வெண் துளைகள் 02: கார்லோ ரொவெல்லி

தமிழில் : சங்கரன் ரவிச்சந்திரன்

வெண் துளைகள் 01

நாம் நிலைப்படியை, உள்மைய விளிம்பை நெருங்குகிறோம். அதிவேகச் சுழற்சியால் மூன்று கோடி ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள இரும்புச் சட்டகங்களாலும் உணரக்கூடிய அளவிற்கு ‘ஒளிர்கின்ற’1 மாபெரும் கருந்துளையின் விளிம்பில் (horizon ) என்ன நிகழ்கிறது?

விளிம்பில் நிகழ்வதை அறிந்து கொள்ள சில தசாப்தங்கள் தேவைப்பட்டது. இது குறித்து ஒன்றுமே தெரியாமல் இருந்தது ஐன்ஸ்டைன் மட்டுமல்ல. வெகு காலத்திற்கு இயற்பியலாளர்கள் குழப்பத்திலேயே இருந்தனர். இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தான் விளிம்புகள் குறித்து சற்று பிடி கிடைத்தது. இன்னமும் குழம்பியிருக்கும் சில சகாக்கள் எனது துறையில் உண்டு ( இதை ஒரு விமர்சனமாகச் சொல்கிறேன்).

நாம் சென்று பார்ப்போம்.

தன்னுடைய கனவு ( the dream) என்னும் நூலில், கிரகங்கள் சூரியனை சுற்றி வருகின்றன என்பதை முதன் முதலில் உணர்ந்த, பதினேழாம் நூற்றாண்டின் வானியலாளரான ஜோஹான்னஸ் கெப்ள ( Johannes Kepler) , முற்றிலும் வேறானதொரு நோக்கிற்காக (perspective) எப்படி தமது அன்னை ஒரு பறக்கும் தூறுகோலில் (broomstick) தன்னையும் ஏற்றிக் கொண்டு சூரியக் குடும்பத்தைச் சுற்றிக் காட்டினார் என்று கூறுகிறார்.

கெப்ளவின் அன்னை மாந்திரீக குற்றச்சாட்டிற்காக திருச்சபையால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அவர் உண்மையிலேயே மந்திரவாதியா என்று நீங்கள் நினைத்தால் – தனது மகனின் வாதங்களால் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

கெப்ள, அநேகமாக மந்திரவாதியான தனது அன்னையின் தாக்கத்தினால், நேரில் சென்று பார்க்க விரும்பினார். நேரில் சென்று பார்ப்பது என்பதைத் தான் அறிவியல் என்கிறோம். தர்க்கத்தாலோ, கணிதத்தாலோ , கற்பனையாலோ, உள்ளுணர்வாலோ இதுவரை அறியப்படாதவற்றைச் சென்று பார்ப்பது. சூரியக் குடும்பத்தைச் சுற்றியோ, அணுக்களின் மையத்தையோ, உயிர்ச்செல்களின் உள்ளேயோ, நியூரான்களின் மடிப்புகளையோ , கடந்தகாலத்தின் அதிதொலைவுகளையோ, கருந்துளைகளது விளிம்புகளைத் தாண்டியோ…. மனக்கண்ணால் சென்று பார்ப்பது.

புவியில் நமது பார்வையின் எல்லையை அடிவானம் / விளிம்பு என்போம். கப்பலில் ஏறி அந்த எல்லையை நோக்கி பயணித்தால் , அதைக் கடந்தும் சென்று விடுவோம். அவ்வாறு அந்த விளிம்பைக் கடந்து செல்லும்போது – கரையிலிருப்பவரின் பார்வையிலிருந்து மறைவதைத் தவிர குறிப்பாக எதுவும் நிகழாது( கடல் பயண பண்பாட்டின் வழி கப்பலின் மேல்தளத்தில் கொண்டாட்டங்கள் நிகழலாம்).

இதோ ஒரு ஆச்சரியமான விஷயம்: கருந்துளையின் விளிம்பும் இவ்வாறே இருக்கும். விண்கலத்தில் பயணித்து நமது விருப்பப்படி விளிம்பு வரையிலும் செல்லலாம். விளிம்பைத் தொட்டு அதைத் தாண்டியும் செல்லலாம்.சிறப்பாக எதுவும் நிகழாது. நமது கைக்கடிகாரங்கள் மாற்றமின்றி அதே போல் இயங்கும். நம்மைச் சுற்றியுள்ள தொலைவுகளும் அவ்வாறே இருக்கும்.

என்ன ஒன்று, கடலில் உள்ள கப்பலில் உள்ள நம்மை தொலைதூரத்தில் இருந்து யாராலும் காண இயலாது. நாம் அவர்களது விளிம்பைத் தாண்டி இருக்கிறோம்‌. இங்கிருந்து அவர்களுக்கு ஏதேனும் ஒரு சமிக்ஞை – ஒளி சமிக்ஞை – அனுப்ப முயன்றால் அந்த ஒளிக்கதிரால் இங்கிருந்து தப்பிச் சென்று அங்கு சேர முடியாது. விளிம்பின் கூட்டுக்குள்ளேயே அது அடைந்து கிடந்தாக வேண்டும். தொலைதூர நண்பர்களை நம்மால் இனி தொடர்பு கொள்ள முடியாது. விளிம்பிற்குள் அதீத ஈர்ப்பு விசை காரணமாக ஒளி கூட தப்ப முடியாது.

பிறகு, கடிகாரம் நின்று விடும் – வெளி உடைந்து விடும் என ஸ்வார்ஸ்ஷில்டின் தீர்வுகள் ஐன்ஸ்டைனையும் பிறரையும் ஏன் குழப்பியது? உங்களால் விளிம்பைக் கடந்து செல்ல இயன்று அங்கும் அனைத்துமே இயல்பாக இருக்கிறது என்றால், ஸ்வார்ஷில்டின் தீர்வுகள் தவறா?

அது தவறல்ல. மாறாக, அவை விளிம்பிற்கு தொலைவில் இருப்பவரது பார்வையில் எழுதப்பட்ட தீர்வுகள். ஸ்வார்ஷில்டின் தீர்வுகளை விளிம்பிற்கு புறத்தே இருக்கும் வெளியின் வழிப்படம் எனலாம்.

வழிப்படங்களில் நமக்கு நன்கு தெரிந்த – சிறப்பான ஒன்று நிகழும். இரு தட்டுகளாக பூமியின் வழிப்படத்தை எடுத்துக் கொள்வோம்:

பூமத்திய ரேகை இந்த படங்களில் வெகு வித்தியாசமாகத் – உலகின் எல்லை எனத்தெரிகிறது. உண்மையில் அது உலகின் ஓரம் அல்ல‌ – தகிக்கும் வெப்பத்தைத் தவிர சிறப்பாக எதுவும் அங்கு நிகழ்வதில்லை. பூமியின் பரப்பு தட்டையானதல்ல, எனவே ஒரே வழிப்படத்தில் அதை அடைக்க முடியாது – மேலும் அது சரியாக படத்தின் விளிம்பில் நிறைவுறாது. காலவெளியும் தட்டையல்ல – ஒரே வழிப்படத்தில் அடைத்து விட முடியாது – மேலும், ஸ்வார்ஷில்டின் தீர்வுகளது விளிம்பில் அது நிறைவுறாது.

ஐன்ஸ்டைனுக்கும் மற்ற பிறருக்கும் இதுவே நிகழ்ந்தது: இடதுபுற வழிப்படத்தைப் பார்த்து பூமி மத்திய ரேகையில் முடிகின்றது என தவறான முடிவுக்கு வருவது போலவே ஸ்வார்ஸ்ஷில்டின் தீர்வுகளை தவறாகப் புரிந்து கொண்டனர். பல விஞ்ஞானிகள் தசாப்தங்களுக்கு இந்த தவறைச் செய்தனர் ( இன்னமும் இத்தவறை புரிகின்ற விஞ்ஞானிகள் – அவர்களுள் சிலர் முன்னணியினர் – இருக்கிறார்கள் )

இதை பிழையென்று எப்படித் தெரிந்து கொள்வது? கருந்துளையின் விளிம்பில் என்ன நிகழ்கிறது என நம்மில் எவரும் நேரில் கண்டதில்லை….

நாம் யாருமே அங்கு செல்லவில்லை. ஆனால், நம்மிடம் கோட்பாடு உள்ளது. விளிம்பில் என்ன நடக்கிறது என்பதைக் கணிக்க ஸ்வார்ஷில்டின் தீர்வுகளை அளித்த அதே சமன்பாடுகள் உதவுகின்றன. இந்த கணக்கீடுகளூம் அவ்வளவு கடினமானவையல்ல. பொது சார்புக் கொள்கையை கற்பிக்கையில் எனது மாணவர்களுக்கு இதையொரு பயிற்சியாகவே பயன்படுத்துவேன். ஆனால், முதன்முறையாக இந்த கணக்கீடுகளை புரிந்து கொண்டு செய்யவும், இது என்ன சொல்ல வருகிறது என்பதை அறியவும் சிறிது காலம் பிடிக்கும்.

முதலாமவர் டேவிட் ஃபின்குல்ஸ்டீய்ன் (David Finkelstein) , 1958 ( அப்போது எனக்கு இரண்டு வயது). ஃபின்குல்ஸ்டீய்ன் அரசியல், கலை மற்றும் இசை என பல்துறை போகிய மாபெரும் விஞ்ஞானி. ஆழ்துணிவு சிந்தனைத் திறனுடையவர். சிறிது காலத்திற்குப் முன்பு தான், 2016ல் நம்மை விட்டுப் பிரிந்தார். இறைதூதர்களது தாடியுடனும் துறவிகளது விலகலுடனும் தனது அந்திம காலத்தில் இருந்தவரைச் சந்தித்தது எனது நல்லூழ். புதிய பார்வைகளையும் சிந்தனைவழிகளையும் வெளிக்கொணர்ந்த மிக அரிய விஞ்ஞானிகளுள் ஒருவர். நமது கதையில் பின்னர் அவரை மீண்டும் சந்திப்போம்.

டேவிட் ஃபின்குல்ஸ்டீய்ன்

விளிம்பினது இயற்கையை விளக்கும் மிக அழகியதும் கூரியதுமான கட்டுரையை 1958ல் வெளியிட்டார். “ புள்ளித் துகளினது ஈர்ப்புப் புலத்தின் கடந்த – எதிர்கால சமச்சீரின்மை’. துறை சார்ந்ததாக இருந்தாலும் இந்த சொற்றொடரை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.ஏனெனில், இது உணர்த்தும் சிந்தனையே நமது கதையின் அடிக்கல் : ‘ கடந்த – எதிர்கால சமச்சீரின்மை’.

விளிம்பினை நெருங்கி அதைக் கடந்து செல்கையில், நமது கடிகாரங்கள் மட்டுப்படுவதில்லை, நம்மைச் சுற்றியுள்ள பருவெளிக்கும் விசித்திரமாக எதுவும் ஆவதில்லை என ஃபின்குல்ஸ்டீய்னின் கணக்கீடுகள் கூறின. அடிவானத்தினை நெருங்கிக் கடந்து சென்று நம் பார்வையிலிருந்து மறைந்து விடும் பெருங்கலத்திற்கு எதுவும் விசித்திரமாக நிகழாதது போலத்தான் இதுவும்.

பிறகு, ஸ்வார்ஸ்ஷில்டின் தீர்வுகளில் ஏன் கடிகாரங்கள் நின்று விடுகின்றன?

ஏனெனில் ஸ்வார்ஸ்ஷில்டின் தீர்வுகள் அப்பாலிருந்து காண்கையில் – அங்கு என்ன நிகழ்கிறது என்பதையே விளக்குகின்றன. நாம் விளிம்பினை நெருங்கும் ‌போது , தொலைநோக்கில் அனைத்து கடிகாரங்களும் மட்டுப்பட்டு நின்று விடுகின்றன. இதில் எந்த முரண்பாடும் இல்லை.

நாடுகள் வழியாக நாம் பயணித்துக் கொண்டிருப்பதாக வைத்துக் கொள்வோம். படிப்படியாக அஞ்சல் சேவைகள் மட்டுப்படுகின்றன. நாமும்

நமது தந்தைக்கு தினமும் கடிதம் அனுப்புகிறோம். நமது கடிதங்களை வேறுபடும் மிக நீண்ட இடைவேளைகளிலேயே தந்தை பெற்றுக் கொள்வார், ஏனெனில் அஞ்சல் சேவை மிகுந்த காலம் எடுத்துக் கொள்ளும் இடங்களில் இருந்து கடிதங்களை நாம் அனுப்புகிறோம். இனி, அவரது நோக்கில் நமது பயணம் மட்டுப்பட்டுள்ளதாகத் தெரியும்: துவக்கத்தில் ஒவ்வொரு நாளும் அவருக்கு கடிதங்கள் வந்திருக்கும். பிறகு நாட்கள், வாரங்கள் என நமது ஒரு நாளை அறிந்து கொள்ள கடிதத்திற்காக காத்திருக்க வேண்டும். அவரைப் பொறுத்தவரை நமது வாழ்க்கை மட்டுப்பட்டுள்ளது…

இனி, அஞ்சல் சேவையே இல்லாத பாலைவனத்தை நெருங்கி விட்டோம். அதற்குள் நுழைவதற்கு முன்பு இறுதியாக அனுப்பிய கடிதம் வெகு காலம் கழித்தே தந்தையிடம் சென்று சேரும். அவரைப் பொறுத்தவரை பாலையின் முனையில் நமது காலம் நின்றுவிட்டது. அவருக்கு இனியும் நம்மைக் காண முடியாத விளிம்பு அது. நம்மைப் பற்றி, ‘பாலையின் முனையில் அசைவற்றிருக்கிறார்கள்’ என்னும் தகவலை மட்டுமே அவர் பெற்றுக் கொண்டிருப்பார்.

இதைப் போன்ற ஒன்றே கருந்துளையின் விளிம்பைக் கடந்து செல்கையிலும் நிகழும். விளிம்பை நோக்கிச் செல்வதைக் காணும் தந்தை, நாம் விளிம்பை நெருங்க நெருங்க, ஒளி நம்மிடம் இருந்து விலகி அவரைச் சென்றடைய வெகுகாலம் எடுத்துக் கொள்வதால், கடிகாரம் சீராக மட்டுப்படுவதைக் காண்பார். விளிம்பின் முனையில் ஈர்ப்பு விசை காரணமாக ஒளியானது தப்பிக்க வழியின்றி நின்றாடும். தந்தை நம்மைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தால், நமது வாழ்வுத்தருணங்கள் சீராக மட்டுப்பட்டு , விளிம்பைக் கடக்கும் இறுதித் துளியில் உறைந்து நின்று விடும்.

பாலைவனத்திலோ கருந்துளையின் விளிம்பிற்கு அப்பாலோ , நாம் எப்போதும் போல இயல்பாகவே இருப்போம். ஆனால் எவ்வளவு காலம் காத்திருந்தாலும் நமது தந்தைக்கு எதுவும் இங்கிருந்து சென்று சேராது.

சுருக்கமாக, காலம் விளிம்பைக் கடந்து செல்பவருக்கு உறைந்து நிற்பதில்லை. தொலைதூரத்தில் இருந்து விளிம்பின் அருகில் என்ன நிகழ்கிறது என்பதைக் காண்பவருக்கே காலம் கணிசமாக மட்டுப்பட்டு மெதுவானதாகத் தோன்றுகிறது.

பாலையை நெருங்குகையில் கடிதம் அனுப்பும் ஒப்புமை மிக நல்ல ஒன்று. ஆனால் அது ஒரு பாதி மட்டுமே. பாலைப் பயணத்திற்கும் விளிம்புப் பயணத்திற்கும் ஒரு வேறுபாடு உண்டு. பாலைவனத்திற்குள் முழுதாகச் சென்று மீண்டு தந்தையை மீண்டும் சந்தித்தால் , கடைசியாக அவரைக் கண்ட பிறகான கால இடைவெளி இருவருக்கும் ஒன்றாகவே இருக்கும். அவருக்கு ஒரு வயது கூடியிருந்தால் நமக்கும் ஒரு வயது கூடியிருக்கும்.

கருந்துளை விளிம்பின் அருகில் வெளியிட ( temporal) சிதைவுகளில் இவ்வாறு நிகழாது. பின்வரும் நோக்கில் இவை உறுதியான உண்மைகள்: விளிம்பை நெருங்கி சிறிது நேரம் அங்கே சுற்றிவிட்டு திரும்பி வந்தால், நமக்கு அவரைவிட குறைவான காலமே செலவாகியிருக்கும். நம்மை விட அதிக விகிதத்தில் அவர் வயதடைந்திருப்பார்.

இது வெறும் பார்வைக் கோணம் அல்ல. ஈர்ப்பின் விளைவாக காலத்தின் உண்மையான திரிபு. இந்த நோக்கிலேயே , ஈர்ப்புவிசையின் வலிவற்ற நிலையை விட வலிமையான நிலையில் காலம் மெதுவாக நகரும் எனக் கூறப்படுகிறது. காலம் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு விகிதங்களில் நகர்கிறது.

காலவெளி வளைவானது என இதைக்குறித்தே சொல்கிறோம். பிய்த்துச் சென்ற முடிச்சுகளின் அருகே காணப்படும் நெசவின் வளைவு போல விளிம்பின் அருகில் குறைவான வளைவே காணப்படும்.

மொத்தத்தில், விளிம்பிற்கு அருகில் காலம் மட்டுப்படுகிறது என்பது தொலைநோக்கில் நம்மைக் காண்பவரின் பார்வையில் இருந்து மட்டுமே. அதே சமயம், நாம் திரும்பி வருகையில் தொலைவில் இருந்தவருக்குக் காலம் நம்மை விட அதிகமாகச் செலவாகியிருக்கும். மறுபக்கம், இன்னொரு நோக்கில், காலம் மட்டுப்படவில்லை: விளிம்பில் நின்றிருந்த நம்மால் காலத்தின் மட்டுப்படலை உணரமுடியாது. நமக்குக் காலம் இயல்பாகவே நகர்கிறது.

வாசகரே, ஒருக்கால், இந்த இடத்தில் உங்களுக்குக் கேள்வியொன்று எழலாம்: இத்தனை காலங்களுள் எந்தக் காலம் உண்மையானது? விளிம்பில் இருந்தவர்களுடையதா அல்லது தொலைநோக்கில் கண்டவருடையதா? இதற்காக பதில்: இரண்டுமே இல்லை. ஐன்ஸ்டைன் கொணர்ந்த புரட்சியின் அறிதல் என்பது, எந்தக் காலம் உண்மையானது என்ற கேள்வியே… அர்த்தமற்றது. இது பூமியின் எந்தப் பகுதி உண்மையில் மேலேயும் கீழேயும் இருக்கிறது என்று கேட்பதைப் போன்றது. குறிப்பிட்ட ஒரு இடத்தைப் பொறுத்தவரை, அந்த இடம் மேலும் பிற இடங்கள் கீழும் இருக்கும். வேறுபாடு என்பது நோக்கில் மட்டுமே. இதே போன்று, அண்டத்தின் ஒவ்வொரு இடமும் அதற்கான காலத்தைக் கொண்டிருக்கும். வெவ்வேறு இடங்கள் தமக்குள் சமிக்ஞைகளை அனுப்பிக் கொள்ளலாம் – விண்மீன் மண்டலத்தின் மையத்தில் உள்ள கருந்துளை நமக்கு அனுப்பிய சீறல் போல. ஆனால் காலம் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு விகிதங்களில் செல்லும். எனவே இதில் எந்தவொரு தனித்த காலமும் மற்றதை விட உண்மையல்ல.

வேறு சொற்களில், விளிம்பின் அருகில் காலத்தின் மட்டுப்படல் என்பது, வெவ்வேறு இடங்களில் காலம் எவ்வாறு செல்கிறது என்பதற்கிடையேயான தொடர்பை மட்டுமே சார்ந்தது. விளிம்பின் காலம் மட்டுப்படுகிறதா நிற்கிறதா என்பது தொலைநோக்கருடைய காலத்தைப் பொறுத்தே அமையும்.

உலகம் காலங்களின் இந்தத் தொடர்புகளால் நெய்யப்பட்டுள்ளது. பிரபஞ்ச நேரம் என்று தனியாக எதுவும் இல்லை. வெளியிடத்துவம் ( Temporality) என்பது பல்வேறு தனித்த காலங்களும் அவற்றிற்கிடையேயான சாத்தியமான சமிக்ஞை பரிமாற்றங்களும் உள்ள வலைப்பின்னல். மிக அருகில் என்றால் விளிம்பு ஒரு இயல்பான இடம். அதுவே வெகு தொலைவில் என்றால், அதுவே காலம் உறைந்து நின்றிருக்கும் இடம்.

இதுவே டேவிட் ஃபின்குல்ஸ்டீய்ன் கண்டறிந்தது.

மறுமலர்ச்சி(renaissance ) நோக்கின் மாபெரும் பிதாமகரான ஆல்பஹ்க்ட் ட்யூராவின் ( Albrecht Durer) புடைப்புச் சிற்பம் ஒன்றைப் பற்றி ஃபின்குல்ஸ்டீய்ன் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அந்தச் சிற்பத்தின் பெயர் Melancholia – குறியீடுகள் (Symbolism ) செறிந்த ஆழமான படைப்பு அது.

கருந்துளையின் விளிம்பை முதன்முதலில் நன்றாக விளங்கிக் கொண்டவர் மறுமலர்ச்சி பற்றியும் ஆல்பஹ்க்ட் டியூரா குறித்தும் எழுதும் திறன் கொண்டவரே ஒழிய ஒரு கணிதவியலாளர் அல்ல என்பது தற்செயல் அல்ல.

படைப்பில் நோக்கின் கலை ( art of perspective ) என்பது மறுமலர்ச்சி காலகட்டத்தில் கண்டறியப்பட்டது. நிதர்சனத்திற்கான நமது அத்தனை வழிகளும் நோக்குகளாலானது என்பதும் அதே காலத்தில் கண்டறியப்பட்டது. ஃபின்குல்ஸ்டீய்னின் வழி, புடைப்புச் சிற்பத்தின் தெளிவின்மை, நோக்குகளுக்கு இடையேயான தவிர்க்க முடியாத தெளிவின்மைகளை பிரதிபலிக்கிறது. அவரது வாசிப்பில், அந்தச் சிற்பம், வீணாக மெய்மையையும் அழகையும் தேடுவோரின் சலிப்பையே நிலைநிறுத்துகிறது. டியூரா மற்றும் ஃபின்குல்ஸ்டீய்னின் படி முழுமையை அடையமுடியாமை‌யே சலிப்பின் தோற்றுவாய்.

நான் அப்படி நினைக்கவில்லை. நேர்மாறாக, அது மென் தலைசுற்றலின் ஊற்று எனத் தோன்றுகிறது. பேரொளியின் தலைசுற்றல், நம்மை உள்ளடக்கிய நிதர்சனத்தின் சிக்கலான, எழுச்சியூட்டும் முரண்களினாலான அதிநுண் பின்னல்.

நோக்குகளை மட்டுமே நம்மால் கைக்கொள்ள முடியும். நிதர்சனம் என்பது உண்மையில் நோக்குகளின்றி வேறில்லை. பூரணமானது என எதுவும் இல்லை. நாம் எல்லைக்குட்பட்ட நிலையற்றவர்கள். எளிதாகவும் இனிதாகவும் உள்ளபடியே வாழ வேண்டும் என்பதற்கும் இதுவே மூலகாரணம்.

000

இங்கு கட்புலனாகும் ஒளிக்கதிர்களுடன் சேர்த்து புலப்படாத உயர் அதிர்வெண் கதிர்களையும் குறிக்கும்.

சங்கரன் ரவிச்சந்திரன்

எழுத்தாளர். மொழிபெயர்ப்பாளர். அறிவியல் எழுத்துக்களில் முதன்மையாக ஈடுபாடு கொண்டுள்ளார். கார்லோ ரொவெல்லியின் "இயற்பியலின் ஏழு சுருக்கக் குறிப்புகள்" இவருடைய மொழிபெயர்ப்பில் வெளியாகியுள்ளது.


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

உரையாடலுக்கு

Your email address will not be published.

கடந்தவை

திரட்டு

சேகரம்

Go toTop

Don't Miss