மம்மர் அறுக்கும் மருந்து (9) – உயிர்களின் அடிப்படை உணர்வாகிய காதலை யாராலும் தடுக்க முடியாது : பெருமாள்முருகன்

முந்தைய பகுதிகள்
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4
 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8
விஜயகுமார்:பள்ளிக்கல்வி, ஆசிரியர்-மாணவர் குறித்த படைப்புகளை நினைக்கும் போது பிரபஞ்சன், ஆயிஷா நடராஜன், ஜா.தீபா ஆகியோரின் சிறுகதைகள், ச.மாடசாமி, பாரதி தம்பி அவர்களின் நூல்கள் நினைவுக்கு வருகின்றன. ஆரம்பக்கல்வி குறித்த பல்வேறு புத்தகங்களை, அறிவொளி இயக்கத்தில் பங்கெடுத்தவர்களின் படைப்புகளைப் பாரதி புத்தகாலயம் வெளியிட்டிருக்கிறது. உயர்கல்வித்துறை குறித்த நாவல்களில் ஆர்.சிவகுமார் அவர்களின்  ‘கற்றதால்’, அரசு விடுதி மாணவர்கள் குறித்த வீரபாண்டியன்அவர்களின்  ‘பருக்கை’, உங்களுடைய  ‘கழிமுகம்’,   ‘விஷக்கடி’ முதலிய சிறுகதைகள் நினைவுக்கு வருகின்றன.‌ உயர்கல்வித்துறை குறித்த புனைவுகள், அபுனைவுகள் என்று எழுதப்பட்டவை குறித்துச் சொல்லுங்களேன். அவற்றின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பது போலத் தோன்றுகின்றது.

பெருமாள்முருகன்: ஆம். பள்ளிக் கல்வியாயினும் உயர்கல்வியாயினும் சரி, கல்வி நிறுவனங்களைக் களமாகக் கொண்ட படைப்புகள் குறைவுதான். அதுவும் அத்துறைக்குள் இருந்து அனுபவம் பெற்றவர்கள் எழுதியவை அரிதினும் அரிது.  ‘நம் கல்விப்புலம் படைப்பாளர்களை உருவாக்காத மொன்னைத்தன்மை கொண்டது’  என்னும் விமர்சனம் மிகவும் பொருத்தமானதே. ஆம், மொன்னைத்தனம் என்னும் சொல் மிகப் பொருத்தம்தான். ஒருவரிடம் இயல்பாகப் பொதிந்திருக்கும் படைப்பாற்றலின் தடைகளைக் கிள்ளியெறிந்து அது வெளிப்பட்டுப் பெருமலராக விரிந்து மணம் பரப்பச்   செய்வதுதான் கல்வி. ஆனால் நம் கல்வி அமைப்பு படைப்பாற்றலை முடக்கும் வகையில்தான் செயல்படுகிறது. கல்விப்புலத் தூண்டுதலால் படைப்பாளரானோர் எண்ணிக்கை அரிதினும் அரிது. பெரும்பாலான படைப்பாளர்களைக் கேட்டுப் பாருங்கள், கல்விப்புலத்திற்கு வெளியிலிருந்தோ தன்னார்வத்தாலோ பல கதவுகளைத் தட்டித் திறந்து தடுமாறியே படைப்புக்குள் வந்தவர்களாக இருப்பார்கள்.

என்னை நேர்காண்பவர்களிடம் இருந்து தொடர்ந்து எதிர்கொள்ளும் கேள்வி, ‘முனைவர் பட்டம் பெற்றவர், பேராசிரியர் என்றால் பண்டித மனப்பான்மை கொண்டிருப்பார்கள். நீங்கள் எப்படிப் படைப்பாளர் ஆனீர்கள்?’ என்பது. ‘பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டு படைப்பிலும் இயங்குகிறீர்கள். இரண்டையும் எப்படி இயைக்கிறீர்கள்?’ என்பது போல மறைமுகமாகவும் கேட்பார்கள். கல்வியும் படைப்பாற்றலும் எதிரெதிரானவை என்னும் கருத்து பொதுவெளியில் இருப்பதையே இத்தகைய கேள்வி உணர்த்துகிறது. இரண்டையும் இயைக்கும் மாற்றங்களைக் கொண்டு வர முயல வேண்டுமே தவிர, அது அப்படித்தான் என்று விட்டுவிடக் கூடாது. கல்விப்புல நடைமுறைகளைக் கடந்து என் ஆர்வம் காரணமாகவோ என்னவோ நான் பயின்ற இலக்கியக் கல்வி என் படைப்பாற்றலுக்குப் பெரிதும் உறுதுணை செய்தது. சங்கப் பாடலையும் நவீன கவிதையையும் ஒரே கோணத்தில் வைத்துப் பார்த்துச் சிலாகிக்க என்னால் முடியும். கவிதையின் இயல்பு எக்காலத்திலும் ஒளிவிடும் சிறுசுடரைத் தன்னுள் வைத்திருப்பது தானே?

சரி, கல்விப்புலத்தின் மொன்னைத்தனம் காரணமாக அதன் உள்ளிருந்து படைப்பாளர்கள் வரவில்லை என்பதால் அதைக் களமாகக் கொண்ட படைப்புகளும் அரிது. வெளியிலிருந்து கண்டு எழுதியவர்கள் கணிசமாக இருக்கக் கூடும்.   விரல் விட்டு எண்ணத்தக்க அளவிலேயே நாவல்கள் வந்துள்ளன. சிறுகதைகள் கணிசமாக இருக்கும் எனக் கருதுகிறேன். தி.ஜானகிராமன் எழுதிய  ‘முள்முடி’, ஆயிஷா நடராஜன் எழுதிய  ‘ஆயிஷா’, பிரபஞ்சனின் ‘மரி என்ற ஆட்டுக்குட்டி’ உள்ளிட்ட சில கதைகள் முக்கியமானவை. பிரபஞ்சன் சில தொடர்கதைகளையும் கல்வி நிறுவனக் களத்தில் எழுதியிருக்கிறார். கந்தர்வன் ‘தலைவர்’ என்றொரு கதை எழுதியிருக்கிறார். மருத்துவக் கல்விக்குத் தம் மகனைத் தயார்ப்படுத்தும் குடும்பச் சூழலையும் மருத்துவக் கல்விக்குச் சென்ற பிறகு மகனிடம் ஏற்படும் மாற்றங்களையும் எள்ளலோடு சொல்லும் சுவாரசியமான கதை.

எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் தொகுத்த ‘கல்விக் கதைகள்’ என்னும் நூலைத் திருச்சி, எஸ்.ஆர்.வி. தமிழ்ப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இருபத்திரண்டு கதைகளைக் கொண்ட தொகுப்பு அது. புதுமைப்பித்தனின் ‘நிகும்பலை’ முதல் பாமாவின் ‘மஞ்சள் நிற வண்ணத்துப் பூச்சி’ வரை இருபத்தொரு கதைகள் இடம்பெற்றுள்ளன. இத்தொகுப்பில் விடுபட்ட பல கதைகளும் உள்ளன. இப்படிக் கல்வி சார்ந்த கதைகளைத் தேடிப் பிடிக்க வேண்டும். இந்தக் கோணத்தில் பார்த்தால் கொஞ்சம் படைப்புகள் கிடைக்கலாம். சிறுகதைகள் கணிசமாக இருக்கும் என்று அனுமானிக்கிறேன். அவை போதுமானவை அல்ல. இருப்பவற்றைத் தொகுத்து அவை பேசும் பிரச்சினைகளை ஆராய்ந்தாலே நம் கல்விமுறையில் சீர்திருத்தம் செய்ய பல விஷயம் கிடைக்கும். யாரேனும் ஒருவர் தம் ஆய்வுத் திட்டமாகக் கல்வி சார்ந்த படைப்புகளைத் தொகுக்கலாம்; ஆராயலாம். கல்விப்புலத்திற்குள் இதைச் செய்ய முடியாது. வெளியிலிருந்துதான் இதைச் செய்ய முடியும்; செய்ய வேண்டும்.

கல்வித்துறையைக் களமாகக் கொண்டு எழுத வேண்டியவை எவ்வளவோ உள்ளன. மாணவர் கோணம், பெற்றோர் பார்வை, ஆசிரியர் நிலை, நிறுவன விதிகள், சாதி, மதம், கல்வி பற்றிய பொதுப்புத்திக் கருத்துக்கள், விழுமியங்கள் என்று பேச எவ்வளவோ  இருக்கின்றன. படைப்பாக வெளிப்படும் போது இவற்றை எல்லாம் உளவியல் ரீதியாகவும் அணுக இயலும். ‘காலச்சுவடு’ இதழ் ஆண்டுக்கு ஒருமுறையேனும் கல்விச் சிறப்பிதழாக வருகிறது. அதற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. வழக்கத்தைவிட ஆயிரம் பிரதிகளுக்கு மேல் கூடுதல் விற்பனை ஆகிறது. கல்விப் பிரச்சினைகளை எல்லாம் படைப்புகளில் பேசினால் உயிர்ப்புள்ள சம்பவங்களும் பாத்திரங்களும் வந்து சேரும்.  நிறுவனங்களுக்குள் நிலவும் சாதிப் பிரிவினையின் நுட்பமான இழைகளைப் படைப்புகளே பேச முடியும். அவ்வகையில் கடந்த ஆண்டு நான் எழுதிய ‘சந்தைக் கடை’ என்னும் சிறுகதை பரவலான கவனத்தைப் பெற்றது.

கல்வித்துறை சார்ந்தவர்கள் எழுத அஞ்சுகின்றனர். அல்புனைவு வடிவங்களிலும் எழுத யோசிக்கின்றனர். நான்கூடப் புனைவுகளில் பெரிதாக எழுதவில்லை. அல்புனைவில் ஓரளவு எழுதியுள்ளேன். ‘ஆசிரியர்களுக்கு எதிரானவன்’ என்று எனக்குப் பெயருண்டு. பெயரென்ன, வசவுண்டு. ‘உள்ளிருந்து காட்டிக் கொடுக்கும் துரோகி’ என்கின்றனர். உள்ளிருப்பவருக்குத் தானே என்ன நடக்கிறது என்பது தெரியும்? ஒருபடைப்பாளராக இருந்துகொண்டு எதையும் வெளிப்படுத்தாமல் இறுகி இருக்க முடியுமா? இச்சூழலில் பணியாற்றிக் கொண்டே ஆசிரியர்களையோ மாணவர்களையோ பாத்திரமாகக் கொண்டு கதைகள் எழுதத் தயக்கம் இருந்தது. பணி ஓய்வுக்குப் பிறகு எழுதலாம் என ஆர்வம் இருக்கிறது. ஒருசில கதைகள் எழுதியிருக்கிறேன். இன்னும் எழுத வேண்டும். பார்க்கலாம். 

வி: சமகாலப் பள்ளிக்கல்வி குறித்து சு. உமா மகேஸ்வரி, தி. பரமேசுவரி, சாரா அருளரசி, சுகிர்தராணி ஆகியோர் எழுதுகிறார்கள். உயர்கல்வித்துறை சார்ந்து உங்களோடு ஆர். அபிலாஷ் பெயரும் நினைவுக்கு வருகிறது. என்னுடைய குறைந்த வாசிப்பில் வேறு பெயர்கள் தெரியவில்லை. உயர்கல்வித்துறை சார்ந்து போதுமான அளவு கவனக்குவிப்பும் விமர்சனங்களும் அதற்கான பங்களிப்பும் தமிழ்ச்சூழலில் எப்படி இருக்கின்றதென நினைக்கிறீர்கள்?

பெமு: 1990களில்  அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் தீவிரமாகச் செயலாற்றியது. அப்போது ஆசிரியர்களில் சிலர் கல்விப் பிரச்சினைகள் தொடர்பாக எழுதினார்கள். நான் இடதுசாரிப் பத்திரிகையாகிய ‘மனஓசை’யின் ஆசிரியர் குழுவில் இருந்தேன். அக்குழுவில் இருந்த பேராசிரியர் சீனிவாசன் உயர்கல்விப் பிரச்சினைகள் பற்றித் தொடர்ந்து எழுதினார். அவர் பொருளியல் பேராசிரியர். சுரேஷ் என்னும் புனைபெயர் கொண்டிருந்தார். அரசு கல்லூரி ஆசிரியர் கழகத் தலைவராகச் செயல்பட்ட  பேராசிரியர் ப.சிவகுமார் பல பிரச்சினைகளை எழுதினார். கல்விக் கொள்கைகள், மாற்றுக் கல்வி பற்றியெல்லாம் பார்வை கொண்ட இயற்பியல் பேராசிரியர் அவர்.

அ.மார்க்ஸ், கோ.கேசவன், ப.கல்யாணி, த.பழமலய் உள்ளிட்ட பலர் அப்போது அரசு கல்லூரி ஆசிரியர்களாகப் பணியாற்றினர். அ.மார்க்ஸ் நிறைய எழுதினார். ஒன்றிய அரசின் கல்விக் கொள்கைகள் பற்றியெல்லாம் மிகக் கடுமையாக விமர்சனம் செய்து எழுதியிருக்கிறார். சிறுசிறு நூல்கள் கொண்டு வந்தார். கோ.கேசவனும் கொஞ்சம் எழுதினார் என நினைவு. அக்காலத்தில் கல்லூரி வகுப்பறையில் கவனம் செலுத்தாத பல ஆசிரியர்கள் தனிவகுப்பு நடத்தும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். ட்யூசன் கலாச்சாரத்தை எதிர்த்துப் பேராசிரியர் ப.கல்யாணி களத்தில் இறங்கிப் போராடினார். அதைப் பற்றிய செய்திகளும் கட்டுரைகளும் வெளியாயின. தினமணி இதழின் நடுப்பக்கத்தில் நிறையக் கட்டுரைகள் வரும். முதலில் 2000வாக்கில் நானும் அவ்விதழில்தான் இரண்டு கட்டுரைகள் எழுதினேன். அதனால் பணியிட மாறுதல் பெற வேண்டிய கட்டாய நிலைமை ஏற்பட்டது.

அந்தப் பேராசிரியர்கள் எல்லாம் பணி ஓய்வு பெற்ற பிறகு எழுத ஆளில்லாமல் போய்விட்டது. அடுத்த தலைமுறை உருவாகவில்லை. இப்போது ஒன்றிய அரசு பல மாநிலங்களில் செயல்படுத்தியுள்ள புதிய கல்விமுறை பற்றித் தமிழில் போதுமான அளவு எழுதவில்லை. இந்தியக் கம்யூனிஸ் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்ந்த அமைப்புகள் இவ்வகையில் ஓரளவு கவனம் செலுத்துகின்றன. பாரதி புத்தகாலயம் சில நூல்களை வெளியிட்டுள்ளது. பேராசிரியர் ப.சிவகுமார் இப்போதும் கல்விக்கான கூட்டமைப்பு வைத்துச் செயற்பாட்டாளராக உள்ளார். அவை போதுமானவை அல்ல. தமிழ்நாட்டிலேயே மத்தியப் பல்கலைக்கழகங்களில் நான்காண்டு பட்டப்படிப்பு என்னும் நிலை வந்துவிட்டது. தமிழ்நாடு அரசு அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தக் கல்விக்கொள்கையால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றிப் பேச ஆளில்லை. விரிவான ஆய்வுகள், நூல்கள் வரவில்லை. இதைப் பற்றி ஆசிரியர்களுக்கும் மாணவர் அமைப்புகளுக்கும் தெளிவில்லை.  

இப்படிப்பட்ட பிரச்சினைகளை எழுதுவதற்கும் பேசுவதற்கும் அடுத்த தலைமுறை உருவாகவில்லை. அதற்குப் பல காரணங்கள் உள்ளன. தொழிற்சங்கச் செயல்பாடுகளில் முடக்கம், கல்வியில் தனியார் மயமாக்கம், அரசின் அணுகுமுறைகளில் மாற்றம் ஆகியவை எல்லாம் காரணம். ஆனால் எழுத நிறையப் பிரச்சினைகள் உள்ளன. நான் எழுதிய கட்டுரைகள் ‘மயிர்தான் பிரச்சினையா?’, ‘காதல் சரி என்றால் சாதி தப்பு’ ஆகிய நூல்களாக வந்துள்ளன.  ‘மனதில் நிற்கும் மாணவர்கள்’ நூலும் அவ்வகையில்தான் சேரும். என் மாணவர்கள் எழுதிய ‘எங்கள் ஐயா’ நூலும் உயர்கல்வி பற்றியானதே. நான் பெரும்பாலும் என் அனுபவம் சார்ந்து நடைமுறைப் பிரச்சினைகளை எழுதி வருகிறேன். கல்விக் கோட்பாடுகள், அரசின் கல்விக் கொள்கைகள் பற்றியெல்லாம் விமர்சித்து எழுத ஆளில்லை. நிறையப் பேர் வர வேண்டும். பொதுவெளியில் பேசினால் தான் கொஞ்சமாவது நல்லது நடக்கும்.

பெருமாள் முருகன் கேரளத்தில் சுகுமார் அழிக்கோடு நூற்றாண்டு நினைவு விருது பெற்றபோது. (படம்: கே.டி.பாபுராஜ், கன்னூர். மே 12 2026)

வி: கல்லூரிக் காதல் விவகாரங்களில் ஆசிரியர்களின் எல்லை என்ன?

பெமு: காதல் என்பது தனிமனிதப் பிரச்சினை. அதில் பிறர் தலையீடு அவசியம் இல்லாதது என்பது என் எண்ணம். பதின்வயதில் இருக்கும் மாணவர்களுக்குக் காதல் உருவாவது இயல்புதான். அதைப் பாலினக் கவர்ச்சி என்றோ காதல் என்றோ காமம் என்றோ எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். இந்தப் பருவத்தில் வராமல் வேறு எப்போது வரும்? அவையெல்லாமே இயல்பானவை. அவற்றில் வரும் பிரச்சினைகளை அவர்களே தீர்த்துக் கொள்ளட்டும் என்று விட்டுவிட வேண்டும்.

காதலை அகம் என்று தமிழ் மரபிலக்கணம், இலக்கியம் எல்லாம் வரையறுக்கின்றன. காதலில் ஈடுபட்டோர் பெயரைக்கூட வெளிப்படச் சொல்வதில்லை. ‘சுட்டி ஒருவர் பெயர்கொளப் பெறாஅர்’ என இலக்கண விதியே கூறுகிறது. தலைவன், தலைவி, தோழி, பாங்கன் என்று பொதுப்பெயரால் குறிப்பிடுவதே மரபு. அகம் என்பதை ‘ஒருவனும் ஒருத்தியும் தம்முள் கொள்ளும் அன்பு’ என்றும் ‘உள்ளத்துணர்வே நுகர்ந்து இன்பம் உறுவதோர் பொருள்’ என்றும் நச்சினார்க்கினியர் விளக்குகிறார். அகத்திற்கும் புறத்திற்குமான வேறுபாடு கூறும்போது  ‘இவ்வாறு இருந்ததெனப் பிறருக்குக் கூறப்படாதது அகம்’ எனவும் ‘இவ்வாறு இருந்ததெனப் பிறருக்குக் கூறப்படுவது புறம்’ எனவும் வரையறை தருகிறார். காதலைத் தனிமனித உணர்வு என அறிந்து மதிப்பளித்த சமூகம் நமது. இப்பேர்ப்பட்ட மரபை உடைய நாம் இளம்பருவத்தினர் காதலை ஏன் எதிராகக் காண்கிறோம்?

ஆசிரியர்களின் பார்வையில் பெருமாற்றம் வர வேண்டும். ஒழுக்கப் பார்வையும் சாதியப் பார்வையும் ஆசிரியர்களிடம் தீவிரமாக நிலவுகிறது. அதுதான் ஒருபையனும் பெண்ணும் பேசிக் கொண்டால்கூடத் தாங்க முடிவதில்லை.  அவர்களைக் கண்டிப்பது, எச்சரிப்பது, தண்டிப்பது என ஆசிரியர்கள் மிகக் கடுமையாக நடந்து கொள்கின்றனர். மாணவர் காதலால் கல்வி நிறுவனச் சூழலுக்கு ஏதேனும் பாதிப்பு என்றால் அப்போது ஆசிரியரோ முதல்வரோ தலையிடலாம். பிரச்சினையில் அவர்களைத் தலையிடக் கோரி மாணவர்கள் முறையிட்டால் தலையிடலாம். மற்றபடி அது தனிப்பட்ட பிரச்சினை என்று கருதி ஆசிரியர்கள் ஒதுங்கிக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் உளவியல் ஆலோசகர் ஒருவர் தேவை. இப்போது மாவட்ட அரசு மருத்துவமனைகளில் உளவியல் மருத்துவர் பணியிடம் உருவாக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் ஒருமருத்துவர் பணியாற்றுகிறார். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு மருத்துவக் கல்லூரி என்னும் நிலை தமிழ்நாட்டில் இருப்பதால் உளவியல் துறையும் கட்டாயம் இருக்கும். உளவியல் மருத்துவர்களை மக்கள் நாடுதல் மிகக் குறைவாகவே உள்ளது. உளவியல் மருத்துவம் என்றால் ‘பைத்தியத்துக்கு வைத்தியம் செய்தல்’ என்னும் தவறான புரிதல் பொதுவெளியில் இருக்கிறது. இன்று உளவியல் எவ்வளவோ வளர்ந்து பரவியும் உள்ளது.

மருத்துவக் கல்லூரியின் உளவியல் துறையோடு அரசு கல்வி நிறுவனங்கள் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளலாம். வாரம் ஒருமுறையோ பதினைந்து நாட்களுக்கு ஒருமுறையோ கல்லூரிக்கு மருத்துவர் வர ஏற்பாடு செய்யலாம். ஆசிரியர்களில் ஆர்வம் உள்ள ஒருவருக்குக் குறைந்தபட்சப் பயிற்சி கொடுத்து நிரந்தர ஆலோசகர் ஆக்கலாம். பயிற்சியற்ற ஆசிரியர்கள் இந்தக் காதலை ஒழுக்கப் பார்வை மட்டுமே கொண்டு பார்க்கிறார்கள். அது தவறு; போதுமானதல்ல. அதனால் தான் ஆசிரியர்கள் ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்கிறேன்.

அப்படி ஒதுங்கிக் கொள்ள முடியாமைக்கு இன்னொரு காரணம் பெற்றோர். தம் பிள்ளைகளை ஒரு கல்வி நிறுவனத்தில் சேர்க்கும் போது அங்கு கல்வி எப்படி இருக்கிறது, மேற்கொண்டு உயர்கல்விக்குச் செல்ல வாய்ப்பு இருக்கிறதா என்பவற்றோடு காதலிக்காமல் தடுக்கும் சூழல் இருக்கிறதா என்று பார்க்கிறார்கள். பெற்றோரின் இந்த எதிர்பார்ப்பு சுயநிதிக் கல்லூரிகளுக்கு ஒருமூலதனம். ஆண்களும் பெண்களும் பேசுவதற்கே தடை போடும் கல்லூரிகள் இருக்கின்றன. பேசினால் தண்டம் விதிப்பதும் உண்டு. மகளிர் கல்லூரிகளில் தம் மகள்களைச் சேர்க்க விரும்பும் பெற்றோர் கணிசம். இவற்றை எல்லாம் மீறியும் காதல் உருவாகும். உயிர்களின் அடிப்படை உணர்வாகிய காதலை யாராலும் எதனாலும் தடுக்க முடியாது.

தனியார் கல்லூரிகளைப் போல அரசு கல்லூரிகளில் கட்டுப்பாடுகள் இல்லை. அதனாலேயே பல பெற்றோர்கள் தம் பிள்ளைகளை அரசு கல்லூரியில் சேர்க்க விரும்புவதில்லை. கஷ்டப்பட்டாவது தனியார் கல்லூரியில் சேர்க்க முயல்கிறார்கள். நான் ஆத்தூர் கல்லூரியில் பணியாற்றிய போது நடந்து செல்லும் தூரத்தில் உள்ள வாடகை வீட்டில் குடியிருந்தேன். அவ்வீட்டிலும் அருகில் உள்ள வீடுகளிலும் கல்லூரி செல்லும் வயதில் உள்ள பெண்களைப் பல கிலோமீட்டர் தள்ளி இருக்கும் கல்லூரிகளுக்கு அனுப்புவார்கள். அருகில் உள்ள அரசு கல்லூரிக்கு அனுப்ப மாட்டார்கள். காரணம் காதல் பயம்தான். கல்லூரியில் மூவாயிரம் மாணவர்கள் பயில்கிறார்கள், எல்லோருமா காதலித்து ஓடிப் போகிறார்கள்? எல்லோருமா காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறார்கள்? ஒருசிலர் தானே? இப்படி நான் கேட்டால் ‘அந்த ஒன்றிரண்டில் நம் பிள்ளை இருந்துவிடக் கூடாது’ என்பார்கள். காதலிப்பதிலும் திருமணம் செய்து கொள்வதிலும் என்ன பிரச்சினை? சாதிதான் காரணம். நம் சமூகத்தில் காதல் இயல்பாக மலர்ந்து கனிய, மக்கள் காதலித்து மகிழ்ச்சியாக வாழப் பெருந்தடையாக இருப்பது சாதிதான். சாதியை எப்படிக் கடப்பது, ஒழிப்பது என்றுதான் தெரியவில்லை.

வி: மாணவர்களின் காதல் பிரச்சினைகள் உங்களிடம் வந்துள்ளனவா? அவற்றை எப்படிக் கையாண்டீர்கள்?

பெமு: ஏற்கனவே சொன்னது போல நானாகத் தலையிட்டதில்லை. ஒருமாணவனுக்கும் மாணவிக்கும் ஈர்ப்பு ஏற்பட்டால் அது விரைவில் வெளியே தெரிந்துவிடும். கல்லூரிச் சூழலில் மறைத்து வைப்பது கடினம். காதல் ஏற்பட்டால் இருவர் தனியாகவிடுவார்கள். அதைக் கொண்டே கண்டறிந்துவிடலாம். என்னை விடவும் பிற ஆசிரியர்கள் இத்தகைய காதலைக் கண்டறிவதில் வல்லுநர்கள். ஆசிரியர்கள் வழியாகவோ சக மாணவர்கள் வழியாகவோ எனக்குத் தெரிய வரும். சும்மா கவனிப்பேனே தவிர அவர்களுக்குத் தொந்தரவாக இருந்ததில்லை. பல காதல்கள் நீடிப்பதில்லை. ஏதேதோ காரணத்தால் இயல்பாகப் பிரிவு நேர்ந்துவிடும். மிகச் சில காதல் திருமணத்தில் முடியும். சிலர் அவசரப்பட்டுத் திருமணம் செய்து கொள்வார்கள். சிலர் நிதானித்துத் திருமணம் செய்து கொள்வார்கள்.

காதலால் கல்வியை இழந்தவர்கள் பலர். நன்றாகப் படிக்கும் மாணவர் காதலால் இடைநின்று விடுவார். அத்தகையோருக்கு  ஆலோசனை வழங்குவேன். சிலர் வாழ்வைத் திருப்பியிருக்கிறேன். அந்த வயதில் இருக்கும் வேகம் எந்த ஆலோசனையையும் கேட்காது. பலரிடம் என் பாச்சா பலிக்கவில்லை. திருமணம் செய்து கொண்டவர்களை அங்கீரித்து மேற்செலுத்த விரும்புவேன்.  ‘மனதில் நிற்கும் மாணவர்கள்’ நூலில் ‘பேராளன் வாழ்க’ என்றொரு கட்டுரை இருக்கிறது. இளங்கலை இரண்டாமாண்டு விடுமுறையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். மூன்றாமாண்டு படிக்கும் போது குழந்தை பிறந்துவிட்டது. கலப்புத் திருமணம். இருவரும் படிப்பைக் கைவிட்டுக் குடும்பம் நடத்துவதற்கு உழைக்க வேண்டியதாயிற்று.

இப்படி எத்தனையோ. என்னால் வெளிப்பட எழுத முடியாத ஒருபிரச்சினை மாணவரின் காதல்தான். பல சுவையான சம்பவங்களையும் பார்த்திருக்கிறேன். நான் துறைத்தலைவராக இருந்தபோது இரவு பதினொரு மணிக்கு ஒருஅழைப்பு வந்தது. மாணவி ஒருவரின் அம்மா பேசினார். கல்லூரிக்கு வந்த மகள் இன்னும் வீடு திரும்பவில்லை என்றார். என் மீதும் ஆசிரியர்கள் மீதும் குற்றம் சுமத்தும் தொனியில் பேசினார். அவருக்குச் சமாதானம் சொல்ல முடியவில்லை. அந்நேரத்திற்குப் பிற ஆசிரியர்களையும் அந்த வகுப்பு மாணவர்கள் சிலரையும் அழைத்துப் பேசிய போது விவரம் தெரிந்தது.

அதே வகுப்பு மாணவன் ஒருவனையும் காணவில்லை. இருவர் கைப்பேசியும் அணைத்து வைக்கப்பட்டிருந்தன. ஆனால் அப்பெண் வீட்டுக்குச் சென்றுவிட்டு இரவு ஒன்பது மணிக்கு மேல்தான் வீட்டிலிருந்து கிளம்பிப் போயிருக்கிறார். அதை அந்தம்மா மறைத்துவிட்டார். மறுநாள் கல்லூரிக்குச் சென்றபோது இருவருக்கும் அன்று அதிகாலை திருமணம் நடந்த செய்தி வந்திருந்தது. இருவரும் ஒரே சாதி. அதனால் பிரச்சினை பெரிதாகவில்லை. பிறகு அந்த மாணவனிடம் கேட்டேன், ‘ராத்திரி பத்து மணிக்கு மேலதான் அந்தப் பொண்ணு வந்திருக்கும். எப்பிடீடா அதிகாலையில கல்யாணம்  பண்ணுனீங்க?’ அவன் எளிதாகச் சொன்னான், ‘கல்யாணத்துக்கு என்னங்கய்யா வேணும்? ஒரு மஞ்சக்கயிறு தானே?’

திருமண அழைப்பிதழ் இல்லை. புத்தாடை இல்லை. பெருங்கூட்டம் இல்லை. மண்டபம் இல்லை. வழக்கமான திருமணப் பந்தத்திற்குத் தேவையென்று சமூகம் கருதும் ஏதுமில்லை. அதிகபட்சம் ஆயிரம் ரூபாய் செலவாகியிருக்கும். ஒரு பிள்ளையார் கோயிலின் முன் மஞ்சள் கயிற்றைக் கழுத்தில் கட்டியதும் திருமணம் நடந்துவிட்டது. பாலாஜி சக்திவேல் இயக்கிய ‘காதல்’ திரைப்படத்தில் வரும் காட்சி போலத்தான். இங்கே சாதிப் பிரச்சினையில்லை. நான்கைந்து நண்பர்கள் உடனிருந்தனர். இது மிக அருமையான ஏற்பாடு அல்லவா? காதலை இதற்காகவும் ஆதரிக்கலாம் என்று தோன்றிய சந்தர்ப்பம் அது. என்ன, வழக்கம் போல இருவரும் படிப்பைக் கைவிட்டுக் குடும்ப வாழ்வுக்குள் போய்விட்டார்கள்.

என் மாணவர்கள் எல்லாம் அடித்தட்டுக் குடும்பத்தில் இருந்து வருபவர்கள். கல்வி அவர்களுக்கு அவசியம். ஒரே ஒருவர் கல்வி கற்றுவிட்டால் ஊரின் சூழலே மாறிவிடும். அவர்கள் கல்வியைக் காதலும் திருமணமும் வந்து பறித்துக் கொள்கிறதே என்பதுதான் என் வருத்தம். இப்போதைய தலைமுறையினரிடம் சில மாற்றங்கள் வந்துள்ளதைக் காண்கிறேன். திருமணத்திற்கு முன் பாலுறவு கொள்வதை இயல்பாக ஏற்றுக்கொள்ளும் மனநிலை ஓரளவு வந்திருக்கிறது. அது குற்றமல்ல, அப்படி நிகழ்ந்தால் அதற்காகக் குற்றவுணர்ச்சி கொள்ள வேண்டியதில்லை என்னும் எண்ணம் பரவி வருகிறது. கற்பு, ஒருவனுக்கு ஒருத்தி, திருமணம் பற்றிய கருத்துக்கள் எல்லாம் மாறி வருகின்றன. இவை வரவேற்கத்தக்கவை. இம்மாற்றங்கள் உடனடித் திருமணத்தைத் தடுக்கும் என்று கருதுகிறேன். கல்வியில் கவனம் செலுத்த இது உதவும் என்றும் நினைக்கிறேன்.

வி: ‘தமிழாசிரியர்கள் தற்குறிகளா?’ கட்டுரை படித்தேன். ஆசிரியர்கள் என்றாலே ஒரு ஏளனத்திற்குரிய கதாபாத்திரம் போலவே தமிழ்த் திரைப்படங்களில் பெரும்பாலானவற்றில் சித்தரிப்பதாகத் தோன்றுகின்றது. ஆசிரியர்-மாணவர் உறவை சித்தரிக்கும் திரைப்படங்களும், நாயகரைத் தவிர்த்து மற்ற ஆசிரியர்களைப் பிற்போக்குவாதிகளாகவே காட்சிப்படுத்தி வந்திருக்கின்றன. இது பொதுமக்களும் மாணவர்களும் ஆசிரியர்களை எவ்வாறு அணுகுகிறார்கள் என்பதில் என்ன ரீதியான  உளவியல் தாக்குதலை ஏற்படுத்துகிறது என்று நினைக்கிறீர்கள்?

பெமு: ஆசிரியர் பாத்திரம் எதார்த்தத்தில் இருக்கும் நிலை அத்தனை உவப்பானதாக இல்லை. அதைக் கேலிக்குரியதாகத் திரைப்படமோ இலக்கியமோ சித்திரிக்கும் போது தம் உவப்பின்மையை வெளிப்படுத்தும் வாய்ப்பாகப் பொதுமனம் கருதுகிறது என்று நினைக்கிறேன். அதனால்தான் நகைச்சுவை நடிகர்கள் ஆசிரியர் பாத்திரம் ஏற்கிறார்கள். அதுவும் தமிழாசிரியர் என்றாலே நகைச்சுவை நடிகர்தான். பல படங்களில்  ‘வெண்ணிற ஆடை மூர்த்தி’ நடித்திருக்கிறார். அவரைத் தமிழாசிரியர் பிம்பத்தில் நம் சமூகம் பொருத்திக் கொண்டது. அவரைக் காணும் கண்களாலேயே என்னைப் போன்ற தமிழாசிரியர்களையும் காண்கிறது.

காவல் நிலையத்தில் கதை முழுவதும் நடக்கும் ஒருதிரைப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கர் தமிழாசிரியராக நடித்திருப்பார். தனித்தமிழிலேயே பேசுவார். அதை நகைச்சுவைக்குப் பயன்படுத்தியிருப்பார்கள். ரஜினிகாந்த் ஒரு  திரைப்படத்தில் தமிழாசிரியராக வருவார். அப்பாத்திரமும் நகைச்சுவையாகவே காட்டப்பட்டிருக்கும். தமிழாசிரியர்தான் சமூகத்தோடு அதிகத் தொடர்புடையவர் என்பதாலும் இலக்கியம் எல்லோருக்கும் புரியும் துறை என்பதாலும் அதிகம் பயன்படுத்துகிறார்கள் போல. திரைப்படத்தைப் பார்த்துவிட்டு அப்படித்தான் ஆசிரியர்கள் இருப்பார்கள், அதே மாதிரி ஆசிரியரைக் கேலி செய்யலாம், கிண்டலடிக்கலாம் என்று வரும் மாணவர்கள் ஏமாந்து போவார்கள்.

ஒருவகுப்புக்கு முதலில் போகும்போதே ‘திரைப்படத்தில் பார்க்கும் தமிழாசிரியர் மாதிரி என்னை நினைத்துக்கொள்ள வேண்டாம்’ என்பதைச் சொல்லிவிடுவேன். முதல் சில வகுப்புகளை இறுக்கமாக வைத்து என் கட்டுக்குள் கொண்டு வந்த பிறகே ஓரளவு நெகிழ்த்துவேன். திரைப்பிம்பத்தை எதிர்கொள்ள இப்படியெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது. ஆனால் ஏன் ஆசிரியரைக் கேலி செய்தால் சமூகம் ரசிக்கிறது, கொண்டாடுகிறது என்பதைக் கருதிப் பார்க்க வேண்டும். சமூகத்தின் நம்பிக்கைக்கு உரியவராக, கொண்டாடக் கூடியவராக ஆசிரியர் இருப்பாரேயானால் திரைப்படக் கேலியை மக்கள் ரசிக்க மாட்டார்கள். ஆகவே ஆசிரியர்கள் தம்மை மதிப்பிற்கு உரியவர்களாக மாற்றிக்கொள்ள வேண்டும்.

மாணவர்களைப் பற்றிய திரைப்படச் சித்திரிப்பும் மோசமானதுதான். மாணவர்கள் என்றாலே பெண்களைக் கேலி செய்வார்கள், ஆபாசமாகப் பேசுவார்கள், ஒருநோட்டைக் கையில் உருட்டிக்கொண்டு குட்டிச்சுவர் மேல் உட்கார்ந்து அரட்டை அடிப்பார்கள், வகுப்புக்குச் செல்ல மாட்டார்கள், ஜூனியர்களைப் பகடிவதை செய்வார்கள், ரகளை செய்வார்கள், ரவுடித்தனம் செய்வார்கள் என்பதான சித்திரிப்பு அது. இளைய தலைமுறை மீது நம்பிக்கையற்ற சமூகப் பொதுமனதின் வெளிப்பாடுதான் இச்சித்திரம் என்று தோன்றுகிறது. குழந்தையாக இருக்கும்போது கொண்டாடிக் கொஞ்சி மகிழும் பெற்றோரும் மக்களும் பதின்பருவத்தை ஒருகுழந்தை எய்தும்போது அப்படியே எதிராக மாறிவிடுகிறார்கள். அப்பருவத்திற்குரிய இயல்புகள் வெளிப்படுவதை ஏற்க,  ரசிக்க, வளர்க்க, கொண்டாட மறுக்கிறார்கள். மூத்தவர்கள் செய்வதெல்லாம் சரி, இளையவர்கள் செய்வதெல்லாம் தவறு என்பது என்ன மனநிலை? இது இச்சமூகத்தின் நோய்க்கூறு. இது நீங்க வேண்டும்.

(தொடரும்)

விஜயகுமார்

வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.  தற்போது டோக்கியோ அறிவியல் நிறுவனத்தில் (Institute of Science, Tokyo) ஆய்வாளராக உள்ளார். நவீனத் தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் உள்ளவர். தமிழிலிருந்து மலையாளத்துக்கு கவிதைகள் மொழிபெயர்த்துள்ளார்.


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

உரையாடலுக்கு

Your email address will not be published.

கடந்தவை

திரட்டு

சேகரம்

Go toTop