
1
மின்சாரக் கம்பியில் அடிபட்ட
பழந்தின்னி வௌவாலொன்று
பற்றிக்கொள்ள ஏதேனும் கிடைக்குமா என கேபிள் வயர் சுருளில்
தலைகீழாய் தொங்கியபோது
நான் இடமிருந்து வலம் மாறினேன்
*
2
தெருவிளக்குகளின் மேற்புறம் இருள் கவியத் தொடங்கியபோது
அவ்விளக்கின் கீழே
ஒரு திருநங்கை வந்து நின்றாள்
அவள் அன்றாடம் அங்கு வருபவள்
வரும்போதே நாய்களுக்கு பிஸ்கட் வாங்கி வருவாள்
அவளிடம் நடந்ததை சொன்னேன்
அவள் தன் தோள்பையை வலமிருந்து இடம் மாற்றிக்கொண்டாள்
*
3
ஒரு அட்டைப்பெட்டியில் அதை
பிடிக்க நாங்களிருவரும் எவ்வளவோ முயன்றோம்
அதன் ஒரு சிறகு வெளியேதான் இருந்தது
அடிபட்டதென்றாலும் அது சிறகு
*
4
இந்த வௌவால்தான் நான் என்றேன்
அவள் ஏனென கேட்டபோது
என் கதையைச் சொன்னேன்
நம்பியவர்களாலேயே காயப்பட்டதாய்
எல்லோரிடமும் இருக்குமே
அதே கதைதான்
*
5.
இது பார்ப்பதற்கு நரி போலவே இருக்கிறதென்றாள்
இரவில் நாம் கூர்ந்து நோக்கினால்
எவருடைய கண்ணுமே அப்படித்தான் இருக்கும் என்றேன்
*
6.
இந்த வௌவால்தான் நான் என்றாள்
புருவம் சுருக்கி விரிவதற்குள்
அவள் கதை புரிந்துவிட்டது
*
7.
அந்த வௌவால் மரமேறுவதை ஒரு நிமிடம்கூட நிறுத்தவில்லை
சில தூரம் ஏறும்
பின்னர் கீழே விழும்
அம் மாச்சிறைப் பறவை
பசைபடு பச்சை மின்சாரம் தோய்த்த சிறகுகளை
சட்டென விரைத்து பறக்க எத்தனித்தது
மடிந்த குடை விரிந்ததுபோல
அதன் சிறகு வளைந்து விரிந்தது
பின்னர் கீழே விழுந்தது
மயிர்கூச்செரிந்து
இது நானில்லை என்றேன்
கண்கள் விரிய
நானுமில்லை என்றாள்
*
8.
எங்கிருந்தோ வாகனத்தில் வந்தவர்கள்
மகாவீர் பிறந்தநாள் என்றார்கள்
எனக்கும் அவளுக்கும்
இனிப்பு கொடுத்து மறைந்தார்கள்
வௌவால்தான் நமக்கு
இதைத் தந்தது என்றாள் அவள்
ஆமாம் என்றேன் நான்
*
9.
தென்னையோலையில் வௌவாலை ஏற வைத்து அதனை மரக்கிளையின் உச்சியில் விடுவதுதான் திட்டம்
வௌவால் எங்களை நம்பியதாய்
நாங்கள் நம்பினோம்
அது ஓலையில் ஏறியபோது
நிம்மதியடைந்தோம்
ஆகாசம் கண்ட அப்பறவை அங்கிருந்தும் குதித்தது
இப்போது சர்வ நிச்சயமாய்
இது நீயுமில்லை
நானுமில்லை என்றேன்
இது இறந்தால்
அதன் காரணம் நீயும் நானும்தான் என்றாள் அவள்
*
10
பூனையோ நாயோ கடித்துவிடக்கூடாதென நாங்கள் வௌவாலுக்கு காவல் நின்றபோது
எங்கிருந்தோ வந்த ஒருவர் அதன் சிறகின் இருமுனைகளை அப்படியே பிடித்துத் தூக்கி மரத்தில் விட்டுவிட்டு கிளம்பினார்
நாங்கள் அதுவரை
வௌவாலை தொட்டிருக்கவில்லை என அப்போதுதான் உணர்ந்தோம்
இனிப்பினை நாய்க்கும் பூனைக்கும் கொடுத்துவிட்டு
அவளும் நானும் அணைத்துக்கொண்டோம்
இப்போது அது பிழைத்ததற்கு காரணம் நீயுமில்லை நானுமில்லை என்றாள் அவள்
*
11
மறுநாள் காலையில்
அதே வௌவால்
அதே மரத்தின்கீழ் இறந்துகிடந்தது
அன்றிரவு அவளிடம் இதைச்சொன்னேன்
அதன் சாவுக்குக் காரணம்
நீயும் நானும்தான் என்றாள்
இயற்கையின் கணக்கில்
நீயுமில்லை
நானுமில்லை என்றேன்
*
12
நமது கதையில் எதுவுமே மாறுவதில்லை என்றாள்
விரக்தியில் என்னபேசுவதென
தெரியாமல் எப்போதும் பேசுவோமே
அதே கதை தான்

சோ.விஜயகுமார்
சோ.விஜய குமார், தமிழில் எழுதிவரும் கவிஞர். உணர்வுத்தீவிரமான கவிதைகளை எழுதுபவர். உயிர்மை இதழின் இணையாசிரியராகப் பணியாற்றினார். "ஒரு ஸ்க்ரோல் தூரம் - (2023)", "சிற்றெறும்பின் நிழல் (2024)","அம்மாவிற்கு ஒரு கண்ணில் பூ(2025)", ஆகிய கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.



















