
அன்புள்ள, ப்ரியமுள்ள எதுவும் இல்லை. கடிதம் இப்படித்தான் மொட்டையாகத் தொடங்கியிருந்தது.
நாம் கடிதங்கள் எழுதிக்கொள்வதை ஏன் நிறுத்திவிட்டோம், அரவிந்தா? உண்மையில் நான்தானே எப்போதும் கடிதம் எழுதிக் ‘கொல்’பவள், இல்லையா? நீ எப்போதேனும் தயை செய்யும் காலங்களில் உன் கரத்தில் பேனா முளைக்கும். எனக்கென்னவோ, நீ எழுதச் சோம்பியிருக்க மாட்டாய் என்று தோன்றுகிறது. எழுதும் எண்ணங்கள் அப்படியே நிலைபெற்றுவிடும் என்று தயங்கினாயோ?
ஆனால், எண்ணங்கள் நிலைபெறத்தானே செய்யும்? என் பழைய டயரிகளைப் புரட்டுகையில், அந்த எண்ணங்கள் என்னுடையவா என வியப்பாக உள்ளது. நான் அவற்றோடு இப்போது உடன்படவில்லை. ஆனால், அன்றைய என் எண்ணங்கள் அவ்விதம்தான் இன்னும் அன்றில் நிலைத்திருக்கின்றன. இன்றின் எண்ணங்கள் இன்றில் நிலைபெறும். நாளையின் எண்ணங்களும் இதன் மீதே வந்தெழும். அது நாளையின் நிலைப்பு. நம் எண்ணங்கள் அப்படித்தானே முதிர்ச்சி காண்கின்றன.
ஒரு செடி வளரும்போது அது நுனியில் வளர்கிறதா? அடித்தண்டில் வளர்கிறதா? இரண்டில் ஒன்று இல்லாமல் செடி வளருமா?
இது போன்ற விஷயங்களையெல்லாம் நேரில் பேசிக்கொண்டால் இத்தனை ரஸிக்குமா? நீயே சொல். கடிதங்கள்தான் அதற்குச் சரி. ஆனாலும் நாம் ஏன் அதை நிறுத்திக் கொண்டோம்?
பேச்சிலும்தான் இன்பம் உண்டு. ஆனால், அது வேறு வகை. ஒரு நாள் முழுக்க, நாம் நடந்துகொண்டே பேசினாலும், நாள் வேண்டுமானால் அடையும்; நம் பேச்சு தீராமல் இருக்கும் நாட்களும் உண்டு.
நடைசாலையில் நம்மைப் பார்க்கும் சிலர் என்ன சொல்வார்கள், கேட்டிருக்கிறாயா? ‘இவர்களுக்கு என்ன… இன்னும் காதலர்கள் என்று நினைப்பா?’ என்று சிலர் பேசுவார்கள். ஆனால், நாம் என்றேனும் காதலர்களாக இருந்தோமா? எனக்குக் காதலிக்கும் வயது வந்துவிட்டதா, அரவிந்தா? உண்மையில், காதலிக்கத் தொடங்கலாம் என்னும் வயது எது? எனக்குத் தெரியவில்லை. நான் அவ்வளவு பெரியவளாகிவிட்டேன் என்று எனக்கு யாரும் சொல்லவில்லை. தீர்க்கப்படாத கணக்குகள் கொண்ட புத்தகம் என் பிள்ளைப் பருவம். அதை நான் இன்னும் திறந்து வைத்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறேன்.
உடல் முதிர்ந்துவிடுவதால், ஒரு பெண் பெரியவளாகிவிடுகிறாளா? என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை.
பிள்ளைப் பருவத்திலிருந்து இளம்பெண் பருவத்துக்குள் நுழைய அதனோடுகூட மேலும் ஏதோ சில முறைகள் உண்டு என்பது போல் ஒரு எண்ணம் அப்போது எனக்கு இருந்தது. அது என்னவென்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை. ஒரு அச்சிலிருந்து இன்னொரு அச்சுக்கு அவள் மனத்தை உடையாமல் வார்த்தெடுக்க ஒரு முறை. அதன் பிறகுதான், எந்த ஒரு பெண்ணும் காதலிக்கும் பக்குவத்தை அடைய முடியும் என்பது போல் ஒரு எண்ணம். சரியாகச் சொல்லமுடியவில்லை, என்னால். சில வேளைகளில், சொற்கள் கவைக்குதவாதவை. சரி போகட்டும்… நான் நினைப்பது போல இல்லாமலும், காதல் செய்கிறார்கள்தான். நான் ஏன் எல்லாரைப் போலும் இல்லை, அரவிந்தா? எனக்கு ஏன் இப்படி வினோதமான மனம் வந்து வாய்த்திருக்கிறது..?
ஏதோ ஒரு பழைய அச்சிலேயே அது இவ்வளவு காலம் தங்கிவிட்டது. பிள்ளைப் பருவம் என்ற ஒன்று என் வாழ்வில் இருந்ததா என்பதே இப்போது சந்தேகமாக உள்ளது; உண்மையில் நான் பிறந்திருந்தேனா என்பதே கூட. அந்த அடர்ந்த வனத்தின் மரங்களுக்கிடையில் உன் குழுவினரைப் பிரிந்து நீ என்னிடம் வந்தாயே… அந்தக் கணத்துக்கு முன் இங்கே என் வாழ்வு என்று எதுவுமே என் ஞாபகத்திலில்லை; வெறுமையின் குவியலாக ஏதோ ஒரு தொலைதூர ஞாபகம். நாம் எவ்வளவு முயன்றும் என் கடந்தகாலம் என்னும் புதிரை அவிழ்க்கவே முடியவில்லையே, அரவிந்தா.
உண்மையில் நீ என்னை அணுகிவந்த அந்தக் கணத்திலிருந்துதான் எனதிந்த வாழ்க்கை தொடங்கியது போலிருக்கிறது. நீ என்னையும், நான் உன்னையும் நல்ல வாழ்க்கைத் துணைவர்களாக நிரப்பிக்கொண்டோம். ஆனால், நீ ஏன் என்னை ஒரு காதலியாக ஆக்கியிருக்கக் கூடாது? எனக்கு நீ ஏன் ஒரு காதல் கடிதம் எழுதியிருக்கக் கூடாது? நம் இத்தனையாண்டு வாழ்வில் ஒருமுறை கூட நீ ஏன் அப்படியொரு கடிதம் எழுதவில்லை? ஆனால், நானும்தான் உனக்கு ஒன்று அப்படியெழுதவில்லை. உண்மையில் காதல் என்றால் என்னவென்று எனக்கு இன்னும் விளங்கவில்லை. ஆனால், இந்த எண்ணங்கள் எல்லாம் தோன்றியபிறகுதான், இப்போது எனக்குக் காதல் செய்யும் வயது வந்திருப்பதாகத் தோன்றுகிறது. காதல் கடிதம் ஒன்று உனக்கு எழுதவேண்டும் என்று தோன்றுகிறது.
என் நெடிய வாழ்வில், முதன்முதலாக இப்போதுதான், நரைகூடிய இந்தப் பொழுதில்தான், எனக்கு இப்படியோர் எண்ணம்; மனசு விம்மி வேகவேகமாகப் பரந்து ஆகாயமெங்கும் நிறைவது போலொரு உணர்வு. இது எஞ்சி வடிகிற வெள்ளமா, அல்லது ஊறிப் பெருகுவதோ தெரியவில்லை. நான் இப்போது எல்லா இடத்திலும் சிதறி நிறைந்திருக்கிறேன். இப்போது எனக்கு காய்ந்து வரும் பழைய வர்ணக் கூடுகளின் சாயல். என்னை நானே கடைசித் துளி வரை திரட்டி எடுக்கையில் உனக்கான ஒரு காதல் கடிதமாக நான் மாறிவிடுவேன் என்று தோன்றுகிறது. அன்று நம் அஞ்சல்பெட்டியில் வந்து கிடப்பேன். என்னை எடுத்து நீ வாசி, அப்போது.
000
“கேர் டேக்கர் வர நேரமாகிக்கொண்டிருந்தது. ஒரு ஐந்து நிமிஷம்தானே… நான் போய் பால் மட்டும் வாங்கிட்டு வந்துடலாம்ன்னு போனேன். இது போல் எப்போதாவது அவசியமானால் வெளியே கதவைப் பூட்டிட்டுப் போவேன். அவளும் இருந்துகொள்வாள். இன்றைக்குத்தான் இப்படி. கதவைத் திறந்து உள்ளே வந்தபோது இந்த அறைக்கதவு உள்ளே தாழிட்டிருந்தது. அவள் அறைக்கு தாழ் நீக்கியிருக்கிறோம். மற்ற சில அறைகளில் நீக்கவில்லை. அதுதான் தவறாயிற்று. ஆனால்…”
“பார்க்கலாம் ஸார்… பதற்றப்படாதீங்க. அவங்க பேர் என்ன சொன்னீங்க?” – கேட்டுக்கொண்டே வீட்டைச் சுற்றி வந்தார் ஸப் இன்ஸ்பெக்டர்.
“கமலி…” – அவரைப் பின்தொடர்ந்துகொண்டே பதில் சொல்லிக்கொண்டு வந்தேன்.
பக்கத்திலிருந்த காவலர் கையிலிருந்த வாக்கிடாக்கியில் விடாமல் கரகரப்பு.
“வயசு?”
“74.”
“டிமென்ஷியான்னு சொன்னீங்க இல்ல..?”
“டிமென்ஷியான்னு கம்ப்ளீட்டா டயக்னைஸ் செய்யலை. ஆனால் அதோட சில சிம்ப்டம்ஸ் இருக்குன்னுதான் டாக்டர்ஸ் ஒப்பீனியன்.”
“அவங்க டாக்டர் யாரு?”
“சந்தியா மாறன்.”
“உங்க பிள்ளைகள்..?”
“எங்களுக்குக் குழந்தைகள் இல்லை.”
எங்கள் அறையை ஆராய்ந்துகொண்டிருந்தார். என் பதற்றம் கூடிக்கொண்டிருந்தது. பின்னங்கழுத்தில் வழிந்த வியர்வையைத் துடைக்காமல் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
“லெட்டர் இந்த அறையில்தான் இருந்ததா?”
“இல்லை… உங்க ஆட்கள் உடைத்துத் திறந்த அந்த அறையில்தான் இருந்தது.”
பிறகு அந்த அறைக்குப் போனார். காவலர்களால் உள்தாழ்ப்பாள் உடைத்துத் திறக்கப்பட்டிருந்தது.
அறை நிறைய ஓவியங்கள். நீண்ட நாட்களாகத் திறக்கப்படாததால் அறை முழுதும் தூசு படிந்து மங்கிக் கிடந்தது. என் கைத்தடியை ஊன்றி எடுத்த இடத்தில் தூசு நீங்கி வட்டமாகத் தடம் தெரிந்தது. வெகுகாலம் கழித்து அவ்வறையில் நுழைந்தேன். மனசில் என்னென்னவோ ஞாபகங்கள் கிளர்ந்தன. கமலியின் ஜீவனாக இருந்த இடம். கைகளை தடியில் இறுக்கி மடக்கிக்கொண்டேன். சுற்றிலும் பார்த்தேன். இல்லை; அப்படியிருக்க வாய்ப்பில்லை.
பழைய தூரிகைகள் அதற்கான புட்டியில் கொஞ்சமும், வர்ணம் குழைக்கும் தட்டுகளில் கொஞ்சமுமாகக் கிடந்தன. வர்ணங்கள் காய்ந்துபோன தட்டுகளும், தூரிகைகளும். அவள் அப்படி விட்டுவிடுபவளே அல்லள்.
சொல்லப்போனால், எனக்கு இப்போது ஞாபகமே இல்லை… எப்போது அவள் கடைசியாக வரைந்தாள்? எதனால் இப்படி வழக்கமற்ற வழக்கமாக இந்தத் தூரிகைகளை இவ்விதம் கைவிட்டுவிட்டாள்?
“எல்லாம் நீங்க வரைந்ததா?”
“எல்லாமே அவள் வரைந்ததுதான் ஸார். அவளுடைய ஸ்டுடியோதான் இது. ஆனால் ரொம்ப நாட்களாக அவள் எதுவும் வரையவில்லை.”
ஒரு ஓவியத்தின் அருகில் போய்ப் பார்த்தார். காலைப் புலரொளியில் – அது புலரிதானா? – மேல் மாடத்தில் நிற்கும் ஒரு பெண்ணின் ஓவியம். சுவரையொட்டி லேசாகச் சாய்ந்திருந்தாள். அவள் மேனியின் மேல்பகுதி கொஞ்சம் பின்னோக்கி வளைந்திருந்தது. காலையின் நிறம் வானில் போல, அவள் முகத்திலும் அழகாகப் பிரதிபலித்திருந்தது. வண்ணங்கள் அத்தனை நேர்த்தியாகக் குழைக்கப்பட்டிருந்தன. வானிலிருந்து ஏதோ ஒரு நற்செய்தியைக் கேட்பது போல், மேல்நோக்கிய முகத்தில் அமைதியா ஆனந்தமா எனச் சொல்ல முடியாத ஒரு பாவம். அவள் தோள்களில் இரு சிறகுகள் தாழ்ந்தும் தாழாமல் இருந்தன.
எத்தனையோ காலத்துக்குப் பிறகு அதைப் பார்க்கிறேன்; அல்லது இப்போதுதான் அதை முதன்முதலாகப் பார்க்கிறேனா? லேசாக மக்கிப் போன வாசனையுடன், வர்ணத் தைலங்களின் மணமும் கலந்திருந்தது.
ஆனால், புது வர்ணங்களின் வாசனையும் அதிலிருந்து லேசாக எழுகிறதா… என்ன? வாய்ப்பில்லை. நெடுங்காலம் தீண்டப்படாத ஓவியம்தான் அது. மெல்லிய தூசுப் படலம். லேசாகக் கீறல்கள் விழத் தொடங்கியிருந்த கேன்வாஸ்.
கமலியை முதன்முதலாகப் பார்த்த அந்தக் கணம்… அப்போதும் இதே போன்ற வர்ணத் தைலங்களின் வாசம்… அது இன்னும் என் மனத்தில் இருக்கிறது. என் மலையேற்றக் குழுவோடு போய்க்கொண்டிருக்கையில், மரங்களினூடே தூண்தூணாகச் சாய்ந்துகொண்டிருந்த வெயிலொளியில் மிதந்த மெல்லிய தூசுப் படலம்… வேறு உலகம் போன்ற ஒரு மயக்கம். வசியப்பட்டது போல் நின்று பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு கணம் அந்த வசீகர தூசுப் படலம். மறு கணம் அதிலொரு சிறு வெட்டு. பிரகாசமான ஒரு இடைவெட்டு. பிறகு அதன் நடுவே ஒரு ஓவியம் போல் நின்றிருந்தாள்; வழி தவறிய ஒரு குருகு போல் கண்களில் மிரட்சி, ஆர்வம், ஆச்சர்யம் எல்லாம் கலந்த ஒரு பாவம். அவள் குழுவிலிருந்து பிரிந்துவிட்டாளா என நான்கைந்து மொழிகளில் கேட்டபோதும், பதிலெதுவும் பேசவில்லை; ஏதோ பதில் சொல்ல வாயெடுத்தபோதும், ஓசையேயெழவில்லை. பேசும் என்னையே ஆச்சர்யத்துடன் பார்த்துக்கொண்டேயிருந்தாள். உண்மையில் என்னைத்தான் பார்க்கிறாளா… அல்லது என்னை ஊடுருவி எங்கோ பார்க்கிறாளா… தெரியவில்லை. கனவில் மிதப்பவை போன்ற விழிகள். ‘ஹல்லோ… பேக் டு எர்த், ப்ளீஸ்’ என்று சொல்லிச் சிரித்தேன். உடனே மெதுவாக அவளும் என்னைப் போல் வாய்விட்டுச் சிரித்தாள். நானும் அதை ஒரு கனவுதானோ என ஐயுற்றேன். அவ்வளவு முழுமையான பரிசுத்தமான என்னவொன்று விளங்கவொண்ணா உணர்வில் தாக்குண்டேன்.
அன்று கமலியைப் பார்த்தது போல் இன்று இந்த ஓவியத்தைப் பார்த்தேன்; இதுதான் முதன்முறை என்பது போலவே பார்த்தேன். அற்புத ஒளியின் பின்னணியில் சாய்ந்துகொண்டு சிரிக்கும் அந்தப் பெண்… புலரி மட்டுமல்ல; ஒளியின் மூலம் வேறெதுவோ போல ஆனால் எதுவெனச் சொல்லமுடியாதபடி, மெலிதாகக் கசியும் ஒளியை மிகத் தேர்ந்த முறையில் அந்த ஓவியத்தில் கமலி சேர்த்திருந்தாள்.
ஸப் இன்ஸ்பெக்டரைப் பார்த்தேன். அதனருகிலேயே நின்று கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டிருந்தார். பிறகு, சற்று எட்டி நின்று பார்த்தார். பால்கனி அவர் பார்வையில் பட்டது.
மெதுவாகச் சென்று அக்கண்ணாடிக் கதவுகளைத் திறந்தார். சிக்கிக் கொண்ட கீல்கள் லேசாகக் கிறீச்சிட்டன. பால்கனிக்குப் போய், எட்டிப் பார்த்தார். வெளியே தோட்டச் செடிகளின் குளுமைக்கு அப்பால் சிறு நதி. அதன் சலசலப்பு மெலிதாகக் கேட்டது. அண்ணாந்து வானத்தைப் பார்த்தார். மேகங்களேயற்ற நிர்மலம்; நிச்சலனம்.
“ஒருவேளை…” என்று தொடங்கியவர், “ச்சே… ச்சே… என்னவொரு பைத்தியக்காரச் சிந்தனை…” என்று தலையை உதறிக்கொண்டார்.
இடுப்பில் ஒரு கையை வைத்துக்கொண்டு, சற்று நேரம் அங்கேயே தயங்கி நின்றுகொண்டிருந்தார். முகத்தில் சிந்தனையா… திகைப்பா? சொல்லமுடியவில்லை.
வாக்கிடாக்கியில் அழைப்பு; ஒரு காவலர் அவரிடம் அதைக் கொண்டு சென்றார். அதன் கரகரப்பு கேட்டு, கனவிலிருந்து விழிப்பதுபோல் திடுக்கிட்டவர், உடனே அதைக் கையில் வாங்கிக்கொண்டே, அவசரமாக வெளியில் போனார்.
போகும் வழியில், என்னருகில் சற்றுத் தயங்கி நின்றவர், வாக்கிடாக்கியை முகத்தருகிலிருந்து விலக்கிவிட்டு, ‘கண்டுபிடிச்சிடலாம், ஸார். கவலைப்படாதீங்க’ என்று மெதுவாக என் தோளைத் தொட்டுவிட்டுப் போனார். அவர் விரல்கள் லேசாக நடுங்கிக் கொண்டிருந்தன.
நான் உடைந்திருந்த தாழ்ப்பாளைப் பார்த்தேன். சிறகுகளோடிருந்த அந்த ஓவியத்தைப் பார்த்து, எனக்குள் கேட்பதுபோல் மெல்லிய குரலில் கேட்டேன்: “கமலி… பூட்டிய அறைக்குள்ளிருந்து நீ எங்கே போய்விட்…”
000

கார்த்திகா முகுந்த்
பிறந்த ஊர் திருநெல்வேலி. தற்போது கணவர் மற்றும் மகளுடன் பெங்களூரில் வசிக்கிறார். தமிழில் இளமுனைவர் பட்டம். கல்கி வார இதழின் ஆசிரியர் குழுவில் இரண்டு வருடங்கள் பணியாற்றியுள்ளார். முன்னணி தமிழ் எழுத்தாளர்களுடைய புத்தகங்களைப் பிரதி மேம்படுத்தும் பணியில் உள்ளார். பெங்களூர் சித்ரகலா பரீக்ஷத்தில் ஓவிய அறிமுகச் சான்றிதழ் பயிற்சி பெற்றவர்.
கம்பளி ஆடை வடிவமைப்பு(Knitting), பூப்பின்னல்(Crotchet), புகைப்படக் கலை, கல்வெட்டியல், சைகை மொழி ஆகியன இவருடைய பிற ஆர்வங்கள்.
வெளியாகியுள்ள நூல்கள்:
- இவளுக்கு இவள் என்றும் பேர் (2010) – கவிதைத் தொகுப்பு
- குட்டி யானைக்கு பச்சைத் தொப்பி (2018) – சிறார் கதைகள் தொகுப்பு
- ஒரு வெப்பமண்டலத் தாவரமாகிய நான் (2021) – கவிதைத் தொகுப்பு
- துமி (2022) – கவிதைத் தொகுப்பு
- க்ளாட் மொனேயின் மரத்தடிப் பெண் (2024) - கவிதைத் தொகுப்பு
- என் தலைக்குள் ஒரு கடல் இருக்கிறது (2024) - கவிதைத் தொகுப்பு
- ஒரு க்ளாஸ்ட்ரோஃபோபிக் பெண்ணும் கார்லோஸ் என்று பெயரிடப்பட்ட நத்தையும் (2024) – சிறுகதைத் தொகுப்பு
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
