
ஃபிரான்ஸ் காஃப்காவின் எந்த நூலையும் வாசிப்பதற்கு பல வருடங்கள் முன்பே அவரது நண்பர் ஜாக் வழியாக அவரை நான் அறிந்திருந்தேன், ஜாக் கோன் ஒரு முன்னாள் யிட்டிஷ் நாடக நடிகர். அது முப்பதுகளின் ஆரம்ப காலம், வார்சாவின் நாடக அரங்குகள் ஏற்கனவே தன் பார்வையாளர்களை இழக்கத் துவங்கியிருந்தது. ஜாக்கும் தன்னளவில் ஓர் உடைந்த நோயுற்ற மனிதராக இருந்தார். இன்னமும் அவர் அலங்காரமான உடைகளையே அணிந்து வந்தார், ஆனால் உடைகள் தற்போது நைந்திருந்தன. இடக்கண்ணில் ஒற்றைக் கண் கண்ணாடியும் உயரமான பழையபாணி காலரும் (“தந்தையை கொன்றவன்” என அழைக்கப்படுவது) அணிந்தபடி, பளபளப்பான உயர்ரக தோல் சப்பாத்துக்களுடன் நேர்த்தியான டெர்பி உடையில் தோன்றுவார். நாங்கள் அடிக்கடி சந்தித்துக் கொள்ளும் வார்சாவில் உள்ள யிட்டிஷ் எழுத்தாளர் சங்கத்தில் சில கிண்டல் பேர்வழிகள் அவரை “பிரபு” எனும் பட்டப்பெயரில் அழைத்தனர். அவரது நிலை மேலும் மேலும் தாழ்ந்து வந்தாலும் விடாப்பிடியாக தோள்நிமிர வேலை செய்தார். ஒரு காலத்தில் வளமாக இருந்த தன் மஞ்சள்நிற முடியில் எஞ்சியவற்றை வழுக்கை தலையின் மேல் பாலமாக அமைத்திருந்தார். பழங்கால நாடக மரபுப்படி ஜெர்மன் கலந்த யிட்டிஷ் மொழிக்கு அவ்வப்போது தாவிவிடுவார் – குறிப்பாக காஃப்காவுடனான தன் உறவைப் பற்றி பேசும்போது. சமீப நாட்களாக அவர் செய்தித்தாள் கட்டுரைகளை எழுதத் தொடங்கியிருந்தார், ஆனால் அவரது பிரதியை நிராகரிப்பதில் பத்திரிக்கை ஆசிரியர்கள் அனைவரும் ஏகமனதாக செயல்பட்டனர். லஸ்னோ வீதியின் எங்கோ ஒரு மாடியறையில் வசித்து வந்த அவர் எப்போதும் நோய்வாய்ப்பட்ட நிலையிலேயே இருந்தார். சங்க உறுப்பினர்களிடம் அவரைப் பற்றிய கிண்டலொன்று சுற்றி வந்தது: “பகல் முழுக்க அவர் ஓர் ஆக்சிஜன் கூடாரத்தில் இருப்பார், இரவானால் ஸ்பானிய மன்மதனான டான் ஜுவானாக வெளிவருவார்.”
நாங்கள் எப்போதும் எழுத்தாளர் சங்கத்தில் மாலை நேரங்களில் சந்தித்து வந்தோம். ஜாக் உள்நுழைகையில் கதவுகள் மெதுவாக திறக்கப்படும். தன் நிலையை தாழ்த்திக் கொண்டு பரிவுடன் சேரிப் பகுதியை பார்வையிடப் போகும் ஒரு முக்கிய ஐரோப்பிய பிரபலத்தை போன்றதான தோரணை அவரிடமிருந்தது. உள்நுழைகையில் சுற்றிலும் நோட்டமிட்டபடி அங்கிருந்து வரும் பூண்டு, நெத்திலி மற்றும் மலிவான புகையிலை ஆகியவற்றின் வாடை தனக்கு பிடிக்கவில்லை என்பது போல முகம் சுளிப்பார். மேசை மீது விரவி கிடக்கும் கசங்கிய செய்தித்தாள்கள், உடைந்த சதுரங்க காய்கள், சிகரெட் துண்டுகள் நிரம்பி வழியும் சாம்பல் தட்டுகள், இவற்றை சுற்றி அமர்ந்து சங்க உறுப்பினர்கள் தங்கள் கீச்சுக் குரலில் முடிவின்றி இலக்கியம் பேசிக் கொண்டிருப்பதை ஒருவித அருவருப்புடன் நோக்குவார். அவரது தலையசைப்பு “இந்த வெட்கங்கெட்ட மனிதர்களிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்?” என்பதுபோல் இருக்கும். அவர் வருவதை பார்த்ததுமே, நான் என் பாக்கெட்டில் கைவிட்டு அவர் எப்படியானாலும் என்னிடமிருந்து வாங்கப்போகும் சில்லறைக்காசை தயார்படுத்திக் கொண்டேன்.
குறிப்பாக இந்த மாலையில், ஜாக் வழக்கத்தைவிட நல்ல மனநிலையில் இருப்பதாகப் பட்டது. தன் பளிங்கு பற்கள் வெளித்தெரிய புன்னகைத்தார், பேசுகையில் பற்கள் பொருந்தாமல் லேசாக அசைந்ததன, அவரது செருக்கான தொனி மேடையில் உரையாற்றுவது போன்ற உணர்வை அளித்தது. நீண்ட விரல்களுடைய தன் மெலிந்த கரத்தால் என்னிடம் கைகுலுக்கியபடி கேட்டார், “நமது புதிய நட்சத்திரம் இன்றைக்கு என்ன செய்கிறார்?”
“அதற்குள் அவரது பேச்சா?”
“உண்மையைச் சொல்கிறேன், விளையாட்டெல்லாம் இல்லை. திறமையை பார்த்தவுடன் என்னால் அடையாளம் காண முடியும், எனக்கே அது போதிய அளவு இல்லாவிட்டாலும் கூட. 1911 இல் நாங்கள் பிராகாவில் நாடகம் போட்டபோது காஃப்காவை யாரும் அறிந்திருக்கவில்லை. அவர் மேடைக்கு பின்புறம் வந்தார், பார்த்த முதற்கணத்திலேயே ஒரு மேதையின் அருகாமையை உணர்ந்து விட்டேன். என்னால் அதை மோப்பம் பிடித்துவிட முடியும், பூனை எலியின் இருப்பை உணர்வது போல. அப்படித்தான் எங்கள் நட்பு ஆரம்பமானது.”
நான் இக்கதையை பலமுறை பல்வேறு வடிவங்களில் கேட்டிருக்கிறேன், ஆனால் இப்போது மீண்டும் அதை நான் கேட்டாக வேண்டும். அவர் என்னுடன் மேசையில் அமர்ந்ததும், பணிப்பெண் மான்யா எங்களுக்கு தேநீரும் பிஸ்கட்களும் எடுத்து வந்தார், ஜாக் தன் மஞ்சள்பாவிய கண்களுக்கு மேல் புருவத்தை உயர்த்திப் பார்த்தார், விழிக்கோளத்தின் வெண் பகுதியெங்கும் குட்டி ரத்தநாளங்கள் நூலிழைகளாக பரவியிருந்தன. “இதைத்தான் இந்த காட்டுமிராண்டிகள் தேநீர் என்று சொல்கிறார்களா?” என்பதுபோல் இருந்தது அவரது பார்வை. ஐந்து சக்கரை கட்டிகளை தன் கோப்பையில் இட்டு கரண்டியால் வெளிப்புறமாகக் கலக்கினார். கட்டைவிரல் மற்றும் ஆள்காட்டி விரலால், அதன் நகம் வழக்கத்தைவிட மிக நீண்டு இருக்கும், சிறு துண்டு பிஸ்கட்டை உடைத்து வாயிலிட்ட பின் “நூ ஜா,” என்றார். அதன் பொருள், கடந்த கால பசியை ஒருவர் ஆற்ற முடியாது என்பது.
எல்லாம் நாடக வாழ்க்கையால் வந்தது. அவரோ போலந்தின் சிறிய நகரொன்றிலிருந்து வந்தவர், மரபார்ந்த யூத குடும்பத்தைச் சேர்ந்தவர். உண்மையான பெயர் ஜாக் அல்ல, ஜான்கெல். இருந்தாலும் அவர் பிராகாவிலும் வியன்னாவிலும் பெர்லினிலும் பாரிசிலும் பல வருடங்கள் வாழ்ந்திருக்கிறார். யிட்டிஷ் நாடகங்களில் மட்டும் அல்லாமல் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியிலும் கூட மேடைகளில் தோன்றியிருக்கிறார். பல பிரபலங்களுடன் நட்புடன் இருந்திருக்கிறார். ஓவியர் மார்க் சாகல் அவர்களுக்கு பெலேவில்லேவில் கலையரங்கை அமைக்க உதவியிருக்கிறார். இஸ்ரேல் சாங்க்வில்லை அடிக்கடி சந்திக்கும் விருந்தினராக இருந்துள்ளார். ரெய்ன்ஹார்ட் தயாரிப்பில் நடித்துள்ள அவர், ஜெர்மன் நாடக இயக்குனர் பிஸ்கேட்டருடன் மதிய விருந்துகளில் பங்கெடுத்திருக்கிறார். என்னிடம் அவர் பகிர்ந்து கொண்ட கடிதங்களில் காஃப்கா தவிர ஜாகோப் வாஸர்மென், ஸ்டீபன் ஸ்வீக், ரோமைன் ரோலண்ட், இலியா எஹ்ரன்பர்க், மார்ட்டின் புபர் போன்று பிற கலைஞர்களிடமிருந்து வந்த கடிதங்களும் இருந்துள்ளன. அவர்கள் அனைவரும் அவரை முதற்பெயர் கொண்டே அழைத்திருந்தனர். நாங்கள் ஒருவருக்கொருவர் மேலும் நெருக்கமானதும் அவர் தொடர்பு வைத்திருந்த பிரபல நடிகைகளின் படங்களை கூட என்னிடம் காண்பித்திருக்கிறார்.
ஜாக் கோனுக்கு ஒரு ஸ்லாட்டி நாணயம் “செலவிடுவது” என்னைப் பொறுத்தவரை ஒட்டுமொத்த மேற்கு ஐரோப்பாவுடன் தொடர்பு கொள்வதுதான். தன்னுடைய வெள்ளி கைப்பிடி கொண்ட கைத்தடியை அவர் கையாளும் விதமே தனித்துவமாக இருக்கும், அவர் சிகரெட் பிடிக்கும் பாணியும் வார்சாவில் நாங்கள் பிடிக்கும் விதத்திலிருந்து மாறானதே. எப்போதும் நாகரிக நடத்தை கொண்டவர். அரிதாக அவர் என்னை மறுக்கும் சந்தர்ப்பங்களில் கூட நாசூக்கான ஆற்றுப்படுத்தும் சொற்களால் என் உணர்வுகள் புண்படா வண்ணம் பார்த்துக் கொள்வார். எல்லாவற்றையும் விட, ஜாக் பெண்களை கையாளும் முறை எனக்கு வியப்பாக இருந்தது. நான் பெண்கள் நடுவே கூச்சப்படுபவன், அவர்களின் இருப்பே என்னை முகம்சிவக்க வைத்துவிடும், ஆனால் ஜாக்கோ ஒரு கணவானின் தன்னம்பிக்கையுடன் நடந்து கொள்வார். மிகவும் அழகற்ற பெண்களிடம் கூட நல்லவிதமாக சொல்வதற்கு அவருக்கு ஏதோவொன்று இருந்தது. காணும் அனைத்துப் பெண்களையும் புகழ்ந்தார், ஆனால் அதில் எப்போதுமே யாரும் தவறாக எடுத்துக் கொள்ளாத ஒருவித முரண்நகை இருக்கும். அனைத்தையும் பார்த்து சுவைத்து சலித்துவிட்ட, இன்ப நாட்டத்தையே கொள்கையாகக் கொண்ட ஒரு ஹெடோனிஸ்டின் தோரணை அப்போது அவரிடம் வெளிப்படும்.
என்னிடம் வெளிப்படையாக பேசினார். “என் இளம் நண்பா, நான் கிட்டத்தட்ட ஆண்மையற்றவன் மாதிரிதான். எப்போதும் மேலும் மேலும் செறிவுபடுத்தப்பட்ட சுவையிலிருந்தே அது ஆரம்பமாகிறது – ஒருவன் பசியுடன் இருக்கும்போது அவனுக்கு பலகாரங்களும் விலையுயர்ந்த மீன் முட்டைகளும் தேவையில்லை. உண்மையில் எந்தப் பெண்ணும் கவர்ச்சி மிக்கவளாக தோன்றாத நிலைக்கு நான் சென்றுவிட்டேன். எந்தக் குறைகளையும் என்னிடம் மறைத்து வைக்க முடியாது. ஆண்மையற்றத்தன்மை என்பது அதுதான். உடைகள், இறுக்கமான மார்புக்கச்சுகளைத் தாண்டி என்னால் எளிதில் ஊடுருவி பார்க்க முடியும். பூச்சுகள், வாசனை திரவியங்களால் ஏமாற்றப்படுவதை எப்போதோ கடந்துவிட்டேன். நானே என் பற்களை இழந்திருக்கிறேன், ஆனால் ஒரு பெண் பல்செட் வைத்திருந்தால் அவள் வாயை திறந்தாலே அது என் கண்ணில் பட்டுவிடும். சொல்லப்போனால், ஒருவகையில் எழுத்தில் காஃப்காவின் பிரச்சனையும் அதுதான். அவர் அனைத்து குறைகளையும் கண்டார் – தன் சொந்த குறைகளையும், பிறருடையதையும். ஆனால் பெரும்பகுதி இலக்கியம், இம்மாதிரி சாதாரண வாழ்வு கொண்ட பிழைக்கத்தெரியாத ஆட்களாலேயே படைக்கப்படுகிறது. காஃப்கா இலக்கியத்தில் கண்ட அதே குறைகளை நான் நாடகத்தில் கண்டேன், நாங்கள் நெருக்கம் கொண்டது அதன்வழியாகவே. ஆனால் வினோதமாக, நாடகங்களை மதிப்பிடும் விஷயத்தில் மட்டும் காஃப்கா பார்வையற்றவராக நடந்து கொண்டார். மட்டமான எங்கள் யிட்டிஷ் நாடகங்களை வானளாவ புகழ்ந்தார். செயற்கையான மிகைநடிப்பு கொண்ட நடிகையான மேடம் சில்ஷிக்கின் மீது தீவிர காதலில் விழுந்தார். காஃப்கா இந்த உயிரினத்தை காதலிக்கிறார், அவளைக் குறித்து கனவு காண்கிறார் என்பதை நினைக்கும் போதே எனக்கு வெட்கமாக இருக்கும், மனிதனின் மாயைகள் எல்லையற்றவை. மரணமின்மையை யாரும் தேர்ந்தெடுத்துவிட முடியாது என்பது சரிதான், ஒரு மகத்தான மனிதனுடன் எவ்வாறேனும் தொடர்பு வட்டத்தில் வரும் எவரும் மரணமின்மையை நோக்கி நடை போடுகின்றனர், பெரும்பாலும் அழுக்கான காலடிகளுடன்.
“நீ என்னிடம் ஒருமுறை கேட்டாய் அல்லவா, எது என்னை வாழச் செய்கிறது என்று? அல்லது நீ கேட்டதாக நானாக நினைத்துக் கொண்டேனா? வறுமையையும் நோய்களையும் எல்லாவற்றையும்விட நம்பிக்கையின்மையை தாங்கிக்கொள்ள எனக்கு எங்கிருந்து வலு கிடைக்கிறது என்று? அதுவொரு நல்ல கேள்வி, என் இளம் நண்பனே. யோபு நூலை (Book of Job) முதன்முறை வாசிக்கையில் எனக்கும் அதே கேள்வி எழுந்தது. யோபு ஏன் தொடர்ந்து வாழ்ந்து துயர்பட வேண்டும்? அதனால் இறுதியில் அவனுக்கு அதிக குழந்தைகளும், அதிக கழுதைகளும், அதிக ஒட்டகங்களும் கிடைக்கப் போகின்றனவா? இல்லை. எல்லாம் இந்த ஆட்டத்தின் பொருட்டே என்பதே அதற்கான பதில். நாமனைவரும் விதியுடன் சதுரங்கம் ஆடுகிறோம். அவன் ஒரு காயை நகர்த்த, நாம் ஒரு காயை நகர்த்துகிறோம். அவன் மூன்று நகர்வுகளில் நம் ஆட்டத்தை முடிக்க நினைக்கிறான், நாம் அதை தடுக்க முயல்கிறோம். வெல்ல முடியாது என்பதை அறிந்திருந்தாலும் இறுதிவரை போராடி அவனுக்கு நல்ல சவாலாக அமைய போராடுகிறோம். எனக்கு எதிரிலிருப்பதோ வெல்லற்கரிய தேவன். அவன் தன்வசமுள்ள ஒவ்வொரு யுக்தியைக் கொண்டும் இந்த ஜாக் கோனுடன் விளையாடுகிறான். தற்போது குளிர் காலம், கணப்பு அடுப்பு எரிந்தாலுமே குளிராகத்தான் இருக்கும். ஆனால் என் வீட்டு அடுப்போ வேலை செய்தே பல மாதங்கள் ஆகின்றன, வீட்டு உரிமையாளன் சரிசெய்து தர மறுக்கிறான். அதுவும்போக வேலை செய்தாலும் நிலக்கரி வாங்க என்னிடம் பணம் இருந்திருக்காது. வெளியே என்ன குளிர் அடிக்கிறதோ அதேயளவு குளிர் என் அறைக்குள்ளும் இருக்கும். நீங்கள் ஒரு வீட்டின் மாடியில் உட்கூரையின் அடியில், வழக்கமாக பரணாக பயன்படுத்தப்படும் சிற்றறையில் தங்கியிருக்காவிட்டால் காற்றின் வேகத்தை அறிந்திருக்க மாட்டீர்கள். வெயில் காலத்தில் கூட ஜன்னல் சட்டங்கள் சடசடக்கும். சிலசமயம் ஒரு கடுவன்பூனை என் ஜன்னலின் அருகே மேற்கூரையில் ஏறி நின்று கொண்டு பிரசவ வலியில் துடிக்கும் பெண்ணைப்போல இரவுமுழுக்க ஓலமிடும். நான் என் போர்வைக்கு அடியில் உறைந்து கிடக்க அது மற்றொரு பூனைக்காக ஊளையிடும், அல்லது அது வெறுமனே பசியிலும் இருந்திருக்கலாம். சிறு துண்டு ரொட்டியைப் போட்டால் அமைதியாகியிருக்கும், அல்லது எழுந்து சென்று துரத்தி விட்டால் போய்விடும், ஆனால் என்னாலோ அசைய முடியாது. குளிரில் செத்துவிடாமல் இருக்க கிடைத்த எல்லா கிழசல்களையும் கொண்டு என்னை சுற்றியிருக்கிறேன், பழைய செய்தித்தாள்களையும் விட்டுவைக்கவில்லை – நான் லேசாக அசைந்தால் கூட மொத்தமாக எல்லாம் கலைந்து பாழாகிவிடும்.
“இப்போதும் நீ சதுரங்கம் ஆடினால், என் இனிய நண்பா, ஆடத்தெரியாதவனுடன் ஆடுவதை விட தரமான போட்டியாளனுடன் ஆடுவதே சிறந்தது. நான் என் எதிரியைப் போற்றுகிறேன். சிலசமயம் அவரது கூர்மதியை கண்டு நான் வியந்திருக்கிறேன். அங்கு மூன்றாவதோ அல்லது ஏழாவதோ அடுக்கில் இருக்கும் சொர்க்கத்தின் அலுவலகத்தில், நமது இந்த சிறிய கோளின் விதிகளை நிர்வகிக்கும் பிரிவில் அமர்ந்து கொண்டு அவருக்கிருப்பது ஒரேயொரு வேலைதான் – ஜாக்கை சிக்க வைக்க வேண்டும். ‘பானையை உடை, ஆனால் மதுவை கொட்டி விடாதே’ என்பதே அவருக்கு இடப்பட்டிருக்கும் ஆணை. அவர் அதை சரியாகவே கடைப்பிடிக்கிறார். என்னை எப்படி அவர் உயிருடன் வைத்திருக்கிறார் என்பதே அதிசயம் தான். ஒருநாளைக்கு நான் எவ்வளவு மருந்துகளை உட்கொள்கிறேன், எத்தனை மாத்திரைகளை விழுங்குகிறேன் என்பதைச் சொல்லவே எனக்கு வெட்கமாக இருக்கிறது. நண்பன் ஒருவன் மருந்து கடை வைத்திருக்கிறான், இல்லாவிட்டால் இதையெல்லாம் என்னால் சமாளித்திருக்கவே முடியாது. படுக்கைக்கு போகும் முன் தண்ணீரில்லாமல் ஒவ்வொன்றாக அப்படியே விழுங்குவேன். நீர் அருந்தினால் பிரச்சனை. புரோஸ்டேட் பிரச்சனை இருப்பதால் இரவில் சிறுநீர் கழிக்க அடிக்கடி எழும்ப வேண்டியிருக்கும். இரவாகிவிட்டால் இம்மானுவேல் கான்டின் பிரிவினைகள் எல்லாம் வேலை செய்வதில்லை. காலமும் வெளியும் நம் வசத்திற்குள் இருப்பதில்லை, நீங்கள் ஒரு பொருளை கையில் வைத்திருந்தால் சட்டென அது மாயமாகிவிடும். எரிவாயு விளக்கை ஏற்றுவதோ சாதாரண காரியமல்ல. தீக்குச்சிகள் எப்போதுமே காணாமலாகிவிடும். என் சிறிய அறை ஆவிகளால் நிறைந்திருக்கும். எப்போதாவது அவர்களில் யாரிடமேனும் நான் பேசிப் பார்ப்பதுண்டு: ‘ஹேய், குட்டிச்சாத்தான், பிசாசின் மகனே, என்னிடம் விளையாட வேண்டாம் சரியா!’
“கொஞ்ச காலம் முன்பு நட்டநடு இரவில், என் கதவு அறைபடும் ஓசையும் கூடவே ஒரு பெண்ணின் குரலும் கேட்டது. அவள் சிரிக்கிறாளா அழுகிறாளா என்பதை என்னால் சொல்ல முடியவில்லை. ‘யாராக இருக்கும்?’ என்னை நானே கேட்டுக் கொண்டேன். ‘லிலிதா? நார்சி? அல்லது கெடேவின் மகள் மெக்லத்?’ குரலை உயர்த்தி சொன்னேன். ‘மேடம், நீங்கள் வந்திருப்பது தவறான இடம்.’ ஆனால் அவள் தொடர்ந்து கதவை தட்டிக் கொண்டே இருந்தாள். பின்னர் யாரோ ஒருவர் வலியில் முனகும் ஒலியும் கீழே விழுவதும் கேட்டது. அச்சத்தின் காரணமாக நான் கதவை திறக்கவில்லை. தீக்குச்சிகளுக்காக தேடினேன், பின்னர்தான் தெரிந்தது அவற்றை கையில் வைத்துக்கொண்டே தேடியிருக்கிறேன். ஒருவழியாக படுக்கையிலிருந்து இறங்கி எரிவாயு விளக்கைப் பற்ற வைத்தேன், மேலே போட்டுக் கொள்ளும் கவுனும் காலணிகளும் அணிந்து கொண்டேன். தற்செயலாக கண்ணாடியைப் பார்த்ததில் எனக்கே என் பிம்பம் அச்சமூட்டும் வகையில், மழிக்கப்படாமல், பச்சை நிறமாக மாறியிருந்தது. கடைசியில் கதவை திறந்தால் அங்கு வெறும் காலில் ஓர் இளம்பெண் நின்று கொண்டிருந்தாள், இரவுநேர கவுனிற்கு மேல் கோட் அணிந்திருந்தாள். வெளிரிப் போயிருந்தாள், அவளின் நீண்டப் பொன்னிற கூந்தல் கலைந்திருந்தது. ‘மேடம், என்ன விஷயம்?’ என்றேன்.
“ ‘சற்றுமுன் என்னை ஒருவர் கொல்லப் பார்த்தார். உங்களை கெஞ்சி கேட்கிறேன், என்னை உள்ளே விடுங்கள். விடிந்ததும் நான் போய்விடுவேன்’
“அவளை கொல்ல முயற்சிப்பது யாரென்று கேட்க நினைத்தேன், ஆனால் அவள் ஏற்கனவே பாதி உறைந்திருந்தாள். பெரும்பாலும் குடித்திருக்கவும் கூடும். உள்ளே அனுமதிக்கையில் அவளது மணிக்கட்டில் பெரிய வைரக்கற்கள் பதித்த கைவளை கண்ணில் பட்டது. அவளிடம் ‘என் அறை வெப்பமூட்டப்படவில்லை’ என்றேன்.
“ ‘வீதியில் இறப்பதற்கு இது எவ்வளவோ மேல்.’
“எனவே அவ்விரவை அவளுடன் கழிக்கும்படி ஆனது. அவளை வைத்துக் கொண்டு நான் என்ன செய்வது? என்னிடமிருப்பது ஒரேயொரு படுக்கை. நான் குடிப்பதில்லை – குடிக்கவும் கூடாது – ஆனால் நண்பன் ஒருவன் பரிசாக கொடுத்த உயர்ரக பிரான்சு நாட்டு மது ஒரு பாட்டில் என்னிடமிருந்தது, கொஞ்சம் நமத்துப்போன பிஸ்கட்டுகளும் வைத்திருந்தேன். அவளுக்கு அவற்றை பரிமாறினேன். மது அவளை ஆற்றுப்படுத்தி உயிர்த்தெழச் செய்வது தெரிந்தது. ‘மேடம், நீங்கள் வசிப்பது இக்கட்டிடத்திலா?’ என்று அவளிடம் கேட்டேன்.
“ ‘இல்லை, நான் உஜாஸ்டவ்ஸ்கி பெருஞ்சாலையில் வசிக்கிறேன்’ என்றாள்.
“அவள் ஓர் உயர்குடி பெண் என்பதை தெரிந்து கொண்டேன். ஒன்று தொட்டு ஒன்றென எங்கள் பேச்சு நீண்டதில் அவள் ஒரு பிரபுவின் மனைவி என்பதும் தற்போது விதவை என்றும் தெரிய வந்தது, அவளுடைய காதலன் இக்கட்டிடத்தில் தான் வசிக்கிறான் – அவனொரு முரடன், சிங்கக் குருளை ஒன்றை வளர்ப்பு பிராணியாக வளர்ப்பவன். அவனும் கூட உயர்குடியை சேர்ந்தவன் தான், ஆனால் அவர்களால் ஒதுக்கி வைக்கப்பட்டவன். ஏற்கனவே கொலைமுயற்சியின் பொருட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தான். அவள் தன் மாமியார் வீட்டில் வசிப்பதால் அவர்கள் சந்தித்துக் கொள்ள முடியவில்லை, எனவே அவளே அவனை பார்க்க வந்திருந்தாள். அன்றிரவு அவர்களுக்கிடையே நடந்த சண்டையில் அவன் அவளை அடித்து கடைசியில் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்துவிட்டான். சுருக்கமாக சொல்லவேண்டுமானால் அவள் அவனது கோட்டை பிடித்துத் தள்ளிவிட்டு விட்டு அவனது அபார்ட்மெண்டிலிருந்து எப்படியோ தப்பி வந்துவிட்டாள். பக்கத்து வீட்டுக்காரர்களின் கதவுகளை தட்டியிருக்கிறாள், ஆனால் அவர்கள் யாரும் அவளை உள்ளே அனுமதிக்காததால் மாடியில் இருக்கும் சிற்றறைக்கு வந்து சேர்ந்திருக்கிறாள்.
“நான் அவளிடம் சொன்னேன், ‘மேடம், அனேகமாக உங்கள் காதலன் இன்னும் உங்களை தேடிக் கொண்டிருப்பார். அவர் உங்களை கண்டுபிடித்துவிட்டால்? நான் வீரனாக சண்டையிடும் நிலையை எல்லாம் தாண்டிவிட்டேன்’
“ ‘கண்டிப்பாக அவர் தொந்தரவு செய்ய துணியமாட்டார்,’ அவள் சொன்னாள். ‘அவர் பரோலில் வந்திருக்கிறார். ஒருவழியாக அவரிடமிருந்து தப்பியிருக்கிறேன். கருணை காட்டுங்கள், இந்த இரவில் என்னை வெளியேற்றி விடாதீர்கள்.’
“ ‘நாளைக்கு எப்படி வீட்டுக்குப் போவீர்கள்?’
“ ‘எனக்குத் தெரியவில்லை, எப்படியானாலும் எனக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது, ஆனாலும் அவர் கையால் சாக விரும்பவில்லை.’
“ ‘சரி, நான் எப்படியும் தூங்கப் போவதில்லை. என் மெத்தையை எடுத்துக் கொள்ளுங்கள், நான் இந்த நாற்காலியில் ஓய்வெடுக்கிறேன்.’
“ ‘இல்லை, நான் அதை செய்ய மாட்டேன். உங்களுக்கு வயதாகிவிட்டது உடல்நலமும் சரியில்லாமல் இருக்கிறீர்கள். தயவுசெய்து மெத்தையிலேயே படுத்துக் கொள்ளுங்கள், நான் இங்கு அமர்ந்து கொள்கிறேன்.’
“நீண்ட நேரம் விவாதித்து இறுதியில் இருவரும் ஒன்றாக படுத்துக் கொள்வது என முடிவெடுத்தோம். ‘நீ என்னிடம் பயப்படத் தேவையில்லை,’ அவளிடம் உறுதியளித்தேன். ‘எனக்கு வயதாகிவிட்டது பெண்களிடம் செய்வதற்கு எதுவும் இல்லை.’ அவளும் பயப்பட்டதாகத் தெரியவில்லை.
“என்ன சொல்லிக் கொண்டிருந்தேன்? ஆம், ஒருகணம் திரும்பிப் பார்த்தால் ஒரு கோமகளுடன் மெத்தையில் படுத்திருக்கிறேன், அவளின் காதலன் எந்நேரத்திலும் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழையலாம். என்னிடம் இரு போர்வைகள் இருந்தன. வழக்கமாக போர்வையின் முனைகளை உள்ளிழுத்து கூட்டுப்புழுவைப் போல் சுருண்டு கொள்ள மெனக்கெடவில்லை, இருவரையும் மேலோட்டமாகவே போர்த்தினேன். மனம் உச்ச வேகத்தில் ஈடுபட்டிருந்ததால் குளிரைப் பற்றியே மறந்துவிட்டிருந்தேன். அதுபோக, அவளின் நெருக்கத்தை உடல் உணர்ந்தது. அவளின் உடலிலிருந்து ஒருவித வெம்மை வெளிப்படுவதை உணர்ந்தேன், இதுவரை நான் அறிந்திராதது – அல்லது நெடுநாளாக நான் மறந்துவிட்ட ஒன்று. எனது போட்டியாளன் என்னிடம் புதிய விளையாட்டை ஆடிப் பார்க்கிரானா? கடந்த சில வருடங்களாக என்னிடம் தீவிரமாக விளையாடுவதை அவன் நிறுத்திவிட்டிருந்தான். சதுரங்க ஆட்டத்தில் வேடிக்கையாக விளையாடப்படும் நகர்வுகள் இருப்பது தெரியுமா உனக்கு? டேனிஷ் சதுரங்க வீரரான நிம்சோவிட்ச் தன்னுடன் விளையாடுபவர்களிடம் பலமுறை வேடிக்கையான நகர்வுகளை ஆடியிருக்கிறார் என கேள்விப்பட்டிருக்கிறேன். பழைய நாட்களில், சதுரங்க ஆட்டத்தில் பிறரை ஏமாற்றும் குறும்புக்காரரகவே பவுல் மோர்பி அறியப்பட்டார். ‘சிறப்பான நகர்வு’ என் போட்டியாளனிடம் சொன்னேன். ‘ஒரு மாஸ்டர்பீஸ்.’ அப்போதுதான் ஒன்றை உணர்ந்தேன், அவளது காதலனை நான் அறிவேன். ஒருமுறை மாடிப்படியில் அவனைப் பார்த்திருக்கிறேன், கொலைகார முகத்துடன் கூடிய மாமிச மலை. ஜாக் கோனுக்கு என்னவொரு வேடிக்கையான முடிவு – ஒரு போலந்து மல்லனின் கையால் சாக வேண்டும்.
“நான் வாய்விட்டு சிரிக்க ஆரம்பித்ததும் அவளும் இணைந்து கொண்டாள். அவளை அருகணைய செய்து அணைத்துக் கொண்டேன். அவள் மறுப்பேதும் காட்டவில்லை. கணப்பொழுதில் ஓர் அற்புதம் நிகழ்ந்தது. நான் மீண்டும் ஆண்மகனாகிவிட்டேன்! ஒருமுறை, வியாழக்கிழமை மாலை நேரம் சிறிய கிராமம் ஒன்றில் கசாப்புக்கடை அருகில் நின்றிருந்தேன். வாராந்திர ஓய்வுத்திருநாள் சப்பாத்துக்காக (Sabbath) வெட்டப்படுவதற்கு முன் அங்கு நின்றிருந்த காளையும் பசுவும் உடலுறவில் ஈடுபடுவதைக் கண்டேன். அவள் ஏன் சம்மதித்தாள் என்பது ஒருநாளும் எனக்குத் தெரியப்போவதில்லை. ஒருவேளை தன் காதலன் மீது வஞ்சம் தீர்ப்பதாக நினைத்திருக்கலாம். என்னை முத்தமிட்டு காதில் காதல் மொழிகளை கிசுகிசுத்தாள். பின்னர் நாங்கள் பலத்த காலடிகளின் சப்தத்தை கேட்டோம். கதவின் மீது யாரோ ஒருவர் பலமாக முட்டினார். என்னவள் மெத்தையிலிருந்து உருண்டு தரையில் படுத்துக் கொண்டாள். நான் இறப்புக்கான பிரார்த்தனையை உச்சரிக்க விரும்பினேன், ஆனால் கடவுளின் முன் நிற்க எனக்கு வெட்கமாக இருந்தது, அதைவிட என்னை வீழ்த்தி கெக்கலிக்க நினைக்கும் போட்டியாளனின் முன் நிற்பதில் அவமானம். அவனுக்கு ஏன் கூடுதல் மகிழ்ச்சியை அளிக்க வேண்டும்? நாடகத்தனத்திற்கும் ஓர் எல்லை உண்டு.
“அந்த அசுரன் கதவை முட்டித் தள்ளுவதை நிறுத்தவில்லை, அது உடையாமல் தாக்குப் பிடித்ததே எனக்கு வியப்பாக இருந்தது. காலால் எட்டி உதைத்தான், கதவு விரிசலிட்டாலும் உடையவில்லை. நான் பயந்துவிட்டிருந்தேன், அதேசமயம் என்னுள் உந்திய ஏதோவொன்றால் சிரிப்பை அடக்கவும் முடியவில்லை. சிறிது நேரத்தில் இரைச்சல் நின்றது. மல்லன் சென்றுவிட்டான்.
“மறுநாள் காலை, கோமகளின் கைவளையை எடுத்துக் கொண்டு அடகுக் கடைக்கு சென்றேன். கிடைத்த பணத்தில் என் நாயகிக்கு நல்ல உடையும் உள்ளாடைகளும் சப்பாத்துக்களும் வாங்கி வந்தேன். உடைகள் அவளுக்கு பொருந்தவில்லை, சப்பாத்துக்களும் தான், இருந்தாலும் அப்போதைக்கு உடனடியாக ஒரு டாக்சியை பிடித்துவிட்டால் போதும் – அது நடப்பதற்கு படியிறங்குகையில் அவளது காதலன் வழிமறிக்காமல் இருக்க வேண்டும். ஆனால் இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், அன்றிரவு மறைந்தவன் அதன்பிறகு மீண்டும் தென்படவேயில்லை.
“கிளம்புவதற்கு முன், என்னை முத்தமிட்டு தொலைபேசியில் அழைக்குமாறு அவசரமாக சொல்லிவிட்டுப் போனாள். ஆனால் நான் அந்த அளவுக்கு முட்டாள் இல்லை. தல்மூதில் சொல்லப்பட்டிருப்பது போல, ‘அதிசயங்கள் ஒவ்வொரு நாளும் நடப்பதில்லை’
எனக்கு இந்த முதிய வயதில் விரும்பியதை ஆற்ற முடியாமல் அலைகழிக்கச் செய்யும் அதேவகையான உணர்வுகளால் தான் காஃப்காவும் தன் இளவயதில் அலைகழிக்கப்பட்டார். உடலுறவு முதல் எழுத்து வரை அவர் ஈடுபட்ட அனைத்திலும் அவை தடையாக வந்து நின்றன. அவர் காதலுக்காக ஏங்கினார், உடனே அதிலிருந்து தப்பி ஓடவும் செய்தார். ஒரு வரி எழுதி முடித்தவுடன் அதை அடித்தார். ஓட்டோ வீனிங்கரும் அப்படித்தான் இருந்தார், மேதமையும் பித்தும் கொண்டவர். அவரை வியன்னாவில் சந்தித்தேன், சொலவடைகளும் பழமொழிகளுமாக உதிர்த்துக் கொண்டிருந்தார். அவரின் ஒரு கூற்றை என்றைக்கும் நான் மறக்கமாட்டேன்: ‘கடவுள் மூட்டைபூச்சிகளை படைக்கவில்லை.’ இவ்வார்த்தகளை புரிந்துகொள்ள உண்மையில் நீ வியன்னா செல்ல வேண்டும். இருந்தாலும் மூட்டைப்பூச்சிகளை யார்தான் படைத்தது?
“ஆ, அப்புறம் பாம்பெர்க்! அரைக்கால் சட்டையுடன் சாய்ந்து சாய்ந்து அவர் நடப்பதை பார்க்க வேண்டுமே, கல்லறையில் உறங்க மறுக்கும் பிணம் அவர். துயில்கொள்ளாத பேய்கள் எல்லாம் சேர்ந்து ஒரு சங்கம் ஆரம்பிக்கலாம், நல்ல யோசனையாக இருக்கும். அவர் ஏன் இரவு முழுக்க உழல்கிறார்? காபரே ஆடுபவதில் அவர் என்னதான் அடைகிறார்? பல வருடங்களுக்கு முன்பு நாங்கள் பெர்லினில் இருக்கும் போதே மருத்துவர்கள் அவரை கைவிரித்து விட்டனர். அது எவ்வகையிலும் அவரை கட்டுப்படுத்தவில்லை. ரோமானிசெஸ் கஃபேயில் விடியற்காலை நான்கு மணிவரை அமர்ந்திருப்பதையோ, விலைமாதுக்களிடம் அரட்டை அடிப்பதையோ அவர் நிறுத்திக் கொள்ளவில்லை. ஒருமுறை நடிகர் கிரானட் தன் வீட்டில் முழுமையான களியாட்டத்துடன் கூடிய ஒரு பார்ட்டி அறிவித்திருந்தார், அதில் பலருடன் சேர்த்து பாம்பெர்க்கையும் அழைத்திருந்தார். வருகிற ஒவ்வொரு ஆணும் தன்னுடன் ஒரு பெண்ணை அழைத்து வரவேண்டும் என கிரானட் அறிவுறுத்தியிருந்தார், மனைவி அல்லது தோழியாக இருக்கலாம். ஆனால் பாம்பெர்க்கிற்கு மனைவியோ காதலியோ இல்லாததால் பணம் கொடுத்து ஒரு விலைமாதுவை கூட்டிவந்து விட்டார். பார்ட்டியின் பொருட்டு அவளுக்கு பிரத்யேக மாலைநேர உடையும் வாங்கித்தர வேண்டியிருந்தது. அழைக்கப்பட்ட கூட்டத்தில் எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், தத்துவவாதிகள் மற்றும் வழக்கமான அறிவுஜீவிகள் என பெரும் நிரையே உண்டு. அனைவரும் பாம்பெர்க்கை போலவே யோசித்திருந்தனர், விலைமாதுக்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டிருந்தனர். நானும் அங்கிருந்தேன். நீண்ட நாட்களுக்கு முன் எனக்கு அறிமுகமான பிராகா நகரைச் சேர்ந்த ஒரு நடிகையை கூட்டிச் சென்றிருந்தேன். உனக்கு கிரானட்டை தெரியுமல்லவா? சரியான காட்டுமிராண்டி. ஆற்றல்மிக்க காக்னாக் மதுவை தண்ணீரைப் போல குடித்துவிட்டு, பத்து முட்டைகள் இட்ட ஆம்லெட்டை சாப்பிடக் கூடியவர். விருந்தினர்கள் கூடத் துவங்கியதும் ஆடைகளை கழற்றி வீசிவிட்டு வேசிகளுடன் வரைமுறைகள் இல்லாமல் ஆடினார், எல்லாம் அறிவுலக விருந்தினர்களின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு. ஆரம்பத்தில் அறிவுஜீவிகள் நாற்காலிகளில் அமர்ந்து வெறுமனே நோக்கினர். கொஞ்ச நேரத்தில், உடலுறவைப் பற்றி பேச்சு ஆரம்பித்தது. ஷோபனோவர் இதைச் சொன்னார்.. நீட்சே அதைச் சொன்னார். நாம் மேதைகளாக நினைத்தவர்கள் அத்தனை அபத்தமாக நடந்து கொள்வதை அக்காட்சியை நேரில் பார்க்காதவர்களுக்கு புரியவைக்க முடியாது. இதன் நடுவே பாம்பெர்க்கின் உடல்நலம் முழுமையாக குலைந்துவிட்டது. உடல் வெளிறிப்போய் குப்பென வியர்த்தது. என்னிடம் சொன்னார், ‘ஜாக், என் கதை முடிந்தது. இறப்பதற்கு நல்ல இடம்.’ அவருக்கு சிறுநீரகத்திலோ அல்லது பித்தப்பையிலோ பாதிப்பு ஏற்பட்டிருந்தது. ஒருவழியாக அவரை நான் சுமந்து வந்து மருத்துவமனையில் சேர்த்தேன். சரி அதெல்லாம் இருக்கட்டும், ஒரு ஸ்லாட்டி நாணயம் கிடைக்குமா?”
“இரண்டு.”
“என்ன! போல்ஸ்கி வங்கியை கொள்ளையடித்து விட்டாயா?”
“என் கதை ஒன்றை விற்றேன்.”
“வாழ்த்துக்கள். நாம் இன்று இரவு சேர்ந்து சாப்பிடுவோம். நீ என் விருந்தாளி.”
||
நாங்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, பாம்பெர்க் எங்கள் மேசைக்கு வந்தார். குள்ளமானவர், காசநோயாளியைப் போல் மெலிந்திருந்தார், முழங்கால்கள் வெளிப்புறமாக வளைந்து கொஞ்சம் குனிந்திருப்பதுபோல் தோற்றமளிபபார். உயர்ரக தோல் சப்பாத்துக்களும் காலுறைகளும் அணிந்திருந்தார். அவரது கூம்பு வடிவ மண்டையில் கொஞ்சம் சாம்பல்நிற முடி மீதமிருந்தது. ஒரு விழி மற்றொன்றைக் காட்டிலும் பெரிதாக நன்றாக சிவந்து, வீங்கிப்போய், தன் பார்வையாலேயே அச்சுறுத்தும் வகையில் இருந்தது. சதைப்பற்றில்லாத தன் சிறிய கைகளை எங்கள் மேசையில் ஊன்றி கொக்கரிக்கும் குரலில் சொன்னார், “ஜாக், நேற்று உன் காஃப்காவின் கோட்டை (Castle) வாசித்தேன். நன்றாக இருந்தது, மிகவும் நன்றாக, ஆனால் அவர் எதை நோக்கி செல்கிறார்? கனவு இத்தனை நீண்டதாக இருக்க முடியாது. கருத்துருவகங்கள் சுருக்கமாக இருக்க வேண்டும்.”
ஜாக் கோன் தான் மென்று கொண்டிருந்த உணவை அவசரமாக விழுங்கிவிட்டு அவரிடம் “அமருங்கள்” என்றார். “ஒரு மேதை விதிகளை பின்பற்ற வேண்டும் என்பதில்லை.”
“சில விதிகளை மேதைகளும் பின்பற்ற வேண்டும். போரும் அமைதியும் விட எந்த நாவலும் நீளமாக இருக்கலாகாது. போரும் அமைதியுமே கூட கொஞ்சம் நீளம் தான். பைபிளில் மட்டும் பதினெட்டு தொகுதிகள் இருந்திருந்தால் எப்போதோ அது மறக்கப்பட்டிருக்கும்.”
“தல்மூதில் முப்பத்தி ஆறு தொகுதிகள் உள்ளன, யூதர்கள் அதை மறக்கவில்லை.”
“யூதர்கள் தேவைக்கு அதிகமாக நினைவில் வைத்துக் கொள்கிறோம். அது நம் சாபக்கேடு. நாம் நம் புனித நிலத்திலிருந்து துரத்தியடிக்கப்பட்டு ரெண்டாயிரம் ஆண்டுகள் ஆகின்றன, இப்போதும் திரும்பப் போக முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். சுத்த பைத்தியக்காரத்தனம், இல்லையா? இலக்கியத்தில் மட்டும் இந்த பைத்தியக்காரத்தனம் பிரதிபலித்திருந்தால் நன்றாக இருக்கும். ஆனால் நமது இலக்கியமோ அநியாயத்திற்கு விவேகத்துடன் உள்ளது. சரி, இப்போதைக்கு போதும்.”
பாம்பெர்க் எழுந்து நின்று தன்னை நிமிர்த்திக் கொண்டார், வலியில் முகம் சுளித்தது. குறுகிய காலடிகளுடன் மேசையை விட்டு நகர்ந்து கிராமபோன் அருகே சென்று நடனத்திற்கான இசையை ஒலிக்கவிட்டார். வருடக்கணக்கில் அவர் ஒரு வார்த்தையும் எழுதியதில்லை என்பது எழுத்தாளர் சங்கத்தில் உள்ள அனைவருக்கும் தெரியும். இம்முதிய வயதில் அவர் தன் நண்பர் டாக்டர் மிட்ஸ்கின் இன் கொள்கையால் ஈர்க்கப்பட்டு நடனம் கற்றுக்கொண்டு இருக்கிறார். மிட்ஸ்கின் எழுதிய புத்தகம் தி எண்ட்ரோப்பி ஆஃப் ரீஸன். அப்புத்தகத்தில் அவர் மனித அறிவாற்றல் தோல்வியடைந்து விட்டது என்றும் உணர்ச்சிகரத்தால் மட்டுமே உண்மையான ஞானத்தை அடைய முடியும் என்றும் நிரூபிக்க முயன்றிருப்பார்.
ஜாக் கோன் மறுக்கும் விதமாக தலையசைத்தார். “வெற்று இருப்பு. காஃப்கா இன்னொரு பாம்பெர்க்காக ஆகிவிட பயந்தார், அதனால்தான் அவர் தன்னைத்தானே அழித்துக் கொண்டார்.”
“மீண்டும் எப்போதாவது கோமகள் உங்களை அழைத்தாளா?” நான் கேட்டேன்.
ஜாக் கோன் பாக்கெட்டிலிருந்து தன் ஒற்றைக்கண் கண்ணாடியை எடுத்து மாட்டினார். “அவள் அழைத்தால் மட்டும் என்ன? என் வாழ்க்கையில் எல்லாமே சொற்களாக ஆகிக் கொண்டு வருகின்றன. வெறும் பேச்சு, பேச்சு. உண்மையில் டாக்டர் மிட்ஸ்கினின் கொள்கை இது, மனிதன் சொற்களின் இயந்திரமாக ஆகிவிடுவான் என்றார். அவன் சொற்களையே உணவாகக் கொள்வான், சொற்களையே அருந்துவான், அவற்றைப் பிணைத்துக் கொள்வான், சொற்களின் நஞ்சால் தன்னை நிறைத்துக் கொள்வான். டாக்டர் மிட்ஸ்கினும் கிரானட்டின் பார்ட்டியில் இருந்தார், நாம் இதுகுறித்து யோசிக்கலாம். அவர் வெறுமனே தி எண்ட்ரோப்பி ஆஃப் ரீஸன் எழுதியதோடு நின்றிருக்கலாம், ஆனால் அவர் தான் உபதேசித்ததை செயல்படுத்த வந்திருந்தார். ஆமாம், கோமகள் அவ்வப்போது அழைத்துக் கொண்டுதான் இருக்கிறாள். அவளும் கூட ஒரு அறிவுஜீவிதான், ஆனால் அதற்கான அறிவாற்றல் மட்டும் இல்லை. உண்மையைச் சொல்ல வேண்டுமானால், பெண்கள் தங்களால் இயன்றவரை தங்கள் உடலின் நளினத்தை வெளிப்படுத்த முயன்றாலும் அவர்களுக்கு அறிவுலகைப் பற்றி எந்தளவு தெரியுமோ உடலுறவைக் குறித்தும் அந்தளவு குறைவாகவேத் தெரியும்.
“மேடம் சில்ஷிக்கை எடுத்துக் கொள். அவளிடம் என்னதான் இருந்தது, உடலைத் தவிர? அவளிடம் உண்மையில் உடலைப் பற்றி கேட்டுப் பார். இப்போது அழகற்றவளாகிவிட்டாள். நடிகையாக இருந்த பிராகா நாட்களில், அவளிடம் ஏதோ மீதமிருந்தது. அப்போது நான் தான் மைய பாத்திரம். அவளிடம் சிறிய அளவில் திறமை இருந்தது. கொஞ்சம் காசு பார்க்க நாங்கள் பிராகா நகருக்கு வந்துசேர்ந்த போது அங்கு எங்களுக்காக ஒரு மேதை காத்திருப்பதைக் கண்டோம், சுயவதையின் உச்ச நிலையில் ஒரு மனித மாதிரி. காஃப்கா யூதராக இருக்க விரும்பினார், ஆனால் எப்படி இருப்பது எனத் தெரியவில்லை. அவர் வாழ ஆசைப்பட்டார், அதுவும் அவருக்குத் தெரியவில்லை. நான் அவரிடம் ஒருமுறை சொன்னேன், ‘ஃபிரான்ஸ், நீ ஓர் இளைஞன். நாங்கள் எல்லோரும் என்ன செய்கிறோமோ அதையே நீயும் செய்.’ பிராகாவில் எனக்குத் தெரிந்த சகோதரன் ஒருவன் இருந்தான், காஃப்காவை ஒருவாறு சம்மதிக்க வைத்து அவனிடம் அழைத்து சென்றேன். காஃப்கா இன்னமும் தன் கன்னித்தன்மையை இழந்திருக்கவில்லை. அவருக்கு நிச்சயமாகியிருந்த பெண் குறித்து ஒன்றும் சொல்வதற்கில்லை. அவர் நடுத்தர வர்க்க மதிப்பீடுகளின் குட்டையில் மூழ்கி திணறிக்கொண்டிருந்தார். அவரது வட்டத்தில் இருந்த யூதர்களின் ஒரே லட்சியம் – யூதரல்லாத புற இனத்தவராகிவிடுவது, அதுவும் செக் குடியாக அல்ல ஜெர்மன் குடியாக ஆவது. சுருக்கமாக சொல்வதானால், பேசிப் பேசி அவரை மீறல்களின் உலகிற்குள் கூட்டிச் சென்றேன். பழைய சேரிப்பகுதியில் அமைந்த இருட்டான குறுகிய சந்து வழியாகச் சென்றோம், விபச்சார விடுதி அங்குதான் செயல்பட்டது. வளைந்து செல்லும் படிகளின் வழியே மேலே போனோம். நான் கதவை திறந்ததும் எங்களுக்காகவே தயாரான அரங்கம் போல் காட்சியளித்தது: வேசிகள், மாமாக்கள், வந்திருப்பவர்கள், நிர்வகிக்கும் மேடம். அத்தருணத்தை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். காஃப்கா நடுங்கத் தொடங்கினார், என் கையைப் பிடித்தார். அதன்பிறகு பின்னால் திரும்பி வேகமாக ஓடி மாடிப்படிகளில் இறங்கினார், அந்த வேகத்தில் காலை உடைத்துக் கொள்வார் என்கிற எண்ணமே என் மனதில் ஓடியது. வீதியை அடைந்ததும் ஒரு பள்ளிச் சிறுவனைப் போல நின்றுகொண்டு வாந்தியெடுத்தார். திரும்பி வரும் வழியில் நாங்கள் ஒரு பழைய வழிபாட்டுக் கூடத்தை கடந்து வந்தோம், உடனே காஃப்கா களிமண்ணால் மனித உருவில் செய்யப்பட்டு மாயத்தால் உயிரூட்டப்படும் கோலெம் (Golem) ஐ பற்றி பேசத் துவங்கினார். காஃப்கவுக்கு அதிலெல்லாம் நம்பிக்கை இருந்தது, எதிர்காலத்திலும் அவ்வாறு இன்னொன்று நிகழலாம். களிமண் துண்டை உயிருள்ளதாக மாற்ற ஏதேனும் மாயச் சொற்கள் இருக்க வேண்டும். கபாலாவின் கதைப்படி புனித சொற்களை உச்சரித்து தானே கடவுள் உலகை படைத்தார்? ஆதியில் சொற்கள் மட்டுமே இருந்தன.
“ஆம், மொத்தமாக இதுவொரு பெரிய சதுரங்க ஆட்டம். வாழ்நாள் முழுக்க நான் சாவை அஞ்சினேன், ஆனால் இப்போது கல்லறையின் விளிம்பில் நிற்கையில் பயம் தோன்றவில்லை. என் எதிராளி ஆட்டத்தை நிதானமாக ஆட விழைகிறார் என்பது தெளிவு. என் காய்களை ஒவ்வொன்றாக அவர் நீக்கட்டும். முதலில் நடிகனாக என் ஆட்டத்தை வீழ்த்தி எழுத்தாளராக மாற்றினார். எழுத்தாளராக ஆன வேகத்திலேயே கையில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு என்னை எழுதமுடியாமல் ஆனது. அவரின் அடுத்த நகர்வில் என் வீரியத்தை பறித்துக் கொண்டு மலடாக்கினார். இருந்தாலும் இறுதி நகர்வுக்கு இன்னும் வெகுதூரம் இருப்பதை உணர்கிறேன், என்னை தைரியம் கொள்ள செய்வதும் அதுவே. என் அறை குளிர்கிறது, குளிராகவே இருக்கட்டும். என்னிடம் இரவுணவு இல்லை, அதனால் ஒன்றும் செத்துவிட மாட்டேன். அவர் எனக்கு எதிராக காய் நகர்த்த நான் அவருக்கு எதிராக நகர்த்துகிறேன். கொஞ்ச காலம் முன் இரவில் ஒருநாள் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தேன். வீதியில் எங்கும் பனிப்படலம் படர்ந்திருந்தது, வீட்டுச்சாவியை எங்கோ தொலைத்துவிட்டேன் என்பதை சட்டென உணர்ந்தேன். வாயிற்காவலாளியை எழுப்பி கேட்டதில் அவரிடமும் மாற்று சாவி இல்லை. அவரிடம் கடுமையாக வோட்கா நெடி வீச, அவரது நாய் என் காலை கடித்து வைத்தது. பழைய நாட்களாக இருந்தால் எதிர்த்து போராடி இருப்பேன், ஆனால் தற்போது என் எதிராளியிடம் இப்படிச் சொல்லவே விரும்பினேன், ‘எனக்கு நிமோனியா வர நீ ஆசைப்பட்டால், அப்படியே ஆகட்டும்.’ அங்கிருந்து கிளம்பி வியன்னா ரயில் நிலையம் செல்ல முடிவெடுத்தேன். கிட்டத்தட்ட காற்றே என்னை அடித்துக் கொண்டு சென்றது. இரவின் அந்த நேரத்தில் முக்கால் மணி நேரமாவது வாடகைக் காருக்காக காத்திருக்க வேண்டியிருந்தது. நடிகர்கள் சங்க கட்டத்தை கடக்கும் போது ஒரு ஜன்னலில் விளக்கெரிவதைக் கண்டேன். உள்ளே போக முடிவு செய்தேன். ஒருவேளை அங்கு இரவை கழிக்க முடியலாம். படியேறுகையில் என் காலனியில் ஏதோ தட்டுப்பட்டு சலசலத்தது. கீழே குனிந்து எடுத்துப் பார்த்ததில் அதுவொரு சாவி. என்னுடையது தான்! எங்கிருந்தோ வந்து இக்கட்டிடத்தில் இருட்டான மாடிப்படியில் சாவியை சாவியை கண்டெடுப்பது என்பது கோடியில் ஒரு வாய்ப்பு, ஆனால் என் எதிராளி அவர் தயாராவதற்குள் நான் ஆட்டத்தை கைவிட்டுவிடுவேன் என பயந்திருப்பார் போலும். விதி என்று சொல்வதா? உனக்கு அப்படித் தோன்றினால் அவ்வாறே அழைத்துக் கொள்.”
ஜாக் கோன் ஒரு தொலைபேசி அழைப்பை மேற்கொள்ள எழுந்து சென்றார். நான் அங்கு அமர்ந்து பாம்பெர்க் ஓர் இலக்கிய பெண்மணியுடன் தன் நடுங்கும் கால்களுடன் நடனம் ஆடுவதைப் பார்த்தேன். அவரின் கண்கள் மூடியிருக்க அவள் மீது சரிந்து அவளின் மார்பில் தலை சாய்த்திருந்தார், அவை தலையணை என்பதுபோல. அவர் உறங்கிக் கொண்டே நடனம் ஆடுவதுபோல் தெரிந்தது. ஜாக் நீண்ட நேரம் எடுத்துக் கொண்டார், வழக்கமாக தொலைபேசி அழைப்புக்கு எடுக்கும் நேரத்தை விட அது அதிகம். திரும்பி வருகையில் அவரது ஒற்றைக்கண் கண்ணாடி ஜொலித்தது. “பக்கத்து அறையில் யார் இருக்கிறார் என்று சொல் பார்க்கலாம்?” அவர் கேட்டார். “மேடம் சில்ஷிக்! காஃப்காவின் அருமைக் காதலி.”
“உண்மையாகவா?”
“அவளிடம் உன்னைப் பற்றி சொல்லியிருக்கிறேன். வா, நான் உன்னை அவளிடம் அறிமுகப்படுத்துகிறேன்.”
“வேண்டாம்.”
“ஏன்? காஃப்காவினால் காதலிக்கப்பட்ட பெண் சந்திக்க தகுதியானவள் அல்லவா.”
“எனக்கு ஆர்வமில்லை.”
“நீ வெட்கப்படுகிறாய், உண்மை அதுதான். காஃப்காவும் வெட்கப்படுவார் – ஒரு மரபார்ந்த யேஷிவா மாணவனைப் போல. நான் எப்போதுமே வெட்கப்பட்தில்லை, ஒருவேளை பொருட்படுத்தும்படி எதுவாகவும் நான் ஆகாததற்கு அதுவும் காரணமாக இருக்கலாம். என் அருமை நண்பா, எனக்கு இன்னும் இருபது காசுகள் வேண்டும். இந்தக் கட்டிடத்தில் உள்ள வாயிற்காவலருக்கு பத்து, என் குடியிருப்பில் உள்ளவருக்கு பத்து. அந்தப் பணம் இல்லாமல் என்னால் வீட்டிற்கு போக முடியாது.”
நான் என் பாக்கெட்டில் கைவிட்டு கைக்கு சிக்கிய சில்லறையை அவரிடம் கொடுத்தேன்.
“இவ்வளவா? நிச்சயம் நீ இன்று வங்கியை கொள்ளையடித்திருக்க வேண்டும். நாற்பத்தி ஆறு காசுகள்! அடடா! சரி, கடவுள் இருந்தால், உன்னை அவர் ஆசீர்வதிக்கட்டும். அவர் இல்லையெனில், ஜாக் கோனிடம் இத்தனை விளையாட்டுகளையும் ஆடுவது வேறு யார்?”
***

டி.ஏ. பாரி
டி.ஏ.பாரிஇலக்கிய வாசகர், மொழிபெயர்ப்பாளர். ஈரோட்டில் வசிக்கிறார். ஆங்கில சிறுகதைகளை, பிரதானமாக ஐசக் பாஷாவிஸ் சிங்கரின் கதைகளை மொழியாக்கம் செய்திருக்கிறார்.
எழுத்தாளர் செங்கதிர் இந்தக் கதையை தமிழினிக்காக மொழிபெயர்த்ததாக ஞாபகம். நல்லதொரு வாசிப்பு அனுபவம்