மம்மர் அறுக்கும் மருந்து (7) : அரசுப் பணி என்பது சமூகநீதிச் சங்கிலியின் ஒருகண்ணி : பெருமாள்முருகன் 

முந்தைய பகுதிகள்: பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6

விஜயகுமார்: இது தேர்தல் நேரம் என்பதால் அதில் முதன்மைப் பணியாளர்களான  ஆசிரியர்களின் பங்களிப்பைக் குறித்தும் பேசலாமென நினைக்கிறேன். இதில் கல்வித்துறையிலிருந்து யார்யாரெல்லாம் ஈடுபடுகிறார்கள்? உள்ளாட்சி, சட்டமன்றம், நாடாளுமன்றம் என மூன்று வகைத் தேர்தல்கள் சில வருடங்களுக்கு ஒருமுறை வருகின்றது. அவர்களுக்கான பயிற்சி, ஊதியம், உரிமைகள் குறித்துச் சொல்லுங்கள். தேர்தல் வேலைக்குச் செல்லும் பெண் ஆசிரியர்களின் பாடுகள் சமூக ஊடகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. கழிப்பறை வசதிகள், இரவில் நெடுநேரம் வாக்குச்சாவடியில் காத்திருத்தல், பயணம் உள்ளிட்டவற்றில் இன்னல்களை அனுபவிக்கிறார்கள். அண்மையில் தேர்தலுக்கு முன்பு வாக்காளர் பட்டியல் மறுசீரமைப்புப் பணி தந்த மனஅழுத்தத்தில் ஓர் ஊழியர் இறந்துபோனார். கோடை காலம் திடீர் உடலுபாதைகளையும், உயிராபத்தையும் வரவழைக்க வல்லது. அவை குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சலுகைகள் தேர்தல் பணியாளர்களுக்கு உண்டா? இப்பணிச் சூழல் எவ்வாறு மேம்படுத்தப்படலாம்?

பெருமாள்முருகன்: அரசு ஊழியர்கள் அனைவரும் தேர்தல் பணியில் ஈடுபடுகிறார்கள். அப்பணியை யாரும் மறுக்க இயலாது. மறுத்தால் அவ்வூழியர் மீது நடவடிக்கை எடுக்கலாம் எனச் சட்டவிதி இருக்கிறது போல. அது என்ன விதி என்று எனக்குத் தெரியவில்லை. அப்படித்தான் சொல்லி அச்சுறுத்துவார்கள். உரிய மருத்துவக் காரணத்தின் அடிப்படையில் சான்று வழங்கினால் விதிவிலக்கு உண்டு என்கிறார்கள். அது கடினமான நடைமுறை. பெரும்பாலும் ஊழியர்கள் அதை நாடுவதில்லை. பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள்  அனைவரும் இப்பணியில் ஈடுபடுகிறார்கள். நிரந்தரம், தற்காலிகம் என வேறுபாடு இல்லை. அவர்களின் பணிநிலை, ஊதிய விகிதம் ஆகியவற்றைப் பொருத்து வாக்குச்சாவடித் தலைமை அலுவலர், வாக்குப்பதிவு அலுவலர் 1, 2, 3 ஆகிய பணிகளைக் கொடுக்கிறார்கள். ஒவ்வொரு அலுவலகம், கல்வி நிறுவனம் மூலமாகப் பணியாளர் பட்டியலும் விண்ணப்பமும் பெற்று அவற்றைக் கொண்டு பணிநியமனம் நடைபெறுகிறது. இப்பணி கடினமானது என்பதால் பலரும் செல்ல விரும்புவதில்லை. மாற்றுத் திறனாளர்களுக்கு விலக்கு உண்டு. மற்றவர்கள் விலக்குப் பெறுவதற்கு, செல்லாமல் தவிர்ப்பதற்கு ஏதாவது வழியிருக்கிறதா என்று பார்ப்பார்கள். தீவிரமாக முயன்று சில தந்திரங்களைப் பயன்படுத்தித் தப்பித்துக் கொள்வார்கள்.

ஆம், இப்பணிக்குச் செல்லவில்லை என்றால் ‘தப்பித்துக் கொண்டோம்’ என்னும் மனநிலைதான் ஊழியருக்கு வருகிறது. கல்லூரிகளில் துறைத்தலைவர்கள் தப்பித்துக் கொள்வார்கள். கல்லூரி முதல்வருக்கு அணுக்கமானவர்கள் தப்பித்துக் கொள்வார்கள். மாவட்ட நிர்வாகத்தின் உயர்பதவியில் தமக்குத் தெரிந்தவர் யாரேனும் இருந்தாலும் தப்பித்துக் கொள்ளலாம். இப்பணி மகிழ்ச்சியானதாக இல்லை. பதற்றத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் பணி. அதனால் ஊழியர்கள் தன்விருப்பத்துடன் வருவதில்லை. கட்டாயம் என்று அச்சுறுத்தியே வர வைக்கிறார்கள். இப்போதைய சட்டமன்றத் தேர்தலில் சில நல்ல மாற்றங்கள் வந்திருக்கின்றன. பெண் ஊழியர்களை அவர்கள் பணியாற்றும் சட்டமன்றத் தொகுதிக்குள்ளேயே நியமனம் செய்திருக்கிறார்கள். இது வரவேற்கத்தக்க மாற்றம். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது ஓர் ஆசிரியை இறந்ததால் நேர்ந்த மாற்றம் இது என்று நினைக்கிறேன். யாராவது உயிரை விட்டுத்தான் சாதாரண மாற்றத்தைக்கூடக் கொண்டுவர வேண்டியிருக்கிறது. நிரப்ப வேண்டிய படிவங்கள், உறைகள் ஆகியவற்றிலும் ஓரளவு எளிமை வந்திருப்பதாக அறிகிறேன். நல்லது.

இன்னும் பல மாற்றங்கள் தேவை. ஐம்பது வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு இயல்பாகவே இப்பணியிலிருந்து விதிவிலக்கு தரலாம். உடல்ரீதியான மாற்றங்களால் அவ்வயதில் சிரமப்படும் பெண்கள் அதிகம். இரண்டு அல்லது மூன்று நாள் பயிற்சி வகுப்புகள். வாக்குப்பதிவு நாளுக்கு முந்தைய நாளே வாக்குச்சாவடிக்குச் சென்றுவிட வேண்டும். வாக்குப்பதிவுக்கு முந்தைய தயாரிப்புகள் செய்ய வேண்டும். வாக்குப்பதிவு முடிந்து இயந்திரத்தையும் ஆவணங்களையும் ஒப்படைக்கும் வரை அங்கேதான் இருக்க வேண்டும். இருபகல், இருஇரவு ஓய்வில்லாத தொடர்பணி. வாக்குச்சாவடி அமைந்திருக்கும் இடத்தில் கழிப்பறை இருக்காது. இருந்தாலும் சுத்தமாக இருக்காது. கழிப்பறை வாங்கிகள் இந்திய வடிவில்தான் பெரும்பாலும் இருக்கும். ஐம்பது வயதுக்கு மேற்பட்டோர் பயன்படுத்த இயலாது. பல பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு மட்டும் கழிப்பறை இருக்கும். அதைப் பூட்டிச் சாவியைத் தலைமையாசிரியர் வைத்திருப்பார். குழந்தைகளுக்குத் திறந்தவெளிக் கழிப்பறைகளே இருக்கும். நான் கல்லூரி முதல்வராக இருந்த போது தேர்தல் பணிக்கு வருவோருக்கு உரிய ஏற்பாடுகளைச் செய்து தந்த அனுபவம் பற்றி ஏற்கனவே ஒருகட்டுரை எழுதியிருக்கிறேன். எல்லோரும் அப்படிச் செய்ய வேண்டும் என்பதைக் கடமையாகக் கருதுவதில்லை.

அரசு அலுவலகங்களிலும் சரி, கல்வி நிறுவனங்களிலும் சரி குளியலறையே கிடையாது. ஒவ்வொரு இடத்திலும்  குறைந்தபட்சம் இருவாக்குச் சாவடிகள் உள்ளன. வாக்குச்சாவடி அலுவலர்கள், காவலர்கள் எனக் கிட்டத்தட்ட இருபது பேர் குளிக்க வேண்டும். ஆனால் குளியலறையே கிடையாது. வெளியிலும் செல்ல முடியாது. கழிப்பறையிலேயே குளிக்க வேண்டும் அல்லது குளிக்காமல் இருக்க வேண்டும். பகலில்தான் கல்வி நிறுவனம் நடக்கிறது என்பதால் குளியலறை அவசியப்படவில்லை. வாக்குச்சாவடியாக இருக்கும் நிறுவனத்தில் கட்டாயம் இரண்டு மூன்று குளியலறைகள் உருவாக்குவது ஒன்றும் கடினமல்ல. இப்போது தற்காலிகக் கழிப்பறைகள், குளியலறைகள் கிடைக்கின்றன. அவற்றை ஏற்பாடு செய்யலாம்.  அன்றாடக் கடன்களைச் செய்வதற்கே சிரமப்பட வேண்டியிருந்தால் எப்படிப் பணியாற்ற முடியும்? வாக்குச்சாவடிகள் பெரும்பாலும் அரசு சார்ந்த பள்ளி, கல்லூரிகளில் தான் உள்ளன. அவற்றில் பல வசதிகள் இருப்பதில்லை. முன்கூட்டியே அவற்றை உருவாக்க வேண்டிய மாவட்ட நிர்வாகமும் அந்நிறுவன நிர்வாகமும் பெரிதாக ஒன்றும் செய்வதில்லை. எப்படியிருந்தாலும் சகித்துக்கொண்டு பணியாற்ற வேண்டியதுதான்.

பணியாளர்களுக்கு உணவும் பிரச்சினை. மாவட்ட நிர்வாகம் உணவுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். ஒன்றும் செய்வதில்லை. முதல் நாள் செல்லும் ஊழியர்கள் அவர்களே எடுத்துச் செல்கிறார்கள் அல்லது அருகில் எங்காவது வாங்கிக் கொள்கிறார்கள். வாக்குப்பதிவு நாளன்று உணவகங்கள் பெரும்பாலும் விடுமுறையில் இருக்கின்றன. கடைகளும் இருப்பதில்லை. முகவர்கள் தரும் உணவுப் பொட்டலங்களைக் கொண்டுதான் சமாளிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகத்திற்குத்தான் இந்தப் பொறுப்பு உண்டு. ஆனால் அது கண்டும் காணாமல் இருந்து கொள்கிறது. வாக்குப்பதிவு முடிந்ததும் அன்றைய இரவு பெரும்பாலும் ஊழியர்கள் பட்டினி கிடக்கிறார்கள். நள்ளிரவில் அல்லது விடிகாலையில் தான் இயந்திரத்தை ஒப்படைக்க முடிகிறது என்னும் நிலையில் இருக்கும் வாக்குச்சாவடி ஊழியர்கள் என்ன செய்வார்கள்?

சில ஆண்டுகளுக்கு முன் குமாரபாளையம் நகர் நடுவே இருந்த பள்ளி ஒன்றில் தேர்தல் பணிக்குச் சென்றேன். இயந்திரத்தை வாங்கிச் செல்லப் பன்னிரண்டு மணிக்கு மேலாகிவிட்டது. உண்ண ஒன்றுமே கிடைக்கவில்லை. நாங்கள் பத்துப் பேர் வெகுதூரம் நடந்து முதன்மைச் சாலைக்கு வந்து இரண்டு மூன்று மணி நேரம் காத்திருந்து பேருந்து பிடித்தோம். தண்ணீரால் வயிற்றை நிரப்பிக் கொண்டோம். பெருந்துன்பம். இந்த முறை பாருங்கள், இப்படி இரவில் வெகுநேரம் கழித்துத் திரும்பினாலும் மறுநாள் ஆசிரியர்களைப் பள்ளிக்கு வரும்படி சொல்லிவிட்டார்கள். விடுமுறை கொடுத்திருக்க வேண்டாமா? தொடர்ந்து இருஇரவும் பகலும் பணியாற்றிய உடலுக்கு ஓய்வு வேண்டாமா? அரசு தம் ஊழியர்களை இப்படியா இரக்கமின்றி நடத்துவது? கவிஞர் சுகிர்தராணி இப்பிரச்சினை பற்றி எழுதியிருந்தார். அவர் தொடர்ந்து ஒவ்வொரு முறையும் எழுதுகிறார். இப்படித்தான் பொதுவெளியில் இப்பிரச்சினையைப் பேச வேண்டும். அப்போதுதான் படிப்படியாகவேனும் தீர்வு வரும்.

அதே போல ஊழியர்கள் இரவில் உறங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டாமா? இன்று படுக்கை, தலையணைகளை விநியோகிக்கும் முகவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் மூலம் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் ஏற்பாடு செய்யலாமே. பல்லாயிரம் கோடி செலவழிக்கும் தேர்தல் ஆணையத்திற்கு இதுவெல்லாம் பெரிய செலவேயில்லை. கடலில் கரைத்த பெருங்காயம். மொட்டைத் தரையில் படுத்துறங்க முடியுமா? பெரும்பாலும் ஊழியர்கள் தூங்குவதேயில்லை. முன் தயாரிப்பு வேலைகள் முடியவே இரவு பன்னிரண்டு மணிக்கு மேலாகிவிடும். மறுநாள் காலையில் நான்கு மணிக்கு எழுந்து மாதிரி வாக்குப்பதிவுக்குத் தயாராக வேண்டும். உணவும் சரியாக இல்லாமல், கழிப்பறை குளியலறைகளும் சரியாக இல்லாமல், உறக்கமும் இல்லாமல் அடுத்த நாள் முழுவதும் சற்று நேரம் கூட ஓய்வின்றிப் பணியாற்ற வேண்டும் என்றால் எப்படி முடியும்? சாதாரண மனித நிலையில் இருந்து யோசித்துப் பாருங்கள். அரசு ஊழியர்களுக்கு இரும்பில் செய்து வைத்த உடம்பா இருக்கிறது?

அருகில் யாரேனும் உறவினர் வீடு இருந்தால் அங்கே சென்று சற்று நேரம் உறங்கி வருவோர் உண்டு. அவ்வூரில் யார் வீட்டிலாவது இறைஞ்சிக் கேட்டுக் குளியலறையை, கழிப்பறையைப் பயன்படுத்துவது உண்டு. நம் மக்கள் ஒன்றும் பரோபகாரிகள் கிடையாது. வருவோர் என்ன சாதியோ என்று குழம்பித் தம் வீட்டு அறைகளில் அனுமதிக்கத் தயங்குவார்கள். அப்படிச் செல்வதை மாவட்ட நிர்வாகம் அனுமதிப்பதில்லை. வாக்குச்சாவடிப் பாதுகாப்பு முக்கியம், வாக்குச்சாவடி அலுவலர்கள்தான் பொறுப்பு என்பதெல்லாம் சரி. அவர்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டால் அவர்கள் ஏன் பிற இடங்களை நாடிச் செல்கிறார்கள்?

இவற்றை எல்லாம்விட மாவட்ட நிர்வாக அலுவலர்களும் பொதுமக்களும் ஊழியர்களை இழிவாகவும் தரக்குறைவாகவும் நடத்தும் போக்கு சகிக்க முடியாதது. வாக்குப்பதிவுக்கு முன் இருநாள் பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. அதில் பணியாளர்களுக்கு ஒதுக்கீடு உள்ளிட்ட வேலைகள்தான் நடக்கின்றனவே தவிர முறையான பயிற்சி கொடுப்பதில்லை. எப்போதோ ஒருமுறை இப்பணிக்கு வருவோர் எல்லாவற்றையும் நினைவு வைத்திருப்பார்கள் என்று சொல்ல முடியாது. சிலர் சட்டெனப் புரிந்து கொள்வார்கள். சிலருக்குக் கூடுதல் பயிற்சி தேவைப்படும். ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட பயிற்சி தேவை. அதற்கு நேரமும் உரிய வல்லுநர்களும் இல்லை. சரியாகப் பயிற்சி பெறாததால் நடைமுறைகளைப் புரிந்து செயலாற்றுவதில் தடுமாற்றம் ஏற்படுகிறது. ஆனால் மாவட்ட நிர்வாக அலுவலர்கள் கடுஞ்சொற்களைப் பயன்படுத்தித் திட்டுகிறார்கள். பல்லாண்டு ஆசிரியப் பணி அனுபவம் கொண்ட நானே திட்டு வாங்கியிருக்கிறேன். அவர்களுக்கு இருக்கும் பணியழுத்தம் எங்கள் மேல் வந்து விழும். வாக்குச்சாவடிக்கு வரும் அரசியல் கட்சி முகவர்களும் வாக்களிக்க வரும் மக்களும் வாக்குச்சாவடிப் பணியாளர்களை எதிரிகளைப் போலவே பார்க்கிறார்கள். அற்பக் காரணங்களுக்காகச் சண்டையிடுவார்கள். அவர்களை எல்லாம் சமாளிக்க வேண்டும்.

வாக்குச்சாவடி முன் தயாரிப்புப் பணிகளை இன்னும் எளிமைப்படுத்தலாம். கணினிமயமாக்கம் நடைபெற்றுவிட்ட காலத்திலும் கையால் எழுதும் வேலை நிறைய இருக்கிறது. பல படிவங்களில், பல உறைகளில் சட்டமன்றத் தொகுதிப் பெயர் உள்ளிட்ட விவரங்களை உட்கார்ந்து எழுத வேண்டும். அவற்றை எல்லாம் ஏற்கனவே அச்சிட்டே கொடுத்துவிடலாம். ஒவ்வொரு கட்டத்திலும் என்ன செய்ய வேண்டும் என்பதை வரிசைப்படுத்திக் குறிப்பாக வழங்கலாம். வாக்குச்சாவடித் தலைமை அலுவலருக்கான கையேட்டை இப்போது பார்த்தேன். வாக்களிக்க என்னென்ன ஆவணங்களைப் பயன்படுத்தலாம் எனும் விவரத்தையே அதில் கண்டுபிடிக்க முடியவில்லை. மிகப் பழையது என்று நினைக்கிறேன். தொடர்ந்து அதையே அச்சிட்டுக் கொடுக்கிறார்கள். மாற்றங்களைச் செய்து புதிதாக்கலாம்.

நான்கைந்து நாட்கள் இப்பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்குத் தேர்தல் ஆணையம் ஊதியம் வழங்குகிறது. இவ்வாண்டு ஊதியத்தை உயர்த்தியுள்ளது. அது நல்ல விஷயம். தலைமை அலுவலருக்கு மூவாயிரம் ரூபாய். பிற அலுவலர்களுக்கு 2600/- ரூபாய். ஆனால் நீங்கள் ஐயாயிரம் ரூபாய் கொடுத்தால்கூட இப்பணிக்கு வர ஊழியர்கள் விரும்ப மாட்டார்கள். இந்தப் பணியைப் பொருத்தவரைக்கும் ஊதியத்தை ஊழியர்கள் பிரச்சினையாகக் கருதுவதில்லை. தமக்குத் தேவையான வசதிகளைச் செய்து தந்து மதிப்பு மரியாதையுடன் நடத்தினால் போதும் என்றுதான் எதிர்பார்க்கிறார்கள். பல மாவட்டங்களில் துளி மழை பெய்யவில்லை. நூறு டிகிரிக்கு மேல் வெயில் அடிக்கிறது. ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒவ்வொரு ஏர்கூலர் வைக்கலாமே. மாவட்ட நிர்வாகம் என் கையில் இருந்தால் இதையெல்லாம் கட்டாயம் செய்வேன். தேர்தல் நடத்தும் அதிகாரியாகிய ஆட்சியரின் அதிகார வரம்புக்கு உட்பட்ட விஷயம்தான் இதுவெல்லாம் என்று நினைக்கிறேன்.  

வி: அரசுக்கல்லூரி ஆசிரியர் சங்கங்கள் எதாவது கோரிக்கைப் பட்டியலை வலியுறுத்திப் போராடும் போதெல்லாம் “என்றாவது மாணவர் பிரச்சினைக்கு, கல்வித்துறை மேம்பாட்டிற்கு இப்படியெல்லாம் இந்தச்  சங்கங்கள் ஒரு கோரிக்கை மனுவாவது எழுதியிருக்கிறார்களா?” என்கிற கேள்வி பொதுச்சமூகத்தில் எழுகிறது. சமீபத்தில் உங்கள் முகநூல் பக்கத்தில்கூட உங்களுக்கும் திரு. சுப. உதயகுமாரனுக்கும் இது குறித்து ஒரு உரையாடல் நடந்தது. ஆசிரியர் சங்கங்கள் பணியாளர் உரிமை என்ற வகையில் பேசினால் போதுமா? கல்வித்துறை மேம்பாட்டிற்கெனப் பேச வேண்டாமா?

பெமு: கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராளியும்  ‘பச்சைத் தமிழகம்’ கட்சியின் தலைவருமான சுப.உதயகுமாரன் அவர்கள் முகநூலில் செய்திருந்த பதிவு ஒன்றுக்கு நான் எதிர்வினை செய்திருந்தேன். பொதுவாக இவ்வாறான எதிர்வினைகளில் நான் ஈடுபடுவதில்லை. சமூக ஊடக விவாதம் சட்டெனத் திசை மாறிவிடுகிறது. யார் யாரோ உள்ளே நுழைந்து எளிதாகத் திருப்பி விடுகிறார்கள். உதயகுமாரன் அவர்கள் மீது எனக்கு நல்ல மதிப்பு உண்டு. அவரிடம் இருந்தே இப்படி ஒரு பதிவு வருகிறதே என்னும் ஆதங்கத்தில் சிறிய எதிர்வினை புரிந்தேன். அவர் தொடர்ந்து இன்னும் எழுதிக் கொண்டிருக்கிறார். எனக்கு ஆர்வமில்லை. குறிப்பிட்ட கோரிக்கை நியாயமானதா இல்லையா என்பதற்குள் நின்று பேசவில்லை. சமூகத்திற்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பங்களிப்பு எதுவுமே இல்லை என்பது போலப் பிரச்சினையைத் திசை மாற்றிக் கொண்டு செல்கிறார். அவற்றைப் பற்றிப் பேசலாம். நானும் பலபடப் பேசியிருக்கிறேன். என் எழுத்துக்களை அவர் வாசித்துப் பார்க்க வேண்டும். இந்தக் கோரிக்கை சரியானது என்பது என் எண்ணம். பிற பிரச்சினைகளை முன்வைத்து இதை மறுக்க முடியாது அல்லவா?

தேர்தல் பணிக்குச் செல்லும் ஊழியர்களுக்குப் பயிற்சி வகுப்பு நாள் ஒன்றுக்கு ஐந்நூறு ரூபாய் வீதம் வழங்குகின்றனர். இருநாள் பயிற்சிக்கு ஆயிரம் ரூபாய். இந்த முறை மூன்று நாள் பயிற்சிக்கு அழைத்திருக்கின்றனர். ஆனால் இருநாளுக்கான தொகைதான் கொடுக்கிறார்கள். ‘அரசு கல்லூரி ஆசிரியர் கழகம்’ மூன்று நாளுக்கும் தொகை கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது. கல்லூரியில் பணியாற்றும் நிரந்தர ஆசிரியர்களுக்கு மட்டும் வழங்க வேண்டும் என்று கோரவில்லை.  ‘தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் அனைவருக்கும்’ ஐந்நூறு ரூபாய் சேர்த்து வழங்க வேண்டும் என்பது கோரிக்கை. அது தர்க்கப்படி சரியானதுதானே. இரண்டு நாளுக்கு வழங்குகிறீர்கள், ஆனால் மூன்று நாள் பயிற்சி நடத்துகிறீர்கள், அது சரியல்ல, மூன்று நாளுக்கும் கொடுங்கள் என்று கோரிக்கை வைக்கிறார்கள். அதைப் பற்றி எழுதும்போது ‘பணவெறி ஆசிரியர்கள்’ என்று எழுதுகிறார். அக்கோரிக்கையில் இருக்கும் தர்க்கத்தை, நியாயத்தை அவர் சிறிதும் காணவில்லை. ஏற்கனவே அவர்கள் வாங்கிக் கொண்டிருக்கும் ஊதியம் தான் கண்ணை உறுத்தி முன்னிற்கிறது.

ஆசிரியர்களோ அரசு ஊழியர்களோ பொருளாதார ரீதியான கோரிக்கையாக எதை முன்வைத்தாலும் அதை எதிர்ப்பது என்பது ‘அரசுப் பணியாளர்கள் அதிக ஊதியம் வாங்குகிறார்கள். ஆனால் வேலை செய்வதில்லை. அவர்களுக்கு எதற்கு இன்னும் பணம்?’ என்று கருதும் பொதுப்புத்தி சார்ந்த மனநிலை. அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் சரியாக வேலை செய்யாமலா பெரிய பிரச்சினை ஏதுமின்றி இத்தனை பெரிய தேர்தலை இருநூற்று முப்பத்து நான்கு தொகுதிகளுக்கும் ஒரே நாளில் நடத்த முடிந்திருக்கிறது? மாபெரும் உழைப்பு இதன் பின்னணியில் இருக்கிறது. அரசியல் கட்சித் தலைவருக்கு ஐந்நூறு என்பது சாதாரண விஷயமாக இருக்கலாம். அரசு ஊழியர்களின் எல்லாத் தரப்பினரும் தேர்தல் பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு ஐந்நூறு ரூபாய் என்பது ஏதோ ஒரு தேவையை நிறைவு செய்யும். ஒரு தொழிற்சங்கம் முன்வைக்கும் நியாயமான கோரிக்கை அது என்பது என் அபிப்ராயம்.

கல்லூரி, பள்ளிகளில் நிரந்தரமாகப் பணியாற்றும் ஆசிரியர்கள் மட்டும் தேர்தல் பணியாற்றவில்லை. இன்று அரசுப் பணியின் எல்லா நிலைகளிலும் தற்காலிகப் பணியாளர்கள் ஆயிரக்கணக்கில் உள்ளனர். அரசு கல்லூரிகளில் ஏறத்தாழ எட்டாயிரம் ஆசிரியர்கள் கௌரவ விரிவுரையாளர்களாகப் பணியாற்றுகின்றனர். மாதம் முப்பதாயிரம் தான் ஊதியம். இருபத்தையாயிரத்தில் இருந்து கடந்த மாதம் முப்பதாயிரமாக அரசு உயர்த்தியது. அது போலப் பத்தாயிரம், பதினைந்தாயிரம் ஊதியத்தில்  பள்ளிகளில் பணியாற்றுவோர் உண்டு. அலுவலகங்களில் தற்காலிக ஊழியர்கள் இருக்கிறார்கள். அலுவலக உதவியாளர்கள்,  அங்கன்வாடிப் பணியாளர்கள் தேர்தல் பணியாற்றுகிறார்கள். எல்லோரையும் ஒரே தரத்தில் வைத்துப் ‘பணவெறி ஆசிரியர்கள்’ என்று பொதுமைப்படுத்துவது தவறு.

அப்புறம், தொழிற்சங்கங்களின் வேலை, கடமை என்ன? தம் உறுப்பினர்களின் உரிமை, பொருளாதாரக் கோரிக்கைகள் ஆகியவற்றை அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று நிறைவேற்றித் தருவதுதானே? அப்படிக் கோரிக்கை வைத்துப் போராடிப் பெற்றவற்றை இன்று அரசு ஊழியர்கள் அனுபவிக்கிறார்கள். பணிப் பாதுகாப்பும் நிரந்தர ஊதியமும் இருப்பதால் அரசுப் பணியை நாம் விரும்புகிறோம். அவை இல்லை என்றால் யார் விரும்பிச் செல்வார்கள்? ஒருவர் அரசுப் பணிக்குச் சென்றால் அவர் பின்னணியே மாறிப் போகிறது. அவர் குடும்பத்தினர், ஊர்க்காரர்கள் எல்லோரும் அவரை முன்மாதிரியாகக் கொண்டு படிக்கவும் பணிக்குரிய தேர்வுகளை எழுதவும் முன்வருகிறார்கள். ஒரே ஒருவருக்கு அரசுப்பணி கிடைப்பது என்பது சமூக நீதிச் சங்கிலியில் ஒருகண்ணியை இணைக்கிறது. அதைப் பற்றிக் கொள்ள முடியாத பொதுப்புத்தியில் பொறாமையோ வன்மமோ ஏற்படுகிறது. அது அரசு ஊழியர்களை எதிராகக் காண்கிறது. அந்த மனநிலையைத் தான்  விமர்சிக்கிறேன்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது லஞ்சம் உட்பட  ஏராளமான விமர்சனங்களை  வைத்திருக்கிறேன். இந்த நேர்காணல் தொடரிலேயே அதைக் காணலாம். அரசுப் பணியாளர்களின் பணித்திறன் கூடவும் அவர்களைக் கண்காணிக்கவும் இன்னும் வலுவான அமைப்பு முறை வேண்டும் என்பதும் என் எண்ணம். அதற்காக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஏதும் செய்யவில்லை என்றெல்லாம் சொல்ல மாட்டேன். அவர்களின் ஊதியத்தைக் குறைக்க வேண்டும், உரிமைகளைப் பறிக்க வேண்டும் என்றும் சொல்ல மாட்டேன். பல்லாண்டுப் போராட்டங்களால், பலருடைய உயிர்த் தியாகத்தினால் பெற்ற உரிமைகள், ஊதிய விகிதங்கள் இவை. பல வல்லுநர் குழுக்கள் செய்த பரிந்துரைகளின் அடிப்படையில் வந்து சேர்ந்தவை இவை. இவற்றைப் பாதுகாத்துக் கொள்ளும் நிலையில் இன்று தொழிற்சங்கங்கள் உள்ளன.  அடுத்த தலைமுறைக்கு அவற்றை எடுத்துச் செல்ல வேண்டியது சங்கங்களின் கடமை. வளர்ந்த நாடுகள் ஆசிரியப் பணிக்கு வழங்கும் ஊதியத்தில் பாதியளவுகூட நாம் வழங்குவதில்லை. ஆனால் ‘அதிகம் அதிகம்’ என்று கூப்பாடு போடுகிறோம். அரசுப் பணிகளை அதிகரிக்க வேண்டும் எனவும் அனைத்துப் பணியிடங்களையும் நிரந்தரப் பணியாளர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும் என்றும் போராட வேண்டியது அனைவரின் கடமை.

தொழிற்சங்கங்கள் பொதுவிஷயங்களுக்குப் போராடவில்லை என்பது சரிதான். அவர்களின் தீர்மானங்களில் பொதுப்பிரச்சினைகள் இடம்பெறும். அவற்றை வலியுறுத்திப் போராடுவதில்லை. இன்று தங்கள் கோரிக்கைகளுக்காகப் போராடுவதுகூடக் குறைந்து போய்விட்டது. தற்காலிக ஊழியர்களை நிரந்தரமாக்க வேண்டும் என்பதற்கான போராட்டம் தான் அதிகமாக உள்ளது. மேலும் தொழிற்சங்கம் என்பது தம் உறுப்பினர் நலன் கருதி நடப்பதாகும். அது ஒரு அரசியல் கட்சியல்ல. ஆனால் பொதுப்பிரச்சினைகளிலும் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்பதுதான் என் விருப்பம். சமூகத்தில் நடக்கும் அனைத்தும் இவர்கள் நலனையும் பாதிக்கும் அல்லவா? கல்வி தனியார் மயத்துக்கு எதிராக ஆசிரியர் சங்கங்கள் போராடிய வரலாறு உண்டு. ஒவ்வொரு கல்லூரியையும் பல்கலைக்கழகமாக்கும் முயற்சிக்கு எதிராகவும் போராடியிருக்கிறார்கள். மாணவர்களுக்கான கட்டணங்களை உயர்த்தினாலும் போராடுவார்கள். இன்னும் பல பிரச்சினைகளுக்கும் போராடியிருக்கிறார்கள். ஆனால் அவர்களால் எல்லாவற்றையும் தடுக்க முடியவில்லை. தம் உறுப்பினர் நலன் என்னும் அளவில் தொழிற்சங்கம் சுருங்கிப் போனமைக்குப் பல காரணங்கள் உள்ளன.

வி: அடுத்து வரப்போவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு. நான் 2011 ஆம் ஆண்டு ஒரு அங்கன்வாடி ஊழியருடன் மக்கள்தொகை கணக்கெடுப்பிற்காகப் பணியாற்றினேன்; கணக்கெடுப்பில் ஈடுபட்டவர்களுக்கு போதுமான அளவு தினப்படியோ ஊதியமோ இல்லை. இதிலும் ஆசிரியர்களும் பங்களிப்பார்கள் என நினைக்கிறேன். வீடுவீடாகச் செல்லும் பணி என்பதால் கழிப்பறை, குடிநீர், வெயில், நாய்கள் என ஆபத்துகள் நிறைய. ஆசிரியர்களும் ஊழியர்களும் கோரிக்கை வைக்கவும், இப்பணியிலிருந்து விலக்குப்பெறவும் முகாந்திரங்கள் உண்டா?

பெமு: இத்தகைய பணிகளை அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மேற்கொள்ளலாம். தவறல்ல. ஆனால் குறிப்பிட்ட வயது சார்ந்தும் உடல்நிலை சார்ந்தும் விலக்களிக்க வேண்டும். அங்கன்வாடிப் பணியாளர்கள், தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் இப்பணிகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அதனால் அவர்களின் அன்றாட அலுவல்கள் பாதிக்கப்படுகின்றன. போதிய ஊதியமும் தருவதில்லை.  மேலும் அவர்கள் படும் சிரமம் பல. இப்போது வாக்காளர் திருத்தம் நடந்ததல்லவா? அதில் ஆசிரியர்கள் ஈடுபட்ட போது அவர்கள் வீடுகளில் உள்ள பலரும் உதவ வேண்டிய நிலை இருந்தது. இப்பணிகளை முகவர்களிடம் விட்டுவிடலாம் என்பது என் எண்ணம். எத்தனையோ கணக்கெடுப்புகளுக்கு முகவர்களை நாடும் நிலை இன்று இருக்கிறது. அது போலவே இப்பணிகளையும் செய்யலாம். எளிதான நடைமுறையாக இருக்கும் என நினைக்கிறேன்.

தொடரும்…

விஜயகுமார்

வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.  தற்போது டோக்கியோ அறிவியல் நிறுவனத்தில் (Institute of Science, Tokyo) ஆய்வாளராக உள்ளார். நவீனத் தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் உள்ளவர். தமிழிலிருந்து மலையாளத்துக்கு கவிதைகள் மொழிபெயர்த்துள்ளார்.


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

உரையாடலுக்கு

Your email address will not be published.

கடந்தவை

திரட்டு

சேகரம்

Go toTop

Don't Miss