
1
போரில் தப்பித்த ஒருத்தி
குல்லா கடை வைத்திருக்கிறாள்
அவளுக்கு ஒருகை இல்லை
ஆனாலும் அழகாக சிரிக்கிறாள்
தினமும் தனது சின்ன மகன்
சாலையை கடக்கும் போது பதறுகிறாள்
அவனுக்காக பத்திரப்படுத்தி வைத்த
ப்ளம்ஸ் பழங்களை கொடுக்கிறாள்
பேரம் பேசுபவர்களிடம் நெளிந்தும்
தின தவணைக்கு பயந்தும்
மாலை ஐந்து மணிக்கெல்லாம்
கடையை அடைக்கிறாள்
இரவில் மகனுக்கு சோறுட்டி
போர்கால கதையொன்றை சொல்லி
தூங்க வைக்கும் அவளுக்குத்தான்
வருவதேயில்லை நல்லுறக்கம்
விடிய விடிய முழித்திருப்பவளுக்கு
ஒவ்வொரு இரவிலும் ஆறுதலாக
கட்டியணைக்க முளைக்கிறது
அந்த இல்லாத இன்னொரு கை.
••~
2. பொதி
முதுகில் பெரிய பொதியோடு
ஊர் முச்சந்தியில் உட்கார்ந்திருந்தவனை
ஒரு கூட்டம் சுற்றுகிறது
“எங்கருந்து வர்ற”
பொதியை திறந்து
நெகிழி டப்பாவில் இருந்த
அழுகிய திராட்சை பழங்களை
கீழே கொட்டினான்
“எத்தனை நாளா நடந்து வர”
பொதியை திறந்து
துவைக்காத பன்னிரெண்டு சட்டைகளை
வெளியே எடுத்து வைத்தான்
“உன் அம்மா அப்பா எங்கருக்காங்க”
பொதியை திறந்து
வெள்ளை துணியால் மூடிய
இரண்டு சிறிய மண் குடுவைகளை
வெளியே எடுத்து வைத்தான்
“கூடப்பிறந்தவங்க எத்தனை பேரு”
பொதியை திறந்து
பொம்மையை எடுத்தவன்
தனியாக விளையாடத் தொடங்கினான்
நான் அந்த பொதியின் மீது ஆர்வமாகிவிட்டேன்
இன்னும் அதற்குள்
என்ன என்னவெல்லாம் இருக்கும்
நுரைகளை ஆர்ப்பரிக்கும் நீலகடல்
நடக்க நடக்க வளரும் பெரும் மலைகள்
ஓட ஓட இளைக்காத குதிரைகள்
பதிலளிக்கும் தெய்வங்கள்
சுல்தானின் வாள்
என ஏதேதோ யோசிக்கத் தொடங்கினேன்
அப்போது கூட்டத்தில் தடித்த ஆளொருவன்
“சாப்பாட்டுக்கு என்ன செய்வ”
என கேட்டான்
இம்முறை அவன் எதையும் எடுத்து
வெளியே வைக்கவில்லை
பொதியை மடியோடு இறுக்கி அணைத்து அங்கேயே சுருண்டு
படுத்துக்கொண்டான்.
•••~
3. அழைப்பு
நீருக்குள்ளிருந்து
கையொன்று உயர்ந்தது
அதை அவள் பார்த்தாள்
அது அவளை அழைத்தது
அவள் நீரில் இறங்கினாள்
அந்த கை மீனாகியது
ஆழம் சென்றதும் பாறையாகியது
இறுதியில் புழுதியாகி மறைந்தது
அவளுக்கு மூச்சு திணற
இப்போது அவள் புழுதியாகி
பாறையாகி
மீனாகி
நீருக்கு மேலே வந்தாள்
கரையில் சாவகாசமாக
நின்றுக்கொண்டிருந்த என்னிடம்
அவள் தெரிகிறாளா? என கேட்டார்கள்
நான் குளத்தை பார்த்தேன்
எதுவும் புலப்படவில்லை என்றேன்
அங்கே பார் நன்றாக பார்
என பலத்து கத்தினார்கள்
குளத்தின் மேலே
ஒரு சிறு இலை
அது அசைகிறது
அது அழைக்கிறது.
•~•~•

ச.துரை
ச.துரை, ராமேஸ்வரம் அருகேயுள்ள மண்டபம் ஊரில் வசித்துவருகிறார். ‘மத்தி’ என்ற கவிதைத்தொகுப்பின் ஊடாக பரவலான கவினிப்பைப் பெற்றவர்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.

‘ பொதி ‘ கவிதை துரையின் சிறந்த கவிதைகளில் ஒன்றாக கூடியுள்ளது.
சொல்முறை ஒரு கதை பாணி என்றாலும் கவிதை மொழி மேலோங்கி சிறந்த கவிதையாகியுள்ளது.
துரை தொடர்ந்து கவிதைதளும் நிறைய எழுத வேண்டும் என விரும்புகிறேன்.
வாழ்த்துக்கள் மாப்ள
அருமை மாப்ள
கவிதைகள் அருமை வாழ்த்துக்கள்
மூன்று கவிதைகளும் முத்தானது மிக அருமை யதார்த்தம் ஆசிரியருக்கு வாழ்த்துக்கள
கவிஞர் கவிப்ரியன் தேசிகன் மாங்காடு சென்னை தொடர்புக்கு 9840579311
மூன்று கவிதைகளும் முத்தானது மிக அருமை யதார்த்தம் ஆசிரியருக்கு வாழ்த்துக்கள
கவிஞர் கவிப்ரியன் தேசிகன் மாங்காடு சென்னை தொடர்புக்கு 9840579311