சூஸன்வெலடான் – துணிந்த ஒரு பெண் : கேடி ரோலந்த்

தமிழில்: கார்த்திகா முகுந்த்

சூஸன் வெலடான், 23 செப்டம்பர் 1865-இல் மேற்கு ஃப்ரான்ஸின் ஒரு கிராமத்தில் பிறந்தவர். தன் ஒன்பதாவது வயதில் தானாகவே வரையப் பழகத் தொடங்கியவர். பெண்கள் பெரும்பாலும் மாடலாகவும், ம்யூஸாகவும் மட்டுமே பார்க்கப்பட்டு வந்த காலத்தில், சூஸனும் அப்படியாகவே தன் பதினைந்தாவது ஓவியத் துறையில் நுழைந்தார். தானும் ஓவியராக வேண்டும் என்ற எண்ணமிருந்தாலும், ஓவிய வகுப்புகளுக்கான கட்டணம் செலுத்த வசதியற்ற காரணத்தால், மாடலாக அமரும்போது ஓவியர்கள் வரைவதைக் கவனித்தே நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டார்.
ஓவியர் எட்கர் டேகஸ் இவரைத் தம் சிறகடியில் எடுத்துக்கொண்டார். சூஸனின் படைப்புகளுக்கு ஊக்கமும், விமர்சனமும் கொடுத்து அவருடைய முன்னகர்வுக்கு உதவியாக இருந்தவர். தம் ஆயுட்காலம் வரை சூஸனுடன் நட்பில் இருந்தார். மாடலாகத் தொடங்கிய, சூஸன் ஃப்ரான்ஸின் குறிப்பிடத்தக்க ஓவியக் கலைஞராகப் பெயர் பெற்றார். இரு பிரிவாக இயங்கிய ஃப்ரெஞ்ச் ஓவியக் கலைஞர்கள் தேசிய நுண்கலைக் குழு என்ற பெயரிலான அமைப்பாக ஒருங்கிணைந்தபோது அதில் இடம்பெற்ற முதல் பெண் ஓவியர் சூஸன் ஆவார்.
ஓவியராகப் போராடும் சூஸன் வெலடானின் மனநிலையை அவர் பார்வையிலேயே, இந்தக் கதையில் வரையப் பார்த்திருக்கிறார், கேடி ரோலந்த். தீர்ப்பிடும் நோக்கின்றி திறந்த மனநிலையுடன் அணுகப்படவேண்டிய கலைஞர்கள் பலர்; சூஸனைப் போல்.

-மொழிபெயர்ப்பாளர்

லெ சாட் நோய்ர்*-ல், சுற்றிலும் அமர்ந்திருந்த வாடிக்கையாளர்களைத் திரும்பிப் பார்த்துப் பார்த்துப் பெருமூச்செறிந்தாள், சூஸன். மான்மார்ட்ரெயில் அனைவரும் காணவேண்டிய ஒரு இரவு விடுதி இது – அனைவரும் என்றால், தாழ்ந்த ஆரம்பப் படிநிலை ஓவியர்கள் முதல் மிகச் சிறந்த மேல்தட்டு ஓவியர்கள் வரை அனைவரும். கடந்த ஆண்டு நிரம்பி வழிந்துகொண்டிருந்த இடம் இது. ஆமாம்… அதிலும் குறிப்பாக, கூட்டம் குழுமி வழியும் கேபரெக்களுக்குப் படையெடுத்த பூர்ஷ்வாக்களால் நிரம்பி வழிந்தது; அந்நிகழ்வுகளில் பங்கெடுக்கும் கட்டுடைப்பு ஓவியர்களான பல பொஹிமியன் ஓவியர்களையும், அவர்களுடைய நூதனமான செயல்முறைகளையும் காணவும், அவர்களோடு சிநேகம் கொள்ளவும் அவர்கள் விரும்பினர்.

இந்தப் போலி ஆராதகர்கள் தங்களின் சகபாடிகள் முன் வெட்கி நிற்கும்படி, அந்த ஓவியர்கள் தம்மை இரக்கமின்றிக் கேலி செய்வதோ, இவர்களின் போலித் தன்மையைப் பரிகசிப்பதோ அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே தோன்றவில்லை; ஆச்சர்யம்தான். இது எல்லாமே ஒரு வேடிக்கை ஆரவாரம்தான் அவர்களுக்கு. இரவு முடிந்ததும், நகரத்தில் தாம் வசிக்கும் மதிப்புமிக்க பகுதிகளுக்குத் திரும்பிச் சென்றுவிடுவர்; பிறகு எப்போதேனும், அந்த முந்தைய இரவு அவ்வளவு நட்பு பாராட்டிய கூட்டத்தில் யாரேனும் ஒருவரை, துரதிர்ஷ்டவசமாக பாரீஸ் நகரத் தெருக்களில் சந்திக்க நேர்ந்தால், அவர்களை ஏறிட்டும் பார்க்கமாட்டார்கள்.

அந்தப் பகுதியிலுள்ள பெரும்பாலான ஓவியர்களை அவளேகூட கீழாகத்தான் பார்த்தாள். ஐயம் திரிபற, அது ஆண்களின் உலகம்; ஒருவேளை, இனி எப்போதுமேகூட அது அப்படித்தான் இருக்கும். ஆமாம், முன்னோடி ஓவியக் கலை என்றும் வாழ்க்கை முறைகள் என்றும் தங்களைத் தாங்களே போற்றிக்கொள்ளும் இந்த பொஹிமியக் கலைச் சமூகத்தில்கூட, பெண்களுக்கென்று வழிவழியாக இருந்து வரும் கட்டுப்பெட்டித்தனமான விஷயங்கள் தவிர்த்து விலகி வந்து செயலாற்றும் பெண்கள் மிகமிகக் குறைவு.

பொதுவாக, ஓவியனின் மாடலாக பெண்கள் இந்தக் கலை உலகில் நுழையமுடிந்தது. ‘ஓவியனின் மாடலாம், துடைப்பக் கட்டை’ என்று நினைத்தாள் சூஸன். ஒரு ஓவியனிடமிருந்து இன்னொரு ஓவியனுக்கு, பிறகு வேறொருவனுக்கு என அனுப்பப்படுவர் சூஸனும் பிற மாடல்களும்; வேசிகளுக்கும் தமக்கும் வேறுபாடு ஒன்றும் கிடையாது என்பது போலிருக்கும். தனக்கு மியூஸாக அமைந்த ஒரு பெண்ணிடமிருந்து பெற முடிந்த அளவு உத்வேகம் பெற்று முடித்ததும், அவளை விட்டுவிடுவர்; பின்னர் அடுத்துக் காத்திருக்கும் ஓவியன் அவளை மாடலாக எடுத்துக்கொள்வான். ஒரு ஓவியனுக்கு அவளது கேசம் உந்துதல் தருமென்றால், இன்னொருவனுக்கு அவளுடைய இதழ்கள். அது எதுவாக இருந்தாலும் சரி, சில படங்கள் வரைந்ததும், அந்த ஆண்களுக்கு சலிப்பு தோன்றிவிடும்; பிறகு வேறு மாடல், புதிய உத்வேகம். தமக்கு மாடலாகப் போஸ் தரும் பெண்களை எவ்வளவு மோசமாக நடத்துகிறோம் என்று அவர்கள் எப்போதேனும் எண்ணிப் பார்ப்பார்களா என்பது கூட சந்தேகம்தான் என்று தோன்றியது சூஸனுக்கு.

அப்படியான அவர்களின் உலகில்தான் தானும் நுழையவேண்டும் என சங்கல்பம் கொண்டிருந்தாள்; ஒரு மாடலாக மட்டுமல்ல; ஒரு ஓவியக் கலைஞராகவும்தான் – சில பெண்களே இதுவரை அம்முயற்சியில் வெற்றியடைந்திருந்தனர். ரெனாய்ர் அவளுக்குக் கொஞ்சம் உதவியிருந்தார் என்றாலும், டேகஸின் பங்குதான் அதிகம். அவளுக்கு ஆதரவளித்து ஓவிய நுட்பங்களைக் கற்றுத்தந்தார். அவருக்கு அது மகிழ்ச்சியான பொழுதுபோக்காக இருந்திருக்கலாம். அவள் ஓவியங்களின் தரம் புலப்படத்தொடங்கியதும், அவருக்கே அது பற்றிய ஆச்சர்யத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை; இருந்தும் அவளை மிகவும் பாராட்டி, தொடர்ந்து அவள் வரைந்து பயில உதவினார்; அதுவரையில் அவர் பாராட்டப்பட வேண்டியவர்தான்.

இப்போது அவள் நன்றாக வரையத் தொடங்கியிருந்தாள். அதோடு, கருவுற்றிருந்தாள் வேறு. ஆனால், டேகஸினால் அல்ல; நிச்சயம் அவரால் அல்ல. மேலும், தன் குழந்தையின் தந்தை யாராக இருக்கலாம் என்று அவளாலேயே உறுதியாகச் சொல்ல முடியவில்லை. அதொன்றும் அவளுக்குப் பெரிய விஷயமாக இல்லை. கருவுறுவதற்கு வெகு காலம் முன்பே அவள் வேசி என்று முத்திரை குத்தப்பட்டிருந்தாள்; எதனால்… சமூகத்தின் விதிகளுக்கு ஏற்ப வாழ மறுத்த ஒரே காரணத்தினால் மட்டும். அது எப்படியிருந்தாலும், அவள் அறிந்திருந்த ஆண்கள் பலரும், தந்தை என்று பெருமையாகக் கூறிக்கொள்ளத் தகுதியற்றவர்கள்தாம். அப்படிப் பெருமைப்படத்தக்கவர்களாக இருப்பவர் யாரும், ‘நான்தான்’ என்று முன்வரச் சாத்தியமில்லை. இருந்தாலும், எதுவும் சாத்தியம்தான் என்று ஒருத்தி நம்பலாமே எப்போதும். ஒரு மாறுதலுக்கு, தான் யாராலாவது அக்கறை காட்டப்பட்டுப் பராமரிக்கப்பட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

குழந்தை பிறந்தபிறகும், அவள் தொடர்ந்து வரைந்துகொண்டுதானிருந்தாள். ஓவியக் கலை இப்போது அவள் ரத்தத்தில் ஊறியிருந்தது. தன் ஓவியங்கள் மிக நன்றாக இருக்கின்றன என்பதையும் அவள் அறிவாள். தற்போதைய சூழலில், அவள் தோற்றத்துக்காக மட்டுமே ஆண்கள் அவளை ஆராதிக்கின்றனர்; ஆனால், தன் கலையின் பெறுமதிக்காக அவளை மக்கள் கொண்டாடும் ஒரு நாள் வருமென்று அவள் எண்ணினாள். சூஸன் வெலடான். பிறந்தபோது அவள் மரீ-க்ளெமென்ட்டைன் வெலடான் ஆக இருந்தாலும், இப்போது அவள் சூஸன் என்ற பெயரிலேயே அறியப்பட்டாள். எப்போதும் தான் மறக்கப்படக்கூடாது என்ற ஒரு கனவு காண்கிறாளா துணிந்து? இந்த உலகம் பெண்களின் பங்களிப்புகளைப் பாராட்டிக் கொண்டாடும் ஒரு நாள் எப்போதேனும் வருமா? அவளுடைய கலை, வரலாற்றில் இடம்பிடிக்கக் கூடுமானால், அது எவ்வளவு பெரிய ஒரு விஷயம், இல்லையா?

புகைமூட்டமாயிருந்த விடுதியில், மீண்டும் ஒருமுறை சுற்றும்முற்றும் பார்த்தாள், சூஸன். வின்சென்ட் இருந்தார் – தியோ கூட வராத பொழுதுகளில் எப்போதும் தான் மட்டும் தனியாகவே இருப்பார். அவர் ஒரு வினோதமான மனிதர்தான். ஆனாலும், வான் கா வால் வரைய முடியும். அதை யாராலும் மறுக்கமுடியாது. எவ்வளவோ பேர் அவ்விதம் நிறுவ முயற்சி செய்திருப்பதும் அவளுக்குத் தெரியும். அவளைப் பார்த்துக் கண்ணைச் சிமிட்டினார். அவளுக்குச் சிரிப்பு வந்தது. விலக்கிவைக்கப்படுதல், புறக்கணிப்பு எவ்விதம் உணரவைக்கும் என அவளுக்குத் தெரியும். அதனாலே, அவரிடம் ஏதோ ஒரு பந்தத்தை அவளால் உணரமுடிந்தது. ஒருவேளை, இதுபோல் விலக்கிவைக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட எல்லாரும் ஒன்று சேர்ந்து ஒரு கோட்டையைக் கட்டவேண்டும். அதன் முன்புறத்தில் ஒரு பலகையில் ஒரேயொரு வாசகம் எழுதித் தொங்கவிட வேண்டும்: “எங்களோடு வைத்துக்கொள்ள வேண்டாம்… அவ்வளவுதான்!”

எப்படியிருக்கும்… நன்றாக இருக்கும் அல்லவா? உற்றுத் துளைக்கும் கண்களிலிருந்து தப்பி அவள் பாதுகாப்பாக இருக்கமுடிந்த ஒரு இடம்; அங்கே அவள் சுதந்திரமாக வாழலாம்; சோதனை செய்யும்பொருட்டு ஒருபோதும் நிறுத்தி வைக்கப்பட மாட்டாள்; சமூகத்தாலும் மற்றும் சில சக ஓவியக்கலைஞர்களாலும் கண்டனத்துக்கு ஆளாகாத ஒரு இடம்.

ஆண்கள்! சுத்த மடையர்கள். தங்கள் நாளங்களில் ஓடும் திறமையைவிட, தங்கள் காற்சராய்க்குள் இருக்கும் விஷயத்தால் அவர்கள் அதிக உத்வேகம் அடைவது போல் இருக்கிறது. ஆனாலும், அவளும் அதைப் பற்றிப் பேசக்கூடாதுதான். அவள் மனம் ஈடுபட்டுவிட்டால், அப்படிப்பட்ட எந்த ஒரு ஆணையும் வேண்டாம் என்று தள்ள அவள் படும் பாடு கடவுளுக்குத்தான் தெரியும். ஆண்கள் அப்படி இருக்கிறார்களே… தான் மட்டும் ஏன் அப்படி இருக்கக்கூடாது? ஆனால், கூடுகையில், பெண்கள் தங்களுக்கு இன்பமளிப்பது தவிர, பெண்கள் எந்த இன்பமும் பெறுவதில்லை என்றே ஆண்கள் நினைக்கிறார்கள் போலுள்ளது. அவர்கள் முட்டாள்கள் என்பதற்கு இன்னொரு ஆதாரம். 

ஏதாவது ஒரு நாள் வரும் – பெண்களுக்குச் சந்தோஷமளிப்பது எது என்று அக்கறையுடன் பரிசீலிக்கும் ஒருவனாக இருந்தால், அன்று அந்த ஆண் இது விஷயத்தில், ஆண்களைப் போலவே பெண்களும் ஒவ்வொரு நொடியும் தாங்களும்தான் ரசித்து அனுபவிக்கிறார்கள் என்று கண்டுகொள்வான். அப்படியொரு நாள் வந்தால், அந்த ஆணுக்கு அதிகக் கிராக்கி இருக்கும். அது மட்டும் அவளுக்கு உறுதியாகத் தெரிந்தது.

அதே வேளை, அவள் அவர்களை மாதிரி பார்த்துக்கொண்டும் இருந்தாள்; தன் விழிகளிலோ, கரங்களிலோ, தன்னைச் சுற்றிப் பரவும் ஒளியிலோ அப்படியோர் உத்தரவாதத்தைத் தரக்கூடிய ஒருவனைக் கண்டெத்தலாம் என்று நம்பிக்கொண்டிருந்தாள். ஆனால், இதுவரை, ஒரு பலனுமில்லை. ஆண்கள் எல்லாரும் ஒரு நாளைக்கு முந்தைய பேக்கரி இனிப்புகளைப் போலிருந்தனர்; பார்க்க நன்றாக இருக்கும்; ஆனால் ஒரு கடி கடித்ததும் தெரியும் அவற்றின் லட்சணம். ஆனால், அவள் இன்னும் முயற்சி செய்யத்தான் செய்வாள். அதிர்ஷ்டம் இருந்தால் சில நிமிடங்களுக்கு மேலும் நீளக்கூடிய ஒரு உறவு அவளுக்குக் கிடைக்கலாம். பெண்களுக்கும் தங்களைப் போலவே இது இன்பமாக இருக்கிறது என்பதை அவர்கள் இன்னும் விளங்கிக்கொள்ளவில்லை; ஆனால் பெண்கள் அது இன்னும் மேலும் நீடித்துச் செல்லவேண்டுமென்று விரும்புகிறார்கள்.

அவளுக்குப் பரவாயில்லை; ஓவியம் இருக்கிறது. அதோடு, அவளுக்குள் வளரும் ஒரு குழந்தை இருக்கிறது. அது பையனாக இருக்குமா அல்லது பெண்ணா? பையனாக இருக்கவேண்டும் என்று அவள் எண்ணிக் கொண்டாள். ஆணாக இருந்தால் வாழ்க்கை எவ்வளவோ எளிதாக இருக்கும். ஆனால், எந்தக் குழந்தையாக இருந்தாலும், சமூகத்துக்குப் பதிலளித்துக் கொண்டிராமல் வாழ்க்கையை முழுவீச்சில் முழுமையாக வாழ, அவள் கற்றுத் தருவாள். யார் கண்டது…  குழந்தையும் ஒருவேளை வரையக்கூட வரையலாம். 

இன்னும் சில மாதங்களில், பிறர் தன்னை அழைக்கும் பெயர்களோடு அவள் ‘தாய்’ என்ற ஒரு பெயரையும் இணைக்கப் போகிறாள். சூஸன் வெலடான்: தாய், ஓவியர், ஓவிய மாடல், காதலி, வேசி.

இந்த ஐந்தில் மூன்றேனும் பழுதில்லை; பழுதேயில்லை.

000

*19ஆம் நூற்றாண்டின் இறுதியில் (1881-1897) பாரிஸின் மான்மார்ட்ரெ பகுதியில் தொடங்கப்பட்ட கேபரே. அக்காலகட்ட மதிப்பீடுகளின் படியான கேபரெ – பல்வேறு வகையான கலை மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடைபெறும் இடம். சமூகத்தில் மிக பொருள் படைத்தவர் முதல் ஏழை எளியவர் வரை பல தட்டு மக்களும் இங்கு வரலாம்; ஒன்றாக அமர்ந்து உணவருந்தலாம்; நிகழ்ச்சிகளைக் காணலாம். பரிசோதனைப் பாங்கிலமைந்த கலை முயற்சிகளுக்கு ஆதரவு தரும் நோக்கிலான ஒரு முன்னெடுப்பில் முன்னோடியாக அமைந்த லெ சாட் நோய்ர், அத்தகு ஓவியர்களுக்கு ஒரு வேடந்தாங்கலாக இருந்திருக்கிறது. 

(மூலப் பிரதியில் இல்லாத அடிக்குறிப்பு. கதை நடைபெறும் காலகட்டத்துடன் ஏற்படும் பொருளமைதிக்காக மொழிபெயர்ப்பாளரால் கொடுக்கப்பட்டுள்ளது.)

கார்த்திகா முகுந்த்

பிறந்த ஊர் திருநெல்வேலி. தற்போது கணவர் மற்றும் மகளுடன் பெங்களூரில் வசிக்கிறார். தமிழில் இளமுனைவர் பட்டம். கல்கி வார இதழின் ஆசிரியர் குழுவில் இரண்டு வருடங்கள் பணியாற்றியுள்ளார். முன்னணி தமிழ் எழுத்தாளர்களுடைய புத்தகங்களைப் பிரதி மேம்படுத்தும் பணியில் உள்ளார். பெங்களூர் சித்ரகலா பரீக்ஷத்தில் ஓவிய அறிமுகச் சான்றிதழ் பயிற்சி பெற்றவர்.

கம்பளி ஆடை வடிவமைப்பு(Knitting), பூப்பின்னல்(Crotchet), புகைப்படக் கலை, கல்வெட்டியல், சைகை மொழி ஆகியன இவருடைய பிற ஆர்வங்கள்.

வெளியாகியுள்ள நூல்கள்:

  1. இவளுக்கு இவள் என்றும் பேர் (2010) – கவிதைத் தொகுப்பு
  2. குட்டி யானைக்கு பச்சைத் தொப்பி (2018) – சிறார் கதைகள் தொகுப்பு
  3. ஒரு வெப்பமண்டலத் தாவரமாகிய நான் (2021) – கவிதைத் தொகுப்பு
  4. துமி (2022) – கவிதைத் தொகுப்பு
  5. க்ளாட் மொனேயின் மரத்தடிப் பெண் (2024) - கவிதைத் தொகுப்பு
  6. என் தலைக்குள் ஒரு கடல் இருக்கிறது (2024) - கவிதைத் தொகுப்பு
  7. ஒரு க்ளாஸ்ட்ரோஃபோபிக் பெண்ணும் கார்லோஸ் என்று பெயரிடப்பட்ட நத்தையும் (2024) – சிறுகதைத் தொகுப்பு

Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

உரையாடலுக்கு

Your email address will not be published.

திரட்டு

சேகரம்

கடந்தவை

Go toTop

Don't Miss