
நான் போனமுறை பண்டாரவூத்துக்கு சென்றபோது மறுமுறையும் அங்கே செல்வேன் என்று சிறிதும் யோசிக்கவில்லை.
அப்பா என்னிடம் எப்போதும் அதைக் கேட்டுக் கொண்டே இருப்பார்
“என் காலத்துக்கப்புறம் எப்பவாச்சும் பண்டாரவூத்துக்கு போவியா?”
அப்போதெல்லாம் அவரை அர்த்தமற்றுப் பார்த்து, ”நான் போறதுக்கு அங்க யார்தாப்பா இருக்காங்கே.. சொந்தம்னு சொல்லிக்க ஒரு குஞ்சு காக்காவாச்சும் இருக்கா? வெறும் பாறையும் முள்காடும்தான்.. தவிச்ச வாய்க்கு தண்ணிகூட கெடைக்காது.அங்க ஏம்ப்பா போக” என்றதும் அதற்குமேல் ஒன்றும் சொல்லாமல் அமைதியாகிவிடுவார். அப்பா மிக மோசமாக நோய்வாய்ப்பட்டபிறகு நான் பண்டாரவூத்துக்குச் போவேனா என்று திரும்பவும் விசாரித்தார். மிக தணிந்த குரலில் நான் எப்போதும் சொல்லும் அதே பதிலைச் சொன்னேன். ஆனால் நான் அங்கு செல்வதை தவிர்க்க முடியாத அளவிற்கு அன்று வேறொன்றைச் சொன்னார். பண்டாரவூத்து பற்றி சொல்லப் போவது இதுவே கடைசிமுறை என்பதைப்போல ஒரு பீடிகையோடு ஆரம்பித்தார் அப்பா..
”பண்டாரவூத்துல சொந்தம்னு சொல்லிக்க யாருமே இல்லன்னு நீ அடிக்கடி சொல்வேயில.. ஆனா உண்மையா ஒனக்கு சொந்தம்னு சொல்லிக்க ஒரு பெரிய காடே அங்கிருக்கு”.
அப்பா அப்படி கூறியதும் எனக்கு மிகப்பெரும் ஆச்சர்யமாக இருந்தது. அவ்வளவு சொந்தகாரங்க அங்கிருந்தால் ஏன் அப்பா என்னிடம் சொல்லவில்லை என்ற குழப்பத்தோடு அவர் சொல்லப்போவதை ஆர்வமாக கேட்கத் தொடங்கினேன்.
”உன் தாத்தா, பாட்டி, அத்தை இன்னும் உன் பெரியப்பா, சித்தப்பா நம்ம சொந்த பந்தம் அத்தன பேரையும் அங்கதான் அடக்கம் பண்ணியிருக்கோம். அவங்கெல்லாம் ஒனக்கு சொந்த இல்லையா அவங்களைப்போய் பார்க்க வேணாமா?” என்றார் அப்பா.
புதையுண்டவர்களின் சமாதியைத்தான் அப்பா எங்களுடைய சொந்தம் என்று சொன்னபோது அதிர்ச்சியில் எனக்கு தூக்கிவாரிப்போட்டது. ”அப்பாவுக்கு என்னவாயிற்று நோய் காலத்தில் உளருகிறாரா? மரணித்தவர்களை எப்படி சொந்தம் கொண்டாடுவது” என்று யோசிக்கும்போதே அவர் தொடர்ந்து பேசினார்.
”உசுரோட இருக்கிறப்ப மனுசங்களுக்கு எவ்வளவு அரவணைப்பும் அன்பும் தேவையோ, அது மாதிரி அவங்க செத்ததுக்கப்புறமும் தேவைப்படுது. இறப்பில ஒரு மனுசனோட உருவந்தான் அழியுதே தவிர, அவனோட எண்ணங்களும் ஆன்மாவும் இந்த பிரபஞ்சத்தில, அவன் வாழ்ந்த எடத்தில சுத்திட்டேதான் இருக்கும். இன்னைக்கு அந்த ஊரே காலியாயிடுச்சு. இப்ப அந்த ஊர்ல செத்தவங்க மட்டுந்தான் வாழ்ந்துக்கிருக்காங்கே. நெனச்சு பார்க்க யாரும் இல்லாம கண்ணீர் வடிச்சிட்டு அநாதையா கெடப்பாங்க. ஒன்ன மாதிரி ஒன்னு ரெண்டு பேரு வருசத்துக்கு ஒரு தடவயாச்சும் போயி , அவங்கள நெனச்சு ஒரு பத்தி சூடத்தை பொருத்தி வச்சா ..மனசு குளுந்து போயிருவாங்க. நிம்மதியா ஒறங்குவாங்க. என் காலத்துக்கப்புறம் எனக்காக நீ அங்க போகனும் ”
அப்பா சொல்லி முடித்த அந்த நொடியில் பெரும் கலக்கம் என்னை சூழ்ந்தது. புதையுண்டவர்கள் அழுவதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. என்னிடம் அவர் அதை சொல்லியிருக்கவே கூடாதென நினைத்தேன். அன்றிலிருந்து மரணித்தவர்களின் துக்க நிழல்கள் என்மேல் படரத் தொடங்கின. உள்ளுக்குள் ஒரு அலை அடித்து இறந்தவர்களின் அமைதியின்மையும் தனிமையும் எனக்குள் இறங்கியது. அப்பாவின் மறைவிற்குப்பின் மெல்ல மெல்ல ”வா வா” என்றழைக்கும் அவர்களின் கூக்குரல்கள் என் காதுக்குள் கேட்டுக்கொண்டே இருந்தன. இறந்தவர்களின் சாம்பல் நிறமான முகம் என் படுக்கயறைச் சுவர்களில் சித்திரங்களாய் படிந்தன. நான் பண்டாரவூத்துக்கு போய்தான் ஆகவேண்டும் என்பதை உறுதிப்படுத்தும்விதமாக அப்பா சித்திரங்களுக்கு நடுவே நினைவுகளின் ஏக்கப் பெருமூச்சோடு அமர்ந்திருந்தார். துயரார்ந்த ரகசிய முணுமுணுப்புகள் மரண வாசனை நிரம்பிய பூக்களின் நாற்றத்தை என் அறையெங்கும் பரப்பிய நாளில் நான் அங்கு செல்லலாம் என முடிவெடுத்தேன். எல்லா மனத்தடையும் மீறி நான் அங்கு சென்றுவிட முடியும். ஆனால் அப்பாவின் மனதால் நான் அவர்களை நேசிக்க வேண்டும் என்பதுதான் என் முன் பெரிய சவாலாக நின்றது. அந்த மனிதர்கள் எப்படி இருப்பார்கள்? கரடு முரடானவர்களாகவா? தோல் தடித்தவர்களாகவா அல்லது மண்ணப்பிய அழுக்கு உடைகளை அணிந்தவர்களாகவா?
”எப்படி இருந்தாலும் அவர்கள் நம்முடைய மனிதர்கள்” என்றொலித்தது அப்பாவின் ரகசிய குரல்.
மரணித்தவர்களின் புதைக்குழிகளைத்தான் காணப்போகிறாய் அவர்களின் உருவங்களை அல்ல என்று எனக்குள் சொல்லிக்கொண்டபின் மரணித்தவர்களின் தோற்றங்களைப் பற்றிய கவலை நீங்கியது.
அங்கு செல்வேன் என்ற நம்பிக்கையை ஒருநாளும் நான் அப்பாவுக்கு கொடுக்க விரும்பியதில்லை. அதற்கு உடலை நடுங்கச் செய்யும் காரணமொன்றிருந்தது. இளஞ்சிவப்பு கத்தாழைப் பூக்கள் பூத்துக்குலுங்கிய ஏப்ரல் மாதத்தில் அந்த ஈரப்பதமற்ற கோடை நாள்களை என்னால் மறக்கவே முடியாது. அப்போது அத்தையும் பாட்டியும் பண்டாரவூத்தில் இருந்தார்கள். என் ஐந்தாம் வகுப்பு கோடை விடுமுறை முழுதையும் எங்களோடுதான் செலவளிக்க வேண்டுமென்று அத்தை என்னை ஊரிலிருந்து அழைத்துக்கொண்டு பண்டாரவூத்துக்குச் சென்றார். அத்தை தன் மகள்களைவிட என்னைத்தான் செல்லமாக பார்த்துக் கொண்டார். அதனால் கோடை விடுமுறையை அங்கே செலவிடுவதில் எனக்கு எந்த சிரமமும் இல்லை. அத்தை மகள்களோடு அந்த ஊரில் இருந்த லதா அக்காவும் என் மகிழ்வுக்கு காரணம். அவர் எப்போதும் கதைகளை சொல்லிக்கொண்டிருந்தார். அதுவும் பேய்க்கதைகளை. பேய்க்கதைகளை கேட்கும்போது பயமும் கொண்டாட்டமும் ஒருசேர மகிழ்வளிக்கும். நீளமான முடிகொண்ட லதாக்கா கூந்தலைப் பரப்பி பேய்க்கதையைச் சொல்லும்போது கேட்க சுவாரஸ்யமாக இருக்கும். அந்த ஊருக்கு போன நாளிலிருந்து அவரோடு ஒட்டிக்கொண்டேன். வேப்ப பழங்களைச் சேகரிப்பது ஆமணக்கு விதைகளை உடைப்பது என்று எப்போதும் வேலை செய்துகொண்டே இருப்பார் லதாக்கா. வேலையில் அவருக்கு உதவி செய்தால் அச்சு வெல்லத்தை பரிசாக கொடுப்பார். விளையாட்டு முழுந்து அத்தை மகள்கள் வீட்டுக்கு போனாலும் நான் லதாக்கா வீட்டிலிருந்து வெளியேறமாட்டேன். வரமறுக்கும் என்னை பாட்டியும் அத்தையும் கெஞ்சி கூப்பாடு போட்டுதான் தூங்குவதற்கு அழைத்துச் செல்வார்கள்.
அங்கிருந்த நாளில் ஒரு நாள் மதியம் அக்காவைத் தேடி அவர் வீட்டு கதவைத் தள்ளினேன். அக்கா தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். என்னவென்று புரிந்தும் புரியாமலும் கத்தியபடி அங்கிருந்து ஓடியவள்தான் பின் அக்காவைப் பார்க்கவே இல்லை. அன்றே அக்காவை அடக்கம் செய்துவிட்டார்கள். இனி அவர் ஒருபோதும் வரப்போவதில்லை என்பது என் புத்திக்கு உறைத்தது. அதன்பின் அந்த ஊரில் ஒரு நொடிகூட இருக்க முடியவில்லை. உடனே ஊருக்கு செல்ல வேண்டுமென்று இரவு முழுக்க அழுதேன். அடுத்த நாள் அத்தை என் ஊருக்கு அழைத்துப்போனார். அதன்பின் நான் பண்டாரவூத்துக்கு செல்லவில்லை. அதன்பின் பெரியவளான பின் அத்தை பலமுறை அழைத்தும் அங்கே போக மறுத்துவிட்டேன்.
இப்போது அப்பாவின் மறைவிற்குப் பின் நான் இரண்டாவது முறையாக பண்டாரவூத்துக்குச் செல்கிறேன். முதல்முறை சென்றதற்குப் பின் எனக்கு ஏற்பட்ட சில அமானுஷ்யமான வாழ்வின் மர்மங்கள் மீண்டும் அங்கே செல்ல வைத்திருக்கிறது. முதலில் சென்றபோது நான் மரணித்தவர்களைப் பற்றி அதிகம் சிந்திக்கவில்லை. அந்த ஊரில் எனக்கிருந்த பால்ய நினைவுகளும் அந்த கெடுவான நிகழ்வு மட்டுமே ஞாபகத்திலாடிக்கொண்டிருந்தது. அப்பா சொன்னதைப்போல ஒரு சடங்காக மரணித்தவர்களுக்காக பத்தி சூடம் ஏற்றிவிட்டு ஊரின் பல இடங்களையும் புகைப்படம் எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டேன். வீட்டுக்கு வந்தபின் மிக ஓய்வாக இருந்த ஒரு நாளில் ஏதோ ஒரு ஞாபகம் கிளர புகைப்படங்களைப் பார்த்தேன். பார்த்த முதல் கணத்திலேயே நெஞ்சடைக்கும் அதிர்ச்சியாக இருந்தது. ஊரில் பார்த்த காட்சிகள் வேறொன்றாக புகைப்படத்தில் இருந்தது. கொஞ்ச நேரம் உலகமே இருளாகி நின்றது. புகைப்படங்களில் நேரில் நான் பார்க்காத பல காட்சிகள் அதில் பதிவாகிருந்தன. எனக்கு தலை சுற்றியது. எதுவும் புரியாமல் பயமும் அதிர்ச்சியுமாய் எல்லாப் புகைப்படங்களையும் திரும்பத் திரும்ப பார்த்தேன். எத்தனை முறை பார்த்தாலும் எதுவும் மாறாமல் அப்படியே இருந்தன. கிணற்றடியில் நான் நின்றிருந்த ஒரு புகைப்படத்தில் என் நெற்றிக்குமேல் பாம்புபோல் ஒரு வெள்ளிநிறக் கொடி எங்கிருந்து வந்தென்று தெரியாமல் விழுந்துகிடந்தது. இன்னொரு புகைப்படத்தில் தூரத்து பாறையில் தோகை விரித்தாடும் மயிலும் அதை பார்த்துக் கொண்டிருக்கும் இன்னொரு மயிலும் இருந்தன. அதைப்பார்த்தும் எனக்கு பக்கென்றிருந்தது. அப்படியான மயில்களை அங்கே நேரில் பார்க்கவே இல்லை புகைப்படத்தில் மயில்கள் இருப்பதைக் கண்டு பயத்தில் நான் கத்தியேவிட்டேன். பின் அங்கே எடுத்த எல்லாப் புகைப்படங்களையும் ஒவ்வொன்றாக ஆராய்ந்து பார்த்தால் எல்லாப்புகைப்படங்களிலும் நேரில் நான் காணாத ஏதோ ஒன்று பதிவாகிருந்தது. ஒரு புகைப்படத்தில் கிணறு முழுவதும் செம்பருத்தி பூக்கள் மிதந்து கிடக்கின்றன. இன்னொன்றில் குதிரையின் நிழல் விழுந்திருந்தது. அங்கே குதிரை வருவதற்கான எந்த சாத்தியமும் இல்லை எனும்போது அச்சம் என் குரல்வளையை நெறிக்கத் தொடங்கியது. அதேபோல் அங்கே ஒரு செம்பருத்திச் செடிகூட இல்லை என்பதால் என்னால் பயத்தை கட்டுப்படுத்தவே முடியவில்லை. இதயம் வேகமாக சுழன்றது. படபடப்பில் மயங்கிங்கியேவிட்டேன்.
எனக்கு மட்டும்தான் இப்படித் தெரிகிறதா? இல்லை எல்லோருக்குமே அதேபோல்தான் தெரிகிறதா என்பதை அறிய, என் நண்பருக்கு அந்தப் புகைப்படங்களையெல்லாம் அனுப்பி வைத்தேன். பின் படத்தில் இருப்பதை ஒவ்வொன்றாக சொல்லச் சொன்னேன்.
“ என்னாச்சு ஒனக்கு கண்ணுல ஏதும் பிரச்னையா.சரியாத் தெரியலயா?”
என்றபடி புகைப்படத்தில் இருப்பதை ஒவ்வொன்றாக சொல்லத் தொடங்கினார். புகைப்படத்தில் எனக்கு தெரிந்த அனைத்தும் அவருக்கும் தெரிந்தது. அது எனக்கு இன்னும் பயத்தை அதிகரித்தது. விட்டகழ முடியாதபடி ஏதோ ஒரு உணர்வு என்னைச் சூழ்ந்துவிட்டது . மரணித்தவர்களின் எண்ணங்கள் என் தலைக்கு மேல் வட்டமடிப்பதுபோல உணரத் தொடங்கினேன்.
அமானுஷ்ய விசங்களில் நம்பிக்கையுள்ள இன்னொரு நண்பரை அழைத்து விசயத்தைச் சொன்னேன். அவர் ஆர்வத்தில் துள்ளிக்குதித்தார். அவருக்கு தெரிந்த பல கதைகளைச் சொல்லி இறந்தவர்களின் சங்கேத குறீயிடுகள்தான் அவை என்றும், உங்களைப் பயமுறுத்தாமல் ஏதோ ஒன்றை உங்களுக்கு உணர்த்த விரும்பியிருக்கிறார்கள். அதனால் நீங்கள் பயப்படாமல் அவர்கள் சொல்ல வருவதை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள் . அவர்களின் குரல்களையும் எண்ணங்களையும் ஒருங்கிணைக்க முயற்சி செய்யுங்கள். அப்படி நடந்தால் நிச்சயம் அதுவொரு அசாத்தியமான சக்திதான் என்றார். ஆனால் எனக்கென்னவோ இதெல்லாம் ஏதோ ஒரு திரைப்படத்தில் நடப்பதைப் போலிருந்தது. அவை இயல்பில் எனக்கு நிஜமாக நடந்து கொண்டிருக்கிறது என்பதை நம்புவதற்கு விருப்பமில்லை. அதனால் அந்த நண்பர் சொல்லியதை முழுதாக ஏற்றுக் கொள்ளாமல் வேறு சில நண்பர்களிடம் பேசிப் பார்த்தேன். ஆனால் நிலைமை இன்னும் கவலைக்கிடமாக மாறியது.
அந்த காட்சிகள் அனைத்தும் நிஜத்தில் இருந்திருக்கும் நான்தான் பேண்டஸியாக இல்லை என்று கற்பனை செய்துகொள்கிறேன் என்று நண்பர்கள் அலட்சியப்படுத்தினார்கள். இயல்பை தாண்டி சிறு இட்டுக்கட்டலோ மிகக் குறைவான கற்பனைகளோகூட என்னிடம் இல்லை என்று அவர்களிடம் மிக உறுதியாகச் சொன்னேன். உறுதியான என் சொல்லாடல்கள் இன்னும் வலுவான சந்தேகங்களை அவர்களுக்களித்தது. அவர்கள் என்னை பொறுமையோடும் இரக்கத்தோடும் அணுகி என்னை எப்படி சரிசெய்வது என்பது குறித்து யோசிக்கத் தொடங்கினர். என்னைப்பற்றியான அவர்களின் உறுதிப்பாடு எனக்கு பயமுறுத்துவதாகவும் இருந்தது. நிச்சயமாக நான் எதையும் கற்பனை செய்துகொள்ளவில்லை. ஆனால் என் நண்பர்களோ நான் ஏதோ தீவிர உளப் பிரச்னையில் சிக்கிக்கொண்டதாக நினைத்தார்கள். பிறகு ஒரு மனநல மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறும்படி வற்புறுத்தினார்கள். உண்மையில் அது எனக்கு பெரும் நிம்மதி இன்மையை அளித்தது. என்னால் எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியவில்லை. திரும்பப் திரும்ப புகைப்படங்களை உற்று நோக்கியபடி, இரவும் பகலும் என்நேரமும் அந்த ஊரின் காட்சிகளை நினைவுபடுத்திக்கொண்டே இருந்தேன். எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என் மனம் சமநிலையில்தான் இருக்கிறது. என் வாழ்வில் நடந்த விசயங்கள் ஒன்றுவிடாமல் அடுக்கடுக்காய் ஞாபகத்திலிருக்கின்றன. அதில் எந்தக் குழப்பங்களும் இல்லை. புகைப்படங்கள் மட்டுமே குழப்பம். இல்லை புகைப்படங்களைக்கூட குழப்பங்கள் என்ற முடிவுக்கு நான் வரவில்லை. அமானுஸ்ய விரும்பியான அந்த நண்பன் கூறியதைப்போல, மரணித்தவர்கள் எனக்கு உணர்த்த விரும்பும் சங்கேத குறியீடுகள்தான் அவை என்பதை நான் முழுமையாக நம்பத் தொடங்கினேன். ஆனால் அதை யாரிடமும் வெளிப்படுத்தவில்லை. நண்பர்களின் ஆலோசனையை ஏற்று மனநல மருத்துவரிடம் சிகிச்சைக்கும் செல்லவில்லை. எதுவும் நடக்காததுபோல் ஒன்றிரண்டு ஆண்டுகள் அமைதியாக இருந்தேன். மனதின் ஆழத்தில் மரணித்தவர்களை நான் கைவிட்டுவிட்டேன் என்ற குற்ற உணர்வில் உழன்றேன். அந்த எண்ணத்தை மேலெழுப்புவதும் கீழிழுப்பதுமாக நாள்கள் கடந்துகொண்டிருந்தன. மறுபடியும் மரணித்தவர்களின் சித்திரங்கள் என் வீட்டு சுவர்களில் தோன்ற தொடங்கியதும் பண்டாரவூத்துக்கு செல்வதற்கான முடிவை எடுத்தேன். அங்கிருக்கும் என் தூரத்து உறவினருக்கு அலைபேசியில் அழைத்து நான் அங்கு வரப்போவதாகச் சொன்னேன். ”அப்படியா?” என அவர் அதிர்ச்சியோடு கேட்டது நான் வருவதை அவர் விரும்பவில்லை என்பதை உணர்த்தியது. நான் வருவதில் ஏதும் பிரச்னையா என்றதும், “அதுக்கில்ல நீ போனதடவ வந்தப்பக்கூட ஊர்ல பத்துக் குடும்பம் இருந்துச்சு. இப்ப மூனு குடும்பந்தான் இருக்கோம். அதான் யாருமில்லாத ஊருக்கு வர்றேங்கிறீயேன்னு யோசிச்சேன்.”
”இல்லக்கா சொந்தக்காரங்களை நெனச்சு சாமி கும்பிடச்சொல்லி அப்பா சொன்னார்னு சொன்னேன்ல. அதான் வரலான்னு பார்த்தேன். நீங்களும் ஊரவிட்டு போறதுக்குள்ள ஒரு தடவ வந்து பாத்துட்டு போயிரேன்க்கா”
” வா..வந்து எத்தன நாளு வேணுனாலும் இரு.. நான் கஞ்சிகாச்சி ஊத்துறேன். ஆனா நீயும் ஒங்க அப்பாவும் இந்த பாறக்காட்டுக்குள்ள அப்படி என்னத்த கண்டீங்களோன்னுதான் தெரியல” என்று அலுத்துக் கொண்டார்.
அவர் இருக்கும் தைரியத்தில் உடனே அங்கே கிளம்பிவிட்டேன். போனமுறை சென்றபோது குன்றின் கட்டாப்புகளில் பூத்துக்குலுங்கியிருந்த ரேடியோ பூக்கள் ஒன்றுகூட இம்முறை பூத்திருக்கவில்லை. வறண்டு மொட்டையாகக் கிடந்த அவ்விடத்தை ரேடியோ பூக்கள் மட்டுமே வளமாக காட்டிக்கொண்டிருந்தன. இப்போது அதுவும் பூக்காத வளமுற்ற குன்றில் முள்மரங்களில் ஏறிக்கொண்டிருக்கும் கரட்டான்கூட சத்தம் எழுப்பாமல் சோம்பலில் தனித்திருந்தது. அது கொஞ்சமும் கருணையற்ற நிலமாய் காட்சியளித்தது. ஆனால் குன்றைத் தாண்டி மேடேறியதும் பாறைகளின் ஒளிவெள்ளத்தில் எழும்பிய அழகிய தோற்றம் ஊர்முழுதும் மஞ்சள்தானியங்களை நிரப்பியதுபோலிருந்தது. ஆனால் வெறுமை பூத்த நிலம். என்னை வரவேற்பதைப்போன்று ஒரு கழுதை மட்டும் பாறையில் நின்று கொண்டிருந்தது. ”இந்த ஊருக்கு தொணையா சலவைக்காரர் விட்டுச் சென்ற குட்டிக்கழுத” என்று போனமுறை வந்தபோது அக்கா சொல்லியிருந்தார்.. ஒற்றைக் கழுதையை அநாதையாக விடாமல் ஆடுகளைப் போலவே கழுதையையும் ஊரில் மிச்சம் இருந்தவர்கள் வளர்த்திருப்பார்கள் போல, பொதி சுமக்கும் ஆரோக்கியத்துடனே அது வளர்ந்திருந்தது.
நான் ஊரை நோக்கி நடந்தபோது என் உற்ற நண்பனைப்போல என்னோடு சேர்ந்து கழுதையும் நடந்து வந்தது. என்னிடம் பேசுவதுபோல் வழியெங்கும் கணைத்துக் கொண்டு வந்தது. அதற்கு மரியாதை செய்யும்விதமாக நான் அதோடு பேசத் தொடங்கினேன். இருவரும் ஊரின் ஒளி வெள்ளத்துக்குள் இறங்கினோம். அதனிடம் ”ஊரே வெறிச்சோடி கிடக்கிறது” என்றதும் ஆமாம் என்பதைப் போலவே தலையாட்டியது. எத்தனையோ மனித பாதடிகளைக் கண்ட இடம் தடமற்றிருந்தது. பிற்பகல் உறக்கம் போடுவதற்குகூட அங்கு யாருமே இல்லை. சோம்பலால் அள்ளாடிய சூரியன் மேகத்திற்குள் மறைந்து சிலநொடி அந்நிலத்தில் நிழலை அனுமதித்தும், பின் உடனே வெளிவந்து வெயில் பரப்பியும் கண்ணாமூச்சி ஆட்டமொன்றை அவ்விடத்தில் நிகழ்த்தியபடி இருந்தது.
ஆமணக்கு இலையை குடைபோல் தலைமேல் வைத்து வெயிலிருந்து தன்னை காத்துக்கொண்டிருந்த என் சொந்தக்கார அக்கா என்னைப் பார்த்ததும் இலைகளை விசிறியடித்துவிட்டு எழுந்து நின்று வரவேற்றார். அக்காவினுடைய ஆடுகள் கரட்டில் காய்ந்த புற்களை மேய்ந்து கொண்டிருந்தது. துணைக்கு வந்தது போதுமென்று கழுதை அங்கேயே நின்றுவிட்டது. ஆடுகளை அக்கா வீட்டுக்கு ஓட்டினார்.
“ ஏக்கா எல்லாம் இப்படி காஞ்சு கெடக்கு மழை எதும் பெய்யலையா?” என்றதும்,
“மழயோ காத்தோ வெயிலோ அதுபாட்டுக்கு நெனச்ச நேரத்தில வருது போகுது.. இந்த ஊருக்கு காலநேரம் பருவ மழன்னு எதுவும் இல்ல. பாவம் இந்த ஆட்டுக்குட்டிக பட்டினியில வங்கொலயா சாகுது. இதுக்கு மேல தாக்குபிடிக்க முடியாது. எல்லாத்தையும் வித்துப்புட்டு.. சின்னமனூர் பக்கம் போயிடலான்னு பாக்குறோம்” என்றார்.
ஆடுகள் தானாகவே பட்டிக்குள் சென்று படுத்துக்கொண்டன. அவர்கள் வசிக்கும் வீட்டிலேயே ஆட்டுக்கொட்டில் இருந்தது. அக்கா கோழிகளை கூண்டில் அடைத்துவிட்டு சமைக்கத் தொடங்கினாள். நெருப்பின் வாசனையும் உணவின் வாசனையும் எழும்பத் தொடங்கியது. அப்போது மனித நடமாட்டத்தின் அரவம் கேட்டது. ஆனால் அந்த அக்காவின் கணவர் மட்டுமே அங்கே வந்தார். எங்கிருந்தோ ஒடித்துகொண்டு வந்த குலைகளை அவர் பட்டியில் போட்டதும் சாபத்தை போலிருந்த ஆட்டின் கண்கள் பிரகாசமடைந்தன. ஜன நடமாட்டத்தின் சத்தத்தைப் பற்றி அக்காவிடம் கேட்டேன்.
”ஒரு ஈ காக்கா பூச்சி பொட்ட பறக்குற சத்தம்கூட கேட்கல ஒனக்கு ஆளு நடக்குற சத்தம் கேட்குதாக்கும். முழிச்சுக்கிட்ட கனவு காண்றியா” என்று சொல்லி சிரித்தது. அவள் வெகுகாலமாய் சிரிக்க மறந்திருந்ததால் அந்த சிரிப்பு உயிரற்றதாய் இருந்தது. உடனே ஏதோ ஒரு வெறுமை தாக்க துயர பெருமூச்சுவிட்டாள். கோடையின் காற்று மனித வாசனையை கொண்டு வந்தது. நான் நாசிகளையும் காதுகளையும் கூர்தீட்டி உற்று கவனிக்கிறேன். உடைகள் காற்றிலாடும் சத்தமும் மூச்சுவிடும் முணுமுணுப்புகளும் தெளிவாகவே கேட்டது. திரும்பவும் அக்காவிடம் அதைப்பற்றி பேசினால் என்னை வித்தியாசமாக பார்ப்பார் என்று தோன்றியது. சாப்பிட்டுவிட்டு அவர் ஒதுக்கி கொடுத்து கயிற்று கட்டிலில் அமைதியாக படுத்துக் கொண்டேன். ஒற்றைக் காகம் கரைந்தபடி சிறகடித்துச் செல்லும் ஒலி துல்லியமாய் கேட்டது.
நான் அங்கிருப்பதை மிக மோசமாக வெறுத்தேன். அப்பாவிற்காகவே அங்கிருக்கிறேன் என்ற பழியை அவர்மேல் போட்டாலும் அது உண்மையில்லை. ஓயாது என்னிடம் உரையாடிக் கொண்டிருந்த குரல்களே எனை அங்கு கொண்டு வந்து சேர்த்தது. என்னை அலைகழிக்கும் குரல்களுக்கு முடிவு கட்டவே நேருக்கு நேராக அவற்றை சந்திக்க வந்திருக்கிறேன். விடிந்ததும் முதல் வேலையாக புகைப்படம் எடுத்த இடங்களுக்கெல்லாம் சென்று மரணித்தவர்களுக்கு என்ன வேண்டுமென உரக்க கத்திக் கேட்பேன். விடாத என்னுடைய குரல்களும் நானறியாத அந்நிய குரல்களும் எனக்குள் போட்டி போட்டபடி ஒலித்துக் கொண்டிருக்க தூக்கமின்றி தவித்தேன். தண்ணீர் தொட்டியில் மட்டும் மழைத்துளி விழுந்து எழும் குமிழ்களின் சத்தம். வேறு இடங்களில் மழைச் சத்தமே இல்லை. அது அவர்களின் சங்கேத குறியீடுதான் .என்னை எழும்ப வைக்க அப்படிச் செய்கிறார்கள். அதற்கொன்றும் அவசியமே இல்லை. என் கண்கள் கனக்க நான் பல நாள்களாக தூக்கமின்றிதான் கிடக்கிறேன். காலைவரை காத்திருக்க பொறுமையின்றி வீட்டைவிட்டு வெளியேறி கிணற்றடிக்குச் சென்றேன். அங்கே செம்பருத்தி பூக்களின் வாசம் நிறைந்திருந்தது.
ஒரு பக்கம் பொழுது புலர்ந்ததைப் போன்ற வெளிச்சம் . இன்னொரு பக்கம் இருட்டு. நான் வெளிச்சத்தின் பக்கம் அமர்ந்திருக்கிறேன். இருட்டின் பக்கத்திலிருந்து ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ளும் சத்தம் கேட்கிறது. கையிலிருக்கும் அலைபேசி மூலம் இருட்டின் பக்கம் வெளிச்சத்தை பாய்ச்சுகிறேன். அந்த வெளிச்சம் தூரத்தில் நீளாமல் என்னிடமே சுற்றிக்கொண்டு நின்றது அப்போது இரண்டு மயில்கள் வெளிச்சத்தின் பகுதியிலிருந்து இருட்டின் பகுதிக்கு செல்வதைப் பார்த்தேன். அவர்களுக்கு என்னதான் வேண்டுமென்பதை சீக்கிரமாக அறிந்துகொள்ள வேண்டுமென்று அவசரப்பட்டேன்.
“உங்க சத்தமெல்லாம் எனக்கு கேட்குது.எல்லாரும் வெளிச்சத்துக்கு வாங்க”
என்று நான் உரக்க கத்த, அவ்வளவு அதிகாரமான சப்தத்தை எதிர்ப்பார்க்காத குரல்கள் அமைதியாகின. அதுவரை என்னை வதைப்படுத்திக் கொண்டிருந்த குரல்கள் துக்கமடைந்ததைப்போல மெல்ல கணைத்தன. அத்தனை சோகமான கணைப்புகளை நான் அதுவரை கேட்டதில்லை. தவறுணர்ந்து நான் என் குரலை மிக தாழ்த்திக் கொண்டு
”உங்க குரலெல்லாம் என் காதுக்கு கேட்க கூடாது. அதுக்கு நான் உங்களுக்கு என்ன செய்யனும்” என கத்தினேன்.
”நாங்க இங்க நல்லாதான் வாழ்ந்திட்டிருக்கோம் எங்களுக்கு எதுவும் வேணாம். மனிதர்களுக்கு தேவைப்படும் எதுவும் எங்களுக்குத் தேவப்படாது. உருவமற்ற எண்ணங்களோடவும் குரல்களோடவும்தான் இந்த நிலத்தில் வாழ்ந்துகிட்டிருக்கோம். யாருக்குமே கேட்காத எங்களோட குரல் உனக்கு மட்டும் கேட்டதுதான் ஆச்சர்யமா இருக்கு” என்றன குரல்கள்.
”நான் எந்த குரலையும் கேட்க விரும்பல நீங்களாதான் என்னோட போட்டோவில இங்க இல்லாத காட்சியெல்லாம் வச்சு உங்கள எனக்கு அடையாளப்படுத்தினீங்க. அது மட்டும் இல்லாம என்னைத் தூங்க விடாம என் படுக்கையறையில பேசிட்டே இருந்தீங்க. என் கண்ணெல்லாம் கனக்குது. நான் ஆழமான தூக்கத்திலிருந்தது எனக்கு ஞாபகமே இல்ல. எனக்கு தூக்கம் வேணும். உங்க குரல்களை எங்கிட்ட அனுப்பாதீங்க. என் அப்பாவுக்காகத்தான் ஒரே ஒரு தடவ வந்துட்டு போயிலான்னு வந்த என்னை, இரக்கமே இல்லாம என்னை சூழ்ச்சியில மாட்டவிட்டுட்டீங்க..இது சாப நிலம். இங்க நான் வரவே விரும்பல. என்னைவிட்டுப் போங்க என்னைத் தூங்கவிடுங்கன்னு சொல்லதான் இங்க வந்தேன் ” என்று மழை பெய்ததைப்போல சொல்லி முடித்தேன். இருட்டிலிருந்து ஒரு சத்தமும் இல்லை மரணித்தவர்களின் அமைதி என்னை திகிலடையச் செய்தது. பின் மெலிதாக குரல்கள் ஒலித்தன,
”இதை சாப நிலமின்னு சொல்லாத. ஒரு காலத்தில எங்க எல்லாரையும் காப்பாத்தி பசியாத்தியதே இந்த நிலம்தான். என்ன நடந்துச்சுன்னு தெரியல கொஞ்ச கொஞ்சமா இந்த மண்ணோட சத்தெல்லாம் போச்சு. அதுக்கப்புறம் வாடக் காத்தும் சாரக்காத்து எங்க நெலத்தில வீசவே இல்ல. மழ பெய்யும்ன்னு காத்துக்கிருந்தப்பதான் மண்ணெல்லாம் புழுதியா சூரக்காத்துல பறந்துபோச்சு. ஒரு தடவ மழ பெஞ்சதை நம்பி சோளத்தை வெதச்சோம். அதுவும் தாக்குபிடிச்சு எழுந்து நின்னுச்சு அப்புறம் மழயவே காணாம் எங்கிட்டிருந்தோ வந்த பறவைக்கூட்டம் அனலா காஞ்சுகெடந்த சோளத்தட்டைகளை பாத்து பெரும் ஓலமா கத்திட்டு பறந்துபோச்சு. கடைசியா உசில மரத்துல கூடுகட்ட வந்த ஞானவந்தான் குருவியும் பட்டுப்போன மரத்தைப் பார்த்துட்டு திரும்பி போயிடுச்சு. அதுக்கப்புறம் எந்த பரவைகளும் இங்கிட்டு வரல. வெக்கையடிக்கிற காத்தை தடியால் அடிச்சு துரத்திக்கிட்டே இருந்த ஆச்சி கிழவி செத்த பின்னாடி யாரு மொகத்திலும் ஜீவன் இல்ல. விதை தவசத்தையும் சாப்பிட்டு பசியாத்தின பின்னாடி எங்க வீட்டு அடுக்குப்பானையெல்லாம் காத்துல ஆடி உடைஞ்சு விழுந்துடுச்சு. எங்க கெணத்துல தவளைச் சத்தம் கூட கேட்காம இருந்தப்ப நாங்க ஒவ்வொருத்தவங்களா செத்துக்கிட்டிருந்தோம். அப்பதான் துருப்பிடிச்ச கலப்பைகளை எடுத்திட்டு எல்லாரும் கரட்டை விட்டு கீழிறங்கிப் போனாங்க. ஊரே காலியாப்போச்சு. எப்பயாச்சும் பெய்யுற மழயில உசுர் பிடிக்கிற செடி கொடிகளை நம்பி வாழ்ற ஆடுகளாலதான் கொஞ்ச பேராச்சு இங்க மிஞ்சுனாங்க. இப்ப எல்லாரும் போகப்போறாங்க.. நாங்கதான் தீ வளையம் மாதிரி இங்கய சுத்திட்டு திரியுறோம். எங்கள பத்தி ஒருத்தரும் யோசிக்காதப்பதான் நீ எங்களத் தேடி வந்த..ஆசையோடதான் எங்க குரல்கள் உன் பின்னாடி வந்திருக்கு. உன்னை கஷ்டப்படுத்த இல்ல” என்று குரல்கள் தழுதழுத்தன.
”நாங்க எப்பவோ இங்கருந்து வெளியேறி கண்காணாத இடத்துக்கு போயிருப்போம். ஆனால் எங்களுக்கு உசுர் குடுத்து காப்பாத்துன இந்த நிலத்தை ஒரு நாளும் அநாதையாக்கிட்டு போகமாட்டோம். இப்படியே இந்த ஊர் இருந்திடாது. இங்க வானத்தில வால்நட்சத்திரம் விடிய விடிய ஒளிச்சுக்கிட்டிருந்ததை நாங்க பார்த்தோம். மழ வர்றதுக்கான சைகைதான் அது. கூடிய சீக்கிரம் மழ பேஞ்சு இந்த மண்ணெல்லாம் செழிப்பாகும். நாடோடிகள் இங்க வந்து குடியேறுவாங்க. இந்த நிலத்தில எங்களோட கடந்த கால இழைகளை நெய்யப்போறவங்க அவங்கதான். அவங்க வர்ற வரைக்கும் நாங்க இங்கதான் இருப்போம். அவங்க கையில இந்த நிலத்தை ஒப்படைச்ச பிறகுதான் நாங்க மரணிப்போம். அப்ப எங்க குரல்களும் நிழல்களும் அழிஞ்சிடும் . அப்பவும் எங்களோட எண்ணங்கள் மட்டும் ஒரு குறிசொல்லியபோல இங்க சுத்திட்டு இருக்கும். இனி எங்களோட குரல்கள் ஒன்னை தொந்தரவு செய்யாது..நீ சந்தோசமா திரும்பிப் போ” என்றன குரல்கள்.
பல குரல்களும் என்னிடம் பேசி முடித்தபின் நான் அப்படியே நெகிழ்ந்து போயிருந்தேன். அதற்குள் மரணித்தவர்களின் மொழி எனக்கு பிரியமானதாக மாறியது. நான் அறியாத மொழி அல்ல ஆனால் இறந்தவர்களின் குரலின் நெருக்கமும் பணிவும் அரவணைப்பும் எந்த சாயலுமற்ற புதுமொழியாக ஒலித்தது. வன்மம் துடைத்தகற்றப்பட்ட, கொஞ்சமும் கசப்போ வெறுப்போ அற்ற குரல்கள். எனக்கு போதிய விளக்கங்களை கொடுத்துவிட்டதாக நம்பிய குரல்கள் அங்கிருந்த பாறைகளில் ஓய்வெடுக்கத் தொடங்கின. அவர்களை தொந்தரவு செய்யாமல் ஒவ்வொரு பாறைக்கும் அருகில் சென்று அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தேன். வேனலாக கொதித்த அவ்விடம் குளிரத் தொடங்கியது.. அவர்கள் வெம்மைக்காக காய்ந்த செடி கொடிகளை விறகு கட்டைகளை எரித்து குளிர் காயத் தொடங்கினர் . இரவெல்லாம் கடந்த காலத்தின் தவறுகளை எப்படி சரிசெய்திருக்கலாம் என்று பேசி, திருத்திய வாழ்வொன்றை வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.
வானத்தில் வெளிச்சம் இறங்கி விடியத் தொடங்கியதும் குரலகள் மெல்ல மெல்ல அடங்கி சப்தமற்று விடிந்தது. அன்று வானத்தில் சூரியன் தோன்றவே இல்லை. எப்போதும் இல்லாத சாரக்காற்று வீச, அக்கா அதிசயமாக வானத்தைப் பார்த்தார். குரல்களின் நினைவுகளோடு அக்காவிடமிருந்து விடைபெற்று நான் கரட்டிலிருந்து இறங்கும்போது மழை நிதானமாகப் பெய்யத் தொடங்கியது.
ஊர் வந்து சேர்ந்ததும் மரணித்தவர்களின் குரல்களை நான் கேட்க விரும்பி பதிவு செய்து வைத்திருந்ததை ஒலிக்கச் செய்தேன். அலைபேசியிலிருந்து மெதுவாக காற்றில் செடிகள் அலையும் சத்தம் ஒலிக்கத் தொடங்கியது. பின் கழுதையின் கணைப்புச் சத்தம். ஆடுகள் கத்தும் சத்தம் அதோடு காற்றசையும் சத்தம் இப்படியே பல மணி நேரங்களுக்கு பதிவாகி இருந்தது. நான் ஒலிப்பதிவை முன்னும் பின்னும் நகர்த்திப் பார்க்கிறேன். அதே சத்தம்தான் திரும்பத் திரும்பக் கேட்டன. இரவு முழுக்க மரணித்தவர்களோடு நான் பேசியதற்கு சாட்சியாய் ஒரு சொல் கூட அதில் இல்லை. அவர்களின் எந்த சங்கேத குறீயிடுகளும் இல்லை. படுக்கையறையில் இறந்தவர்கள் நிழல்கள் தோன்றுமென காத்திருந்தேன். எந்த சமிஞ்யையும் இல்லை. எந்த பூடகமும் இல்லை. மாயமும் இல்லை. எல்லாம் அதனதன் இயல்பில் இருந்தது. இப்போது நானே முடிவெடுத்துவிட்டேன் மனநல மருத்துவரிடம் நான் சிகிச்சை பெறவேண்டுமென்று.
000
Thanks to Dinakaran Deepavali special issue

சந்திரா தங்கராஜ்
சந்திரா தங்கராஜ் கவிஞர், எழுத்தாளர், இதழாளர், திரைப்பட இயக்குனர். மலைநிலத்தின் இயற்கைச் சித்தரிப்பும், இழந்தவற்றிற்கான ஏக்கமும், நாட்டார் கதைகளின் சாயலும், பெண் மனத்தின் நுட்பமான அவதானங்களும் கொண்டவை அவரது படைப்புகள்.
மிகச்சிறப்பாக வந்திருக்க வேண்டிய கதை. சந்திரா அளவுக்கதிகமாக உள்நுழைந்து கெடுத்து விட்டார். குறிப்பாக, கதையின் கடைசி வாக்கியத்தை அவர் எழுதாமல் விட்டிருக்க வேண்டும்.
வாசிக்க வாசிக்க நானும் பண்டாவூத்துக்கு உங்களோடு வந்துவிட்டேன்
சிறப்பான கதை