காலைநடையின்போது வழியில் நடந்து போய்க்கொண்டிருந்த ஒருவர் என்னை பார்த்து வணங்கினார், நான் திரும்ப வணங்கினேன். ஒரு சார்லி-சாப்ளின் கணத்திற்குபிறகு கால-இட உணர்வை அடைந்தபோதுதான் நான் நடந்தபடியே கோவிலுக்குள் வந்துவிட்டிருக்கிறேன் என்றும், அவர் என்னை வணங்கவில்லை கடவுளை வணங்கினார் என்பதும் புரிந்தது. என் நினைவு கழுதையை கதாப்பாத்திரமாக கொண்ட ஈசாப் கதைக்கும், என் பால்யகாலத்திற்கும் திரும்பியது. ஈசாப் கதையில் ஒரு கழுதையின் மேல் அமர்ந்திருக்கும் அதன் உரிமையாளன் தெய்வச்சிலை ஒன்றை கையில் வைத்திருக்கிறான். அவர்கள் சென்றுகொண்டிருக்கும்போது வழியில் வந்த ஒருவன் தெய்வச்சிலையை வணங்கியபோது தன்னை வணங்குவதாக நினைத்த கழுதை பெருமிதவுணர்வில் அங்கேயே நின்றுவிட்டது. ஒரு இடத்தில் நின்றுவிட்டால் கழுதையை மீண்டும் கிளப்புவது கடினம். உரிமையாளனிடம் நல்ல அடி வாங்கிய பிறகுதான் தான் தெய்வம் அல்ல தெய்வத்தை சுமக்கும் கழுதை என்பது அதற்கு புரிந்தது.
எங்கள் வீட்டில் நடைமுறை அறிவு மிகமிக குறைவான நபர் நான்தான். என் பிடிகள் இறுக்கமானவை அல்ல. நான் கட்டிய பசு கயிறை அவிழ்த்துவிட்டு பக்கத்து தோட்டத்தில் உள்ள பயிர்களை சாப்பிட ஆரம்பித்துவிடும். என்னை செய்யச்சொன்ன வேலைகள் எதுவும் ஒருமுறைகூட சரியாக நிகழவில்லை. சொன்னால் போதாது என்று அதை எப்படி செய்வது என்று செய்துகாட்டினாலும் எனக்கு அது நினைவில் இருப்பதில்லை. கடவுளே இப்படி ஒரு கழுதை இருக்கமுடியுமா! நான் கேள்விப்பட்ட யாரும் என் அளவுக்கு தடுக்கி விழுந்தவர்கள் இல்லை. சேறுபட்ட சட்டையையும், கால்சட்டையையும் வீட்டுமுகப்பில் கழற்றிவைத்துவிட்டு அடுப்புச்சூட்டில் என்னையும் முன்அட்டை கிழிந்த புத்தகத்தையும் காயவைப்பதை தன் இருப்பிடத்தை இழந்த பூனை அலைக்கழிப்புடன் பார்த்தபடியே இருக்கும். வெளியே போனாலே கீழே விழுவேன். கூர்மையான விஷக்கல்லை(விஷமுறிவுக்காக பயன்படுத்தப்படும் கல்) மிதித்துவிடுவேன். தோட்டத்திற்கோ, காலியிடத்திற்கோ போனால் கண்ணாடிச்சில்லுகள் குத்திவிடும். ஒவ்வொருமுறையும் திட்டு வாங்கியபடிதான் நான் வீடு திரும்புவேன். முள்ளும், வசைச்சொற்களும் என்னை துளைப்பதற்காக காத்திருந்தன. ஆனால் முள்ளை எடுக்கும்போது உள்ள அதீதமான கவனமும் கண்ணாடிச்சில்லுகளை எடுத்துவிட்டு உப்புவைத்து குத்திய இடத்தை மெல்ல மெல்ல ஒத்தடம்கொடுக்கும் பல மணிநேரம் நீளும் பராமரிப்பும் தரும் இன்பத்தை, (பூமியில் அப்போது நான் மட்டுமே இருக்கிறேன்) விஷக்கல் குத்திய குதிகாலில் ஊதப்படும் மூச்சுக்காற்றின் வெம்மையை என்னைத்தவிர வேறு யாரும் அறியமாட்டார்கள். ஒரு கழுதையின் நெற்றியை தடவிக்கொண்டே இருங்கள், நான் அனுபவித்த நன்றியுணர்ச்சியை அதன் கண்களில் காணமுடியும்.
சின்னவயதில் எங்கள் அயல்பக்கத்தில் இருந்த ஊசிபோன்ற கொம்புகள் கொண்ட கறுப்புநிற காளைக்கன்று என்னை மிகவும் அச்சுறுத்தியது. எப்படியோ கயிறால் அதை கட்டிவிட்டு நான் தப்பி ஓடிவிட்டேன். கயிற்றின் எல்லைவரை அது பாய்ந்துவந்தது. என் கனவில் அது கயிறை அவிழ்த்துவிட்டு பின்னாலிருந்து என்னை துரத்தி வருகிறது. வீட்டில் உள்ள அனைவரும் தூங்கத்தொடங்கியிருக்கும் நேரத்தில் சகிக்கமுடியாத ஓசையில் அலறியபடி படுக்கையிலிருந்து பதறி எழுந்தேன் (நாம் பிரக்ஞாபூர்வமாக எவ்வளவு முயன்றாலும் அவ்வளவு ஓசையை எழுப்பமுடியாது)
சரியான நேரத்தில் தூங்கி எழுந்துவிட்டால் ’கழுதை’ என்று திட்டுவாங்காமல் தப்பித்தேன் என்பாள் என் தங்கை. ’கழுதை’ என்ற அழைப்பை என்னைவிட கழுதை கேட்டிருக்க வாய்ப்பில்லை. அதில் ஆச்சர்யம் எதுவுமில்லை. நாய்க்குட்டியை யாரும் ‘ நாயிண்டெ மோனே’ என்று சொல்வதில்லை அல்லவா. கழுதை தான் செய்யவேண்டிய வேலைகளில் என்னைப்போல ’கழுதை’ இல்லை என்பது என்னை திட்டுபவர்களுக்கு தெரியாது. அதுதான் உண்மை, தேவையில்லாமல் கழுதை என் பெயரால் பழியை ஏற்கிறது.
வரலாற்றில் கழுதை ’கழுதை’யாக ஆனது பல யுகங்களுக்கு பிறகுதான். பழைய எகிப்தின் தொல்பொருள்கள் நிறைந்த இடமான அபிடோஸ் (Abydos) அரசனின் கல்லறையில் கழுதையின் எலும்புகளும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது, அந்த எலும்புகளை ஆராயும்போது அந்த கழுதைகள் வாழ்ந்தகாலத்தில் நன்கு பராமரிக்கப்பட்டிருக்கின்றன என்பதை அறியமுடிகிறது. எல்லா ஆற்றல்களும், மகத்துவங்களும்கொண்ட அரசன் தன்னுடன் சேர்ந்து முடிவிலிவரை உறங்க கழுதையை தேர்ந்தெடுத்திருக்கிறான் என்றால் அன்று கழுதை அனுபவித்திருந்த ராஜவாழ்க்கையை எண்ணிப்பார்த்து ஆச்சர்யப்பட மட்டும்தான் இன்று நம்மால் முடியும்.
கழுதைதான் முதல்வாகனம். 6500 ஆண்டுகளுக்கு முன் குதிரை கழுதையாக இருந்தது (குதிரையை பழக்கப்படுத்த மேலும் 1000 வருடம் ஆனது என்கிறார்கள் தொல்லியலாளர்கள்). பாலுக்காக, இறைச்சிக்காக, சரக்குபோக்குவரத்திற்காக கழுதை பயன்படுத்தப்பட்டது. சலனவேகம் குறைவான காலகட்டத்தில் கழுதையின் குறைவான வேகம் அசௌகரியமானதாக இல்லை, அது இன்றியமையாததாக இருந்தது. வழியில்லாத வழியில் அது கவனமாக நடந்து இலக்கை அடைந்தது. (அதன் தூக்கிய பெரிய காதுகள் அந்த காலகட்டத்தின் இன்றியமையாமை என்பதுபோல மிகக்கச்சிதமாக பொருந்தியிருக்கிறது. புத்தனின் உருவத்தை முதன்முதலில் கற்பனைசெய்த கலைஞன் அவரின் நீளமான காதுகளை அவரின் கூர்ந்த கவனத்தை சுட்டுவதாக உருவகித்திருக்கிறான்). வயதானவர்களும், குழந்தைகளும் கழுதைமேல் பாதுகாப்பாக உணர்ந்தனர். அகதிகளின் வாகனமாக பூமியில் தோன்றிய கிருஸ்து தனக்கு பொருத்தமான அம்சங்களை கழுதையில் கண்டுகொண்டார்.
கிமு 3000 முதல் அஸீரிய (Assurian) வணிகர்கள் கழுதைவண்டிகளில் வெள்ளீயத்தையும், ஆடைகளையும் மெசபடோமியாவில் உள்ள அஸ்ஸூரிலிருந்து பழைய அனடோலியன் நகரமான கானிஷுக்கு தொடர்ச்சியாக எடுத்துக்கொண்டு சென்றதாக களிமண் பலகைகளில் (clay cuniform tablet) குறிப்பட்டப்பட்டிருக்கிறது. கிமு 1900வரை கழுதைவண்டியில் பயணம்செய்வது கௌரவக்குறைவான விஷயமாக கருதப்படவில்லை. ரோமஇனத்தை சேர்ந்தவர்கள் இங்கிலாந்திற்கு குடியேறியபோது, கூடவே கழுதைகளும் குடியேறின(கி பி 43). சீனாவில் பெண்கள் கழுதைமீது அமர்ந்து போலோ விளையாடடியதற்கான சான்றுகள் கிடைத்திருக்கிறது (கிபி 878). கிரேக்க மருத்துவர் ஹிப்போகிராட்டஸ் கழுதைப்பாலை காய்ச்சலுக்கும், இதயம்சார்ந்த நோய்களுக்கு, மூட்டு வலிக்கும் பாம்புவிஷத்திற்குமான மருந்து என்று குறிப்பிடுகிறார். க்ளியோபாட்ரா தன் அழகை அதிகரிப்பதற்காக பாலில் குளிக்கவேண்டும் என்பதால் சில நூறு கழுதைகளை பேணியிருக்கிறாள். முக அழகை அதிகரிக்க கழுதைப்பாலில் எழுநூறுமுறை முகம்கழுவிய பெண்களைப்பற்றி ப்ளினி(Pliny) விவரிக்கிறார். பல ஆயிரம் வருடங்கள் மனிதனின் பாரங்களை கழுதை சுமந்தது. 46 மில்லியன் கழுதைகள் மனிதனுக்காக வேலைசெய்வதாக ஐக்கிய நாடுகள் சபையின் உணவு, வேளாண்மை அமைப்பின் (FAO(Food and Agriculutural Organization)) 2018ஆம் ஆண்டு கணக்கெடுப்பு சொல்கிறது.
நான் என் பால்யகாலத்தை திரும்பிப்பார்க்கிறேன். வறியவர்களின் குதிரை அல்ல கழுதை. அது மீட்பனின் குதிரை என்றும் அகற்றமுடியாத களங்கம் எதுவும் என்னிடம் இல்லை என்றும் உணர்கிறேன் (இப்போதுதான் குளித்து வந்ததாக குதிரையைப்பார்த்தால் தோன்றும். தண்ணீரையே பார்த்ததில்லை என்றும் தோன்றும் கழுதையைப்பார்த்தால். கழுவி சுத்தமாக வேண்டும் என்று தோன்றுவதால் அது கழுதை). மன்னிக்கமுடியாதது என எதுவுமே இல்லை. சகிப்புத்தன்மையை காந்திக்கு உபதேசித்த கிருஸ்து கழுதையில்தான் சஞ்சரித்தார். எந்த குதிரையாலும் சென்றுசேரமுடியாத இடத்திற்கு கழுதையை இட்டுச்சென்றார்.
குதிரை நிற்கும்போதும் பாய்கிறது
கழுதை நடக்கும்போதும் நிற்கிறது
சென்றுசேரவேண்டிய தூரம் குறைந்துகொண்டே வருவது
கழுதைக்கு தெரியும்.
அவசரமாக எங்கே போகிறீர்கள் என்று அதன் துயரம் நிறைந்த கண்கள் வருத்தப்படுகின்றன
அதிகப்படியான வசைகளை கேட்டதால் பெரியதாக ஆன காதுகள்
சகித்து சகித்து கோபம் துளியும் இல்லாமலான முகம்
தன் எடையைவிட இருமடங்கு அதிக எடையை சுமப்பவர்கள் யாருக்கும் எந்த மதிப்பும் இருப்பதில்லை
மலைப்பிரசங்கம் செய்யும் கிருஸ்து கழுதைமேல் இருக்கும் கிருஸ்துவைவிட கிருஸ்து அல்ல.
என் பால்யகாலம் கழுதையாக இருந்தது. நான் அதன்மீது ஏறிதான் இங்கு வந்து சேர்ந்திருக்கிறேன். கழுதை மீது அல்லாமல் வேறெந்த வகையில் இங்கு வரமுடியாது.
குதிரை நம் வாகனமாக ஆனவுடன் பாதைகள் இன்னும் பரந்து விரிவானதாக ஆகியிருக்கும். மனிதவிழைவு குதிரைவேகத்தில் அதிகரித்திருக்கலாம். மனிதனின் பொறுமையின்மை அதிகமாக ஆகியிருக்கும். மனிதனின் அழகியல்நோக்கும் மாறிவிட்டிருக்கும். மனித நாகரிகத்தில் தான் பயன்படுத்தும் விலங்குகளுக்கான அவசியமான தகுதிகளாக அவன் எண்ணியது வளர்ந்தபடியே இருந்தது. ஒருகட்டத்தில் கழுதையைவிட அதன் உடன்பிறப்பான குதிரை மனிதனின் தகுதிகளுக்கு மிகப்பொருத்தமானதாக ஆனது (மனிதன் விலங்குகளில் எதிர்பார்க்கும் தகுதிகளின் பரிணாமம் கொஞ்சம் வேகமாகவும், நவீனமானதாகவும் இருந்தது). போர்களில், அரசர்களின் ஊர்வலங்களில் அது பங்கெடுத்தது. அதிகாரம் குதிரைமீது அகங்காரத்துடன் சஞ்சரித்தது. அதன் வேகம் அவனுடைய வேகமாக ஆனது. அதன் ஆற்றல் அவனுடைய ஆற்றலாக ஆனது (HorsePower). அது வெற்றிபெற்றபோது வெற்றியடைந்த மனிதனை குதிரைப்பந்தயத்தில் இன்றும் பார்க்கமுடியும். சகோதரனான கழுதை வறியவர்களின் அழுக்குத்துணியை சுமந்து குறுகலான, கல்லும்முள்ளும் நிறைந்த வழியில் நடந்தது. அடியும் குத்தும் வாங்கியது. தன்னில் இருந்து மட்டுமல்ல, பலரில் இருந்து, என்னில் இருந்தும் அவமதிக்கப்பட்டது. இருந்தும் சகித்துக்கொண்டது, பூமியைப்போல.
திரும்பிப்பார்த்தால் கழுதைமேல் அமர்ந்த குழந்தையாக உங்களை காணமுடியும். இங்கே வந்துசேர்ந்ததற்காக வணங்கவேண்டியது உங்களை அல்ல, கழுதையை. இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட ஈசாப்கதையில் வரும் கழுதை தவறாகவெல்லாம் புரிந்துகொள்ளவில்லை. அதை வணங்கியதில் பிழை எதுவும் இல்லை, நான் என் இருண்ட, வறிய பால்யகாலத்தை தொழுகிறேன். அதில் ஏறி அல்லவா நான் இங்கே வந்துசேர்ந்திருக்கிறேன்.
வரலாற்றின் அந்த பக்கத்திலிருந்து கழுதை நடந்துவருகிறது. கழுதையில் நான் என் பால்யகாலத்தை பார்க்கிறேன். குப்புறவிழுந்தேன், கால் இடறியது, விஷக்கல்லை மிதித்தேன், கண்ணாடிச்சில்லும், முள்ளும் குத்தி நான் நொண்டினேன். ஆனால் அப்போதெல்லாம் கழுதையின் கண்களில் உள்ள துயரம் என் நினைவில் இருந்தது.
ஈரோடு பெருந்துறையை சேர்ந்த அழகிய மணவாளன், கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். நாவல் கலை பற்றிய மலையாள நாவலாசிரியர் பி.கே.பாலகிருஷ்ணனின் விமர்சன நூலை "நாவலெனும் கலைநிகழ்வு" எனும் தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார். இலக்கியத்திற்கு அப்பால் நிகழ்த்துகலையான கதகளியில் அவருக்கு ஆர்வமுண்டு.
அழகிய மணவாளனின் மொழியாக்க முனைப்பு பாராட்டுதலுக்கு உரியது.
”அதிகப்படியான வசைகளை கேட்டதால் பெரியதாக ஆன காதுகள்” எனும் கவித்தருணத்தின் அகத்திகைப்பில் இருந்து ஆசுவாசமாதல் அவ்வளவு சுலபமல்ல.
’கழுதையின் கண்களில் உள்ள துயரத்தை’ உணர்ந்தறியும் பால்யத்தை ’குதிரையின் குளம்பொலிகளில்’ மயங்கியிருக்கும் மத்திம வயதில் நினைவு கூர்வதும் அவ்வளவு சுலபமல்ல.
– சக்திவேல்(கோபிசெட்டிபாளையம்)
கல்பற்றாவின் கட்டுரைகளைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன் . அது அவரது கவிதைகளுக்கான கண்ணாடி போல இருக்கிறது. கலப்பற்றா உந்தி கவிதைக்குள் குதிக்கும் உந்துப் பலகை என இந்தக் கட்டுரைகள் இருக்கின்றன . இவற்றை மொழிபெயர்க்கும் அழகிய மணவாளனுக்கு நன்றி .
கழுதை மறந்து குதிரை வந்த காலகட்டம் தெரியவில்லை. ஆனால் தவறோ சரியோ எனக்கு இப்போது நடந்து கொண்டிருக்கும் ஒரு நிகழ்வு ககு ஒப்பிட தோன்றுகிறது.
இந்து மதம் மற்றும் சமஸ்கிருத மொழியும் ஆசிரியர் சொல்லும் கழுதை போல் அகிகொண்டிருகிறதோ என்று தோன்றுகிறது. அதை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளாமலேயே பலர் நிந்திகின்றனர் பழிகூறுகிறனர். இந்து மத கோட்பாடுகளும் சமஸ்கிருத உச்சரிப்பும் எந்த அளவிற்கு நம்மை பேணி பாதுகாக்கும் என்று தெரியாமலேயே ஒரு இனம் மறைந்து போக போகிறது. அதோடு அவிரண்டும் மூலைக்கு தள்ளப்படும் என்பது உண்மை