
பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதர் கோவில் சித்திரைத் திருவிழாவின் ஒரு பகுதியாக 27/4/2026 அன்று பாரி முல்லைக்குத் தேர் கொடுத்ததன் நினைவு நிகழ்த்தப்பட்டுள்ளது. இப்படியாக இன்று பாரி கடவுள் போலாகி கோவிலுக்குள் போய் விட்டான். ஆனால் அன்று அவன் வீழ்ந்து பட , அவன் மலையும், மகள்களும், கபிலரும் அநாதைகளாக திரிந்துள்ளனர். கபிலர், அவன் இல்லாத அந்தப் பறம்பு மலையை கண்டு கண்டு துயரழிகிறார். பாரியின் மகள்களுக்கு ஏற்ற கணவரை கண்டறிந்து மணமுடித்திட வேண்டி சிற்றரசர் பலரையும் கண்டு, பரிசில் கேட்பது போல் வேண்டிக் கேட்கிறார். அவர்கள் மணமுடிக்க மறுத்துவிட, அப்பெண்களை தக்க இடத்தில் பாதுகாப்பாக ஒப்படைத்துவிட்டு தன் நண்பன் பாரியுடன் கலக்க வேண்டி வடக்கிருந்து உயிர் துறக்கிறார்.
பாரி பலருக்கும் இனியன். ஆனால் பகை வேந்தர்க்கோ இன்னான். அவன் மலையில், ஒரு புறம் அருவி பொங்கி வழியும், இன்னொரு புறம் பாணர் கலங்களில் ஊற்றுவதற்காக வடிக்கப்படும் தேன் சிந்திப்பெருகி, இன்னொரு அருவி போல் ஆகி கற்களை உருட்டிக் கொண்டு ஓடும். இப்படியாக அவன் மலையில் இரண்டு அருவிகள். இனி அந்த இரண்டு அருவிகளுக்கும் என்ன ஆகுமோ ?
“ஒரு சார் அருவி ஆர்ப்ப, ஒரு சார்
பாணர் மண்டை நிறையப் பெய்ம்மார்
வாக்க உக்க தேக்கள் தேறல்
கல் அலைத்து ஒழுகும் மன்னே! பல் வேல்
அண்ணல் யானை வேந்தர்க்கு
இன்னான் ஆகிய இனியோன் குன்றே!” (புற;115)
தூரத்தில் தெரியும் பொருட்களை எண்ணிப்பார்ப்பது ஒரு விளையாட்டாக சங்க காலத்தில் இருந்துள்ளது. பாரி மகளிரும் அப்படி விளையாடுகிறார்கள். இளவரசியர் போல் வாழ்ந்த காலத்தில் அவர்கள் எண்ணி விளையாடியது குதிரைகளை. அதாவது பாரியை வென்று விடலாம் என்கிற நினைப்பில் அவனோடு போர் செய்ய வந்து அது நடவாமல் தோற்றுத் திரும்பும் குதிரைகளைத் தூரத்தில் இருந்து அவர்கள் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்..
“ … அண்ணல் நெடுவரை ஏறி , தந்தை
பெரிய நறவின், கூர் வேல் பாரியது
அருமை அறியார், போர் எதிர்ந்து வந்த
வலம் படு தானை வேந்தர்
பொலம் படைக் கலி மா எண்ணுவோரே” (புற; 116)
முன்பு அப்படி விளையாடிக் கொண்டிருந்தவர்களின் விளையாட்டு சட்டென மாறுகிறது. தந்தையை இழந்த அப்பெண்கள் இன்று அடைக்கலமாக இருப்பதோ ஏதோ ஒரு சிற்றூரின் எளிய வீட்டில்.
“ … புல் மூசு கவலைய முள் முடை வேலி
பஞ்சி முன்றில், சிற்றில் ஆங்கண்
பீரை நாறிய சுரை இவர் மருங்கின்
ஈத்து இலைக் குப்பை ஏறி , உமணர்
உப்பு ஓய் ஒழுகை எண்ணுப மாதோ..” (புற; 116)
புற்களும் முட்களும் மண்டிக்கிடக்கும், பருத்திப் பஞ்சு பரப்பியிருக்கும் முற்றம் கொண்ட , சின்னஞ்சிறு வீட்டின் அருகில், பீர்க்கையும் சுரையும் படர்ந்திருக்கும், ஈச்ச இலைகள் குவிந்து கிடக்கும் குப்பை மேட்டின் மீது ஏறி நின்று கொண்டு, உப்பு மூட்டைகளை ஏற்றிச் செல்லும் உமணர்களின் வண்டிகளை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்
“ …கலையும் கொள்ளாவாக பலவும்
காலம் அன்றியும் மரம் பயம் பகரும்…” (புற; 116)
பொதுவாக குரங்குகள் பலாப் பழங்களை கண்டால் விடாது, ஆனால் பறம்பிலோ அப்படியல்ல ஏனெனில் எங்கு காணிலும் பலாக்கள் காய்த்துத் தொங்கும். ஆகவே குரங்குகளுக்கு அதிமதுரம் அலுத்துவிடுகிறது. மற்ற மரங்களுக்கு கனியும் காலம் என்று தனியே ஒன்று உண்டு. ஆனால் பறம்பின் மரங்களோ எக்காலமும் மணந்து நிற்பவை. எக்காலமும் கனிந்து அழைப்பவை.
ஒரு சொல்லின் இறுதி எழுத்து மாறி வந்தும் அதே பொருளைத் தருவதை “ கடைப் போலி” என்கிறது இலக்கணம். மேலுள்ள வரியில் ‘ பயன்’ என்பது ‘பயம் ‘ என்று ஆகியுள்ளது
பாரி நல்லாட்சி புரிவதால் அவன் தேசத்தில் சான்றோர் மிகுதி. ஆதலால் மழையும் மிகுதி. ஒருநாளும் அங்கு மழை பொய்ப்பதில்லை.கெட்ட நிமித்தங்கள் தோன்றி வந்தாலும் மாரி வற்றுவதில்லை
“மைம்மீன் புகையினும் தூமம் தோன்றினும்
தென்திசை மருங்கின் வெள்ளி ஓடினும்
வயல் அகம் நிறையப், புதல் பூ மலர
மனைத்தலை மகவை ஈன்ற அமர்க்கண்
ஆமா நெடுநிறை நன்புல் ஆர
கோஒல் செம்மையின் சான்றோர் பல்கி
பெயல் பிழைப்பு அறியாப் புன்புலத்ததுவே…” (புற; 117)

சனிக்கிரகம் மாறுபட்டுத் தோன்றினாலும், வால் நட்சத்திரம் தெரிந்தாலும், சுக்கிரன் தென் திசையில் ஓடினாலும் வயல்கள் நிறைந்தே நிற்கும். புதர்களில் பூக்கள் தலை அசைக்கும். கன்றுகளை ஈன்ற பசுக்கள் செழித்த புற்களை மேய்ந்து மகிழ்வது நிற்காது. செங்கோன்மையால் சான்றோர்கள் பெருக, அங்கு மழைவளம் ஒரு நாளும் பொய்ப்பதில்லை.
மழையை மண்ணிற்கு இழுத்துவரும் மாமணிகள் என்று மனிதரில் ஒரு சாரார் உண்டு போலும்?
“தம்பி இசை, உன்னால் ஒரு சொட்டேனும் திரண்டிருக்குமா?”
“ அதெல்லாம் திரண்டிருக்கும், திரண்டிருக்கும். நாம் அடுத்த கவிதைக்குச் செல்லலாம்”
“நிழல் இல் நீள் இடைத் தனிமரம் போல
பணைகெழு வேந்தரை இறந்தும்
இரவலர்க்கு ஈயும் வள்ளியோன் நாடே!” ( புற; 119)
நிழல் சிறிதும் அற்ற நீண்ட வழியில் நிற்கும் தனிமரம் போன்றவன் பாரி. மூவேந்தரைக் காட்டிலும் இரவலர்க்கு ஈபவன்.
“கார்ப்பெயல் தலைஇய காண்பு இன் காலை
களிற்று முக வரியின் தெறுழ் வீ பூப்ப” (புற; 119)
மழை பொழிந்து ஓய்ந்த காலையில் இனிய காட்சியாக எங்கும் தெறுழ் பூக்கள் பூத்து நிற்கும். தெறுழ் பூ எப்படிருக்கும்? களிற்றின் முகத்தில் காணப்படும் செம்புள்ளிகளைப் போன்று இருக்கும். கவிஞர் தெறுழ் பூவை மனம் மகிழக் கண்டிருக்கிறார். களிற்றையும் நம்மைப் போல் தோராயமாகக் காணாமல் , அதன் சிறுபுள்ளி வரை ஆழ்ந்து பார்த்திருக்கிறார். அதற்கு இவ்வரியே சான்று.
பாரியின் பெண்களை மணமுடித்துக் கொள்ள வேண்டி விச்சி தேசத்து அரசன் விச்சிக்கோவை வேண்டுகிறார் கபிலர். ஒரு பரிசைப் போல அதை அவனிடம் வேண்டுகிறார். விச்சிக்கோ யார்?
“.. நிணம் தின்று செருக்கிய நெருப்புத்தலை நெடுவேல்
களம் கொண்டு கனலுங் கடுங்கண்யானை
விளங்கு மணிக் கொடும் பூண் விச்சிக்கோவே!…” (புற; 200)
ஓயாமல் நிணத்தை உண்டு செருப்பதால் அவன் வேல் முனை எப்போதும் நெருப்பு போல் கொதித்துக் கொண்டிருக்குமாம். களத்திற்கு அஞ்சாது சீறும் கடுங்கண்யானைகளைக் கொண்டவன் அவன். ஒளிரும் மணிகளால் அலங்கரிக்கப்பட்டவன் அந்த விச்சிக்கோ
அவன் மலைவளம் எப்படிப்பட்டது?
“பனிவரை நிவந்த பாசிலைப் பலவின்
கனிகவர்ந்து உண்ட கருவிரல் கடுவன்
செம்முக மந்தியொடு சிறந்து, சேண் விளங்கி
மழைமிசை அறியா. மால்வரை அடுக்கத்து
கழைமிசைத் துஞ்சும் கல்லக வெற்ப!…” (புற; 200)
குளிர்ந்த மலையில், ஓங்கி வளர்ந்திருக்கிற பசிய இலைகளைக் கொண்ட பலாமரத்தின் கனியை கவர்ந்துண்ணும் கருவிரல் கடுவன், செம்முக மந்தியொடு காதல் கொண்டு , மேகத்தாலும் அறிய முடியா உச்சியைக் கொண்ட மலைப்பக்கத்தில் வளர்ந்து நிற்கும் மூங்கிலின் மீது மகிழ்ந்துறங்கும் மலைநாடு அவனுடையது.
அர்த்தமாக அரிய காட்சி ஒன்றும் இல்லைதான். ஆனால் படம் தெரிகிறது. பாட்டாக இனிக்கிறது.
பாரி மகளிர் யாரென அவ்வரசனுக்கு அறிமுகம் செய்கிறார்.
“.. இவரே, பூத்தலை அறாஅப் புனை கொடி முல்லை
நாத்தழும்பு இருப்பப் பாடாது ஆயினும்
‘கறங்கு மணி நெடுந்தேர் கொள்க!’ எனக் கொடுத்த
பரந்து ஓங்கு சிறப்பிற் பாரிமகளிர்…” ( புற; 200)
தன்னைப் பாடினால் பரிசில் தருவார்கள் அரசர்கள். ஆனால் பாரி அப்படியல்ல. பாட்டு வராத ஒரு முல்லைக் கொடி, பற்று இல்லாது தவித்த போது , தன் பெரிய தேரை அதற்கு வழங்கி விட்டுச் சென்ற ஆகச் சிறந்த வள்ளல் அவன். அவன் மகள்கள் இவர்கள்.
எப்போதும் தன் மேலே பூக்கள் பூத்தபடியே இருப்பதால் முல்லைக் கொடிக்கு அலங்காரம் குறைவதேயில்லை ஆகவே “பூத்தலை அறாஅப் புனைகொடி முல்லை” என்றார்.
“யானே , பரிசிலன், மன்னும் அந்தணன்; நீயே
வரிசையில் வணக்கும் வாள் மேம்படுநன்;
நினக்கு யான் கொடுப்பக் கொண்மதி…” (புறம்; 200)
விச்சிக்கோ பாரிமகளிரை ஏற்கவில்லை. எனவே ‘ புலிக்கடிமால் ‘ என்கிற இருங்கோவேளை நாடிச் சென்று அவனையும் போற்றி, அப்பெண்களை ஏற்கச்சொல்லி பாடுகிறார். அவனது முன்னோர் ஒருவன் புலியைக் கடிந்த பெருமையை ஒட்டி அவன் ‘புலிகடிமால்’ என்றழைக்கப்படுகிறான்.
“இவர் யார்” என்குவை ஆயின், இவரே
ஊருடன் இரவலர்க்கு அருளி, தேருடன்
முல்லைக்கு ஈத்த செல்லா நல் இசை
படுமணி யானை, பறம்பின் கோமான்
நெடுமாப் பாரி மகளிர்; யானே
தந்தை தோழன்; இவர் என் மகளிர்;
அந்தணன், புலவன், கொண்டு வந்தனனே……..
யான் தர , இவரைக் கொண்மதி! (புற; 201)
அவனது ஈகையை “உவரா ஈகை” என்கிறார். அதாவது மனம் மகிழ்ந்து உளமாரக் கொடுப்பது. உள்ளே வெறுக்காமல் அளிப்பது.
‘உவரா ஈகை’யும் பாரி மகளிரை மணக்க ஒப்பவில்லை. மூவேந்தரைப் பகைத்துக் கொள்ள அஞ்சியே குறுநில மன்னர்கள் அப்பெண்களை ஏற்கவில்லை என்று சொல்லப்படுகிறது.
இருங்கோவேளும் பாரி மகளிரை ஏற்காத நிலையில் மனம் நொந்து கபிலர் ஒரு பாடல் பாடியுள்ளார். இகழ்ச்சிக் குறிப்பாக, சாபம் போல் ஒரு பாடல்.. ஆனால் சாபத்தின் சொற்கள் ஏதுமின்றி.
உம் குலத்திற்கு கோடி கோடியாக செல்வத்தை அள்ளித்தந்த மூதூர் ஒன்று கழாஅத்தலையார் என்கிற என் போன்ற புலவர் ஒருவரை அவமதித்தால்தான் முற்றாக அழிந்து விட்டது
“ ..உருகெழு மூதூர்
கோடி பல அடுக்கிய பொருள் நுமக்கு உதவிய
நீடு நிலை அரையத்துக் கேடும் கேள், இனி;….
நும் போல் அறிவின் நுமருள் ஒருவன்
புகழ்ந்த செய்யுட் கழாஅத் தலையை
இகழ்ந்ததன் பயனே;…” (புற ; 202)
முந்தைய பாடலைப் போன்றே இந்தப் பாடலிலும்’’ புலிகடிமால்’ என்கிற விளி வருகிறது. ஆனால் இப்போது அது கேலியாக மாறிவிடுகிறது.
“.. அடுக்கத்து
அரும்பு அற மலர்ந்த கருங்கால் வேங்கை
மாத் தகட்டு ஒள் வீ தாய துறுகல்
இரும்புலி வரிப்புறம் கடுக்கும்
பெருங்கல் வைப்பின் நாடு கிழவோயே!” (புற ; 202)
மலைச்சாரலில் , பாறையின் மீது விழுந்து கிடக்கிற வேங்கை மலர்களால் அப்பாறையானது புலி படுத்திருப்பது போன்று, புலியின் புறமுதுகு போன்று காட்சி அளிக்கும் நாட்டிற்குரியவனே!
ஆனால் நீ புலி அல்ல வெறும் கல் என்கிற இகழ்ச்சிக் குறிப்பு பாடலின் உள்ளே ஒளிந்துள்ளது.
இவர்கள் புகழ்மிக்க எவ்வியின் குலத்தில் வந்தவர்கள், வள்ளன்மை மிக்க பாரியின் மகள்கள் என்றெல்லாம் உன்னிடத்தில் போய் இவர்களை அறிமுகம் செய்வித்ததை எண்ணி நாணுகிறேன்..நீ அதைப் பொறுத்துக் கொள்
“.. எவ்வி தொல்குடிப் படீஇயர், மற்று, ‘ இவர் கை வண் பாரி மகளிர் ’ என்ற என்
தேற்றாப் புன் சொல் நோற்றிசின்..” (புற; 202)
பாரியின் பெண்களுக்கு தகுந்த மணம் முடித்து வைக்க முடியாமையால் மனம் அழிந்த கபிலர் அவர்களை தக்காரிடத்தில் அடைக்கலப்படுத்திவிட்டு தானும் வடக்கிருந்து தன் நண்பனை அடைய விரும்புகிறார். அப்போது ஒரு பாடல் பிறக்கிறது. அங்கு வரலாற்றிலோ, கதையிலோ, ஏதோ ஒன்று குறைகிறது. கதையை முடிக்கத் தெரியாதவன் முடித்தது போல ஒன்று. கபிலரின் இந்த முடிவு ஒரு பதுங்கல். ஓடி ஒளிவது போன்றது. அது சாவிற்குள் ஒளிந்தாலுமே.
“.. மலை கெழு நாட! மா வண் பாரி!
கலந்த கேண்மைக்கு ஒவ்வாய், நீ ; எற்
புலந்தனை ஆகுவை- புரந்த ஆண்டே
பெருந்தகு சிறப்பின் நட்பிற்கு ஒல்லாது,
ஒருங்கு வரல் விடாது, ‘ ஒழிக’ எனக் கூறி
இனையை ஆதலின் நினக்கு மற்று யான்
மேயினேன் அன்மையானே; ஆயினும்
இம்மை போலக் காட்டி, உம்மை
இடை இல் காட்சி , நின்னோடு
உடன் உறைவு ஆக்குக, உயர்ந்த பாலே!” (புற; 236)
நீ என்னைப் போற்றிக் காத்த போதிலும், அந்த நட்பிற்குத் தகுதியாய் நான் இல்லையா என்ன? ஏன் என்னை வெறுத்தொதுக்கினாய்? உன்னோடே என்னையும் அழைத்துக் கொள்ளாது என்னை மட்டும் இங்கு தனியே விட்டுச் சென்றது ஏன்? இம்மை போல மறுமையிலும் நாம் மகிழ்ந்திருக்கும்படியாக விதி நம்மை இணைக்கட்டும்!
கபிலர் பாரிமகளிரை மலையமான் திருமுடிக்காரியின் மகன்களுக்கு மணம்முடித்து வைத்ததாக ஒரு கதையாடல் உண்டு. ஆனால் அதற்கான சான்றை கபிலரின் புறநானூற்றுப் பாடல்களில் காணமுடியவில்லை. பாரி மகளிர்க்கு ஒளவையார் மணம் முடித்து வைத்ததாகவும் ஒரு கதையாடல் காணக்கிடைக்கிறது. இப்படி பாரி மகளிர் விஷயத்தில் நிறைய குழப்பங்கள். ஆக, முல்லைக்குத் தேர் ஈந்தவனின் குலக்கொடியர்க்கு பற்றிப் படர ஒரு துணை வாய்க்கவில்லை. இப்படி அமைந்தால் தானே அது நல்ல கதை. இப்படி இருந்தால்தானே அது வாழ்வான வாழ்வு!
மூவாயிரம் ஆண்டுகள் கழித்து இந்தக் கதையின், இதே பாத்திரங்கள், அப்படியே பாத்திரம் மாறாது நமது சினிமாவில் தோன்றினர். “ என்கிட்ட ரெண்டு பொண்ணு இருக்கு… பிடிச்சா கட்டிக்குங்க…” என்று ஒரு தமிழறிஞர் தமாசு செய்தார். கபிலர் என்கிற புலவர்க்குப் பதில் இப்போது பட்டிமன்ற நடுவர். பலரும் ஏற்க மறுக்கும் கட்டங்கரிய பெண்களாக பாரி மகளிர். இவ்வளவும் தற்செயலா? கச்சிதமா? ஒரு இயக்குநரின் தனி மூளையில் உதித்த காட்சியாக இது எனக்குத் தெரியவில்லை. நமது ‘ பெரியோர்கள் பலரும் சேர்ந்து நடத்திய நாடகம் ‘ என்றே எண்ணத் தோன்றுகிறது.
புறநானூற்றின் 120 வது பாடலாக அமைந்துள்ள கபிலரின் பாடலில் பெரிய கவித்துவம் எதுவும் தென்படவில்லை. அது பறம்பு மலையின் விவசாய முறையை விவரிக்கிறது. அதாவது அந்நிலத்தின் வழக்கமான அன்றாட காட்சிகளைக் காட்டுகிறது. ஆனால் பறம்பு இப்போது இழந்துவிட்ட நிலப்பரப்பாதலால் அது இழந்த நாட்களின் அன்றாடம் ஆகிவிடுகிறது.
அந்த ஏக்கத்தில் சாதாரணங்கள் அற்புதங்களாகி விடுகின்றன. சின்னஞ்சிறியவை யாவும் பென்னம் பெரியவையாக வளர்ந்து விடுகின்றன.
சின்னஞ்சிறிய பொருட்களென்றால், சின்னஞ்சிறிய நினைவுகளென்றால், என்னவென்று காதலர்க்கு நன்றாகத் தெரியும். எனக்கும் கொஞ்சம் தெரியும்.

இசை
கவிஞர் இசை தமிழில் நவீனக்கவிதைகளை எழுதி வரும் கவிஞர். மென்மையான நகையுணர்வு கொண்டவை இவருடைய கவிதைகள். உறவுகளின் சிக்கல்களையும் சமகாலத்தின் அரசியலையும் கேலி இல்லாமல் புன்னகையுடன் கூறுபவை.
நன்றி : தமிழ் விக்கி
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.





















அருமை
அருமை