பிணவறை பிரேதத்தைக் காதலிப்பவனின் மனவறை குறிப்புகள் : தாமரைபாரதி

அழுகிய சடலத்தை
அழகிய உடலமெனக்
கருதியிருந்தேன்
பின்னொரு தினம்
மனத்தருகே வந்த தந்தப் பிணம்
பிணத்தைக்கொண்டு
என்ன செய்யலாம்
அதன் மீது
வாசனை திரவியங்களை
தெளிக்கலாம்
அதனருகே
வாசனை வத்திகளைக்
கொத்து கொத்தாக
ஏற்றிப் புகைய விடலாம்
அதைச் சுற்றி
உதிரி மலர்கள்
சிலவற்றைத்
தூவலாம்
மல்லாந்து வானம்
வெறிக்க
ஒரு பெரிய
ரோஜா மாலையை
அணிவிக்கலாம்
இவை எதையுமே நான் செய்யவில்லை
இவை எதுவுமே தேவைப்படாத
அப்படியொரு பிணக் களை
அப்பிணத்திற்கு
பாவம் அதற்கு
என்னைத் தவிர யாருமில்லை
அல்லது
என்னுடன் சேர்த்து
எல்லோரும் இருந்தார்கள்
எனவே இழவுச் செய்தியை
யாருக்கும் சொல்ல வேண்டிய
அவசியம் இல்லாமல் போய்விட்டது
பிணத்தோடு
பேசினேன்
உண்டேன்
கோவில்களுக்குப் போனேன்
(நல்ல வேளை தெய்வங்கள்
முகஞ்சுளிக்கவில்லை)
ஷாப்பிங் போனேன்
அதற்குப் பிடித்தது
எனக்குப் பிடிக்காதது
எல்லாம் வாங்கித் தந்தேன்
குறிப்பாக யாரும் பார்க்காத மறைவிடங்களுக்கு
அழைத்துச் சென்றேன்

பிணத்தோடு
வாட்ஸப்பில் ,
மெசஞ்சரில்
ஃபேஸ்டைமில்
இண்ஸ்டா மெசஞ்சரில்
கூகுள் பே,
ஃபோன் பே மெசெஞ்சரிலெல்லாம்
“ச்சாட்” டினேன்
பதிலுக்கு அதுவும்தான்
நாளடைவில்
இணைந்தும் வாழ முடியாத
பிரிந்தும் வாழமுடியாத கணத்தில்
ஏதேதோ காரணங்களுக்காக
பிணத்தோடு பிணக்கிட்டேன் சண்டையிட்டேன்
ஊடலுற்றேன்
கூடலுற்றேன்
பிணத்தைக் கூடுதல்
தடை செய்யப்பட்ட பிரதேசத்தில்
நாங்கள் மட்டுமே
பிரேதப் புணர்ச்சியைப் புனிதமெனக் கண்டோம்
உயிருள்ளதைக் கூடுவதும்
உயிரல்லதைக் கூடுவதும்
எம்மைப் பொறுத்தவரை ஒன்றே
புணர்வில் முனகும்
பிணத்தைப் போல
பிற முனகுவதில்லை
பிணம் மனப்பதைப் போல
பிற ஒருபோதும் மனப்பதில்லை
வெகு முக்கியமாக
முயக்கத்தின் எல்லாச் சிதைவாக்கச்
செயல்பாடுகளையும்
பிணம் சகித்துக் கொள்வதைப்போல
பிற ஒருபோதும்
சகித்துக்கொள்வதில்லை
முத்தமிடுகையில்
இரத்தத்தை உறிஞ்சிக் குடிப்பதில்லை
அணைப்பின்போதோ
எலும்புகளை நொறுக்குவதில்லை
வில்ஹெல்ம் ரான்ட்ஜனின்
கதிர்களை உள்வாங்காத
எலும்புகளைக் கொண்ட பிணங்களை
எல்லாருக்கும் பிடிப்பதில்லை
எம்மைத் தவிர.
வாதையைக் காமமாக்கும்
வித்தையை பிணம்
அறிந்திருக்கவில்லை
ஆனால்
சித்ரவதையின்
அனைத்துப் பரிமாணங்களையும்
காதலாக்கும் வித்தையை
எல்லாப் பிணங்களுமே
அறிந்திருந்தன
அவ்வளவுதான்.
மீண்டும் மீண்டும்
பிணங்கள் பிணங்களைக்
காதலிக்க தொடங்குகின்றன.

அயிர்ப்புடை நெஞ்சம்


இரவிலுதிரும் பவழமல்லியின்
அடர்மணம் கமழும்
அவனது நிறம்
இத்தூக்கத்தைக்
கலைத்துக்கொண்டேயிருக்கிறது
நினைவின் பரிசுகளாகத்
தூங்க இயலா இரவுகளைத்
தந்துவிட்டுச் சென்றவன்
எங்கிருப்பான் இக்கணம்
செல்லங் கொஞ்சும்
வதன கனிகையர்தம் மஞ்சத்தில்
சயனித்திருப்பானோ?
அயிர்ப்புடை சஞ்சல
நெஞ்சத்தை இனியென் செய்வேன் ?

தூய விடம்


திரை தாண்டியும்
திரை விலக்கியும்
அமுத கலசங்களென
விம்முகின்ற மஞ்சள்
மெத்து முனைகளில்
கருந்திராட்சைக்
கனிகளிலூறிக்
கசியும் வெம்பால்
மோனாமிர்தம்
அருந்திச் “சா” வெனவா
சபித்துவிட்டுச்
செல்கிறாய்
சகி.

பிரதிகள்


நினைக்கும்
எல்லாக் கனிகளின்
மணத்தோடு
எல்லா மலர்களின்
மணத்தோடு
மலரும் மனோரஞ்சிதமாகக்
கடக்கும்
எல்லாரிலும்
மலர்வது
நீ தானா? !

தாமரை பாரதி

கவிஞர். கவிதை விமர்சகர். தபுதாராவின் புன்னகை (2019), உவர்மணல் சிறுநெருஞ்சி (2021), காசினிக் காடு (2023) ஆகிய மூன்று கவிதை தொகுப்புகள் வெளியாகியுள்ளன.


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

1 Comment உரையாடலுக்கு

  1. பிணவறை பிரேதத்தைக் காதலிப்பவனின் மனவறை குறிப்புகள்

    உங்கள் கவிதை மிகவும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது; ஒவ்வொரு வார்த்தையிலும் உடைந்த மனத்தின் உணர்வுகளும் சொல்ல முடியாத வேதனையும் தெளிவாக பிரதிபலிக்கின்றன. வாசிக்கும் போது அது வெறும் கவிதையாக இல்லாமல் வாழ்ந்து கடந்த அனுபவத்தின் சாட்சியாக உணரப்படுகிறது. சிதைந்த உறவுகளின் நினைவுகள் பலருக்குள் இன்னும் உயிரோடு இருக்கின்றன; ஆனால் அவற்றை சுமந்து வாழ்வதைவிட அதிலிருந்து பாடம் கற்று மீண்டும் எழுவதே உண்மையான மீளுதல். விடுவிப்பது தோல்வி அல்ல, தன்னை மீண்டும் கண்டடையும் துணிவு. மிகச் சிறந்த படைப்பு; மிகவும் ரசித்தேன்.

உரையாடலுக்கு

Your email address will not be published.

கடந்தவை

திரட்டு

சேகரம்

Go toTop

Don't Miss