
[1]
மகிழ்ச்சியின் வடிவம்
அன்னா கரினீனாவின் முதல் வரி, எல்லா மகிழ்ச்சியான குடும்பங்களும் ஒன்றே போலானவை, மகிழ்ச்சியற்ற குடும்பங்களின் துயரங்களோ, ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரியானவை.
டால்ஸ்டாய் எளிதில் பொதுமைப்படுத்தும் எழுத்தாளர் இல்லை. ஆனால் எல்லா மகிழ்ச்சியான குடும்பங்களும் ஒன்றே போலதானா என்பதையும் உறுதியாக சொல்ல இயலவில்லை. ஒருவேளை நடுத்தர வர்க்கம் உருவாகி வந்த அன்றைய காலத்தில் மகிழ்ச்சி என்பதன் அலகு எளிதாக இருந்திருக்கலாம். உணவும், உறைவிடமும், உறவுகளும், வாரிசுகளும், கேளிக்கைகளும் இருந்தால் அவை மகிழ்ச்சியான குடும்பம் என்றாக இருந்திருக்கலாம்.
இன்று இவை அனைத்தும் அடிப்படைகளாக ஆகிவிட்டபோது மகிழ்ச்சியும் குடும்ப வாழ்க்கையின் அடிப்படையாக ஆகி இருக்க வேண்டும். மேலே குறிப்பிட்ட அனைத்தும் ஒரு குடும்பத்திற்குள்ளாக அர்த்தம் பெறுபவை. புறத்திலிருந்து ஊடுருவுபவை அல்ல. சமூகத்தால், வரலாற்றால் பொருளேற்றப்பட்ட சிக்கல்களால் ஆனவை அல்ல. கணவன் நன்கு பொருளீட்ட வேண்டும், மனைவி இன்முகத்தோடு அனைவரையும் உபசரிக்க வேண்டும். அனைவரும் இலையுதிர் காலத்தில் வேட்டைக்கு போக வேண்டும் என்பது போதுமானதாக இருந்திருக்கக்கூடும்.
நெப்போலியனின் படையெடுப்பின் போது கூட, அதிகாரமும் செல்வமும் மிக்க ஒருவர், குடும்ப உறுப்பினரை போருக்கு செல்வதிலிருந்து தடுத்துக் கொள்ள முடிந்திருக்கிறது. நாடு பதற்றத்திலிருக்கும்போது கூட இளம்பிரபுக்களுக்கு போதையில் சவால் விட்டு கூரையின் மீது ஏறி நடப்பது சாத்தியமாக இருந்திருக்கிறது. செல்வமும் அதிகாரமும் சமூகத்தின் பாதிப்புகளிலிருந்து நமக்கு பண்ணை வீட்டின் சுற்றுச்சுவர்களாக இருந்திருக்கின்றன. இன்றைய அடுக்கக வீடுகள் நம்முடைய வாசலை நான்கோ எட்டோ வீடுகளோடு பகிர்ந்து கொள்பவை. நம்முடைய கோலமும், காலணிகளும் காலையில் இருந்ததைப் போல மாலையிலும் இருப்பது அண்டை வீட்டார்களின் நடமாட்டத்தையும் சார்ந்ததாக இருக்கிறது.
இன்று நம்முடைய தனி இயல்புகளில், சமூக பெறுமதிகளில், உறவுகளில், மகிழ்ச்சியில் எந்த அளவு நம்முடைய சுய முடிவுகளும் எந்த அளவு புற உலகக்குறுக்கீடுகளும் இருக்கின்றன? வேறு வரிகளில், மகிழ்ச்சியான குடும்பங்கள் அனைத்தும் குடும்பங்களாக இருக்கின்றனவா? அக்குடும்பங்களைப் போலவே அதன் தனி உறுப்பினர்களும் மகிழ்ச்சியாக இருக்க முடிகிறதா? அத் தனி மனிதர்களும் தங்கள் மகிழ்ச்சிக்கு எவ்வளவு தூரம் குடும்ப மகிழ்ச்சியை சார்ந்திருக்கின்றனர்? ஒரு பொருள் தன் தனி அர்த்தத்தை இழக்காமல் பொது அர்த்தத்தையும் தக்க வைத்துக் கொள்ள முடியுமா என்பதாக இதை விரிவாக்கிக் கொள்ளும் இடத்தை கொண்டிருக்கிறது விவேக் ஷண்பேக்கின் ‘ஸக்கீனாவின் முத்தம்’ நாவல்.
“நாம் அர்த்தத்தை இன்றிலிருந்தும் இங்கிருந்தும் அறிந்து கொள்ள முடியாது” என்ற அல்லம்ம பிரபுவின் மேற்கோளோடு ஆரம்பிக்கிறது நாவல்.
[2]
வெங்கியின் அடுக்கக உலகம்
கதையின் மையப்பாத்திரமான வெங்கடரமணனின் ஆளுமை எப்படி கல்லூரியிலும் பணியிடத்திலும் தொடர்ந்து மாற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதிலிருந்து நாவல் துவங்குகிறது. குல தெய்வத்தின் பெயரான வெங்கடரமணனனை அலுவலகம் வெங்கியாக்குகிறது. மெல்ல வாழ்க்கையின் அர்த்தம், அதை வெல்வது எப்படி போன்ற கருதுகோள்களையும் பணிச்சூழலே தீர்மானிக்கிறது.
வெங்கியும் அவனுடைய மனைவி விஜியும், சமூகத்தின் மதிப்பீட்டில், வெற்றி பெற்ற, சமத்காரமான தம்பதியினர். அவர்கள் வசிக்குமிடத்தில், இன்றைப் போல அதீதமாக மதிப்பீடு உயரும் முன்பே வீடு வாங்கும் அளவிற்கு வெற்றிகரமானவர்கள். அடுக்ககத்தின் மனைக்கட்டுமானத்தின் தரம் அதன் டைல்களின் இணைப்புகளைக் கண்டால் தெரியும் எனும் அளவுக்கு லௌகீகத்தில் நுட்பமானவர்கள்.
ஆனால் அடுக்ககத்தில் தரைத்தளத்தில் நிற்கையில் பார்த்தால் எவ்வகையிலும் தனித்து தெரியாத மனிதர்கள். அதன் வசதியான குடியிருப்பாளர், முதல் தளத்தில் இருக்கும் ‘செல்வந்தர் குப்தா’ போலவோ அல்லது இரண்டாம் தளத்தில் வசிக்கும் ,’சஷிக்கபூரைப் போல’ தோற்றமளிக்கும் ஓய்வு பெற்ற கலோனியல் போலவோ அல்ல அவர்கள் அழைக்கப்படுவது. C-3 தம்பதியினர், அவ்வளவுதான்.
பிறரிடமிருந்து தனித்துக்காட்டுமளவிற்கான செல்வம் போல, அல்லது மரபால் அளிக்கப்படும் அடையாளம் போல ஏதோ ஒன்றால் தனித்து தெரியாத போது நம்முடைய தனிச்சாதனைகள் பெரிய பொருள் கொள்வதில்லை, அவற்றை உருவாக்கிக் கொள்ள வாழ்க்கை முழுவதையும் அளிக்க வேண்டி இருந்தாலும் கூட. “கணவனும் மனைவியும் ஐடியில் வேலை பார்க்கின்றனர், ஒரு பெண் குழந்தை, சொந்த வீடு” நல்ல குடும்பம் என கடந்து செல்லத்தக்க எண்ணற்ற அடுக்கக குடும்பங்களில் ஒருவர்தான் அவர்களும்.
பிறகு, தனித்தன்மை அல்லது சமத்காரம் என சமூகம் வரையறுக்கும் லௌகீக அளவுகோள் ஒன்றை உருவாக்கிக் கொள்வதன் பெறுமதி என்ன? அது நம்முடைய மகிழ்ச்சிக்கு எவ்வகையிலும் காரணமாகிறதா? அல்லது மகிழ்ச்சியை விலையாகக் கேட்கிறதா? மகிழ்ச்சியான குடும்பங்கள் ஒன்றே போல இருக்க தனி மனிதர்கள் தங்களின் தனித்தன்மையை இழக்க வேண்டி இருக்கிறதா? அதை இழந்து அடையப்படும் மகிழ்ச்சி தனி மனிதனின் மகிழ்ச்சியா அல்லது குடும்பத்தின் மகிழ்ச்சியா?
இந்த உறவில் தனிமனிதனுக்கும் குடும்பத்துக்குமான அதே அளவு இடைவெளி இருக்கும் இன்னொரு இடம் லௌகீக விவேகத்திற்கும் இலட்சியவாதத்திற்கும் இருக்கிறது.
சரியான இடத்தில் வீடு பார்த்து சந்தை மதிப்பு உயரும் முன்பு வீடு வாங்குபவனும், பள்ளி ஆசிரியரான மாமியாருக்கு கோடை விடுமுறை வரும் நேரத்தில் பிரசவம் நிகழுமாறு குழந்தை பெற்றுக்கொள்ளும் சமத்காரமான தம்பதியராக இருக்கும் இவர்களுக்கும் [அது தற்செயல்தான் என்பது தனி], இலட்சியவாதம் பேசும் கம்யூனிச, ஜனநாயக மாற்றங்களை உத்தேசித்து தங்கள் வாழ்க்கையை ‘அழித்துக்கொள்ளும்’ ரமணன், சுரேஷ், சுரேந்திரன் போன்றவர்களுக்குமான முரண்பாடுகளும் தொடர்ந்து வருகின்றன.
வாழ்வின் வெற்றி என்பதை எதைக் கொண்டு எவர் அளப்பது? அது மாறாத ஒன்றா? [வெங்கி வாங்கியபோது அந்த வீடு நவீனமாக இருந்தது. இப்போது அது பழைய பாணி அடுக்ககமாகிவிட்டது. நண்பர்கள் வாங்கியதில் உடற்பயிற்சிக்கூடமும், நீச்சல் குளமும் இருக்கும் நவீனமானவை ஆகிவிட்டன.] பொருட்களின் அர்த்தம் போல அதுவும் மாறிக்கொண்டே இருப்பதா? அதை அறிய முடியுமா?
[3]
ஸக்கீனாவின் முத்தம்: வாசிப்பும் பொருளும்
ஸக்கீனாவின் முத்தம் என்ற தலைப்பு நாவலை ஒரு காதல் கதை போல தோன்றச்செய்கிறது. நாவலின் மையக்கதாபாத்திரங்களோடு நேரடியான தொடர்பு எதுவும் கொண்டதில்லை இத்தலைப்பு என்றாலும் நாவலின் மையக்கேள்வியோடு தொடர்புடையது. கதாநாயகன் வெங்கியின் மாமா, ரமணன் இளவயதில் கம்யூனிசத்தில் ஆர்வம் கொண்ட, இலட்சியவாதத்தை கைக்கொண்டு அதற்கான போராட்டங்களில் ஈடுபட்டு, மரணத்தை அடைந்தவர். அவர் எழுதும் கடிதங்கள், அவருடைய கோழிக் கிறுக்கல்கள் போன்ற கையெழுத்தால் வாசிக்கப்பட முடியாமல் சேர்த்து வைக்கப்படுகின்றன. வீட்டில் நிகழும் விசேஷம் ஒன்றில் அவர் நினைவுகூறப்படும் போது, அவருடைய கையெழுத்து குறித்த பேச்சும் அதன் வழி அக்கடிதங்களும் பேசுபொருளாகின்றன. அக்கடிதங்களில் ஒன்றை விருந்தினர்கள் ஒவ்வொருவராக வாசிக்கின்றனர். ஒவ்வொரு வார்த்தையையும் தோராயமாக ஊகித்து அர்த்தங்களை உருவாக்கி பொருள் கொள்ள முயலும் போது உருவாகும் அபத்தமான பொருட் குழப்பங்களில் ஒன்றாக இவ்வரி வருகிறது. “நான் ஸக்கீனாவின் முத்தங்களையே விரும்புகிறேன்.” விருந்தினர்கள் வெடித்து சிரிக்கின்றனர்.
ரமணனின் வகுப்பில் அவனுடைய தேர்வுத்தாள்களை ஆசிரியருக்கு வாசித்துக்காட்டிய பள்ளித்தோழன் குருதாஸ் கடிதத்தை வாங்கி வாசிக்கையில்தான் உண்மையான அர்த்தம் வெளிப்படுகிறது. காவலர்களிடம் மாட்டிக் கொள்வதை விட நான் மரணத்தையே விரும்புவேன் என்பதுதான் அதன் சரியான பொருள். அதை உணர்ந்த உடன் விசேஷம் நிகழும் வீட்டின் கொண்டாட்டங்களும், தவறான பொருள் கொள்ளாலாலும் உருவான கிண்டல்கள், வெடிச்சிரிப்புகள் அனைத்தும் வடிந்து விடுகின்றன.
நாமறிந்த மொழியில் எழுதப்பட்டிருந்தாலும் கூட நம்மால் அதன் சரியான அர்த்தத்தை அடையமுடியுமா என்பது எத்தனை எத்தனை காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது. கையெழுத்திலிருந்து தலையெழுத்து வரை? வாசிப்பதும் பொருள் கொள்வதும் மொழி சார்ந்தது மட்டுமா? மொழி என்பது குறியீடுகளும்தானே? குறியீடுகளை பொருள் கொள்வது நம்மை, நம்முடைய இருப்பை, அது நிகழும் காலத்தை முன் வைத்து நிகழ்வதும்தானே? அப்படியெனில் குறியீடுகளின் பொருளை தீர்மாணிப்பதில் நம்முடைய காலத்தின், இடத்தின் இருப்பென்ன? அக்காலமும் இடமும் உருவாக்கும் பிற இடையீடுகள் எவ்வகையில் நம் பொருள் கொள்ளலை தீர்மானிக்கின்றன?

[4]
உறவின் குறியீடுகள்
சுய முன்னேற்ற நூல்களை வாசிக்கும் வெங்கி அலுவலகத்தில் இருக்கும் சக ஊழியர்களால் கீழ் நோக்கி காணப்படுகிறான். அதன் பொருட்டு வாசிப்பை ரகசியமாக வைத்திருக்கிறான். [அவன் வாசிக்கும் நூல்கள் “உறவுகளின் ஒத்திசைவை அடைவது, வாதங்கள் சண்டையாகமல் விவாதத்தில் வெல்வது” போன்று தலைப்புகளால் அறியப்படுபவை. ரமணன் வாசிக்கும் நூல்களோ ஆர்வெல், மார்க்ஸ் போன்று ஆசிரியர்களின் பெயர்களால் அறியப்படுபவை.]
தேனிலவுக்கு செல்லும் போது அவன் எடுத்து செல்லும் அவ்வகையான ஒரு நூல் அவனுடைய மனைவியால் கண்டுபிடிக்கப்படுகிறது. ஆச்சரியமாக மனைவியும் அதே நூலை வாசித்துக் கொண்டிருக்கிறார். அந்தரங்கமான அவ்வாசிப்பு வெளிப்படும் தருணம் இருவரையும் ஒன்றாக்குகிறது. அங்கே இருவரும் ஒரே பிரதியை ஒன்றாக வாசித்து ஒன்றாக இணைகின்றனர். அன்றாட தளத்தில் வாழ்க்கை இணக்கமாக தொடர்கிறது. குழந்தை பிறக்கிறது. அவளும் வளர்கிறாள். ஆனால் இந்த இணைவு சுட்டுவதைப் போல இருவரும் ஒருவரோடு ஒருவர் முற்றிலும் கலந்துவிட வில்லை. உடல்களும் உறவும் மட்டுமே கலக்கின்றன.
அத்தனை நெருக்கத்திற்கு பிறகும் கணவன் மனைவி உறவு மெல்ல சலிப்பூட்டுவதாகவும் விரிசல் கொண்டதாகவும் ஆகிறது, சண்டைகள் என ஏதுமில்லாமலயே. உடலுக்கும் உறவுக்கும் அப்பால் கலப்பதற்கு எதுவும் இருக்கிறதா? அதுதான் வெங்கியின் சரித்திரத்தில் விடுபட்டு போய்விட்டதா? இல்லையெனில் சுமுகமாக செல்லும் குடும்பத்தில் எப்படி கண்ணுக்கு தெரியாத இடைவெளிகள் உருவாகின்றன? மகளுடைய அனைத்து ரகசியங்களையும் அறிந்திருந்தாலும் அவற்றை விஜி கணவனிடம் பகிர்ந்து கொள்வதில்லை. மகளோடான அவனுடைய ஒவ்வொரு வாதத்திலும் அவளே மகள் பக்கத்தில்தான் நிற்கிறாள். எனினும் எப்படி மகளின் அனைத்து பிரச்சனைகளுக்கும் கணவனே காரணம் என்பவளாக ஆகிறாள்? மகளைப் பற்றி எதுவும் தெரிந்து கொள்ள இயலாதவன் எப்படி எதிரியாகிறான்? அந்த விரிசலுக்கு காரணம் உறவில்தான் இருக்கிறதா? இல்லை ஆண் பெண் என்பதில் இருக்கிறதா? டைல்ஸ்களின் இணைப்பை வைத்து வீட்டின் கட்டுமானத்தை அறிவதைப் போல உறவின் இணைப்புகளின் மர்மத்தை அறிய எளிய வழிகள் ஏதுமில்லையா?
உடலை அறிவதால் உள்ளத்தை அறிய முடியுமா? உடலும் உறவும் வேறு வேறா? குறிப்பீடுகளை (Signifier) அறிவதாக எண்ணிக் கொள்ளும் நாம் அறிவதெல்லாம் குறிப்பான்களையேதானா(Signified)?
இந்த இடத்தில் இன்னொரு பெரிய சமூக குறுக்கீடு நிகழ்கிறது. தன் மகள் படிக்கும் பள்ளியில் நிகழும் சிறு சம்பவம் ஒன்றினூடாக அந்த பகுதியில் நிழல் உலக தாதாக்களோடு ஒரு சிக்கல் உருவாகிறது. இரு வேறு தாதக்கள் நடுவே அவர்கள் சிக்கிக் கொள்கிறார்கள். தன்னுடைய வீடு என்று நினைத்ததை அவர்கள் நம்முடைய ஏரியா என்கிறார்கள். வெங்கியை “நம்ம சாதி சார் நீங்க. விட்டுடுவோமா? ஆயிரக்கணக்கணக்கான சாதி ஓட்டுல நீங்களும் ஒண்ணு சார்.” என்கிறார்கள்.
[5]
சுயமுன்னேற்றமும் அர்த்த தேடலும்
ஒருவர் எதன் பொருட்டு சுயமுன்னேற்ற நூல்களை வாசிக்க வேண்டும்? ‘சக மனிதர்களோடு எப்படி உரையாடுவது?’ ‘உறவுகளை எப்படி கையாள்வது?’ ‘வாதங்களை எப்படி சரியாக முன் வைப்பது?’ போன்ற நூல்களை வாசிக்கும் ஒருவர் இவை எவற்றைப் பற்றியும் யோசிக்காமல் வாழும் சக மனிதர்களுக்கு வினோதமாக தோன்றுவது இயல்புதான். ஆனால் அவற்றை வாசிப்பவருக்கு ஏதோ ஒரு தருணத்தில் தன்னுடைய இருப்பு போதவில்லை எனவோ, இன்னமும் அறிந்து கொள்ள இருக்கிறது எனவோ, அதை விடவும், எல்லோரும் வாழும் அன்றாட பொது வாழ்வில் என்னுடைய தனி இடம் என்ன எனவோ கேள்வி எழுகிறது. பொது மொழியில் என் தனி அர்த்தம் என்ன என்ற கேள்விதான் இத்தேடலை உருவாக்குகிறது.
ரமணன், சுரேஷ், சுரேந்திரன் ஆகியோர் எவ்வகையிலேனும் பொதுச்சூழலை மாற்ற முடியும் என எண்ணுகின்றனர். அதன் பொருட்டு அமைப்புகளோடு, சம காலத்தோடு முட்டிக் கொண்டிருக்கின்றனர். ரமணன் அமைப்புக்கு வெளியே சென்று முட்டி அழிகிறான். ஆனால் பிறரின் மனசாட்சியில் வாழ்கிறான். சுரேஷின் இடம் சந்தேகத்திற்குரியதாக இருக்கிறது, தன்னுடைய செயல்கள் வழி அவன் இலட்சிய நோக்கில்தான் இயங்குகிறானா அல்லது சுரண்டலுக்கு பயன்படுத்திக் கொள்கிறானா என்பது நாவலில் இடைவெளியாகவே விடப்படுகிறது. சுரேந்திரன் அமைப்புக்குள் இருந்து கொண்டே அடுத்த தலைமுறைகளோடு உரையாடிக் கொண்டிருக்கிறான்.
மறுபுறத்தில் வெங்கட், விஜி போன்றோர் அமைப்புக்குள் இருந்து அன்றாடத்தில் ஒழுகிச்செல்கிறார்கள். வெங்கியே விஜியை முன்வைத்து சொல்வதைப் போல, ‘இவற்றை எல்லாம் வாசிப்பது ஒரு ஆர்வத்தால்தானே தவிர, அவற்றைக் கொண்டு வாழ்க்கையை மாற்றிக் கொள்ள அல்ல.’ பின்னாளில் அதே விஜியும், மகளும் அவனை கிண்டல் செய்கிறார்கள். புத்தகங்களில் வாசித்தவற்றைக் கொண்டு வாழ்க்கைக்கு அர்த்தம் தரப்பார்க்கிறான் என.
மெல்ல புத்தகங்கள் பொருளிழந்து அட்டைப்பெட்டிக்குள் அடைபட்டுப் போகின்றன. தேனிலவு முடிந்து வந்து வெங்கியும், விஜியும் ஆர்வத்தோடு அவர்களுடைய புத்தக அட்டைப்பெட்டிகளை திறந்து இருவரின் நூல்களையும் ஒன்றாக அடுக்கி உருவாக்கிக் கொள்ளும் அலமாரி பயன்படுத்தப்படாமலேயே போகிறது. இறுதியி அவை அர்த்தமிழக்கும் போது மீண்டும் அட்டைப்பெட்டிகளில் அடைபட்டு மேலேறுகின்றன.
குறிப்பான்களுக்கு அர்த்தம் குறிப்பீடுகளிலிருந்து நாம் உருவாக்கிக் கொள்வதே, குறிப்பான்களிலேயே ஏற்கனவே இருப்பது அல்ல. அப்படி நம் சமூகத்தின் வரவேற்பறைகளின் காட்சி அலமாரிகளில் நாம் அடைத்து வைத்திருக்கும் குறிப்பான்கள் என்னவாக பொருள் கொள்கின்றன?
அடுக்ககத்தில் அனைத்து வீடுகளிலும் இருக்கும் பொருட்களை வெங்கி நினைவுகூர்கிறான். வாங்கிய பரிசுப் பொருட்கள். சான்றிதழ்கள். வெளி நாட்டுப் பயணத்தின் நினைவுப் பொருட்கள். குடும்ப வாழ்க்கை சரியாக சென்றால் அத்தகைய குடும்பத்தின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுடனான குடும்ப புகைப்படங்கள். ஒவ்வொருவரும் தம்முடைய தனி வாழ்க்கைக்கு அர்த்தம் உருவாக்கிக் கொள்ளும் பொது வாழ்க்கையின் சில குறிப்பான்கள். பல ஆயிரம் பேர் பணி புரியும் நிறுவனத்தில் இருக்கும் ஒருவர் வாங்கும், ‘ஆண்டின் சிறந்த ஊழியர் சான்றிதழ்’ அப்பல்லாயிரம் ஊழியர்களின் பொது அடையாளமான ‘கார்ப்பொரேட் ஊழியர்’ என்பதிலிருந்து அவருடைய இருப்பின் அர்த்தத்தை பிரித்து உருவாக்கி அளிக்கிறது. ஆனால் அந்தக் குறிப்பான்கள் உருவாக்கும் அர்த்தம் என்பது அவருடைய தனி இருப்பால் மட்டும் உருவாவதில்லை. அணியின் பிற ஊழியகளின் இருப்பால் உருவாவது. அந்நிறுவனத்தின் சொல்லாடலுக்குள் மட்டுமே அர்த்தம் பெறுவது.
இப்படி பொது அர்த்தத்திலிருந்து தன் அர்த்தத்தை உருவாக்கிக் கொள்ள முயலும் போது தனி அர்த்தத்தில் நுழையும் பொது அர்த்தம் மீது நமக்கு என்ன கட்டுப்பாடு இருக்கிறது?
பெண்கள் குறைவான ஆடையை அணிவதுதான் பாலியல் மீறல்களுக்கு காரணம். ஆகவே அவர்கள் முழு உடலை மறைத்து அணியவேண்டும் என்று பேசும் அரசியல்வாதிகள் விவாதிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தேசத்தின் பேசுபொருள் மட்டுமல்ல. அதை குடும்பமாக அமர்ந்து கண்டு விவாதிக்கும் நவீனச்சூழலில், குடும்பத்தில் இருக்கும் அனைவரும் ஏதோ ஒரு தரப்பை எடுக்க வேண்டியிருக்கிறது. சுயமாக ஒரு கருத்து இருக்கிறதோ இல்லையோ ஒன்றை சொல்ல வேண்டியிருக்கிறது. அங்கே இருப்பது புற வயமான ஒரு விவாதமில்லை, உறவின் வெவ்வேறு முனைகளில் இருப்பவர்களை ஒருவருக்கொருவர் ஆராயும் செயலாக ஆகிறது.
மனைவியும் மகளும் அதை ‘தங்கள்’ மீதான சமூகத்தின் திணிப்பாக காண்கின்றனர். அதற்கு கணவனும் தந்தையுமான வெங்கி எவ்வகையில் எதிர்கொள்கிறான் என்பதை அறிய விரும்புகின்றனர். தேனிலவில் மனைவி குட்டைப்பாவாடை அணிந்துகொள்ள விரும்பும் போதும், மகள் தன்னுடைய விருப்பத்திற்கு ஆடை அணிந்து கொள்ளும் போதும் அதற்கு எதிர்ப்பு ஏதும் தெரிவிப்பவன் அல்ல வெங்கி. ஆனாலும் இப்போது அவன் ஆணாக இருப்பதாலேயே தொலைக்காட்சியில் வரும் தேசியவாதியின் பாலினத்தை சார்ந்தவனுமாகிறான் அல்லது அவர்கள் அவனை அப்படி காண்கின்றனர்.
மனைவியும் மகளும் தங்களுக்குள் ரகசியங்களை பரிமாறிக் கொள்வதால் தனித்து விடப்பட்டவனாக உணரும் வெங்கி, தன்னுடைய பாலடையாளத்தாலேயே தனிமைப்படுத்தப்பட்டவனாக உணர்கிறான். ஆடை விஷயத்தை ஆதரிக்காவிட்டாலும் கூட, அரசியல் செயல்படும் விதத்தை முன் வைத்து புற வயமாக பேசுவதால் விவாதம் தந்தை, கணவன் என்பதிலிருந்து மீறி ஆண்xபெண் என்ற எதிரீடாக ஆகி விடுகிறது. அவனுக்கு நீ ஓட்டு போடாதே என்று மகள் சொல்லுமிடத்தில் அவனுக்கு ஓட்டென்பது உறவின் அர்த்தத்தை தீர்மானிப்பதாக ஆகிறதா என்பதான குழப்பம் உருவாகிறது. உறவின் நெரிசலால் அந்த அரசியல்வாதிக்கே ஓட்டும் போட்டு விடுகிறான் என நினைக்கிறேன். நாவலில் அந்த இடம் விவரிக்கப்படவில்லை என்றாலும் கூட.
தேசிய அரசியல், அதில் ஆண் பெண் இடம், அவ்விவாதங்களால் உருவாகும் உறவின் உராய்வுகள், அவ்வன்முறை நம்முடைய உண்மையான கருத்தியலுக்கு எதிராக இட்டுச்செல்வது என அனைத்தும் குழம்பும் இடமாகிறது குறிப்பான்களும் குறிப்பீடுகளுமான வெளி. மனைவியும் மகளும் எதை அணிகிறார்கள் என்பதை பொருட்டாக கருதாதவன் கூட மனைவிக்கும் மகளுக்கும் எதிராக சென்று நிற்க நேர்கிறது. இத்தகைய முரண்கள் மெல்ல உறவுகளில் விரிசல்களை உருவாக்குகின்றன.
[6]
உட்புறம் தாழிடப்பட்ட வீடு
ஒரு நாள் கிராமத்திலிருந்து திரும்பி வரும்பொது வீட்டின் கதவைத் திறக்க இயலவில்லை. சாவி இவர்களிடம்தான் இருக்கிறது. ஆனால் வீடு உட்புறமாக தாழிடப்பட்டிருக்கிறது. வீட்டுக்குள் திருட்டு நிகழ்ந்திருக்கிறது என உணர்ந்து கதவை உடைத்து திறந்து சென்று பார்க்கிறார்கள். திருடர்கள் மொட்டை மாடியிலிருந்து கயிறை இறக்கி குளியலறை வழியாக உள்ளே வந்து சென்றிருப்பது தெரிய வருகிறது. திறக்கப்பட்ட பீரோவின் சாவி அதன் துவாரத்திலேயே இருக்கிறது. ஆனால் வீட்டுக்குள் இருந்து எதுவும் எடுத்து செல்லப்படவில்லை. அனைத்தும் அங்கேயே இருக்கின்றன. எவரோ வந்து விட்டு போனதன் தடயமும்.
இந்த கலவரத்தால் அன்றைக்கு விடுப்பெடுத்து விட்டதால் வாய்ப்பை பயன்படுத்தி வீட்டை சுத்தம் செய்து விடலாம் எனவும், ஏதேனும் திருடப்பட்டிருக்கிறதா எனவும் பார்க்கலாம் எனும் போது மனைவியும் மகளும் அவனை அலட்சியம் செய்து விட்டு அலுவலகத்திற்கும் கல்லூரிக்கும் சென்று விடுகின்றனர். எந்த சந்தர்ப்பத்தையும் நன்னோக்கில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற உன்னுடைய அசட்டு வாசிப்பு அறிவை விட்டுவிடு என்று சொல்லிவிட்டு செல்கிறாள் மகள் [“Please, Appa. Stop it. This is your positive attitude nonsense.”] ஒற்றை ஓட்டால் தேசத்தை திருத்தி விடலாம் என நம்புபவள்தான் அவள். அதற்காக அப்பாவையே அப்பாவாக அல்லாமல் ஆணாக காண்பவளும் கூட. ஆனால் அங்கே அப்பாவுடனான உறவு சென்று நிற்கும் முட்டுச்சந்து திகைப்பை அளிப்பது.
[7]
அர்த்தத்தின் தீவிரமும் தீவிரத்தின் அர்த்தமும்
தனியாக வீட்டை சுத்தம் செய்ய துவங்கும் வெங்கியின் அன்றைய செயல் அது நாள் வரையிலான வாழ்க்கையை நினைவு கூர்வதாக ஆகிறது.
முதலில் அலமாரியில் இருக்கும் வாசிக்கப்படாத தன் நூல்களை, தேனிலவில் இருவருமாக வாசித்த “லிவிங் இன் ஹார்மனி” நூலை மட்டும் வைத்து விட்டு, மீண்டும் அட்டைப் பெட்டியிலிட்டு பரணில் ஏற்றுகிறான். ஒருவேளை அவன் தன்னுடைய தேடலின் பொருட்டு தொடர்ச்சியாக வாசித்துக் கொண்டிருந்தால் வாழ்க்கைக்கு அவன் தேடிக் கொண்டிருந்த தனி அடையாளத்தை கண்டடைந்திருக்கக் கூடுமோ? இப்போது பரணுக்கு செல்வது அவனுடைய நூல்கள் மட்டுமே. மனைவியுடைய, மகளுடைய நூல்களில் கைவைக்கவில்லை. அதற்கு உரிமையில்லை என எண்ணியிருப்பானா? எஞ்சியது ஒத்திசைவே இல்லாத உறவின் நினைவாக மிஞ்சும் லிவிங் இன் ஹார்மெனியின் அலமாரி பிரதி மட்டுமே.
திருமணமான புதிதில் மனைவியை நகைகளுமின்றி முழு நிர்வாணமாகக் காணும் ஆர்வத்தில் தாலியைக் கழட்ட சொன்ன போது கழற்ற மாட்டேன் என்று சொன்ன தாலி இப்போது ஒரு பெட்டிக்குள் கிடக்கிறது. கர்ப்பமாக இருக்கும் போது அவள் அதைக் கழற்றியதும் பிறகு அணிந்தே நெடு நாட்களாகிவிட்டது என்பதும் நினைவுக்கு வருகிறது. மகள் குழந்தையாக இருந்தபோது அணிந்த வளையல். அம்மாவையும் அப்பாவையும் குச்சி மனிதர்களாக வரைந்து லவ் யூ என எழுதி தந்த ஓவியம். இவை அனைத்தும் இருக்கும், வெங்கிக்கும் விஜிக்குமான திருமணத்தில் அன்பளிப்பாக எவராலோ அளிக்கப்பட்ட, சந்தனப் பெட்டி. மைசூரின், ஶ்ரீரங்கப்பட்டணத்தின் சுற்றுலாத்தளங்களின் புறவெளியில் விற்கப்படும் சந்தன சீப்பு, சாவிக்கொத்து போல சாதாரண மரத்தில் செய்து சந்தனத்தின் எண்ணைப் பூச்சால் சந்தனப் பெட்டியாக்கப்பட்டது.
அன்பு என்பது எத்தனை தூரம் மாற்றுக் கருத்துக்களுக்கு இடமளிக்கும் ஆழம் கொண்டது என்பதிலிருந்து எத்தனை தூரம் ஒத்தக் கருத்துக்கு இடம் தருகிறது என்பதன் பொருட்டு மதிப்பிடப்படுவதாக உருமாறி நிற்பதன் சமூக/கால/இட/ உறவுக்கோலத்தை உணர்ந்து திகைத்து நிற்கிறான் வெங்கடரமணன்.
கள்ளிப்பெட்டிகளின் மீதான எண்ணைப் பூச்சு காற்றில் கரைய கொஞ்சம் காலம் ஆகும். எஞ்சுவது கள்ளிப்பெட்டியின் வாசம்தான். அதைத்தான் அல்லம்ம பிரபு சொன்னாரா, அர்த்தத்தை புரிந்து கொள்ள உங்களுடைய கால, இட எல்லையிலிருந்து ஆவதில்லை என? பொது வாழ்க்கையின் தளத்திலிருந்து தனி வாழ்க்கைக்கு அர்த்தம் தர உத்தேசிப்பதில் அர்த்தம் என ஏதும் உள்ளதா? அது நாம் தருவதா? காலமும் இடமும் தருவதா?
அர்த்தம், காலத்தாலும் இடத்தாலும் உருவாவதா அல்லது நாமே உருவாக்கி இருந்தாலும் கூட அவற்றால் மாற்றப்பட்டுக்கொண்ட இருப்பதா? காலத்திலும் இடத்திலும் சிக்கிக் கொண்ட தன்னிலைகள் செய்யவேண்டியதும், கூடுவதும்தான் என்ன?
அந்தக் கணத்தில் வெங்கடரமணனுக்கு தோன்றுகிறது, “வாழ்க்கையின் அர்த்தம் நாம் அதற்கு அளிக்கும் “அர்த்தத்தில்” உருவாவது அல்ல. அதன் மீதான நம்முடைய ‘தீவிரத்தால்’ உருவாவது. அத்தீவிரத்தால் எடுக்கப்படும் முட்டாள்தனமான முடிவுகள் கூட அர்த்தத்தை அளிக்கக்கூடும்.
நாம் ஒன்றுக்கு தரும் அர்த்தம் முற்றிலும் நம்முடைய கையில் இல்லை, காலமும் சமூகமும் அதை மாற்றி விடலாம். அதன் பொருட்டு நம்முடைய இருப்பும் கூட அர்த்தமிழந்து போகலாம். நாம் செய்யக் கூடுவது, அர்த்தம் என நாம் நம்புவதற்கு நம்மை தீவிரமாக அளித்துக் கொள்வதே. வாழ்தல் என்பது அந்த தீவிரத்தாலேயே அர்த்தம் பெறுகிறது.
திருமணத்திற்கு முன்பு இருவரும் உரையாடி பார்த்துதான் திருமணம் செய்துகொள்வோம் என்று சொன்னதை வெங்கியும் விஜியும் புரட்சிகரமான செயலாக எண்ணிக் கொள்கிறார்கள். இதைக் கேட்கும் மகள், சொந்த சாதியில் திருமணம் செய்து கொள்வதில் என்ன புரட்சி இருக்கிறது என்கிறாள். இருவரும் வெற்றிகரமான குடும்பமாக வாழ்ந்தாலும் கூட உறவுகளில் அந்த தீவிரம் இல்லாமலாகும் போது அவ்வுறவுக்கு என்ன அர்த்தம் எஞ்சும்? அதில் என்ன பெருமிதம் வேண்டி இருக்கிறது? வேறொரு இடத்தில் இதையே அவள், நீங்கள் அலுப்பூட்டும் வாழ்க்கையை வாழ்கிறீர்கள் என்கிறாள்.
பல வருடங்களாக அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சுய மதிப்பீட்டு அறிக்கையை காணும்போது திகைப்பாக உணர்கிறான். இலக்கிற்கும் சாதனைக்கும் நடுவே பெரிய எல்லா வருடங்களிலும் இடைவெளிகள் இருந்திருக்கின்றன. அது அலுவலக வழக்கம்தான். ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் தீர்மானித்த இலக்கை நகர்த்துவது, நாம் அடைந்ததற்கும் இலக்குக்கும் இருக்கும் இடைவெளி ஆகியவை அவ்வருடம் அலுவலகம் தர உத்தேசிக்கும் ஊதிய உயர்வை பொருத்தது. நம்முடைய திறனை அல்ல. இலக்குகளையே பொறுத்தது கூட அல்ல. கடந்த காலத்தின் ஒரு அறிக்கையை எடுத்துப் பார்ப்பது ஒருவனை சிதைத்துவிடக் கூடியது என்கிறான். ஒவ்வொரு ஆண்டும் ஊதியம் உயர்ந்து கொண்டுதான் வந்திருக்கும். ஆனால் பத்து வருடம் கழித்து பார்க்கையில் தன் வாழ்வின் ஒரு பத்தாண்டு என்பது பத்து ஐந்து சதவீத உயர்வு மட்டும் எனக் காண நேர்வது திகிலூட்டுவது. தன்னுடைய பொருளியல் சாதனை என்பது திடீரென வாழ்வில் அதற்கு நாமளித்த காலத்தை காட்டி அர்த்தம் எங்கே எனக் கேட்பது.
தன் வாழ்வின் பிழை என்பது சமத்காரமாக வாழ்ந்ததும், தீவிரத்தை இழந்ததும் என அறிந்த வெங்கடரமணன் தன் மகளை சுதந்தரமாக அவளுடைய தீவிரத்தன்மையில் வளர விடுவானா? அதன் பொருட்டு நெருக்கத்தை இழந்தாலும் கூட? இல்லை மீண்டும் வெங்கியாகவே நீடித்து அவளிடமிருந்தும் அன்னியப்பட்டு போவானா? இறுதியில் குடும்பத்திலிருந்தாலும் குடும்பமாக இல்லாமலாகுமா அது? வெங்கியின் தனி இருப்பின் பொருளாக இனி வரும் வாழ்க்கையில் எஞ்சுவது என்ன? மிகக்கொடூரமான சித்திரம் ஒன்றில் நாவல் நிறைவுறுகிறது. இந்த விஷயங்களை எண்ணி அவன் சிந்தித்துக் கொண்டிருக்கும் போது கதவு தட்டப்படுகிறது. போலீஸ் வந்திருக்கிறது. வீட்டில் நிகழ்ந்த திருட்டின் விசாரணைக்காக. அவர்கள் காஃப்காவின் அதே விசாரணை அதிகாரிகள்தான். இந்த நூற்றாண்டில் அவர்கள் மாறிவிட்டார்கள். உங்களை கைது செய்யப் போவதில்லை. உங்களுடைய வீட்டில் திருட்டு எதுவும் நிகழ வில்லை என்று அறிவிக்கப்போகிறார்கள், வாழ்க்கையின் அர்த்தம் எங்கே என்று கேட்டு நீங்கள் நின்று கொண்டிருக்கும் வீட்டிற்கு பாதுகாப்பு ஏதுமில்லை. எவரும் தரவும் இயலாது.
கதவை வெளிப்பக்கமாக பூட்டிக் கொண்டாலும் தொலைக்காட்சிகள் வழியாகவும், அடுக்ககம் நம்முடையதென்றாலும் அது இருக்கும் நகர்ப்புறச் சூழலின் அடியாட்களும், நிழல் உலக தாதாக்களும், வீட்டுக்குள் இருக்கும் தொலைக்காட்சியில் வரும் விவாதங்களும் நம்முடைய குடும்பத்தின் மகிழ்ச்சியை தீர்மானிக்கத்தானே செய்கின்றன?
ஊர், வெள்ளத்தில் நிறைந்து ஒடும் போது நாம் வெட்டிய தனிக்கிணறுகள் அதற்கடியில் காணாமல் போவதைக் கண்டு நிற்கையில் எந்த காவலர் உதவ முடியும்?பூட்டிய வீட்டுக்குள் நுழைந்தவர் எதையும் எடுத்து செல்லவில்லை என்றாலும் நாம் இழந்தது எதுவும் இல்லை என்று சொல்லிவிட முடியுமா?

ஏ.வி மணிகண்டன்
ஆசிரியர் குறிப்பு: பெங்களூரைச் சேர்ந்த புகைப்படக் கலைஞரான ஏ.வி.மணிகண்டன், கலை இலக்கிய விமர்சகரும்கூட. காண்பியல் கலை சார்ந்தும் நவீன கவிதைகள் சார்ந்தும் தமிழில் விரிவான திறனாய்வுகள் எழுதியிருக்கிறார். இந்திய தத்துவம் பற்றியும் கட்டுரைகள் எழுதி வருகிறார்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.



















