
ஆஸ்துமா மாத்திரைகளின் நிழலில் துயில்பவன்:
1
செவ்வக அறை
செவ்வகக் கட்டில்
செவ்வகத் தொலைக்காட்சிக்கு
நடுவில்
மீனின் பெருவாய் திறந்து மூடுகிறது
வெள்ளை வட்டத்துள் நீந்திப்
பிழைத்து
தினசரி மூன்று வேளைகளும்
சுவாசம் கொள்ளும் அதன் கண்களில்
செவ்வகத்திலிருந்து தப்பி
வட்டத்துக்குள் நுழைந்த
நிம்மதி
உறக்கத்தில் பெருங்கனவு
முகிழத் திறக்கும்
மீனின்
வட்டங்களற்ற இரவுகளில்
உறக்கம் பெருங்கனவு
2
ஆஸ்துமா என்பது
மூச்சின் அழுகை
என்பவன்
ஒருமுறை கூட
அழாமல்
சிரித்ததில்லை
3
கடிந்து கொண்ட
மேலதிகாரியின்
கண்களிலிருந்து யாவும்
ஆரம்பித்தது
வாயைப் பிளந்து
தட்டுத்தடுமாறி
மேசைக்குத் திரும்பி
முந்தைய நொடியை
உணவுப் பையில் தேடுகிறான்
ஏராளமான முந்தைய
நொடிகள்
குப்பிக்குள் கலகலக்கின்றன
ஒரு முந்தைய நொடியை
எடுத்து வாயிலிட்டு
நீரைக் கவிழ்ப்பவன்
அநாயாசமாக
அடுத்த நொடிக்குத் தாவுகிறான்
மிரள வைத்த இந்த நொடி
முந்தைய நொடியாக இறந்து கிடப்பதை பார்த்ததில்
பெருமிதம்.
4
சுற்றிலும் புகைமூளும்
பனிக்கிராமத்தில்
கண்ணிகளுக்குப் பயந்து ஓடுபவனுக்கு மூச்சிரைக்கத் தொடங்கிவிட்டது
இதே உடல்நிலையில்
பயணித்தால் நிச்சயம்
மாலைக்குள் இறந்து விடக்கூடியவனுக்கு
வழியில் இரண்டு ஆஸ்துமா மாத்திரைகள் கிடைக்கின்றன
இரண்டையும் கால்சிராயில்
பத்திரப்படுத்தி ஓடுகிறான்
ஒன்று நாளை
சந்திக்க நேர்ந்தால்
மனைவியிடம் பேச
மற்றொன்று
என்றாவது சந்திக்க நேர்ந்தால்
மனைவியிடம் பேச..
இரண்டு மாத்திரைகள்
நிறைய மூச்சிறைப்புகள்
கொஞ்சம் ஊதாப்பூக்கள்
சிதறிய
மடி.
5
உதிராதப் பூவை
எதன் பொருட்டோ
அதனடியில் தாங்குவதாக
முளைத்திருக்கும் இலை
அலுவலகப்பையின் குப்பிக்குள் மலர்ந்திருக்கிறது
அதன் பொருட்டு
பூவிலிருந்து மொட்டாகிறது
அவன் முகம்
6
சிறுமியின் கையால்
இடப்படும் மாத்திரைக்கு
அதிக சக்தி
உடல் மேலெழும்பிப் பறக்குமளவு
காற்று இப்போது உள்நுழைகிறது.

ந.சிவநேசன்
சேலம் மாவட்டம், ஆரியபாளையத்தில் வசித்துவரும் ந.சிவநேசன் கவிதைகள், சிறுகதைகள் எழுதுவருகிறார். கானங்களின் மென்சிறை, இதங்களால் நிரம்பியவளின் முத்தச் சக்கரை, மீன்காட்டி விரல், ஃவரைகிறது தேனீ ஆகிய நூல்களின் ஆசிரியர்.
அஸ்துமாவிற்கு எப்பொழுதும் வரவேற்பு.
ஆரிய பாளையத்தில் எந்த ஏரியா? நான் வாழப்பாடி மூர்த்தி தங்களின் மொபைல்நம்பர் அனுப்புங்கள்
நான் விஸ்வநாதன் சோமம்பட்டி.
கவிதை அபாரம்.நோயாளிக்கு ஒவ்வொரு நொடியும் முக்கியமானது.
நான் இலக்கிய ஆர்வம் உள்ளவன் என்பதாலும் உங்கள் கிராமத்தின் அருகில் உள்ளவன் என்பதாலும் உங்களை தொடர்புகொள்ள விரும்புகிறேன்.9786983050