
நான் ஓர் காட்டில். எனது அருகில் அவர்.
“ஓர் கதை சொல்லலாமா?”
“அதிக கதைகளை நான் வாசித்துக் களைத்துள்ளேன்.” என நான் அவருக்குச் சொன்னேன்.
“நான் சொல்லப்போவது எழுதாத கதை.”
“சொற்களின் மீது எனக்கு இப்போது உவப்புகள் இல்லை.”
“நீங்கள் விருப்புகள் இல்லாதவரா?” என அவர் கேட்டார்.
“ஆம்.”
“ஏன்?”
“வாழ்வு சிறிது. விருப்புகள் என்பன குப்பைகள், தூசிகள். மரணம் என்பதே எமது நிலம்” என நான் அவருக்குச் சொன்னேன்.
“நீங்கள் தனியாக வாழ்கின்றீர்களா?”.
“இல்லை நான் பலரோடும் வாழ்கின்றேன்.”
“இப்போது?”
“ஓர் உடைந்த மரத்தின் அருகில்… யார் யாரோடும், யார் எதனோடும் வாழலாம். சரி, நீங்கள் ஓர் கதையைச் சொல்லமுடியுமா? …”
“உங்களோடு பேசியதில் எனது கதையை மறந்துவிட்டேன்.”
“மறந்த கதையை நினைவுபடுத்த முடியாதா?”
“சில பாத்திரங்கள் மங்கலாகத் தெரிகின்றன. எது கதை? அது எனக்குத் தெரியவில்லை. சில வேளைகளில் நான் கதை சொல்பவனா எனும் கேள்வியும் எனக்குள் வருகின்றது.”
“உங்களது மனம் வேரில்லாத மரமாக மாறிவிட்டது. தயவு செய்து மீண்டும் சொல்ல நினைத்த கதையை நினைக்கவும்…” என்றேன்.
“சரி, தாமதியுங்கள்…”
சில நிமிடங்களின் பின் அவர் “ஒரே ஒரு ஊரிலே.” என்றார்.
“இது பழைய கதைப்பாணி இல்லையா?”
“இல்லை புதிய பாணிதான். பழையதை மீண்டும் மீண்டும் சொல்லும்போது புதிதாகும் என்று எனது அம்மாவின் பாட்டன் சொன்னதாக ஞாபகம்”
“இந்த ஊரில் ஒரு அரசர் இருந்தாரா?”
“இல்லை எண்ணமுடியாத பிணங்கள் இருந்தன.” எனும்போது அவரது விழிகள் கலங்கின.
“உயிரோடு வாழ்ந்தவர்களது நிலை…?”
“இவர்களது இல்லங்கள் போரில் கருகியதால், சவப்பெட்டிகளில்தான் வாழ்ந்தார்கள்.”
“சவங்களை அடக்கும் பெட்டிகள் அதிக விலை அல்லவா?”
“இல்லை, இந்தப் பெட்டிகளை அவர்கள் வாங்குவதில்லை. கத்தோலிக்கச் சுடலை நிலங்களைத் தோண்டி அங்கு புதைக்கப்பட்டவைகளை எடுப்பர்.”
“ எலும்புகள்?”
“அவைகளை விலங்குகளின்முன் வீசுவர். ஆனால் பலர் தமக்காக எடுக்க அவதிப்படுவதைக் கண்டுள்ளேன்.”
“இந்த ஊர் உள்ள தேசம்?”
“அனைத்துத் தேசங்களிலும் இத்தகைய ஊர்கள் உள்ளன.”
“தொடருங்கள் கதையை.”
“சில பிணங்கள் உயிரோடு இருக்கும் என்ற நம்பிக்கையில் நான் பிணங்களின் மீது நடந்தேன். உண்மை… பிணங்களிற்குள் எனது கால்கள் புதைந்தன. எலும்புகளாக இருந்தன அதிக உடல்கள். அவைகள் ஆண்களதா அல்லது பெண்களதா என்பது எனக்குத் தெரியவில்லை.”
“ஓர் காரணம் இல்லாமல் நீங்கள் இந்தப் பிணங்களது நிலத்தில் நடந்தீர்களா?”
“ஆம், காரணம் உள்ளது. நான் எனது காதலியைத் தேடினேன். அவள் எங்கும் இருக்கலாம்.”
“உங்களது உடலில் முதுமை தெரிகின்றது.”
“உண்மைதான். எனது ஆன்மா மிகவும் இளமையானது.”
“உங்களது வாழ்வில் ஓர் காதலி மட்டும் இருந்தாளா.?”
“இல்லை எனக்குப் பல காதலிகள் இருந்தனர். வாழ்வைச் செழுமையாகச் சமைப்பது காதல்களே.”
“எனது வாழ்விலும் சிலரே இருந்தனர். முதல் காதலி தூரத்தில் வாழ்ந்ததால் நான் இங்கு அழைத்து வந்தேன். சில தினங்களின் பின் அவள் வேறு ஓர் ஆணுடன் தப்பி ஓடினாள். எனது வங்கிக் கணக்கும் மூடப்பட்டது.”
“அவள் மீது உங்களிற்குக் கோபம் வந்ததா?”
“இல்லை, உடலில் கதைகள் எப்போதுமே மர்மமானவை. இந்த மர்மங்களில் எனக்கு எப்போதுமே விருப்பம் இருந்தது.”
“சரி, பிற காதலிகள்?”
“அவள்கள் விபச்சாரிகள்தாம். மிகவும் நேர்மையான இளம் பெண்கள். உடல்களை விற்பவர்கள்தாம், ஆனால் உள்ளங்களைக் கடிக்கும் காயங்களை உடைப்பவர்கள். சரி, பிண நிலத்தில் நீங்கள் உங்களது காதலியைச் சந்தித்தீர்களா?”
“ஆம், பல மாதங்களின் பின்னர் ஓர் பிணத்தின் கை உயர்ந்து ஆடியது. நான் அதனை முத்தமிட்டேன். ‘என்னைப் புணர். நான் நிம்மதியாகச் சாவேன்’ எனச் சொன்னது. நான் அதனது கையை இழுத்தேன். முறிந்தது. மறு கையை இழுத்தேன். ஓர் எலும்புக்கூடாகி அந்தப் பிணம் என்முன் வந்து அசைந்தது. பெண் புணம். நான் அவளைப் புணர்ந்தேன். பின்பு அவள் இறந்தாள்.”
“பிணத்தைப் புணர்வதில் சுவை ஏதாவது உள்ளதா?”
“ஆம், நாம் ஏதாவது ஓர் வகையில் பிணங்கள்தாம். அவளது எலும்புத் தலையில் சில மயிர்கள் இருந்தன. அவளது உதடுகளை முத்தமிட்டபோது அவை எனக்கு எலும்புகளாகத் தெரிந்ததில்லை.”
“அவள் உங்களது காதலியா?”
“அது எனக்குத் தெரியாது.”
“உங்களது கதை மிகவும் துயரமானது. அவளைப் புணர்ந்தபோது அவள் மீது உங்களிற்கு ஓர் காதல் வந்ததா?”
“அதுவும் எனக்குத் தெரியாது. வந்துமிருக்கலாம். நான் முதல் தடவையாக அன்று அதிகம் அழுதேன்.”
“உங்களது கதை முடிந்துவிட்டதா?”
“இல்லை, இல்லை. பிண நிலம் பெரியது. நீளமானது எனது நடை. பல தினங்களாக நான் நடந்தேன். எனது விழிகளில் உள்ள கண்ணீர்கள் யாவும் எலும்புகளில் வீழ்ந்தன. நடந்து நடந்து இந்த நிலத்தைத் தாண்டி நான் ஓர் கடலைக் கண்டேன்.”
“இனியதுதானே?”
“அதில் அதிக தண்ணீர்கள் இல்லை. ஓடங்கள் வீழ்ந்து கிடந்தன. இறந்த மீன்களையும், இறால்களையும், கணவாய்களையும் கண்டு இரங்கினேன். வானம் இருண்டு கிடந்தது. நான் தவம் செய்ய விரும்பினேன்.”
“நான் ஒருபோதுமே தவம் செய்ததில்லை, செய்யவும் தெரியாது. அதனால் இலாபம் உள்ளதா?”
“சிலர் இலாபம் தேடித் தவம் செய்கின்றார்கள். பல முறையில் இதனைச் செய்யலாம்.”
“நீங்கள் தவம் செய்வது எப்படி என்பதைப் படித்தவரா?”
“இல்லை.”
“எப்படிச் செய்கின்றீர்கள்?”
“சப்பாணி கட்டி, நிலத்தில் இருந்து வானத்தைப் பார்ப்பேன்.”
“உங்கள் தவத்தில் நிச்சயமாக ஒரு நோக்கு இருக்குமே?”
“பிணங்கள் இல்லாத உலகில் என்னைத் தனது அடிமையாக்கும் ஓர் கன்னியைத் தேடுவதுதான் எனது நோக்கு.”
“நீங்கள் வயது போனவர். ஓர் அழகிய கிழவியைத் தேடலாம்தானே?”
“ஒழுக்கம் என்பது ஓர் போலி கலந்த சொல். காதலிற்கு வயது உள்ளது எனக் கருதுவது தவறு. ஓர் கன்னியின் அடக்குமுறை என்னை மீண்டும் இளைஞனாக்கும். இதுதான் எனது தவம்.”
“அடக்குமுறை?”
“ஆம்! அடக்குமுறையில் ஓர் சுகம் உள்ளது. பல உடல்கள் கட்டிலில் வேதனையை விரும்புகின்றன. இந்த வேதனையில் பூக்கும் பூக்களில் எந்த வாசம் வருகின்றது என்பதை நான் இறப்பதற்குமுன் அறிய விரும்புகின்றேன்.”
“சரி, உங்கள் தவம் வென்றதா?”
“இல்லை. தண்ணீர் இல்லாத கடலில் ஓர் துடிப்புத் தெரிந்தது. இதனை அறிய அருகில் சென்றேன். ஓர் பெண், மீனவப் பெண் ‘தண்ணீர், தண்ணீர்!’ என்று கதறிக்கொண்டிருந்தாள். நான் அவளைத் தூக்கினேன். என்னிடம் ஓர் சிறிய தண்ணீர்ப் போத்தல் இருந்தது. கொடுத்தேன். குடித்தபின் இறந்தாள். நான் அழுதேன், மிகவும் அழுதேன். கடலிற்குத் தண்ணீர் கொடுப்பதற்காக. எனது விழிகளில் இருந்து நீர் வரவில்லை. நான் மயங்கி விழுந்தபோது எனது தவம் அழிந்தது.”
“சவம் ஆகியதுதான் உங்களது தவம்.” என நான் சொல்லியபோது அவர் அழுதார், விழுந்தார், இறந்தார்.
அப்போதுதான் ஓர் பிணம் சவுக்குடன் வந்து “என்னை அடி!” என்று கெஞ்சிக் கேட்டது. ஆணா? பெண்ணா? நான் அடித்தேன். பல தடவைகள் அடித்தேன்.
என்முன் ஓர் சிவப்புப் பூ ஜனித்து எரிந்தது.
000

க. கலாமோகன்
இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து பிரான்சில் வசித்து வரும் தமிழ் எழுத்தாளர். கவிதை, சிறுகதை, நாடகம், மொழிபெயர்ப்புகளில் தொடர்ந்து இயங்குகி வருகிறார். சிதறுண்ட தன்னிலைக் கூறில், எங்கேயும் தன்னைச் சரியாக பொருத்திக்கொள்ளாத இயல்பில் தத்தளிக்கும் மனங்களை கதைகளாக்கி வருகிறார்
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.



















