
முந்தைய பகுதிகள்: பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7
விஜயகுமார்: அரசுக் கல்லூரியில் வேலை செய்யும் ஆசிரியர்கள் சிலருடன் பேசும்போது மாணவர்கள் மீதான அவநம்பிக்கை பெருமளவில் தொனிக்கிறது. இணைய வசதிகள் எளிமையாகக் கிடைக்கும் காலத்திலும் ஆர்வமும் தேடலும் தனித் திறன் வளர்ப்பும் குறைகிறது. கோவிட் காலத்தில் இணையம் அவர்களைக் கவனச் சிதறலுக்கு உள்ளாக்கிவிட்டது, எளிய வழிகளில் பணம் சம்பாதிப்பது, பிரபல்யத்தன்மை அடைவது எனக் கல்விக்கு வெளியே சென்றுவிட்டார்கள் என்கிறார்கள். ஆசிரியர்களின் கற்பித்தலும் அளவுகோல்களும் காலத்திற்கேற்ப மாறவில்லையா? மாணவர்களிடமும் பிரச்சினை உண்டா?
பெருமாள்முருகன்: இன்றைய தலைமுறையினரான மாணவர்களையும் இணையத்தையும் பிரிக்க முடியாது. இந்நூற்றாண்டில் பிறந்தவர்கள் விவரம் தெரியும்போதே கைப்பேசியையும் இணையத்தையும் கையாளத் தொடங்கியவர்கள். எந்தத் தொழில்நுட்ப வசதியும் வரும்போதே பெருநன்மையையும் சிறுதீமையையும் உடன் கொண்டுதான் வரும். பெருநன்மையாக இருப்பினும் அதன் ஓரம்சம்கூட முந்தைய தலைமுறையினர் கண்ணுக்குப் படுவதில்லை. சிறுதீமைதான் எனினும் அது பூதாகரமாக அவர்களுக்குத் தோன்றுகிறது. இணையமும் கைப்பேசியும் உலகத்தைத் தலைகீழாகப் புரட்டிவிட்டன. புற அளவில் தெரியும் மாபெரும் மாற்றம் அக அளவில் அத்தனை துல்லியமாகத் தெரியவில்லை. அவற்றை அளவிடும், ஆராய்ச்சி செய்யும் நோக்கு இன்னும் நம்மிடம் வரவில்லை.
சங்க இலக்கியத்தில் இருந்து இருபதாம் நூற்றாண்டு வரை மாறாத பாடுபொருளான பிரிதலும் பிரிதல் நிமித்தமும் இன்றைய இலக்கியத்தில் என்னவாயிற்று? பிரிவுத்துயர் என்பதையே அதிசயமாகக் கேட்கும் தலைமுறை இது. ‘எதிலும் நிலைப்பற்று, படுக்கை புரண்டு, தொலைபேசிக்கு முயன்று, கழிந்தது, நாளையற்றவனின் நாள் போல’ என்றும் ‘நீயற்ற நாட்கள், ஏதோ போகிறது, பொருளற்று’ என்றும் நானே எழுதியிருக்கிறேன். இன்றைய திரைப்பாடல்களில் ‘நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா?’ போன்ற ஒன்று இடம்பெற வாய்ப்புண்டா? இந்த அலைக்கழிப்பு, பெருந்துயருக்கு இன்று இடமேது? ஒரே ஒரு புலனச் செய்தியில் பிரிவும் துயரும் தூசாகிவிடும். பல நூற்றாண்டு இலக்கியப் பாடுபொருள் பத்திருபது ஆண்டில் ஒழியும் நிலை வந்துவிட்டது.
நேற்று என்னைப் பார்க்க வந்த இருபத்து நான்கு வயது இளைஞனிடம் என் கைப்பேசியிலிருந்து மடிக்கணினிக்குச் சிலவற்றை ஏற்றித் தரும்படி கேட்டேன். இரண்டு நிமிடத்தில் செய்து கொடுத்துவிட்டான். சில மாதங்களாக அதைச் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டுக் கொண்டிருந்தேன். சிறுவேலைதான். எனினும் என் வயதும் அனுபவமும் இதில் பயன்படவில்லை. யாருடைய உதவியாவது தேவைப்படுகிறது. நான் ஏற்கனவே ஒருநூலில் சொல்லியிருக்கிறேன். கற்பித்தலுக்குக் கைப்பேசியைப் பயன்படுத்தலாம் என்பதை ஒருமாணவர் மூலமாகத்தான் கற்றுக் கொண்டேன். நிமிடந்தோறும் வளரும் தொழில்நுட்பத்திற்கு இன்றைய தலைமுறையைப் போல ஈடு கொடுக்க முடியாமல் குறை சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
எப்போதுமே வயதானவர்கள் தமக்கு அடுத்து வரும் இளைஞர்களைக் குறை சொல்வது வழக்கம் தானே. இப்போது அந்தப் பிதற்றல் அதிகரித்திருக்கிறது. நவீனக் கருவிகளையும் தொழில்நுட்பத்தையும் கற்பித்தலுக்குப் பயன்படுத்த முயல வேண்டும். ஆசிரியர்கள் கூடுதலாகக் கற்க வேண்டிய தேவையுள்ளது. துறைசார் அறிவுடன் கரும்பலகையும் புத்தகமும் கருவிகளாக இருந்தால் போதும் என்னும் காலம் மாறிவிட்டது. துறைசார் அறிவுடன் ஸ்மார்ட் போர்டு, மடிக்கணினி, பிபிடி என்று பல கருவிகள் வந்தன. கோவிட் காலம் தானே நேரடிக் கற்பித்தலில் இருந்து நம்மை விடுவித்தது? எங்கெங்கோ இருப்போரும் ஒரே வகுப்பில் இணைய முடியும் என்று காட்டியது அக்காலம் தானே? அதன் பிறகு அதில்தான் எத்தனை வளர்ச்சி! ஒவ்வொருவருக்கும் நேரமும் செலவும் எவ்வளவோ மிச்சமாகின்றன. கால்மணி நேரம் ஒருகூட்டத்தில் பேசுவதற்காக இரண்டு நாட்களைச் செலவு செய்து செல்ல வேண்டிய அலைச்சல் இன்று இல்லை. வர முடியவில்லை என்றால் இணையம் வழி பேசுங்கள் என்கிறார்கள். இது சாதாரண மாற்றமா?
இன்று இணையவழி வகுப்புகள் நடக்கின்றன. வகுப்பறையும் ஆசிரியரும் தேவையில்லை என்றாகிவிட்டது. பட்டப்படிப்புப் படித்த பலர் மேற்கொண்டு தம்துறையின் குறிப்பிட்ட ஒருபாடத்தில் ஆழ்ந்த அறிவு பெற வேண்டும் என்றால் கல்வி நிறுவனத்தை நாடிச் செல்ல வேண்டியதில்லை. இணையத்தில் இலவசமாகவோ குறைந்த கட்டணத்திலோ ஒருமாதம், இரண்டு மாதம் கற்றுக்கொள்ள முடியும். மொழியைக் கற்பிக்க எத்தனையோ தளங்கள் வந்துவிட்டன. இவற்றைப் பயன்கொள்வோர் யார்? முதியவர்களா? இளம்பிள்ளைகள். தங்களுக்குத் தேவையானதை அவர்களே தேடிக் கற்கிறார்கள். அங்கே ஆசிரியரின் அதட்டல் உருட்டல் மிரட்டல் எதுவும் கிடையாது. வருகைப்பதிவு இல்லை. மனம் விரும்பினால் வகுப்புக்குள் செல்லலாம். சலிப்பாக இருந்தால் வெளியேறலாம். நமக்குத் தோதான நேரத்தில் கற்கலாம். கற்கும் வெளி நாற்சுவருக்குள் இருந்து விடுபட்டுச் சுதந்திர வெளியாக மாறுகிறது.
இவற்றைக் காண்கையில் எதிர்காலக் கற்பித்தலில் நேரடியான ஆசிரியரின் பங்கு வெகுகுறைவாகவே இருக்கும் அல்லது இல்லாமலே போகலாம் என்று கருதுகிறேன். ஒருவேளை பள்ளிக் கல்வி மட்டும் நேரடியாகத் தேவைப்படலாம். செய்முறை வகுப்புகள் நேரடியாக இயங்கலாம். ஒருபாடத்தைக் கற்பிக்கும் விரிவுரை வகுப்புகளின் நேரடித் தேவை அருகிவிடும். பல தேர்வுகள் இணையம் வழி நடக்கின்றன. மாணவர் எழுதும் ஒப்படைவுகளை கணியச்சு செய்து ஆசிரியருக்கு அனுப்புவதைக் காண்கிறேன். இவற்றை எல்லாம் புரிந்து கொண்டால் ஆசிரியர்கள் புலம்ப மாட்டார்கள். மாணவர்கள் மேல் அவநம்பிக்கை கொள்ள மாட்டார்கள். தம் காலத் தொழில்நுட்ப வளர்ச்சியை எல்லாம் பயன் கொள்ளாமல் பழைய வகுப்பறைக்குள் அவர்களை இருத்த வேண்டும் என்று நினைத்தால் அது சாத்தியமாகாது.
எளிதில் பிரபலமடைய இன்று வழிகள் இருக்கின்றன. ஒருவரின் படைப்பாற்றல் மலரும் பருவம் இளமைக்காலம் தானே? குறிப்பாகப் பதினைந்து முதல் முப்பது வயது என்று கொள்ளலாமா? அப்பருவத்தில் ஒருவர் பிரபலமடைய வாய்ப்பது நல்லதுதானே? என் இருபதுகளில் சிறுகதை எழுதத் தொடங்கினேன். வெகுசில இலக்கியப் பத்திரிகைகளே இருந்தன. அவற்றுக்கு அனுப்பி என் கதை ஒன்று பிரசுரமாவது பெரிய சாதனையாக இருந்தது. என் புத்தகங்களை அச்சிடப் பதிப்பகம் கிடைக்கவில்லை. இன்று இருபதுகளில் இருக்கும் இளையோருக்கு பிரசுர வாய்ப்பைப் பற்றிக் கவலையே இல்லை. அச்சிதழ்கள் என்ன, கொடுத்த உடனே பிரசுரம் செய்ய மின்னிதழ்கள் இருக்கின்றன. இல்லையென்றால் தானே சமூக ஊடகத்தில் வெளியிட்டுக் கொள்ளப் பல வாய்ப்புகள். என் தலைமுறைக்குக் கிடைக்காத அற்புத வாய்ப்பு அமைந்த தலைமுறை இது. எனக்குக் கொஞ்சம் பொறாமைதான். ஆனால் புரிதல் இருப்பதால் புலம்பல் இல்லை. நமக்குக் கிட்டாத வாய்ப்பு இந்தத் தலைமுறைக்குக் கிட்டுவதை மகிழ்ச்சியோடு காண்கிறேன். ஐம்பது கதை எழுதிய பின் கிட்டும் கவனம் இரண்டு கதை எழுதியதும் ஒருவருக்குக் கிட்டுமானால் நல்லது தானே? ஏன் அங்கீகாரத்தையும் வயதையும் இணைக்க வேண்டும்? இளம் வயதில் ஒருவருக்குப் பிரபலமும் அங்கீகாரமும் கிடைத்தால் கண்டு மகிழ்வோம்.
மாணவர்கள் பக்கம் என்ன பிரச்சினை இருக்கிறது? இணையத்திற்கு அடிமையாகும் போக்கு அதிகரித்து வருகிறது. நிமிட நேரம்கூடக் கைப்பேசி இல்லாமல் இருக்க முடியவில்லை. எதையும் பிம்பக் காட்சியாகவே காணும் மனோபாவம் உருவாகியுள்ளது. செவிச்செல்வத்தின் ஆற்றல் குறைகிறது. பிம்பங்களால் கட்டமைக்கப்பட்ட உலகில் உலவும் திறன் பெற்ற இவர்களால் நேரடிக் காட்சிகளை எதிர்கொள்ள முடியவில்லை. சக மனிதர்களுடன் இயல்பான நட்போ காதலோ இல்லாமல் போய்விடுமோ என்று அச்சம் வருகிறது. பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் நான் பார்த்தும் கேட்டும் அறிந்த ஒருசெய்தி, ஒருவர் தம்முடன் இன்னொருவர் வசிப்பதையே விரும்புவதில்லை. காதலுக்கும் புணர்ச்சிக்கும் பொம்மைகளே போதுமானவையாக இருக்கின்றன. நம் ஊருக்கும் பொம்மைகள் வந்துவிட்டதை அறிகிறேன். இந்தத் தலைமுறை இவற்றில் எச்சரிக்கையாக இருக்க வேண்டியதையும் பிம்பங்களுக்கும் நிஜத்திற்கும் உள்ள வேறுபாடுகளையும் கற்பித்தலில் நாம் உட்படுத்த வேண்டியுள்ளது. அதை நோக்கி நம் கல்வி முறை, ஆசிரியர்கள் எல்லோரும் நகர வேண்டிய நிலையில் இன்று இருக்கிறோம். என்ன செய்ய வேண்டும் என்பதை யோசிக்காமல் முந்தைய காலத்திற்கு இழுத்துச் செல்லும் புலம்பல்களால் பயனேதும் இல்லை.
வி: நவீன வசதிகளைப் பயன்படுத்தி நீங்கள் கற்பித்திருக்கிறீர்களா ? அந்த அனுபவத்தைச் சொல்லமுடியுமா?
பெமு: நான் விருப்ப ஓய்வு பெற்று நான்காண்டு ஆகிவிட்டது. 2015ஆம் ஆண்டு வரை நாமக்கல் கல்லூரியில் பணியாற்றினேன். அதற்கு முன்னரே ஸ்மார்ட் போர்டுகளை ஒவ்வொரு கல்லூரிக்கும் அரசு வழங்கியது. அவற்றை உருவாக்கிக் கொடுத்த நிறுவனப் பிரதிநிதிகள் கல்லூரிக்கு வந்து ஆசிரியர்களுக்குப் பயிலரங்கு போல ஒருநாள் முழுவதும் எப்படிப் பயன்படுத்துவது என்று கற்பித்தார்கள். ஆசிரியர்களைப் பொருத்தவரை தாம் கற்பிப்பவர்கள், தமக்கு யாரும் கற்பிக்கத் தேவையில்லை என்னும் மனோபாவம் கொண்டவர்கள். அது ஆசிரியர் பணிக்கு வந்தவுடன் இயல்பாக வந்து சேர்கிற மனோபாவமாக இருக்கிறது. அதனால் ஸ்மார்ட் போர்டு பயன்பாட்டை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அதைப் பயன்படுத்த மடிக்கணினியும் தேவைப்பட்டது. பெரும்பாலான ஆசிரியர்களின் அது இல்லை. ஆகவே கல்லூரிக்கு வழங்கிய ஸ்மார்ட் போர்டுகள் ஆசிரியர் அறைகளின் மூலைகளிலோ இரும்பு அலமாரிகளின் மேலோ இடம்பிடித்து ஒதுங்கின. பயன்பாட்டுக்கே வரவில்லை. வழங்கிய அரசு அது பயன்படுகிறதா என்பதைப் பற்றிக் கேட்கவும் இல்லை. அப்போதைய உயர்கல்வி அமைச்சருக்கு அதன் மூலம் வருவாய் வந்திருக்கக் கூடும். அவ்வளவுதான்.
ஒவ்வொரு துறைக்கும் கணினிகளை அரசு வழங்கியது. எதைக் கொடுத்தாலும் எனக்கு உனக்கு என்று அடித்துக்கொண்டு வாங்குவது நம் சமூகத்தின் பொதுவியல்பு. அதில் படித்தவர், படிக்காதவர் என்னும் பேதமெல்லாம் இல்லை. வாங்கி பீரோக்களில் பூட்டி வைத்திருந்தோர் பலர். என் துறையிலேயே ஒரே ஒரு கணினியைப் பயன்பாட்டுக்குத் தந்துவிட்டு இரண்டு கணினிகளைப் பெட்டியே பிரிக்காமல் பூட்டி வைத்துக் கொண்டார் அப்போதைய துறைத்தலைவர். ‘கணினியும் தமிழும்’ என்றொரு பாடம் மாணவர்களுக்கு இருந்தது. கணினியைத் தொடாமலே அப்பாடத்தை மாணவர்கள் பயின்று சென்றனர். ஆசிரியர் அறைக்கு ஒரு கணினி வேண்டும் என்று நான் அழுத்திக் கேட்டபோது ‘ஏதாவது காணாமல் போய்விட்டால் நான் தான் பதில் சொல்ல வேண்டும். பதவி உயர்வு பெற்றுச் செல்லும்போது பொறுப்பை உங்களிடம் ஒப்படைக்கிறேன். அப்போது எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்’ என்றார் அவர். பல வேலைகளைக் கணினியில் செய்தாக வேண்டும் என்னும் நிர்ப்பந்தம் வந்த பிறகுதான் அவற்றைப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். அப்போது அவை பழையவை ஆகிவிட்டன. புதுப்பிக்க அரசு நிதி தரவில்லை. ஆளுக்குக் கொஞ்சம் என்று ஆசிரியர்களே பகிர்ந்து கொண்டு புதுப்பித்தனர். மாணவர்களிடம் வெவ்வேறு வழிகளில் பணம் பெற்றுப் பயன்படுத்திக் கொண்டவர்களும் உண்டு. அறிவியல் துறையினர்க்கு அது எளிதாக முடிந்தது.
ஓவர் ஹெட் புரஜெக்டர் கதையும் அப்படித்தான். அதை எங்கே பொருத்துவது என்பதே குழப்பமாக இருந்தது. பல வகுப்பறைகளுக்கு பூட்டு கிடையாது. மின் இணைப்பு இருந்தாலும் பிளக் பாயிண்ட் இல்லை. அதுவும் பெட்டிக்குள் உறங்கியது. என் துறைத்தலைவரிடம் சண்டையிட்டு வாங்கி யாப்பிலக்கணம் கற்பிக்க அதைப் பயன்படுத்தினேன். அதற்காக ஸ்லைடுகள் தயாரித்தேன். பாடம் நடத்த நன்றாகவே இருந்தது. ஆனால் ஒவ்வொரு நாள் வகுப்பின் போதும் துறைத்தலைவர் அறைக்குச் சென்று அதை எடுத்து வந்து பொருத்திச் சரி செய்யும் வேலை மாணவர்களுக்கு இருந்தது. ஆர்வமாகச் செய்தனர் எனினும் அதற்கே பாதி மணிநேரம் போய்விடும். பிறகு எல்லாவற்றையும் கழற்றிக் கொண்டுபோய் ஒப்படைக்க வேண்டும். அந்த நடைமுறைச் சிக்கலால் அதன் வழிக் கற்பித்தலைத் தொடர இயலவில்லை.
2016ஆம் ஆண்டில் ஆத்தூர் கல்லூரியில் பணியாற்றிய போது இளங்கலைத் தமிழிலக்கிய மூன்றாமாண்டு மாணவர்களுக்குக் குறுந்தொகையைப் பாடம் நடத்திக் கொண்டிருந்தேன். நானூறு பாடல்களும் கொண்ட உ.வே.சா. பதிப்பைக் கையில் வைத்திருந்தேன். அந்தப் பதிப்பை மாணவர்கள் அறிய வேண்டும் என்பதாலும் குறுந்தொகை அவ்வளவு பெரிய நூல் என்பதை உணர்த்தவும் அதை எடுத்துச் சென்றிருந்தேன். கடைசிப் பெஞ்சில் உட்கார்ந்திருந்த சக்திவேல் என்னும் மாணவரும் அவர் நண்பரும் கைப்பேசியைப் பார்த்தபடி இருந்தார்கள். கொஞ்ச நேரம் விட்டுப் பார்த்தேன். கைப்பேசியிலிருந்து அவர்கள் கண்ணெடுக்கவில்லை. ஆசிரியர் எல்லோரும் கேட்பது போலவே ‘நான் உசுரக் கொடுத்துக் கத்திப் பாடம் நடத்திக்கிட்டு இருக்கறன். நீங்க ஃபோன பாத்துக்கிட்டு என்ன செய்றீங்க?’ என்று கோபமாகக் கேட்டேன். சக்திவேல் எழுந்து என்னருகே வந்து கைப்பேசியைக் காட்டிப் ‘பாட்டுத் தாங்கையா பாத்துக்கிட்டு இருக்கறன்’ என்றார். நான் கையில் வைத்திருந்த அதே புத்தகத்தின் பிஎடிப் வடிவைப் பதிவிறக்கிக் குறிப்பிட்ட பாடலை எடுத்திருந்தார். எனக்குப் பிடிஎப் வடிவம் தெரியும். பொ.வேல்சாமியும் நானும் அப்போதே பிடிஎப் வடிவில் நூல்களைப் பதிவிறக்கிச் சேகரித்துப் பொருள் வாரியாகப் பிரித்துக் கணினியில் வைத்துக்கொள்ளத் தொடங்கியிருந்தோம். அவர் அதற்கென்றே தனி டேப்லெட் வாங்கியும் இருந்தார். ஆனால் கைப்பேசியில் வைத்துக்கொள்ள முடியும் என்னும் விவரம் எனக்குத் தெரியவில்லை.
சக்திவேல் காட்டியதும் வகுப்பு நடத்துவதை நிறுத்திவிட்டு என் பேசிக்கு அதை அனுப்பக் கோரினேன். அப்போது வாட்ஸ் அப் வந்திருக்கவில்லை. ஷேர்-இட் என்னும் செயலி வழியாக ஓரிரு நிமிடத்தில் அதை என் கைப்பேசிக்கு அவர் மாற்றிவிட்டார். வகுப்பில் யார் யாரிடமெல்லாம் இத்தகைய வசதி கொண்ட கைப்பேசி இருக்கிறதோ அவர்களுக்கெல்லாம் அனுப்பச் சொன்னேன். பெரும்பாலான மாணவர்களுக்குக் குறுந்தொகை சென்று சேர்ந்தது. அப்போது பல பெண்களிடம் அத்தகைய திறன் கைப்பேசி இல்லை. கிராமத்து மாணவர்கள் என்பதால் வாங்க வசதியில்லை. பெண்களுக்கு அது தேவையில்லை என்று கருதிய குடும்பங்களும் இருந்தன. எப்படியோ பலர் கையில் நூல் சென்று சேர்ந்தது. என் கையிலிருந்த நூலை மேஜையில் வைத்துவிட்டுக் கைப்பேசி மூலமாக நடத்தும் முறையை அப்போதே தொடங்கினேன். கைப்பேசியைக் கற்பித்தல் கருவியாக்க முடியும் என்பதை அம்மாணவர்தான் எனக்குக் கற்றுக் கொடுத்தார். அதன்பின் எல்லா வகுப்பிலும் கைப்பேசியைக் கருவியாக்கினேன். புத்தகம் இல்லையா, நகல் எடு அல்லது எழுதிக் கொண்டு வா என்றெல்லாம் மாணவரைத் திட்டும் வேலை எனக்கு இல்லாமல் போயிற்று. தம் கைப்பேசி மூலமாகவே கற்கலாம் என்பது மாணவர்களுக்கு மகிழ்ச்சி தந்தது.
அதன் பிறகு கைப்பேசியைக் கற்பித்தலுக்கு விரிவாகப் பயன்படுத்தினேன். தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர்கள் திருவிளையாடல், திருவருட்செல்வர், திருமால் பெருமை, திருநீலகண்டர் முதலிய திரைப்படங்களைப் பார்க்க வேண்டும் என்று சொல்வேன். அவற்றை நம் துறைசார் பாடம் என்னும் நோக்கில் பாருங்கள் என்பேன். பழைய படங்கள் அவை. பார்க்க மாணவர்களுக்குப் பிடிக்காது. ஓரிருவர் முயன்று பார்ப்பார்கள். இப்போது பாடம் சார்ந்து சில பகுதிகளை நானே எடுத்து வகுப்பில் போட்டுக் காட்டினேன். ‘கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி’ என்னும் குறுந்தொகைப் பாடல் பாடத்தில் இருந்தது. திருவிளையாடல் படத்தில் தருமிக்குப் பொற்கிழி வழங்கும் கதை வரும்போது அப்பாடல் இருமுறை வாசிக்கப்படும். முதலில் அரசவையில் தருமி (நாகேஷ்) ஒருமுறை வாசிப்பார். பிறகு சிவனாக வரும் சிவாஜி ஒருமுறை வாசிப்பார்; பாடலுக்குப் பொருளும் சொல்வார். திருவிளையாடல் படத்திற்கு முன்வந்த ‘நான் பெற்ற செல்வம்’ திரைப்படத்தில் தருமி கதை சிறுநாடகமாக இடம்பெறும். அதில் தருமியாக நடித்தவர் யாரெனத் தெரியவில்லை. நக்கீரர், சிவன் ஆகிய இருபாத்திரத்திலும் சிவாஜியே நடித்திருப்பார். அதிலும் ‘கொங்குதேர் வாழ்க்கை’ பாடல் இருமுறை வாசிக்கப்படும். இந்த நான்கு வாசிப்புக் காட்சிகளையும் கைப்பேசியில் எடுத்து வகுப்பிலேயே காட்டினேன். மாணவர்கள் மிக ஆர்வமாகக் கவனித்தனர்.
திரைப்படம் நம் சமூகத்தில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்திய கலைவடிவம் எனினும் அதைக் காண்பதைத் தவறாகக் கருதுவதே வழக்கம். ஒருவகுப்பில் திரைப்படக் காட்சியைக் காட்டிப் பாடம் நடத்திய அச்சம்பவம் மாணவர்களுக்கும் புதிது; எனக்கும் புதிது. வகுப்பில் கைப்பேசியை எப்படிப் பயன்படுத்தலாம், கற்பித்தலுக்கும் கற்றலுக்கும் அது எப்படி உதவும் என்பதை எல்லாம் இருதரப்பும் புரிந்துகொண்ட சந்தர்ப்பம் அது. இன்று சாதாரண சம்பவம் போலத் தெரியலாம். பத்தாண்டுக்கு முன் எனக்கு அது வகுப்பறைப் புரட்சி போலவே தோன்றியது. பல்லாண்டு கற்பித்துச் சோர்ந்திருந்த எனக்கு அம்மாற்றம் பெரும் உற்சாகத்தைக் கொடுத்தது. எப்படியெல்லாம் கைப்பேசியைக் கற்பித்தலுக்குப் பயன்படுத்தலாம் என்று புதிது புதிதாக யோசித்து ஒவ்வொரு நாளும் வகுப்புக்குத் தயாரித்தேன். சக்திவேல் என்னும் அம்மாணவர் எனக்கு உதவினார். என் தேவையை எளிதில் நிறைவேற்றிக் கொடுத்தார். உண்மையில் அம்மாணவரை என் ஆசிரியராகவே கருதினேன். அதை அவரிடமும் பிற ஆசிரியர்களிடமும் சொன்ன போது சக்திவேல் முகத்தில் தோன்றிய வெட்கம் கலந்த மகிழ்ச்சி எனக்கு இப்போதும் மனதில் இருக்கிறது.
கைப்பேசியை வைத்து ஒருபாடலைப் படித்தபடி நான் வகுப்பு நடத்தும் காட்சியைக் கல்லூரிக்குள் உலா வந்தபோது கண்ட கல்லூரி முதல்வருக்கு அது பிடிக்கவில்லை. முதல்வருக்கு அடுத்த நிலையில் மூத்த ஆசிரியராக இருந்தேன். அவர் வரும் முன் ஓராண்டு முழுக்க முதல்வர் பொறுப்பிலும் இருந்தேன். ஆகவே என்னை நேரடியாகக் கண்டிக்க அவரால் முடியவில்லை. பின்னர் அவர் அறைக்குச் சென்ற ஒருசமயத்தில் யாரையோ குறிப்பிடுவது போல ‘செல்போன வெச்சுப் பாடம் நடத்தறாங்க சார்’ என்று என்னிடம் புகார்த் தொனியில் சொன்னார். கைப்பேசி இன்று பேசுவதற்கானது மட்டுமல்ல என்று அதன் பல்வேறு சாத்தியங்கள் பற்றி அளவாகச் சொன்னேன். மாணவர்களைக் கைப்பேசி பயன்படுத்தக் கூடாது என்று கண்டிப்பதைவிட எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று திருப்பிவிட வேண்டும் என்றும் கூறினேன். அவருக்கு எந்த அளவு புரிந்ததோ தெரியவில்லை. புரிந்தாலும் பழைய பார்வையிலிருந்து அத்தனை சீக்கிரம் மாற மாட்டார்கள். இத்தனைக்கும் அவர் அறிவியல் துறை சார்ந்தவர். என் அனுபவத்தில் தொழில்நுட்பங்களை, சமூக மாற்றங்களை உடனடியாக ஏற்காத மனோபாவம் கொண்டவர்களில் பெரும்பான்மையோர் அறிவியல் ஆசிரியர்கள் தான். இந்த முரண் எப்படி ஏற்படுகிறது என்று தெரியவில்லை.
புதிய தொழில்நுட்பம், புதுக்கருவிகள் எல்லாவற்றையும் கற்பித்தலுக்கு உடனடியாகப் பயன்படுத்தும் வாய்ப்பு நமக்குக் கிடைக்க வேண்டும். அதை நிர்ப்பந்திக்கும் கல்விச்சூழல் ஏற்பட வேண்டும். கருவிகள் எல்லாம் கணக்குக் காட்ட வேண்டிய பதிவேடுகளில் இருப்பதற்கு அல்ல. அவை பயன்பட வேண்டும். நம் வகுப்பறைகளை நவீனத்தால் வடிவமைக்க வேண்டும் என்பது என் கனவு.
வி: உங்கள் அனுபவக் கட்டுரைகளைப் படிக்கும்போது, ஆசிரியர், மாணவர் குரலைச் செவிமடுத்துக் கேட்டாலே பாதிப் பிரச்சனைகள் தீர்ந்துவிடும் என்று தோன்றுகிறது. அதிகாரமும் தீர்ப்பளிக்கும் இடமும் ஆசிரியர்களின் கண்ணையும் காதுகளையும் பெரும்பாலான நேரங்களில் மூடிவிடுகிறது. ஒரு ஆசிரியர் இத்தகைய சறுக்கல்களிருந்து எப்படித் தப்பித்துக் கொள்ளலாம்?
பெமு: சாதியச் சமூகத்தில் பெரும்பாலோர் அதிகாரம் ஏதுமற்ற பின்னணியில் இருந்து வருகிறோம். அல்லது சாதியின் காரணமாகவே பிறர் மீது அதிகாரம் செலுத்தும் உரிமை பெற்றவர்களாகக் கருதும் மனநிலையில் இருக்கிறோம். ஆகவே அதிகாரம் செய்யும் வாய்ப்புக் கிடைக்கும் சந்தர்ப்பம் எதையும் நாம் சுலபமாக விடுவதில்லை. அதுவும் முதல்தலைமுறையாக நவீன வேலைவாய்ப்புக்குள் வருபவர் சாதியால் பாதிக்கப்பட்டவராகவோ சாதியால் ஆதிக்கம் செய்தவராகவோ இருப்பார். அவர் மனம் வாய்ப்பை எதிர்பார்த்திருக்கிறது. வயதுக்கும் அதிகாரத்தில் பங்கிருக்கிறது. எத்தனை மூடராக இருப்பினும் வயது கூடியவர் என்றால் அவர் சொல்வதைக் கேட்டு நடக்க வேண்டும் என்று நம் குடும்ப அமைப்பு நிர்ப்பந்திக்கிறது.
ஆசிரியப் பணியில் அதிகாரம் செய்ய ஒருவருக்கு நல்ல வாய்ப்பு அமைகிறது. ஆம், ஒருவகுப்பில் ஐம்பது பேர் இருந்தால் அவர்கள் அனைவரும் தம் அதிகாரத்திற்கு உட்பட்டவர்கள் ஆகிறார்கள். ஒருமணி நேரம் வகுப்பில் தம் ஆட்சியை ஆசிரியர் செலுத்துகிறார். ஆசிரியர்களின் மொழியையும் தொனியையும் கவனித்துப் பாருங்கள். அவை அதிகாரத்தின் அழுகல் வாடை கொண்டிருக்கும். கற்பித்தல் என்பது அதிகாரச் செயல்பாடல்ல. அது ஒருவகைப் பரிமாற்றம். அறிவைப் பகிர்ந்து கொள்ளும் அற்புதச் செயல். அந்தப் புரிதல் ஏற்பட ஆசிரியர்கள் வாசிக்க வேண்டும். ஆசிரியப் பணிக்கு வந்த பிறகு ஆசிரியர்கள் வாசிப்பதே இல்லை.
வாசிப்புதான் சமூகப் புரிதலை உருவாக்கும். துறை சார்ந்த தாவல்களை அறியச் செய்யும். வாசிப்பில் நாட்டமுள்ள ஆசிரியரைப் பாருங்கள். மாணவர்களிடம் அவர்கள் அதிகாரம் செலுத்துவதில்லை. தம்மை ஆசிரியராக ஒருவர் தகுதிப்படுத்தக் கொள்ள வேண்டும் என்றால் வாசிப்புதான் ஒரே வழி. தொடர் வாசிப்பு உடைய ஆசிரியர் அதிகாரத்திற்கு எதிரானவராக இருக்கிறார். மாணவரை ஆழ்ந்த நோக்கக் கண்ணைக் கொடுக்கிறது வாசிப்பு. மாணவர் சொல்வதை உற்றுக் கேட்கக் காதைக் கொடுக்கிறது வாசிப்பு. மாணவர் பிரச்சினையை ஆதரவுடன் அணுகச் சிந்திக்கும் மனதைக் கொடுக்கிறது வாசிப்பு. இயல்பாக வாசிப்பு ஆர்வம் கொண்டவரே ஆசிரியராகத் தகுதி உடையவர் அல்லது வாசிப்பால் தம்மைத் தகுதிப்படுத்திக் கொள்பவரே ஆசிரியாவார். வாசிப்பை நிர்ப்பந்திக்கும் ஆசிரியர் தேர்வு முறை அவசியம்.
வி: முதல்வராக இருந்தபோது எத்துறை செலினும் அத்துறை சார்ந்து பேசிவிடுவீர்கள். வகுப்பறையிலும் உங்கள் நிபுணத்துவம் அனைவரும் அறிந்ததே. மாணவர்களின் நம்பிக்கையைப் பெறுதல் தனித்திறன் என்று தோன்றுகிறது; அதற்கு பேச்சு முக்கியக் காரணமென்றும். இதைக் குறித்துச் சொல்லுங்கள். மாணவர்களின் நம்பிக்கையைப் பெறுவதே பல பிரச்சினைகளுக்குத் தீர்வாகும் எனத் தோன்றுகிறது.
பெமு: வகுப்பை உயிர்ப்போடு வைத்துக் கொள்வதும் மாணவர் நம்பிக்கையைப் பெறுவதும் என் தனித்திறனா என்று தெரியவில்லை. எழுத்தாளராக இருப்பதால், என் அனுபவங்களைப் பொதுவெளியில் வைப்பதால் உங்களுக்கு அப்படித் தோன்றக் கூடும். என்னைப் போல அல்லது என்னை விடவும் சிறந்த ஆசிரியர்கள் பலர் உள்ளனர். இதை நான் அடக்கத்திற்காகக் கூறவில்லை. உண்மை அதுதான். தம் வாழ்நாளையே கற்பித்தலுக்கும் மாணவருக்கும் என அர்ப்பணித்த ஆசிரியர்கள் பலருண்டு. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகை உத்தி இருக்கும். என் உத்தி மிக எளிமையானது.
முன் தயாரிப்புடன் வகுப்புக்குச் செல்வதுதான் என் முதன்மை உத்தி. மாணவர்களைக் குறைத்து எடை போட்டு எந்தத் தயாரிப்பும் இல்லாமல் ஒருபோதும் வகுப்புக்குச் செல்ல மாட்டேன். பல்லாண்டு நடத்திய பாடம் எனினும் மீண்டும் ஒருமுறை கண்ணோட்டுவேன். ஒருபாடத்தைச் சில ஆண்டு நடத்தினால் அதன் சூட்சுமம் பிடிபட்டு விடும். எந்த இடத்தில் என்ன சொல்ல வேண்டும், எதை விளக்க வேண்டும், மாணவருக்கு எத்தகைய ஐயங்கள் தோன்றும், அவற்றுக்கு எப்படி விடை சொல்ல வேண்டும் என்பவை எல்லாம் ஒருபாடத்தைச் சில ஆண்டு நடத்தினால் கைவந்துவிடும். ஒருபகுதியை நடத்தும் போது ‘இந்த இடத்தில் இப்படி ஒரு சந்தேகம் வருமே. யாராவது கேட்பார்களா’ என்று எதிர்பார்ப்பேன். பெரும்பாலும் யாராவது கேட்பார்கள். ஒருபாராட்டைப் போட்டுவிட்டு விளக்கி மேற்செல்லலாம். யாரும் கேட்கவில்லை என்றால் நானே அச்சந்தேகத்தை எழுப்பிப் பதில் சொல்வது வழக்கம். கற்பித்தலில் ஏமாற்று இல்லை என்பதால் மாணவர்களுக்கு என் மீது மதிப்பு அதிகம்.
ஒரு ஆசிரியர் விஷயம் உள்ளவரா இல்லாதவரா என்பதை மாணவர்கள் விரைவில் கண்டுபிடித்துவிடுவர். வகுப்புக்குத் தயாரிப்புடன் வருகிறாரா வந்து சமாளிக்கிறாரா எதுவும் செய்யாமல் வந்து நேரத்தை ஓட்டுகிறாரா என்பவற்றை மாணவர்களால் அறிய முடியாதா என்ன? அத்தகைய ஆசிரியர்களுக்கு அதற்கேற்ற மதிப்புத்தான் கிடைக்கும். மாணவரிடம் நன்றாகப் பழகத் தெரியாத ஆசிரியராக இருப்பினும் விஷயம் உள்ளவர் என்றால் மாணவர் மனதில் ஒரு மதிப்பு இருக்கும். வெத்துவேட்டு ஆசிரியர்களை எப்படி மதிப்பார்கள்? ஆசிரியரிடம் மாணவர்கள் முதலில் எதிர்பார்ப்பது துறைசார் அறிவு. இரண்டாவது சிறந்த கற்பித்தல் முறை. அதற்கடுத்து எளிய அணுகுமுறை. இவை மூன்றும் இருந்தால் அவர் வெற்றி பெற்ற ஆசிரியர் ஆவார். நம் சமூகத்தைப் பொருத்தவரை அதற்கு மேலும் ஆசிரியர் செய்ய வேண்டியிருக்கிறது. மாணவரின் பின்னணியைப் புரிந்துகொண்டு வகுப்பறைக்கு வெளியே அவருக்குத் தேவையான வழிகாட்டுதல்களை எல்லாம் வழங்கினால் அவரைக் கொண்டாடுவார்கள்.
நான் பணியில் சேரும் முன் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் மொழித்துறையில் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு உதவித்தொகை பெற்று முனைவர் பட்ட ஆய்வு செய்தேன். உதவித்தொகை பெறும் ஆய்வாளர்கள் வாரம் நான்கு மணி நேரம் வகுப்பெடுக்க வேண்டும் என்பது விதி. அதன்படி முதுகலை மாணவர்களுக்கு வகுப்பு நடத்தினேன். என் நெறியாளரோ பிற ஆசிரியர்களோ செல்ல இயலாத வகுப்புக்கும் என்னைப் போகும்படி சொல்வார்கள். ஆகவே பெரும்பாலும் தினம் இருவகுப்புகள் நடத்தும்படி இருக்கும். முதுகலை மாணவர்களுக்கு வகுப்பெடுத்த அனுபவத்தோடு அரசு கல்லூரிக்கு வந்து அதே முறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்தேன்.
நான் பணியில் சேர்ந்த கல்லூரி, நகரிலிருந்து பத்துக் கிலோமீட்டர் தள்ளி மலையடிக் கிராமம் ஒன்றிலிருந்தது. சுற்றுவட்டாரக் கிராமங்களிலிருந்து முதல் தலைமுறையாகக் கல்லூரிக்கு வருபவர்கள். இலக்கியம், வாசிப்பு என்பவை பற்றி ஏதுமறியாதவர்கள். அவர்கள் நிலையை உணர்ந்து என் கற்பித்தல் முறையையும் அணுகுமுறையையும் மாற்றிக் கொண்டேன். பள்ளி மாணவர்களுக்குக் கற்பிப்பது போலக் கருதி எளிமையாக்கினேன். அது நல்ல பலன் கொடுத்தது. ஓய்வு பெறும் வரையில் அதையே பின்பற்றினேன். தொடக்க நிலை வாசிப்புக்குப் பொருத்தமாக இருக்கும் ஐம்பது நூல்களைத் தேர்ந்து மாணவர்களுக்கு வாசிக்கக் கொடுத்தேன். இப்படிக் கற்பித்தலும் கல்வி சார்ந்தும் பல விஷயங்களை முன்னெடுத்திருக்கிறேன். மாணவர்களுக்கு நன்மை கிடைக்கும் எந்த வாய்ப்பையும் தவற விடாமல் அவர்களுக்குக் கொண்டு சேர்க்க முயல்வேன்.
கல்லூரிக்கு அருகிலேயே தங்கியிருந்ததால் மாணவர்கள் என்னைச் சந்திக்க வருவார்கள். சமைப்பார்கள், சாப்பிடுவார்கள். அவர்கள் வீட்டு விசேஷங்களுக்கு அழைத்துச் செல்வார்கள். கல்லூரிக்கு அருகில் இருந்த திரையரங்கம் ஒன்றிற்குப் படம் பார்க்க மாணவர்களுடன் செல்வேன். இவையெல்லாம் அவர்களுடன் நெருக்கமாகவும் அவர்கள் பின்னணி, குடும்ப நிலை ஆகியவற்றை அறியவும் உதவின. நானும் விவசாயக் குடும்பப் பின்னணியில், உழைத்துக் களைத்த சூழலில் இருந்து வந்தவன் என்பதால் அம்மாணவர்களைப் புரிந்துகொண்டேன். அவர்களுக்குப் பல நிலைகளில் வழிகாட்டவும் உதவவும் முடிந்தது. ஆழமான கல்வி அவசியம் என்பதை எப்போதும் உணர்த்திக் கொண்டேயிருப்பேன். அதில் சமரசமே கிடையாது. இவையெல்லாம் மாணவர்களுக்கு என் மேல் நம்பிக்கை வரக் காரணம். நம்பிக்கை ஏற்பட்டுவிட்டால் அன்பு தானாக உருவாகும்.
(தொடரும்)

விஜயகுமார்
வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். தற்போது டோக்கியோ அறிவியல் நிறுவனத்தில் (Institute of Science, Tokyo) ஆய்வாளராக உள்ளார். நவீனத் தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் உள்ளவர். தமிழிலிருந்து மலையாளத்துக்கு கவிதைகள் மொழிபெயர்த்துள்ளார்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.




















ஊடும் பாவுமாக இந்த தொடர் முழுக்க அதிகாரம் அல்லது சமூக அடுக்குமுறை எப்படி செயல்படுகிறது என்பதை மீண்டும் மீண்டும் தன்னுடைய நுட்பமான அவதானிப்பு மூலம் பகிர்ந்துகொண்டிருக்கிறார் பெருமாள் சார். இதை வாசித்துக்கொண்டிருக்கும் போது, ஆசிரியர்கள்-மாணவர்கள் இருக்கும் மற்றொரு துறையான மருத்துவ துறை பற்றியும் யோசித்துக்கொண்டிருந்தேன். அங்கும் மருத்துவர்களே ஆசிரியர்களாக வந்து மாணவர்களுக்கு பாடம் கற்றுக்கொடுக்கிறார்கள், அங்கும் இந்த சிக்கல் இருக்க வாய்ப்புள்ளது. அதே சமயம் மருத்துவ துறை சார்ந்து இயங்கும் அனைவருக்கும் continuing medical education – CME எனும் தொடர் கல்வி, வாசிப்பிற்கான, மேலும் கற்றுக்கொள்வதற்கான ஒரு நிர்பந்தம் உள்ளது, எனவே அதில் சில முன்னேற்றங்களை காணமுடிகிறது. “பதவிக்கு” வந்த பிறகு மற்ற கல்லூரி ஆசிரியர்களுக்கு அது இல்லாமல் இருப்பதால் உண்டாகும் விளைவுகளை இந்த நேர்காணலின் மூலமாக அறிய முடிகிறது.
கல்வி அமைப்புகள் சான்றிதழ்களை பட்டமளிப்பு விழாவின் மூலமாக வழங்கி, சான்றிதழ் பெற்றோரை இனி நீயும் இந்த அதிகார அமைப்பின் ஒரு பிரதிநிதி என்று முழக்கமிடும் நடைமுறையின் மூலமாக நிறுவுகிறது. “கற்பித்தல் என்பது அதிகாரச் செயல்பாடல்ல. அது ஒருவகைப் பரிமாற்றம். அறிவைப் பகிர்ந்து கொள்ளும் அற்புதச் செயல்” என்ற உணர்வு இந்த ஒட்டுமொத்த நடைமுறையிலும் கடத்தப்படுவதே இல்லை என்பதே வருத்தமான செயல்.
“வாசிப்புதான் சமூகப் புரிதலை உருவாக்கும். துறை சார்ந்த தாவல்களை அறியச் செய்யும். வாசிப்பில் நாட்டமுள்ள ஆசிரியரைப் பாருங்கள். மாணவர்களிடம் அவர்கள் அதிகாரம் செலுத்துவதில்லை. தம்மை ஆசிரியராக ஒருவர் தகுதிப்படுத்தக் கொள்ள வேண்டும் என்றால் வாசிப்புதான் ஒரே வழி” என்ற இடம் மிக முக்கியமானது. வாசிப்பில் எந்த அறிவு அதிகாரமும் அங்கீகரிக்கப்படவில்லை. எனவே அது அந்த அதிகார உணர்வை கடைசிவரையில் வழங்காமல் சக மனிதரை சமமாக என்னும் மனநிலையை கொடுக்கிறது. “வாசிப்பை நிர்ப்பந்திக்கும் ஆசிரியர் தேர்வு முறை அவசியம்.” – இத்தகைய தேர்வு முறை மாற்றம் பற்றிய ஆலோசனைகள் பரிசீலிக்கப்படவேண்டும்.