மம்மர் அறுக்கும் மருந்து (10) – ஊட்டிவிடும் கருமம் : பெருமாள்முருகன்

முந்தைய பகுதிகள்
பகுதி 1 பகுதி 2 பகுதி 3
பகுதி 4 பகுதி 5 பகுதி 6
பகுதி 7 பகுதி 8 பகுதி 9

விஜயகுமார்: புதிய கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படுவது வரவேற்கத்தக்கது. ஆனால் உட்கட்டமைப்பு வசதிகள், துறைத் தலைவர், போதிய ஆசிரியர்கள் இன்மை இதுபோன்ற குறைகள் சுட்டப்படுகின்றன. புதிய கல்லூரிகளுக்கான நிதியும் வசதிப்பெருக்கமும் முடுக்கிவிடப்படுகின்றனவா?  

பெருமாள்முருகன்: குறைகள் இருந்தாலும் புதிய கல்லூரிகள் தொடங்குவதை வரவேற்கவே வேண்டும். புதிய கல்லூரியை அறிவித்ததும் அதே கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையைத் தொடங்கிவிடுகிறது அரசு. அவ்வூரில் இருக்கும் அரசுப் பள்ளியில் சில வகுப்பறைகளை ஒதுக்கச் சொல்லி அவற்றில் கல்லூரி வகுப்புகள் நடக்கின்றன. கல்லூரிக்கு நிலம் தேர்வு செய்தல், கையகப்படுத்துதல், கட்டிடம் கட்ட நிதி ஒதுக்குதல், கட்டிடம் கட்டுதல் ஆகியவற்றுக்கெல்லாம் சில ஆண்டுகள் ஆகும்.  ஆசிரியர்கள், அலுவலர்களைத் தற்காலிகமாக அருகில் உள்ள கல்லூரிகளில் இருந்து மாற்றுப்பணியில் நியமிக்கிறார்கள். பெரும்பாலும் மூன்றாண்டுகள் தான் பள்ளியில் நடக்கிறது. அதற்குள் தனிக்கட்டிடத்தை அரசு கட்டிவிடுகிறது. நான் பணியில் சேர்ந்த 1996இல் அறுபது அரசு கலைக் கல்லூரிகளே இருந்தன. இப்போது கிட்டத்தட்ட இருநூறு கல்லூரிகள் இருக்கின்றன. பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகளும் மாவட்டத்திற்கு ஒன்று என்னும் அளவில் வந்திருக்கின்றன. இவை பெருமாற்றம். 

வி: அரசுக்கல்லூரிகளில் போதிய வகுப்பறைகள் இல்லாததால் ஒவ்வொரு வகுப்பிற்கும் வகுப்பறைகள் மாற வேண்டியிருக்கும்.  மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இடம் பெயர்தலில் சிரமங்கள் இருக்கும். சிரமங்களைக் குறைக்க மாற்றுத்திறனாளிகள் உள்ள வகுப்புகளுக்கு நிரந்தர அறையோ தாழ்தள அறையோ ஒதுக்கீடு செய்யப்படுகின்றனவா? மாற்றுத்திறனாளிகளை மனதில் வைத்து அடிப்படை வசதிகள் அமைக்கப்படுகின்றனவா? அவர்களுக்கெனத் தனிக்கழிப்பறைகள், சாய்வுதளங்கள், வளாகத்தினுள் சக்கர நாற்காலிகள் செல்ல தரமான சாலைகள் உள்ளனவா? 

பெமு: கடந்த பல ஆண்டுகளாகவே அரசு கட்டிடம் எங்கே கட்டினாலும் மாற்றுத் திறனாளர்களுக்கும் பயன்படும் வகையில் சாய்தளம் வைத்துத்தான் கட்ட வேண்டும் என்று விதி உள்ளது. அதன்படியே கட்டுகிறார்கள். பழைய கட்டிடங்களிலும் முடிந்த அளவு பழுது பார்க்கும் நிதியிலிருந்து சாய்தளம் அமைத்திருக்கிறார்கள். மாற்றுத் திறனாளர்களுக்கு எனத் தனிக்கழிப்பிடமும் இருக்க வேண்டும் என்பதும் விதி. அப்படி ஒன்றைப் பெயரளவுக்கேனும் ஒதுக்கி வைத்திருப்பார்கள்.

இப்போது கல்லூரிகளில் தேவைக்கு அதிகமான வகுப்பறைகளும் தளவாடங்களும் இருக்கின்றன. 1996இல் நான் கல்லூரிப் பணியில் சேர்ந்த போது பல துறை ஆசிரியர்களுக்கும் சேர்த்து ஒரே ஆசிரியர் அறை என்றெல்லாம் இருந்தது. உட்கார நாற்காலிகூட இல்லை. துறைத் தலைவருக்கு ஒரு மேசையும் நாற்காலியும் இருந்தன. வேறு ஒரே ஒரு மேசையின் முன் இருநாற்காலிகளில் இருவர் அமர்ந்திருந்தனர். புதிதாகப் பணியில் சேர்ந்த மூவருக்கும் நாற்காலியும் இல்லை, மேசையும் இல்லை.  இருவர் உட்கார்ந்திருந்த மேசைக்கு எதிரில் ஒரு பெஞ்சைப் போட்டு நாங்கள் மூவரும் உட்கார்ந்தோம்.  இந்த முப்பதாண்டுகளில் பெருவளர்ச்சி. 

கல்லூரிகளில் புதிய படிப்புகள் முதுகலை, முனைவர் பட்டம் உள்ளிடப் பல வந்துள்ளன. புதிய துறைகள் உருவாகியுள்ளன. மாணவர் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. 1996இல் ஆத்தூர் அரசு கல்லூரி மாணவர் எண்ணிக்கை அறுநூறு. இன்று மூவாயிரம். அதற்கேற்ப உட்கட்டமைப்பு வசதிகளும் பெருகியுள்ளன. இன்னும் தேவை நிறையத்தான் எனினும் ஒப்பீட்டளவில் நல்ல முன்னேற்றம் என்றே நினைக்கிறேன். 

விண்ணப்பிக்கும் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப இடம் வழங்க முடியவில்லை என்பதால் இருசுழற்சிகளாகப் பிரித்து மாணவர்களைச் சேர்க்கும் நடைமுறை 2006 அல்லது 2007இல் வந்தது. ஒரே வகுப்பறையைக் காலையில் ஒருசுழற்சி மாணவர்கள் பயன்படுத்துவர். மாலையில் இன்னொரு சுழற்சி மாணவர்கள் பயன்படுத்துவர். இப்போதும் இருசுழற்சிகள் இருக்கின்றன. ஆனால் பல கல்லூரிகளில் ஒரே நேரத்தில் வைத்து வகுப்பு நடத்துகிறார்கள். அந்த அளவு வகுப்பறைகள் இருக்கின்றன. பெரிய வளர்ச்சி, மாற்றம் என்றே இதைச் சொல்வேன். 

இதில் இன்னொரு கோணமும் இருக்கிறது. ஊழலும் சில நன்மைகளைச் செய்யும் என்னும் நம்பிக்கை இந்தக் கட்டிடப் பெருக்கம் கண்டதால் எனக்கு ஏற்பட்டது. ஆம், அரசியல்வாதிகளுக்குப் பணத் தேவை ஏற்பட்டால் கட்டிடம் கட்டுதல், சாலை போடுதல் ஆகிய இருவகைத் திட்டங்களைக் கையிலெடுப்பார்கள். கட்டிடம் கட்டுவதற்கு ஏலம் எடுக்கும் ஒப்பந்தத் தொகையில்  முப்பது முதல் நாற்பது விழுக்காடு வரை அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் செல்கிறது என்று சொல்கிறார்கள். தேர்தலுக்கு ஆறு மாதத்திற்கு முன் இத்தகைய திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவார்கள். ஆளும்கட்சி தேர்தலுக்குச் செலவழிக்கப் பணம் தாராளமாகக் கிடைக்கும். கடந்த ஆட்சி முடிவதற்கு முன் உயர்கல்வி நிறுவனங்களுக்கு இருபது, முப்பது வகுப்பறைகள் கொண்ட கட்டிடங்கள் வந்தன. அவற்றின் தரம் அதிகபட்சம் இருபத்தைந்து ஆண்டுகளைத் தாண்டாது என்றாலும் சமகாலத் தேவையைப் பூர்த்தி செய்கிறது என்று நிறைவடைய வேண்டியதுதான். 

வி: பள்ளிக்கல்வித்துறை முன்னாள் மாணவர்களை இணைத்து வழிகாட்டல் நிகழ்ச்சிகளை நடத்துகிறது. நமது அரசுக் கல்லூரிகளில்  முன்னாள் மாணவர் சங்கங்களின் செயல்பாடுகள் என்ன? 

பெமு: எல்லாக் கல்லூரிகளிலும் முன்னாள் மாணவர் சங்கம் இருக்கிறது. முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைக்கவும் அவர்களைக் கொண்டு கல்லூரி மேம்பாட்டுக்கு ஏதேனும் செய்து கொள்வதும் வெகுகுறைவு. பொதுச்சமூகத்தோடு தொடர்புகளை விரிவாக்கிக் கொள்வது கல்லூரி நலனுக்கு நல்லது. ஆனால் ஆசிரியர்களும் ஆசிரியர் சங்கங்களும் அதை விரும்புவதில்லை. வெளியிலிருந்து யாரேனும் உள்ளே வந்தால் அவர்கள் கேள்வி கேட்பார்கள். சில விஷயங்களை எடுத்துச் செய்வார்கள். அவற்றை வேண்டாத தொந்தரவு என்று கருதுகிறார்கள். அதனால் முன்னாள் மாணவர் சங்கத்தின் பொறுப்பாளர்களைக் கல்லூரிக்கு உள்ளிருந்தே நியமனம் செய்து வைத்திருப்பார்கள். அக்கல்லூரியில் பயின்று அங்கேயே நிரந்தர ஆசிரியராகவோ கௌரவ விரிவுரையாளராகவோ பணியாற்றுவோர் சிலர் இருப்பர். அவர்களையே பொறுப்பாளர்களாக்கி விடுவார்கள். இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் கடைசிப் பருவத் தேர்வுக்கட்டணம் செலுத்தும் போதோ மதிப்பெண் சான்றிதழ் வாங்கும் போதோ ஒருதொகையைப் பெற்றுக்கொண்டு  முன்னாள் மாணவர் சங்க உறுப்பினராக்குவார்கள். அப்படிச் சேரும் தொகை கல்லூரி நலன் சார்ந்து பயன்படுவதும் உண்டு. சுயநலன் சார்ந்து பயன்படுவதும் உண்டு. 

நாமக்கல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்க நிதியைப் பெருக்குவதில் நான் கவனம் செலுத்தினேன். முன்னாள் மாணவர் ஒருவர் எதற்காகவேனும் கல்லூரிக்கு வரும்போது அவர்கள் நிலையறிந்து சங்கத்திற்கு நன்கொடை வழங்குமாறு கேட்டுப் பெறுவேன். நாமக்கல் பகுதியிலிருந்து லண்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்குச் சென்று உடல் உழைப்பு சார்ந்த பணிகளில் ஈடுபடுவோர் ஆயிரக்கணக்கில் உண்டு. அங்கே சென்று உயர்கல்வி பயில்வது போலக் காட்ட மாணவர் விசாவில்தான் பெறுவர். அதற்குத் தம் வங்கிக் கணக்கில் கிட்டத்தட்டப்  பத்துலட்சம் ரூபாய் இருப்பு காட்ட வேண்டும். ஆங்கில வழியில் பயின்றார் எனவும் ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் திறமை உள்ளவர் எனவும் கல்லூரி முதல்வரிடம் சான்றிதழ் வாங்க வேண்டும். அதற்காக என்னிடம் வருவோர் பலர். அவர்களை முன்னாள் மாணவர் சங்கத்தில் உறுப்பினராக்கி நன்கொடை தருமாறு கேட்பேன். ஆயிரம் இரண்டாயிரம் என்று தந்தோர் உண்டு. அந்நிதியைப் பெருக்கியதால்  துப்புரவுப் பணியாளர்களைக் கூடுதலாக நியமனம் செய்துகொள்ள முடிந்தது. ஆசிரியர் பற்றாக்குறை இருந்த துறைகளுக்கு ஓரிரு ஆசிரியர்களையும் நியமனம் செய்தேன்.

இச்சங்கத்தை நன்றாகச் செயல்படுத்தப் பல்வேறு தடைகளும் இருக்கின்றன. எனக்கு முன் நாமக்கல் கல்லூரியின் முதல்வராக இருந்தவர் லீலா குளோரிபாய் என்பவர். கல்லூரியை மேம்படுத்த வேண்டும் என்பதில் பேரார்வம் கொண்டு   நிறைய  முன்னெடுப்புகளைச் செய்தவர் அவர். கல்லூரியின் ஐம்பதாம் ஆண்டுப் பொன்விழாவை அவர்தான் கொண்டாடினார். நாமக்கல் அரசு கல்லூரியில் பயின்ற தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் பலருண்டு. அக்காலத்தில் சுயநிதிக் கல்லூரிகள் இல்லை என்பதால் எல்லோரும் அரசு கல்லூரியில்தான் பயில வேண்டும் என்னும் நிலை இருந்தது. முன்னாள் ஒன்றிய அமைச்சர் செ.காந்திச்செல்வன், முன்னாள் நாமக்கல் நகர்மன்றத் தலைவர் கரிகாலன் உள்ளிடப் பலர் நாமக்கல் அரசு கல்லூரி மாணவர்கள். இப்போதைய நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் இராமலிங்கத்தின் மாமா நடராஜன் பெரும் தொழிலதிபர். அவரும் நாமக்கல் கல்லூரி மாணவர் தான். இப்படிப் பெரிய பட்டியலே இருக்கிறது. 

அவர்களில் சிலரை லீலா மேடம் அணுகிக் கல்லூரியின் பொன்விழாவை ஒட்டிப் பெண்களுக்கான ஓய்வறை ஒன்று கட்டித் தர வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள். அவர்களும் ஒத்துக்கொண்டு தொழிலதிபர் நடராஜன் முன்னெடுப்பில் சில லட்சம் ரூபாய் திரட்டிக் கட்டிடம் கட்டத் தயாராகி விட்டார்கள். தங்கள் தொடர்பில் இருந்த பொறியாளர் ஒருவரைக் கொண்டு கட்டிடம் கட்டுவது அவர்கள் திட்டம். தரமாகக் கட்டுவதோடு செலவையும் தங்கள் கண்காணிப்பில் வைத்துக்கொள்ள நினைத்துள்ளனர். ஆனால் பொதுப்பணித் துறை ஒத்துக்கொள்ளவில்லை. கல்லூரிக்குள் இருக்கும் கட்டிடம் அனைத்தும் பொதுப்பணித் துறையின் கண்காணிப்பிலும் கட்டுப்பாட்டிலும் இருப்பவை. புதிய கட்டிடம் ஏதாவது கட்டினாலும் அது பொதுப்பணித் துறை மூலமாகவே நடைபெற வேண்டுமாம். அதாவது முன்னாள் மாணவர் சங்கம் திரட்டிய நிதியைப் பொதுப்பணித் துறை வசம் ஒப்படைத்துவிட வேண்டும். அவர்கள்தான் கட்டிடம் கட்டுவதற்கான நடைமுறைகளை மேற்கொள்வார்கள். இதற்கு நிதி திரட்டியோர் ஒத்துக்கொள்ளவில்லை.  

அரசுத் துறைகளிலேயே ஊழலில் முதலிடம் பிடிப்பது பொதுப்பணித் துறை. அரசு கட்டிடங்கள் அனைத்தையும் பராமரித்தலும் புதிய கட்டிடங்களைக் கட்டுதலும் அத்துறையின் பொறுப்பு. அரசு ஒதுக்கும் தொகையில் அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் குறிப்பிட்ட விழுக்காடு சென்றுவிடும். இப்போதைய நிலையில் நாற்பது விழுக்காடு அப்படிப் போய்விடும் என்கிறார்கள். அறுபது விழுக்காடுதான் கட்டிடம் கட்டுவதற்குச் செலவிடப்படும். அதில் ஒப்பந்ததாரரின் லாபமும் அடங்கும். பத்துப் பதினைந்து விழுக்காடு லாபம் என்று கொண்டால் பாதியளவுக்கும் கீழான தொகையே கட்டிடத்திற்குச் செலவிடப்படும். அப்படியானால் கட்டிடத் தரம் எப்படியிருக்கும் என்று பாருங்கள். பொதுப்பணித் துறையில் பணியாற்றுவோருக்கு அவரவர் பதவிக்கு ஏற்ற வகையில் கமிஷன் தொகை கிடைக்கும். அத்துறைப் பொறியாளர்கள் பலர் மாளிகை போன்ற வீட்டில் வசிப்பதைக் காணலாம். அதே போல ஒப்பந்ததாரர்களும் பெருவாழ்வு வாழ்வார்கள். அப்படியிருக்கக் கல்லூரிக்குள் ஒரு கட்டிடம் அத்துறையை மீறி வந்துவிட முடியுமா? 

முன்னாள் மாணவர் சங்கத்திற்கும் பொதுப்பணித் துறைக்குமான முரணைத் தீர்த்துக் கட்டிடம் வர லீலா மேடம் பெருமுயற்சி எடுத்தார். கட்டிடமும் வந்தது. மாணவியர் ஓய்வெடுக்க நல்ல அறை, தேவை என்றால் படுத்துக்கொள்ள மெத்தையுடன் கூடிய இரும்புக் கட்டில், எல்லா வசதிகளும் கொண்ட கழிப்பறை என அக்கட்டிடம் அமைந்தது. அரசு சார்ந்த நடைமுறைகள் எளிதாக அமைந்தால் முன்னாள் மாணவர் சங்கம் மூலம் எத்தனையோ பெற முடியும். அதற்கு முதல்வராக இருப்பவருக்குத் தொலைநோக்குப் பார்வை வேண்டும். சில சிரமங்களை எதிர்கொள்ளத் துணிவு வேண்டும். முதல்வர்கள் அப்படிச் சிரமம் எடுக்க விரும்புவதில்லை. 

அரசு கல்லூரிகளில் பயின்று அரசுப் பணியில் இருப்போர் எண்ணிக்கை மிகுதி. குறிப்பாக ஆசிரியர், காவல்துறை, அலுவலர்கள் முதலிய பணிகளில் இருப்பர். நாமக்கல் கல்லூரியில் பயின்ற மாணவர் ஒருவர் சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராக உள்ளார். சமீபத்தில் சென்னை விமான நிலையத்தில் சந்தித்த காவல்துறை அதிகாரி ஒருவர் ‘நாமக்கல் கல்லூரி மாணவர்’ என்று அறிமுகப்படுத்திக் கொண்டு என்னிடம் வந்து பேசினார். இப்படி எத்தனையோ பேர்.  அவர்களை எல்லாம் ஒருங்கிணைக்கவும் நன்மைகளைப் பெறவும் போதுமான செயல்பாடுகள் இல்லை. இப்போது தேசியத் தர நிர்ணயச் சான்று பெற முன்னாள் மாணவர் பற்றிய விவரங்கள் தேவைப்படுகின்றன. அதற்காகப் பெயரளவுக்குப் பட்டியல் தயார் செய்கிறார்கள். எனக்குத் திருப்தி இல்லை.

வி:  மாணவர்களுக்கு வகுப்பறை தாண்டி கல்லூரிக்கு உள்ளேயே பொதுவெளியும் அவசியம். பொதுப்பணித்துறையின் மூலம் கல்லூரி வளாகத்தினுள் மரத்தடியில் ஆங்காங்கே சில இருக்கைகளை அமைக்க முயன்றபோது நேரிட்டதை ஒருமுறை சுருக்கமாகச் சொன்னீர்கள். கல்லூரிக்குள்ளேயும் வெளியிருந்தும் என்னென்ன மாதிரியான கேள்விகளை எதிர்கொண்டீர்கள்?  

பெமு: கல்லூரி என்பது மாணவர்கள் பயிலும் இடம் மட்டுமல்ல. முன்னாள் மாணவர்கள் வந்து செல்வார்கள். மாணவர் சேர்க்கைக்காகவோ சேர்ந்த மாணவரைப் பற்றி விசாரிக்கவோ பெற்றோர்கள் வருவார்கள். அப்படி வருவோர் தம் வேலை முடியும் வரைக்கும் காத்திருக்க நேரும். எங்கே இருப்பார்கள்? கல்லூரிகளில் நிழல் தரும் மரங்கள் இருக்கின்றன. நல்லது. அவற்றின் அடியில் எத்தனை நேரம் நிற்க முடியும்? கிராமத்துப் பெற்றோர் அம்மரத்தடிகளில் குந்த வைத்து உட்கார்ந்திருக்கும் காட்சி எனக்கு உவப்பாக இல்லை. 

ஆண்டுதோறும் கட்டிடப் பராமரிப்புக்காகப் பொதுப்பணித் துறை மூலம் நிதி ஒதுக்கீடு வரும். அதில் சிறுசிறு கட்டமைப்புகளைச் செய்ய அனுமதி உண்டு. அதன் மூலம் மரத்தடிகளில் உட்காரச் சிமெண்ட் பெஞ்சுகளும் மேஜைகளும் அமைத்துத் தரும்படி சொன்னேன். கல்லூரிக்கு என்ன தேவை என்பதைக் கல்லூரி முதல்வரோ ஆட்சிக்குழுவோ தீர்மானிப்பதைப் பொதுப்பணித் துறை விரும்பாது. அவர்கள் கட்டிடம் கட்டுவதில் வல்லுநர்களாக இருக்கலாம். மாணவர்களுக்கு என்ன தேவை என்பதைக் கல்லூரி நிர்வாகம் தானே தீர்மானிக்க முடியும்? அத்துறைப் பொறியாளர்கள் சொல்வதைத் தான் நாம் கேட்க வேண்டும். இல்லையென்றால் ஈகோ பிரச்சினையாக மாறிவிடும். பொதுப்பணித் துறைப் பொறியாளருக்கு என் எண்ணத்தைப் பலமுறை எடுத்துச் சொல்லி வலியுறுத்த வேண்டியிருந்தது. இந்த ஆண்டில் ஐந்தாறு இடங்களில் சிமெண்ட் பெஞ்சுகள் அமைக்கலாம், அடுத்த ஆண்டு நிதியில் கொஞ்சம் போடலாம் என்று ஒத்துக் கொண்டார். இடங்களையும் குறிப்பிட்டுச் சொன்னோம். 

வேலை நடந்து கொண்டிருக்கும் போது ஆசிரியர்கள் சிலர் என்னிடம் வந்து ‘அது எதுக்கு சார்?’ என்று கேட்டார்கள்.  சிரித்துக் கொண்டே ‘உட்காரத்தான்’ என்று சொன்னேன். எனக்கு அடுத்த நிலையில் இருந்த பேராசிரியர் ‘பையனும் பொண்ணும் ஜோடியா உக்காந்து தொட்டு வெளையாடறதப் பாக்கணும்னு ஆசப்படறீங்க’ என்றார்.  ‘ஆமா. அதுதான் என்னோட ஆச’ என்றேன். கல்லூரிக்குள் அங்கங்கே இருக்கும் மரச்செறிவுக்குள் புதருக்குள் ஜோடியாக உட்கார்ந்திருக்கிறார்கள் என்று அவ்வப்போது யாராவது வந்து புகார் சொல்வார்கள். அவர்கள் உட்கார்ந்து பேசப் பொதுவெளி ஒன்றை உருவாக்கிக் கொடுத்தால் நல்லதுதானே என்று நான் விளக்கியது அவர்களுக்குப் புரியவில்லை. சரி, புதருக்குள் போய் உட்கார்ந்தால் என்னென்னவோ நடக்கும் என்று சந்தேகம் வருகிறது. இப்போது நம் கண் முன்னால்  பெஞ்சில் உட்கார்வார்கள். நீங்கள் சந்தேகப்படும் எதுவும் இருக்காது அல்லவா என்றேன். 

என்ன நியாயம் சொல்லியும் அந்த ஆசிரியர்களுக்கு விளங்கவில்லை. ஒழுக்கம் நிலவும் கல்லூரி வளாகத்தைக் கெடுக்கும் திட்டம் என்று அதைக் கருதினார்கள். மர நிழலில் உட்கார்ந்து பேசப் பெஞ்சுகள் அமைப்பதால் ஒழுக்கமே போய்விடும் என்றால் நான் என்னதான் செய்ய முடியும்? சரி, ஏதாவது பிரச்சினை வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன். காலையில் சீக்கிரம் கல்லூரிக்கு வரும் மாணவர்கள் தண்ணிர்க் குழாய்க்கு அருகில் போட்டிருந்த  பெஞ்சில் உட்கார்ந்து சிமெண்ட் மேஜையில் உணவு உண்டார்கள். பையன்களும் பெண்களும் சேர்ந்தும் உட்கார்ந்து உண்டார்கள். என்னைப் பார்த்தால் சட்டென்று எழுந்து நிற்பார்கள்.  ‘எந்திரிக்க வேண்டாம். உக்காந்து சாப்பிடுங்க. எறையற சோத்த கறிவேப்பில மொளகாய அங்கயே போடாதீங்க. எடுத்துக்கிட்டுப் போயிக் குப்பக்கூடையில போடுங்க’ என்று சொல்லிவிட்டுச் சென்றுவிடுவேன். 

சிலர் அவற்றில் உட்கார்ந்து செய்முறைப் பதிவேடுகளை எழுதுவார்கள். சிலர் படிப்பார்கள். ஒப்படைவுகளைத் தயார் செய்வார்கள். மாணவர்கள் படிப்பதில்லை என்று பொத்தாம் பொதுவாகச் சொல்வோருக்கு அக்காட்சியைக் காட்டி ‘நம் மாணவர்கள் படிப்பதைப் பாருங்கள்’ என்பேன்.  வேறு வகுப்பில் இருந்து வரும் நண்பர்களுக்காக உட்கார்ந்து காத்திருப்பார்கள். ஏதாவது வேலையாக வருவோரும் அவற்றில் உட்கார்ந்திருப்பார்கள். இந்தக் காட்சிகளைப் பார்ப்பது மனதுக்கு இதமாக இருந்தது. தனியார் கல்லூரிகள் பலவற்றில், நகரத்துக் கல்லூரிகள் பலவற்றில் இத்தகைய வசதி சாதாரணம். நான் கோவை பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் 1980களில் முதுகலை படித்தேன். அப்போதே அங்கே இப்படிப் பல வசதிகள் இருந்தன. எந்தப் பக்கம் போனாலும் உட்கார பெஞ்சுகள் இருக்கும். ஆனால் 2020இல் ஒரு கிராமத்துக் கல்லூரியில் அத்தகைய சிறுவசதியை ஏற்படுத்துவது சாதனையாக இருந்தது. அது சிறுவசதி என்றாலும் அதனால் கல்லூரிச் சூழலே பார்ப்பதற்கு ரம்மியமாக மாறியது என்று சொல்வேன். எனக்கு மட்டுமல்ல, பலரும் அதை மகிழ்ச்சியோடு கண்டார்கள். 

சிலருக்கு எப்போதும் எதிர்மறைப் பார்வைதான். ஒழுக்கக் காவல் முழுவதும் நம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று கருதும் ஆசிரியர்களை அத்தனை எளிதாக மாற்ற முடியாது. ஆணும் பெண்ணும் பேசிக் கொண்டாலே ஒழுக்கக் கோட்டை சரிந்து விழுந்து விடும் என்று பதறும் அற்பத்தனம் அவர்களிடம் இருக்கும். ஒருமுறை ஆசிரியர் ஒருவர் முதல்வர் அறைக்கு ஓடி வந்தார்.  ‘அந்தக் கருமத்த நீங்களே வந்து பாருங்க’ என்று கோபத்தோடு சொன்னார்.  ‘என்னாச்சு சொல்லுங்க’ என்றேன்.  ‘ஒன்னுக்கொன்னு ஊட்டி உட்டுக்கிட்டுக் கெக்கலி போடுதுங்க’ என்றார். ‘சரி, வாங்க பாத்துட்டு வரலாம்’ என்று அவருடன் சென்றேன். நூலகத்தை ஒட்டிய பகுதியில் தொடர்ச்சியாக இருபெஞ்சுகள் அமைத்திருந்தோம். அங்கே கூட்டமாக நின்றிருந்தார்கள். இருபாலர் கல்லூரியில் ஆண்களும் பெண்களும் சேர்ந்து நிற்பது இயல்புதானே. கொஞ்சல் கூச்சலும் கேட்டது. 

அருகில் போனோம். என் வருகையை யாரோ அறிவித்ததும் சட்டென்று சத்தம் அடங்கியது. ஒருநிமிடம் தான் அமைதி. உடனே  ‘சார் வாங்க’ என்று பலபேர் ஒரே குரலில் என்னை வரவேற்றார்கள். அவர்களிடம் என்ன தப்பு இருக்க முடியும் என்று அந்த ஆசிரியரைப் பார்வையால் கேட்டுச் சிரித்தேன். ஒரு மாணவன் கேக் துண்டு ஒன்றை எடுத்து வந்து ‘வாயத் தெறங்க சார்’ என்று மிகுந்த உரிமையோடு எனக்கு ஊட்டிவிட்டான். அவனுடைய பிறந்தநாள் கொண்டாட்டம். கேக் வெட்டிக் கொண்டாட அது ஏற்ற இடமாகத் தோன்றியிருக்கிறது.  ‘சாருக்கும் கேக் குடுங்கப்பா’ என்று உடன் வந்த ஆசிரியரைக் காட்டிச் சொன்னேன். அவர் மறுக்க முடியாமல் கையில் வாங்கிக் கொண்டார். அந்த நிகழ்வுக்குப் பின் புகார் சொல்லவென்று ஒருபோதும் அவர் என்னிடம் வரவேயில்லை. 

அரசு கல்லூரிகளில் கட்டிடம் போதவில்லை, இடமில்லை என்றெல்லாம் சொல்கிறோம். இருக்கும் இடத்தை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்றும் பார்க்க வேண்டும். முதல்வர் அறையும் அலுவலகமும் ஒட்டியிருக்கும். முன்னாள் மாணவர்கள் பலர்  மாற்றுச் சான்றிதழ் வாங்க வருவார்கள். தினமும் பத்துப் பேராவது வருவார்கள். நிலுவை வைத்து முடிப்பவர்கள் உயர்கல்விக்கோ வேலைக்கோ செல்ல மாற்றுச் சான்றிதழ் தேவைப்படும். படிப்பை முடிக்காதவர்களும் ஏதேனும் அரசு நலத்திட்ட உதவி உட்பட ஏதாவது தேவைக்காக மாற்றுச் சான்றிதழ் கேட்டு வருவார்கள். பல ஆண்டுக்கு முன் முடித்தவர்கள்கூட இருப்பார்கள். கல்லூரியில் இருந்தால் தம் சான்றிதழ் பாதுகாப்பாக இருக்கும் என்று கருதுவதாலோ என்னவோ வாங்காமலே விட்டிருப்பார்கள். 

இப்படி வருவோரிடம் முற்பகல் ஒருமணி வரை விண்ணப்பம் வாங்குவோம். புதிதாக மாற்றுச் சான்றிதழ் சிலருக்குத் தயாரிக்க வேண்டியிருக்கும்; ஏற்கனவே தயாரித்து வைத்த சான்றிதழைத் தேடி எடுக்க வேண்டியிருக்கும். அதற்குப் பொறுப்பாக இருக்கும் எழுத்தர் பிற்பகலில் அவ்வேலையைச் செய்வார். நான்கு மணிக்கு மேல் ஒவ்வொருவரையும் அழைத்துச் சான்றிதழைக் கொடுத்தனுப்புவோம். இது வழக்கமான நடைமுறை.  

மாற்றுச் சான்றிதழ் வாங்க வருவோருக்குப் பொறுமை இருக்காது. பல வருசம் கழித்து வந்திருக்கிறோமே என்பதெல்லாம் அவர்களுக்குத் தோன்றாது. வந்தவுடன் கையில் சான்றிதழ் கிடைத்துவிட வேண்டும் என்று நினைப்பார்கள். பிற்பகலில் தான் கொடுப்போம் என்று சொன்னாலும் கேட்க மாட்டார்கள். அலுவலக முற்றத்தில் எப்போதும் கூட்டமாக இருக்கும். ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை அலுவலகத்தை எட்டிப் பார்ப்பார்கள். அவர்களைத் திட்டி அனுப்புவது அலுவலக உதவியாளர்களுக்குப் பழகிப் போன விஷயம். எல்லோருக்கும் இருக்கை போட முடியாது. முதல் மாடியில் ஐந்தடி அகலம் கொண்ட சிறுமுற்றத்தில் கைப்பிடிச் சுவரைப் பிடித்தபடி எப்போதும் பத்துப் பேர் நின்றபடியே இருப்பார்கள். அமைதியாக வேலை செய்யவே முடியாது. எனக்குப் பெருந்தொந்தரவாகத் தோன்றியது. 

ஒருமுறை முதல்வர் அறைக்கு முன் நின்றிருக்கையில் கீழே பார்வையோடியது. அக்கட்டிடத்திற்கு முன் திறந்த வெளி அரங்கம். நான்கடி உயரத்தில் கட்டி மேலே கூரை வேய்ந்த பெரிய மேடை. ஆண்டு விழா போன்ற பெரிய நிகழ்வுகளுக்கு அரிதாக அதைப் பயன்படுத்துவதுண்டு. சட்டென்று எனக்கு ஓர் யோசனை தோன்றியது. உதவியாளரோடு அம்மேடையைப் போய்ப் பார்த்தேன். மின் இணைப்பு இருந்தது. மூன்று மின்விசிறிகள் போடுவதற்கான அமைப்பும் தெரிந்தது. கல்லூரி எலக்ட்ரீசியனை வரச் சொன்னேன். மாணவர்கள் கழற்றிக் கொண்டு போய்விடுவார்கள், உடைத்து விடுவார்கள் என்பதால்  மின்விசிறிகளைக் கழற்றி வைத்திருக்கிறோம் என்று சொன்னார். ஏதேனும் நிகழ்ச்சி நடக்கும் போது மட்டும் கொண்டு வந்து மாட்டுவார்களாம். பிறகு கழற்றி விடுவார்கள். மாணவர்களைத் திருடர்களாக, ரவுடிகளாகக் கட்டமைக்கிறோம், பாருங்கள்.

மின்விசிறிகளைக் கொண்டு வந்து மாட்டச் சொன்னேன். ‘நிகழ்ச்சியா சார்?’ என்று கேட்டார். ‘ஆமாம்’ என்றேன். மாட்டி ஓட்டிப் பார்த்தோம். அந்தக் காலத்தில் தேக்கில் செய்த பழைய மரப்பெஞ்சுகள் நான்கைந்தைக் கொண்டு வந்து மின்விசிறிகளுக்கு அடியில் வரிசைப்படுத்திப் போடச் சொன்னேன். மாற்றுச் சான்றிதழ் வாங்க வருவோர் விண்ணப்பம் கொடுத்த பிறகு இங்கே வந்து உட்கார்ந்து காத்திருக்கலாம். சான்றிதழ் தயாரானதும் மேலிருந்து பெயர் சொல்லி அழைத்தால் கீழே கேட்கும். அவர் மட்டும் மேலே வந்து சான்றிதழை வாங்கிச் செல்லலாம். சான்றிதழுக்கு என்றல்ல, வேறு எவ்வேலையாக வந்தாலும் அவர்கள் காத்திருக்கும் அறையாக அம்மேடை மாறியது. அலுவலக முற்றத்தில் குழுமி நிற்கும் கூட்டம் அருகியது. மேடையில் மின்விசிறிகளும் இருந்ததால் மாணவர்களும் தம் தேவையை ஒட்டி அங்கே வந்து உட்கார்ந்தனர். குறிப்பாக மாணவியர் வந்து உட்கார்ந்து சாப்பிடவோ எழுதப் படிக்கவோ செய்தனர். அது அவர்களுக்கு ஓய்வறை போலவும் ஆயிற்று. எந்நேரமும் ஆட்கள் இருப்பதால் அம்மேடை உயிர் பெற்றது.  நான் இருக்கும் வரை மின்விசிறிகளைக் கழற்றவில்லை. 

பெருமாற்றங்களை அரசு திட்டமிடட்டும். சிறுமாற்றங்கள் வசதியை உருவாக்கும்; அழகைத் தரும். பார்வை இருந்தால் போதும், சிறுமாற்றங்களை ஓரளவு அதிகாரம் இருப்போரே செய்யலாம். 

தொடரும்…

விஜயகுமார்

வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.  தற்போது டோக்கியோ அறிவியல் நிறுவனத்தில் (Institute of Science, Tokyo) ஆய்வாளராக உள்ளார். நவீனத் தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் உள்ளவர். தமிழிலிருந்து மலையாளத்துக்கு கவிதைகள் மொழிபெயர்த்துள்ளார்.


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

உரையாடலுக்கு

Your email address will not be published.

கடந்தவை

திரட்டு

சேகரம்

Go toTop

Don't Miss