/

ச.துரை கவிதைகள்

பாவமன்னிப்பு

அந்த ஒரு ஜோடி கால்களையும்
நேற்றிரவு பார்த்தேன்
அறையில் அங்கும் இங்கும் நடந்து
கடைசியாக என் தலைமாட்டில் நின்றது
அவைகள் நகருவதாய் தெரியவில்லை
கொஞ்சமும் கருணைக் காட்டி விலகுவதாயில்லை
அதிர்ந்து போய் அப்படியே கிடந்தேன்
பிறகென்னவோ
சிறிது நேரத்தில் எனது எல்லா
குற்றங்களுக்கும் கிடைத்த விமோசனமாய்
அந்த கால்கள் தோன்றின
முழுமையாக
மிக முழுமையாக அதை நம்பித்தான்
அந்த வெளுத்த உடைக்குள் நின்றுக்கொண்டிருந்த
அசராத இருகால்களையும் பற்றினேன்
என்னை மன்னித்து விடு!
மன்னித்து விடு! என கெஞ்சினேன்
பதறிப்போய் விலகிய அந்த கால்கள்
பேய்! பேய்! என கத்தியது
வெலவெலத்து எழுந்து நானா! என்று கேட்டேன்
அது ஆமாம் நீதான்! நீதான்! என சொல்லியது.

சாயல்

நடுநிசியின்
சிகரெட் சாம்பலை
தட்ட வந்த நானும்
எதிர் வீட்டு ஜெர்மன் நாயும்
ஒருவரை ஒருவர்
பால்கனியில் நின்றபடி
பார்த்துக் கொண்டோம்
தூங்கவே தெரியாததாய்
மரத்துப்போன எங்கள் கண்களை
அந்த இரவில் மாற்றிக் கொண்டோம்
இந்த நிலவொளியற்ற இருட்டில்
தனித்து நிற்கும்படி
உனக்கென்ன பிரச்சினை என கேட்டேன்
செழித்த மலர்களால் பின்னிய மாலை
மறுநாள் சோர்ந்திருப்பதை போலான
தனது இரு பஞ்சு கால்களையும்
கம்பியில் எக்கி வைத்தபடி ஜெர்மன் சொன்னது
இன்று ஒரே அளவுள்ள
இரண்டு பச்சை மீன்களை சாப்பிட்டேன்
அதன் சாயல் என் எஜமானின்
இளம் பிள்ளையின்
பிஞ்சு கைகளை போல் அப்படியே இருந்தது.

இப்படியொரு…

ஒருவேளை
இந்த பாதை மட்டும்
பிறக்காமல் போயிருந்தால்
நான் இங்கு வந்திருக்கவே மாட்டேன்
இப்படியொரு மரத்தை
இப்படியொரு நாணலை
பார்த்திருக்கவே மாட்டேன்
எல்லாம் மாறியிருக்கும்
ஒருவேளை இந்த பாதை மட்டும்
பிறக்காமல் போயிருந்தால்
துளிகூட புலம்பியிருக்க மாட்டேன்
அம்மாவின் கழுத்தை கவ்விக்கொண்டு
அப்படியே இருந்திருப்பேன்
அவள் காண்பிப்பதை மட்டுமே நம்பியிருப்பேன்
இப்படியொரு குளத்தை
இப்படியொரு சிறுநங்கை செடியை
அதன் மேல் ஏறிப்போகிற நாகத்தை
பார்த்திருக்கமாட்டேன்.

விலாசம்

நான் யாருடைய குழந்தை தெரியுமா
நெற்றியில் விழும் சிலுவைக்காக
முக்காடிட்டபடி நீண்ட வரிசையில் நிற்கிறாளே
அவளுடைய குழந்தை

நான் யாருடைய வார்த்தை தெரியுமா
உச்சிக்கொம்பு முறியும் போது
முதலில் எதை நினைத்து
என்ன சொல்லிக் கத்தினேனோ
அதனுடைய வார்த்தை

நான் யாருடைய பாவம் தெரியுமா
நூறு சவுக்கடி கொடுத்து
ஒரேயொரு சொட்டு தண்ணீரை கொடுத்தானே
அவனுடைய பாவம்

நான் யாருடைய உடல் தெரியுமா
நீள சவக்கிடங்கில் கிடந்தவனை
முற்றிலும் மூடியபிறகும் ஓடிவிடுவானோ
என சந்தேகித்து சமாதியிலே
பெரிய கல்லைத் தூக்கி வைத்தானே
அவனுடைய உடல்.

ச.துரை

ச.துரை, ராமேஸ்வரம் அருகேயுள்ள மண்டபம் ஊரில் வசித்துவருகிறார். ‘மத்தி’ என்ற கவிதைத்தொகுப்பின் ஊடாக பரவலான கவினிப்பைப் பெற்றவர்.

தமிழ் விக்கியில் 

உரையாடலுக்கு

Your email address will not be published.