
01
சேர இடமில்லாதபோது
செல்லும் வழியெங்கும்
மலர்கிறது பார்
அந்தப் பக்கம்
நீ இல்லாதபோது
இப்படித்தான் எப்போதும்
பாதையெங்கும் இருப்பாய்
நகர நகர
விரிகிறதொரு பெருமலர்
வானிற்குள் விழுந்த
ஸ்ட்றா போல கிடக்கிறது
இப்போது என் முன்
சாலை
000
02
பெருஞ்சாலையை
பிரித்த கோடுகளில்
கடைசி வரையறைக்கும் வெளியே
டிவிஎஸ் பிஃப்டியில்
மனைவியை கூட்டிச்செல்கிறார்
முன்டாசுத் தாத்தா
அவர்
காதலை
கவனம் என மாற்றுகிறார்
அன்பை
வேகத்தை குறைப்பதன் மூலம்
கூட்டுகிறார்
குறைக்கக் குறைக்க
நடுங்கும் ஹேண்டில்பாரை
இறுக்கிப் பிடித்து
கூர்ந்த தலையால் அவர்
தூரத்தை பார்க்கிறார்
தன்
சுற்றுப்பாதையை விட்டகன்று
காலமற்றதுள் மெல்ல நுழைகிறது
கடைசி கோளொன்று
000
03
“வேலைக்கு போகலாமா..”
என் வாகனம் கேட்கும்
“நேரமாகிவிட்டதே”
அவசரப்படுத்தும்
தான்தான் இந்தச் சாலையின்
சரியான திறவுகோல் என்பதுபோல்
கச்சிதமாக தன்னைப்பொருத்தி
திறந்துகொண்டே இருக்கும்
இடையில் ஒரு வேகத்தடை
கைகாட்டி நிறுத்த
ஏற்றிக்கொள்ளும்
பள்ளிக்கு கொஞ்சம் முன்னே
பத்திரமாக இறக்கிவிடும்
(இடையில்
மிக கவனமாகவே
தன்னைச் செலுத்தும்)
சமயங்களில் என்னையும் மறந்து
எங்கேயோ போகும்
பிடித்து இழுத்து
கொண்டுவரவேண்டும்
வழிக்கு
அதன் நினைப்பெல்லாம்
ஒன்றேதான்
பணியிடம் சேர்ந்ததும்
அது கேட்கும்
“வீட்டிற்கு போகலாமா”

ஆனந்த் குமார்
கோவையில் வசித்துவரும் ஆனந்த் குமார், தொடர்ச்சியாக கவிதைகள் எழுதிவருகிறார். ஆவணப்படங்கள், குறும்படங்கள், புகைப்படங்கள் எடுப்பதிலும் முனைப்போடு இயங்கிவருகிறார். ‘டிப் டிப் டிப்’ என்ற கவிதைத்தொகுப்பின் ஆசிரியர்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.



















