/

கவிதைக்கு வெளியே நடந்த சில வரிகள் – கல்பற்றா நாராயணன்

தமிழில்- அழகிய மணவாளன்

சில கவிதை வரிகள் அந்தந்த கவிதைகளுக்கு வெளியேயும் பயணிக்கும் ஆற்றல் கொண்டவை. சொல்லப்போனால் கவிதைக்கு வெளியே அவற்றின் உயிர்த்துடிப்பு இன்னும் அதிகம். மேற்கோளுக்கு (” “) உள்ளே அவை மேலும் சுதந்திரமானவையாக ஆகிவிடுகின்றன. கவிதையில் உள்ள எதுவும் அந்தந்த இடத்தில் அமையவேண்டியவை அல்ல என்பதை அவை அறிந்திருக்கின்றன. பூந்தானம் நம்பூதிரியின் ” எந்த இடையீடும் இல்லாமல் எல்லோரும் மகிழ்ந்திருக்கிறார்கள். எப்படி எனக்கு மட்டும் தவறியது?”, ” நடுவே சந்தித்துப்பிரியும் இந்த பொழுதில் நாம் ஏன் இப்படி போட்டியிட்டுக்கொள்கிறோம்?”, நாலாப்பாடு நாராயணமேனோனின் மர்த்யன்1 தன் பிணத்தை தானே மிதித்துசெல்வது எந்த உயரத்திற்கு?”  பாலாமணி அம்மாவின் “ இறந்தவர்களை நினைத்து குற்றவுணர்வு அடையாத யாராவது ஒரு நபரை சொல்லமுடியுமா?” குமாரன் ஆசானின் ” இருளும் மெல்ல ஒளியாய் வரும்” ஆற்றூர் ரவிவர்மாவின் ” என்றும் கடல்கொள்ளும் பிறவியின் மணற்திட்டில் நான்” அய்யப்ப பணிக்கரின் ”என்னால்  பூக்காமலிருக்க முடியவில்லை” கே.ஜி.சங்கரப்பிள்ளை ” சமரசங்களின் குழைதல்களின் பச்சைவிறகின் மீது ஆயுள்முழுக்க நீள்கிறது  நம்  சவஅடக்கம்”. இவை உடனடியாக  நினைவுக்கு வரும் வரிகள்.  இந்த கவிதைவரிகளை கொண்ட கவிதைகளை வாசித்து முடிக்கலாம், ஆனால் இந்த குறிப்பிட்ட வரிகளை வாசித்து தீர்க்கமுடியாது. தன் தேடலில் தான் சென்றுசேர்ந்துவிடமுடியும் என்று கவிஞன் எதிர்பார்த்திராத, ஒருவேளை அவனின் தேடலுக்கான ஆற்றலை அளித்தவை அந்த வரிகள். தன்னுடைய சுயம் இதுதான் என்று இந்த வரிகளை எழுதிய பிறகுதான் அவன் கண்டுபிடிக்கிறான். அந்த கவிதை வரிகளை எழுதி முடித்ததும் முடிவிலியில் காலடி எடுத்துவைத்துவிட்டோம் என்பதை அவன் உணர்ந்திருப்பானா? இம்மாதிரியான வரிகளை எழுதியது அந்த கவிதைகளில் உள்ள மற்ற வரிகளை எழுதிய கவித்தன்னிலை அல்ல. இவை அசாதாரணமாக  ஆவது அந்த கவிதை எழுதப்பட்ட பின்னணியுடன் அந்த வரி துல்லியமாக பொருந்திப்போவதால் அல்ல, பிற சந்தர்ப்பத்திலும்  அந்த வரி அந்த புதிய சந்தர்ப்பத்திற்காகவே எழுதப்பட்டது என்பதுபோல கச்சிதமாக பொருந்துகிறது என்பதால்தான்.

அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரி எழுதிய  “ இருபதாம் நூற்றாண்டின் இதிகாசம்” என்ற காவியத்தைவிட அதில் உள்ள “ தம்பி! ஒளி துயரம் நிறைந்தது. இருட்டுதான் ஆசுவாசத்தை தருவது” என்ற வரி புகழ்பெற்றது.  அந்த காவியத்திற்குள் அந்த வரி எந்த பின்னணியில் சொல்லப்படுகிறது என்பதை முதலில் குறிப்பிடுகிறேன். புதிய தலைமுறையை சேர்ந்த இளைஞனிடம் ஒளியால் ஈர்க்கப்பட்டு நெருப்பில் விழுந்து இறக்கும் ஈக்களை சுட்டுக்காட்டி கவிஞன் இந்த வரியை சொல்கிறான். ஒளி துயரமானது, இருட்டுதான் ஆசுவாசம் தருவது என்பது ஒருவகையான பச்சாதாபம் போல சொல்லப்படுகிறது. கம்யூனிசத்தின் வெளிச்சத்தால் தூண்டப்பட்டு புரட்சி என்ற தீயில் விழுந்து சிறகுகள் கரிந்த ஒரு தோழரின் பச்சாதாபத்தையும் இந்த காவியம் விவரிக்கிறது. ஈக்கள் நெருப்பில் விழுவது மிக யதார்த்தமான எந்த உணர்ச்சிகரமும் இல்லாத செய்திக்குறிப்பு போல விவரிப்படுகிறது. ஆனால் இந்த காவியத்தின் பேசுபொருளான கம்யூனிச இயக்கம், மானுட மீட்பு என்ற பின்னணியில் ஒளியால் ஈர்க்கப்பட்டு நெருப்பில் விழும் ஈக்கள் பெரிய முரண்நகை கொண்ட சித்திரமாக ஆகிவிடுகிறது.

இந்த காவியம் பல காண்டங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. நரக காண்டத்தில் நரகத்திலிருந்து மீட்பளிக்கும் ஒன்றாக, இருட்டிலிருந்து காப்பாற்றும் ஒளியாக கம்யூனிசம் அறிமுகப்படுத்தப்படுகிறது. ஆனால் கம்யூனிசம் வழியாக நரகத்திலிருந்து மீள்வதாக பிழையாக எண்ணிக்கொண்டு நரகத்தைவிட இன்னும் மோசமான நிலைக்கு  இன்னும் பாதாளத்திற்கு சென்றுகொண்டிருக்கிறோமோ என கம்யூனிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த கவிதைசொல்லி ஆழமான சந்தேகத்தை அடைகிறான். எந்த அதிகாரத்தை எதிர்ப்பதற்காக கம்யூனிசம் உருவானதோ (அதற்கு அவர்களுக்கு வரலாற்றின் துணையும் இருந்தது) அதே அதிகாரத்தின் இரக்கமின்மையை கொண்டவர்களாக கம்யூனிஸ்டுகளும் ஆகிவிட்டார்களா? ‘நாம்’ என்று சொல்லி ஒருங்கிணைந்தவர்கள் அதிகாரம்கொண்ட பிறிதொரு ‘நாங்கள்’ என்பதாக உருமாறிவிட்டார்கள். பூர்ஷுவாக்களின்  கருணையற்ற எதிரிகள் என்பது மட்டுமாக ஆனது அவர்களின் இருப்பு.

நம்முடன் இணங்காத

நாம் அல்லாதவர்களும்

எந்த தரப்பிலும் இல்லாத

நாம் அல்லாதவர்களும்

மனிதர்கள் அல்ல

மிருகமும் அல்ல

மரம்செடிகொடியும் அல்ல

ஒருகட்டத்தில் பிறர் மீதான வன்மம்தான் இயக்கத்தை செலுத்தும் ஒரேயாக விசை ஆகிறது. வெறுப்பே தூய வழியாக அங்கீகரிக்கப்படுகிறது. கவிதைசொல்லி கடைசியில் கண்டடைகிறான் ‘ உலகமே, பழிக்குப்பழி என்ற பெரும்தொற்றை சுமந்து அலையும் மனநோய் கொண்டவர்கள் நிம்மதியை துளியும் அளிப்பதில்லை’. ஒருவழியாக இயக்கத்தில் இருந்த கவிதைசொல்லி பிறன் மீதான வெறுப்பு என்ற நெருப்பிலிருந்து  முழுமையாக விழித்தெழுகிறான். பகை அல்ல, எந்த நிபந்தனைகளும் இல்லாத அன்பே உறுதியாக துணைவரும் என்பதை கண்டடைகிறான். அந்த காவியத்தின் கடைசிவரிகள் இப்படி முடிகின்றன

” ஒரு துளி கண்ணீரை பிறருக்காக சிந்தும்போது என் ஆன்மாவில் ஆயிரம் சூரியமண்டலங்கள் உதிக்கின்றன, ஒரு சிறு புன்னகையை பிறருக்கு அளித்ததும் என் நெஞ்சில் களங்கமற்ற, தேயாத பௌர்மணி நிலவு உதிக்கிறது”.  ’பிறன்’ மீதான வெறுப்பின் உச்சத்திலிருந்து,  மனிதத்தன்மை இல்லாத, எதிர் அரசியலில் இருட்டிலிருந்து விடுபட்ட கதைசொல்லி அந்த விடுதலையுணர்வை ” இத்தனை காலமும் இந்த தூய மயிர்கூச்செறியும் அனுபவத்தை அறிந்திருக்கவில்லை” என்று எண்ணி அழ ஆரம்பிக்கிறான்.

இந்த காவியத்தை வாசித்தவுடன் இதை எழுதிய அக்கித்தம் நம்பூதிரி அரை உண்மைகளிலிருந்து மிகையாக கற்பனை செய்திருக்கிறார் என்று வாசகன் எண்ணலாம். கம்யூனிசம் கேரள சமூகத்தில் ஏற்படுத்திய நேர்மறையான மாற்றங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. சமத்துவமின்மையோ, வறுமையோ, சுரண்டலோ கடவுளின் விருப்பத்தால் அல்ல, மனிதன்தான் அவற்றை உருவாக்கினான் என்ற அறிதலை மலையாளியின் ஆழ்மனதிலேயே  உருவாக்கியது கம்யூனிசம்தான். கம்யூனிசம் ’நாளை’ என்ற நம்பிக்கையூட்டும் கற்பனையை அளித்தது. சமத்துவமும் அழகும்கொண்ட உலகம் கந்தர்வலோகம் போல கண்முன்னே தோன்றியது. எல்லோரையும் அணைக்கும் இன்னும் விரிந்த உலகம் மிக அருகிலேயே உள்ளது, நாம் அதை நோக்கி நடந்துகொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் பலருக்கு உருவானது. தொழிலாளிகள் கௌவரமானவர்களாக ஆனார்கள், சேரமுடியாதவர்கள் இணைந்தார்கள், ஜனநாயகத்தின் வழியில் அப்படியே குடும்பஸ்ரீ என்ற மகளிர் குழுக்கள் வந்துவிட்டது. இதையெல்லாம்  வெறும் பிறன் மீதான வெறுப்பால் உருவாக்கப்பட்டது என்று சொல்லிவிட முடியாது.

இந்த சமூகவியல் நோக்கிலான விமர்சனங்கள் ஒருபுறம் இருக்கட்டும். அதைவிட இந்த காவியத்தின் கலாபூர்வமான பலவீனங்களை ஆராய வேண்டும். அக்கித்தம் எழுதிய இந்த காவியத்தில் சித்தரிக்கப்படும் கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள பிறர் மீதான வெறுப்பு (அது அரை உண்மையென்றாலும் உண்மைதான்) பல்வேறுவகையில் உலகமெங்கும் நிறைந்துள்ள பிறன் வெறுப்பை பிரதிநிதித்துவப்படுத்துவதாக உயர்ந்திருந்தால் இந்த காவியம் இது எழுதப்பட்ட காலத்திற்கு அப்பால் இன்றும் பொருத்தமுள்ளதாக இருந்திருக்கும். ஆனால் அந்த காவியத்தால் அது இயலவில்லை. அந்த காவியத்தால் முடியாததை அதில் உள்ள  “ தம்பி! ஒளி துயரம் நிறைந்தது. ஆசுவாசம் தருவது இருட்டுதான்”  என்ற வரியால் செய்யமுடிந்திருக்கிறது. எந்த ஒளியெல்லாம் இணைந்து கம்யூனிசம் உருவானதோ, அந்த ஒளி இந்த காவியத்தில் பரிசோதிக்கப்படுகிறது. அந்த  பரிசோதனை முடிவுதான் இந்த வரி. இந்த காவியத்தைவிட ஆழமும் செறிவும் இந்த வரிக்கு உண்டு.

சமூகத்தின் குழந்தைபருவத்திலும் தனிமனிதனின் பால்யகாலத்திலும் மனிதன் பைபிள் குறிப்பிடும் சொர்க்கத்தில் (paradise) இருந்தான். முன்பு மலர்வனமாக இருந்த, விவசாயத்திற்காக வெட்டி பண்படுத்தாத பூமிதான் சொர்க்கம்(paradise). நாம் மலர்வனத்தை பேணும்போது நாம் உணரும் நிறைவு தொல்மனிதன் அனுபவித்ததாக இருக்கலாம். நம் இலக்கியங்களில் ஆனந்தத்திற்கான உவமையாக மலர்வனம் குறிப்பிடப்பட்டது. உண்ணாயி வாரியார் எழுதிய நளசரிதம் ஆட்டக்கதையில் காமம் என்ற அனுபவத்தை  ‘நிகரற்ற மலர்வனம்’ என்கிறாள் தமயந்தி.

அக்கித்தத்தின் இந்த காவியத்திலும் கவிதைசொல்லி ” எனக்கும் முழுமையான இன்பம் நிறைந்த நாட்கள் இருந்தன” என்கிறான்.  நம் நாட்களுக்கு தொல்பழங்காலம் அளவுக்கு பழமை இருக்கலாம், பல ஆயிரம் வருடப்பழமை. (தனிமனிதன் என்ற கருத்துரு பிரதானமாக இல்லாத காலத்தின் துயரமும் அந்த வரியில் உண்டு). அந்த சூழலிலேயே இன்றும் எந்த புகாரும் இல்லாமல் வாழும் மரம்செடிகொடி, மிருகம், பறவைகள்  அதே சொர்க்கத்தில்தான் இருக்கின்றன. பலவகையான விளிம்புகளில் வாழும் பழங்குடி மக்கள் அந்த சொர்க்கத்தை இழக்கவில்லை என்றும் சொல்லலாம். ’பாவத்தின் கனி’யை உண்டதால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டவன் மனிதன். அந்த கனியை ஞானம் என்றோ, அறிவியல் என்றோ, தர்க்கம் என்றோ சொல்லலாம். தொன்மங்களும், மூடநம்பிக்கைகளும் மனிதனுக்கு அளித்த பாதுகாப்புணர்வை வரலாற்றாலும் அறிவியலாலும் அளிக்கமுடியவில்லை. அவை மனிதனை மேலும் மேலும் பாதுகாப்பற்றவனாக மாற்றியிருக்கின்றன.

குமாரன் ஆசானின் வரி “ உலகம் உருண்டையானது என்பதை அறியும் பருவத்தை அடைந்தபோதுதான்  நான் சூரியக்கதிர்களின் கடுமையான வெம்மையை உணர ஆரம்பித்தேன்”. தொன்மங்களின் இடத்தை அறிவியல் கைப்பற்றியவுடன் சூரியன் சுட்டுப்பொசுக்க ஆரம்பித்துவிட்டது. ( சில நவீன சூரியன்களை ஒளிகுன்றிவிடாமல் காக்கும் வரலாறுகளும் ஒருவகையான தொன்மம்கள்தான்). பேய்மழையும், சூறாவளியும், இடிமின்னலும், சூரிய சந்திரனும் சகல நட்சத்திரங்களும்  மனிதத்தன்மைகொண்ட தெய்வங்களால் ஆளப்பட்ட நாளில் நாம் அனுபவித்த பாதுகாப்புணர்வு இன்று நம்மை விட்டு அகன்றுவிட்டது. ’ இரண்டு கால்களால் பூமியை கைவிட்டு எழுந்துநின்ற’ மனிதனின் பலவீனங்கள் அறிவு வளரும்தோறும் அதிகரித்தது. அறிவியல் பௌதிக இன்பங்களை நாளுக்குநாள் அதிகரித்தாலும் மனிதனின் நிம்மதியின்மை குறையவில்லை. எதிர்காலத்தில் அறிவியல் வளர்ச்சியடைந்து  மனிதன் இறப்பற்ற, அவன் விழைந்தால் மட்டும் மரணமடையலாம் என்னும் நிலையை அடையலாம். அப்போது அக்கித்தம் சொல்வதுபோல ” மரணத்தை இல்லாமலாக்கும் மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் என்றென்றைக்குமான சிறைவாசம் சாத்தியமாகும், இதைவிட வளர்ச்சி என்று எதை சொல்வது?  “  என்றே சொல்லமுடியும். “ தம்பி! ஒளி துயரம் நிறைந்தது. ஆசுவாசம் தருவது இருட்டுதான்” என்ற வரி காவியத்தில் அது வெளிப்பட்ட சந்தர்ப்பத்தைவிட அதற்கு வெளியே மேலும் அர்த்தபூர்வமானதாக ஆகிவிடுகிறது. இந்த வரி யாரை நோக்கி சொல்லப்படுகிறது?  தன் கைவிடப்பட்ட நிலையால் மீண்டும் குழந்தைபருவத்திற்கு திருப்பிய விழையும் மனிதனிடம்தான் அது சொல்லப்படுகிறது. கவிதைகளில் இடம்பெறும் வரிகள் அனைத்தும் குறிப்பான்கள்(signifier) என்றாலும் சில வரிகள் மேலும் அதிகமான குறியீட்டும் முக்கியத்துவம் கொண்ட அதிகுறிப்பான்களாக (excessive signifier) ஆகின்றன.   

அக்கித்தம் நம்பூதிரியின் கவிதைகளில் எப்போதுமே இதுபோன்ற அதிகபட்சமான குறியீட்டு சாத்தியங்களை கொண்ட வரிகள் உண்டு, அதுதான் அவரின் பலம். நான் அவரின் கவிதைகளில் உள்ள சில வரிகளை குறிப்பிடுகிறேன். நீங்கள் அந்த முழு கவிதைகளையும் வாசித்திருக்காவிட்டாலும் இந்த வரிகளின் சுதந்திரமான இருப்பை வாசிப்பில் உணரமுடியும்.

 ” என்னுடையவை அல்ல, இந்த கொம்பன் யானைகள்,        

   இந்த பெருங்கோவிலும் என்னுடையது அல்ல”

   ”நான் பச்சைமரமாக இருந்தபோது என்னால் அதை    செய்யமுடியவில்லை”    

  ”அறிவு உருவாகும்வரை இனி யாருக்கும் சிறகு முளைக்காமல் இருக்கட்டும்.”

   இதுபோன்ற வரிகள் வழியாகத்தான் அக்கித்தத்தின் கவியாளுமையை இன்னும் தெளிவாக உணரமுடிகிறது. இம்மாதிரியான வரிகளை உருவாக்கக்கூடிய ஆற்றால் அக்கித்தம் நம்புதிரியிடன் கவியாளுமையில் என்றுமே இருந்திருக்கிறது. அவரின் ”பலி தர்சனம்” என்ற நீள்கவிதை மகாபலியின் கதையை மறுஆக்கம் செய்கிறது.  அந்த கவிதையின் முடிவில் கவிஞனை பார்த்து அவன் மனைவி “ எப்படி நீங்கள் பொன் நிறமாக மாறிவிட்டீர்கள்?” என்று கேட்கிறாள். பழைய கதை ஒன்று நினைவுக்கு வந்ததால்தான் இந்த கேள்வியை அவள் கணவனிடம் கேட்கிறாள்.

அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரி

ஒருநாளைக்கு ஒருவேளை உணவை மட்டும் சாப்பிட முடிந்த, அதையே பழக்கப்படுத்திக்கொண்ட ஏழ்மையான ஒரு பிராமண குடும்பம். அன்றைய நாளுக்கான உணவுடன் அவர்கள் அமர்ந்திருந்தபோது பசியால் துடிக்கும் விருந்தாளி வருகிறார். அந்த விருந்தாளிக்கு கால்கழுவிவிட்டு அன்றைய உணவை அவருக்கு அளித்துவிட்டு அந்த குடும்பம் பட்டினி கிடக்கிறது. அவருக்கு கால்கழுவிய நீரில் ஒரு கீரி கடந்துபோகிறது. தியாகத்தால் விஷேஷமாக ஆன அந்த தண்ணீர் கீரியின் உடலில் பட்ட இடங்கள் பொன்நிறத்தில் ஜொலிக்க ஆரம்பிக்கிறது. தன் உடல்முழுக்க பொன்நிறமாக ஆகவேண்டும் என்ற விழைவில் ஒரு தடாகத்தை சென்றடைகிறது. மகாபாரதத்தில் யுதிஷ்டிரன் சூது விளையாடுவதற்கு முன் யாகசாலையை சேர்ந்த பிராமணர்களின் கால்கள் கழுவுகிறான்.  அந்த தடாகம் அந்த நீரால் உருவானது. அதில் பலமுறை புரண்டு எழுந்தும் பொன்நிறத்தை அடையாததால் கீறி நிராசை அடைகிறது. தியாகம் அல்லாத வேறு எது  பொன்நிறத்தை உருவாக்க முடியும். அனைத்தையும் துறந்த மகாபலியின் கதையை மறுபுனைவாக்கம் செய்யும் கவிஞனின் உடல் பொன்நிறம் கொள்ளாமல் இருக்குமா என்ன?

“ அந்த மொழி உன்னுடையதா?” என்ற கவிதையில் காதல் தேவதையா, காவிய தேவதையா என்று திட்டவட்டமாக சொல்லிவிடமுடியாத படகோட்டிப்பெண் ஒருத்தியை அக்கித்தம் விவரிக்கிறார். கவிஞன் தன் இளமையில் ஒருநாள் ஆற்றை கடப்பதற்கான படகிற்காக காத்திருக்கிறான். படகு நெருங்கி வருகிறது. அதன் முனையில் அழகிய கனவில் எழுந்ததுபோல ஒருத்தி நின்றிருக்கிறாள். வழக்கமாக வரும் படகோட்டி எங்கே என்று கவிஞன் சுற்றிலும் தேடிப்பார்க்கிறான். ”மறுகரைக்கு போகவேண்டும் என்றால் ஏறிக்கொள்” என்று அவள் அழைக்கிறாள். அவன் ஏறிவிடுகிறான். துடுப்பிடும் அவள் கைகளுக்கு எவ்வளவு வேகம்! கணப்பொழுதில் எதிர்கரையில் சேர்த்துவிட்டாள். அவன் அவளின் கூலிக்கான செம்புக்காசுகளை தருவதற்காக கைநீட்டுகிறான். அவளின் நீல நீள்விழிகள் நிறைந்துவிடுகின்றன. பெருமூச்சுடன் அவன் காசை தன் வேட்டி நுனியிலேயே முடிந்து வைத்துக்கொள்கிறான். இனிவரும் எல்லா நாட்களிலும் அவள்தான் படகோட்டப்போகிறாள் என்று எதிர்பார்த்தபடி அவன் ஒவ்வொருநாளும் படித்துறைக்கு வருகிறான். ஆனால் பின் ஒருபோதும் அவனால் அவளை காணமுடியவில்லை.  

கண்ணே, ஒவ்வொரு காலைப்பொழுதையும் ஒரு வீடு என எண்ணி நான் உன்னை தேடிக்கொண்டிருக்கிறேன்”. ஒவ்வொருவரிலும், ஒவ்வொன்றிலும் அவன் அவளை தேடினான். ” மனித ஆன்மாவின் உள்ள மிகமிக அடிப்படையான அழகுணர்ச்சி நான்” தூரத்தில் எங்கோ கேட்கும் இந்த மொழி  அவளுடையதாக இருக்குமோ?

மறுகரைக்கு அசாதாரணமான வேகத்தில் சென்றுசேர்க்கும் அந்த படகோட்டிப்பெண், நாம் எதிர்பார்த்து சென்றால் பார்க்கமுடியாத, எங்கே மறைந்துபோனாள் என்று சொல்லிவிடமுடியாத, எந்தவகையிலும் மதிப்பிட்டுவிடமுடியாத அந்த மாயத்தன்மைகொண்ட அழகி காவியதேவதைதான்.

பால் செலான்(Paul Celan)  என்ற ஜெர்மானிய கவிஞரின் கவிதைகள் மிகமிக அகவயமான, எந்த வழக்கமான யாப்பையும் பின்பற்றாத சிக்கலான மொழியமைப்பும், உட்குறிப்புதன்மையும் கொண்டவை. அவர் ஜெர்மன் மொழியில் புதிய கூட்டுசொற்களை உருவாக்கியவர். அதுபோக அவர் பல ஐரோப்பிய மொழிகளிலும் நிபுணத்துவம் கொண்டவர். ஆங்கிலம், பிரஞ்சு, ஹூப்ரு, ருமேனிய, ரஷ்ய மொழிகளிலிருந்து கவிதைகளை ஜெர்மானிய மொழிக்கு மொழிபெயர்த்திருக்கிறார். கவிதையில் ஒரு படகோட்டி உண்டு என்றும், அறியமுடியாத ஆழம்கொண்ட நீர்ச்சுழிகளைக்கடந்து அவன் மறுகரைக்கு கொண்டு சேர்க்கிறான் என்பதையும் பால் செலான் அறிவது அவரின் விருப்பமான தத்துவவாதி ஹைடெகர் வழியாகத்தான். பால் செலான் ஜெர்மானிய மொழியில் எழுதிய சொந்த கவிதைகள்கூட ஜெர்மன் மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டவை, அதாவது ஒருகரையிலிருந்து  மறுகரை சென்றுசேர்வதுபோல புலப்படாத ஒன்றிலிருந்து அவை மொழிக்கு சென்றுசேர்ந்தவை என்று  விமர்சகர் ஜார்ஜ் ஸ்டெய்னர் (George Steiner) மதிப்பிடுகிறார். கவிதையின் எல்லா வரிகளையும் அப்படி சொல்லிவிடமுடியாது என்றாலும் சில வரிகளில் அது நிகழ்கிறது. ” வைரம் துளைத்த அருமணிகள் வழியாக நான் கடந்துபோகிறேன், என் அதிர்ஷ்டம் நான் வெறும் நூல்தான்” இது அக்கித்தத்தின் கவிதைவரி. அருமணிகளை ஒளிரச்செய்வது, அவற்றை கோர்ப்பது மொழியும், கவிஞனும்தான். அதனால் மொழியோ, கவிஞனோ வெறும் நூல் மட்டுமல்ல.

——————————————————–

  1. மர்த்யன் –  எல்லா உயிரினங்களுக்கும் மரணம் உண்டு, அவை அழியக்கூடியவை. மனிதனுக்கும் அதே நிலைதான். அதைக்குறிக்க மலையாளத்தில் மர்த்ய(மரணமுள்ள) என்ற சொல் உண்டு. ஆங்கிலத்தில் mortal என்ற சொல்லுக்கு நிகரான சொல். மனிதன் என்பது பொதுவான சொல். மனிதனை ’மர்த்யன் (மரணமுள்ளவன்)’ என்று அழைத்தால் ’ தற்காலிகமான இருப்பு கொண்டவன் ‘ ’அழியக்கூடியவன்’ என்ற தொனி உருவாகிறது.

ஈரோடு பெருந்துறையை சேர்ந்த அழகிய மணவாளன், கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். நாவல் கலை பற்றிய மலையாள நாவலாசிரியர் பி.கே.பாலகிருஷ்ணனின் விமர்சன நூலை "நாவலெனும் கலைநிகழ்வு" எனும் தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார். இலக்கியத்திற்கு அப்பால் நிகழ்த்துகலையான கதகளியில் அவருக்கு ஆர்வமுண்டு.

உரையாடலுக்கு

Your email address will not be published.