இன்பா கவிதைகள்

1

எலும்புக் குகைகளில்
அம்மாக்களின் எச்சரிக்கைகள்
நிரம்பிக்கிடக்கின்றன
அரக்குநிறக் குருதியின் அறைகளில்
பாட்டிகளின் இரவுகள்
சிவப்பணுக்களாய்க் கரைந்தோடுகின்றன.
பாலுக்காக வளர்க்கப்பட்ட மார்புகளில
மூச்சுத்திணறல்கள் கட்டிப்போடப்பட்டு
அகக்கதவுகளின் அருகே
காவலனாய் நிற்கிறது பயமெனும்
தலைமுறை தாழ்ப்பாள்.
அழகிய இடுப்பெலும்புகளின் வளைவுகள்
பாரத்தைச் சுமக்கக் கண்டுபிடித்த கலியுக யுக்தி,
பழிகளைத் தாங்கும் உடல்
பற்களைக் கடித்தபடி
தன் நாட்காட்டியின் சிவப்புத் தேதிகளை
மாதந்தோறும் கிழித்தெறிகிறது
கருப்பையே குழந்தையின் முதல் வீடென
என்னைப் பெற்ற இரத்தத்தோடும்
என்னில் பிறந்த உலகத்தோடும்
ஒரே நேரத்தில்
பேசிக்கொண்டிருக்கும்
ஆலங்கால் பதித்த பெண்மொழி
அலங்காரத் தேரல்ல
சதையின் ஆவணமல்ல
திறந்துவைக்கப்பட்ட கதவல்ல
திறக்கக் கற்றுக்கொள்ளாதவர்களுக்கு
அது
காடு.

2

நாவின் அடியில் உன் பெயர்
திடீரென்று பற்களுக்குள் மாட்டிக்கொள்ளும்
உலர்ந்த மிளகாய் விதையாய்
எவ்வளவு தண்ணீர் குடித்தாலும்
எரிச்சல் குறையவில்லை.

    எலும்புகளுக்குள் மூச்சுக்காற்று
    இன்னும் படிந்திருக்கிறது
    குருதியின் அறைகளில்
    ரகசியமாய் உன் முத்தங்கள்
    அலைந்து திரிகின்றன.

    விரல்கள் சில தருணங்களில்
    இடுப்பின் வளைவைத் தொட்டு
    வழி கேட்டுச் சென்ற நினைவுகள்
    வறண்ட நதிக்கரையில்
    மீனின் வெள்ளித் தோலைப் போல மின்னுகின்றன

    உன் முதுகெலும்பின் நீளம்
    கழுத்தின் கீழ் துடித்த அந்த நரம்பு
    மார்பில் முகம் வைத்தபோது
    கேட்ட மெல்லிய இரைச்சல்
    இவை எல்லாம்
    நினைவில் இல்லை

    கழுத்தின் வலப்புறத்தில்
    நீ கடித்துச் சென்ற
    சிறு வலியை
    ஆண்டுகள் கழித்தும்
    நகக்கணுக்களால்
    தொட்டுப் பார்க்கிறேன்
    சில பிரிவுகள்
    கடித்த இடமாய் மட்டுமே
    உடலில் தங்குகின்றன.

    3.

    சில இரவுகளில்
    கைப்பேசி
    சிறு சவப்பெட்டி.

    கருந்திரையின் கீழ்
    ஒளி பிடித்த பிணங்கள்
    வெள்ளை எலும்புகளால்
    நிரம்பிக்கிடக்கின்றன.

    அதன் குழிவாசலில்
    மூச்சு மாட்டிக்கொள்கிறது.
    திறக்கையில்
    நகநுனியில்
    மண்.

    அழிக்கும் குறியீட்டின் மீது
    விரல்கள் தயங்க
    குழியின் விளிம்பில்
    சரிகிறது மண்வெட்டி.

    மேலும் கீழுமாக
    விரல்களை நகர்த்தி
    மண்ணை
    அள்ளியள்ளிப் போடுகிறேன்.

    முதுகெலும்போடு நழுவி
    மண்டையோட்டின் உள்ளே
    ஒவ்வொரு துளியும்
    உள் கல்லறையாகத் திறக்கிறது.

    ஒவ்வோர் இரவிலும்
    சாக மறுக்கும்
    முகங்களோடு அமர்ந்து
    தன் கையாலேயே
    தன்னைப் புதைத்துக்கொள்ள
    மீண்டும் தேடுகிறேன்

    000

    இன்பா

    கவிஞர், எழுத்தாளர் மற்றும் 'திணைகள்' இணைய இதழின் ஆசிரியர். சிங்கப்பூரில் வசித்து வருகிறார்.


    Discover more from

    Subscribe to get the latest posts sent to your email.

    உரையாடலுக்கு

    Your email address will not be published.

    திரட்டு

    சேகரம்

    Latest Posts

    Go toTop