
முகில்கள் மடியில் தேங்கும்
உயர்ந்த நீலமலைச் சிகரத்தை
ஒரு கோலிக்காயாகத்
தன் காலடியில்
உருட்டி விளையாடுகிறது
இச்சின்னான் குருவி.
ஆகாயம் எத்தனை விரிந்ததென
அதனைக் கேட்டேன்
தன் இளங்குரலில் சொன்னது
‘க்வ்யீக்’
வானம் மின்னுகிற அதன் வட்டக் கண்களுள்
எதிரொலிக்கும் அளவுள்ள ஒரு ‘க்வ்யீக்’.
000
மரக்கிளைகளில் பொதிகள் காய்த்திருக்கின்றன
வயல்வெளிகளில் பாடல்கள் பூத்திருக்கின்றன
இளவேனில் வெயில்
வெகுதொலைவில் கனிகிறது
மனக்குகையில்.
000
பனிக்கு மிக நுண்ணிய பற்கள்
கூரிய அரும்பு முனைகள்
என்னைக் கவ்வின
பனிக்கடி ஒரு தொற்று
யாருக்கும் அதன் பற்கள் ஏன் தட்டுப்படவில்லை
பனி என்னைக் கடித்தது என்று சொன்ன முதல் நாளில்
என் மேல் விழுந்தன உயிரற்ற மலர்கள்
மெல்ல மெல்லக் கரைந்து
நானும் பனியாகிவிட்டிருந்தேன்
தொலைவில் எனக்காக ஒரு கதவு திறக்கும் சப்தம்
நான் காற்றில் நழுவிச் செல்லும்
பனியின் குளிர் இப்போது
என்னைப் பூட்டக் கதவுகள் போதா
தப்பிச் செல்லும் நம் கனவுகளின்
இனிய கற்பனைகளில்
பனி
மென்மையானது
இதமானது
மிக லேசானது
பனி வாழ்வு உண்மையில் நிம்மதியற்றது
கால் நோக அலைவது
கரடுகளில் நோவது
பாறை நுனிகளில் நைவது
எப்போதேனும் சிறுபொழுது
மலையின் தோளில் கிடப்பது
பள்ளத்தாக்கின் மடியில் துயில்வது
கதகதப்பு தேடி சதா அலைவுறும்போது கண்டேன்
கால்களை வயிற்றுள் மடக்கிக்கொண்டு
ஒரு புலிக்குட்டி போல்
மலைச் சரிவில் பாய்ந்து வந்த வெயிலை.
இளவேனிலின் முதல் கதிர்
பனிக்கடி போல் புதிராயிருக்கிறது இப்போது.
000
மஞ்சள் பலூன் காற்றில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது
மனம்
பழகிய நாய்க்குட்டி போல்
பழைய கவலைகளுக்குத் திரும்பிவிட்டது
மேகங்களின் கதையை
விடிய விடியப் பாடிக்கொண்டிருந்தது இரவு
ஓடைக்கரை வெட்சியின் கூர்நுனிகளில்
மழைத்துளி பூத்து நிற்கிறது விடியலில்
அதனுள் மின்னும் கதிரினை
அண்ணாந்து பார்க்கும் வேரை
அப்போது நான் கண்டேன்
படிகநீரின் கீழ்
மீண்டிருந்தது மஞ்சள் பலூன்
இதமான
குளிர்ச்சியான
தட்டையான
ஒரு தந்த நிறக் கல்லாக
கை விரல்கள்
குதிரைக் குளம்பாகின்றன
தந்தக் கல்லை ஏந்திச் சுழற்றி எறிகிறேன்
நீர்ப்பரப்பில்
அரூபக் கால்களின் குதூகலம்
துள்ளித் துள்ளித் துள்ளிச் செல்கிறது
தவக்காக் கல்
அதன் மீது லாகவமாக அமர்ந்திருக்கிறது
எளிய சாகசங்களை
வென்று களிக்கும்
சிறிய மனம்.
000

கார்த்திகா முகுந்த்
பிறந்த ஊர் திருநெல்வேலி. தற்போது கணவர் மற்றும் மகளுடன் பெங்களூரில் வசிக்கிறார். தமிழில் இளமுனைவர் பட்டம். கல்கி வார இதழின் ஆசிரியர் குழுவில் இரண்டு வருடங்கள் பணியாற்றியுள்ளார். முன்னணி தமிழ் எழுத்தாளர்களுடைய புத்தகங்களைப் பிரதி மேம்படுத்தும் பணியில் உள்ளார். பெங்களூர் சித்ரகலா பரீக்ஷத்தில் ஓவிய அறிமுகச் சான்றிதழ் பயிற்சி பெற்றவர்.
கம்பளி ஆடை வடிவமைப்பு(Knitting), பூப்பின்னல்(Crotchet), புகைப்படக் கலை, கல்வெட்டியல், சைகை மொழி ஆகியன இவருடைய பிற ஆர்வங்கள்.
வெளியாகியுள்ள நூல்கள்:
- இவளுக்கு இவள் என்றும் பேர் (2010) – கவிதைத் தொகுப்பு
- குட்டி யானைக்கு பச்சைத் தொப்பி (2018) – சிறார் கதைகள் தொகுப்பு
- ஒரு வெப்பமண்டலத் தாவரமாகிய நான் (2021) – கவிதைத் தொகுப்பு
- துமி (2022) – கவிதைத் தொகுப்பு
- க்ளாட் மொனேயின் மரத்தடிப் பெண் (2024) - கவிதைத் தொகுப்பு
- என் தலைக்குள் ஒரு கடல் இருக்கிறது (2024) - கவிதைத் தொகுப்பு
- ஒரு க்ளாஸ்ட்ரோஃபோபிக் பெண்ணும் கார்லோஸ் என்று பெயரிடப்பட்ட நத்தையும் (2024) – சிறுகதைத் தொகுப்பு
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
