கவிஞரும் உலகமும் : விஸ்லோவா சிம்போர்ஸ்கா

நோபல் பரிசு உரை

எந்த உரையை ஆரம்பிக்கும்போதும் முதல் வாக்கியமானது மிகக் கடினமாக இருக்கும் என்கிறார்கள். ஆனால், எனக்கு அவ்வாறு இல்லாமல் – மூன்றாம் வரி, ஆறாம் வரி, பத்தாம் வரி என இறுதி வரி வரை அதே கடினம் இருப்பதாகவே தோன்றுகிறது. ஏனெனில், கவிதை பற்றிப் பேச வேண்டியிருக்கிறது. இதுவரை நான் கவிதை குறித்து மிகக் குறைவாகவே பேசியுள்ளேன்; இன்னும் சொல்லப்போனால் ஒன்றுமே பேசவில்லை என்றேகூடச் சொல்லலாம். அப்படியிருந்தும் எப்போதாவது ஏதும் பேசியிருக்கிறேன் என்றால், அதில் எனக்கு பலத்த சந்தேகம்தான்; இந்தத் தலைப்பில் சரிவரப் பேச எனக்கு நல்ல திறமையில்லை. எனவே இந்த உரை குறுகியதாக இருக்கும். எல்லா ஒழுங்கின்மையும் சிறிய அளவில் இருக்குமாயின் எளிதாகப் பொறுத்துக்கொள்ள முடியும்.

சமகாலத்து கவிஞர்கள் தங்கள் மீதே அவநம்பிக்கையும் ஐயமும் கொண்டுள்ளனர். தங்களைப் பொதுவில் முன்வைக்கும்போது நாணியவாறு சிறு தயக்கத்துடன்தான் கவிஞர்கள் என்று ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால், இந்த கூச்சல் நிறைந்த காலத்தில், போதாமைகளை கவர்ச்சிகரமாகத் தொகுத்து இருந்தால் அவற்றை ஒப்புக்கொள்வது எளிதானது. அதைவிடவும், தங்கள் நற்பண்புகளை அங்கீகரிப்பது கடினம்; ஏனெனில் அவை ஆழமாக மறைக்கப்பட்டிருக்கும், நீங்களே அதனை நம்பமாட்டீர்கள். கவிஞர்கள், படிவங்கள் நிரப்பும்போதோ அல்லது புதியவர்களுடன் பேசும்போதோ, தங்கள் தொழிலை வெளிப்படுத்தாமல் இருக்க “எழுத்தாளர்” அல்லது “கவிஞர்” என்ற பொதுவான சொல்லையோ அல்லது அதனுடன் சேர்ந்து என்ன தொழில் செய்கிறார்களோ, அந்தத் தொழிலையும் சேர்த்துச் சொல்லிவிடுவார்கள். அதிகாரிகளோ பேருந்து பயணிகளோ ஒரு கவிஞரைச் சந்திக்கும்போது ஓரளவு நம்பாமையும் பதட்டமும் காட்டுகின்றனர். ஒருவேளை தத்துவவாதிகளும் இதே உணர்வுகளைப் பெறலாம். அவர்கள் சிறந்த நிலையில் இருப்பதால் “அறிஞர்” என்ற அடைமொழியுடன் தங்களை வகைப்படுத்திக் கொள்ளலாம். அதேபோன்று “தத்துவப் பேராசிரியர்” போன்ற பட்டங்களைச் சேர்த்துக்கொள்வதும் மதிப்புக்குரியதாகத் தோன்றலாம்.  

எனினும் கவிதைத் துறைசார்ந்த பேராசிரியர் என்று எவருமில்லை. ஏனெனில், கவிதை எனும் தொழில், படிப்பு, தேர்வுகள், குறிப்புகள், ஆவணங்கள் என அனைத்தும் தேவைப்படும் ஒரு பணியாக மாறிவிடும். அற்புதமான கவிதைகளை எழுதியதால் மட்டுமே ஒருவர் கவிஞராக முடியாது; ஒரு அதிகாரப்பூர்வ சான்றிதழ் தேவைப்படும். ரஷ்ய கவிதைகளை நினைவுகூறுவோம். நோபல் பரிசு பெற்ற ஜோசப் பிராட்ஸ்கி, ஒருமுறை “ஒட்டுண்ணி” எனக் குற்றம் சாட்டப்பட்டு நாடு கடத்தப்பட்டார். ஏனெனில் கவிஞராக இருப்பதற்கான உரிமை பெறும் சான்றிதழ் அவரிடம் இல்லை!  

சில ஆண்டுகளுக்கு முன், பிராட்ஸ்கியை நேரில் சந்திக்கும் பேறு கிடைத்தது. அவர் மட்டுமே தன்னைத்தானே “கவிஞர்” என அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைபவர் என்பதைக் கவனித்தேன். அந்தச் சொல்லை அவர் தடையின்றி, பெருமையுடன் உச்சரித்தார்.

இளமையில் அனுபவித்த கொடுமைகளை நினைவுகூர்ந்ததால் அவ்வாறு செய்திருக்கலாம் என்று எனக்குத் தோன்றியது.

மனித மாண்புகள் எளிதில் குலைக்கப்படாத அதிஷ்டம் கூடிய நாடுகளில், கவிஞர்கள் தங்கள் படைப்புகளை வெளியிடவும், உரையாடவும், புரிந்துகொள்ளவும் விரும்பினாலும், தங்களை மற்றவர்களுக்கு மேலாக காட்டிக்கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால் இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில், கவிஞர்கள் தங்கள் விசித்திர உடைகள், பழக்கங்களால் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்க முயன்றனர். இவை அனைத்தும் பொது வெளியில் காட்டிக்கொள்வதற்கு மட்டுமே. ஆனால் நிஜத்தில், கவிஞர்கள் தனிமையில், தங்கள் ஆடைகளையும் பாசாங்குகளையும் களைந்துவிட்டு, வெள்ளைக் காகிதத்தின் முன் அமர்ந்து, மிக மௌனமாக, பொறுமையாக, தங்களை எதிர்கொள்வார்கள். இதுவே அவர்களது மெய்மை வெளிப்படும் தருணம்.

மகத்தான விஞ்ஞானிகள், கலைஞர்களின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படங்கள் எண்ணற்றவை. இவை ஏதேச்சையாக நிகழ்ந்தவையல்ல. சிறந்த இயக்குனர்களால், அவர்களின் படைப்பாக்க செயல்முறையை இத்திரைப்படங்கள் ஊடாக சித்தரிக்க முயற்சிக்கப்படுகிறன. ஆய்வகங்கள், கருவிகள், சோதனைகள் போன்ற சுவாரஸ்யமான விஷயங்கள் பார்வையாளர்களை உடனடியாகக் கவரலாம். ஆனால் மீண்டும் மீண்டும் சிறிய மாற்றங்களுடன் திடுக்கிடும் திருப்பங்களை மீண்டும் உருவகிப்பது, எதிர்பார்க்கும் திருப்பத்தை அளிக்குமா? ஓவியர்கள் பற்றிய திரைப்படங்கள் கண்கொள்ளாக் காட்சிகளாக அமையக்கூடும். ஒரு மகத்தான ஓவியத்தின் சிருஷ்டிப்பின் ஒவ்வொரு நிலையையும், முதல் கோடு வரையப்படுவதிலிருந்து, இறுதி வர்ணம் தீட்டப்படுவது வரை காட்சிப்படுத்துவது சிறப்பாக வெளிப்படலாம். இசை அமைப்பாளர்களைப் பற்றிய திரைப்படங்களில், வெறும் அதிர்வுகள் மெல்ல உயர்ந்து முழுமையான ஒரு இசையாக முகிழ்ந்து வெளிப்படுவதை அபூர்வமாகக் காட்சிப்படுத்தலாம். இவை அனைத்தும் எளிதாக விளங்கிக் கொள்ளக்கூடியவைதான். ஆனால் படைப்பாக்கம் சிந்தனைதயாக வெளிப்படும் மனநிலையை விளக்க இயலாது. எனினும் குறைந்தபட்சம் திரைப்படத்தில் பார்க்கவும் கேட்கவும் ஏதும் இருக்கக்கூடும்.

ஆனால் இவற்றோடு ஒப்பிட்டால், கவிஞர்களின் நிலை பரிதாபகரமானது. அவர்களின் சிருஷ்டிப்பு நிலை, ஒளிச் சிறைக்குள் அடைக்கப்பட முடியாது. ஒருவர் ஒரு மேசையின் அருகில் அமர்ந்திருக்கலாம், அல்லது சௌகரியமான பெரிய நாற்காலியில் சாய்ந்திருக்கலாம், சுவரையோ மேற்கூரையை உற்றுப்பார்கலாம் அவ்வப்போது. அந்த மனிதர் ஏழு வரிகளை எழுதலாம், பின் பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு சில வரிகளை அழித்துவிடலாம், அதன் பிறகு இன்னும் ஒரு மணி நேரம் கடக்கும், அதில் எதுவும் நடைபெறாமல் போகலாம். இதனை காட்சிகளாகப் பார்பவர்கள் எப்படி சகித்துக்கொள்வார்கள்?

நான் சிருஷ்டிப்பு பற்றி குறிப்பிட்டேன். சமகாலக் கவிஞர்கள் இந்தக் கேள்விகளுக்கு தெளிவாக பதிலளிக்க மாட்டார்கள். அவர்கள் சிருஷ்டிப்பை உள்ளார்ந்து அனுபவித்திருந்தாலும், அதன் இயல்பை முழுமையாக மற்றவர்களுக்கு விளக்க முடியாது. ஏனெனில் அவர்கள் தங்களுக்குள் இதை முழுமையாக புரிந்துகொண்டிருக்க வாய்ப்புக் குறைவு.

என்னிடமும் இதே கேள்வி எழுப்பப்படும்போது, நான் பதில் கொடுக்க முன்னர் சிந்தனை செய்வேன். ஆயினும், என் பதில் இதுவே: சிருஷ்டிப்பு என்பது கவிஞர்கள் அல்லது கலைஞர்களுக்கு மட்டும் உரிய மதிப்புமிக்க விஷயமில்லை. ஆனால் இது சிலருக்கு மட்டும் கைவரக்கூடிய விஷயம் என்று சொல்வேன். அவர்கள் செய்யும் பணி மீதிருக்கக்கூடிய ஈடுபாடு, காதல், கற்பனைத்திறன் ஆகியவற்றின் கலவையால் எழும் ஒன்று; அவர்களுக்கே வசப்படும். இதில் மருத்துவர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள் உற்பட இன்னும் பல தொழில்களை செய்பவர்களைச் சேர்க்கலாம். அவர்கள் தங்களுடைய பணியில் புதிய சாகாசங்களை எதிர்கொள்வதோடு புதிய அனுபவங்களையும் அறிகிறார்கள். பின்னடைவுகளும், தொல்லைகளும் அவர்களது ஆர்வத்தை ஒருபோதும் நிறுத்தாது. அவர்கள் தங்களுக்கு எழும் ஒவ்வொரு பிரச்சனையும் தீர்க்கும்போது, புதிய கேள்விகளை எதிர்கொள்கிறார்கள். சிருஷ்டிப்பு என்பது எதுவாக இருந்தாலும், அது “அதனை நான் முற்றிலும் அறியவில்லை” என்ற தொடர் மயக்கத்தின் மூலம் மீண்டும் மீண்டும் தொடர்கிறது.

இதனால், சிருஷ்டிப்பு என்பது கவிஞர்களுக்கு மட்டுமே உரிய சிறப்புரிமையாக கருதுவதை மறுத்தாலும், அவர்களை அதிர்ஷ்டம் நிறைந்த அச்சிறிய சிறப்பு குழுவில் வைக்கிறேன்.

இந்த நிலையில், என் உரையை செவிமடுப்பவர்களுக்கு சில கேள்விகள் எழலாம். பல்வேறு துன்பங்களைக் கொடுக்கும் கொடுங்கோலர்கள் கூட தங்களது தீங்கிழைக்க கூடிய தொழிலை மகிழ்ச்சியுடனே செய்கிறார்களே என்பது – உண்மைதான் அவர்கள் அவ்வாறே மகிழ்ச்சியுடன் தீமையான செயல்களில் ஈடுபடுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு இருக்கும் அறிவு, புதிய கேள்விகளுக்கு இடமளிப்பதில்லை. முன்னர் அறிந்திருப்பதே அவர்களுக்கு போதுமானது. மேலும் புதியதாக எதனையும் அவர்கள் அறிய விரும்புவதுமில்லை. ஏனெனில் அதுவே அவர்களின் வாதங்களின் வீரியத்தைக் குறைக்கும். புதிய கேள்விகளுக்கு வழியளிக்காத எந்த அறிவும் விரைவில் மடிந்துவிடுகிறது என்பதே உண்மை. இது வாழ்வதற்கு தேவையான வெப்பநிலையை வழங்குவதில்லை, மாறாக புராதன மற்றும் நாவீன வரலாற்றில் அச்சுறுத்தல் தரும் ஒன்றாக மட்டுமே இருக்கும். 

இதனாலேயே நான் “நான் அறியவில்லை” என்ற சிறிய வாக்கியத்தை மிகவும் மதிக்கிறேன். அது சிறியதாக இருக்கலாம், ஆனால் அது மெல்லிய இறக்கையில் பயணிக்கிறது. அது நம்முடைய வாழ்க்கையை விரிவாக்குகிறது. அதாவது நம்முடைய உள்ளங்களுக்குள் உள்ள இடைவெளியையும், வெளிப்புற பரப்புகளையும் இணைக்கிறது. ஐசக் நியூட்டன் “நான் அறியவில்லை” என்று கருதவில்லை என்றால், அவர் சிறிய தோட்டத்தில் விழும் பழங்களை உண்டு மடிந்திருப்பார். அதேபோல, எனது பூர்விக நாட்டைச்சேர்ந்த மாரி ஸ்க்ளொடோஸ்கா-கியூரி “நான் அறியவில்லை” என்று சொல்லவில்லை என்றால், அவள் அதிகம் மகிழ்ச்சி கொண்ட நடுத்தர குடும்பங்களில் இருந்து வரும் இளம் பெண்களுக்கான தனியார் பள்ளியில் வேதியியலைப் பயிற்றுவிக்கும் ஆசிரியையாக வாழ்ந்து மடிந்து போயிருப்பாள். ஆனால் அவள் “நான் அறியவில்லை” என்று தொடர்ந்து தனக்குள்ளே சொன்னாள். அதன் போதாமைகளை அறிந்துகொண்டே இருந்தாள். இந்த வார்த்தைகள் அவளை ஒருமுறை அல்ல, இரண்டு முறைகளிலும் ‘ஸ்டாக்ஹோம்’ வரை கொண்டு சென்றன, நோபல் பரிசு பெறும்வரை.

கவிஞர்கள் தொடர்ந்து “நான் அறியவில்லை” என்று சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். ஒவ்வொரு கவிதையும் இந்தக் கேள்விக்கான விடையாகலாம். ஆனால் கடைசி வரி முடிந்தவுடன், இது போதாது எனத் தோன்றும். இதனால் கவிஞர் மீண்டும் கவிதைகள் எழுத முயல்வார்கள். இந்த முயற்சி கவிஞர்களிடம் தொடர்ந்து சுழற்சியாக நிகழ்ந்தவாறு இருக்கும். இது அதிருப்தியின் தொடர்ச்சியான விளைவாகும். ஒரு பெரும் கிளிப் மூலம் இலக்கிய வரலாற்றாசிரியர்களால் ஒரு மாபெரும் காகிதத்தில் இணைக்கப்படும், அதை அவர்கள் “இலக்கிய ஆக்கம்” (oeuvre) என்று அழைக்கின்றனர்.

சில நேரங்களில் கனவு காண்கிறேன்: moving lament on the vanity of all human endeavors எழுதியவருடன் பேசுகிறேன். அவரை வணங்கி, அவரது கைப் பிடிப்பேன்: “உலகில் புதிது எதுவுமில்லை என எழுதினீர்கள். ஆனால் நீங்களே புதியவர்! உங்கள் கவிதை புதியது. உங்கள் வாசகர்கள் புதியவர்கள். நீங்கள் அமர்ந்திருக்கும் சைப்ரஸ் மரம் புதியது. இப்போது புதிதாக எதை எழுதப்போகிறீர்கள்? முன்பு சொன்னவற்றை மறுக்கலாமா? மகிழ்ச்சி பற்றி எழுதலாமா? குறிப்புகள் எடுத்தீர்களா? ‘எல்லாவற்றையும் எழுதிவிட்டேன்’ என்று ஒரு கவிஞர் சொல்லமுடியாது—குறிப்பாக உங்களைப் போன்றவரால்!”  

நான் சில நேரங்களில் ஒருபோதும் நிகழக்கூடாத நிகழ்வுகளை கனவு காண்கிறேன். அவற்றை துணிச்சலுடன் கற்பனை செய்கிறேன், எடுத்துக்காட்டாக, மனித செயல்களின் விரயம் பற்றிய அந்த உணர்வுப்பூர்வமான குற்றச்சாட்டை எழுதிய எக்கிளேசியஸ்தஸுடன் பேசும் வாய்ப்பு எனக்கு கிடைக்கிறது என்று. நான் அவருக்கு ஆழமான நன்றியைச் செலுத்துவேன், ஏனெனில் அவர், குறைந்தது என்னுடைய பார்வையில், மிகப்பெரிய கவிஞர்களில் ஒருவராக இருக்கிறார். அதற்கு பிறகு, நான் அவருடைய கையை தழுவுவேன். “சூரியன் கீழ் எதுவும் புதியதல்ல” இதுதான் நீங்கள் எழுதியது, எக்கிளேசியஸ்தஸ். ஆனால் நீங்களே சூரியன் கீழ் புதியவராக பிறந்தவர். அதேபோல, நீங்கள் உருவாக்கிய கவிதையும் புதியதே, ஏனெனில் உங்களுக்கு முன்பு யாரும் அதை எழுதியிருக்கவில்லை. உங்களுடைய அனைத்து வாசகர்களும் புதியவர்களே, ஏனெனில் உங்களுக்கு முன் வாழ்ந்தவர்கள் உங்கள் கவிதையைப் படிக்க முடியாது. நீங்கள் அமர்ந்திருக்கும் இந்த சைப்ரஸ் மரம் காலத்தின் தொடக்கத்திலிருந்து வளர்ந்து கொண்டிருக்கவில்லை. இது உங்கள் மரத்தைப் போல் தோன்றும், ஆனால் முழுமையாக அதேபோல் இல்லாத, மற்றொரு சைப்ரஸ் மரத்திலிருந்து உருவாகியது. எக்கிளேசியஸ்தஸ், இப்போது நீங்கள் சூரியன் கீழ் எந்த புதிய செயலை மேற்கொள்ளப்போகிறீர்கள்? நீங்கள் முன்பு எழுதிய கருத்துகளுக்கு மேலும் ஒரு புதிய சேர்ப்பா? அல்லது, சிலவற்றை மறுத்துவிடும் ஆசை உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறதா? உங்கள் முந்தைய படைப்பில் நீங்கள் மகிழ்ச்சியை பேசினீர்கள் – அது தற்காலிகமானதென்றாலும். அதனால், உங்கள் ‘சூரியன் கீழ் புதிய’ கவிதை மகிழ்ச்சியைப் பற்றியதாக இருக்குமா? நீங்கள் முன்னரே குறிப்புகள் எடுத்துள்ளீர்களா? வரைவுகளை தயார்செய்துவிட்டீர்களா ? ‘நான் எல்லாவற்றையும் எழுதிவிட்டேன், எனக்கு சேர்க்க ஒன்றும் இல்லை’ என்று நீங்கள் சொல்வீர்களா என சந்தேகம். உலகில் எந்த கவிஞரும் இதைச் சொல்லமாட்டார்கள், மேலும், தங்களைப் போன்ற மகத்தான கவிஞர்கள்.

இந்த உலகமானது அதன் விரிந்த பரப்பால் எமது பலவீனத்துடன் சேர்ந்து பயமூட்டுகின்றன. தனிமனித துன்பத்தைப் பற்றி அலட்சியம் காட்டுகிறது. விண்மீன்களால் குத்தப்பட்ட விரிவுகள்—இறந்த கோள்களா? இன்னும் உயிரற்றவையா? தெரியாது. இந்த அளவிடமுடியாத அரங்கில், நமது டிக்கெட் மிகக் குறுகியது. ஆனால் இது வியக்கத்தக்கது.

ஆனால் “வியக்கத்தக்கது” என்பது ஒரு தருணத்தை மறைக்கும் திறன்மிக்க தந்திரமான ஒரு சொல்லாகும். ஏனெனில், நாம் பொதுவாக அறிந்த மற்றும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நிலைப்பாட்டில் இருந்து விலகிய சில விடயங்களைப் பார்த்து தான் ஆச்சரியப்படுகிறோம். ஆனால், உண்மை என்னவென்றால், அத்தகைய ஒரு வெளிப்படையான, பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட உலகம் எதுவும் இல்லை. நம்முடைய ஆச்சரியம் என்பது தன்னிச்சையாகவே இருக்கும், மற்ற ஏதோ ஒன்றுடன் ஒப்பிட்டு உருவாகியதல்ல.

நிச்சயமாக, நாம் அன்றாட வாழ்கையில், ஒவ்வொரு வார்த்தையையும் மிக கவனமாக பரிசோதிக்காமல் பேசும் போது, “வழக்கமான உலகம்,” “வழக்கமான வாழ்க்கை,” “வழக்கமான நிகழ்வுகளின் ஓட்டம்” போன்ற சொற்றொடர்களைப் பயன்படுத்துவோம். ஆனால், கவிதையின் மொழியில், அங்கு ஒவ்வொரு வார்த்தையும் தேர்ந்தெடுக்கப்படும்போது, எதுவும் சாதாரணமானதோ இயல்பானதோ அல்ல.
கவிதையின் மொழியில், ஒவ்வொரு சொல்லும் எடைபோடப்படுகிறது. ஒரு கல்லும், அதன் மேலுள்ள மேகமும் வழக்கமானவை அல்ல. ஒரு நாளும், இரவும் இல்லை. குறிப்பாக, எவரது உயிரும் இயல்பானது அல்ல.

(மூலம்: விஸ்லவா சிம்போர்ஸ்கா; போலிஷிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பு: ஸ்டானிஸ்லாவ் பரன்சாக் மற்றும் கிளேர் கவானாக்)

சஜன் பரந்தாமன்

தற்சமயம் பணி நிமித்தம் ஜெர்மனியில் வசித்துவருகிறார். மொழியாக்கம் மீது ஆர்வம் கொண்டவர். பல்வேறு புனைப்பெயர்களில் கவிதைகள் எழுதியுள்ளார்.

உரையாடலுக்கு

Your email address will not be published.