படத்தில் எடுத்தாளப்படுகின்றன. இயக்குனர்கள் ஹாப்பரின் சில ஓவியங்கள் திரைப்படத்தின் முதல் ஷாட் போல இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால், ஹாப்பர் டேகாவிடமிருந்து முக்கியமான புள்ளியில் வேறுபடுகிறார். அசைவையும் சலனத்தையும் ஓவியத்தில் இணைக்கத் துடித்த, இணைத்த ஓவியர் டேகா. அவரது பாலே நடன மங்கைகள், நாம் கண் சிமிட்டும் கணத்தில் சுழன்றுவிடுவார்கள் என்றுணர வைப்பவர்கள். ஆனால், ஹாப்பர் அதற்கு எதிராக நிச்சலனத்தை கைவசப்படுத்த முயல்கிறார்; பெருமலையின் அசைவின்மையை ஓவியங்களில் சேர்க்கிறார். அவரது ஓவியங்களில் அமர்ந்திருப்பவர்கள் காலாதீதமாக அப்படியே அமர்ந்திருப்பவர்களாக உணரவைக்கின்றனர். உறைந்த காலத்தின் எடை, தனிமையுடன் கலக்கும்போது தனிமை அத்தனை கனம் கொள்கிறது. நகரும் கணங்களின் களியாட்டை வெளிப்படுத்தும் மனப்பதிவுவாதத்தின் தூண்டுதலை பெறும் ஹாப்பர், அதைக் கொண்டே கணங்களை பாறையாக்குகிறார்; நூற்றாண்டுகளின் தனிமையை போர்த்திக்கொள்ளும் பாறையாக.

ஹாப்பர் பற்றி மீண்டும் மீண்டும் சொல்லப்படும் ஒரு கருத்துண்டு. அவரது ஓவியங்கள் தனக்கு முன்னும் பின்னும் கதைகள் கொண்டவை. ஓர் ஓவியம் என்பது ஒரு நாவலில் இருந்து கிழிக்கப்பட்ட ஒரு பக்கம். முழுமையான தனிமையில், நாற்காலியில் அமர்ந்திருக்கும் ஒருவன் இயல்பாகவே தன்னுரை ஆற்றிக்கொண்டிருப்பவனாக உணரவைக்கிறான். அவனுக்குள் ஒரு கதை ததும்பிக்கொண்டிருக்கிறது. ஹாப்பர் ஒரு ஓவியத்துக்காக பல முன் ஓவியங்கள் வரைந்திருக்கிறார். அவரது பிரபலமான ‘Nighthawks’ ஓவியத்தை வரைவதற்கு முன், மேஜையில் மதுக்குவளை எங்கு இடம் பெறவேண்டும் என்று  திட்டமிட்டிருக்கிறார். மனிதர்கள் நிற்கும் தோரனையை தொடர்ந்து மாற்றிப் பார்த்திருக்கிறார். ஏனெனில் அவற்றின் மூலம் ஹாப்பரால் ஓவியத்தில் இல்லாதக் கதையை ஓவியத்திற்குள் சேர்க்கமுடிகிறது. ‘Shirley: Visions of Reality’ என்ற திரைப்படம் ஹாப்பரின் ஓவியங்களை திரைவடிவமாக மாற்றுகிறது. அதில் இடம் பெரும் ஒரு ஓவியம் ‘Room in New York’.

அறைந்து சாத்தப்படும் கதவுகளும், நரம்பு புடைக்க கத்தப்படும் வசவுகளும் ஹாப்பரின் ஓவியங்களில் இடம் பெறுவதில்லை. அவற்றில் சொற்கள் பேசப்படுவதில்லை, கண்கள் சந்தித்துக்கொள்வதில்லை, விரல்கள் கோர்த்துக்கொள்ளப்படுவதில்லை. காந்தத்தின் ஒத்த முனைகளுக்கு மத்தியில் நிறைந்திருக்கும் எதிர் விசை போன்ற மௌனமான உராய்வு சூழ்ந்த ஓவியங்கள் ஹாப்பருடையவை. ‘Room in New York’ ஓவியத்தில், இருவருக்கும் இடையில் இருக்கும் உராய்வை கண்கள் உடனடியாக கண்டுபிடித்துவிடுகின்றன. ஆனால், திரைப்படத்தில் இவ்வோவியம் முன்னும் பின்னும் கதைகளால் இணைக்கப்படுகிறது. மும்முரமாக நாளிதழ் வாசிக்கும் அவன் ஒரு அர்ப்பணிப்புள்ள பத்திரிக்கையாளனாகவும் பியானோ மீது விரல்களை ஓடவிடும் பெண் ஒரு நாடக நடிகையாகவும் மாறுகிறார்கள். அவள் ஆற்றும் தன்னுரையின் வடிவிலேயே கதை இணைக்கப்படுகிறது. ஹாப்பர் குறியீடுகளை பயன்படுத்துகிறார் என்று சொல்வதற்கில்லை, மாறாக ஓவியத்திற்குள் கதையை உறையவைக்கிறார்.

ஓர் ஓவியம், ஒரு நாவலில் இருந்து கிழித்து எடுக்கப்படும் ஒரு பக்கம் எனும்போது, அது அசோகமித்ரனின் ஏதோ ஒரு நாவலில் இருந்து எடுக்கப்படுகிறது என்றே மனம் சொல்கிறது. ஹாப்பரின் பெரும்பாலான ஓவியங்கள் ஜன்னல்கள் கொண்டவை. தானே கண்டடைந்த படிமம் என அவர் ஜன்னல்களை பயன்படுத்தியிருக்கிறார். பல ஓவியங்கள், பார்வையாளர் ஜன்னல் வழியாக ஓவியத்தை பார்க்கும் கோணத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றன. இன்னும் பல ஓவியங்கள் தன்னந்தனியானவர்கள் ஜன்னல் வழியாக வெளியில் பார்ப்பதாக வரையப்பட்டிருக்கின்றன. இது எட்டிப்பார்க்கும் தன்மையை(voyeuristic) உருவாக்குகிறது. அவ்வாறு எட்டிப்பார்க்கையில் சுவாரஸ்யமான காட்சி ஏதும் தெரிவதில்லை. மிகவும் சலிப்படைந்த ஒருவன் தனிமையில் வேறொரு அறையின் ஜன்னல் வழியாக பார்க்கிறான். அதில் தெரிவது, மிகவும் சலிப்படைந்த ஒரு மனிதன் தனிமையில் மிகவும் சலிப்பூட்டக்கூடிய ஒன்றை செய்து கொண்டிருப்பதுதான். 

‘Morning Sun’ ஓவியத்தைப் பார்க்கும்போது தன்னிச்சையாக எனக்கு ஒற்றன் நாவலில் உள்ள இலாரியாவின் நினைவு வருகிறது. மொத்த எழுத்தாளர் குழுமமே ரகசியமாக நேசிக்கும் அழகி இலாரியா உடைந்து அழும்போது அசோகமித்திரன், “இலாரியா, நான் முன்பே ஒரு முறை சொல்லியிருக்கிறேன், ஞாபகமிருக்கிறதா? துக்கத்தைப் பகிர்ந்துகொள்ளவே முடியாது. உன்னுடைய துக்கத்தைப் பார்த்து எனக்கும் மிகவும் துக்கமாக இருக்கிறது. அதனால் உன் துக்கம் குறையப் போவதில்லை.” என்பார். நாம் பகிர்ந்துகொள்ள முடியாத துக்கத்தால் தனியானவர்கள். ஹாப்பரின் ஓவியம், நம்மை அதற்குள் இழுத்து அமரவைப்பதில்லை. அது ‘empathy’யை உருவாக்கக்கூடியது அல்ல. நாம் ஒரு அந்நியனின் தனிமையைதான் பார்க்கிறோம்; நமது தனிப்பட்ட தனிமையைதான் உணர்கிறோம். அசோகமித்திரன் சொல்வதையே ஹாப்பரும் முணுமுணுக்கிறார் என்று தோன்றுகிறது, “நாம் துயரத்தால் தனியானவர்கள்.” 

ஆனால், இவ்வோவியத்தில் அவள் ஜன்னல் வழி வரும் ஒளியில் மூழ்கி தனித்திருக்கிறாள். ‘ஒளி’ ‘தனிமை’ என்ற சொற்களை ஒரே வரியில் எழுதுகையில் ஒரு குறுகுறுப்பு ஏற்படுகிறது. ஹாப்பரது தனிமையை அவருக்கு ஒளியின் மேல் இருக்கும் காதல் சூழ்ந்துகொள்கிறது. அத்தனை தனிமையையும் ஒளி சுற்றி நின்று மெளனமாக வெறிக்கிறது. எல்லாவற்றையும் தொட்டுத் தொட்டு பார்க்கிறது. அணைத்துக்கொள்ளத் துடிக்கிறது. ஒருவேளை ஒளியும் அத்தனை தனிமையானது தானோ? ‘Music of Spheres’ கவிதையின் ‘நட்சத்திரங்கள் நிறைந்த வானத்தின் கீழ்’ என்ற வரி அதை epiphany ஆக்குகிறது. ஹாப்பரின் ஓவியங்கள் அந்த இறுதி வரியை சேர்த்துக்கொள்ளத் தயங்கினாலும், அந்த வரி எல்லா ஓவியங்களுக்குள்ளும் புதைந்திருப்பதாக தோன்றுகிறது. அவ்வரி, ‘ஒளி சூழ் தனிமை’

ஏற்கனவே சொன்னதுபோல, ஹாப்பரால் தன் மனைவி ஜோசஃபினிடம் கூட தன்னை பகிர்ந்து அளிக்க முடியவில்லை. ஒரு முழு உரையாடலில் ஒரு வார்த்தையை மட்டும் சொல்பவரான ஹாப்பரும் பேசித் தீர்த்துவிட வேண்டும் என்று துடிக்கும் ஜோசஃபினும், ஒரு குறிப்பிட்ட கவிதை இருவருக்குமே அணுக்கமாக இருப்பதை உணர்ந்து நேசிக்கத் துவங்குகிறார்கள். ஹாப்பர் அங்கீகாரம் பெற்று அவரது ஓவியங்கள் விற்பதற்கு முன்பே ஜோசஃபினின் ஓவியங்கள் அமெரிக்காவில் புகழ் பெற்றவையாக இருக்கின்றன. சில நேரங்களில், கலைக்கூடங்களில் ஹாப்பருடைய ஓவியங்கள் விற்பதற்கு ஜோசஃபின்னுடைய பரிந்துரை ஒரு காரணமாக இருக்கிறது. ஆனால் காலப்போக்கில், ஹாப்பர் விரிந்து முன்செல்கையில் ஜோசஃபின் தனது ஓட்டுக்குள் சுருள்கிறார். தான் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் ஹாப்பருடைய நிராகரிப்பையும் நெடுமூச்சையும் எதிர்கொள்ளும் ஜோசஃபின், பொது வெளியிலேயே அவர்களுக்கிடையே உள்ள உரசலை வெளிப்படுத்துகிறார். ஒரு நேர்காணலில் ‘ஆண்கள் நன்றி உணர்வு அற்றவர்கள்.’ என்கிறார். யோசித்துப் பார்க்கையில், ராஸ்கோல்நிகோவின் சாயல் ஹாப்பர் மேல் படிவதாக தோன்றுகிறது; கடைசி ரூபிளையும் முன்பின் தெரியாதவருக்கு கொடுக்கக்கூடியவன். ஆனால், ஒரு துளி காருண்யத்தைக்கூட பெற்றுக்கொள்ள கூசுபவன். ஹாப்பர் அந்தக் காருண்யத்தின் விரல்கள் தொடமுடியாத மதில்களுக்கு அப்பால் தன்னை இருத்திக்கொள்கிறார். ஆனால், ஹாப்பர் 83 வயதில் வரைந்த ஓவியம், ‘Two comedians’.

இதில் உள்ளவர்கள் ஹாப்பரும் ஜோசஃபினும் என்று சொல்லவேண்டிய அவசியம் இல்லை. இதில், ஹாப்பருடைய ஓவியங்களில் இல்லாத கனிவு வெளிப்படுகிறது. முதல் முறையாக அவர்கள் தங்களின் தனிமையையும் தன்னுரையாடலையும் கைவிட்டு நம்மை பார்க்கிறார்கள். மிக முக்கியமாக கைகளைக் கோர்த்து நிற்கிறார்கள். இப்போதும் ஒளி அவர்களை நனைத்துக்கொண்டிருக்கிறது. ஹாப்பர்! அத்தனை திடமான சுவர்கள் கொண்டதா தனிமை? அத்தனை திடத்தையும் கடந்து கசிந்துவிடுமா ஒளி?

*

சியாம்

சியாம். சென்னையில் தனியார் நிறுவனத்தில் இயந்திர வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார். இலக்கியத்துடன் கர்நாடக இசையிலும் ஆர்வம் உள்ளவர்.

1 Comment

உரையாடலுக்கு

Your email address will not be published.