ஏ. கே. ராமானுஜன் கவிதைகள்

தமிழில்: ஷங்கர்ராமசுப்ரமணியன்

1929 ஆம் ஆண்டு மைசூரில், தமிழும் கன்னடமும் சகஜமாகப் புழங்கும் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர் ஏ கே ராமானுஜன். இந்தியப் பண்பாட்டை ராமாயணம் போன்ற காப்பியங்களின் வாயிலாக அணுகாமல் நாட்டார் இலக்கியங்கள், பெண்கள் சொல்லும் கதைப்பாடல்கள் வழியாக ஆய்வுசெய்தது தனது நிலைப்பாடுடன் தொடர்புடையது என்று உரைப்பவர். கன்னட பக்திக் கவிதைகளை இவர் மொழிபெயர்த்ததற்கும் வேதங்களை மொழிபெயர்க்காததற்கும் தன் நிலைப்பாட்டையே காரணமாகச் சொல்கிறார். சமஸ்கிருதமயப்பட்ட இந்துக் கலாசாரம் என்பது ஆண்வயப்பட்டதும், படிநிலைகளை வலியுறுத்துவதுமாகும் என்று கூறியுள்ள ஏ கே ராமானுஜன், இந்தியாவின் பிராந்திய மொழிகள்தான் ஜனநாயகவயப்பட்ட, ஏற்றத்தாழ்வு படிநிலைக்கு எதிரான, கீழிருந்து இந்தியாவைப் பார்க்கும் அணுகுமுறையை அளிக்கிறதென்பது அவரது கருத்து. நாட்டாரியல் தொடர்பிலான அவரது விருப்பமும் அதிலிருந்து வடிவமைக்கப்பட்டதே என்கிறார். தனது நாட்டாரியல் ஆய்வு பெண்கள், குழந்தைகளின் உலகத்தைப் பிரதிநிதித்துவம் செய்வது என்று கூறும் ராமானுஜனின் நவீன கவிதைகளில் காணக்கிடைக்கும் எளிமை,வன்மை, மிகைத்தொனி அற்ற எதார்த்தம், அடங்கிய தொனி இவரது மேற்சொன்ன அணுகுமுறையின் நீட்சியாகவும் பார்க்கும் சாத்தியங்களை அளிப்பவை. மதுரையில் ஒரு வெள்ள நாள் பற்றிய இவரது கவிதையில் வைகையை ஏ கே ராமானுஜன் மிக இயல்பாக அதன் புராணச்சுமையிலிருந்து அன்றாடத்தின் உக்கிரத்துக்குள் விடுவித்துவிடுகிறார் இப்படித்தான். 

உறைகாட்சி

மதிய உணவுக்குப் பிறகு
அவள் கிளம்பிப் போய்விட்டாள்
நான் கொஞ்சநேரம் வாசித்துகொண்டிருந்தேன்.
திரும்ப
பார்க்கத் தோன்றியது.
பாதி சாப்பிட்டு மிச்சமிருந்த
சாண்ட்விச்
ரொட்டி
இலைக்கோசு மற்றும் சலாமி,
அனைத்துமே
அவள்
கடித்த வடிவைக் கொண்டிருக்கின்றன.

ஒரு ஆறு

மதுரை,
கோயில்கள் மற்றும் புலவர்களின் நகரம்
நகரங்களையும் கோயில்களையும் பாடியவர்கள்:

ஒவ்வொரு கோடையிலும்
பூசப்பட்ட திட்டுகள் ஆங்காங்கே துலங்கும் பாலம்
துருப்பிடித்த சட்டகங்களுடன் நிற்கும்
மதகுகளை அடைக்கும்
காய்ந்த புல் மற்றும் பெண்களின் முடிச்சுருளோடு.
வண்டித்தடங்களைக் காண்பித்துக்கொண்டு
மணலில் ஒரு துளியாக வரள்கிறது,
ஈரப்பாறைகள், உறங்கும் முதலைகளாய் பளபளக்கின்றன
உலர்ந்த பாறைகள்
சூரியனுக்குக் கீழே இளைப்பாறும்
சவரம் செய்யப்பட்ட எருமைகள்.

புலவர்கள் வெள்ளங்களைப் பற்றியே பாடினார்கள்.
மதுரை வெள்ளத்தைப் பார்க்க
ஒருநாள் போயிருந்தான்.
நீர்
அங்குலம் அங்குலமாக உயர்வது பற்றி
நீராழி மண்டபத் துறைகளில்
ஏறிக்கொண்டிருக்கும்
படிகளின் எண்ணிக்கையைத் துல்லியமாகச் சொல்லி
மக்கள் எல்லா இடத்திலும் பேசிக்கொண்டிருந்தனர்
வெள்ளத்துநீரில் மூன்று கிராமத்துக் குடிசைகள்
ஒரு நிறைமாத சூலி
கோபி மற்றும் பிருந்தா என்று பெயரிடப்பட்ட
ஒரு ஜோடிப் பசுக்கள்
மிதந்து வந்ததையும்,
புதிய புலவர்கள் பழைய புலவர்களை
இன்னும் மேற்கோள் காட்டுகின்றனர்
ஆனால் ஆற்றில் மூழ்கிய
அந்தக் கர்ப்பவதியைப் பற்றி
வசனத்தில் யாரும் பேசவேயில்லை.
அவளுக்குள் இருந்த இரட்டைக் குழந்தைகள்
பிரசவத்துக்கு முன்னாலேயே
காலிச்சுவர்களை உதைத்துக்கொண்டிருந்திருக்க வேண்டும்.

அவன் சொன்னான்:
ஆண்டுக்கு ஒரே ஒரு முறை
கவிதைகளைத் தூண்டுமளவுக்கு
தண்ணீர் நிரம்பியுள்ள ஆறு
வெள்ளம் தொடங்கிய முதல் அரைமணி நேரத்தில்
மூன்று கிராமத்துக் குடிசைகள்
கோபி மற்றும் பிருந்தா என்ற பெயருள்ள
ஒரு ஜோடிப் பசுக்கள்.
வித்தியாசப்படுத்திக்காட்ட
வெவ்வேறு நிறங்களில்
அரையாடைகள் அணிவிக்கப்பட்டு
மச்சமே உடல்களில் இல்லாத
ஒரே சாயலில் இருக்கும் இரட்டைக் குழந்தைகளை
பிரசவிக்கவிருந்த ஒரு நிறைமாத சூலியையும்
இழுத்துப் போகிறது.


இரவு முழுக்கவும்

தெருவிளக்கினடியில்
பின்னல் வேலைசெய்தபடி
ஒன்றுமே பேசாமல்
அமர்ந்திருக்கும் மனைவியிடம்
தெருமூலையில் அவன் கூப்பாடிட்டபடி
இருக்கிறான்
பச்சைப் பாம்புகளைப் போல
இரவு முழுக்க மின்னல்கள்
வானத்தை நாவால் தீண்டுகின்றன
புழக்கடையில்
குப்பை டப்பாக்கள் உருள்வதைப் போல
இடியும் உறுமுகிறது
மழையோ பெய்யவில்லை
இரவு முழுவதும்
பல வீடுகளில்
கரங்கள்
உடலின் மீது விளையாடுகின்றன
உஷ்ணத்தால் வியர்வை நதிகள்
ஊறிப்பெருக்கெடுக்கின்றன
மழை பெய்யவேயில்லை.
வானம் கருக்கவில்லை
சாம்பல் மட்டுமே.
அவர்களிடையே
கருக்கக்கூட இல்லை.

குழந்தைகள், கனவுகள், தேற்றங்கள்

நெருக்கமாகப் பிடித்து தழுவி
முத்தமிட்டு பெயர் வைக்காவிட்டால்
குழந்தைகள்
தொலைந்து போய்விடுபவை
கனவுகளைப் போன்று.

நினைவுக்காக அவற்றின் வால்களில்
முடிச்சிட்டு வைக்காமல் இருந்தால்
கவிதைகள்
தொலைந்து போய்விடுபவை
கனவுகளைப் போன்று.

கவிதைகள் என் தந்தையாரின்
நள்ளிரவுத் தேற்றங்களைப் போன்றவை
அவற்றுடன் சம்பாஷிக்காவிட்டால்
அவற்றின் எதிர்த் தேற்றங்களுடன்
நடக்கும் சண்டையில் பங்குகொள்ளாமல் போனால்
இறந்த மொழிகளைப் போல
தொலைந்து போய்விடுபவை.

அவர்களை முகர்ந்து
சீக்கிரமே அரையாடைகளை மாற்றி
புட்டங்களில்
டால்கம் பவுடரைத் தெளிக்காவிட்டால்
தொலைந்து போய்விடுபவை.

சடலப்பரிசோதனை

அவள்
நிர்வாணமாய்
வரவேற்பறையில்
வெளிக்கிருந்து வைத்துவிட்டு
கழிப்பறையில் அமர்ந்துகொண்டு
குழாய் பழுதுபார்க்க வந்தவனை
அவள் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தாள்.

அவள் மரித்துப்போன ஆண்டில்
தன்மீது துணிகளின் ஸ்பரிசத்தையே
அவளால் தாங்கிக்கொள்ள இயலவில்லை.
வீட்டைவிட்டு விரைவாக வெளியேறிய
குழாய் பழுதுபார்ப்பவன்
தலையில் கைவைத்துக்கொண்டு சொன்னான்
‘நம் எல்லோருக்கும் இதுதான் நிகழுமா?’

வாரத்துக்கு ஒருநாள் அவளிடமிருந்து வரும் கூப்பாடுகளையும்
அதைத் தொடரும் மௌனங்களையும் கேட்டு
சிற்றறண் போல குடியிருப்புகள் சூழ்ந்த இடத்தில்
கீழ்தளத்தில் வசிப்பவர் பீதியுற்றிருந்தார்.
.
சுருட்டி முடிந்த நரைகொண்டை
கண்ணாடி அணிந்த முகம்
ஒரு புள்ளியியல் நிபுணர்
எண்கள் மற்றும் வரைபடங்களுடன்
தனியே வாழ்ந்தவள்
ஒரு பூனைகூட இல்லாமல்.

இன்று அவளது வழக்கறிஞர்
அவளது விருப்பங்களுக்கு விசுவாசமாக
அறைகலன், உலோக ஜாடி மற்றும் சீன சூப் கிண்ணங்கள்
ஒரு தொலைக்காட்சி மற்றும் விசிஆரை
தலா சில டாலர்களுக்கு விற்றார்.

நானோ எனக்குத் தேவையில்லாததை
வாங்காமல் என்னைத் தடுத்தாட்கொள்ள வேண்டியிருந்தது.
ஆனாலும் ஒரு செம்புத் தாம்பாளத்தையும்
மூன்று தரைவிரிப்புகளையும்
என்ன செய்யப்போகிறேன் என்றே தெரியாமல்
வாங்கிக்கொண்டேன்.

அவள் சடலம் ஆய்வகத்துக்குச் சென்றது
பொருள்களை விற்ற பணம்
பல்கலைக்கழக நிதியில் சேர்க்கப்படுமென்றார்
வழக்கறிஞர்.

அவளது தரைவிரிப்புகள் எனது படுக்கையறையில்
கிடக்கின்றன.
ஆமாம்!
அவளது எண்கள் எல்லாம் எங்கே போயின?

எண்பது வயதில் ரென்வார்

கீல்வாதத்தில்
ஒரு ஓவியனின் விரல்கள்
உறைந்துவிடும்போது
கோடுகள் மாறுகின்றன
மாரத்தான் ஓட்டக்காரனின் பாதம்
குதிகால் பலவீனத்தால் நெரிக்கப்படும்போது
அவன் ஆத்திரப்படும் பயிற்சியாளனாகிறான்
கணக்காளனின் மூளைக்கட்டி
எண்களை ஆடச்செய்யும்போது
நம்பகத்தன்மை நடுங்குகிறது
ரீட்டா போன்ற அழகிக்கு
நினைவாற்றல் இழப்பால்
நரைகூடி
வரவேற்பறையில் கழிப்பறை தேவைப்படும்போதும்
ஒரு தூரிகையை
அவனது உறைந்த விரல்களில் சேர்த்துக்கட்டி
80 வயதில்
ரென்வார் வரைந்தான்.

மதுரை: இரண்டு அசைவுகள்

சாணம் பூசிய உடல்
சூரியனில் மின்னிக் கொண்டிருக்க
தொழுநோய்க்காரனை மதுரையில் பார்த்தேன்,
ஒரு நூலில் கட்டிய நண்டோடு
அவன் பிணைக்கப்பட்டிருந்தான்.

அந்த நண்டு
தனது ஆரக்கால்களால்
உறுப்பை அசைப்பதை
ஒரேயொரு முறைதான் பார்த்தேன்
அவனது அரைக்கையின் நுனியும்
ஒரேயொரு முறை அசைந்ததையும்.

நான் உணர்ந்தது குற்றவுணர்வு அல்ல,
அருசி வெறுப்பு நேசம் எதுவும் அல்ல
வஸ்துக்களுக்கு நடுவில்
ஓர் அ-சலன நிலை.

அவனுக்குப் பின்னால் இருந்த
உடைந்த தூணில்
மூக்கற்ற ஒரு நாட்டியக்காரியின்
புடைப்புச் சிற்பம்: நன்கு பரிச்சயமான
விடையிலிருந்து எழுப்பப்பட்ட
கேள்வி.

அவள் அசைந்தாள்
நான் பார்த்தேன்
அது எனக்குத் தெரியும்
ஆனால்,
மது விருந்துகளிலோ
வகுப்பிலோ
அதை எப்படி நிருபிப்பது
என்று நினைத்து நடுங்கினேன்.

நாட்டியக்காரி
சத்தங்களின் உலகோடு கட்டப்பட்டவள்
அசையாமலே அவள் நகர்கிறாள்
வாழ்க்கையில் எதுவும் நகரவியலாது
என்பதைப் போல.

000

ஷங்கர்ராமசுப்ரமணியன், தமிழில் எழுதிவரும் கவிஞர், விமர்சகர். ‘இகவடை பரவடை, நிழல் அம்மா, ஆயிரம் சந்தோ‌ஷ இலைகள், கல் முதலை ஆமைகள் முதலிய கவிதைத்தொகுதிகள் வெளிவந்துள்ளன. பிறக்கும்தோறும் கவிதை, நான் பிறந்த கவிதை, நினைவின் குற்றவாளி  ஆகிய கட்டுரைத் தொகுப்புகளையும்  எழுதியுள்ளார். விக்ரமாதித்யன் கவிதைகள் ,‘அருவம் உருவம்: நகுலன் 100’ உள்ளிட்ட தொகுப்பு நூல்களின் ஆசிரியர்.

தமிழ் விக்கியில் 


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

உரையாடலுக்கு

Your email address will not be published.

கடந்தவை

திரட்டு

சேகரம்

Go toTop

Don't Miss