
(1)
திருவண்ணாமலையிலிருந்து விழுப்புரம் நோக்கி செல்லும் விரைவுப் பேருந்துகள் கண்டாச்சிபுரத்தின் சிறிய நிறுத்தங்களில் பெரும்பாலும் நிற்பதில்லை. சிங்காரவேலன் தனியார் பஸ் நிறுவனத்தில் அம்புரோஸின் நண்பர்கள் ஓட்டுனர்களாய் இருப்பதால், பேருந்தின் வேகத்தை அவர்கள் நட்புக்காக குறைப்பதுண்டு. சில்லென்று வீசிய காற்றை கிழித்துக்கொண்டு கிராமத்து மண் சாலையில் விரைந்தது அம்புரோஸின் பைக். அவன் தலைக்கு மேல் அதிகாலைப் பறவைகள் இரை தேடும் அவசரத்தில் கூச்சலிட்டபடி கடந்தன. கிழக்கு தீ பற்றி எரிய மேற்கு வானில் கரிய புகை மூட்டமாய் முகில்கள். ஆகாயக் கம்பளத்தை வெளுத்துக்கொண்டிருந்தது சூரியன். நீலமும் வெண்மையும் விண்ணிலிருந்து விடுபட்டு, வேலியோரம் படர்ந்திருந்த சங்கு மலர்க்கொடிகளில் இறங்கி மொட்டுகளை அவிழ்த்து கண்சிமிட்டின. தார் சாலையை தொட்டு சரவணா மளிகை ஸ்டோர் வந்தவுடன் வாசலில் வண்டியை நிறுத்தி சைடு ஸ்டேண்டு போட்டான் அம்புரோஸ். கல்லாபெட்டி திசையில் நண்பன் முருகனை தேடினான். தூரத்தில் ஒலித்த பஸ் ஹாரனை வைத்தே அது மணி அண்ணன் என்று யூகித்தான். மணியண்ணன் இளையராஜாவின் தீவிர ரசிகர். ராஜாவின் எல்லா பாடல்களையும் பஸ் ஹாரனில் வாசிக்கக் கூடிய நிபுணர். வேகத்தடை ஒன்று எதிரில் இருப்பதாக பாவனை செய்து பேருந்தின் வேகத்தை குறைத்த மணியண்ணன், ஒரு மீன்கொத்தி பறவை போல அம்புரோஸை லாவகமாய் கவ்விய பின் ஆக்ஸிலரேட்டரை அழுத்தினார்.
ஓடுகிற பேருந்தில் எளிதாய் தாவி ஏறுபவன், இன்று படிக்கட்டில் தடுமாறி சறுக்கி விழப்போனான். சட்டென்று கைபிடித்து மேலே தூக்கிவிட்ட நடத்துனர், ‘பார்த்து தம்பி’ என்றார்.
கடைசி சீட்டில் அமர்ந்திருந்த பெரியவர், ‘வாழ்க்கையும் கூட பஸ் பயணம் மாதிரிதான் தம்பி. வழுக்கி விழுந்துட்டா சிரமம். பத்திரமா பயணிக்கணும்’ என்றார்.
‘யோவ் பெருசு. செத்தா போயிட்டேன்? காலங்காத்தால கடுப்பேத்திகிட்டு’ சீறினான் அம்புரோஸ்.
‘செத்து போன பிறகு எதுவும் பேச முடியாதே ராசா’
‘போதும் மூடுய்யா’
வழக்கமாய் அவன் சாப்பாட்டுப் பையை வாங்கி மடியில் வைத்துக்கொள்ளும் மேகலா அக்கா ‘என்னடா, கொஞ்ச நாளா லஞ்ச் பாக்ஸ் கொண்டு வரதே இல்லை?’ என்று விசாரித்து சூழலின் இறுக்கத்தை தளர்த்தினாள்.
அம்புரோஸின் அம்மா உயிருடன் இருந்தவரை அவனுக்கு தினமும் எதையாவது சமைத்து தந்துவிடுவாள். உடம்புக்கு சுகமில்லாத நாட்களில் கூட பழைய மீன் குழம்பை சாதத்தில் பிசைந்து, அவித்த முட்டை வைத்து விட்டால் மதிய உணவு தயார். போன மாதம் அம்மா இறந்த அதிர்ச்சியிலிருந்து அம்புரோஸ் இன்னும் மீளவேயில்லை. மூன்று வேளையும் சாராய போதையில் ஆடிய தந்தை ஆரோக்கியம், அவனது தாயை புதைத்த பிறகு நாள் முழுவதும் குடித்து கும்மாளம் போட, வாந்தியும் தரித்தரமுமாய் வீடே நாறிக்கொண்டிருந்தது. அதிகாலை வீட்டில் நிகழ்ந்த சம்பவங்கள் மீண்டும் மனத்திரையில் எழுந்து விரிய, அவனது உடல் நடுங்கி அதிர்ந்தது.
பேருந்தின் உள்ளே சென்று காலி சீட் தேடி உட்கார அம்புரோஸ் முயற்சி செய்வதேயில்லை. படிக்கட்டு கம்பியை பற்றிக்கொண்டு, படிக்கட்டில் நின்றபடியும், தொங்கியபடியும் பயணிக்க பழகிவிட்டான். குளிர்ந்த காற்று முகத்தில் அடிக்க, அலையலையாய் சுருள்சுருளாய் பறந்த அவன் தலைமுடி அருவியாய் வழிந்து தோள்களை தொட்டது. அவனது சுருட்டை முடிக்கும், சிரித்தால் கன்னத்தில் விழுகின்ற சிறு குழிக்கும், அதிரடி நடன அசைவுகளுக்கும், விழுப்புரம் வைர விலாஸ் நகைக்கடையில் பல ரசிகைகள் இருந்தாலும், மின்னலாய் தோன்றி வரம் தரப்போகும் ஒரு தேவதையின் வருகைக்காக அவன் காத்திருந்தான். சென்ற ஆண்டு அட்சய திரிதியை நாளன்று வைர விலாஸ் சிறப்பு தள்ளுபடியை முன்னிட்டு அலை மோதிய கூட்டமும், அமோக வியாபாரமும், கம்பெனியின் லாபத்தை இரு மடங்கு உயர்த்தியதால், ஊழியர்களுக்கு பாராட்டு விழாவும் இரவு விருந்தும் ஏற்பாடு செய்திருந்தார்கள்.
அம்புரோஸ் அபிதாவுடன் முதல் முறையாக பேசியது அந்த விழாவில்தான். விழிகளை கூச வைத்த ஷாண்டலியர் வெளிச்சத்தின் கீழ் கிளிப்பச்சை பட்டுப்புடவையில் அன்று அபிதா ஜொலித்துக்கொண்டிருந்தாள். பாடல் போட்டி அறிவித்ததும் கணீரென்று பாடத் துவங்கினாள்.
‘அலைபாயுதே கண்ணா
என் மனம் மிக அலைபாயுதே
உன் ஆனந்த மோகன
வேணுகானம் அதில்
அலைபாயுதே கண்ணா’
கானடா ராகத்தில் அபிதா மனமுருகி பாட, மொத்த கூட்டமும் மெய் மறந்து கேட்டது.
ப்ரகாஷ் அண்ணன் அம்புரோஸ் காதருகில் கிசுகிசுத்தார். ‘மாப்ள, அபிதா பாடும் போது ‘கண்ணா கண்ணா’ என்கிற இடத்தில் உன்னைத்தான் தேடுகிறாள். கவனிச்சியா?’
‘சும்மாயிருங்க அண்ணே. நெனப்புதான் பொழப்ப கெடுக்குமாம்’
‘உண்மைதான்டா. நானும் பார்த்தேன்’ என்றாள் ரெஜினா.
‘கொன்னுடுவேன். ஓடி போயிடு’
நிகழ்ச்சியில் அடுத்ததாக டான்ஸ் போட்டி என்ற அறிவிப்பு ஒலிக்க, அம்புரோஸின் குழு தாவிச் சென்று மேடையேறினார்கள்.
‘காதல் வைபோகமே
காணும் நன்னாள் இதே
வானில் ஊர்கோலமாய்
ஜோடிக்கிளிகள்
கூடி இணைந்து
ஆனந்தப் பண் பாடுமே’
புதிய ரீமிக்ஸ் பாடலுக்கு அம்புரோஸின் ஆட்டத்தால் மேடையே அதிர்ந்தது. அரங்கத்தில் விசில் சப்தம் செவிகளை கிழிக்க, வைர விலாஸ் ஊழியர்கள் இடைவிடாமல் ‘ஒன்ஸ்மோர்’ கூவினர். மீண்டும் ஒரு முறை ஆடியதால் அம்புரோஸ் அணிந்திருந்த நீலச்சட்டை முழுவதும் வியர்வையில் நனைந்து கருநீலமானது. எறும்புகள் இனிப்பை நோக்கி வேகமாய் ஊர்ந்து சென்று, துகள்களுடன் திரும்பி வருவது போல, பஃபே பகுதியில் பரபரப்பாய் நகர்ந்த ஊழியர்களின் தட்டுகளில் பலவகை உணவுகளின் மணம்.
‘உங்க டான்ஸ் ரொம்ப நல்லா இருந்தது’ குரல் கேட்டு அம்புரோஸ் திரும்ப, கையில் தட்டுடன் நடந்து வந்து அவனுடன் வரிசையில் சேர்ந்துகொண்டாள் அபிதா.
‘அலைபாயுதே பாட்டு சூப்பர்ங்க. தேன் வடியும் குரல் உங்களுக்கு’
‘தேங்ஸ். வைர விலாஸ் மொட்டை மாடியில் நீங்க டான்ஸ் கற்று கொடுப்பதாக ரெஜினா சொன்னாள். நானும் சேர்ந்துக்கலாமா?’
தூரத்தில் ப்ரகாஷ் அண்ணனும் ரெஜினாவும் அவனை பார்த்து சிரித்து கையசைத்தனர். தயக்கம் தடுமாற்றம் எதுவுமின்றி அபிதாவுடன் அவன் தெளிவாக பேசுவதை எண்ணி அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது.
‘நீங்க பாட்டு சொல்லிக் கொடுங்க. நான் டான்ஸ் கற்று தரேன்’
‘இது நல்ல டீல். இப்பவே ஆரம்பிக்கலாமா?’ புன்னகைத்தாள் அபிதா.
‘வானம் தாலாட்டுப் பாட
மலைகள் பொன் ஊஞ்சல் போட
நீயும் என் கையில் ஆட’ மிச்ச வரிகளை ஹம்மிங் செய்தபடி அபிதா நகர்ந்து செல்ல, அம்புரோஸ் மனசுக்குள் டூயட் ஆடத் துவங்கினான்.
அலைபேசி அதிர்ந்து நினைவுகள் கலைய, மறுமுனையில் முருகன். ‘டேய். இன்னைக்கு சந்தை நாள். மளிகை சரக்கு வாங்க சந்தைக்கு போகணும். பைக் சாவியை வச்சிட்டு போகலையா?’
பாக்கெட்டை தடவி சாவியை தொட்டு, ‘மன்னிச்சுடு மாப்ள. சுத்தமா மறந்துட்டேன். அட்ஜஸ்ட் பண்ணிக்கோ’ என்றான் அம்புரோஸ்.
பிறகு அலைபேசியின் திரையை விரலால் தடவி தேடலை ஆரம்பித்தான். அவனது டான்ஸ் காணொளிகள் ரீல்ஸ், ஷார்ட்ஸ் தளங்களில் நிறைய லைக்ஸ் வாங்கியிருந்தன. காமிராவை தொட்டு ஒரு செல்ஃபி எடுத்தான். அழித்தான். முகத்தில் புன்னகை இயல்பாக வரவில்லை. மீண்டும் க்ளிக் செய்து மீண்டும் அழித்தான். சில மாதங்களாய் அபிதாவிடமிருந்து அழைப்பு ஏதுமில்லை. கடையில் முகம் கொடுத்து பேசுவதையும் நிறுத்திவிட்டாள். தினமும் காலையில் கண் விழித்தவுடன் அபிதா ஏதாவது செய்தி அனுப்பியிருப்பாள் என்ற நம்பிக்கையில் அலைபேசியை தேடியெடுத்து, அது பொய்த்து, கிரகணம் போல நெஞ்சின் ஓரம் சிறியதாய் கவ்வும் ஒரு துயரம் பின் மெல்ல பரவி அவனை முழுதாய் தின்றுவிடுகிறது. தினம் தினம் கிரகணங்கள். ஒரு பௌர்ணமி மாலைப்பொழுது புதுச்சேரி கடற்கரையில் அபிதாவுடன் நிகழ்ந்த சம்பவத்தை மீண்டும் நினைத்துப் பார்த்தான். அவனுக்கே அவன் மீது எரிச்சல் அதிகமானது. ஒடும் பேருந்திலிருந்து அலைபேசியை தூக்கி எறிய விரும்பினான். வளைந்து வளைந்து சென்ற பாதையின் இருபுறமும் சிறியதும் பெரியதுமாய் குன்றுகள். பாறை மீது பாறை வைத்து எவர் உருவாக்கிய குன்றுகள் இவை? கல் விதைகளை மண்ணில் தூவியது யார்? கல் முளைத்து பூத்து பெருகி மலைத் தொடர்களாகி வான் நோக்கி வளர்கின்ற கல்வனங்கள். பயணத்தில் தினமும் தென்படும் மலைக்காட்சிகள் அவனது மனச்சுமையை கூட்டிவிடுவதால் அதன் எடை தாளாமல் சோர்ந்து சுருண்டுவிடுகிறான். மலைகள் அவன் கனவுகளை அழுத்தி அவற்றின் மீது சம்மணமிட்டு சிரித்தன. அங்கிருந்து தப்பித்து புதுச்சேரிக்கு சென்று டான்ஸ் அகாடமி திறந்து புதியதொரு வாழ்க்கையை தொடங்குவதே அவன் இலக்கு. மலையுச்சியில் வீற்றிருந்த மலைப்பாறை ஒன்றை ஓங்கி உதைத்தான். அது உருண்டோடியது. பாறையுடன் சேர்ந்து அவனது வலது காலும் பிய்ந்து பறந்தது. மலைக்காற்றில் ரத்தத்தின் ஈரம். ஒரு மரத்தை பிடித்துக்கொண்டு இடது காலால் இன்னொரு பாறையை எட்டி உதைக்க, மலையெங்கும் குருதியின் சாரல். கால்களை இழந்த பிறகு கைகளால் தள்ளி, மண்டையால் முட்டி பாறைகளை உருட்டிவிட முயற்சித்தான். மலையின் மீது பசுமையாய் படர்ந்திருந்த பச்சையெல்லாம் மெல்ல சிவப்பாய் மாறி பிசுபிசுத்து வழிந்தது. மலைகள் முழுவதையும் தகர்த்து சாய்ப்பதற்குள் விழுப்புரம் வந்துவிட்டதால், பேருந்தை விட்டு இறங்கி, வைர விலாஸ் கடைக்குள் நுழைந்து வேலையை ஆரம்பித்தான் அம்புரோஸ்.
(2)
புதுவையிலிருந்து விழுப்புரம் நோக்கி செல்லும் விரைவுப் பேருந்துகள் கண்டமங்கலத்தின் சிறிய நிறுத்தங்களில் பெரும்பாலும் நிற்பதில்லை. அதிகாலை குளித்து, மைசூர் பட்டு புடவையணிந்து, மூக்குத்தி ஜொலிக்க, பூவும் பொட்டுமாய் அம்மன் சிலை போல் நிற்கும் அபிதாவை பார்த்துவிட்டால் பச்சையம்மன் பஸ் சர்வீஸ் ஓட்டுனர்கள் பக்தி பரவசத்தில் ப்ரேக் அடித்து பேருந்தை நிறுத்திவிடுவர். புன்னகையால் நன்றி கூறி பேருந்துக்குள் ஏறும் அபிதாவுக்கு எந்த ஸ்டாப்பில் எந்த சீட் காலியாகும் என்பதெல்லாம் அத்துப்படி. திருப்புவனை கல்லூரியின் லேடி லெக்சரர், வளவனூர் கோவில் புரோகிதர், கோலியனூர் ஆடிட்டர் என சரியான இடம் தேடி அருகில் நின்றுவிட்டால் போதும், அமர்வதற்கு இருக்கை கிடைத்துவிடும். நடத்துனர் காண்பித்த க்யூ ஆர் கோடு ஸ்கேன் செய்து டிக்கெட் பணத்தை மொபைல் வழியே செலுத்தினாள். ஒரு கிழவி கொண்டு வந்த கூடையில், இலையோடு பறிக்கப்பட்ட பழுத்த கொய்யாப்பழங்களால் பஸ் முழுக்க கனி வாசனை. ஜிபே வசதி பற்றி கிழவியிடம் விசாரித்துவிட்டு பழம் வாங்கிக்கொண்டாள் அபிதா. காலையிலிருந்தே ஆபேரி ராகத்தில் தியாகராஜரின் நகுமோ கீர்த்தனை அவள் உள்ளத்திலும் உதட்டிலும் தொற்றிக்கொண்டது. எத்தனையோ கலைஞர்கள் அதை பாடியிருந்தாலும் பானுமதியம்மாவின் குரல் மீது அபிதாவுக்கு தனி ப்ரியம். கல்கியின் பொன்னியின் செல்வன் திரைப்படம் ரிலீசுக்கு தயாரானதால் பேருந்தின் ஜன்னல் வழியே தென்பட்ட ஊர்களின் சுவரொட்டிகளில் நடிகர் விக்ரம் குதிரையில் வாளேந்தி ஆதித்த கரிகாலராக நகர்வலம் புரிந்தார். அம்புரோஸ் பற்றிய நினைவுகளை மறக்க முயன்றாலும் அதிலிருந்து மீள முடியாமல் அபிதாவின் மனம் சுழன்று சென்று, குறும்பு ததும்பும் அவன் முகத்தின் முன்பாக மீண்டும் மண்டியிட்டது.
‘என்ன புத்தகம் இது? தலைகாணி சைஸ்ல’ என்றான் அம்புரோஸ்.
‘பொன்னியின் செல்வன். முதல் பாகம். புதுவெள்ளம் ‘ என்றாள் அபிதா.
‘படிச்சுட்டு தரலாமா?’
‘ஓ. தாராளமா. நான் ஏற்கனவே நாலு முறை படிச்சுட்டேன். இது ஐந்தாவது முறை.’
ஒரு வாரம் கழித்து ஒரு அத்தியாயம் கூட முடிக்காமல் புத்தகத்தை திருப்பி கொடுத்துவிட்டான் அம்புரோஸ்.
‘என்ன ஆச்சு?’
‘முடியலை. இந்த கதை திரைப்படமா வருதாமே. அதான் சினிமாவா பார்த்துடலாம்னு முடிவு பண்ணிட்டேன். ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ. நம்ம ரெண்டு பேரும் ஜோடியா. ஓகேவா? டிக்கெட் நான்தான் ஸ்பான்சர்’
‘அது சரி’
‘புத்தகத்தோட கடைசி பக்கத்தை பாக்கலயா? பாரேன். ப்ளீஸ்’ குழந்தையாய் கெஞ்சினான் அம்புரோஸ்.
கடைசி பக்கத்தில் ஒரு இதயம் வரையப்பட்டு அதன் நடுவே அம்பு பாய்ந்தது. அம்பின் மீது ரோஜாப்பூ.
‘என்னடா இது?’
‘புரியலயா? சேர்த்துப் படி’
விரலால் படத்தை தொட்டு காண்பித்து ‘அம்பு + ரோஸ் = அம்புரோஸ்’ என்றவாறு வெள்ளந்தியாய் சிரித்தான் அம்புரோஸ்.
‘அப்ப இந்த இதயம்?’
‘அதை நீதான் சொல்லணும் அபிதா. எல்லாத்தையும் நானே கட்டுடைக்கணும்னா எப்படி?’
‘தாங்க முடியலடா. படைப்பூக்கம் பொங்கி வழியுது.’
”பொன்னியின் செல்வன் படத்துல தலைவர் சீயான் விக்ரமும் உலக அழகி ஐஸ்வர்யா ராயும் ஜோடியாம். நான் கண்டாச்சிபுரத்து ராஜா. நீ கண்டமங்கலத்தின் ராணி. நாம ரெண்டு பேரும் சேர்ந்து இந்த நடுநாட்டையே ஆளப்போறோம்.
‘டேய் லூசு. கதைல ஆதித்த கரிகாலனும் நந்தினியும் பிரிஞ்சுடுவாங்கடா’
‘அதெல்லாம் சினிமாவுல மாத்தி எடுத்துடுவானுங்க. சினிமாவை விடு. நிஜ வாழ்க்கையில் இருவரையும் இணைச்சுடலாமே! என்ன சொல்ற? டீல் ஓகே?’
அபிதா நீண்ட பெருமூச்சுடன் நிமிர்ந்து உட்கார்ந்தாள். வளவனூரின் குறுகலான மார்க்கெட் சந்துகளில் போக்குவரத்து நெரிசலாகி பேருந்து தத்தித் தவழ்ந்து தடுமாற, உள்ளே காற்றோட்டம் குறைந்து புழுக்கத்தால் வியர்வை துளிர்த்தது. பூவரசங்குப்பம் நரசிம்மர் கோவிலுக்கு பிரிந்து செல்லும் சாலையை தாண்டும்போது அவளுக்கு அப்பாவின் ஞாபகம் வந்தது. சிறு வயதிலேயே தந்தையை இழந்து விதவைத் தாயுடன் வாழ்வில் போராடி வளர்ந்தவள் அபிதா. அப்பாவின் நினைவாக எஞ்சி உள்ளவைகளில் அந்த நரசிம்மர் கோவிலும் ஒன்று. ஸ்மார்ட் வாட்ச்சில் தேதி பார்த்தாள். சுக்ல பட்சம் முடிந்து மகாளய பட்சம் நெருங்கி விட்டதால், இந்த ஆண்டு வில்லியனூர் அருகிலிருக்கும் திருக்காஞ்சி சென்று சங்கராபரணி நதியில் அப்பாவுக்கு திதி கொடுக்க எண்ணினாள். அம்புரோஸ் பற்றி தனது தாயுடன் மனம்விட்டு பேச நேற்றுதான் நேரம் அமைந்தது. தாய் கூறியதை அவனுடன் பகிர்ந்து எதிர்காலம் குறித்து கலந்தாலோசிக்க விரும்பினாள்.
அட்சயை திரிதியை பாராட்டு விழா சந்திப்புக்கு பிறகு அம்புரோஸ் அபிதாவுக்கு நடனம் கற்றுத்தர துவங்கியவுடன், அவளது உடல், மனம், ஜடை, ஜிமிக்கி, சேலை, வாழ்வின் அன்றாடங்கள் அனைத்தும் துள்ளியெழுந்து ஆனந்த நடனமாடின. அவன் ஆட்டுவித்தான். அவள் ஆடினாள். ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே. அவன் உருக வைத்தான். அவள் உருகினாள். உருகுவித்தால் ஆரொருவர் உருகா தாரே. அவள் பாட வைத்தாள். அவன் பாடினான். பாட்டுவித்தால் ஆரொருவர் பாடா தாரே. அவள் பணிய வைத்தாள். அவன் பணிந்து சிரித்தான். பணிவித்தால் ஆரொருவர் பணியா தாரே. நடனப் பயிற்சியின்போது அவன் அவளை தொட்டு இழுத்து வளைத்து அணைத்து இடுப்பில் கைகள் வைத்து, அவளது உடலை விண்ணை நோக்கி உயர்த்தினான். அவள் கைகள் விரித்து சிறகு முளைத்து காற்றில் பறந்தாள். ஆடலும் பாடலும் இணைந்தன. வலியும் துயரமும் மறைந்தன. அகம் பொலிந்து முகம் தெளிந்து அவர்கள் இருவரும் கந்தர்வ லோகத்தில் சஞ்சாரித்தனர்.
ஆடி மாதம் ‘புதுவெள்ளத்தில்’ வாசிக்க தொடங்கிய பொன்னியின் செல்வன் நாவலை தை மாதம் ‘பட்டாபிஷேகத்தில்’ முடித்தாள் அபிதா. எல்லாம் நன்றாகத்தான் பயணித்தது, அந்த மாசி மாத பௌர்ணமி எழும்வரை. அபிதாவின் அலைபேசி அதிர்ந்தது. ‘ப்ரகாஷ் அண்ணனின் பைக் கடன் வாங்கி தெருமுனையில் நிற்கிறேன். ஏதாவது கதை சொல்லிட்டு அரை நாள் லீவுடன் வெளியே வா. நாம் பாண்டிச்சேரி போறோம். சர்ப்ரைஸ் ட்ரிப்.’ என்றான் அம்புரோஸ்.
‘என்னடா சர்ப்ரைஸ்?’
பின் சீட்டில் அபிதா அமர்ந்துகொள்ள புதுவை நோக்கி பைக் பறந்தது. ஆரோவில் கடற்கரை எதிரே விற்பனைக்கு இருந்த காலி மனைகளை தாண்டி ‘டு லெட்’ பலகை தொங்கிய ஒரு கட்டிடத்தின் முன் வண்டியை நிறுத்தினான்.
‘இதுதான் ரெஜினா சொன்ன இடம். டபுள் ஏ டான்ஸ் அகாடமி தொடங்கப்போகும் இடம். எப்படி இருக்கு? ஓகே?’
‘என்னடா பெயர் இது? டபுள் ஏ, ட்ரிப்பிள் ஏ பேட்டரி மாதிரி?’
‘அம்புரோஸ் & அபிதா. நம் பெயர்களை சுருக்கி டபுள் ஏ. இது கூடவா புரியல?’
‘அப்ப வைர விலாஸ் வேலை?’
‘கேரளா, பெங்களூர், ஆந்திரா, தமிழ்நாடு, ஃபிரெஞ்சு டூரிஸ்ட்டு கும்பல் எல்லாம் புதுச்சேரி தான் வருது. இப்பல்லாம் டான்ஸ் மாஸ்டருக்கு செம டிமாண்டு தெரியுமா? மொத்த இந்தியாவும் இனிமே டான்ஸ் ஆடத்தான் போகுது. வெஸ்டர்னையும் இந்திய நடனத்தையும் இணைச்சு புதிய வகை டான்ஸ் கற்றுத் தருவேன். என்னை வாழ்த்துங்கள் மேடமொசல். மெர்சி பொக்கூ.’
‘புதுவை மண்ணில் கால் பதிச்சதும் ஃபிரெஞ்சு வேறயா?’
‘ ஃபிரெஞ்சு விஷயங்கள் இன்னும் நிறைய இருக்கு. வா போகலாம்.’
‘எங்கே?’
‘முழு நிலவு எழுவதை காண விருப்பம் என்று நீ சொன்னது நினைவிருக்கிறதா? இன்று பெளர்ணமி. சர்ப்ரைஸ்.’
அந்தி சாயத் துவங்கியதால், கடல் அலைகள் கருநீலமாய் மாறின. அவை சர்ப்பங்கள் போல நெளிந்து நீந்தி வந்து கரை தொட்டவுடன் சீறியெழுந்து படமெடுத்து நுரைத்து கடல் மண்ணை கொத்தின. இருவரும் ஆரோவில் கடற்கரையிலிருந்து கிளம்பி கோட்டக்குப்பம் வழியாக நடுகுப்பம் தாண்டி வைத்திக்குப்பம் உள்ளே நுழைந்தனர். மாசி மகம் திருவிழாவுக்காக நூற்றுக்கணக்கான தெய்வங்கள் வெகுதூரம் பயணித்து புதுவை வந்தடைந்து, கடலில் நீராடி, வண்ணப் புத்தாடை அணிந்து, அலங்காரம் பூசி, பூவும் பொன்னும் சூடிக்கொண்டு, கடற்கரையில் எழுந்தருளின. மயிலம் முருகர், செஞ்சி ரங்கநாதர், தீவனூர் பொய்யாமொழி விநாயகர், மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி, பூமியான்பேட் முத்து மாரியம்மன், சோலை நகர் செங்கேணியம்மன், வைத்திக்குப்பம் பச்சைவாழியம்மன், கமல சாய்பாபா, வெக்காளியம்மன், பண்ணாரியம்மன், கூட்டேரிப்பட்டு பள்ளிக்கொண்ட பெருமாள், பேட்டையான்சத்திரம் சிவசடையப்பர் என தெய்வங்களின் வரிசை நீண்டன. பெருந்திரளாய் பக்தர்கள் நிரம்பி வழிய அம்புரோஸ் நுழைவாயிலில் வண்டியை நிறுத்திவிட்டான். ஏராளமான தெய்வங்களை ஒரே இடத்தில் கண்டவுடன் அபிதா பரவசமாகி நின்றுவிட்டாள். ஒவ்வொரு கடவுளையும் தரிசித்து குங்குமம், சந்தனம், துளசி இலை, தீர்த்தம் வாங்கிக்கொண்டாள். சில பூசாரிகள் அம்புரோஸ் நெற்றியில் விபூதி அடித்தனர். அவன் திகைத்து அபிதாவின் வலது கையை இறுக்கிப் பிடித்துக்கொண்டான். அவர்கள் கைகோர்த்து நடந்து செல்வதை அத்தனை தெய்வங்களும் வேடிக்கை பார்த்தன.
சோலை நகர் சாலையை கடந்து கடற்கரை அருகில் இருந்த ஒரு ரெசார்ட் உள்ளே நுழைந்தனர். அறை முழுவதும் ஃபிரெஞ்சு வேலைப்பாடுகள். சுவற்றில் சிற்பங்கள். ஓவியங்கள். ஹால் நடுவில் பெரிய ஊஞ்சல். ஏராளமாய் பூந்தொட்டிகள். ஸ்விம்மிங் பூல். ஒரு பியானோ. வெள்ளை மற்றும் சிவப்பு ஒயின் பாட்டில்கள்.
‘என்னடா இடம் இது?’
‘ரெஜினாவோட நண்பன்தான் இங்கு ரெசார்ட் மேனேஜர். இன்றைய மாலைப்பொழுது சில மணி நேரங்களுக்கு இந்த இடம் நமக்கு மட்டுமே’
ஃபிரெஞ்சு விண்டோ வழியே தெரிந்த கடல் ஒரு நீரோவியம் போல் விரிய, அலையோசைகள் தொடர்ச்சியாய் காதில் விழ, மஞ்சள் நிலா பிரம்மாண்டமாய் எழ, கோப்பையில் ஊற்றிய பொன் திரவமாய் சமுத்திரம் பொங்கி வழிந்தது. அபிதா குழப்பத்துடன் நிலவை பார்த்து நிற்க, அம்புரோஸ் சட்டென்று அவளது நெற்றியில் முத்தமிட்டான். அபிதாவின் பெரிய இமைகள் படபடவென்று பட்டாம்பூச்சி சிறகடிப்பு போல அவனது முகத்தை வருடியது. அவளது அருகாமையும், ஸ்பரிசத்தின் மென்மையும், சூடிய பூவின் வாசனையும் அவனை கிறங்கடித்தது. இதழ்களில் ஃபிரெஞ்சு முத்தம் தர முயற்சித்து தடுமாறினான். கடல் காற்றில் சேலை நழுவி விழ, ஏகாந்தத்தில் பித்து தலைக்கேறி அவளது மேலாடை உள்ளாடை இரண்டையும் கழற்றினான். பொன் விக்ரகம் போல் ஜொலித்தாள் அபிதா. வலது மார்பின் முலையில் சிறு முடிகள். இடது முலையை அம்புரோஸ் முத்தமிட நெருங்கியபோது அவனை பிடித்து வேகமாய் தள்ளினாள். உடைகளை அள்ளி அணிந்தபடி வெளியே ஓடினாள். கடற்கரையில் பெளர்ணமி அலைகள் கொந்தளித்து எழுந்து பேரோசையுடன் வீழ்ந்தன.
‘ஏன் அபிதா? திடீர்னு போயிட்ட?’ வாசலுக்கு ஓடி வந்து பதட்டமாய் கேட்டான் அம்புரோஸ்.
‘நான் பார்க்க விரும்பிய பெளர்ணமி நிலவு புதுச்சேரி கடலில் அல்ல. திருவண்ணாமலை கோவிலில். என் அப்பா இறந்தது புதுவை ஜிப்மர் மருத்துவமனையில். ஏகப்பட்ட கீமோதெரப்பிகள். அந்நாட்களில் நானும் அம்மாவும் புதுவையில் எதிர்கொண்ட துயரங்கள் ஏராளம். நான் மறக்க விரும்பும் கசப்புகள் நிறைந்த ஊர் இது. எனக்கு இங்கே ஒரு கணம் கூட நிற்க பிடிக்கவில்லை. இங்கிருந்து என்னை அழைத்து சென்றுவிடு, ப்ளீஸ்’ கண்ணில் நீர் வழிய கெஞ்சினாள் அபிதா.
பச்சையம்மன் பஸ் விழுப்புரம் வைர விலாஸ் அருகே நிற்க, கிழவியிடம் வாங்கிய கொய்யாப்பழங்களையும், லஞ்ச் பாக்சையும் எடுத்துக்கொண்டு, விழிகளில் துளிர்த்த கண்ணீரை துடைத்தபடி கடைக்குள் நுழைந்து வேலையை ஆரம்பித்தாள் அபிதா.
(3)
கைக்குழந்தைகளுக்கான அணிகலன்களை அடுக்கியபடி தரைத்தளத்தில் வேலையை துவங்கிய அம்புரோஸ், கடைக்குள் நுழைந்த அபிதாவை கவனித்தான். அவளும் அவனை நோக்கியது போல் ஒரு பிரமை. லிஃப்டினுள் மின்னலாய் மறைந்து ஐந்தாவது தளத்துக்கு சென்றுவிட்டாள். சேர்ந்த புதிதில் அபிதா தரைத்தளத்தில்தான் வேலையை துவங்கினாள். ஆனால் ஓரிரு ஆண்டுகளில் தொடர்ச்சியாக பதவி உயர்வுகள் பெற்று, முதல் மாடியில் பட்டுப்புடவை, பரிசு பொருட்கள், இரண்டாவது மாடியில் வெள்ளி பொருட்கள், மூன்றாம் மாடியில் தங்கம், நான்கில் வைரம், ஐந்தாம் தளத்தில் ப்ளாட்டினம் என உயர்ந்துகொண்டே போனாள். அம்புரோஸ் மட்டும் தரைத்தளத்தில் கைக்குழந்தைகளுக்கான கொலுசு, காப்பு, பாலாடை, வசம்பு வளையல், அரசிலை, அரைஞான் கயிறுகளில் சிக்கிக்கொண்டான். அவளது நுனி நாக்கு ஆங்கிலமா, கணிப்பொறி அறிவா, வாடிக்கையாளர்களை கவனிக்கும் விதமா, குடும்பப் பின்புலமா, எதுவென்று புரியாமல் அவளது வெற்றிகளை வியப்புடன் ரசித்தான்.
‘நீ என்னை விட்டு விலகி வெகு தூரம் போய்க்கொண்டு இருக்கிறாயே அபிதா?’
‘டேய், இந்த பணம், பதவி உயர்வு எல்லாம் லௌகீக சர்வைவலுக்கு. ஆனால் உன்கிட்ட கலை இருக்கு. உனது சிம்மாசனம் இருப்பது எங்கள் எல்லோருக்கும் மேலே, மிக உயரத்தில். மொட்டை மாடியில் டான்ஸ் கற்றுத்தரும் கலைஞன் நீ.’
அவளுடன் பேசி கழித்த பொழுதுகள் யாவுமே அவனது மனசுக்கு மயிலிறகு மருந்துகள். அவனுக்கு தன் தந்தையை நினைத்தவுடன் எரிச்சல் பொங்கியது. இன்று அதிகாலை குளித்து உடையணிந்து தலை சீவி வேலைக்கு கிளம்பிய போது நாராசமாய் கூச்சல். காலையில் குடித்துவிட்டு ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டார் ஆரோக்கியம். அம்மா இறந்து ஒரு மாதம் கழித்து அவனது அண்ணனும் அண்ணியும் வேலூரிலிருந்து வந்திருந்தார்கள். அண்ணனுக்கு வேலூர் மருத்துவமனையில் தரை துடைத்து, கழிப்பறை சுத்தம் செய்யும் வேலை. அண்ணி ரிசப்ஷனிஸ்ட். ஒரு இந்து பெண்ணை மணந்ததால் அண்ணன் மீது அவனது தந்தைக்கு மறைமுக வெறுப்பு. அண்ணி குளியலறையின் உள்ளே இருக்க, கதவின் முன்பாக ஆரோக்கியம் லுங்கியுடன் ஆடிக்கொண்டிருந்தார்.
‘கல்யாணமாகி ஆறு வருஷமாச்சு. இன்னும் குழந்தை பொறக்கல. ஏய், மலடி, மெடிக்கல் ரிப்போர்ட்டு கேட்டேனே? எங்கடி?’
‘அப்பா’ சமாதானம் செய்ய முயற்சித்தான் அண்ணன்.
‘நீ ஆம்பிளடா. நீ என்னோட விந்து. நிச்சயம் இவ உடம்புலதான் கோளாறு இருக்கு’
‘எப்ப வீட்டுக்கு வந்தாலும் அவளை ஏன் திட்டுற?’
‘அப்போ உன்கிட்டதான் பிரச்னையா? நீ பொட்டையா? இவ மினுக்கிடா. இவள என்கிட்ட அனுப்பு. ரிப்பேர் பண்ணிடறேன். உனக்கு நான் பெத்து தரேண்டா குழந்தை. ஆம்பிள சிங்கம்டா நானு’ போதையின் உச்சத்தில் பிதற்றினார் ஆரோக்கியம்.
தொலைக்காட்சி பெட்டியில் ஏதோ ஒரு சேனலில் பக்த பிரகலாதன் காட்சி ஓடிக்கொண்டிருந்தது. கையிலிருந்த கதையை தூக்கி நடிகர் ரங்கா ராவ் கொக்கரித்தார் ‘நான் கேட்கிறேன். இதோ இந்தத் தூணில் உன் ஹரி இருக்கின்றானா?’
அம்புரோஸ் வேகமாய் ஓடி வந்து தண்ணீர் மண்பானையை தூக்கி ஓங்கி ஆரோக்கியத்தின் மண்டையில் அடிக்க, பானை சில்லு சில்லாக உடைந்து சிதறியது. சரிந்து விழுந்தவரின் முகத்தில் சில்லென்று நீர் வழிய அவரது போதையும் சித்தமும் கலங்கியது.
‘தெவிடியா மகனே. என் மார்லயா பாயுற? உன் கொட்டைய நசுக்குறேன் பாரு’ ஆவேசத்துடன் எழுந்தார் ஆரோக்கியம். லுங்கி அவிழ்ந்து நிர்வாணமாய் நின்றார்.
குளியலறை கதவு திறந்து அழுதுகொண்டே ஓடினாள் அண்ணி. அவளைத் தொடர்ந்து அண்ணன் ஓட, அருகில் இருந்த புளிப்பானையை எடுத்து ஆரோக்கியத்தின் மண்டையில் மீண்டும் அடித்தான் அம்புரோஸ். அவரது சொட்டை மண்டையில் சிறிய சில்லுகள் பொத்துக்கொண்டு ரத்தம் வழிந்தது.
‘ஊரெல்லாம் கொரோனா வைரஸ்ல செத்து போனவங்களை கொத்து கொத்தா புதைச்சாங்க. இந்த வெறிநாய்க்கு ஒரு சாவு வர மாட்டேங்குது. குடிச்சு குடிச்சு நம்ம அம்மாவை சீரழச்சி கொன்னுட்டு, இப்ப நம்ம வாழ்க்கையை பலி கேட்குது இந்த கிருமி. அண்ணா, நீ கிளம்பு. அண்ணியோட வேலூர்லயே செட்டில் ஆயிடு. இனிமே கண்டாச்சிபுரம் பக்கமே வராத. என்னிக்காவது ஒரு நாள், இந்த வெறிநாய்க்கு சாவு என் கையாலதான். இதை கொன்னுட்டு இங்கேயே புதைச்சுடறேன்.’
தேங்காய் மட்டை உரிக்கும் அரிவாளை உருவி ஆரோக்கியத்தின் கழுத்து நரம்பில் வைத்தான் அம்புரோஸ். இருளில் அலைகின்ற எலியின் விழிகள் போல ஆரோக்கியத்தின் கண்களில் வெறி மின்னியது. அவற்றை நேருக்கு நேர் உற்று நோக்கினான் அம்புரோஸ்.
(4)
‘அம்புரோஸ்னா கிறிஸ்டியனா?’ என்றாள் அபிதாவின் தாய்.
‘ஆமாம். ஆனால் அவனோட ஜாதி சான்றிதழில் இந்து மதம்னு போட்டிருப்பதாய் ஒரு முறை சொன்னான்.’
‘தலித் பையனா? கும்பிடறதுக்கு ஒரு மதம், பிழைப்புக்கு ஒரு மதம் போலிருக்கு. திருமணத்துக்கு மாத்திரம் ஜாதி மறுப்பு என்று வாய் கிழிய பேசுவாளே ஒழிய, வேலை வாய்ப்பு விஷயத்தில் ஜாதி மறுப்பு செய்வாளா? ஜாதியை வெச்சுதான இங்க பொழப்பு நடக்றது? கடவுள் இல்லைனு நாத்திகம் பேசுவா, ஆனால் இஃப்தார் கஞ்சி குடிப்பா, கிறிஸ்துமஸ் கேக் சாப்பிடுவா. நம்ம கடவுள்னா மட்டும் கசக்கும் ‘
‘அம்மா, நீ யாரை திட்டுறாய்? அம்புரோசையா? அரசாங்கத்தையா?’
‘நான் யாரையும் திட்டலை. மத்தவாளை திட்டி என்ன பிரயோஜனம்? நம்ம ஜனங்களே புத்தி கெட்டு திரியுறதுகள். ஆச்சாரத்தை மறந்துட்டு பணம் பதவி அதிகாரத்துக்காக எதையும் செய்றதுகள். அருள் சார்ந்த உலகத்தை உதறிட்டு பொருளைத் தேடி அலையறதுகள். நம் அடையாளங்களை அழிச்சுண்டு, ஹலால் புலால்னு மாமிசம் புசிக்கிறதுகள். தமிழும் தெரியாமல் சம்ஸ்கிருதமும் புரியாமல் இங்கிலீஷில் உளறுதுகள்.’
‘நீ என்ன சொல்ல வருகிறாய்?’
‘நாலாயிரம் வருஷமா வேதத்தை கெட்டியா பிடிச்சுண்டு இங்கே வைதிகமாய் வாழறதுக்கு என்னதான் அர்த்தம்? இந்த சங்கிலி அறுபட்டால் லோகத்துக்கு அழிவுதான். கோவில் குருக்கள் பையன் பரத்வாஜனுக்கு உன்னை தருவதாய் வாக்கு கொடுத்து இருந்தேன். குருக்கள் போய் சேர்ந்துட்டார். நாலு வேதங்களும், பத்து உபநிஷத்துகளும், கீதையும், பிரம்மசூத்திரமும் கரைச்சு குடிச்சுட்டு அனாதையா நிற்கிற பரத்வாஜனுக்கு இங்கே பொண்ணு தர யாருமில்லை. திங்கறதுக்கும் கூத்தடிக்கவும் செலவு பண்ற இந்த சமூகம், கோவில் தட்டுல நூறு ரூபாய் போட யோசிக்றது. பாழடைந்த நம்ம ஊர் கோயிலை பரத்வாஜன் கட்டி அழட்டும். நீ எவன் பின்னாடி போனாலும் நம் வேதங்கள் அழியாது. அது மட்டுமே மாறாத உண்மை. புல், பூண்டு, மனுஷாள் மறைஞ்சாலும் அது மீண்டும் மொளச்சு வரும்.’
‘நான் என்ன செய்யணும்?’
‘நான் என்ன செஞ்சேன்? உன் தோப்பனார் போனதுக்கு அப்புறம் நீயே என் உலகம்னு வாழ்ந்தேன். இனிமேல் இது உன் வாழ்க்கை. உன் இஷ்டம்.’
(5)
அந்தி சாயத் துவங்கியதும் அவசரமாய் கூடு திரும்பிய பறவைகள் ஒற்றை மந்திரத்தை ஜெபிப்பது போல இடைவிடாமல் ஓரே ஒலியை எழுப்பிக்கொண்டிருந்தன. பாதரச மேகங்களை பொன்னாக மாற்றியது சூரியன். வேப்பங்கிளையில் அணில்கள் தாவியோட, மொட்டைமாடியில் வானத்தை மௌனமாய் வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்தான் அம்புரோஸ். உடலும் உள்ளமும் சோர்ந்துபோனதால் டான்ஸ் க்ளாஸ் லீவு என நண்பர்களுக்கு செய்தி அனுப்பியிருந்தான். அதை கேள்விபட்டு அவனை தனியாக சந்திக்க படியேறி மாடிக்கு வந்தாள் அபிதா. அவள் நெருங்கி வருவதை பார்த்து திகைத்த அம்புரோஸின் மனம், எந்த நொடியிலும் வெடித்து சிதறக்கூடிய எரிமலையாய் கொந்தளித்தது. பிரிந்து எத்தனை மாதங்கள் ஆகிவிட்டன! ஓடிச்சென்று அவளுடன் கைகோர்த்து நடனமாட அவன் இதயம் துடித்தது. ஆனால் அமைதியாய் தண்ணீர் கேன் பக்கம் சென்று குடுவையில் நீர் நிரப்ப முயன்று தடுமாறினான். அருகில் வந்த அபிதா, நடுங்கிக்கொண்டிருந்த அவனது வலது கையை மென்மையாய் தொட்டாள். காலத்தை நிற்க வைக்கும் சக்தி மட்டும் கிடைத்திருந்தால், அந்த கணத்தை, அவளது தொடுகையை, அப்படியே உறைய வைத்திருப்பான் அம்புரோஸ். ஆனால் காலம் கருணையற்றது. விசித்திரமானது. அது யாருக்காகவும் எதற்காகவும் காத்திராமல் கம்பீரமாய் முன்னோக்கி பாய்வது. காலம் ஒரு மாயை. நிகழ்காலத்தின் அர்த்தங்களையும் அபத்தங்களையும் மனித மனங்கள் கிரகிப்பதற்குள் அது இறந்தகாலமாய் மாறிவிடுகிறது. கணம்தோறும் காட்சிப்பிழைகளை உருவாக்கி மறையும் காலத்துகள்கள். அபிதா ஏதேதோ பேசிக்கொண்டிருந்தாள். இவன் இமைக்காமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.
அவள் மெதுவாய் தனது கையை விடுவித்தபடி ‘சரி, நான் கிளம்பட்டுமா?’ என்றாள்
‘ஓகே அபிதா. ஆனால் என் சமூகம் உனக்கு முன்பாக செல்லும்’
‘என்னது?’
‘ஒன்னுமில்லை. போயிட்டு வா அபிதா’
ஐந்தாவது மாடிக்கு இறங்கி வந்த அபிதாவை சோர்ந்துபோன அம்புரோஸின் முகமும் அவன் கூறிய வசனமும் தொந்தரவு செய்தது. இனிமையாக எளிமையாக வாழ சாத்தியமுள்ள ஒரு வாழ்க்கை, சிக்கலாக மாறுகின்றதோ என்ற குழப்பத்தில், மீண்டும் மொட்டை மாடி ஏறி வந்தாள். அது காலியாக இருந்தது. சுவர் விளிம்பிலிருந்து கீழே எட்டி பார்த்தாள். செக்யூரிட்டிகளும், தரைத்தள ஊழியர்களும் வேகமாய் ஓடிக்கொண்டிருந்தனர்.
தரையில் சிதறி ரத்த வெள்ளத்தில் மிதந்தான் அம்புரோஸ். ப்ரகாஷ் அண்ணன் தரையில் மண்டியிட்டு உயிர் இருக்கிறதா என்று சோதித்தார். ரெஜினா அவசரமாய் ஓடி வந்து தடுமாறி பெருங்குரலெடுத்து அழத் தொடங்கினாள். அம்புரோஸின் சட்டை பையிலிருந்த பைக் சாவி நழுவி ரத்தத்தில் மூழ்கி மறைந்தது. இரு கைகள் விரித்தபடி, ஒரு கால் தூக்கி மற்றொரு காலை உரசிக்கொண்டு, தரையில் அம்புரோஸ் கிடந்த காட்சி, நடராஜர் நடனம் ஆடுவது போலவும், அதே சமயம் யேசுநாதர் சிலுவையில் அறையப்பட்டது போலவும் தெரிந்தது. ப்ரகாஷ் அண்ணன் நிமிர்ந்து மேலே பார்த்தார். அபிதா மொட்டை மாடி தரையில் மயங்கி விழுந்தாள்.
(6)
ஒரு வாரம் கழித்து அபிதா இனி தனக்கு திருமணமே வேண்டாம் என்று அன்னையிடம் உறுதியாய் கூறிவிட்டாள். வில்லியனூர் திருக்காஞ்சி சென்று தந்தைக்கு திதி கொடுத்தாள். திருவண்ணாமலை கோவிலில் விண்ணப்பித்து ஒரு மோட்ச தீபம் ஏற்றினாள். ஒவ்வொரு பெளர்ணமியும் அந்தி சாயும் நேரத்தில் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அபிதா மௌனமாய் மலை சுற்றுகிறாள். இமயமலை அடிவாரம் சென்று துறவறம் ஏற்று, வடக்குத் திசையில் விரியும் மலைத்தொடரை பார்த்தவாறு மீதி வாழ்வை கழிப்பதே அவளது சித்தம். இப்பொழுதெல்லாம் அபிதாவுக்கு மலை என்பது பெரும் விசையுடன் ஓங்கி உயர்ந்து உறைந்து நின்றுவிட்ட கடல் அலை போலவே காட்சியளிக்கின்றது.
***

வெற்றிராஜா
புதுச்சேரியைச் சேர்ந்த வெற்றிராஜா தற்சமயம் இங்கிலாந்தில் வசித்துவருகிறார். மதிப்புரைகள், விமர்சனம், புனைவுகள், அல்புனைவுகள் என்று பரந்த தளத்தில் எழுதிவருகிறார்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.



















