
கபிலரின் ‘ குறிஞ்சிப்பாட்டு’ பத்துப்பாட்டு நூல்களில் ஒன்று. 261 அடிகள் கொண்ட நீண்ட பாடல். குறிஞ்சித் திணைக்குரிய பாடல்களில் இதுவே நீண்டது. குறிஞ்சியின் மலைவளத்தை விரித்துப் பேசுவதால் இது ‘ பெருஞ்குறிஞ்சி ‘ என்றும் அழைக்கப்படுகிறது. இதன் முடிவில் வெண்பா வடிவில் இரண்டு சிறிய பாடல்களும் உண்டு. கதைவடிவில் உள்ள நீண்ட பாடல் என்பதால்’ காப்பியப் பாட்டு’ என்றும் சிறப்பிக்கப்படுகிறது. “ இளங்கோவடிகள், கம்பர் முதலாயினர் போன்று இவ்வாசிரியர் தொடர் நிலைச் செய்யுள் இயற்றியிருப்பரேல் இவரது பெருமை யாவருள்ளத்தும் இப்பொழுதையினும் நன்றாகப் பதிக்கப்பட்டிருக்கும். தமிழுலகு இதனினும் மிகுதியான பயனை எய்தியிருக்கும். எனினும் அவரியற்றிய குறிஞ்சிப்பாட்டும், குறிஞ்சிக்கலியும் இயற்கை வளங்களை எடுத்துரைப்பதில் நிகரற்றனவாய்த் தொடர் நிலைச் செய்யுளின் ஓரளவான பயனை அளிக்கவல்லன” என்கிறார் ந.மு.வேங்கடசாமி நாட்டார்.
ஆரிய அரசன் பிரகத்தனுக்கு தமிழின் சிறப்பை, தமிழ் இலக்கிய மரபை உணர்த்துவதற்காக இந்நூல் பாடப்பட்டதாக சொல்லப்படுகிறது. தமிழ் மரபின் களவொழுக்கத்தைப் பேசும் நூலென்று இதைச் சொல்லலாம்.
வடநூல் எட்டுவகை மணங்களைச் சொல்கிறது. அதில் கந்தர்வ மணத்தினைப் போன்றது களவு என்கிறது தொல்காப்பியம். ஆனால் கந்தர்வ மணம் கற்பின்றியும் நிகழலாம. ஆனால் தமிழ் களவு கற்பின்றி அமையவே அமையாது என்கிறார் நச்சினார்கினியர். “ தசைவெறி மீறிய எல்லையிலே சான்றாண்மையைப் பலியிட்டு வெறியாட்டம் ஆடுவதைக் களவொழுக்கம் என்று தமிழர் கொள்ளவில்லை. களவினையும் மணம் என்றும் கைகோள் ( ஒழுக்கம்) என்றும் அவர்கள் குறித்துள்ள நுட்பத்தினை ஊன்றிக் கருதுதல் வேண்டும்” என்கிறார் ம.ரா.போ.
தமிழ் மரபில் தலைவனும் தலைவியும் கண்ட நாளிலேயே அவர்களது உடல்கள் இணைகின்றன. ஆம் அப்படித்தான் நமது நூல்கள் சொல்கின்றன. தொல்காப்பியம் அது ஊழ் வழி நிகழ்வது என்கிறது. “ ஒன்றி உயர்ந்த பாலது ஆணையின் ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப” என்கிறது. ‘பால்’ எனில்’ ஊழ்.’ ஆக அவர்களது புணர்ச்சியும் ஊழ் வழி நிகழ்வதே. ‘ தெய்வப் புணர்ச்சி ‘ என்றும் இது அழைக்கப்படுகிறது.
குறிஞ்சிப்பாட்டு ‘ அறத்தொடு நிற்றல்’ என்கிற துறையில் வருவது. அதாவது தலைவியின் களவொழுக்கத்தை செவிலிக்கு எடுத்துக்கூறி அவளது களவு மணத்தை கற்பு மணமாக ஆக்கும் பொருட்டு தோழி அறத்தொடு நிற்பது. அடிவரையறையால் அல்ல, இப்படி அறத்தொடு நிற்பதால்தான் இது ‘பெருஞ்குறிஞ்சி’ என்று சிறப்பிக்கப்படுபதாகச் சொல்கிறார் ம.ரா.பொ. “ களவு என்னும் காதல் வாழ்க்கையை கற்பு என்னும் இல்வாழ்கையாக மாற்றும் தமிழ்ப்பண்பாட்டு மரபுக்கவிதையே குறிஞ்சிப்பாட்டாகும்” என்கிறது தமிழ் வளர்ச்சித் துறை பதிப்பு.
செவிலி தலைவியின் உடல் மெலிவு அறிந்து வருந்தி, குறி சொல்லிகளை அழைத்துக் காரணம் கேட்டு வேண்டியும் அவள் நோய் சரியாகவில்லை. அப்போது தோழி, தலைவிக்கு வந்திருப்பது காதல் நோய் என்பதையும், அந்தக் காதல் எப்படி வந்தது என்பதையும் செவிலிக்கு விளக்குவது போல் இந்த நூல் அமைந்துள்ளது.
தாங்கள் தினைப்புனம் காக்க சென்றவிடத்தில் கிளிகளை விரட்டியதை, அங்குள்ள அருவியில் நீராடி, மலர்களை பறித்துச் சூடி மகிழ்ந்ததை, அப்போது தலைவன் அங்கு வந்ததை, அவன் மதயானையிடமிருந்து தங்களைக் காப்பாற்றியதை, தலைவனுக்கும் தலைவிக்கும் காதல் மலர்ந்ததை, தலைவன் நாம் மணம் முடித்து விருந்தோம்பி வாழ்வோம் என்று உறுதி அளித்ததை , அவர்கள் இருவரும் பிரிவில் கலங்கி நின்றதை, தலைவன் தங்களை ஊர் வரை பத்திரமாக அழைத்து வந்து விட்டதை, இப்படி எல்லாவற்றையும் சொல்கிறாள் தோழி. மேலும் தலைவனும் தலைவியும் அச்சம் மிகு இரவு வேளைகளில் சந்தித்து காதல் கொள்கிறார்கள். தலைவன் வரும் வழியோ மிகவும் ஆபத்தானது. எனவே அவர்களுக்கு விரைவில் மணம் முடிக்க வேண்டும் என்பதை குறிப்புணர்த்துகிறாள்.
குறிஞ்சிப்பாட்டு இப்படித் துவங்குகிறது..
அன்னாய், வாழி ! வேண்டு அன்னை! ஒள் நுதல்
ஒலி மென் கூந்தல் , என் தோழி மேனி
விறல் இழை நெகிழ்த்த வீவு அருங் கடு நோய்
அகலுள் ஆங்கண் அறியுநர் வினாயும்
பரவியும், தொழுதும், விரவு மலர் தூயும்
வேறு பல் உருவின் கடவுட் பேணி
நறையும், விரையும் ஓச்சியும், அலவுற்று
எய்யா மையலை நீயும் வருந்துதி…
( வீவு அருங்கடு நோய் – குணப்படுத்தவியலாத கடு நோய், அறியுநர் – குறிசொல்பவர், அலவுறுதல்- மனம் தடுமாறுதல், வருந்துதல்)
அன்னையே! நீ வாழ்க! என் சொற்களை விரும்புவாயாக! ஒளிசுடரும் நெற்றியும், செழித்த கூந்தலையும் உடைய என் தோழியின் மேனியிலிருந்து அணிகலன்கள் கழன்று விழுவதைக் கண்டாய். அது குணப்படுத்தவியாத ஒரு நோய் என்று அச்சம் கொண்டாய். எனவே நமது ஊரில் குறி சொல்பவர்களை அழைத்துக் குறி கேட்டாய். மேலும் பலவிதமான மலர்களைத் தூவி வெவ்வெறு கடவுள்களை வாழ்த்தியும் வணங்கியும் தலைவியின் நோய் தீர வேண்டினாய். ஆனாலும் அவளின் நோயை அறிய முடியாது மயங்கி வருந்துகிறாய்.
காதலை ‘வீவு அரும் கடு நோய்’ என்பவர் ‘ உள்கரந்து உறையும் உய்யா அரும்படர்’ என்றும் விரிக்கிறார். அதாவது உள்ளத்தே ஒளிந்திருந்து வருத்தும் உய்யவே முடியாத அரிய துயர். காதல் நோயின் கடுமை அதைப் பிறரிடம் பகிர்ந்து கொள்ள முடியாது என்பது. ஆகவே அதற்கு மருந்தும் அரிது. அதற்கு அதுவே மருந்து என்கிறான் வள்ளுவன்.
தன் களவுமணம் குறித்து அச்சம் கொண்டு தலைவி வருந்துகிறாள்…
“ முத்தினும், மணியினும் பொன்னினும், அத்துணை
நேர்வரும் குரைய கலம் கெடின், புணரும்;
சால்பும், வியப்பும், இயல்பும் குன்றின்
மாசு அறக் கழீஇ வயங்கு புகழ் நிறுத்தல்
ஆசு அறு காட்சி ஐயர்க்கும் அந்நிலை
எளிய என்னார்…”
( சால்பு – சான்றாண்மை, வியப்பு- பெருமை, ஆசு- குற்றம், ஐயர்- பெரியோர்)
முத்தும், மணியும், பொன்னும் கோர்த்து அவ்வளவு நேர்த்தியாக செய்யப்பட்ட அணிகலன் அறுந்து போனால் அதை திரும்புவும் இணைக்க இயலும். ஆனால் ஒருவரது பெருமை ஒருமுறை குன்றிவிட்டால் , அதனைக் கழுவிச் சுத்தமாக்கி, திரும்பவும் அவரை புகழ்பட நிறுத்துதல் குற்றமற்ற பெரியோர்களால் கூட முடியாது. நம்மால் எப்படி இயலும்?
“ மாதரும், மடனும் ஓராங்கு தணப்ப”
( மாதர்- ஆசை , மடன்- மடமை)
தலைவிக்கு தலைவனின் மீது அவ்வளவு ஆசை. ஆனால் அவனை அடையும் வழியோ அவள் அறியாதாது.
” ஓராங்கு என்பது சங்ககால விளையாட்டு வகைகளில் ஒன்று. அது ஐந்துபேர் கலந்துகொண்டு ஆடும் ஆட்டம். ஒருவரை அலைக்கழித்து மற்றவர் போக்குக்காட்டி ஆடும் ஆட்டம். அது போன்று ஆசையும், அறியாமையும் தலைவிக்கு விளையாட்டுக் காட்ட அவள் வருந்துகிறாள் என்று உரைகாணும் நயம் படித்து இன்புறத்தக்கது” என்கிறது தமிழ் வளர்ச்சித் துறை பதிப்பு.
தலைவி, செவிலி இருவருக்கும் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டிய இக்கட்டில் இருப்பவள் தோழி. அவள் தலைவியின் காதலுக்கும் , செவிலியின் சினத்திற்குமிடையே சிக்கித் தவிப்பவள். அவள் தனது பரிதவிப்பைப் சொல்கிறாள்…
“ இகல் மீக்கடவும் இருபெரு வேந்தர்
வினை இடை நின்ற சான்றோர் போல
இருபேர் அச்சமொடு யானும் ஆற்றலேன்”
( இகல்- பகை- மீ- மிகுதி)
பகைமுற்றிய பெருவேந்தர் இருவருக்குமிடையே அவர்களை அமைதியாக்கும் படி இடை நின்று வினைசெய்யும் சான்றோர் போல உங்கள் இருவருக்குமிடையே நான் ஆற்றமாட்டாது தவிக்கிறேன்.

தினைப்புனம் காக்கச் சென்ற இடத்தில் நடந்தவை என்ன என்று செவிலியிடம் சொல்கிறாள் தோழி. அது வெறுமனே ஒரு வேலையாக மட்டும் இல்லாமல், இனிய பொழுது போக்காகவும் இருந்துள்ளது. அவர்கள் அருவியில் குளித்து மகிழ்கிறார்கள். பூக்கள் பறித்துச் சூடி இன்புறுகிறர்கள். இளமையில் யாவும் இன்பமன்றோ?
சிப்பியில் முத்து தோன்றும் என்பது எனக்குத் தெரியும். ஆனால் யானைத் தந்தத்திலும் முத்துக்கள் தோன்றும் என்கிறது இந்நூல். தினைக்கதிர்கள் முதிர்ந்து வளைந்து நிற்பது. யானையின் வளைந்த தும்பிக்கைக்கு உவமை சொல்லப்பட்டுள்ளது. உயரத்தில் வளர்ந்து நிற்கிற மூங்கில் நெல்லை பறிப்பதற்காக நெடுநேரம் அண்ணாந்திருந்த யானை சோர்வுற்று தன் துதிக்கையை முத்துக்கள் நிறைந்த தந்தத்தில் இறக்கி வைக்கிறது. அப்போது அதன் துதிக்கை தினைக்கதிர்கள் போல மடிந்து வளைந்து விடுகிறது.
“நெல் கொள் நெடு வெதிர்க்கு அணந்த யானை
முத்து ஆர் மருப்பின் இறங்கு கை கடுப்ப”
( வெதிர்- மூங்கில், மருப்பு- தந்தம்)
தலைவியும் தோழியும் கிளி ஓட்டுகிறார்கள்…
“ கலி கெழு மரமிசைச் சேணோன் இழைத்த
புலி அஞ்சு இதணம் ஏறி, அவண்
சாரல் சூரல் தகைபெற வலந்த
தழலும் தட்டையும் குளிரும் பிறவும்
(கலி கெழு- ஆரவாரம் மிக்க, சேணோன்- குறவன், இதணம்- பரண், சாரல்- மலைச்சாரல், சூரல்- பிரம்பு, தழலும் தட்டையும் குளிரும்- கிளிகடி கருவிகள்)
ஆரவாரம் மிக்க மரத்தின் மீது குறவன் செய்து வைத்த , புலியும் ஏற அஞ்சும் பரண் ஒன்று உள்ளது. நாங்கள் அதன் மீது ஏறி அமர்ந்து கொண்டு வழக்கமாக கிளி ஓட்டும் மரபுப்படி தழல், தட்டை , குளிர் போன்றவற்றை பயன்படுத்தி கிளிகளை ஓட்டினோம்.
“ தழலாவது கையாள் சுற்றின காலத்துத் தன்னிடத்துப் பிறக்கும் ஓசையாற் கிளி முதலியவற்றை ஓட்டுங் கருவி. தட்டையாவது மூங்கிலைக் கண்ணுக்குக் கண் உள்ளாக நறுக்கிப் பலவாகப் பிளந்து ஓசை உண்டாக ஒன்றிலே தட்டுவதோர் கருவி. குளிராவது இவை போல்வதோர் கிளிகடி கருவி” என்கிறார் நச்சினார்க்கினியர்.
அப்போது அங்கு மழை பொழிகிறது. மழைப்பெருக்கின் காரணமாக அருவிகளில் நீர் நிறைந்து கொட்டுகிறது. அவர்கள் அதில் நீராடுகிறார்கள்.
“அண்ணல் நெடுங்கோட்டு இழிதரும் தெள்நீர்
அவிர் துகில் புரையும், அவ் வெள் அருவி
தவிர்வு இல் வேட்கையேம் தண்டாது ஆடி
பளிங்கு செரிவு அன்ன பாய் சுனை குடைவுழி
நளி படு சிலம்பில், பாயம் பாடி
பொன் எறி மணியின் சிறுபுறம் தாழ்ந்த எம்
பின் இருங் கூந்தல் பிழிவனம் துவரி
உள்ளகம் சிவந்த கண்ணேம்”
( நெடுங்கோடு- நெடிய மலை, நளி- குளிர்ச்சி, இருங் கூந்தல்- கரிய கூந்தல்)
ஒளிரும் நெடிய மலையிலிருந்து விழுகிறது அந்தத் தெள்ளிய அருவி. தூய வெண்துகில் ஒளிர்வது போல் ஒளிரும் வெள்ளருவி அது. அதில் தணியாத வேட்கையுடன் நீராடப் புகுந்தோம். அந்த அருவி நீர் சுனையில் நிறைந்தது. பளிங்கை கரைத்து ஊற்றியது போன்ற சுனையிலும் நீராடினோம். பிறகு அந்த குளிர்ந்த மலையில் உவகை கொண்டு பாடி மகிழ்ந்தோம். முதுகில் தொங்கும் ஈரக் கூந்தலை பிழிந்து உலர்த்தினோம். நெடுநேரம் நீராடியதால் எம் கண்கள் சிவந்து போயின.
‘You tube’ நேயர்களுக்கு ’குறிஞ்சிப்பாட்டு’ நடிகர் சிவக்குமார் வழியேதான் அறிமுகம் ஆகியுள்ளது. குறிஞ்சிப்பாட்டு பட்டியலிடும் 99 வகையான பூக்களையும் அவர் மூச்சுவிடாமல், மனப்பாடமாக ஒப்பிக்கும் மேடை உரைகள் பிரபலமானவை. சூர்யாவும் ஏதோ ஒரு மேடையில் பூக்களின் பட்டியலை ஒப்பித்ததாக நினைவு. ஏதோ ஒரு வழியில் குறிஞ்சிப்பாட்டும், அவ்வளவு வகைவகையான பூக்களின் பட்டியலும் தமிழர்களின் காதில் விழுந்தது எனக்கு மகிழ்ச்சிதான்.
கபிலர் 99 வகையான பூக்களோடு நிறுத்தவில்லை. இறுதியில் ” பிறவும்’ என்று சொல்லி பட்டியலை நீட்டிக்கவே செய்கிறார். கவிஞர்கள், தாவரவியல் வல்லுநர்கள் . கானவர்கள் என பலருக்கும் தப்பி இன்னும் பெயரிடப்படாத ஒரு பூ எங்கோ ரகசியமாக பூத்திடுக்கக் கூடும்தானே?
நாங்கள் நீராடி முடித்த பின்பு, பலவகையான பூக்களைப் பறித்து சூடிக்கொண்டும், பாறைமீது பரப்பி வைத்தும் மகிழ்ந்திருந்தோம்
…………………………. வள் இதழ்
ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம்
தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,
செங்கொடு வேரி, தேமா, மணிச்சிகை,
உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்,
எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்
வடவனம், வாகை, வான் பூங் குடசம்,
எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை,
பயினி, வானி, பல்லிணர்க் குரவம்,
பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா,
விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,
குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி,
குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம்,
போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி,
செருந்தி, அதிரல், பெருந்தண் சண்பகம்,
கரந்தை, குளவி, கடிகமழ் கலிமா,
தில்லை, பாலை, கல்இவர் முல்லை,
குல்லை, பிடவம், சிறுமாரோடம்,
வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல்
தாழை, தளவம், முள் தாள் தாமரை,
ஞாழல், மௌவல், நறுந்தண் கொகுடி,
சேடல், செம்மல், சிறுசெங்குரலி
கோடல், கைதை, கொங்கு முதிர் நறுவழை,
காஞ்சி, மணிக்குலைக் கள் கமழ் நெய்தல்,
பாங்கர், மராஅம், பல்பூந் தணக்கம்,
ஈங்கை, இலவம், தூங்கு இணர்க் கொன்றை,
அடும்பு, அமர் ஆத்தி, நெடுங்கொடி அவரை,
பகன்றை, பலாசம், பல்பூம் பிண்டி,
வஞ்சி, பித்திகம், சிந்துவாரம்,
தும்பை, துழாஅய் , சுடர்ப்பூந் தோன்றி,
நந்தி, நறவம், நறும் புன்னாகம்,
பாரம், பீரம், பைங்குருக்கத்தி,
ஆரம், காழ்வை, கடிஇரும் புன்னை,
நரந்தம், நாகம், நள்ளிருள்நாறி,
மாஇருங் குருந்தும், வேங்கையும் பிறவும் . . .
தமிழ் வளர்ச்சித்துறை பதிப்பில் கபிலர் குறிப்பிடும் 99 வகையான மலர்களின் வண்ணப்படங்களையும், அதன் தாவரவியல் பெயர்களுடன் பின் இணைப்பாக அளித்துளார்கள். மெச்சத்தக்க பணி இது.
நாங்கள் அசோக மரத்தின் கீழ் ஓய்வு கொள்ளும் வேளையில், வேட்டையாடி வந்த தலைவன் அங்கு வந்தான்.. வேட்டையில் அவனுக்குத் துணையாக வந்த சினம் மிக்க நாய்கள் எங்களைச் சுற்றி வளைத்துக் கொண்டன.
முளை வாள் எயிற்ற, வள் உகிர், ஞமலி
திளையாக் கண்ண வளைகுபு நெரிதர
( உகிர்- நகம், ஞமலி- நாய்,
திளையா- இமைக்கா)
மூங்கில் முளைளைப் போன்ற ஒளிவீசும் பற்களும், கூரிய நகங்களும், இமைக்காத கொடுங்கண்களையும் உடைய நாய்கள் எங்களை நெருங்கி வந்து சுற்றிக் கொண்டன. தலைவன் அந்த நாய்க் கூட்டத்திடமிருந்து எங்களைக் காத்தான். மேலும், தான் வேட்டையில் தப்ப விட்ட விலங்கு இவ்வழியாக வந்ததா? என்றும் எங்களிடம் வினவினான்.
காதல் மெல்ல அணுக வேண்டிய ஒன்றல்லவா? பஸ் போய் விட்டதா? மணி என்ன? மழை வருமா? வெய்யில் அதிகம்? விஜய் அட்டகாசம்? டொனால்ட் டிரம்ப் படு மோசம்? இன்னும் இப்படி சம்பந்தமில்லாமல் பேசிப் பேசிப் கடைசியில் உங்க பேர் என்ன? என்கிற கேள்விக்கு வருவதுதானே காதல் ?
இன்றைய இளைஞர் கூட்டம் இதற்கு ’ நூல் விடுதல்’ என்று நாமகரணம் சூட்டி உள்ளது. நூல் அறுந்து விட்டதென்றால் அவன் பாச்சா பலிக்கவில்லை என்று பொருள். இந்த ’நூல்விடுதல்’ தொல்காப்பியத்திலும் உண்டு.
“ ஊரும் பேரும் கெடுதியும் பிறவும்
நீரிற் குறிப்பின் நிரம்பக் கூறித்
தோழியை குரையுறும் பகுதியும்…
உங்கள் ஊர் என்ன? பேர் என்ன? என்று மெல்லிய குளிர்ந்த சொற்களால் வினவுகிறான் தலைவன். ‘ கெடுதி வினாவுதல்’ என்பது தன்னிடமிருந்த தப்பிய வேட்டை விலங்கு இவ்வழியாக வந்ததா? என்று வினாவுதல். இவை எல்லாமே தலைவியை அணுகுவதற்காக வழிகள் மாத்திரமே. குறிஞ்சிப்பாட்டின் தலைவனும் கெடுதி வினாவுகிறான்.
……………………… ஒண் தொடி
அசையா மென் சாயல், அவ்வாங்கு உந்தி
மட மதர் மழைக்கண், இளையீர்! இறந்த
கெடுதியும் உடையேன்” என்றனன்
அவன் கேள்விக்கு நாங்கள் பதில் ஏதும் சொல்லவில்லை. தப்பிய விலங்கு குறித்து நீங்கள் பதில் சொல்லாத போதும். என்னிடம் ஓரிரு வார்த்தை பேசினால் அதனால் ஏதும் பழி வருமோ? என்று வினவினான்.
…………………………………கலங்கிக்
கெடுதியும் விடீஇர் ஆயின், எம்மொடு
சொல்லலும் பழியொ, மெல் இயலீர்?..
அப்போது வேறொரு தினைப்புனத்தில் புகுந்து நாசம் செய்த யானையை சினம் முற்றிய காவலன் அம்பெய்தி ஓட்டினான். காயத்தால் துடித்த அம்மதயானை வழியெங்கும் சேதப்படுத்தியபடியே எங்களை நோக்கி வந்தது. நாங்கள் மயில்களைப் போல் நடுநடுங்கி தலைவனின் பின்னால் ஒளிந்து கொண்டோம்
கார்பெயல் உருமின் பிளிறி, சீர்த்தக
இரும் பிணர்த் தடக்கை இரு நிலம் சேர்த்திச்
சினம் திகழ் கடாஅம் செருக்கி, மரம் கொல்பு
மையல் வேழம் , மடங்கலின் , எதிர்தர
உய்வு இடம் அறியேம் ஆகி, ஒய்யென
திருந்து கோல் எல் வளை தெழிப்ப, நாணு மறந்து
விதுப்புறு மனத்தேம், விரைந்து அவற் பொருந்தி
சூர் உறு மஞ்சையின் நடுங்க
( உரும்- இடி, கடாஅம்- மதநீர், மடங்கல் – எமன், மஞ்சை- மயில் )
கார்கால இடியென உருமிக் கொண்டு, தன் கரிய பெரிய தும்பிக்கையை நிலத்தில் அறைந்து கொண்டும், மத நீர் பெருக மரங்களை முறித்துப் போட்டப்படி ஒரு எமனைப் போல் எங்கள் எதிரில் வந்து நின்றது அந்த யானை. நாங்கள் அஞ்சி எங்கு ஒளிவதென அறியாமல். நாணத்தையெல்லாம் மறந்து விட்டு ஓடிப் போய் , நடுநடுங்கிய மயில்களென தலைவனின் பின்னே ஒளிந்தோம்
தலைவன் எங்களைக் காத்து அந்த மதயானையை அம்பெய்து ஓட்டினான்.
புண் உமிழ் குருதி முகம் பாய்ந்து இழி தர
புள்ளி வரி நுதல் சிதைய நில்லாது
அயர்ந்து புறம் கொடுத்த பின்னர்
அம்பால் துளையிட்ட புண்ணிலிருந்து பெருகிய குருதி அதன் முகமெங்கும் வழிய , நெற்றி முழுக்கச் சிதைந்து அது புறமுதுகிட்டது.
’புண் உமிழ் குருதி’ என்கிற தலைப்பில் அசோகமித்திரனின் சிறுகதைத் தொகுப்பு ஒன்று உண்டு. சுகுமாரனிடம் ஒரு கட்டுரையும் உண்டு.
தலைவன் யானை ஓட்டிய அந்தக் களம் வேவன் வெறியாட்டு நிகழ்ந்த களம் போல் உள்ளதாம்.
…………………. நெடுவேள்
அணங்கு உறு மகளிர் ஆடுகளம் கடுப்ப
தலைவனை அணைத்து நின்ற தலைவியை இப்போது நாணம் வந்தடைகிறது அவள் தலைவனை விட்டு நீங்க முயல்கிறாள். ஆனால் தலைவன் அவளை மேலும் இறுக அணைக்கிறான்.
…………………………… அந்நிலை
நாணும் உட்கும் நண்ணுவழி அடைதர
ஒய்யெனப் பிரியவும் விடாஅன், கவைஇ
ஆகம் அடைய முயங்கலின்
தழுவிய நிலையில் இருக்கும் தலைவன் தாங்கள் நடத்தப்போகும் இல்லறம் குறித்தே முதலில் பேசுகிறான். ‘விருந்தோம்பல்’ என்பதே இல்லறத்தின் அழகு என்கிறான.
’சாறு அயர்ந்தன்ன, மிடாஅச் சொன்றி
வருநர்க்கு வரையா , வளநகர் பொற்ப
மலரத் திறந்த வாயில் பலர் உண
பைந்நிணம் ஒழுகிய நெய்ம்மலி அடிசில்
வசையில் வான் திணைப் புரையோர் கடும்பொடு
விருந்து உண்டு எஞ்சிய மிச்சில் , பெருந்தகை
நின்னோடு உண்டலும் புரைவது”
( சாறு- விழா, மிடாஅ- பெரிய பானை, வளநகர்- செல்வம் மிக்க இல்லம். பைந்நிணம்- பசுங்கொழுப்பு,கடும்பு- சுற்றம்)
விழாக் காலத்தைப் போன்று , பெரிய பானையில் சோறு வடித்து வருபவர்க்கெல்லாம் அளவின்றி அளிக்கும் செல்வ வளம் மிக்க என் இல்லம் பொலியுமாறு, பசுங்கொழுப்பை நெம்மலிச் சோற்றோடு உயர்குடிச் சான்றோர்க்கும் அவர் சுற்றத்திற்கும் கொடுத்து எஞ்சிய மிச்சத்தை பெருந்தகைப் பெண்ணே! உன்னோடு சேர்ந்து உண்ணும் இன்பமே உயர்வானது. விருந்தோம்ப எப்போதும் திறந்திறக்கும் வாயிலை “ மலரத் திறந்த வாயில்” என்கிறார். கவிதை ’பறப்பன’ வகையில் வருவது என்பதற்கு நல்லதொரு உதாரணம் அய்யனின் “விருந்தோமல்’ அதிகாரம்.
“ வித்தும் இடல் வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்”
என்கிற குறளை நான் எண்ணியெண்ணி வியப்பதுண்டு. கபிலரும் மிச்சில் உண்ணும் இன்பத்தை இங்கு வலியுறுத்துகிறார்.
இருவருக்குமிடையே காதல் முகிழ்க்கிறது. தலைவன் தலைவிக்கு சில உறுதி மொழிகளைச் சொல்கிறான். இருவரும் பகல் முழுக்க ஒன்றாக கழிக்கின்றனர்.
…………………. பிறங்குமலை
மீமிசைக் கடவுள் வாழ்த்தி, கைதொழுது
ஏமுறு வஞ்சினம் வாய்மையின் தேற்றி
அம் தீம் தெள் நீர் குடித்தலின். நெஞ்சு அமர்ந்து
அருவிடர் அமைந்த களிறு தரு புணர்ச்சி
வான் உரி உறையுள் வயங்கியோர் அவாவும்
பூமலி சோலை, அப்பகல் கழிப்பி
( மீமிசை- மிக உயர்ந்த, ஏமுறுதல்- இன்புறுதல், களிறுதரு புணர்ச்சி- யானையால் உண்டான காதல், அருவிடர்- அரிய காடு)
பெரிய மலையின் உச்சியில் இருக்கும் முருகப் பெருமானை நோக்கி வணங்கி
தலைவி இன்புறும்படி” உனை என்றும் பிரியேன்” என உறுதி மொழிகளைக் கூறினான். பின்பு அங்குள்ள தெளிந்த நீரைப் பருகி தன் வார்த்தைகள் அனைத்தும் சத்தியம் என்பது போல் மேலும் உறுதி தந்தான். அதனால் தலைவியின் மனம் அமைதி அடைந்தது. அவர்கள் பகல் முழுக்க சோலையில் காதல் இன்பம் கூட்டினார். ’அப்பகல் கழிப்பி’ எனும் சொற்றொடருக்கு தமிழ் வளர்ச்சித்துறை சொல்லும் விளக்கம் “ அன்று எஞ்சிய பகல் மொழுதை அச்சோலையில் கழித்தனர். இச்சொல்லாடலானது தலைவன், தலைவியின் மெய்யுறு புணர்ச்சியைத் தோழி செவிலிக்குக் குறிப்பால் உணர்த்தியதைக் குறித்தது.”
பகல் கழிந்து மாலை வருகிறது. இப்போது காதலர் பிரிந்தாக வேண்டும். தலைவி அவள் இல்லம் திரும்ப வேண்டும். நமது அகப்பாடல்களில் மாலை ஒரு கொடுங்கோலனைப் போல் புனையப்பட்டுள்ளது.’ நார் இல் மாலை’ அதாவது அன்பற்ற மாலை என்று அது தூற்றப்பட்டுள்ளது. மாலையை ’காலன்’ என்கிறது ஐங்குறுநூறு. “ கூற்று நக்கது போலும் உட்குவரு கடுமாலை”, ”கொலை குறித்தன்ன மாலை”, “ கையறு மாலை”, “ படர் சுமந்து எழுதரு பையுள் மாலை” என்றெல்லாம் மாலைப் பொழுது காதலர்களால் அஞ்சப்பட்டுள்ளது.
இங்கும் சினம் முற்றிய அரசன் போருக்குச் செல்லும் உக்கிரத்துடன் அந்தி கவிழ்ந்ததாக சொல்கிறார் கபிலர்.
எல்லை செல்ல , ஏழ் ஊர்பு , இறைஞ்சி.
பல் கதிர் மண்டிலம், கல் சேர்பு மறைய,
மான் கணம் மர முதல் தெவிட்ட, ஆன் கணம்
கன்று பயிர் குரல மன்று நிறை புகுதர,
ஏங்கு வயிர் இசைய கொடு வாய் அன்றில்
ஓங்கு இரும் பெண்ணை அக மடல் அகவ
பாம்பு மணி உமிழப் பல் வயின் கோவலர்
ஆம்பல் அம் தீம் குழல் தெள் விளி பயிற்ற,
ஆம்பல் ஆய் இதழ் கூம்புவிட, வள மனைப்
பூந்தொடி மகளிர் சுடர் தலைக் கொளுவி,
அந்தி அந்தணர் அயர, கானவர்
விண் தோய் பணவை மிசை ஞெகிழி பொத்த,
வானம் மாமலை வாய் சூழ்பு கறுப்ப, கானம்
கல்லென்று இரட்ட, புள்ளினம் ஒலிப்ப,
சினைஇய வேந்தன் செல் சமம் கடுப்பத்
துனைஇய மாலை துன்னுதல் காணூஉ
பகல் பொழுது சென்று மறைய, பல் கதிர் கதிரவன் தன் ஏழு குதிரைகளை ஓட்டிக் கொண்டு மலைக்குப் பின் சென்று மறைகிறான். மான் கூட்டம் மரத்தடியில் கூடி நிற்கின்றன. பசுக்கள் தம்முடைய கன்றுகளை அழைத்தபடி தொழுவங்களில் அடைகின்றன. அன்றில் பறவைகள் பனை மடல்களில் அமர்ந்து கொண்டு தன் இணையை அழைக்கின்றன. பாம்புகள் தன் மாணிக்கத்தை உமிழ்ந்து இரை தேடத் துவங்குகின்றன. இடையர்கள் ஆம்பல் பண்ணை இசைக்கத் துவங்குகின்றனர். ஆம்பல் மலர்களின் அழகிய இதழ்கள் விரிகின்றன. மகளிர் வீடுகளில் சுடர் ஏற்றுகின்றனர். அந்தணர் தங்களது அந்தி நேரத்து கடமைகளை ஆற்றுகின்றனர். கானவர் தீப்பந்தங்களை கொளுத்துகின்றனர். மேகம் மலைகளைச் சூழ்ந்து கொண்டு கறுக்கின்றன. காட்டில் ‘கல்’ என்ற ஓசை எழுகிறது. பறவைகள் ஒலியெழுப்புகின்றன. சினம் முற்றிய அரசன் போருக்குச் செல்வதைப் போல மாலை வருகிறது.
தலைவன் தலைவியின் ஊரின் வாயில் வரை வந்து பத்திரமாக அவளை விட்டுச் செல்கிறான். இருவரும் இரவில் சந்திக்க முயல்கிறார்கள். ஆனால் இரவுக்குறியில் உள்ள இடர்களை செவிலிக்கு உணர்ந்த்துகிராள் தோழி. ஊர் காவல் மிக்கதாய் இருக்கும். கொடிய நாய்களின் தொல்லைகள் உண்டு. நிலவு வேறு அடிக்கடி வெளிப்பட்டு அவனை காட்டிக் கொடுத்து விடக்கூடும். நீயும் துயில் விழித்து காதலரை கையும் களவுமாகப் பிடித்துவிடலாம். இரவில் தலைவன் வரும் வழியோ கொடிய விலங்குகள் உலவும் வழி. வானத்து இடியும். வருத்தும் தெய்வங்களும் , பேய்களும் அவ்விரவில் உண்டு. மேலும் வழிப்பறி கொள்ளையர்களால் அவன் உயிருக்கும் ஆபத்து. இதையெல்லாம் எண்ணி எண்ணி தலைவி தன் மார்பு நனைய அழுகிறாள்.
……………… வருதொறும்
காவலர் கடுகினும், கத நாய் குரைப்பினும்
நீ துயில் எழினும், நிலவு வெளிப்படினும்……
இரவுக்குறியின் ஆபத்துகளை எண்ணி தலைவி விடாது அழுது கொண்டிருக்கிறாள் என்பதோடு நூல் நிறைகிறது. இதன் மூலம் உடனே தலைவிக்கும் தலைவனுக்கும் மணம் முடிக்க வேண்டும் என்பதை குறிப்பால் உணர்த்துகிறாள் தோழி.
நூலின் இறுதியில் இரண்டு வெண்பாக்களும் உள்ளன. அவற்றில் முதலாவது…
நின் குற்றம் இல்லை; நிரை தொடியும் பண்புடையள்:
என் குற்றம் யானும் உணர்கலேன்: பொன் குற்று
அருவி கொழிக்கும் அணி மலை நாடன்
தெரியுங்கால், தீயது இலன்.
எங்களை தினைப்புனக்காவலுக்கு அனுப்பியதில் உன் குற்றம் ஒன்றுமில்லை. தலைவியோ பண்புடையோள், ஆக இதில் அவள் குற்றமுமில்லை. யோசித்தால் இதில் என் குற்றமும் ஒன்றுமில்லை. பொன்னை உருக்கி வார்த்தால் போல் பொழியும் அருவிகளை உடைய தலைவனோ தீயவன் அல்லன். இந்தக் காதலில் யார் மீதும் குற்றம்? நடக்க வேண்டியது நடந்துவிட்டது என்பது போல் உரைக்கிறாள் தோழி. இரண்டாவது வெண்பா களவு மணம் குற்றமுடையதன்று என்பதைப் பேசுகிறது.
இந்தக் கதையில் யானை வரும் போது அது’ மையல் வேழம்’ என்று விளிக்கப்படுகிறது. அதாவது மதம் முற்றிய யானை. பொதுவாக ’மையல்’ எனும் சொல்லை காதல் என்கிற அர்த்தத்திலேயே நாம் பயன்படுத்துகிறோம். காதலரும் மதம் முற்றிய யானைகளாகத் திமிறிக் கொண்டிருக்கும் பருவம் ஒன்று உண்டு. அப்போது அவர்களுக்கு கண்ணிலும் கருத்திலும் காதல் தவிர இன்னொன்று தெரியாது. அப்போது அவர்கள் ”மையல் வேழங்கள்’ தான்.
தொல்காப்பியம் வெறுமனே வறண்ட ஒரு இலக்கண நூல் இல்லை. அது இலக்கிய வளமுடையது . களவு காலத்துப் பிரிவேக்கத்தை அது ’ நீடு நினைந்திரங்கல் ‘ என்கிறது. ஒரு கவி, தன் கவிதைக்கு அகம் மகிழ்ந்து சூட்டத்தக்க தலைப்பன்றோ இது!

இசை
கவிஞர் இசை தமிழில் நவீனக்கவிதைகளை எழுதி வரும் கவிஞர். மென்மையான நகையுணர்வு கொண்டவை இவருடைய கவிதைகள். உறவுகளின் சிக்கல்களையும் சமகாலத்தின் அரசியலையும் கேலி இல்லாமல் புன்னகையுடன் கூறுபவை.
நன்றி : தமிழ் விக்கி
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
