
லாஸ்லோ கிராஸ்னஹோர்காய்(László Krasznahorkai) , சோவியத் ஆதிக்க காலகட்டத்தில், 1954 இல் ஹங்கேரியில் உள்ள கியூலா என்ற நகரில் பிறந்தார். தனது முதல் நாவல் ‘Satantango‘வை 1985 இல் வெளியிட்டார். அதைத்தொடர்ந்து The Melancholy of Resistance (1989), War and War (1999), Baron Wenckheim’s Homecoming (2016) போன்ற நாவல்கள் வெளிவந்தன. அவர் நாவல்களை இப்படி விவரிக்கலாம்: சிக்கலான செறிவான மொழிநடை, உலகளாவிய அறிவார்த்தம் (நாவலாசிரியருக்கு ஐரோப்பிய அறிவியக்கம் அளவுக்கே பௌத்த தத்துவ நூல்களிலும் பரிச்சயம் உண்டு), பித்து நிறைந்த கதாபாத்திரங்கள், மழையால் நனைந்த நிலப்பரப்புகள். இந்த இயல்புகளால் அவரது படைப்புகள் இறுக்கமும் பெருமிதவுணர்வும்கொண்ட பின்கால-நவீனத்துவப் படைப்புகள்(Late modernism) போல தோற்றமளிக்கலாம். ஆனால் அவை pointllist ஒவியத்தின் புள்ளிகள் போல நுணுக்கமானவை, நேர்த்தியானவை, மெல்லிய அங்கதம் கொண்டவை. அவரது தீவிரத்தன்மைக்கு அதற்கேயுரிய நிமிர்வும் அழகும் உண்டு— இந்த தீவிரத்திற்கும் அழகிற்குமான மோதலை, அவரின் நாவல்களில் மட்டுமல்லாமல் அவர் எழுதிய பிற இலக்கியவடிவங்களிலும் உணரமுடியும். அந்த வரிசையில் Animalinside (2010) போன்ற சிறுகதைகளும், Destruction and Sorrow Beneath the Heavens (2004) மற்றும் Seiobo There Below (2008) போன்ற பரந்த நிலப்பரப்பில் நிகழும் படைப்புகளும் அடங்கும்.
கிராஸ்னஹோர்காய்க்கு ஹங்கேரியில் இன்னும் ஒரு வீடு இருந்தாலும், அவர் பெரும்பாலும் பெர்லினில்தான் வசிக்கிறார். நேர்காணலுக்காக, 2016-ஆம் ஆண்டு குளிர்காலத்தில் நான் லண்டனிலிருந்து பெர்லினுக்குச் செல்ல முயன்றபோது, மூடுபனி காரணமாக என் விமானம் ரத்து செய்யப்பட்டது. சில மணிநேரங்களுக்குப் பிறகு, எனது புதிய விமானம் காத்திருந்தபோது, தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக எங்கள் புறப்பாடு மேலும் தாமதமாகும் என்று சொன்னார்கள். ஒருவழியாக பெர்லினுக்கு வந்தபிறகு அவரின் இருப்பிடம் செல்ல ஒரு வாடகைக் காரைக் கண்டடைந்தேன். ஓட்டுநர் அச்சுறுத்தும் வகையில் மிக வேகமாக காரை ஓட்டினார். காரணம் கேட்டதற்கு, தான் மிக அவசரமாக கழிவறையை பயன்படுத்த வேண்டும் என்றார். நான் லண்டனிலிருந்து புறப்பட்டு சரியாக பன்னிரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, ஹெர்மன்பிளாட்சில் உள்ள யு-பான் நுழைவாயிலுக்கு முன்னால் கிராஸ்னஹோர்காயைச் சந்தித்தேன். நான் அவரை பெய்ஜிங்கில் சந்தித்திருந்தால்கூட இதேபோல்தான் இருந்திருக்கும். நான் செய்த இந்த நீளமான அபத்தமான பயணம், ஒருவகையான பொருத்தமற்ற நகைச்சுவை போல இருந்தது. நான் மீண்டும் யோசித்தேன்: கிராஸ்னஹோர்காயின் கலை எப்போதும் அபத்தமானவற்றுக்கும், உலகம் தன்னை ஒரு சமரசமற்ற எதிரியாக பாவித்துக்கொள்ளும் நிலைக்கும் இடமளிப்பதாகவே இருந்துள்ளது.
கிராஸ்னஹோர்காய், வசீகரிக்கும் மத்திய ஐரோப்பிய உச்சரிப்புடனும், அவ்வப்போது அமெரிக்க உச்சரிப்புடனும் ஆங்கிலம் பேசுகிறார்; தொண்ணூறுகளில் அமெரிக்க கவிஞர் ஆலன் கின்ஸ்பெர்க்கின் நியூயார்க் குடியிருப்பில் சிலகாலம் அவர் வாழ்ந்ததால் இந்த அமெரிக்க உச்சரிப்பு வந்திருக்கலாம். கிராஸ்னஹோர்காயின் ஆகிருதி பெரியது. ஆனால் மென்மையானவர் அடிக்கடி சிரிப்பவர் அல்லது புன்னகைப்பவர். உயிர்கள் மீதான கரிசனம் நிறைந்தவர். நான் குளிரால் நடுங்கியபோது எனக்கு ஒரு ஸ்வெட்டரைக் கொடுத்தார். டர்ஸ் க்ரூன்பெயினின் Una Storia Vera என்ற கவிதைத்தொகுப்பை எனக்குப் பரிசாக வாங்கிக் கொடுத்தார். மேலும் ஜியோர்ஜி குர்தாக்கின் இசைப் பதிவுகளைப் பரிந்துரைத்தார். நீளமான தலைமுடியும் சோகமான கண்களும் கொண்ட அவர், ஒரு கருணைமிக்க துறவியைப் போலத் தோற்றமளித்தார். தனிப்பட்ட விஷயங்களில் மிகுந்த ரகசியம் காப்பவர்; எனவே, தனது குடியிருப்பில் என்னைச் சந்திக்க ஒருபோதும் விரும்பியதில்லை. அதற்குப் பதிலாக, நாங்கள் க்ரூஸ்பெர்க்கைச் சுற்றியுள்ள பல்வேறு காபி கடைகளிலும் உணவகங்களிலும் நீண்ட நேரம் உரையாடினோம்.
—ஆடம் திர்ல்வெல் (நேர்காணல் செய்தவர்)
திர்ல்வெல்: உங்கள் எழுத்துவாழ்க்கை ஆரம்பித்தது எப்படி? அதைப்பற்றி பேசலாம்.
கிராஸ்னஹோர்காய்: உண்மையான வாழ்க்கை, அதாவது நிஜ வாழ்க்கை வேறு எங்கோ இருப்பதாக நான் நினைத்தேன். ஃபிரான்ஸ் காஃப்காவின் The Castle நாவலும், மால்கம் லோரியின் Under the Volcano நாவலும் சிலகாலம் எனக்கு பைபிள் அளவுக்கு நெருக்கமாக இருந்தன. அது அறுபதுகளின் பிற்பகுதி, எழுபதுகளின் முற்பகுதி. ’எழுத்தாளன்’ என்ற பாத்திரத்தை நான் ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. நான் ஒரே ஒரு புத்தகம் மட்டும் எழுத விரும்பினேன்—அதற்குப் பிறகு, குறிப்பாக இசையுடன் தொடர்புடைய வெவ்வேறு விஷயங்களைச் செய்ய விரும்பினேன். நான் மிகவும் ஏழ்மையான மக்களுடன் வாழ விரும்பினேன்—அதுதான் உண்மையான வாழ்க்கை என்று நினைத்தேன். மிகவும் ஏழ்மையான கிராமங்களில் வசித்தேன். நான் எப்போதும் மிகவும் மோசமான வேலைகளையே செய்தேன். கட்டாய இராணுவச் சேவையிலிருந்து தப்பிப்பதற்காக, ஒவ்வொரு மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கும் என் இருப்பிடத்தை மாற்றிக்கொண்டே இருந்தேன்.
பிறகு, நான் சில சிறு ஆக்கங்களை வெளியிடத் தொடங்கிய உடனேயே, எனக்குக் காவல்துறையிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது. ஒருவேளை என் நடத்தைகளில் கொஞ்சம் அதிகப்படியான துடுக்குத்தனம் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் ஒவ்வொரு கேள்விக்கும் பிறகு, “தயவுசெய்து என்னை நம்புங்கள், நான் அரசியலில் ஈடுபடுவதில்லை” என்று சொன்னேன். “ஆனால் உங்களைப் பற்றி எங்களுக்குச் சில விஷயங்கள் தெரியும்.” “இல்லை, நான் சமகால அரசியல் பற்றி எழுதுவதில்லை.” “நாங்கள் உங்களை நம்பவில்லை.” சிறிது நேரத்திற்குப் பிறகு, எனக்குச் சற்று கோபம் வந்து, “உங்களைப் போன்றவர்களைப் பற்றி நான் ஏதாவது எழுதுவேன் என்று உங்களால் உண்மையிலேயே கற்பனை செய்ய முடியுமா?” என்று கேட்டேன். அது நிச்சயமாக அவர்களை ஆத்திரமூட்டியது. இரகசியக் காவல்துறையைச் சேர்ந்த ஒருவர், எனது கடவுச்சீட்டைப் பறிமுதல் செய்ய விரும்பினார். சோவியத் காலத்தின் கம்யூனிச அமைப்பில் எங்களிடம் நீலம் மற்றும் சிவப்பு என இரண்டு வெவ்வேறு கடவுச்சீட்டுகள் இருந்தன. என்னிடம் சிவப்பு நிறக் கடவுச்சீட்டு மட்டுமே இருந்தது. சிவப்பு நிறக் கடவுச்சீட்டு அவ்வளவு சுவாரஸ்யமானது அல்ல. ஏனென்றால் அதைக் கொண்டு சோசலிச நாடுகளுக்கு மட்டுமே செல்ல முடியும். ஆனால் நீல நிறக் கடவுச்சீட்டு சுதந்திரத்தைக் குறித்தது. அதனால் நான், “உங்களுக்கு உண்மையிலேயே சிவப்பு நிறக் கடவுச்சீட்டுதான் வேண்டுமா?” என்று கேட்டேன். ஆனாலும் அவர்கள் அதைப் பறித்துக்கொண்டார்கள். 1987 வரை என்னிடம் எந்தக் கடவுச்சீட்டும் இல்லை.
அதுதான் என் எழுத்துப் பயணத்தின் முதல் கதை—அதுவே கடைசி கதையாகவும் எளிதில் ஆகியிருக்கலாம். சமீபத்தில், இரகசியப் காவல்துறையின் ஆவணங்களில், அவர்கள் சாத்தியமான தகவல் கொடுப்பவர்கள் மற்றும் ஒற்றர்களைப் பற்றி விவாதித்திருந்த குறிப்புகளைக் கண்டேன். என் சகோதரனிடம் அவர்களுக்குச் சில வாய்ப்புகள் இருந்ததாக அவர்கள் எழுதியிருந்தார்கள். ஆனால் லாஸ்லோ கிராஸ்னஹோர்காயிடம் அது முற்றிலும் சாத்தியமற்றது. ஏனென்றால் அவர் தீவிர கம்யூனிச எதிர்ப்பாளராக இருந்தார் என்று எழுதி இருந்தது இப்போது வேடிக்கையாகத் தெரிகிறது. ஆனால் அந்த நேரத்தில் அது அவ்வளவு வேடிக்கையாக இல்லை. நான் ஒருபோதும் எந்த அரசியல் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டதில்லை. சிறிய கிராமங்களிலும் நகரங்களிலும் வசித்துக் கொண்டு என் முதல் நாவலை எழுதினேன்.
திர்ல்வெல்: நீங்கள் அதை எப்படி வெளியிட்டீர்கள்?
கிராஸ்னஹோர்காய்: அது 1985 ஆம் ஆண்டு. Satantango நாவலை வெளியிடுவது எப்படி சாத்தியமானது என்பதை நான் உட்பட, யாராலும் புரிந்துகொள்ள முடியவில்லை. ஏனென்றால், அது கம்யூனிச அமைப்புக்கு எந்த வகையிலும் சிக்கலற்ற ஒரு நாவல் அல்ல. அந்த நேரத்தில், சமகால இலக்கியங்களுக்கான பதிப்பகங்களில் ஒன்றின் இயக்குநர், முன்னாள் இரகசியப் போலீஸ் தலைவராக இருந்தார். ஒருவேளை, இந்த நாவலை வெளியிடும் துணிச்சல் தனக்கு இருக்கிறது என்பதைக் காட்டுவதன் மூலம், தனக்கு இன்னும் அதிகாரம் இருக்கிறது என்பதை அவர் நிரூபிக்க விரும்பி இருக்கலாம். அந்த ஒரே காரணத்தால்தான் அந்தப் புத்தகம் வெளியிடப்பட்டது என்று நான் நினைக்கிறேன்.
திர்ல்வெல்: நீங்கள் என்ன மாதிரியான வேலைகளைச் செய்து கொண்டிருந்தீர்கள்?
கிராஸ்னஹோர்காய்: நான் கொஞ்ச காலம் சுரங்கத் தொழிலாளியாக இருந்தேன். அது ஒரு நகைச்சுவை— நான் செய்த பிழைகளை சரிசெய்ய உண்மையான சுரங்கத் தொழிலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருந்தது. பிறகு, புடாபெஸ்டிலிருந்து வெகு தொலைவில் உள்ள கிராமங்களில் உள்ள பல்வேறு கலாச்சார மையங்களின் இயக்குநராக ஆனேன். ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு கலாச்சார மையம் இருந்தது. அங்கு மக்கள் செவ்வியல் இலக்கியங்களைப் படிக்கலாம். அவர்களின் அன்றாட வாழ்க்கையில் இந்த நூலகம் மட்டும்தான் அவர்களுக்கு இருந்த ஒரே ஆதரவு. மேலும் வெள்ளிக்கிழமைகளிலும் சனிக்கிழமைகளிலும், கலாச்சார மையத்தின் இயக்குநர் இசை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வார். அது இளைஞர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அப்படி மிகச்சிறிய ஆறு கிராமங்களுக்கு நான் இயக்குநராக இருந்தேன். எப்போதும் அந்த கிராமங்களுக்கிடையே பயணம் செய்து கொண்டிருந்தேன். என் நடுத்தரவர்க்க குடும்ப அமைப்பிலிருந்து(Bourgeois) வெகு தொலைவில் இருந்ததால், அந்த வேலையை நான் மிகவும் விரும்பினேன்.
வேறு என்ன? நான் முந்நூறு மாடுகளுக்கு இரவு நேரக் காவலாளியாக இருந்தேன். அதுதான் எனக்கு மிகவும் பிடித்தமான வேலை—ஆளரவமற்ற இடத்தில் ஒரு மாட்டுக்கொட்டகை. அருகில் கிராமமோ, பெருநகரமோ, பட்டணமோ எதுவுமே இல்லை. சில மாதங்களுக்கு நான் காவலாளியாக இருந்தேன். ஒரு பையில் Under the Volcano புத்தகமும், இன்னொரு பையில் தாஸ்தோயெவ்ஸ்கியையும் வைத்துக்கொண்டு ஒரு ஏழ்மையான வாழ்க்கை.
நிச்சயமாக, இந்த அலைந்து திரியும் ஆண்டுகளில் நான் குடிக்கத் தொடங்கினேன். உண்மையான மேதைகள் அனைவரும் முழுக்குடிகாரர்களாக இருப்பார்கள் என்பது ஹங்கேரிய இலக்கியத்தில் ஒரு மரபாக இருந்தது. நானும் ஒரு வெறிபிடித்த குடிகாரனாக இருந்தேன். ஒருமுறை சில ஹங்கேரிய எழுத்தாளர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது, எந்தவொரு ஹங்கேரிய மேதையும் ஒரு குடிகாரனாகத்தான் இருக்கமுடியும், தவிர்க்க முடியாதது என்பதை துயருடன் ஏற்றுக்கொண்டனர். நான் மட்டும் ஏற்றுக் கொள்ள மறுத்து, இனிமேல் ஒருபோதும் குடிக்க மாட்டேன் என்று பன்னிரண்டு பாட்டில் ஷாம்பெயினுக்காக ஒரு பந்தயம் கட்டினேன்.
திர்ல்வெல்: நீங்கள் குடிக்கவில்லையா?
கிராஸ்னஹோர்காய்: குடிக்கவில்லை. ஆனால், அப்போது, சமகால உரைநடை இலக்கியத்தில், பீட்டர் ஹஜ்னோசி என்ற எழுத்தாளர் முழுகுடிகாரராக இருந்தார், மால்கம் லோரியைப் போல. ஹஜ்னோசி ஒரு வாழும் ஜாம்பவான். அவரது மரணம் ஹங்கேரிய இலக்கியத்தில் மிகப்பெரிய நிகழ்வாக இருந்தது. அவருக்கு மிகவும் இளம்வயது, ஒருவேளை நாற்பது இருக்கலாம். அதுதான் நான் வாழ்ந்த வாழ்க்கை. நான் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை— மிகவும் சாகசமான வாழ்க்கை. எப்போதும் இரண்டு நகரங்களுக்கு இடையில் பயணம் செய்துகொண்டே, இரவில் ரயில் நிலையங்களிலும் பார்களிலும், மக்களைக் கவனித்து, அவர்களுடன் சிறிய உரையாடல்களை நிகழ்த்திக்கொண்டிருந்தேன். மெதுவாக, என் மனதில் அந்தப் புத்தகத்தை எழுதத் தொடங்கினேன்.
அந்த வகையான சாகசவுணர்வுகொண்ட, அலைச்சல் வாழ்க்கையிலிருந்து கொண்டு படைப்பாக்கத்தில் ஈடுபடுவது நன்றாக இருந்தது. ஏனென்றால் இலக்கியம் ஒரு ஆன்மீகமான துறை என்பதை நான் உறுதியாகவே நம்பினேன்—அதே காலகட்டத்தில், ஹஜ்னோசி, ஜானோஸ் பிலின்ஸ்கி, சாண்டோர் வெரெஸ் மற்றும் பல அற்புதமான கவிஞர்கள் எழுதிக்கொண்டிருந்தனர். உரைநடை இலக்கியம் அவ்வளவு சக்தி வாய்ந்ததாக இல்லை. நாங்கள் கவிதையைத்தான் அதிகம் விரும்பினோம். கவிதை ஒரேசமயம் சுவாரஸ்யமாகவும், மர்மமாகவும் இருந்தது. உரைநடை, யதார்த்தத்திற்குச் சற்று நெருக்கமாக இருந்தது. உரைநடை இலக்கியத்தில் மேதை என்றால், அவர் நிஜ வாழ்க்கைக்கு மிக நெருக்கமாக இருப்பவர் என்று சொல்லலாம். அதனால்தான், ஹங்கேரிய இலக்கியமரபில், சிக்மண்ட் மோரிட்ஸ் போன்ற உரைநடை எழுத்தாளர்கள் சிறிய வாக்கியங்களில் எழுதினார்கள். ஆனால், ஹங்கேரிய உரைநடை இலக்கியத்தில் நான் மிகவும் நேசிக்கும் ஒரே எழுத்தாளரான க்ரூடி அப்படிப்பட்டவர் அல்ல. கியூலா க்ரூடி. ஒரு அற்புதமான எழுத்தாளர். நிச்சயமாக மொழிபெயர்க்க முடியாதவர். ஹங்கேரியில், அவர் ஒரு டான் ஜியோவானி போல இருந்தார்—இரண்டு மீட்டர் உயரம், பிரம்மாண்டமான மனிதர், அசாதாரணவர். அவர் மீதான வசீகரத்தால் யாராலும் அவரை எதிர்க்க முடியவில்லை.
திர்ல்வெல்: மேலும் அவர் பயன்படுத்தும் வாக்கியங்கள்?
கிராஸ்னஹோர்காய்: மற்ற எந்த உரைநடை எழுத்தாளரிடமிருந்து வேறுபடும்படி அவர் வாக்கியங்களைப் பயன்படுத்தினார். அவர் எப்போதும் சற்றே போதையில், ஆழ்ந்த துயருடன், வாழ்க்கை பற்றிய எந்த மாயைகளும் இல்லாத, வலிமையான ஆனால் அந்த வலிமை முற்றிலும் தேவையில்லாத ஒரு மனிதரைப் போல காட்சியளித்தார். ஆனால் க்ரூடி எனக்கு ஒரு இலக்கிய முன்மாதிரி அல்ல. க்ரூடி எனக்கு ஒரு மனிதராக, நான் ஏதாவது எழுத முடிவு செய்தால் அதை எழுதும் ஆற்றலை எனக்கு அளித்த அவதார புருஷன் போல இருந்தார். ஜானோஸ் பிலின்ஸ்கி எனது மற்றொரு அவதார புருஷர். இலக்கியத்தில் பிலின்ஸ்கி தனது மொழி, பேசும்விதம் போன்றவற்றால் எனக்கு மிகவும் முக்கியமானவராக இருந்தார். நான் அவரை நகலாக்க முயற்சித்தினேன். அன்புள்ள ஆடம்—நாம் காத்திருக்கக் கூடாது—ஒரு பேரழிவிற்காக—நாம் இப்போது—ஒரு பேரழிவில்தான்—வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.—என் அன்புள்ள—ஆடம்—தயவுசெய்து எங்கும்—எங்கும்—போய்விடாதே…
மிகவும் உச்சஸ்தாயியில், மெதுவாக, வார்த்தைகளுக்கு இடையே நிறுத்தங்களுடன் பேசுவார். மேலும் ஒவ்வொரு வார்த்தையின் கடைசி எழுத்துக்களும் எப்போதும் மிகத் தெளிவாக உச்சரிக்கப்பட்டன. ஒரு சுரங்கக் கல்லறையில் இருக்கும் பாதிரியாரைப் போல—நம்பிக்கையற்றவராகவும், அதே நேரத்தில் பெரும் நம்பிக்கையுடனும் இருந்தார். ஆனால் அவர் கியூலா க்ரூடியிலிருந்து வேறுபட்டவர். பிலின்ஸ்கி ஒரு ஆட்டுக்குட்டியைப் போல இருந்தார். ஒரு மனிதனைப் போல அல்ல—ஒரு ஆட்டுக்குட்டியைப் போல.

திர்ல்வெல்: நீங்கள் வாசிக்கும் காலத்தில் மொழிபெயர்ப்பு நூல்கள் அதிகமாக கிடைத்தனவா?
கிராஸ்னஹோர்காய்: எங்களுக்கு நிறைய மேற்கத்திய இலக்கியங்கள் மொழிபெயர்ப்பில் கிடைத்த ஒரு காலம் இருந்தது. எழுபதுகளில். வில்லியம் ஃபாக்னர், ஃபிரான்ஸ் காஃப்கா, ரில்கே, ஆர்தர் மில்லர், ஜோசப் ஹெலர், மார்செல் புரூஸ்ட், சாமுவேல் பெக்கெட்—ஏறக்குறைய ஒவ்வொரு வாரமும் ஒரு புதிய கிளாசிக் வெளிவந்தது. கம்யூனிச ஆட்சியின் கீழ் தங்களின் சொந்தப் படைப்புகளை வெளியிட முடியாததால், மிகச்சிறந்த எழுத்தாளர்களும் கவிஞர்களும் மொழிபெயர்ப்பாளர்களாக மாறினார்கள். அதனால்தான் ஷேக்ஸ்பியர், தாந்தே, ஹோமர் மற்றும் ஃபாக்னர் முதல் அனைத்து சிறந்த அமெரிக்க எழுத்தாளர்களின் படைப்புகளுக்கும் எங்களிடம் அற்புதமான மொழிபெயர்ப்புகள் இருந்தன. பிஞ்சனின் Gravity’s Rainbow நாவலின் முதல் மொழிபெயர்ப்பு உண்மையிலேயே அற்புதமாக இருந்தது.
திர்ல்வெல்: மேலும் தஸ்தாயெவ்ஸ்கி?
கிராஸ்னஹோர்காய்: ஆமாம். தஸ்தாயெவ்ஸ்கி என்னை ஆழமாக பாதித்தவர் —அவருடைய நடை (style) அல்லது கதைகளுக்காக அல்ல. அவருடைய கதாபாத்திரங்களுக்காக. White Nights நாவலின் கதைசொல்லி உங்களுக்கு நினைவிருக்கிறதா? அந்த நாயகன், The Idiot நாவலில் வரும் மிஷ்கினைப் போலவே இருப்பான், ஒருவகையில் மிஷ்கின் ஆதிவடிவம். வெண்ணிற இரவுகள் (White Nights) நாவலின் கதைசொல்லிக்கும், அசடன்(idiot) நாவலின் மிஷ்கினுக்கும் நான் தீவிர ரசிகனாக இருந்தேன்—அவர்களின் தற்காப்பற்ற தன்மைக்காக. ஒரு தற்காப்பற்ற தேவதையைப் போன்ற கதாபாத்திரம். நான் எழுதிய ஒவ்வொரு நாவலிலும் அத்தகைய ஒரு கதாபாத்திரத்தைக் காணலாம்— Satantango -வில் வரும் எஸ்டிகே அல்லது Melancholy -யில் வரும் வாலுஷ்காவைப் போல. அவர்கள் இந்த உலகத்தால் காயப்படுத்தப்பட்டவர்கள். அவர்கள் காயப்பட வேண்டியவர்கள் அல்ல. அவர்கள் இங்குள்ள அனைத்தும் மகிழ்ந்திருக்கும் உலகை நம்பினார்கள். நான் அவர்களை நேசிக்கிறேன். மேலும் அவர்கள் நம்பிக்கையாளர்கள் என்ற உண்மையை நான் மிகவும் மதிக்கிறேன். ஆனால் பிரபஞ்சத்தைப் பற்றிய, உலகத்தைப் பற்றிய அவர்களின் சிந்தனை முறை, அந்த அப்பாவித்தனம் மீதான நம்பிக்கை, எனக்கு சாத்தியமற்றது.
என்னைப் பொறுத்தவரை, நாம் விலங்குகளின் உலகத்திற்கு மிக அணுக்கமானவர்கள். நாம் விலங்குகள்தான், வெற்றி பெற்ற விலங்குகள், அவ்வளவுதான். ஆனாலும் நாம் மனித மையவாதக் கண்ணோட்டம் கொண்ட ஒரு உலகில் வாழ்கிறோம்—விலங்குகள், தாவரங்கள், கற்கள் ஆகியவற்றுக்கு ஒரு பங்குள்ள மனித உலகில் நாம் வாழ்வதாக நம்புகிறோம். இது உண்மையல்ல.

திர்ல்வெல்: அப்படியென்றால், உங்கள் வாழ்க்கைநோக்கை தூய பொருள்முதல்வாதம் என்று சொல்லலாமா?
கிராஸ்னஹோர்காய்: மன்னிக்கவும், அப்படி சொல்ல முடியாது. மிஷ்கினும் நிஜமானவர்தான்.
திர்ல்வெல்: கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள்.
கிராஸ்னஹோர்காய்: ஃபிரான்ஸ் காஃப்கா ஒரு மனிதர். அவர் ஃபிரான்ஸ் காஃப்காதான். அவருடைய வாழ்க்கை, அவருடைய படைப்புகளுடன். ஆனால் அவர் சிருஷ்டித்த கே., என்ற கதாப்பாத்திரம் விண்ணுலகில் இருக்கிறார். மேலும் என் நாவல்களில் வரும் சில கதாபாத்திரங்களும் அங்கே வாழ்கின்றன. உதாரணமாக, Satantango நாவலில் வரும் இரிமியாஸும், மருத்துவரும். Melancholy நாவலில் வரும் திரு. எஸ்தர், வாலுஸ்கா. என் புதிய நாவலில் வரும் பேரன்(baron). அவர்கள் முழுமையானவர்கள்—அவர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் நித்தியமான இடத்தில் இருக்கிறார்கள்.
மிஷ்கின் ஒரு கற்பனை கதாபாத்திரம் மட்டும்தான் என்று உங்களால் வாதிட முடியுமா? நிச்சயமாக முடியும். ஆனால் அது உண்மையல்ல. மிஷ்கின் வேறு ஒருவர் வழியாக, தஸ்தாயெவ்ஸ்கி வழியாக யதார்த்தத்திற்குள் நுழைந்திருக்கலாம். ஆனால் இப்போது நமக்கு, அவர் ஒரு நிஜமான மனிதர். அழிவற்ற படைப்புகள் என்று நாம் சொல்லும் படைப்புகளில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் சாதாரண நிஜ மனிதர்களிடமிருந்துதான் வந்திருக்கின்றன. இது ஒரு ரகசியமான செயல்முறை. இது உண்மை என்பதில் நான் முற்றிலும் உறுதியாக இருக்கிறேன். உதாரணமாக, நான் Satantango எழுதிய சில ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு மதுக்கடையில் இருந்தபோது, யாரோ என் தோளைத் தட்டினார்கள். அது Satantango -வில் வரும் ஹாலிக்ஸ்! நிஜமாகவே! நான் கேலி செய்யவில்லை! அதனால்தான் நான் எழுதுவதில் அதிக கவனமாக இருக்கிறேன். உதாரணமாக, War and War நூலின் அசல் பிரதி, நான் வெளியிட்ட வடிவத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது. அசல்பிரதியில் முதல் நூறு பக்கங்கள் கோரின் என்ற கதாப்பாத்திரத்தின் சுய அழிவை விவரித்தன. ஆனால் எதிர்காலத்தில் நான் அவரை உண்மையிலே சந்தித்தால், கையறுநிலையில் உள்ள அவருக்கு என்னால் உதவ முடியாமல் போய்விடுமோ என்று பயந்தேன். அவர் தனது சிறிய நகரத்தை விட்டு ஒருபோதும் வெளியேற மாட்டார் என்ற சாத்தியக்கூறை நான் பயந்தேன். அதனால்தான், நான் அவரை வெளியே வரவைத்தேன்.தனது வாழ்வின் இறுதிகட்டத்தில், ஒரு முறையாவது உலகின் மையத்திற்குச் செல்ல வேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார். (இது என் நாவலின் முதல்வடிவில் இல்லை). அவர் நியூயார்க்காக இருக்கும் என்று நான் முடிவு செய்திருக்கவில்லை. இது வழியாகத்தான் – ஒருவர் கடைசிவரை ஒரு ஊருக்குள்ளேயே வாழ்கிறார் என்ற கதையிலிருந்து- என்னை விடுவித்துக் கொண்டேன்.
திர்ல்வெல்: மனிதர்கள் இவ்வுலகில் உள்ள அனைத்தையும் தாங்கள் உருவகித்துக்கொண்ட வடிவிலேயே(Anthropomorphic) காண்கிறார்கள் என்று முன்பு ஒரு உரையாடலில் சொன்னீர்கள். அதைப்பற்றி நான் யோசிக்கிறேன். நாம் எழுதும் நாவல்கள் எந்த நெருடலும் இல்லாதபடி, மனிதமைய(anthropomorphic) படைப்புகள் மட்டுமாகவே எஞ்சுகின்றன என்று சில சமயம் எனக்குத் தோன்றும். ஆக்டோபஸ்கள் எங்கே? கடற்பாசிகள் எங்கே? உங்கள் நாவல்களில் எனக்குப் பிடித்தமான விஷயங்களில் ஒன்று, அவை, ’ மனித-மையம்’ என்ற குறுகிய நோக்கில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க முயற்சிப்பதுதான். ஆனால் அது ஒரு முரண்பாடாகவும் தோன்றுகிறது. அவை வேறு எப்படி இருக்க முடியும்?
கிராஸ்னஹோர்காய்: இது மிகவும் முக்கியமானது. நாவலின் கட்டமைப்பில் மனித-மைய நோக்கின்(anthropocentric) பங்கு அதிகமாக இருக்கலாம். அதனால் கதைசொல்லியின் பிரச்சனைதான் நாவலின் முதல் பிரச்சனையாக இருக்கிறது. அது என்றென்றைக்கும் அப்படியே நீடிக்கிறது. ஒரு நாவலிலிருந்து கதைசொல்லியை எப்படி அகற்ற முடியும்? எனது சமீபத்திய நாவலில் ஒவ்வொரு பக்கத்திலும் பலவகையான மனிதர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டிருக்கிறார்கள்—அது கதைசொல்லியைத் தவிர்ப்பதற்கான ஒரு வழி. ஆனால் இது ஒரு உத்தி மட்டுமே. நான் உங்களுடன் உடன்படுகிறேன்—நாவலின் கட்டமைப்பு மற்றும் அதன் பேசுபொருள் மனித மையமானதுதான். ஆனால், இன்னொரு விஷயம். எந்த சட்டகமும் இல்லாத பிரபஞ்சம்; சட்டகமும், மனிதனும் உள்ள பிரபஞ்சம்; இந்த இரண்டில் ஏதோ ஒன்றை தேர்வுசெய்யவேண்டுமென்றால் நான் சட்டகம் கொண்ட, மனிதனையும் உட்கொண்ட பிரபஞ்சத்தையே தேர்ந்தெடுப்பேன்.
இந்த பிரபஞ்சம் என்னவென்றே நமக்குத் தெரியாது. ஞானிகள் ’நாம் சிந்திக்கக் கூடாது’ என்பதற்கு நாம் அறியமுடியாத பிரபஞ்சத்தையே ஆதாரமாக எப்போதும் சொல்லிவருகிறார்கள்.. ஏனெனில், சிந்திப்பது உங்களை எங்கும் கொண்டு செல்வதில்லை. நீங்கள் தவறான புரிதல்களால் ஆன பிரம்மாண்டமான கட்டமைப்பு ஒன்றை உருவாக்குகிறீர்கள். அதுதான் கலாச்சாரம். நம் பண்பாட்டு வரலாறு என்பது மகத்தான சிந்தனையாளர்களின் பிழையான புரிதல்களின் வரலாறுதான்.. எனவே நாம் எப்போதும் பூஜ்ஜியத்திலிருந்து மீண்டும் தொடங்கி, வேறு விதமாகச் செயல்பட வேண்டும். ஒருவேளை அந்த வழியில் புரிந்துகொள்ளாவிட்டாலும் குறைந்த பட்சம் மேலும் தவறான புரிதல்களை ஏற்படுத்தாமல் இருப்பதற்கு உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கலாம். இந்தக் கேள்வியின் மறுபக்கம் இதுதான்—முழு மனித கலாச்சாரத்தை நிராகரிக்கும் அளவுக்கு நான் உண்மையிலேயே அவ்வளவு தைரியமானவனா? மனித படைப்புகளில் உள்ள அழகைப் போற்றுவதை நிறுத்துவதா? மனித கலாச்சாரத்தையும், படைப்பாக்கத்தையும் முழுக்க ‘தேவையில்லை’ என்று சொல்வது மிகவும் கடினம்.
திர்ல்வெல்: நீங்கள் இன்னும் நாவல்கள் எழுதுகிறீர்கள் அல்லவா?
கிராஸ்னஹோர்காய்: ஆம். ஆனால் அது ஒரு பிழையாக இருக்கலாம். நான் நமது கலாச்சாரத்தை மதிக்கிறேன். மனிதனின் உயர்நிலை வெளிப்பாட்டின் ஒவ்வொரு வடிவத்தையும் நான் மதிக்கிறேன். ஆனால் இந்தக் கலாச்சாரத்தின் வேரே போலியானது. நாம் எதுவும் செய்யாவிட்டாலும், இங்குள்ள எல்லாம் எப்படியோ தொடர்கிறது. ஒருவேளை இதுதான் மிக முக்கியமான விஷயமாக இருக்கலாம். சாராம்சம் பற்றியோ, ”அது என்ன?” என்பது பற்றியோ, அதுபோன்ற பிற கேள்விகளையோ பற்றியோ சிந்திக்காதபடி அனைத்தும் அப்படியே தொடர வேண்டும்.
திர்ல்வெல்: எழுதுவது, வரைவது என எல்லா கலை வடிவங்களும் ஒருவகையான சடங்காக, இறையியல் இல்லாத சடங்காக மாற வேண்டும் என்பது போலவா?
கிராஸ்னஹோர்காய்: எழுதுவதை ஒரு சடங்கை நிகழ்த்துவதுபோல எண்ணிப்பார்க்கலாம்— சொல்லுக்கு பின் சொல், வாக்கியத்திற்கு பின் வாக்கியம் என மீண்டும் மீண்டும் நிகழ்வது. நான் சொல்வது இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உருவான செவ்வியல் புதுமைவாத மரபு(Classical Avant-garde) செய்ததைப்போல அல்ல. பேசுபொருளை(content) முழுக்க கைவிட்ட அந்த மரபைச்சேர்ந்த நல்ல கலைஞர்கள்(உதாரணம்: தாதா(Dada)) எதையுமே கலாபூர்வமாக அடையவில்லை, தோல்வியடைந்த மேதமை என்றே அந்த மரபை சொல்லலாம். ஆனால் எழுதுவதை நீங்கள் செய்யும் ஒரு சடங்காக நினைத்தால், அதே நேரத்தில் உங்களையும் உங்களால் பார்க்க முடிந்தால், நீங்கள் இங்கே பூமியில் இருக்கிறீர்கள், சொல்லுக்கு அடுத்து சொல் என்று எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்… ஒரு புத்தகமாக ஆகிவிடுகிறது. கொஞ்சம் நிறுத்துகிறீர்கள். புத்தகத்தை மூடுகிறீர்கள். பிறகு நிரம்பாத பக்கங்களைக் கொண்ட இன்னொரு புத்தகத்தைத் திறக்கிறீர்கள். மீண்டும் எழுதுகிறீர்கள், மீண்டும் எழுதுகிறீர்கள், மீண்டும் எழுதுகிறீர்கள். சொல், அடுத்த சொல்…… வாக்கியம், அடுத்த வாக்கியம். மீண்டும் அடுத்த புத்தகம்… இது ஒரு சடங்கு. ஒருவேளை எழுத்தைப் பற்றி நீங்கள் இப்படி நினைக்காமல் இருக்கலாம். ஆனால் உங்கள் எழுத்துமுறை நான் விவரித்தபடி அமைந்திருக்கலாம்.
ஆனால், இந்த இடத்தில்தான் நாம் வாசகர்களை நினைவில் கொள்ள வேண்டும். ஏனென்றால், வாசகர்களுக்கு நம் எழுத்துக்கள் தேவை என்று நான் நம்புகிறேன். மேலும், அபுனைவுகள் நூல்களை, நாவல்களை, கவிதைகளை எழுதும் இந்தச் சிறிய வெளியில் வாசகர்களுக்கும் ஒரு இடம் இருக்கிறது. கலைஞனுக்கு அந்த பரிவுணர்வு மிக முக்கியமானது. வடிவங்களை சிருஷ்டிக்கும் எழுத்தாளர்களுக்கும் அந்த வடிவங்கள் தேவைப்படும் வாசகர்களுக்கும் பொதுவான சாராம்சம் கண்டடையப்பட வேண்டும். இந்தவகையான எண்ணங்கள் வழியாக கலை இயங்கும் இந்த மிகச்சிறிய வெளியை ஓரளவு புரிந்துகொள்ள முடிகிறது, ஆனால் விஷேஷ தளத்தில் இவையெல்லாம் முற்றிலும் அர்த்தமற்றதாகத் தோன்றும். அப்படியென்றால், ஒருவேளை இந்த பிரபஞ்சம் முழுவதும் இது போன்ற சிறிய வெளிகளால் நிறைந்திருக்கலாம்—ஒவ்வொன்றும் தமக்கெனத் தனிப்பட்ட காலம், சாராம்சம், கதாபாத்திரங்கள், படைப்பு, நிகழ்வுகள் எனப் பலவற்றைக் கொண்டிருக்கலாம். ஒவ்வொரு வெளியும் அதற்கேயான பிரத்யேக வழியில் காலத்தை புரிந்துகொள்ளும். நாம் இங்கே, இந்த பிரபஞ்சத்தில், நமது சிறிய மனித வெளிக்குள் இருப்பது போல.
திர்ல்வெல்: பிரம்மாண்டமான, விரிவான வாக்கியங்கள் கொண்ட உங்கள் மொழிநடையை எப்படி கண்டடைந்தீர்கள்?
கிராஸ்னஹோர்காய்: மொழிநடையை கண்டடைவது எனக்கு எப்போதுமே கடினமானதாக இருந்ததில்லை. ஏனென்றால் நான் அதைத் தேடியதே இல்லை. நான் தனிமையில் வாழ்ந்தேன். எனக்கு எப்போதுமே நண்பர்கள் இருந்தார்கள். ஆனால் என் வாழ்க்கையின் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒருவர் என்ற வகையில் மட்டுமே. நாங்கள் ஒருவருக்கொருவர் தன்னுரைகளாக(monologue) மட்டுமே பேசிக்கொள்ளும் ஒரு உறவு இருந்தது. ஒரு நாள் நான் மட்டுமே பேசுவேன். அடுத்த நாள், அவர் மட்டுமே பேசுவார். ஆனால் அந்த உரையாடல் ஒவ்வொரு முறையும் வித்தியாசமாக இருந்தது. ஏனென்றால் நாங்கள் எதிரில் கேட்டுக்கொண்டிருப்பவரிடம் முக்கியமான ஒன்றைச் சொல்ல விரும்பினோம். நீங்கள் மிகவும் முக்கியமான ஒன்றைச் சொல்ல விரும்பினால், அது மிகவும் முக்கியமானது என்று உங்கள் நண்பரை நம்பவைக்க விரும்பினால், உங்களுக்கு முற்றுப்புள்ளிகள் தேவையில்லை. மாறாக மூச்சும் தாளமும் தேவை—தாளம்(rhythm), தாளவேகம்(tempo) மற்றும் இசைமை(melody). இது ஒரு திட்டமிட்ட தேர்வு அல்ல. இந்த வகையான தாளமும், இசைமையும் வாக்கிய அமைப்பும் என் எதிரே அமர்ந்து கேட்டுக்கொண்டிருக்கும் நண்பரை நம்பவைக்க வேண்டும் என்ற விருப்பத்திலிருந்துதான் உருவாகிவந்தது.

திர்ல்வெல்: அது ஒருபோதும் இலக்கியம் சார்ந்ததாக இருந்ததில்லையா? பிரௌஸ்ட் அல்லது பெக்கெட் போன்ற எழுத்தாளர்களின் மொழிநடையுடன் ஒருபோதும் தொடர்புடையதாக இருந்ததில்லையா?
கிராஸ்னஹோர்காய்: ஒருவேளை நான் பதின்ம வயதில் இருந்தபோது இருக்கலாம். ஆனால் அது அவர்களின் வாழ்க்கையை நகல்செய்வதாகவே இருந்தது. அவர்களின் மொழிநடை அல்லது பாணியை போலிசெய்யவில்லை. எனக்கு காஃப்காவுடனான உறவு விஷேஷமானது. நான் அவரை மிகச் சிறு வயதிலேயே படிக்கத் தொடங்கினேன், ல The Castle போன்ற படைப்புகள் எதைப் பற்றியவை என்பதைப் புரிந்துகொள்ள முடியாத அளவுக்குச் சிறு வயதில். அதனால்தான் காஃப்காதான் என் முதல் எழுத்தாளர்—எழுத்தாளனாக புரிந்துகொள்ள முடியாத, ஆனால் ஒரு மனிதராக என்னை ஆச்சர்யப்படுத்திய ஒருவர். எனக்கு ஒரு மூத்த சகோதரர் இருந்தார். அவரைப் போலவே இருக்க விரும்பினேன். அதனால் அவருடைய புத்தகங்களைத் திருடிப் படித்தேன். எனக்குப் பன்னிரண்டு அல்லது பதிமூன்று வயதாக இருந்தபோது, குஸ்தாவ் ஜானூச் எழுதிய Conversations with Kafka என்ற நூல் என்னை மிகவும் கவர்ந்தது. அந்தப் புத்தகத்தின் மூலம், எனக்கு காஃப்காவுடன் விஷேஷமான உறவு உருவானது.
நான் சட்டக் கல்லூரியில் சேர வேண்டும் என்று என் தந்தை விரும்பினார். எனக்குக் கலையில் மட்டுமே ஆர்வம் இருந்தது—இலக்கியம், இசை, ஓவியங்கள், தத்துவம், எல்லாவற்றிலும், சட்டம் தவிர என்பது அவருக்கு தெரியும், நான் சட்டம் படிக்க மறுத்துவிடுவேன் என்பது அவருக்கு உறுதியாக தெரியும். ஆனால் நான் சரி என்று சொன்னேன். அவருக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஒருவகையில் நான் சரி என்று சொன்னதற்கு ஒரு காரணம், குற்றவியல் உளவியலைக் கையாள விரும்பியதுதான் என்று நினைக்கிறேன். அந்த நேரத்தில், எழுபதுகளின் முற்பகுதியில், அது ஹங்கேரியில் தடைசெய்யப்பட்ட அறிவியல்துறை. அது மேற்கத்தியது என்பதால் அது சந்தேகத்திற்குரியதாகக் கருதப்பட்டது. ஆனால் முக்கிய காரணமாக நான் நினைப்பது, காஃப்காதான். ஒருவேளை அதனால்தான் நான் சட்டம் படிக்க ஒப்புகொண்டேன் என்று நினைக்கிறேன்—காஃப்காவைப் போலவே இருப்பதற்காக.. நிச்சயமாக, மூன்று வாரங்களுக்குப் பிறகு அந்தச் சூழலை என்னால் தாங்க முடியவில்லை. நான் அங்கிருந்து வெளியேறிவிட்டேன்—சட்டக் கல்லூரியிலிருந்து மட்டுமல்ல, அந்த நகரத்திலிருந்தே.
தொடரும்..
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.



















