மம்மர் அறுக்கும் மருந்து (18) : எழுத்தாளர்கள் பொதுவெளியில் பேச வேண்டும் : பெருமாள்முருகன்

முந்தைய பகுதிகள்1 முதல் 17 வரை

விஜயகுமார்: இருபதாண்டுகளுக்குப் பிறகு ஆசிரியர் தேர்வு வாரியம் போட்டித்தேர்வை நடத்தி, மதிப்பெண்களை வெளியிட்ட பிறகு, குளறுபடிகள் நடந்துள்ளன என்கிற குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள செய்தி அறிந்திருப்பீர்கள். அரசு கலைக்கல்லூரி ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் நடைமுறை பற்றி உங்கள் கருத்தென்ன?

பெருமாள்முருகன்: இன்றைய தலைமுறையினருக்கு வரலாற்றில் அத்தனை விருப்பமில்லை. ’இப்போது என்ன?’ என்றுதான் கேட்கிறார்கள். எனினும் வரலாற்றை நினைவுபடுத்துவதும் தொடர்ந்து பேசுவதும் அவசியம் என்று நினைக்கிறேன். அரசு கல்லூரி ஆசிரியர் பணி நியமனத்திற்கு நீண்ட வரலாறு உண்டு. கொஞ்சம் தெரிந்து கொள்வது நல்லது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இருந்த நியமன நடைமுறைகளில் இருந்து தொடங்கினால் பெருவரலாறாக விரியும். உ.வே.சாமிநாதையர் எல்லாம் எந்தப் பள்ளியிலோ கல்லூரியிலோ சென்று படித்தவர் அல்ல. ஆனால் அரசு கல்லூரி ஆசிரியராக நியமனம் பெற்றார். விடுதலைக்குப் பின் எத்தனையோ மாற்றங்கள். எனக்குத் தெரிந்த அளவில் சுருக்கமாகச் சொல்ல முயல்கிறேன்.

வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூலம் சீனியாரிட்டையை அளவுகோலாக வைத்து அரசுப்பணி கொடுப்பது ஒருகாலத்து நடைமுறை. அதில் குளறுபடிகள் நடக்கின்றன என்பதாலும் படித்தோர் எண்ணிக்கை மிகுந்ததாலும் தேர்வு வாரியங்கள் வந்தன. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமே எல்லாப் பணிகளுக்கும் நியமனம் நடந்த முறை 1990களில் மாறியது. ஆசிரியப் பணி எண்ணிக்கை மிகுந்த காரணத்தால் தனியாகத் தேர்வு வாரியம் தொடங்கும் நிலை உருவாயிற்று. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் முதன்மைப் பணியாக எல்லா நிலைப் பள்ளி ஆசிரியர்களையும் தேர்வு செய்தல் அமைந்தது. இன்று வரைக்கும் அது தொடர்கிறது. தொடக்கப்பள்ளி ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், முதுநிலை ஆசிரியர், கலை ஆசிரியர் என அனைத்துப் பணியிடங்களும் தேர்வு எழுதித் தேர்ந்தெடுக்கும் முறைக்கு மாறியது. இன்று வரைக்கும் பெரிய குழப்பம் எதுவும் இல்லாமல் பள்ளி ஆசிரியர் பணி நியமனம் நடைபெற்று வருகிறது.

வினாத்தாள், தேர்வு நடைமுறை ஆகியவற்றை ஆசிரியப் பணியின் தன்மைக்கேற்ப இன்னும் மேம்படுத்தலாம் என்று என்னைப் போன்றோர் கருதுகின்றோம். காலிப் பணியிடத்தைக் கணக்கிட்டு ஆண்டுதோறும் நியமனம் நடைபெற வேண்டும். அரசு அதைச் செய்வதில்லை. இரண்டாண்டுக்கு ஒருமுறையோ மூன்றாண்டுக்கு ஒருமுறையோ அரசு விருப்பப்படும் போது தேர்வு நடத்துகிறது. அப்படியல்லாமல் ஆண்டுதோறும் தேர்வு வைத்துத் தேவைப்படும் பணியிடங்களை நிரப்பினால் நல்லது. தேர்வுக்குத் தயாரிப்பவர்களுக்கும் தெளிவு கிடைக்கும். அரசுக்கும் தற்காலிக ஆசிரியர் நியமனம் உள்ளிட்ட சிக்கல்கள் வராது. எனினும் பள்ளி ஆசிரியர் தேர்வு இயல்பாக நடந்து கொண்டிருக்கிறது. அதில் லஞ்சப் பிரச்சினையோ வினாத்தாள் கசிவோ விடைத்தாள் மதிப்பீட்டுப் பிரச்சினையோ இதுவரை வரவில்லை.

அரசு கலைக்கல்லூரிகளுக்கு ஆசிரியர்களைத் தேர்வு செய்தல் 1994 முதல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடைபெறுகிறது. அதற்கு முன் அரசுப் பணியாளர் தேர்வாணையம் வழியாக நடைபெற்று வந்தது. அதிலும் தற்காலிகமாக ஆசிரியர்களை நியமித்துப் பின் நிரந்தரமாக்கும் முறை இருந்தது. நிரந்தரப் பணியாளர்களை நியமிக்கும் வரை பணிச்சுணக்கம் நேரக் கூடாது என்பதற்காகத் தற்காலிகப் பணியாளர்களை நியமித்துக்கொள்ள அரசு விதி 10(a)(i) வழி செய்கிறது. அதன்படி 1980களில் கலைக்கல்லூரிகளுக்கு ஆசிரியர்களை நியமனம் செய்தனர். தற்காலிகமாக நியமனம் செய்யும் நடைமுறை அதில்தான் முதன் முதல் தொடங்கியது என்று நினைக்கிறேன். அப்படி நியமனம் பெற்ற ஆசிரியர்களை நிரந்தமாக்க ஆசிரியர் சங்கம் ஏதேதோ போராட்டம் நடத்தியது. நிரந்தரம் செய்தது அரசு. எனினும் அதிலும் பிரச்சினைகள் இருந்தன. அவர்கள் கோரிக்கை நெடுங்காலம் நீடித்து வந்தது.

பிறகு 1980களின் இறுதியில் ’ஒப்பந்த ஆசிரியர்’ என்னும் நடைமுறையை அரசு கொண்டு வந்தது. அதில் கணிசமானோர் நியமனம் செய்யப்பட்டனர். அவர்களை நிரந்தரமாக்கவும் பெரும்போராட்டம் நடந்தது. தேர்வு நடத்தி நிரந்தரம் செய்தார்கள். அதிலும் பல பிரச்சினைகள். அந்தத் தேர்வு நடந்த விதம் சுவையானது. ஆசிரியர்கள் தேர்வு நடத்துவார்கள். தேர்வுக்கான வினாத்தாள் தயாரிப்பார்கள். விடைத்தாள் மதிப்பீடு செய்வார்கள். எல்லாம் சரி. ஆனால் அவர்களால் ஒருதேர்வை எழுத முடியாது. எழுதினாலும் தேர்ச்சி பெற மாட்டார்கள். இதுதான் ஒப்பந்த ஆசிரியர் தேர்விலும் நடைபெற்றது. தேர்வு எழுதிய ஆசிரியர்களில் பலர் தேர்ச்சி பெறவில்லை. அவர்களைத் தேர்ச்சி பெற வைக்க அடுத்தடுத்துத் தேர்வுகள் நடைபெற்றன. அதாவது ஒருவர் தேர்ச்சி பெறும் வரைக்கும் தேர்வு நடத்தினர். இப்போது கேட்டால் சிரிப்பாகவும் இருக்கும்; அதிர்ச்சியாகவும் இருக்கும். ஆனால் அப்படித்தான் நடந்தது.

1991 முதல் 1996 வரை ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த அ.தி.மு.க. ஆட்சியில் அரசு கலைக்கல்லூரி ஆசிரியர் நியமனம் தொடர்பாக மூன்று முக்கிய மாற்றங்கள் நடந்தன. முதலாவது, ஒப்பந்த ஆசிரியர்களை நிரந்தமாக்கியது. அதன் மூலம் அரசு பெற்ற படிப்பினையைக் கருத்தில் கொண்டு நிரந்தரம் தொடர்பாக எந்த உறுதியும் தராத வகையில் கௌரவ விரிவுரையாளர் என்று புதிய நியமன நடைமுறையைக் கொண்டு வந்தது இரண்டாவது மாற்றம். ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் எழுத்துத் தேர்வு நடத்தி ஆசிரியர்களைத் தேர்வு செய்தல் மூன்றாம் மாற்றம். அப்போது கொண்டு வந்த கௌரவ விரிவுரையாளர் பிரச்சினை இன்று வரைக்கும் நீடித்து வருகிறது. எதிர்காலத்தில் என்ன மாதிரி பிரச்சினைகளை உருவாக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு தீர ஆராய்ந்துதான் ஒருமாற்றத்தை அரசு செய்ய வேண்டும். அப்படி இல்லை என்றால் எப்படிக் காலத்துக்கும் தீராத பிரச்சினையாக அது உருவெடுக்கும் என்பதற்குக் கௌரவ விரிவுரையாளர் நியமனமே சான்று.

இம்மூன்று மாற்றங்களில் சிறந்தது என்றால் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் எழுத்துத் தேர்வு நடத்தி நிரந்தமாக ஆசிரியர்களை நியமித்தல் என்பதுதான். போட்டியாளர்கள் அதிகரிக்கும் போது தேர்வு வைத்து எடுப்பது நல்ல முறை. மேலும் குறிப்பிட்ட பணிக்கு ஒருவர் தகுதியானவரா என்பதை எழுத்துத் தேர்வு, வாய்மொழித் தேர்வு ஆகியவற்றைக் கொண்டு பரிசோதித்தே நியமனம் செய்ய வேண்டும். ஆகவே கல்லூரி ஆசிரியர் நியமனத்திற்குத் தேர்வு நடைமுறையை ஆதரிக்கிறேன். முதன்முதலில் 1994இல் அறிவிப்பு வெளியிட்டு 1995இல் தேர்வு நடைமுறைகள் அனைத்தும் முடிந்தன. பணியிடம் ஒதுக்குதல் மட்டும் நடக்கவில்லை. அதற்குள் 1996இல் ஆட்சி மாற்றம் நடந்தது. தி.மு.க. அரசு பதவியேற்ற பிறகு பணியிடம் ஒதுக்கி நியமன ஆணை வழங்கினர். அதே தேர்வு முறையைப் பின்பற்றி 1998இல் ஒருமுறை தேர்வு நடந்தது. பின்னடைவுப் பணியிடங்களில் நியமனம் செய்வதற்காகப் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களுக்காக 2000இல் ஒருமுறை தேர்வு நடந்தது. இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு 2025இல் தான் மீண்டும் தேர்வு முறை வந்தது. இடையில் பல குளறுபடிகளுடன் 2007, 2008, 2009, 2011, 2015 ஆகிய ஆண்டுகளில் ஆசிரியர்களைத் தேர்வு செய்தது அரசு. 

1996, 1998, 2000 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்வு முறை வெகுசிறப்பானது. அதை மாற்றிய காரணத்தைப் பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். அதே தேர்வு நடைமுறையை இப்போதும் பின்பற்றியிருக்கலாம். யார் இதற்கெல்லாம் ஆலோசனை சொல்கிறார்கள் என்றே தெரியவில்லை. அரசு நிர்வாகப் பணிக்குத் தேர்வாகும் டிஎன்பிஎஸ்சி முதல் குரூப் பணியாளர்களுக்கு நிகரான, அதைவிடவும் கூடுதலான ஊதியம் பெறுவது கல்லூரி ஆசிரியர் பணி. அதற்கு ஏற்ற வகையில் தேர்வு நடைமுறைகள் இருக்க வேண்டும். மேலும் ஆசிரியர் பணிக்கெனத் தேவைப்படும் தனித்திறன்களைச் சோதிக்க வேண்டும். ’கற்றது உணர விரித்துரைக்கும்’ திறன் இல்லாத ஒருவரை அவரது அறிவு சார்ந்து மட்டும் தேர்வு செய்தால் பயனில்லை. தேர்வு வினாத்தாளும் நேர்முகத் தேர்வு முறைகளும் இந்தத் தனித்தன்மைகளைக் கருத்தில் கொண்டு அமைய வேண்டும்.

வி: 2017இல் நடந்த பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்விலும் மோசடி நடந்தது; சம்பத்தப்பட்டவர்களின் இடங்களில் சென்றவாரம் அமலாக்கத்துறை சோதனை நடத்தியிருக்கிறார்கள். இப்போது அரசு கலைக்கல்லூரி ஆசிரியர் நியமனத்தில் ஊழல் என்று குற்றச்சாட்டு வந்துள்ளது. உயர் கல்வித்துறை நியமனங்கள் மீதான சந்தேகங்கள் வலுக்கின்றனவே?

பெமு: இப்போது நடைபெற்ற தேர்வு முறை அடிப்படையிலேயே மகா மட்டமானது. வினாத்தாளும் மோசம்,  மதிப்பெண் பிரிப்பு முறையும் மிக மோசம். இப்போது வெளியிட்ட தரவரிசைப் பட்டியலும் முறைப்படியானதல்ல. நேர்முகத் தேர்வு எப்படி நடக்குமோ தெரியவில்லை.

தேர்வு முடிவுகளை எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் வெளியிட்டுள்ளனர். பணி அனுபவத்திற்குப் பதினைந்து மதிப்பெண் என்று அறிவிப்பில் இருக்கிறது. சிலர் முழுமையாகப் பதினைந்து மதிப்பெண் பெறும் வகையில் பணிஅனுபவம் உடையவர்கள். அதையும் சேர்த்திருந்தால் இந்தத் தரவரிசை முறை மாறியிருக்கும். பணி அனுபவத்திற்கான மதிப்பெண் உறுதியானது என்னும் போது அதையும் சேர்த்துத் தரவரிசைப் பட்டியல் வெளியிட்டு அதன்படி நேர்முகத் தேர்வுக்கு அழைப்பதுதான் சரியாக இருக்கும். ஒன்றிரண்டு மதிப்பெண் வித்தியாசத்திலேயே தரவரிசையும் பணிவாய்ப்பும் மாறும் போது பதினைந்து மதிப்பெண் என்பது பெரிது. ஆகவே இப்போது வெளியிட்ட தரவரிசைப் பட்டியலை நிறுத்தி வைத்து பணியனுபவ மதிப்பெண்ணையும் சேர்த்துப் புதுப்பட்டியல் வெளியிட வேண்டும் என்னும் கோரிக்கை நியாயமானது.

வினாத்தாளின் முதல்தாள் கொள்குறி வகையிலானது. அதற்கு 150 மதிப்பெண். இரண்டாவது எழுத்துத் தேர்வு. ஐந்து வினாக்கள் கொடுத்து ஒரே ஒரு வினாவுக்கு விடையளிக்க வேண்டும். அதற்கு ஐம்பது மதிப்பெண். முதல் நாளில் நூற்றுக்கும் மேல் மதிப்பெண் பெற்ற சிலருக்கு இரண்டாம் தாளில் சுழியம்தான் கிடைத்திருக்கிறது. முதல் தாளில் குறைவான மதிப்பெண் பெற்ற சிலருக்கு இரண்டாம் தாளில் நிறைந்த மதிப்பெண். ஐம்பதுக்கு நாற்பத்தொன்பது பெற்றிருக்கும் ஒருவரையும் காண முடிகிறது.  இந்த வித்தியாசமே இப்போது பேசுபொருளாகி இருக்கிறது. முதல்தாளில் அதிக மதிப்பெண் பெற்ற ஒருவர் இரண்டாம் தாளில் சுழியமும் ஒற்றை இலக்கத்திலும் மதிப்பெண் பெறுவரா என்னும் கேள்வி எழுப்பப்படுகிறது. இரண்டாம் தாளில்  ஐந்து கேள்விகள் கொடுத்து ஒரே ஒரு கேள்விக்கு விடை எழுதினால் போதும் என்றிருக்கிறது. அதுவும் எல்லாப் பாடத் தேர்வர்களுக்கும் பொதுவான கேள்விகள்.

லட்சத்தில் ஊதியம் பெறும் ஆசிரியர் பணிக்குத் தேர்வு செய்யும்போது அதற்கான வழிமுறைகள் செம்மையாக இருக்க வேண்டும். கொள்குறி வகை வினாத்தாள் எத்தனை குளறுபடியாக இருக்கிறது என்பதை தமிழ்ப் பாடத்தைச் சான்றாகச் சுட்டிப் பேராசிரியர் க.காசிமாரியப்பன் ’கலங்கடித்த கல்லூரி ஆசிரியர் தேர்வு’ என்னும் தலைப்பில் கட்டுரை எழுதிக் காலச்சுவடில் (பிப்ரவரி 2026) வந்திருக்கிறது. அதில் ’அடுத்த தலைமுறையை வளப்படுத்தும் கடப்பாடு உடையவர்களான பேராசிரியர்களைத் தேர்ந்தெடுக்கும் முறை கொண்ட வினாத்தாள் அல்ல இது’ என்று குறிப்பிடுகிறார். இரண்டாம் தாளும் அப்படித்தான். குறிப்பிட்ட துறைசார் புலமையையும் ஒருவரின் சுயசிந்தனையையும் பரிசோதிப்பது போல வினாத்தாள் அமைய வேண்டும். இது எல்லாக் குப்பையையும் ஒரே கூடைக்குள் போட்டுத் திணிப்பது போல அமைந்திருந்தது. இப்போது அதுவே பிரச்சினையாகி இருக்கிறது. அரசியலமைப்பு தொடர்பான ஒருகேள்வியையோ அரசுத் திட்டங்கள் தொடர்பான ஒருகேள்வியையோ எடுத்து விடை எழுதும் நிர்ப்பந்தம் ஆசிரியர் தேர்வில் தேவையா? அதுவும் ஒரே ஒரு கேள்விக்குப் பதில். அதற்கு ஐம்பது மதிப்பெண். வினாவைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் பதில் எழுதியவர்களுக்குச் சுழியம் அல்லது ஒற்றை இலக்க மதிப்பெண் கிடைத்திருக்கலாம் என்னும் வாதமும் இப்போது வைக்கப்படுகிறது. கொள்குறி வகை வினாக்களுக்கு மனப்பாடத் திறன் இருக்கும் ஒருவர் விடையளித்துவிடலாம், கட்டுரை எழுதுவது அப்படியல்ல என்றும் சொல்கிறார்கள்.

எப்படியோ தேர்வு நடைமுறையே தவறு. என்னைப் பொருத்தவரை இத்தேர்வை ரத்து செய்துவிட்டு ஆசிரியர் தேர்வுக்கெனத் தனித்தன்மை கொண்ட சிறந்த நடைமுறைகளை வகுத்துப் புதிய தேர்வு நடத்த வேண்டும் என்றுதான் நினைக்கிறேன். அது தாமதம் ஆகும் என்றால் இப்போதைய தேர்வு முடிவுகளில் இருக்கும் குழப்பங்களைத் தீர்க்கும் வகையில் முழுமையான விசாரணை நடைபெற வேண்டும். தேர்வர்கள் திருப்திப்படும் வகையில் தீர்வு வேண்டும். சிலர் வழக்குப் போட்டிருக்கிறார்கள் என அறிகிறேன். அதில் முடிவு வரும்வரை அரசு ஏதும் செய்ய இயலாது. முக்கியமான பணிக்கான தேர்வு ஒன்றை நடத்தும் அரசு அதில் எப்பிரச்சினையும் எழாதவாறு முன்கூட்டியே யோசித்து எல்லாவற்றையும் செய்ய முடியாதா?

கல்லூரி, பல்கலைக்கழக ஆசிரியர் பணிகள் பல லட்சம் லஞ்சம் பெறுவதற்கான ஒன்று என்னும் மனப்பான்மை கடந்த இருபது இருபத்தைந்து ஆண்டுகளாக உருவாகி நிலைபெற்று விட்டது. அதன் வெளிப்பாடுதான் இத்தகைய குளறுபடிகள் என்று நினைக்கிறேன். இன்றைய அரசு ஊழலுக்கு எதிரானது என்கிறார்கள். கல்லூரி ஆசிரியர் தேர்வை ஒழுங்குபடுத்தினால் நல்லது. தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் நடத்தும் முதல் குரூப் தேர்வுகளுக்கான நடைமுறைகளைப் பெருமளவு பின்பற்றி அவற்றோடு ஆசிரியர் பணிக்கான தனித்தன்மைகளையும் கருத்தில் கொண்டு தேர்வு நடத்த வேண்டும் என்பது என் எண்ணம்; கோரிக்கை.

வி: கடந்த வாரம் எழுத்தாளர் யூமா வாசுகியின் முகநூல் பதிவைப் பார்த்தேன். கல்வியாண்டின் இடையே பணிஓய்வு பெறுபவர்களுக்குப் பணி நீட்டிப்பு வழங்கவேண்டும் என்பது அரசு விதி; அதை மறுத்துள்ளார் திருவாரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர். கூடுதலாக அவர்மீது உண்மைக்குப் புறம்பான பழிச்சொல்லும் கூறியிருக்கிறார். அவருக்கு வழக்கு நடத்த வசதியில்லை. பிறகு இலக்கியச் சுற்றம் குரல் கொடுக்கப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆவன செய்திருக்கிறார். ஆனாலும் முதன்மைக் கல்வி அலுவலர் எல்லை மீறியது கண்டுகொள்ளப்படவில்லை என நினைக்கிறேன். இரு சாகித்ய அகாதமி விருது பெற்றவருக்கே இந்நிலை என்றால் கல்வித்துறையில் சாமானியர்களின் நிலை என்ன?

படம் : எழுத்தாளர் யூமா வாசுகியின் முகநூல் பக்கத்திலிருந்து

பெமு: பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் கல்வியாண்டில் இடையில் ஓய்வு பெற்றால் அக்கல்வியாண்டு முழுவதும் அவர்களுக்குப் பணி நீட்டிப்பு வழங்கலாம் என்பது அரசு விதி. ஒருபாடத்தைக் கற்பிக்கும் ஆசிரியர் இடையில் ஓய்வு பெற்றுவிட்டால் அதைத் தொடர ஆளில்லாமல் போகும். உடனடியாக இன்னொருவரை நியமிக்க இயலாது. அதற்குக் காலம் எடுக்கும். மாணவர்கள் பாதிப்படையக் கூடாது என்பதற்காக அவ்வாசிரியருக்குப் பணி நீட்டிப்புக் கொடுப்பது நல்ல சிந்தனை கொண்டு வகுக்கப்பட்ட விதி. இப்போது பணியிடங்கள் ஏராளமாகக் காலியாக இருக்கும் நிலையில் பணி நீட்டிப்பு வழங்குவது அவசியம். ஆனால் அவ்விதி ’வழங்கலாம்’ எனச் சொல்கிறதே தவிர ’வழங்க வேண்டும்’ என்று சொல்லவில்லை. அப்போதைய சூழலைக் கொண்டு முடிவெடுக்கலாம். அதாவது கூடுதலாக ஆசிரியர்கள் உள்ளனர் என்றால் அச்சமயத்தில் ஒருவருக்குப் பணி நீட்டிப்புக் கொடுத்தால் அது அரசுக்கு வீண் செலவாகும். சிலசமயம் அப்படிக் கூடுதல் ஆசிரியர்கள் இருப்பர். ஒருபள்ளியில் மாணவர் எண்ணிக்கை குறைந்துவிட்டால் பணியிடமும் குறையும் நிலை ஏற்படும். அப்போது கூடுதலாக ஆசிரியர்கள் இருக்கக் கூடும். ஆகவே பணி நீட்டிப்பு என்பதை உரிமை என்று சொல்ல முடியாது. சூழலைப் பொருத்து அரசு முடிவெடுத்துக் கொள்ளலாம்.

ஓர் ஆசிரியர் மீது பணம் கையாடல், பாலியல் குற்றச்சாட்டு என ஏதோ பிரச்சினை இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அவருக்குப் பணி நீட்டிப்புக் கொடுக்க மாட்டார்கள். ஆத்தூர் கல்லூரியில் முதல்வராக இருந்தவர் தமிழ்நாடு அரசுத் தேர்வாணையத் தேர்வு ஒன்றைப் பொறுப்பெடுத்து நடத்தினார். அப்போது ஒருமாணவரைத் தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. அதற்கு அவர் சொன்ன காரணம் சரியானதாக இல்லை. அம்மாணவர் நீதிமன்றம் சென்றுவிட்டார். இப்பிரச்சினை இருந்ததால் அவருக்குப் பணி நீட்டிப்புக் கொடுக்கக் கல்லூரிக் கல்வி இயக்குநர் மறுத்துவிட்டார். ஆகவே கொடுத்தாக வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. இப்பிரச்சினை தொடர்பாக வழக்குக்குச் சென்றோர் பலர். அவ்வழக்குகளில் தீர்ப்புகள் வந்துள்ளன. அவற்றில் எல்லாம் ’பணி நீட்டிப்பு என்பது உரிமை அல்ல’ என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளனர். ஆனால் பொதுவாகப் பணி நீட்டிப்புக் கிடைத்துவிடும். மேற்சொன்ன ஏதாவது காரணத்தால் அரிதாகச் சிலருக்குக் கிடைக்காது.

2021ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் கொடுத்த ஒருதீர்ப்புக்குப் பிறகு கல்வியாண்டின் இடையில் ஓய்வு பெறும் யாருக்குமே பணி நீட்டிப்பு வழங்கவில்லை.  ஓரிரு ஆண்டு அப்படியொரு நிலை இருந்தது என நினைக்கிறேன். பணி நீட்டிப்புக் கொடுத்தாலும் ஏப்ரல் மாதம் வரைக்கும் என்றும் சொன்னார்கள். மே மாதம் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை தானே என்று காரணம் சொன்னார்கள். ஒருமாத ஊதியத்தை மிச்சப்படுத்தலாம் என்று யாரோ ஓர் அதிகாரிதான் ஆலோசனை சொல்லியிருப்பார் என நினைக்கிறேன். ஏப்ரல் மாதம் வரைக்கும் கற்பித்த ஆசிரியர் மே மாதத்தில் நடைபெறும் விடைத்தாள் மதிப்பீடு உள்ளிட்ட தேர்வுப்பணிகளில் ஈடுபடுவது உரிமைதானே. ஆசிரியர் சங்கங்கள் தம் வாதத்தை அரசிடம் எடுத்துச் சொல்லிய பிறகு மீண்டும் பணி நீட்டிப்பு வழங்கும் நிலை உருவாயிற்று.

யூமா.வாசுகிக்குப் பணி நீட்டிப்பு வழங்க இயலாது என்று சொல்வதற்கு முதன்மைக் கல்வி அலுவலருக்கு அதிகாரம் இருக்கிறது. ஆனால் அதற்கு அவர் சொன்ன காரணம்தான் முக்கியமான பிரச்சினை.  ’…தனியர் கலையாசிரியர் என்பதாலும் அப்பள்ளியில் மிகக் குறைவான மாணவர்கள் கல்வி பயின்று வரும் நிலையிலும்… மாணவர்களின் கல்வி நலன் பெரிதும் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்படாது’ என்று முதன்மைக் கல்வி அலுவலர் கடிதம் கூறுகிறது. நூறு மாணவருக்குக் குறைவாக இருந்தால் அங்கே கலையாசிரியர் தேவையில்லை என்பது அரசு நிலைப்பாடு என்றால் கடந்த சில ஆண்டுகளாகவே நூறுக்கும் குறைவான எண்ணிக்கையிலேயே மாணவர் எண்ணிக்கை இருந்த அப்பள்ளியில் கலையாசிரியர் பணியிடம் இருந்தது ஏன்? யூமா வாசுகி அங்கே பணியில் சேரும்போதே நூற்றுக்கும் குறைவான மாணவர்கள்தான் இருந்தனர் என்கிறார். அதுவல்லாமல் முதலில் சொல்லும் காரணம் ’தனியர் கலையாசிரியர் என்பதாலும்’ என்கிறார். கலையாசிரியர் இல்லை  என்றால் மாணவர்களுக்குப் பாதிப்பு எதுவும் இல்லை என்று முதன்மைக் கல்வி அலுவலர் சொல்வது கலைகளைப் பற்றியும் கல்வியைப் பற்றியும் அவரது கீழான பார்வையைக் காட்டுகிறது.

வாய்மொழியாகக் ’கலையாசிரியர் யாருக்கும் நான் பணி நீட்டிப்புக் கொடுத்ததில்லை’ என்றும் சொல்லியிருக்கிறார்.  ’அவர் செயல்பாடு சரியில்லை’ என்றும் அவர் கூறியதாகத் தெரிகிறது. குழந்தைகளின் மனம் கவர்ந்த ஆசிரியர் அவர் என்பதை நானறிவேன். அவரது தலைமையாசிரியர்களும் உடன் பணிபுரியும் ஆசிரியர்களும் அதை ஒத்துக்கொள்வர். நாம் கேட்க வேண்டியது முதன்மைக் கல்வி அலுவலரின் பார்வையைத்தான். அதை யூமா வாசுகி தம் பகிரங்கக் கடிதத்தில் தெளிவாகச் சுட்டிக்காட்டியிருக்கிறார். மற்றபடி யூமா வாசுகி ஓர் எழுத்தாளர், சாகித்திய அகாதமி விருது பெற்றவர் என்பவை எல்லாம் அவர் கடிதம் பரவலாகக் காரணமாக இருந்திருக்கலாம். அவற்றை விடவும் கலைகள் பற்றிக் குறிப்பாக ஓவியம் பற்றியும் ஓவிய ஆசிரியர் பற்றியும் முதன்மைக் கல்வி அலுவலரின் பார்வை தவறானது என்பதே என் அபிப்ராயம்.

அதிகாரிகள் விரிந்த பார்வை கொண்டவர்களாக இருக்க வேண்டும். தம் பணியை வெறும் அதிகாரமாக மட்டும் பார்க்காமல் பலருக்கும் நன்மை செய்யும் ஒருவாய்ப்பாகப் பார்க்க வேண்டும். பொதுவாக அதிகாரிகளுக்கு ஆசிரியர்களைப் பிடிக்காது.  ’வக்கற்றவனுக்கு வாத்தியார் வேலை’ என்பதுதானே நம் சமூகப் பழமொழி. காலகாலமாக வறுமையில் வாடிக் கொண்டு கற்பித்தல் தொழிலைச் செய்து வந்த ஆசிரியர் தொழிலுக்கு நவீன காலத்தில் கூடுதல் முக்கியத்துவம் ஏற்பட்டுத் தமக்கு நிகராக ஊதியம் பெறுகிறார்களே என்னும் எண்ணத்தில் ஊறி மனக்கோணல் கொண்டவர்களாக அதிகாரிகள் இருக்கிறார்கள். ஆசிரியர்கள் மீது கடும் அதிகாரத்தைச் செலுத்துகிறார்கள். மிக மோசமான அதிகாரிகளைக் கண்டிருக்கிறேன். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த என் மனைவி கல்லூரி ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றார். முதன்மைக் கல்வி அலுவலர் மூலம் பணி விடுவிப்புப் பெற்றுக் கல்லூரிப் பணியில் சேர வேண்டும். அப்போதிருந்த முதன்மைக் கல்வி அலுவலர் செய்த பந்தாவும் அவர் ஏகவசனத்தில் பேசிய பேச்சுக்களும் இன்னும் எங்கள் நினைவில் இருக்கின்றன. பள்ளி ஆசிரியர் ஒருவர் கல்லூரி ஆசிரியராகச் செல்கிறார் என்றால் மனம் மகிழ்ந்து பாராட்டி வாழ்த்தி அனுப்பும் மனநிலை அவருக்கு இல்லை. ஏதோ தம் வீட்டுச் சொத்தை எங்களுக்குத் தூக்கிக் கொடுப்பது போல நடந்து கொண்டார். நாள் முழுக்க முதன்மைக் கல்வி அலுவலர் அறைக்கு முன் நின்று கொண்டிருந்தோம். அலைக்கழிப்பும் அவமானமும் எங்களைச் சூழ்ந்திருந்தன. அவர் அலுவலகத்திலிருந்து வெளியேறிய போது நாற்றக் குகைக்குள் அடைபட்டிருந்து விடுதலை பெற்றது போல உணர்ந்தோம். ஏன் ஆசிரியர்கள் மீது அதிகாரிகளுக்கு இத்தனை வன்மம் என்று அப்போது எனக்குப் பிடிபடவில்லை.

இப்படி ஒரு பிரச்சினை எழுத்தாளர் அல்லாமல் சாதாரண ஒருவருக்கு ஏற்பட்டிருந்தால் பணி நீட்டிப்புக் கிடைத்திருக்குமா என்றெல்லாம் கேட்கிறார்கள். எழுத்தாளரும் சாதாரணமான ஒருவர்தான். யாருக்காக இருப்பினும் சமூக ஊடகங்களில் குரல் எழுந்திருக்கும் என்றுதான் நினைக்கிறேன். யூமாவுக்கு எழுத்தாளர், வாசகர் தரப்புகளிலிருந்து  குரல் வந்தது போல வேறொருவருக்கு ஆசிரியர், சங்கம் ஆகிய தரப்புகளிலிருந்து குரல் வந்திருக்கக் கூடும். அவ்வளவுதான். செவியுள்ள அரசு எந்தப் பக்கமிருந்து குரல் வந்தாலும் கேட்கும்தானே? இப்போதைய பள்ளிக் கல்வி அமைச்சர் உடனே எடுத்த நடவடிக்கை பாராட்டுக்குரியது. அவர் பேச்சாளராகவும் வாசகராகவும் இருப்பதால் அவற்றை வெளிப்படுத்தும் வாசகங்களைப் பயன்படுத்தியிருக்கிறார்.

அதைப் பாருங்கள்:

அன்புமிகு அண்ணா.. அமெரிக்காவில் இருந்தே அனைவரிடமும் பேசிவிட்டேன். நீங்கள் தாராளமாக வேலைக்கு வரலாம். உங்களை வரவேற்க இந்த பள்ளியும், குழந்தைகளும், நானும் காத்திருக்கிறோம்..

– ராஜ்மோகன்

(உங்கள் அநேக வாசகர்களில் ஒருவன்)

அண்ணா என்று அழைத்திருப்பதும் ’காத்திருக்கிறோம்’ என்பதும் ’உங்கள் அநேக வாசகர்களில் ஒருவன்’ என்று அடக்கமாகச் சொல்லியிருப்பதும் வாசிக்க நெகிழ்ச்சியாக இருந்தது. இப்போது பூமணி இறப்புக்கு அவர் ஒரு பதிவிட்டிருக்கிறார். அதில் ’இது எங்களின் கடமை.. கடன்..’ என்று அரசு மரியாதையைக் குறிப்பிட்டிருக்கிறார்.

வி: எழுத்தாளர் யூமா வாசுகிக்கு உடனே பணி நீட்டிப்புக்கு ஏற்பாடு செய்தது எழுத்தாளர்கள் உள்ளிட்ட அறிவுத் தரப்பைத் தமக்குச் சாதகமாக மாற்றும் அரசியல் நடவடிக்கை என்று சிலர் விமர்சிக்கிறார்களே?

எழுத்தாளர் யூமா வாசுகிக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டபோது

பெமு: இருக்கட்டுமே. எல்லாத் தரப்பையும் தமக்கு இணக்கமானவர்களாக மாற்றிக் கொள்வதில் முனைப்புக் காட்டுவது அரசுகளின் இயல்புதானே? திரைத்துறையினருக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை எந்த அரசும் எழுத்தாளர்களுக்குக் கொடுத்ததில்லை. தமிழ்ச் சமூகத்தில் எழுத்தாளர்களின் குரலுக்கு எந்த மதிப்பும் இருந்ததில்லை. கடந்த திமுக அரசில் சிற்சில மாற்றங்கள் தெரிந்தன. நூலகங்களுக்கு நூல்கள் வாங்கும் முறையில் நல்ல மாற்றம் ஏற்பட்டது. பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி நடந்தது. தமிழ் நவீன இலக்கியம் பிற மொழிகளுக்குச் செல்ல அரசு மானியம் வழங்கியது. தமிழ்நாடுப் பாடநூல் கழகம் பல நூல்களை வெளியிட்டது. அறநிலையத் துறை வழியாகக் கூடப் பல நல்ல நூல்கள் வெளியிடப்பட்டன. எழுத்தாளர் கி.ராஜநாராயணன் இறந்த போது அரசு மரியாதை வழங்கப்பட்டது. அவருக்குக் கோவில்பட்டியில் நினைவகமும் உருவாக்கப்பட்டது. பல எழுத்தாளர்கள் திமுக சார்பாக வெளிப்படையாக இயங்கினர்.

இப்போது யூமா வாசுகியின் பணி நீட்டிப்பு இயல்பாக நடந்திருக்க வேண்டியது. ஓர் அதிகாரியின் தவறால் அமைச்சர் வரைக்கும் சென்று அரசியல் பேசுபொருளாக மாறியது. இதை நல்ல சகுனமாகவே பார்க்கிறேன். மேலும் கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான புவியரசு, எழுத்தாளர் பூமணி ஆகியோர் இறப்புக்குப் பின் அரசு மரியாதையுடன் வழியனுப்பப் பட்டுள்ளனர். இவற்றை எல்லாம் பார்க்கும் போது கேரளம் போல எழுத்தாளர்களின் குரலுக்கு மதிப்புக் கிடைக்கும் சூழல் தமிழ்நாட்டிலும் கனிந்து வருகிறது என்றே காண்கிறேன். இச்சூழலை எழுத்தாளர்கள் பயன்படுத்திக் கொள்வார்களா என்பதுதான் என் ஐயம்.  எதையும் பேசாமல், படைப்பு ஒன்றே என் பணி என உள்ளடங்கிக் கிடக்காமல் சமூக அரசியல் தொடர்பான தம் கருத்துக்களைப் பொதுவெளியில் வெளிப்படப் பேச வேண்டும்; எழுத வேண்டும். இன்று ஊடகங்கள் குவிந்து கிடக்கின்றன. யார் கருத்தையும் வெளிப்படுத்தத் தடையேதும் இல்லை. உடனடியாகப் பொதுவெளிக்குச் செல்லும் பெருவாய்ப்பு. ஆகவே அரசியல் பிரச்சினைகளில் தம் எண்ணத்தை எழுத்தாளர்கள் வெளியிட வேண்டும். கருத்துரிமைப் பிரச்சினைகளுக்குக் குரல் எழுப்ப வேண்டும். தம் அரசியல் சார்புகளைக் கடந்து பொதுப் பிரச்சினைகளில் கவனம் செலுத்திப் பொறுப்புடன் தம் கருத்துக்களை முன்வைத்தால் எழுத்துலகை அரசியல் உலகம் மதிக்கும் என்று நம்புகிறேன்.

              தொடரும்

விஜயகுமார்

வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.  தற்போது டோக்கியோ அறிவியல் நிறுவனத்தில் (Institute of Science, Tokyo) ஆய்வாளராக உள்ளார். நவீனத் தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் உள்ளவர். தமிழிலிருந்து மலையாளத்துக்கு கவிதைகள் மொழிபெயர்த்துள்ளார்.


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

உரையாடலுக்கு

Your email address will not be published.

திரட்டு

சேகரம்

Latest Posts

Go toTop

Don't Miss