மறைந்த கதவு : மு.குலசேகரன்

“தலை மடுகின் அடியில்” என்ற வெளியாகவுள்ள நாவலின் ஓர் அத்தியாயம்

பெரிய தொழிற்சாலையின் முன்னால் நுழைவு வாயில் சிறிதாகத் தோன்றியது. அதன் கனத்த இரும்புக் கதவு இயந்திரத்தைப் போன்றது. பக்க வாட்டில் சிறிதாக மற்றொரு கதவுமுள்ளது. அதில் கண்காணிப்பதற்கு நெற்றிக்கண்ணைப்போல் ஒரு துவாரமிருக்கிறது. அந்த வாயிலின் அனுமதியின்றி போகவும் வரவும் முடியாது. அங்கிருந்து தொழிற்கூடம் சற்று தூரம். முன்னாள் காவலாளி கண்ணா பக்கக் கதவைத் தள்ளிக்கொண்டு நுழைந்தார். உள்ளே புதிய காவலாளி மலையன் நின்றிருந்தார். அவர் அடிக்கடி மீசையை தடவிக்கொண்டிருந்தார். காக்கித் தொப்பி, காக்கிச் சீருடைகள் புதிதாயிருந்தன. இடுப்புப் பட்டை வில்லை பளபளத்தது. ஆனால் கனத்த பூட்சுகளில் புழுதி படிந்திருந்தது. அது நீண்ட தூரம் மிதிவண்டியில் பயணித்து வந்ததின் அடையாளம். கண்ணா கொஞ்சமாகப் புன்னகைத்தார். பதிலுக்கு மலையனும் லேசாக சிரித்தார். மறந்துவிட்டதைப்போல் மீண்டும் விறைப்பானார். ஆவலுடன் பக்கவாட்டுக் கதவுத் துவாரத்தில் எட்டிப் பார்த்தார். எதிர் பெட்டிக் கடை, சாலை, பாதை சதுரமாகத் தெரிந்திருக்கும். பெரிய தொழிற்சாலையை பாதுகாப்பது மிகவும் சவாலானது.

கண்ணா காவல் கொட்டகையின் நீண்ட பெஞ்சில் அமர்ந்தார். அது பழையதானதால் முதலாளியின் பண்ணை வீட்டிலிருந்து எடுத்து வந்து போடப்பட்டது. இந்த நிலத்துக்கு முன்னாள் குத்தகைதாரர் பிறகு காவலாளி என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். முதல் நாளின் பயத்தில் புதுக் காவலாளி தளரவில்லை. கண்ணா விசாரித்தார். மலையனும் சிறு விவசாயி என்று தெரிந்து கொஞ்சம் ஆறுதலடைந்தார். காவல் துறையைப் போல் தனியார் அமைப்பிருப்பதை இப்போதுதான் கேள்விப்பட்டார். மலையனுக்கு முதலில் காவல் நிறுவனத்தில் பயிற்சி தரப்பட்டது. ஒரு கையில் வணக்கம் வைக்க வேண்டும். எப்போதும் நிமிர்ந்து நிற்க வேண்டும். மலையனுக்கு இளமையிலிருந்து வளர்த்த மீசை வேலைக்கு முக்கியத் தகுதியானது. போரில் கையிழந்த முன்னாள் இராணுவ வீரரான காவலமைப்பின் உரிமையாளர் உடனே சேர்த்துக்கொண்டார். அவர் மீசையில்லாத காவலாளியான சக்தியை திட்டினார். “ஆம்பளைக்கு இலக்கணம் மீச. அதுதா உள்ளிருக்க வீரத்த வெளிக்காட்டும். நம்ம தொழிலுக்கு மூலதனம்.” பெரிய விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவர் சக்தி. அவர் வேட்டியைத் துறந்து காக்கி உடுப்பை அணியத் தயங்கினார். சல்யூட் அடிக்க வெட்கப்பட்டார். மலையன் சுலபத்தில் வேலையை கற்றுக்கொண்டார்.

வெளியில் மரத்திடியிலும் கல்லிலும் தொழிலாளர்கள் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் சற்றும் கவலையில்லாமல் சிரிப்பதைக் கண்டு மலையன் வியந்திருப்பார். “அவங்க சரியான நேரத்துக்குதான் வருவாங்க” என்றார் கண்ணா. எட்டு மணியாக சில நிமிடங்கள் பாக்கியிருந்தன. அனைவரும் ஆடுகளைப்போல் முண்டியடித்து புகுந்தார்கள். பின்னால் மேற்பார்வையாளர்கள் வந்தார்கள். மலையன் வணக்கம் வைத்தார். அவர்கள் பதிலுக்கு தலையாட்டினார்கள். கண்ணா “அவ்வளதான் நேரமாச்சு, கதவ சாத்திடு. இனி உள்ள யாரயும் விடாத” என்று தன் அனுபவத்தை வெளிப்படுத்தினார். அதன்படி மலையன் பக்கக் கதவை சாத்தி தாழிட்டார். பெஞ்சில் உட்கார்ந்து பதிவேட்டில் எழுதத் தொடங்கினார்.

கண்ணா பழைய உரிமையில் காவல் குடியிருப்பின் சிறிய அறைக்குள் சென்றார். வேட்டி சட்டையைக் கழற்றி ஆணியில் மாட்டினார். காக்கி அரைக்கால் சட்டை பனியனில் பாதி காவலாளியைப்போலிருந்தார். அக் குறுகிய இடத்தில் எப்படி இருவர் தாராளமாக வாழ்ந்தோம் என்று ஆச்சரியப்பட்டார். அவரும் மனைவியும் பல காலம் புழங்கிய வாசம் நிறைந்திருந்தது. சுவர் அழுக்கு, மூலைக் கறை, கீறல்கள் மறையவில்லை. நடுவில் பூஜைக்கு பூசிய மஞ்சள் சதுரம் அழியவில்லை. வெளியில் பெஞ்சுள்ள சிறு முற்றம். பக்கவாட்டில் கரிபடிந்த சமையல் சாய்ப்பு. அனைத்தும் காலியாகக் கிடந்தன. மற்றொரு ஆணியில் மலையன் கழற்றிய மங்கிய லுங்கி, சட்டைகள் தொங்கின. தன்னுடையதைப்போலவே காரமான வேர்வை நெடியடித்தது. சில நாட்களிலேயே மற்றவருக்கு சொந்தமானதைப்போல் இடம் அந்நியமாகிவிட்டது. கண்ணா வெளியில் வந்தார். இரும்புக் கதவிடம் நின்றார். வழக்கம்போல் பெஞ்சில் உட்கார்ந்தார். முதல் நாள் புதுக் காவலாளியின் வேலை தொடங்கிவிட்டது. மலையன் நிலைத்துவிடுவார்.

கண்ணா மெல்ல தொழிற்கூடத்தை நோக்கிச் சென்றார். அதன் தொலைவு மிகவும் நீண்டது. முன்பு முழுத் தொழிற்சாலையும் அவர் கட்டுப்பாட்டில். அனைத்துச் சாவிகளும் வீட்டுச் சுவரில் தொங்கும். விலையுயர்ந்த பொருட்களுள்ள அறையின் நீண்ட சாவியும், அலுவலக அறையின் பித்தளை சாவியும் கூட. அதிகாலையில் ஒவ்வொரு கதவாக திறப்பார். உள்ளே புது வெளிச்சம் பாயும். ஆழ்ந்த தூக்கத்திலிருந்த இயந்திரங்கள் மெல்ல முழித்துக்கொள்ளும். மனைவி தொழிற்சாலை முழுவதையும் சலிக்காமல் பெருக்குவாள். நுழை வாயிலுக்கு முன்னால் சாணி தெளித்து கோலம் போடுவாள். அவற்றுக்கு ஊதியமும் கிடையாது. மேற்பார்வையாளர்கள் இல்லாமல் தொலைபேசி மணியடித்தால் கண்ணா எடுத்துப் பேசுவார். முதலாளி ஜெயாவும் அழைத்திருக்கிறார். “நா காவலாளி கண்ணா பேசறேன்” என எடுத்தவுடன் கம்பீரமாக சொல்வார். தவறுதலான அழைப்புகள் தொடர்ந்து வந்தாலும் உவகையைத் தரும். கண்ணாவுக்கு தொழிற்சாலை வாயிற்கதவு சொந்த இடம் போன்றது. விவசாயம் பறி போனாலும் நிலம் கையிலிருப்பதுபோல் அங்கு திருப்தியேற்பட்டது.

தொழிற் கூடத்தில் தயக்கமுடன் நுழைந்தார். காதடைக்கும் பேரோசை வரவேற்றது. அந்த இடம் முழுவதிலும் இயந்திரங்கள் ஓடிக்கொண்டிருந்தன. ஒன்றில் வேலை கிடைக்கலாமென்ற நம்பிக்கையுண்டானது. எல்லா இயந்திரங்களும் ஆரம்பத்திலிருந்து பழக்கமானவை. ஆனால் எதையும் முடுக்கவும் தெரியாது. தொட்டாலும் பழுதாகிவிடும் என்று எச்சரிக்கப்பட்டிருந்தது. அதில் சிக்கி விபத்து நேரலாம் என்றும் சொன்னார்கள். மின்சாரம் பாயும் என்று தொழிலாளப் பையன்கள் கேலி செய்தார்கள். பக்கச் சுவரில் ஓவியத்தைப்போல் கரிய எண்ணெய் பரவியிருந்தது. முன்னாலுள்ள அழுத்தும் இயந்திரம் அதிர்ந்துகொண்டிருந்தது. அதை இயக்குபவன் ஏளனமாகப் பார்த்தான். தொழிற்சாலை தன் காவலாளி வேலை பறிபோனதை தெரிந்துகொண்டிருக்கும். உள்ளே எதையும் மறைக்க முடியாது. அங்கு இரகசியங்கள் இயந்திர ஓசைகளில் பல கதைகளாக மாறிப் பரவுகின்றன.

மூலையில் மண்ணெண்ணெய் அடுப்பை பிச்சை மூட்டிக்கொண்டிருந்தான். பால், தூள், சர்க்கரை, பாத்திரமும் தயாராயிருந்தன. தேநீர் இடைவேளைக்கு நீண்ட நேரமுள்ளது. அவன் சிரித்தபடி சொன்னது இயந்திரங்களின் இரைச்சலில் கரைந்தது. அவர் புன்னகையுடன் தலையாட்டியபடி நடந்தார். ராட்சத பீப்பாய் இயந்திரங்கள் மெல்லச் சுழன்றன. அவற்றை ஆசையோடு நெருங்கினார். ஏதாவது தனக்கு அடைக்கலம் தரும் என்று எண்ணினார். அருகில் மேற்பார்வையாளர் ஜீவன் கேள்விக்குறியுடன் நோக்கினார். கண்ணா நழுவி வெளியேறினார்.

பக்கத்தில் ஏராள இடத்துடன் மற்றொரு கூடம் விரிந்திருந்தது. தொழிற்சாலையும் கொட்டகைகளும் முடிந்த பிறகு கட்டப்பட்டது. இன்னும் காலியாகக் கிடந்தது. ஜெயா முதலாளிக்குத் தான் கண்ட கனவு என்னவென அவருக்கே நினைவில்லை போலும். அதில் செயற்கையான தோல்களைக் கூட உருவாக்கத் திட்டமிட்டிருக்கலாம். அல்லது முற்றிலும் வேறானப் பொருட்களை உற்பத்தி பண்ணலாம். விவசாயத்தை அழித்து, பெரிய தொழில் புரிந்து, மேலும் விரிவாக்க மிகுந்த மனோபலம் தேவை. எப்போதும் தொழிலை உபாசனை செய்பவர்களால் மட்டும் இயலக் கூடியது. அதுவே சக்தியை அருளும். அந்த பிரம்மாண்ட கட்டடத்தில் ஒரு பொருளுமில்லை. அவர் நடுவில் நின்றிருந்தார். பக்கத்து தொழிற் கூடத்தின் ஓசை அருகிக் கேட்டது. விளக்குகள் போடப்படாமல் மங்கியிருந்தது. திறந்த ஜன்னல்களின் வழியாக சூறைக் காற்று வீசியது. உள்ளே தோல் துணுக்குகள் தூசுகளுடன் வட்டமிட்டன. சிறிது நேரம் சுழன்று வெளியேறின. மீண்டும் கூடம் வெறுமையானது. அதன் தனிமை பயத்தில் வெளியில் வந்தார்.

பல ஆண்டுகள் விதைத்து அறுத்துக்கொண்டிருந்த மண்ணின் துகள்கள் பழக்கமானவை. அவை பூமியில் ஆழப் புதைந்துவிட்டன. மேலே தெரியாதவாறு கற்களும் சிமெண்டும் பாவியிள்ளன. தோல் துண்டுகள் கால்களில் உறுத்தின. காற்று தூசுகளாகிவிட்டிருந்தன. தூரத்தில் கழிவு நீர்த் தொட்டி பளபளவென அழைத்தது. அங்கு போய் நீண்ட நாட்களாகின்றன. களைகள் பசுமையாக வளர்ந்திருந்தன. பவளப் பாறைகளைப்போல் இரசாயனங்கள் படிந்திருந்தன. எல்லாமும் சேர்ந்து ஒற்றையடிப் பாதையை மறைத்திருந்தன. மூலையில் மலையிலிருந்து நிலம் சாலை நோக்கி சரிந்துகொண்டிருந்தது. அது தொழிற்சாலையிலேயே தாழ்ந்த பகுதி. முன்பு இயற்கையாக கசிவுநீர்க் குட்டை அமைந்திருக்கும். கன மழை பெய்கையில் தொட்டியிலுள்ள கழிவு நீருடன் சேர்ந்து நிரம்பி வழியும். சாலையோரத்துக் கால்வாயில் பாயும். அப்படியே கானாறுக்கு ஓடும். தூரத்திலுள்ள ஏரியில் போய் கலக்கும். அக்கழிவுநீர் தேக்கத்தையும் பறவைகள் நாடி வந்தன. மீன்களில்லாவிட்டாலும் நிறைய புழு பூச்சிகளுக்குக் காத்திருந்தன. அவர் கால்கள் நனைய கரையில் இறங்கி நின்றார். கழிவு நீரில் நீல வானம் பிரதிபலித்தது. அவர் உருவமும் சேர்ந்து கறுத்திருந்தது. தான் அடையாளம் தெரியாதளவுக்கு மாறியிருப்பதாக உணர்ந்தார். காற்றின் அலைகளில் கழிவு நீர்க் குட்டை ததும்பியது. அசப்பில் மலை மேலுள்ள ஆனை மடுகைப்போலிருந்தது.

கண்ணா ஓலைக் கொட்டகைகளை தேடிச் சென்றார். வெளியில் புதிய டிராக்டரின் முரட்டுத்தனமான பின் சக்கரங்களை கழுவிக்கொண்டிருந்தான் ஓட்டுநர் அன்பு. அணிந்திருந்த கைலி நீலப் பூக்களுடன் புதிதாயிருந்தது. மேலே மகி நீரை ஊற்றிக்கொண்டிருந்தான். தொலைவில் பின்புற இணைப்பு வாகனம் கழற்றி விடப்பட்டிருந்தது. கண்ணா “வண்டி எப்பிடி போவுது?” என்றார் ஈரத்தில் மினுங்கும் டிராக்டரைப் பார்த்து. அன்பு கைக் கடிகாரத்தை மேலேற்றிக்கொண்டு மேலும் தேய்த்தான். “இன்னும் எந்த செலவும் வைக்கல” என்றான். அவன் டீசலையும் ஆயிலையும் கூடவேயிருந்தாலும் எப்படியாவது களவாடுவதாக பையன்கள் ஆச்சரியப்படுவார்கள். “முன்னது ரொம்ப நாளா ஓடுச்சு” என்றார் கண்ணா மீண்டும். அன்பு பேசாமல் டிராக்டரின் அடியில் குனிந்துகொண்டான். கண்ணாவுக்கு காற்றைக் கிழித்தபடி டிராக்டரில் பறக்க ஆசை. தன் ஆசனத்துக்கு சமமாக உட்கார வைத்து அன்பு அழைத்துச் செல்ல மாட்டான். ஒரு முறை கூலியாகப் போனால் மதிய உணவுப் படியும் கிடைக்கும்.

கொட்டகையில் புகையைப்போல் தூசு கவிந்திருந்தது. பெண்கள் குனிந்து தோல் மயிர்களை பிய்த்துக்கொண்டிருந்தார்கள், சேற்றிலிருந்து சிறிய நாற்றுகளை பறிப்பதைபோல். அனைவரும் முக்காடிட்டிருந்ததால் மனைவியை கண்டுபிடிக்க முடியவில்லை. காலையில் உடுத்திய நீலப் புடவையுடன் பருமனான பரி மூலையிலிருந்தாள். கறுத்து உப்பிய முகம் பவுடர் பூசினாற்போலிருந்தது. மேலே சரிகைகளைப்போல் ரோமங்கள் ஒட்டியிருந்தன. உடல் மெதுவாக முன்னும் பின்னும் ஆடிக்கொண்டிருந்தது. ஓயாமல் விரல்கள் அசைந்தன. அவை முன்பு தோப்பில் சுதந்திரமாக தென்னை ஓலைகளை சேகரித்து பின்னிக்கொண்டிருந்தவை. அப்போது ஓலைகளை தைத்து விற்கும் வருமானம் முழுவதும் அவளுக்குதான். அதிர்ஷ்டமிருந்தால் ஓரிரு தேங்காய்கள் விழும். எப்போதும் “தொப்” என்ற சப்தத்துக்கு காத்திருப்பாள். அனைத்தும் தோப்புக்குள் கிடைக்கும். அவர்களுக்கு நிலத்தின் வேலியைத் தாண்டிப் போகும் தேவையில்லை.

தொழிற்சாலையுடன் உருவானதுதான் காவல் குடியிருப்பும். கொட்டடி போன்ற அறை, எதிரில் முற்றம் சிறிதாயிருந்தது. கண்ணா குடிசையிலிருந்து ஓட்டு வீட்டுக்கு முன்னேறியதற்கு முதலில் மகிழ்ந்தார். பக்கத்தில் சமையலுக்கும் குளிக்கவும் ஓலைச் சாய்ப்புகளை வேய்ந்தார். பின்புற சாக்கடையில் வாழைக் கன்றுகளை வளர்த்தார். தொழிற்கூடத்தின் அருகில் பூச்செடிகளை நட்டார். அவ்வப்போது செண்டுமல்லிகள் மலரும். தரையோடு தவழும் பட்டுரோஜாக்கள் பூக்கும். தொழிற்சாலை மதிலைக் கட்டி முடித்ததும் ராணியம்மா தலைநகர் வீட்டிலிருந்து சிறிய கிளைகளை எடுத்து வந்தாள். அவை காரின் டிக்கியில் அடைபட்டு வாடியிருந்தன. “அப்படி ஓரமா நடுப்பா கண்ணா” என்று கொடுத்தாள். என்னவென கண்ணா கேட்கவுமில்லை, அவள் சொல்லவுமில்லை. அவை முளைக்குமாவென்று சந்தேகமெழுந்தது. சுவரையொட்டி மண்ணில் வரிசையாக கிளைகளை ஊன்றினார். பிறகு நீரூற்றவும் மறந்துவிட்டார். சில நாட்களுக்குப் பிறகு அவற்றில் பசுந் தளிர்கள் அரும்பியிருந்தன. தினமும் ஆச்சரியத்தோடு பார்த்தார். அடர்ந்த இலைகளுடன் கொடிகள் வளர்ந்து மதிலின் மேல் வேகமாக படர்ந்தன. நீலச்சிவப்பு நிற மலர்க் கொத்துகள் பூத்தன. கத்திரிக்கப்பட்ட காகிதங்களைப்போல் காற்றில் படபடத்தன. அவை தொழிற்சாலைகளுக்கு உரித்தான போலியான பூக்களைப்போலிருப்பதாக பரி சொன்னாள்.

இப்போது கண்ணா தன்னை மேற்பார்வையாளராக உணர்ந்தார். கொட்டகைக்குப் போய் தோல் மயிர்களை தொட்டுப் பார்த்தார். “சும்மா கணக்கு எழுதிட்டிருக்காம வந்துட்டியாண்ணா?” என்றாள் கனி சிரிப்புடன். மற்ற பெண்கள் புன்னகைத்தார்கள். சின்னவள் ஜானு வாயைப் பொத்திக்கொண்டாள். அவர் வெட்கத்தில் முகத்தைத் துடைத்துக்கொண்டார். ரோமக் கொட்டகையில் பெண்களின் ராஜ்ஜியம்தான் நடக்கும். தங்களை மறந்து பேசுவதற்குதான் வேலைக்கு வருகிறார்களென்று தோன்றும். இயந்திரங்களினுடையவைப்போல் கைகள் மயிர்களைப் பறிக்கும். தூய தோல்களில்லாவிட்டால் தொழிற்சாலை ஸ்தம்பித்துவிடும். அவர்கள் தங்கள் கைகளில் உற்பத்தி ஒப்படைக்கப்பட்டிருப்பதாக பெருமைப்பட்டார்கள். தொலைவிலிருந்து மேற்பார்வையாளர்களும் கண்காணித்துக் கொண்டிருந்தார்கள். தனக்கு மயிர்களைப் பறிக்க இடம் கிடைத்தாலும் போதும் என்று நினைத்தார்.

முன்பு தொழிற்சாலையை எப்போது வேண்டுமானாலும் திறந்து நுழையலாம். இரவில் பெரிய இரட்டைக் கதவு மட்டும் பூட்டப்படும். கண்ணாவைக் கூப்பிட்டால் பக்கவாட்டுக் கதவை திறப்பார். சில தொழிலாளர்கள் சுவரை ஏறிக் குதித்து வருவார்கள். இரண்டாம் காட்சி திரைப்படம் பார்த்துவிட்டு தோல்களில் படுப்பார்கள். அப்படியே காலையில் எழுந்து வேலை செய்வார்கள். அப்போது, அவர் காவலாளி, தோட்டக்காரர், கண்காணிப்பாளர் என்று எல்லாமாகவுமிருந்தார். எந்தப் பதிவேட்டிலும் பெயரும் பதவியும் இல்லாததால் கையெழுத்துப் போடுவதில்லை. சில நாள் முன்னால் இரவில் வாயிலில் கார் ஒலிப்பான் கேட்டது. ஞாயிறு விடுமுறையைக் கொண்டாட குடித்துவிட்டு பெஞ்சில் படுத்த கண்ணாவுக்கு கார் சப்தமிடுவது கேட்டது. வேகமான சாலைப் போக்குவரத்தில் ஒலிப்பான் அடிப்பது சாதாரணமானது. யாருக்கோ மிக அவசரம் என்று நினைத்தார். அறைக்குள் கதவைச் சாத்தி பரி படுத்திருந்தாள். மீண்டும் இசை ஒலிக்கையில் சந்தேகமேற்பட்டது. அது சிறிய முதலாளியின் காரினுடையது. கிராமத்து பண்ணை வீட்டுக்குப் போய் திரும்புகையில் தொழிற்சாலைக்கு வந்திருப்பார். கண்ணா வேகமாக வாயிலின் பக்கக் கதவைத் திறந்தார். ஜெயா காரிலிருந்து இறங்கினார். “நேத்து சாயந்திரம் தோல் போச்சா, இல்லயா?” என்றார். கண்ணாவுக்கு பொருட்கள் போவது வருவதை யாரும் தெரிவிப்பதில்லை, அவரும் கேட்பதில்லை. “ஆமாங்கய்யா. டிராக்டர் போயி திரும்பி வந்துச்சு” என்ற வார்த்தைகள் தாமாக வெளிப்பட்டன. ஜெயா முகத்தைச் சுளித்தபடி தொழிற்சாலையை ஒருமுறைப் பார்த்துவிட்டு கிளம்பினார். கண்ணா கதவை மூடித் தாழிட்டார். இரட்டைக் கதவை முதலாளியின் காருக்கு திறக்காதது அப்போதுதான் உறைத்தது. அவருடைய போதை சட்டெனக் குறைந்தது.

மறுநாள் கண்ணா தோல் கொட்டகையிலிருந்தார். மதிய வேளையில் யாரும் வர மாட்டார்கள். அடிக்கடி வாயிலைக் கவனித்lக்கொண்டார். கனி ரகசியமாகக் கூறியது பெண்களுக்குக் கேட்டு சிரித்தார்கள். பரி குலுங்கினாள். கண்ணா புன்னகைக்க முயன்றார். அப்போது பக்கவாட்டுக் கதவு திறந்தது. தலைமை அலுவலர் ராம் நுழைந்தார். பக்கக் கதவுக்கும் சுவருக்குமான சிறு இடைவெளியில் விரலை விட்டு தாழ்ப்பாளைத் தள்ளுவது ஒரு கலை. அதை ராம் மட்டும் பயின்று வந்தார். கதவைத் திறக்க கூப்பிட மாட்டார். வாகன ஒலிப்பானை அழுத்த மாட்டார். இயந்திரங்களின் பேரோசையில் குறுக்கிடுவது தப்பென எண்ணியிருப்பார். அதனால் பக்கவாட்டுக் கதவை மாயத்தால் திறப்பார். திடீரென எதிரில் தோன்றுவார். முதலாளியை விடவும் அவரென்றால் கண்ணாவுக்கு பயம். நிறுவனத்தின் சிறிய இருசக்கர வாகனத்தை ராம் உள்ளே ஏற்றினார். அதில் அவ்வளவு தூரத்தைக் கடந்து வந்ததை நம்ப முடியாது. அவர் நள்ளிரவிலும் ஓட்டி வருவார். கொட்டகையிலிருந்த கண்ணாவைக் கவனித்தார். பின் தொழிற்கூடத்துக்கு சென்றார். அவருக்குக் குறைகள் மட்டும் துல்லியமாக புலப்படும். அவற்றை உரிமையாளர்களிடம் ஒன்றுவிடாமல் ஒப்படைப்பார். அவர் முதலாளிகளின் ஒற்றன் என்பார்கள் மேற்பார்வையாளர்கள். தொழிற்சாலைப் பொருட்களில் தரகு பெறுவதாகவும் பேசிக்கொள்வார்கள். ஆனால் அவரின் ஈடுபாடு சந்தேகத்துக்கு அப்பாற்பட்டது.

கண்ணா பிளாஸ்டிக் குழாயை அவசரமாக எடுத்து தொட்டிக் குழாயில் மாட்டினார். ஆட்டு மந்தையைப்போல் பச்சைத் தோல்கள் கொட்டகையில் குவிந்திருந்தன. அவற்றின் மேல் நீரைப் பொழிந்தார். நீர்த் திரைக்குப் பின்னால் ராம் புன்னகைத்தபடி தோன்றினார். அவர்தான் தன் குத்தகையாளர், காவலாளி வேலை, குடியிருப்பு பறிக்கப்பட்டதற்கு காரணமானவர். தொழிற்சாலையை துவங்குவது முதல் உரிமையாளருக்கு உறுதுணையிருப்பவர். அவர் மேல் குழாயைத் திருப்பிவிட கோபம் எழுந்தது. “ஓட்டையில தண்ணி ஒழுகுது பாரு” என ராமின் குரல் குறுக்கிட்டது. குழாயில் சிறிய நீரூற்றுகள் எழுந்துகொண்டிருந்தன. மைதானத்தில் ஆறாக நீர் ஓடியது. கண்ணா அவமானத்துடன் பிளாஸ்டிக் குழாயை கைவிட்டு தொட்டிக் குழாயை நிறுத்தினார்.

மேலே அங்கங்கே ஈரம் படர்ந்திருந்தது. முகத்தில் நீர்த்துளிகள் வழிய “இந்தக் குழாய் பழசாயிடுச்சு. வேற புதுசா வாங்கணும்” என்றார். “இதுவே போதும். முதல்ல ஓட்டைங்கள கண்டுபிடிச்சு அடை” என்றார் ராம். அவர் சரக்குக் கொட்டகைக்கு சென்றார். கண்ணா பின் தொடர்ந்தார். சாத்திய கதவின் பூட்டில் சாவி தொங்கிக்கொண்டிருந்தது. கண்ணா திறந்து விளக்கைப் போட்டார். உள்ளே மர்மக் குகையைப் போலிருந்தது. பீப்பாய்களும் மூட்டைகளும் இயந்திர உதிரி பாகங்களும் தாறுமாறாக அடைத்திருந்தன. அவர் “எத்தனை பீப்பாயிருக்குது?” என்றார். இதே கேள்வியை பரீட்சை வைப்பதைப்போல் முதலாளியும் அடிக்கடி கேட்பார். பதில் தெரியாவிட்டால் “நல்லா படிக்கணும்” என்பதைப்போல் முறைத்துப் பார்ப்பார். கண்ணா ஒவ்வொரு பீப்பாயாக எண்ணத் தொடங்கினார். நடுவில் கணக்கு பிசகிவிட்டது. மீண்டும் ஆரம்பத்திலிருந்து விரல் விட்டு எண்ணத் தொடங்கினார். ராம் அதிருப்தியுடன் வெளியில் வந்தபடி “தூக்கத்துல எழுப்பிக் கேட்டாலும் சொல்லணும்” என்றார். பிறகு வழியை மறைத்தபடி நின்றார். “கணக்குல ஒண்ணு குறையுது. உங்கிட்டதான சாவி இருக்குது?” என்றார். கண்ணா ஒன்றும் புரியாமல் முழித்தார். அவருக்கு பொருட்களின் பெயர்களும் பயன்களும் தெரியாது. அவற்றுக்கும் தனக்கும் தொடர்பில்லையென்று எண்ணியிருந்தார். தீர்ப்பை முடிவு செய்துவிட்டு விசாரணை நடத்துவதைப்போலிருந்தது. “எனக்கு கணக்குத் தெரியாதுண்ணா” என்றார் குடிகாரனைப்போல் குழறியபடி.

ராம் பின் கை கட்டியபடி வாயிலுக்கு நடந்தார். கையில் வாகனத்தின் சாவி தொங்கியது. அவர் புறப்பட்டால் தொழிற்சாலைக்கு விடுதலை கிடைத்தாற்போலிருக்கும். இயந்திரங்கள் சுதந்திரமாக மூச்சுவிடும். தொழிலாளர்கள் கதை சொல்லிக்கொள்வார்கள். காவல் குடியிருப்புக்கு எதிரில் ஞாபகம் வந்தவரைப்போல் ராம் நின்றார். அதுவும் சின்ன முதலாளியின் பாணிதான். “இனி காவலுக்கு புதுசா ஆள் போட்டிருக்கு. நீ குடியிருக்க இடத்தக் காலி பண்ணிடு” என்றார். கண்ணாவுக்கு நெஞ்சை அடைத்தது. இந்த வெளியேற்றம் இரண்டாம் முறை நடப்பது. முதல் தடவை தொழிற்சாலை தொடங்குகையில் நிகழ்ந்தது. அதிலிருந்து தப்பித்து மீண்டும் காவல் வேலையில் சேர்ந்திருந்தார். மற்றொரு குத்தகைதாரரான பட்டி மனம் கசந்து காணாமல் போய்விட்டார். கண்ணாவின் கை, கால்கள் பெருங் குடிகாரனுடையவைபோல் நடுங்கின. அன்றைய நள்ளிரவில் முதலாளியின் காருக்கு உடனே வாயிற்கதவைத் திறக்காதது பெரிய குற்றம் என்று நினைத்தார். முதலில் மனைவி பரியை அழைத்துக் கெட்ட சேதியைத் தெரிவிக்க விரும்பினார். பிள்ளையில்லாத அவர்கள் ஒருவொருக்கொருவர் துணையிருப்பவர்கள். கண்ணா தன் நீண்ட அனுபவத்தால் அதிர்ச்சியை மென்று விழுங்கினார். பிள்ளைகளைப்போல் வளர்த்த எண்ணற்ற தென்னை மரங்களை மனவுறுதியுடன் வெட்டி சாய்த்திருக்கிறார். கைகளால் நட்ட பயிர்களையும் அழித்திருக்கிறார். நெடுங்காலம் வாழ்ந்த குடிசையைவிட்டு வெளியேறியிருக்கிறார். இப்போதும் கௌரவத்தை விட்டுக்கொடுக்காமல் “அதுக்கென்ன, காலி பண்ணுறேண்ணா” என்றார் லேசாக சிரித்தபடி. ராம் வந்ததைப்போல் தானாகக் கதவைத் திறந்துகொண்டு நிதானமாக வெளியேறினார். கண்ணா வாயிலை மூட மறந்து நின்றார்.

மூத்த அலுவலரின் கட்டளை ஆழமாக நினைவிருந்தது. காவலாளிக் குடியிருப்பை கண்ணா காலி செய்து பக்கத்து ஊரில் சிறிய அறையில் குடியேறினார். உண்மையில் ஒரு வீட்டின் முன்னாலுள்ள தாழ்வாரம்தான். அவருக்கும் மனைவிக்கும் பெரிதாகத் தோன்றியது. இருந்தாலும் வெளியில் சிறு செடி வளர்க்க முடியாது. இருவரும் வேலைக்கு தொழிலாளர்களுடன் பேசிச் சிரித்தபடி சாலையில் நடந்து வந்தார்கள். முதலில் அவமானமாயிருந்தாலும் பிறகு ஆறுதலேற்பட்டது. குடியிருப்பைக் காலி செய்ததை பையன்களின் கேலி தொடவில்லை. அவர்கள் முன்பு இருவரையும் ஆபாசமாக பகடி பேசியவர்கள். இன்றுதான் புதிய காவலாளி வேலையில் சேர்ந்திருந்தார். தன்னைப்போல் விவசாயம் செய்துகொண்டிருந்தவர் என்பதில் அனுதாபமுண்டானது. கண்ணாவும் மனைவியும் வேலையிலிருந்து நீக்கப்பட்டால் தொழிற்சாலைக்குள் புக முடியாது. முன்பு விவசாயம் நடந்துகொண்டிருந்த மண்னென்றால் சாகும்வரை குடியிருக்க முடியும். ஆனால் தொழிற்சாலை கட்டடங்கள் உண்டான பிறகு வசிக்க அனுமதிக்காது. அதில் மூலப் பொருட்களுக்கும் இயந்திரங்களுக்கும் உற்பத்திப் பொருட்களுக்குமே இடப் பற்றாக்குறை.

கண்ணா கொட்டகைக்குப் பின்னால் சென்றார். தொழிற்சாலையின் எல்லை வேலிக்குப் பிறகு குன்று தொடங்கியது. அதில் நிறைய இடத்தை தொழிற்சாலை ஆக்கிரமித்திருந்தது. தொலைவிலிருந்து பார்க்க குன்று சிறிதாக சுலபத்தில் அடைந்துவிடலாம்போல் தோன்றும். அது செடிகளும் புதர்களும் மரங்களும் அடர்ந்த காடாக உயர்ந்திருந்தது. ஒவ்வொரு முறையும் பார்க்கையிலும் மேலும் பெரிதாகத் தோன்றும். மேலே பெரும் பாறை தொக்கி நின்றிருந்தது. ஆடு போலிருப்பதாலும் ஆடுகள் ஏறி நிற்பதாலும் ஆட்டுப் பாறை எனப்பட்டது. அடியிலுள்ள சிறிய பிடிப்பை இழந்து உருண்டு விழுந்தால் தொழிற்சாலையின் மீது மோதும். பெரும் காங்கிரீட் கட்டடங்களும் கொட்டகைகளும் அழியும். உள்ளே விலையுயர்ந்த இயந்திரங்கள் நாசமாகும். தன்னுடைய விதியும் முடிவுக்கு வரும். அருகில் குன்று எட்டவே முடியாதென்பதைப்போல் ஓங்கி நின்றது. அண்ணாந்து பார்த்தாலும் முழுமையாகத் தெரியவில்லை. மேலே வானம் ஒளியாக விரிந்திருந்தது. கண்கள் கூச தலையைக் குனிந்துகொண்டார். அதிலுள்ள ஆனை மடுகில் எப்போதும் நீர் நிறைந்திருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறார். ஒரு காலத்தில் யானைகள் நீர் பருகியியதாம். இப்போது தடுப்பணைகள் கட்டப்பட்டு நீரோட்டமில்லாமல் தேங்கி சாக்கடை போலாகிவிட்டது என சொன்னார்கள். தொழிற்சாலையில் முன்பு வேலியில்லாதிருக்கையில் மஞ்சம் புல் அறுக்கப் போவார். மழைக்காலங்களில் மடுகு நிறைந்தால் புது வெள்ளம் பாய்ந்து வரும். தொழிற்சாலையின் கழிவுநீர் குட்டையில் நிரம்பி சாலையோரக் கால்வாயில் சேரும். மீண்டும் கானாற்றில் ஓடி ஏரியில் கலக்கும். ஏரியிலுள்ள நீர் நஞ்சாகி மீன்கள் செத்து மிதந்து நாற்றமடிக்கும்.

கடைசியாக தொழிற்சாலையை சுற்றி வந்தாகிவிட்டது. மின் உற்பத்தி அறைதான் மீதி. அதுதான் மின்சார இணைப்பு அறை. உள்ளே அகன்ற மின் மீட்டர்களும் மின் கலன் பெட்டிகளும் வண்ண வயர்களும் குழப்பமாகப் பதிக்கப்பட்டிருந்தன. அங்கங்கே மண்டையோட்டுடன் அபாயப் பலகைகள் தொங்கின. கீழே படிந்த எண்ணெய், டீசல் கறைகள். எப்போதும் தீய்ந்த நெடி வீசிக்கொண்டிருந்தது. அடிக்கடி மின்சார வெட்டு நிகழும். அப்போது இயந்திரங்கள் உறையும். திடீரென தொழிற்சாலை மௌனமாகும். தொழிலாளிகள் விடுதலை அடைந்ததைப்போல் கத்துவார்கள். மீண்டும் கூடத்திலுண்டான வெற்றிடத்தில் சப்தம் நிரம்பும். அப்போது மின்கலத்தை இயக்க வேண்டும். தயங்கி உயிர் பெற்று புகை கக்கி ஓடும். இயந்திரங்களைவிட மின்னுற்பத்திக் கலம் போடும் சப்தம் அதிகம். மின்னறையில் மின்சாரத்தின் ஓங்காரம் கடலைப்போல் கேட்டபடியிருக்கும். அந்த இடத்தை தொழிலாளிகள் ஓய்வறையாக பாவித்தார்கள். சிறிதும் பயமில்லாமல் உட்கார்ந்து சாப்பிடுவார்கள். ஒளிந்து புகை பிடிப்பார்கள். மரணத்துடன் விளையாடக் கூடாதென்று மேற்பார்வையாளர் எச்சரித்தாலும் பொருட்படுத்த மாட்டார்கள். சில நாட்கள் கதவுகளைப் பூட்டியும் வைத்தார். மீண்டும் மின்கலத்தை இயக்க அறையைத் திறக்கையில் பழையபடி புகுந்துவிட்டார்கள்.

கண்ணாவுக்கு மற்றொரு இடத்திலிருந்து விடைபெறாதது ஞாபகம் வந்தது. கால்வாய்களையும் தொட்டிகளையும் குப்பைகளையும் கடந்தார். தொழிற்சாலையின் மறு முனையில் ஒதுக்கப்பட்டவைபோல் சிறிய அறைகள் தனித்திருந்தன. கதவுகள் விழுந்தும் உடைந்தும் கிடந்தன. தொலைவிலேயே கடுமையான சிறுநீர், மல நாற்றம் வீசியது. வெளிச் சுவர்கள் உப்பு பூத்திருந்தன. உள்ளே சிறிய சாளரங்களில் வெளிச்சம் கசிந்தது. தரை பாசி படிந்து மஞ்சளடைந்திருந்தது. குழியில் மலம் கழுத்து வரை நிறைந்திருந்தது. சுவர்களில் பெயர்களும் படங்களும் கரியாலும் இலைதழைகளாலும் கிறுக்கியிருந்தன. ஒரு இடம் பாக்கியில்லை. உச்சியில் மேற்பார்வையாளரையும் பெண் தொழிலாளியையும் கோடு போட்டு இணைத்திருந்தார்கள். தாறுமாறாக ஆண் பெண் உள்ளுறுப்புகள். குகைகளிலுள்ள ஆதிவாசிகளின் கோட்டோவியங்களைப்போல் பதிந்திருந்தன. அவருக்கு மூச்சு அடைத்தது. ஓட்டை வாளியில் நீரைப் பிடித்து தொடர்ந்து ஊற்றிக்கொண்டிருந்தார். கழிப்பறைகள் சற்று துலங்கின. சிறிது நாற்றம் குறைந்தது. அவர் மனமும் கழுவப்பட்டதைப் போலானது. மீண்டும் தொழிற்சாலை தொடங்கும் இடத்துக்கு நடந்தார்.

கண்ணாவின் கால்கள் தொழிற்சாலையை சுற்றியதில் வலித்தன. காவல் குடியிருப்பின் பெஞ்சில் நீட்டி உட்கார்ந்தார். அதில் இரவில் யாராவது கூப்பிட்டால் கதவைத் திறக்கப் படுத்திருப்பார். பகலில் உட்கார்ந்தபடி காத்திருப்பார். பெஞ்சில் பேனாவுடன் புதிய பதிவேடு விரித்து வைக்கப்பட்டிருந்தது. புதிய காவலாளி வேலையில் சேர்ந்து சிறிது நேரம்தானாகியிருந்தது. அதற்குள் பல பக்கங்கள் எழுதப்பட்டிருந்தன. “இது என்னாது?” என்று கேட்டார் கண்ணா. பக்கவாட்டுக் கதவருகில் நின்றிருந்த மலையன் “இது இந்த இடத்தோட சரித்திரம் மாதிரி. ஒவ்வொரு அசைவையும் பதிஞ்சிடுவோம். யாருக்குத் தேவைப்பட்டாலும் எடுத்துப் படிக்கலாம்” என்றார். காக்கி உடுப்பும் காகிதமும்தான் தன்னைப் பிரித்ததென்று கண்ணா நினைத்துக்கொண்டார்.

கார் நெருங்கும் சப்தம் கேட்டது. மலையன் உடனே இரட்டைக் கதவைத் திறந்து விறைப்பாக வணக்கம் வைத்தார். கண்ணா ஓடிப் போய் பக்கத்தில் நின்றார். முதலாளி ஜெயா திரும்பிப் பாராமல் கடந்தார். படகைப்போல் கார் அசைந்தாடி உள்ளே நுழைந்தது. தொழிற்கூடத்தருகில் நின்றது. ஜெயா வேகமாக இறங்கிச் சென்றார். காவலாளி மலையன் மீண்டும் கதவுகளை மூடினார். நுழை வாயிலருகில் கண்ணா என்ன செய்வதென்று தெரியாமல் நின்றிருந்தார்.

000

மு.குலசேகரன்

முழுப்பெயர் மு. குலசேகரபாண்டியன். திருப்பத்தூர் மாவட்டம், பாலாற்றங்கரையோரமுள்ள, பாபனபள்ளி பிறந்து வளர்ந்த ஊர். வாணியம்பாடி அருகிலுள்ள புதூரில் வசிக்கிறார். 'ஒரு பிடி மண்', 'ஆயிரம் தலைமுறைகளைத் தாண்டி' (உயிர்மைப் பதிப்பக வெளியீடு) ஆகிய இரண்டு கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. 'அருகில் வந்த கடல்', 'புலி உலவும் தடம்' (காலச்சுவடு பதிப்பக வெளியீடு) ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. “உற்ற சொல்லைத் தேடி” (காலச்சுவடு பதிப்பக வெளியீடு) என்ற கட்டுரைத் தொகுப்பு வெளியாகியுள்ளது. “தங்க நகைப் பாதை” (காலச்சுவடு பதிப்பக வெளியீடு) என்ற நாவல் வெளியாகியுள்ளது.


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

உரையாடலுக்கு

Your email address will not be published.

கடந்தவை

திரட்டு

சேகரம்

Go toTop

Don't Miss