குமாரநந்தன் குறுங்கதைகள்

போட்டோ

அவன் அப்பா ஒரு போட்டோகிராபர். அவர் தன்னுடைய புகைப்படங்களை வைத்து கண்காட்சி எல்லாம் நடத்தியிருக்கிறார். அவருடைய சில படங்கள் சோனி உலகப் புகைப்பட விருது கூட பெற்றுள்ளது.

கார்த்திக்கிடம் புகைப்படம் எடுப்பதற்கான ஞானமும் ரசனையும் இருந்தாலும் ஏனோ அவனுக்கு தொழில்முறை புகைப்படம் எடுப்பவனாக ஆவதில் ஆர்வம் இல்லை.

அன்று மாலை அவன் வேலை முடிந்து நகரத்தில் இருந்து வீட்டுக்கு பைக்கில் போய்க் கொண்டிக்கும்போது, காற்றில்லாமல் அடர்த்தியாக இல்லாமல் மிகவும் லேசாகவும் இல்லாமல் அழகான ஒளிப் பின்னனியோடு ஒரு செல்ல மழை பிடித்துக் கொண்டது. கோடை காலத்தின் கடைசி பருவம் என்பதால் அந்த மழையை விட்டு விலகிச் செல்ல யாருக்கும் மனம் இல்லை.

வழக்கமாக மழையின் போது தென்படும் ஒரு பதட்டமும் பரபரப்பும் சோர்வும் யாரிடத்திலும் இல்லை. அந்த மழைத் துளிகள் விசிறியடிக்கப்பட்ட மகிழ்ச்சியின் துணுக்குகளாக ஜனங்களின் முகங்களில் ஒளிர்ந்தது.

இந்த மழை என்னவோ சுற்றிலும் வெகு தொலைவு வரை பெய்வது போல தெரியவில்லை. கொஞ்ச தூரம் போய் விட்டால் மழை பெய்யுமா? அல்லது சுவடே இல்லாமல் இருக்குமா? என கார்த்திக்குக்கு சந்தேகமாய் இருந்தது. மழையை விட்டுப் போக அவனுக்கு மனம் வரவில்லை. அருகில் இருந்த ஒரு கடைப்பக்கம் வண்டியை நிறுத்தினான். கடையின் முன் பகுதியில் நீண்டிருந்த தகரக் கூரையின் கீழ் கும்பலாக நின்றவர்களோடு நின்றவாறு மழையை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.

சாலையில் மழையின் ஊடாக ஒரு இளம்பெண் கடையை கடந்து சென்றாள். அந்த மாலை நேர ஒளியின் பின்னனியில் மழை தன்னைக் கொஞ்சுவது போன்ற முக பாவனையில் இருந்த அவளை சட்டென தன்னுடைய செல்போனில் படம்பிடித்துவிட்டான்.

சீரான முறையில் வெகு நேரம் பெய்யப் போவதைப் போன்ற பாவனையில் சாவகாசமாகப் பெய்து கொண்டிருந்த மழை சில நிமிடங்களிலேயே ஸ்விட்சை அணைத்தது போல சட்டென நின்றது. அவன் அந்தப் புகைப்படத்தை மீண்டும் திறந்து பார்த்தான். அதன் அழகு அவனை அப்படியே ஸ்தம்பிக்கச் செய்தது. இந்தப் புகைப்படத்தை அந்தப் பெண்ணிடம் காட்ட வேண்டும் போலத் தோன்றியது. அவள் அங்கே எங்காவது தெரிகிறாளா எனப் பார்வையால் தேடிப் பார்த்தான். மழை நின்றதால் மக்கள் நடமாட்டமும் வாகனப் போக்குவரத்தும் அடர்ந்துவிட்டது. அவள் தென்படவில்லை.

வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பியபோது, ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் அவன் நினைத்தது போலவே மழை இல்லை. சாலையோரப் புழுதி காற்றில் நடனமாடிக் கொண்டிருந்தது. வீட்டுக்குப் போனவுடன் தன் தங்கையிடமும் அப்பாவிடமும் அந்தப் போட்டோவைக் காட்டினான். மீனாவின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன. அண்ணா நீ எடுத்த போட்டோவா இது? கிளாசிக்கா இருக்குன்னா என்றாள். அவன் அப்பா விஜயன் அந்தப் படத்தைப் பார்த்ததும் புன்னகைத்தார். ஒரு நிமிடம் போல அந்தப் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். பின் பிரமாதமா வந்திருக்கு என்றார்.

அவன் அந்தப் படத்தை தன்னுடைய இன்ஸ்டாவில் பகிர்ந்தான். எதிர்பார்த்ததைப் போலவே, பார்வைகளும் பகிர்வுகளும் சரசரவென போய்க் கொண்டே இருந்தது.

மறுநாள் காலை எழுந்தபோது, அவனுடைய அந்த புகைப்படம் இன்ஸ்டாகிராமில் டிரண்டாகி இருந்தது. அந்தப் பெண் யார் என ஆயிரக்கணக்கான பேர் கேட்டிருந்தனர்.

அன்று மாலை அந்தப் பெண் யார் என்ற கேள்வி இன்ஸ்டாகிரமாமைத் தாண்டி நகர மக்கள் மத்தியிலும் ஒலித்ததை அவன் கேட்டான். எப்படியும் இது அந்தப் பெண்ணுக்கு எட்டிவிடும். இன்றிரவுக்குள்ளாகவே இவள் தான் அவள் என யாராவது போஸ்ட் போடுவார்கள் என எதிர்பார்த்தான்.

ஆனால் மறுநாளும் அவள் யார் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்படி ஒரு பெண்ணே உண்மையில் இல்லை அப்படி இருந்திருந்தால் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் இந்நேரம் அவள் யார் என்பதைக் கண்டுபிடித்திருக்க முடியும். யார் அவள்? அவளுக்கு என்ன ஆனது? என்ற கேள்வி அந்தப் புகைப்படத்தை விட வேகமாக டிரண்ட் ஆனது.

இரண்டு நாட்களுக்கு முன் மாலை நேரத்தில் மழை பெய்தபோது, தான் ஒரு கடை அருகே ஒதுங்கியதாகவும், அப்போது சாலையில் நடந்து சென்ற ஒரு பெண்ணை படம் எடுத்ததாகவும் அவள் யார் என்று எனக்குத் தெரியாது என்றும் அவன் நின்றிருந்த பேக்கரியின் படத்தோடு அவன் ஒரு தன் விளக்கப் பதிவையும் இட வேண்டி இருந்தது.

அந்தப் புகைப்படம் இன்ஸடாவையும் தாண்டி பிரபலமாகியிருந்ததால், நிறைய பேர் அந்த பேக்கரிக்காரரை தொடர்பு கொண்டு உங்கள் கடை முன்னால் தானே அந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டதாம் அது யார் என உங்களுக்குத் தெரியுமா? என கேட்க ஆரம்பித்தார்கள்.

பலருடைய கேள்விகளால் ஆச்சரியமடைந்த அவர், தன்னுடைய சிசிடிவி கேமராவை பதிவுகளை சோதித்துப் பார்த்ததில் அந்தக் குறிப்பிட்ட நாளில் ஒரு நபர் மழையில் ஒதுங்குவதும் அந்த சமயத்தில் ஒரு பெண்ணை அவன் புகைப்படம் எடுப்பதும் பதிவாகி இருப்பதை கவனித்தார். அந்தப் பெண்ணின் உருவம் சரியாக தெரியவில்லை ஆனால் அவள் இன்ஸ்டாவில் காணப்படும் பெண் இல்லை என்பதைக் கண்டு குழம்பினார்.

கார்த்திக் வீட்டுக்கு யூ டியூபர்கள் படையெடுத்து வர ஆரம்பித்தனர். யார் அந்தப் பெண் அவள் முகவரியைக் கொடுங்கள் நாங்கள் அவளிடம் பேட்டி எடுக்க வேண்டும் என நச்சரித்தனர். அவன் அவள் யார் என்றே எனக்குத் தெரியாது என்ற அதே பல்லவியை திரும்பத் திரும்ப எல்லோருக்கும் சொல்லிக் கொண்ஐந்தான்.

சிலர் காணாமல் போன அந்தப் பெண்ணைப் போலீசார் கண்டுபிடித்துத் தர வேண்டும் என நீதி மன்றத்தில் ஆட் கொணர்வு மனு தாக்கல் செய்தனர். நீதி மன்றம் போலீசாருக்கு பதினைந்து நாள் கெடு விதித்து உத்தரவிட்டது.

இதற்காக அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் கார்த்திக்கின் இன்ஸ்டாவை ஆய்வு செய்தனர். அவன் [Text Wrapping Break]குறிப்பிட்டிருந்த அந்தக் கடைக்குச் சென்று விசாரித்தனர். பேக்கரி உரிமையாளர் காட்டிய சிசிடிவி புட்டேஜ்களை தீவிரமாக ஆய்வு செய்தனர். அதில் அவன் புகைப்படம் எடுக்கும் அந்தப் பெண் தூரத்துக் காட்சியாகத் தான் தெரிந்தாள். என்றாலும் இருவருக்கும் என்த சம்பந்தமும் இருப்பதாகத் தெரியவில்லை.

இறுதிக் கட்டமாக போலீசார் கார்த்திக்கை தேடிக் கொண்டு வந்தனர். அவனுக்கு ஆவி பிடித்ததைப் போல முகமெல்லாம் குப்பென வியர்த்துவிட்டது. அவள் யார் என்றே எனக்குத் தெரியாது என தட்டுத் தடுமாறி சொன்னான்.

போலீசார் சரி அதை வந்து ஸ்டேஷன்ல சொல்லுங்க என அவனை ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர்.

000

டால்ஸ்டாயின் நூலகம்

எங்கள் வீட்டில் உள்ள பழைய புத்தகங்களை விற்க விரும்புகிறோம். சேலம் நகரில் வசிக்கும் ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும் என தொலைபேசி எண்ணுடன் ஒரு சின்ன விளம்பரம் அன்றைய செய்தித்தாளை பிரித்தவுடன் கண்ணில் பட்டது. பழைய புத்தகக் கடையில் ஒன்றுமே கிடைக்காது என்று தெரிந்தாலும் மணிக்கனக்காய் நின்று புத்தகங்களைத் தேடிப் பார்க்கும் எனக்கு இந்த விளம்பரம் ஒரு எதிர்பாராத அதிர்ஷ்டம் போலத் தெரிந்தது. அந்த நம்பருக்கு உடனே போன் செய்தேன். எதிர்முனையில் ஒரு இளைஞனின் குரல் கேட்டது.

ஹலோ உங்க விளம்பரத்த பேப்பர்ல பார்த்தேன். நான் கொஞ்சம் புக்ஸ் வாங்கிக்கலாம்னு பார்க்கறேன். உங்க வீடு எங்க இருக்கு?

நீங்க எங்க இருக்கீங்க?

நான் இங்க லஷ்மி நகர்ல இருக்கேன்.

என்ன பண்றீங்க?

நான் இங்க ஒரு பேன்ஸி ஸ்டோர் வச்சிருக்கேன். அஜந்தா பேன்ஸி ஸ்டோர்னு பேர்.

ஓ அப்படியா? அது உங்க கடைதானா?

நீங்க கடைய பாத்திருக்கீங்களா?

என்னோட பிரண்ட் கல்யாணத்துக்கு அங்க வந்து கிப்ட் வாங்கி இருக்கேன்.

ஓ நீங்க எங்க இருக்கீங்க?

இங்க பைபாஸ் கிட்ட புது நகர்ல எங்க வீடு இருக்கு. நீங்க புக்ஸ் படிப்பீங்களா?

நிறைய படிப்பேன். எனக்கு போன் பாக்கறது டிவி பாக்கறதெல்லாம் பிடிக்காது. கொஞ்சம் எழுதவும் செய்வேன். எங்கிட்டயும் நிறைய புக் கலெக்‌ஷன் இருக்கு. ஆனா பழைய புக்ஸ்செல்லாம் எங்கிட்ட அவ்வளவா இல்ல.

உங்க பேர் என்ன சொன்னீங்க?

என் பேர் ஆனந்த் கமார்.

உங்க பேர்

என் பேர் டால்ஸ்டாய்

உங்க அப்பா இல்லாட்டி அம்மா ரைட்டரா?

அப்பா தான்

அவர் பேரு

அவர் அவ்வளவு பேமஸ் ஆனவர் இல்லை

ஓகே பரவாயில்லை. சரி நான் என்னைக்கு வரட்டும்

நாளைக்கு ஞாயித்துக் கிழமை காலையில வறீங்களா?

கண்டிப்பா

எழுத்தாளர் ஆனா அவ்வளவா யாருக்கும் தெரியாது. அப்படி யார் இங்க இருக்காங்க? நான் யார் யாரையோ யோசித்தேன். இரண்டு சிறுகதைத் தொகுப்பு போட்டு ஓரளவு அறியப்படக் கூடியவராய் இருப்பவர் கஜேந்திரன். அவருடைய வீடாய் இருக்குமா? இல்லை ஐயா லோகநாதன் வீடா?

காலையில் சீக்கிரமே எழுந்துவிட்டேன். உடனே எனக்கு டால்ஸ்டாயின் நினைவுதான் வந்தது. ஞாயிற்றுக் கிழமையின் சாவதானத்தை உதறிவிட்டு பரபரப்பாய் தயாரானேன்.

கலாவதி என்னை ஆச்சரியமாய் பார்த்தாள். எங்க கிளம்பிட்டீங்க?

இங்க தான் புது நகர் வரைக்கும் என்று மட்டும் சொல்லிவிட்டு வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினேன்.

புது நகருக்குக் பக்கமாய் போனவுடன் டால்ஸ்டாய்க்குப் போன் செய்து நான் இருக்கும் இடத்தைச் சொன்னேன். அவர் சொன்ன ஊதா நிற பெயிண்ட்டிங்க் வீடு வலது பக்கப் பாதையில் கொஞ்ச தூரத்திலேயே இருந்தது.

இந்தப் பகுதியில் அப்படி ஒரு வீட்டை நான் எதிர்பார்க்கவில்லை. கேட்டைத் திறந்ததும் கண்ணுக்கு இதமான ஒரு சிறிய தோட்டத்தைக் கடந்து போர்ட்டிகோவுக்குப் பக்கத்தில் பிரம்மாண்டமான கதவருகே இருந்த அழைப்பு மணியை அழுத்தினேன்.

ஒரு இளைஞர் வந்து கதவைத் திறந்து, புன்னகைத்தபடி உள்ள வாங்க என்றார். ஹால் பா வென்று பெரியதாய் இருந்தது. பெரிய பெரிய குஷன் வைத்த மூன்று சோபாக்கள் அதே போன்ற நான்கைந்து தனிச் சேர்கள் இருந்தன. ஹாலின் நடு நாயகமாக பிரம்மாண்டமான சாண்ட்லியர் தொங்கியது.

பக்கத்தில் இருந்த இன்னொரு அறையில் இருந்து ஒரு பெண் வெளியே வந்து வாங்க என்று சிரித்தபடி சொல்லிவிட்டு மீண்டும் உள்ளே போய்விட்டாள்.

சோபாவில் தயக்கத்தோடு உட்கார்ந்தேன்.

காபி சாப்டறீங்களா?

இல்ல நான் டிபன் சாபடுட்டுதான் வந்தேன். தண்ணி மட்டும் கொடுங்க. பணிப் பெண் ஜில்லென்று கொண்டு வந்த தண்ணீரைக் குடித்துவிட்டு சரி புத்தகங்களைப் பார்க்கலாமா? என்பது போல அவரைப் பார்த்தேன்.

வாங்க புக்ஸ் எல்லாம் மேல மாடியில இருக்கு போவோம் என்று எழுத்து படி இருந்த பக்கம் போனார். வீட்டின் உள் பக்கமாக அழகான வேலைப்பாடுடன் இருந்த படியில் ஏறி மாடியில் இருந்த ஒரு அறையைத் திறந்து லைட்டைப் போட்டார்.

ஆச்சரியத்தில் நான் ஸ்தம்பித்துவிட்டேன். டால்ஸ்டாய், தாஸ்தாயேவ்ஸ்கி, புதுமைப்பித்தன் அசோகமித்திரன் ஆகியோருடைய படங்கள் அழகாக பிரேம் செய்து நான்கு சுவர்களிலும் மாட்டப்பட்டிருந்ததுதான் முதலில் கண்ணில் பட்டது. அதற்குப் பிறகுதான் எதிரெதிராக இரண்டு பக்க சுவர் முழுவதும் அடிக்கப்பட்டிருந்த ரேக்குகளும் அதில் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்களும் கண்ணாடி கதவுகளும் கண்ணில் பட்டன.

வலது பக்க ரேக்குக்கு அப்பால் ஒரு கதவு இருந்தது. உள்ளே படுக்கை அறை இருக்கக் கூடும் என யூகித்தேன். அறையின் எதிர்ப் பக்க சுவருக்கு அருகே ஒரு அழகான டேபிளும் அதற்க முன் இரண்டு சேர்களும் முன் பக்கம் ஒரு சேரும் இருந்தது. டேபிள் மீது ஒரு சில புத்தகங்கள் அழகான புத்தர் சிலை ஒன்றும் இருந்தது.

ரேக்குகளில் கிட்டத்தட்ட தமிழ் எழுத்தாளர்கள் கவிஞர்கள் எல்லோருடைய புத்தகங்களிலும் ஒரு பிரதி இருந்தது. ந பிச்சமூர்த்தி கதைகள், பாரதியார் கதைகளின் பழைய பிரதிகள் அழகிய நாயகி அம்மாளின் கவலை நாவல் பிரதியும் இருந்தது.

இன்னொரு ரேக்கில் ஆங்கில நாவல்கள். குவிந்து கிடந்தன. என் மனம் உறைந்து போய் இருப்பதை உணர்ந்து கண்களை புத்தக அலமாரியில் இருந்து பிய்த்தெடுத்து அவரைப் பார்த்தேன். இந்த புக்ஸ் எல்லாத்தையுமா விக்கப் போறீங்க?

ஆமாம் என்பது போல தலையாட்டினார்.

நான் ஏன் என்பதைப் போல கண்களை விரித்தேன்.

அவர் புன்னகைத்தார்.

சார் தப்பா நினைச்சிக்காதீங்க. இந்த ரூம்ல இருந்து இந்த புக்ஸ் எல்லாத்தையும் எடுத்துட்டா. இதோட உயிரே போன மாதிரி இருக்குமே?

அப்படியெல்லாம் இருக்காது.

இது யாரோட ரூம்

எங்க அப்பாவோட ரூம்

இப்ப அவர் இல்லையா?

ஆறு மாசத்துக்கு முன்னால காலமாயிட்டார்.

அப்படியென்றால் இது கஜேந்திரன் வீடோ லோகநாதன் வீடோ இல்லை அவர்கள் இன்னும் இருக்கிறார்கள்.

நான் சொல்றதை வித்தியாசமா நினைச்சிக்க வேண்டாம். நீங்க வசதியாத்தானே இருக்கீங்க? இந்த ரூம் உங்க அப்பாவோட ஞாபகமா அப்படியே இருக்கலாம் இல்ல-

இந்த புக்ஸ என்னால எப்பவும் மெயின்டெயின் பண்ணிகிட்டிருக்க முடியாது. இதை வேற மாதிரி மாத்தலாம்னு இருக்கேன்.

சார் உங்க அப்பா பேரு?

குழந்தை வேலு

எனக்கு குழப்பமாய் இருந்தது. மன்னிக்கணும் அப்படி ஒரு எழுத்தாளரை நான் கேள்விப்பட்டதில்லையே? என்றேன்.

அவர் அவ்வளவு ஒன்னும் பிரபலமான ரைட்டர் இல்லை. அது அவரோட ஒரிஜ்னல் பேர். புனைப் பேர் வேற

அவரோட புனைப் பெயர் என்ன? அதை இல்ல நீங்க சொல்லனும்?

டால்ஸ்டாய் என் கண்களை ஆழ்ந்து பார்த்தார். அவர் பேர் என்னன்னு நீங்க தெரிஞ்சிருக்கனும். அந்த அளவுக்கு அவர் தெரியாதப்போ அதை நானே சொல்லி யாரையும் தெரிஞ்சிக்க வைக்க எனக்கு சம்மதம் இல்லை.

சாரி

சாரி இது உங்க தப்புன்னு நான் சொல்ல வரல

இந்த ரூம் நீங்க தான் அப்பாவுக்கு கட்டி கொடுத்திருப்பீங்க அப்புறம் ஏன் இப்ப அதை மாத்தனும்னு நினைக்கிறீங்க?

ஆமாம் நான் தான் கட்டிக் கொடுத்தேன். இப்ப அவரு போயிட்டாரு. நான் சாமி கும்பிட அவரோட போட்டோ போதும். இதையெல்லாத்தையும் வச்சி கும்பிடனும்னு எனக்குத் தேவை இல்லை.

எனக்கு கண்களில் ஈரம் படர்ந்தது. நீங்க வசதியாதானே இருக்கீங்க. இதையெல்லாம் விக்கணும்னு ஏன் விளம்பரம்லாம் பண்ணிகிட்டிருக்கீங்க. அப்படியே பேக் பண்ணி கொண்டு போய் பழைய ஜாமான் கடையில போட்ரலாமில்ல.

அவர் மீண்டும் என்னை உற்றுப் பார்த்தார். அது அவருக்கு செய்யற மரியாதை இல்லை. புரியுது நீங்க கொஞ்சம் அப்செட் ஆயிட்டீங்க நீங்க ஒரு ரைட்டர் இல்லையா? என்று புன்னகைத்தார். அதில் இருப்பது ஏளனமா பரிதாபமா என்று எனக்குப் புரியவில்லை. எனக்கு உடம்பில் என்னவோ கூசுவது போல இருந்தது.

உங்களுக்கு இதுல எவ்வளவு புக் வேணுமோ எடுத்துக்கங்க. உங்ககிட்ட இருந்து நான் பணம் எதுவும் பெரிசா எதிர் பார்க்கல. உங்கள மாதிரியானவங்ககிட்ட இந்த புக்ஸை சேர்க்கணும்னுதான் அப்படி விளம்பரம் கொடுத்தேன்.

நான் அந்த புத்தகங்களை மீண்டும் ஒருமுறை பார்த்தேன். எனக்கு எந்தப் புத்தகத்தையும் எடுத்துப் போக ஏனோ மனம் வரவில்லை.

எனக்கு புத்தகம் எதுவும் வேணாம் சார் என்று மெல்லிய குரலில் சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியேறினேன்.

000

குமாரநந்தன்

குமாரநந்தன் சிறுகதைகள், கவிதைகள் புனைபவர். பகற் கனவுகளின் நடனம் என்ற கவிதைத் தொகுப்பும், பதிமூன்று மீன்கள், பூமியெங்கும் பூரணியின் நிழல், நகரப் பாடகன், மகா மாயா ஆகிய நான்கு சிறுகதைத் தொகுப்புகளும் வெளியாகி உள்ளன. சேலம் அருகே மல்லூரில் வசிக்கிறார்.


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

உரையாடலுக்கு

Your email address will not be published.

திரட்டு

சேகரம்

Latest Posts

Go toTop

Don't Miss