முந்தைய பகுதிகள்: 1 முதல் 14 வரை

விஜயகுமார்: அரசு கலைக் கல்லூரிகளில் முதல் தலைமுறைப் பட்டதாரிகள் நிறைய. அவர்களின் வறுமை நிலையை பல்வேறு இடங்களில் பதிவு செய்திருக்கிறீர்கள். கல்லூரி மாணவர்கள் ஏன் புரோட்டா சாப்பிடுகிறார்கள்?, சேர்க்கைக் கட்டணம் கூட செலுத்த இயலாத மாணவர்கள் என பல எடுத்துக்காட்டுகள் உங்கள் எழுத்தில் உள்ளன. முந்தைய கேரள அரசு, அரசு மற்றும் உதவி பெறும் கல்லூரிகளில் கட்டணச் சலுகையை அறிவித்துள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் தமிழ்நாட்டிற்கும் உதவியாக இருக்குமா?
பெருமாள்முருகன்: ஏற்கனவே தமிழ்நாட்டில் கட்டணச் சலுகைகள் இருக்கின்றன. சேர்க்கைக் கட்டணம், கல்விக்கட்டணம் உள்ளிட்ட பலவற்றை அரசு வாங்குவதில்லை. நூலகம், உடற்கல்வி, ஆண்டுமலர், கையேடு, ஆண்டுவிழா, பல்கலைக்கழகம் உள்ளிட்ட சிலவற்றுக்குத்தான் கட்டணம் பெறும் நிலை இருக்கிறது. உடன் பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கு உறுப்பினர் கட்டணம் அல்லது அன்பளிப்பு என வாங்குகிறார்கள். முதலாண்டு மாணவர்களுக்குக் ‘கணினி அறிவுத் திட்டம்’ (CLP – Computer Literacy Program) என்பதற்கு ஆயிரம் ரூபாய். எல்லாம் சேர்த்து முதலாண்டு மாணவர் ஏறத்தாழ மூவாயித்து ஐந்நூறு ரூபாய் அளவுக்குக் கட்ட வேண்டிவரும். அடுத்தடுத்த ஆண்டுகளில் ஐந்நூறு ரூபாய் அளவுக்குத் தொகை செலுத்தினால் போதும். ஒரு சுயநிதிக் கல்லூரியில் கலைப்பாடம் இளங்கலை படிக்க ஆண்டுக்குக் குறைந்தபட்சம் ஐம்பதாயிரம் வேண்டும். ஒன்றரை லட்சத்திலிருந்து இரண்டு லட்சம் வரைக்கும் செலவு செய்தால்தான் பட்டப்படிப்பை முடிக்க முடியும். அரசு கல்லூரியில் மொத்தமாக ஐயாயிரம் ரூபாயில் இளங்கலைப் பட்டம் பெற்றுவிடலாம். இது மிகப்பெரும் கட்டணச் சலுகை என்றே பார்க்கிறேன்.
இதையும் அரசு மனம் வைத்தால் குறைக்கலாம். உயர்கல்வித் துறையிலிருந்து சிறுகுழு போட்டு ஆய்வு செய்தால் ஒரே வாரத்தில் இதைச் செய்துவிடலாம். சிலவற்றைச் சொல்கிறேன். பல்கலைக்கழகத்திற்கு ஒவ்வொரு மாணவரும் செலுத்தும் தொகை தேவையற்றது. பல்கலைக்கழகம் தேர்வு நடத்துகிறது, சான்றிதழ் கொடுக்கிறது. அவற்றுக்கான கட்டணத்தைத் தனியாகப் பெற்றுக்கொள்கிறது. அவையல்லாமல் மேலும் எதற்குப் பல்கலைக்கழகத்திற்குக் கட்டணம் செலுத்த வேண்டும்? பல்கலைக்கழக நூலகத்திற்கு என்று அரசு கல்லூரி மாணவரிடம் கட்டணம் வாங்குகிறார்கள். ஒவ்வொரு மாணவருக்கும் அங்கே போய் நூல் பெற அனுமதி உண்டா? அதில் இம்மாணவர்களை உறுப்பினராக்கிக் கொள்வார்களா? அதற்கேற்ற வசதிகள் உண்டா? ஆயிரக்கணக்கான மாணவர்களிடம் தொகை பெற்று அதை நூலகத்திற்கு அல்லாமல் வேறுவகையில் பல்கலைக்கழகங்கள் செலவழித்துக் கொண்டிருக்கின்றன. மாணவர்களிடம் பணம் பறிக்கும், மாணவரைச் சுரண்டும் மோசடி அமைப்பாகப் பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. பல்கலைக்கழகத்திடமிருந்து மாணவர்களை மீட்க வேண்டும். அது கட்டணத்திலிருந்து மட்டுமல்ல, பலவித அலைச்சல்களில் இருந்தும் மாணவர்களுக்கு விடுதலை தரும்.
கணினி அறிவுத் திட்டம் என்பது இந்நூற்றாண்டுத் தொடக்கத்தில் உருவானது. எல்லோருக்கும் கணினிப் பயன்பாட்டில் அடிப்படை அறிவு இருக்க வேண்டும் என்னும் நோக்கத்தில் இத்திட்டம் உருவாயிற்று. முதலில் தனியாரிடம் இதைக் கொடுத்திருந்தனர். கணினி ஆய்வகத்துக்குக் கல்லூரியே இடம் கொடுக்கும். கணினிகளை அரசே வாங்கிக் கொடுக்கும். வகுப்பு நடத்துவதும் நிர்வாகம் செய்வதும் மட்டும் தனியார் நிறுவனம். இதில் நேர்ந்த நடைமுறைச் சிக்கல் காரணமாகக் கல்லூரியின் பொறுப்பிலேயே அனைத்தும் வந்தது. தனியார் நிறுவனம் வெளியேறியது.
இத்திட்டத்தில் ஆசிரியர்களாகக் குறைந்த ஊதியத்தில் சேர்ந்தவர்கள் இன்று வரைக்கும் அப்படியே இருக்கிறார்கள். தமிழ்நாடு முழுக்க கிட்டத்தட்ட 4500 பேர் இப்பணியில் உள்ளனர். அரசு பணி நிரந்தரம் செய்யும் என்னும் எதிர்பார்ப்பில் இருபது ஆண்டுக்கு மேலாக இதே பணியில் நீடிக்கிறார்கள். இப்போது அவர்களுக்கு மாத ஊதியம் பத்தாயிரம். மாணவர் சேர்க்கைப் பணி உள்ளிட்ட அலுவலகப் பணிகளில் அவர்கள் பங்கு பெரிது. கௌரவ விரிவுரையாளர் நிலை பற்றிப் பொதுவெளியில் பேசவாவது செய்கிறோம். கணினிப் பயிற்சித் திட்ட ஆசிரியர்களைப் பற்றிப் பேசவும் ஆளில்லை.
கணினிகள் எல்லாம் காலாவதியாகி விட்டன. புதியவை வாங்க வேண்டுமானால் கல்லூரிக் கல்வி இயக்குநரிடம் அனுமதி பெற வேண்டும். பெற்று வாங்கினால் அவற்றைக் கல்லூரியின் வேறு தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். கணினிப் பயிற்சித் திட்டத்திற்கு அவை பயன்படுவதில்லை. இன்று மாணவர்கள் கைப்பேசி வழியாகவே பலவற்றைக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். அரசு வழங்கும் விலையில்லா மடிக்கணினியில் சுயமாகவே பலவற்றைக் கற்றுக் கொள்கிறார்கள். இத்திட்டத்தில் வழங்கும் சான்றிதழ் எதற்குமே பயன்படாது. 1970, 80களில் பட்டப்படிப்புச் சான்றிதழ்களைப் பற்றி ‘நாக்கு வழிக்கக்கூடப் பயன்படாது’ என்று சொல்லும் வழக்கு இருந்தது. இன்று கணினிப் பயிற்சித் திட்டச் சான்றிதழுக்கு அது முற்றிலுமாகப் பொருந்தும்.

பிறகு இந்தக் காலாவதியான திட்டம் எதற்கு? அதில் பணியாற்றும் ஆசிரியர்களைக் கணினி அறிவியல் துறைகளில் கௌரவ விரிவுரையாளர்களாக நியமிக்கலாம் அல்லது ‘கணினி நிரலர்’ உள்ளிட்ட மாற்றுப்பணி ஏதேனும் வழங்கலாம். இத்திட்டத்தை நிறுத்திவிடலாம். நிறுத்தினால் மாணவர் கட்டணம் ஆயிரம் ரூபாய் குறையும். அரசு ஒருதிட்டத்தைக் கொண்டுவந்தால் அதன் தேவை தீர்ந்த பிறகும் நிறுத்துவதே இல்லை. அத்திட்டம் தானாகவே தேய்ந்து அழிந்து போகும் வரைக்கும் ஏதோ ஒரு மூலையில் நீடித்துக் கொண்டேயிருக்கும். கணினிப் பயிற்சித் திட்டம் இப்போது அப்படிப்பட்ட நிலையில் இருக்கிறது. குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அத்திட்டம் எப்படிச் செயல்படுகிறது, மேற்கொண்டும் அதற்குத் தேவையிருக்கிறதா என்றெல்லாம் பரிசீலிக்கும் நடைமுறையே அரசிடம் இல்லை.
பெற்றோர் ஆசிரியர் சங்கத்திற்கு ஒவ்வொரு கல்லூரியிலும் ஏறத்தாழ ஆயிரம் ரூபாய் வாங்குகிறார்கள் என்று நினைக்கிறேன். அதில் நூறோ நூற்றைம்பதோ தான் உறுப்பினர் கட்டணம் வரும். மீதம் இருப்பது நன்கொடை. தூய்மைப்பணி, அலுவலக உதவியாளர் உள்ளிட்ட அடிப்படைப் பணிகளுக்கு அரசே பணியாளர்களை நியமித்துவிட்டால் இந்த நன்கொடை பெற வேண்டியதில்லை. கணினிப் பயிற்சித் திட்டம், பெற்றோர் ஆசிரியர் கழக நன்கொடை ஆகியவை கட்டாயம் இல்லை. மாணவர் விரும்பினால் கணினிப் பயிற்சித் திட்டத்தில் சேரலாம்; விருப்பம் இல்லை என்றால் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. இதை மாணவர்களுக்குச் சொல்வதில்லை. சொன்னால் பெரும்பாலோர் ‘வேண்டாம்’ என்று சொல்லிவிடுவார்கள். விவரம் தெரியாததால் கட்டாயம் என்று நினைத்துத்தான் செலுத்துகிறார்கள். அடிப்படைப் பணிகளுக்கு எல்லாம் நிரந்தரப் பணியாளர் நியமனம் இல்லை, பல அத்தியாவசியச் செலவுகளுக்கு அரசு நிதி தருவதில்லை முதலிய காரணங்களால் மாணவர்களிடம் வசூலிக்கும் இத்தகைய நிதிகளில் இருந்து கல்லூரி நிர்வாகம் செலவழிக்க நேர்கிறது. ஆகவே மாணவர்களிடம் விருப்பம் கேட்காமல் அவற்றைக் கட்டாயக் கட்டணம் போல வசூலிக்கிறார்கள்.
எல்லாக் கல்லூரிகளிலும் ‘கூட்டுறவுப் பண்டக சாலை’ இருந்தது. இப்போது பல கல்லூரிகளில் செயல்படுவதில்லை. அதற்குப் பல காரணம். இதுவும் காலாவதியான திட்டம்தான். குற்றுயிரும் குலையுயிருமாக ஓரத்தில் கிடந்து செயல்படும் கல்லூரிகளில் அதற்கும் ஐந்நூறு ரூபாய் அளவில் பெறுவார்கள். அத்தொகையில் சில நூல்களை, ஆய்வுப் பதிவேடுகளை மாணவர்களுக்கு வழங்குவார்கள். அதற்குள் ஊழலும் உண்டு. ஆண்டுமலர், கையேடு ஆகியவற்றை இப்போது பல கல்லூரிகள் வெளியிடுவதில்லை. காரணம் அவற்றை அச்சிடும் செலவுக்குத் தக்க அளவு மாணவரிடமிருந்து கட்டணம் வசூலிப்பதில்லை. ஒருமாணவரிடம் கையேட்டுக்கு என்று பத்து ரூபாய் வாங்குகிறார்கள். அத்தொகையில் இன்று ஒருகையேட்டை அச்சிட முடியுமா? ஆகவே கணினியில் தயாரித்து மென்படியாகப் புலனத்தில் அனுப்புவதைப் பெரும்பாலான கல்லூரிகள் கடைப்பிடிக்கின்றன. பிறகு எதற்கு அந்தக் கட்டணம்? ஆண்டுமலர் நிலையும் அதுதான். ஆண்டுமலருக்கு என்று ஒருவரிடம் இருபத்தைந்து ரூபாய் வாங்குகிறார்கள். அது போதாது. பல கல்லூரிகள் ஆண்டுமலர் தயாரிப்பதில்லை, வெளியிடுவதும் இல்லை. சில கல்லூரிகள் குறைந்த பிரதிகள் அச்சிட்டு இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் வழங்குகின்றன. நான் கல்லூரியில் படிக்கும் போது ஒருமாணவரின் படைப்பு ஆண்டுமலரில் வந்தால் அது பெருமைக்குரிய விஷயமாக இருந்தது. ஏராளமான படைப்புகள் வந்து சேரும். அவற்றில் இருந்து ஆசிரியர் குழு ஒன்று தகுதியானவற்றைத் தேர்ந்தெடுக்கும். ஒருவர் படைப்பு ஆண்டுமலரில் இடம்பெற்றால் பிற மாணவர்கள் பொறாமைப்படுவர். இன்று அந்த நிலை இல்லை என்பது வருத்தத்திற்குரியது.

கையேடு, ஆண்டுமலர் ஆகியவற்றை இல்லாமல் ஆக்கியதற்குக் முதன்மைக் காரணம் நிதிதான். அவ்வப்போது ஐந்தைந்து ரூபாய் உயர்த்தியிருந்தால் இப்போது ஐம்பது ரூபாய் அளவுக்கு வந்திருக்கும். அது இன்றைய மாணவருக்குப் பெருஞ்சுமை அல்ல. ஆனால் ஆண்டுமலர் எத்தனையோ நினைவுகளைச் சுமந்து கொண்டு காலத்தைக் கடந்தும் மாணவர் கைகளில் தவழுமே. கட்டணத்தை உயர்த்தக் கூடாது என்னும் அரசின் கொள்கை இப்படிப் படைப்பாற்றலில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மறைமுகமாக வேறு எது எதிலோ கட்டணத்தை உயர்த்திவிட்டு மாணவர் படைப்பாற்றல் தொடர்பான இவற்றில் அரசு கவனம் செலுத்தவேயில்லை.
தேவையற்ற கட்டணம் என்று சில உண்டு. மருத்துவ ஆய்வுக் கட்டணம், கட்செவிப் புலனாய்வு ஆகியவற்றுக்காகப் பதினைந்து ரூபாய் வசூலிக்கின்றனர். அதை எந்தக் கல்லூரியும் செலவழிப்பதில்லை. இத்தகைய பரிசோதனைகளை எல்லோரும் செய்ய முடியாத காலத்தில் கல்வி நிறுவனத்தில் இதைச் செய்தார்கள் போல. இப்போது குழந்தை பிறந்ததும் இந்தப் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. தனிப்பட்டும் மருத்துவமனைகளுக்கு மக்கள் செல்கிறார்கள். ஆகவே இந்தத் தொகையை வாங்க வேண்டியதில்லை. அரசு கல்லூரிகளில் எழுதுபொருள் வாங்குவதற்கு எங்கிருந்து நிதி வருகிறது தெரியுமா? அதுவும் மாணவர்களிடம் பெறும் கட்டணம்தான். ஒவ்வொரு மாணவரும் அதற்கென ஐம்பது ரூபாய் செலுத்துகிறார். கணினியியல் பயிலும் மாணவர்களிடம் ‘கணினி எழுதுபொருள் கட்டணம்’ வசூலிக்கப்படுகிறது. அம்மாணவர்களுக்கு அதனால் பயனில்லை.
நூலகம், உடற்கல்வி ஆகியவற்றுக்கும் மாணவரிடம் கட்டணம் வசூலிப்பர். அவையும் குறைவுதான். நூலகத்திற்குப் பெறும் தொகையிலிருந்துதான் நாளிதழ்கள், வார இதழ்கள் ஆகியவற்றை வாங்கிப் போட வேண்டும். நூலக உதவியாளருக்கு ஊதியம் வழங்க வேண்டும். அவற்றுக்கு எல்லாம் தொகை போதாது. பெரும்பாலான கல்லூரிகளில் நூலகர் கிடையாது. உடற்கல்விக்கு வசூலிக்கும் தொகையிலிருந்து பந்து முதலிய விளையாட்டுப் பொருள்கள் வாங்க வேண்டும். பல கல்லூரிகளில் உடற்கல்வி இயக்குநர் இல்லை. யாராவது ஓர் ஆசிரியர் பொறுப்பில் அத்துறை இருக்கும். அவர் பொருள் வாங்கிப் போடுவதோடு சரி. அதிலும் ஊழல் உண்டு.
இவற்றில் எல்லாம் கணிசமான தொகை செலவழிக்காமல் மிஞ்சும். அவற்றை எல்லாம் ‘செலவழிக்காத குவியல் நிதி’ (Accumulated Fund) என்பதில் சேர்க்க வேண்டும். அப்படிச் சேர்ந்த தொகை ஒவ்வொரு கல்லூரியிலும் பல லட்சம் இருக்கும். மாநகரக் கல்லூரிகள் சிலவற்றில் கோடிக்கணக்கில் அந்நிதி இருப்பதாகவும் கேள்விப்படுகிறேன். அவற்றைச் செலவழிக்க அனுமதி பெற வேண்டும். அது அத்தனை சுலபமில்லை. ஆகவே பல முதல்வர்கள் எந்த முயற்சியும் செய்வதில்லை. குவியல் நிதியைச் செலவழித்தால் அரசு கல்லூரிகளின் உட்கட்டமைப்பை நன்றாக மேம்படுத்தலாம். இன்னும் எத்தனையோ வசதிகளை மாணவருக்குச் செய்து தரலாம். அரசு கல்லூரிகளில் காலிப் பணியிடங்களைச் சரியாக நிரப்பி நிதியைப் பொறுப்புடன் நிர்வகித்தால் எக்கட்டணத்தைக் குறைக்கலாம், எவற்றை உயர்த்தலாம் என்று தெளிவான முடிவெடுத்துச் செயல்படுத்தலாம். இப்போதைய மூவாயிரத்து ஐந்நூறு ரூபாய் என்றிருக்கும் முதலாண்டுக் கட்டணத்தை ஆயிரம் ரூபாய்க்குள் கொண்டு வந்துவிட முடியும். அது மாணவர்களுக்குப் பெருநன்மையாய் இருக்கும்.
வி: தற்போது அரசு மாணவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் உதவி தொகை வழங்கி வருகிறது. அது அவர்களுக்குப் பயன்படுகிறதா? போதுமானதா?
பெமு: இப்போது மாணவர்களுக்கு அரசு வழங்கும் மாதம் ஆயிரம் ரூபாய் அவசியமான உதவிதான். கல்வி பயில்வதற்காக அரசு வழங்கும் எதையும் நான் ஆதரிப்பேன். கல்வியில் நாம் செல்ல வேண்டிய தூரம் பெரிது. உயர்கல்வி பெற வருவோர் விழுக்காடு 55 தான். பள்லிக்கல்வி முடிப்போரில் பாதிப்பேர்தான். பன்னிரண்டாம் வகுப்புக்குப் பிறகு ஏதேனும் ஒருவகையில் உயர்கல்வியைச் சில ஆண்டுகளேனும் எல்லோரும் பெற வேண்டும். பாலிடெக்னி, ஐடிஐ போன்ற தொழிற்கல்வியைச் சீர்திருத்தம் செய்தால் திறன் பெற்ற பணியாளர்களை உருவாக்கலாம். ஆகவே நூறு விழுக்காடு உயர்கல்விக்குள் வர வேண்டும். அதற்கு இத்தகைய உதவித்தொகை எல்லாம் உதவும் அதைக் காரணமாக வைத்து அடிமட்டத்திலிருந்து உயர்கல்விக்கு மாணவர்கள் வருவர் என்பதில் சந்தேகமில்லை.
முதலில் பெண்களுக்கு மட்டும் ஆயிரம் ரூபாய் வழங்கினார்கள். ‘தாலிக்குத் தங்கம்’ என்பதை ஒழித்தது நல்லது. ஒருபெண்ணுக்குத் திருமணம் செய்து வைப்பதா அரசின் கடமை? அது அவர்களின் தனிப்பட்ட முடிவு. கல்விக்குத்தான் அரசு உதவ வேண்டும். மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கியதால் உயர்கல்விக்கு வரும் பெண்களின் எண்ணிக்கை உடனடியாகக் கூடியதைக் கண்கூடாகப் பார்க்க முடிந்தது. திருமணத்திற்குப் பதினெட்டு வயது முடிய வேண்டும் என்பது சட்டம். அதுவரைக்கும் படிக்கட்டும் என்று பெற்றோர் அனுப்புவதற்கு இந்த ஆயிரம் ரூபாயும் காரணம். அப்படி வருவோரில் பல பெண்கள் நன்றாகப் படிக்கிறார்கள். உயர்கல்விக்கும் செல்கிறார்கள். வேலைவாய்ப்பையும் பெறுகிறார்கள். குறைவான விழுக்காடு தான் என்றாலும் அது நல்லது.
ஆயிரம் ரூபாயை ஆண்களுக்கும் விரிவாக்கியது நல்லதுதான். தம் தேவைகளுக்குப் பெற்றோரை எதிர்பார்க்கும் நிலை, சுயமாகச் சம்பாதிக்க வேண்டிய நிலையிலிருந்து மாணவர் விடுபட முடியும். மாணவர்களைப் புத்தகங்கள் உட்படக் கல்விக்கு அவசியமானவற்றை வாங்கச் சொல்ல இயலும். மாணவர்கள் நல்ல உடை அணியலாம். தேவைப்படும் போது உண்ணலாம். தம் பிறந்த நாளைக் கொண்டாடலாம். நண்பர்களுடன் சுற்றுலா செல்லலாம். எல்லாம் தேவைதான். இந்தப் பணத்தை வாங்கிக்கொண்டு டாஸ்மாக் செல்வார்கள் என்று சிலர் இழிவுபடுத்துகிறார்கள். சிலர் அப்படிச் செல்லவும் வாய்ப்புண்டு. நான் மறுக்கவில்லை. பதினெட்டு வயது கடந்துவிட்டால் அதற்கும் அவர்களுக்கு உரிமை உண்டுதானே? நாமே உரிமை வழங்கிவிட்டு அது கூடாது என்று ஏன் சொல்ல வேண்டும். நல்லது கெட்டதைத் தீர்மானித்துக் கொள்ளட்டும். சரி, எல்லோரும் அப்படித்தான் செலவு செய்வார்கள் என்று சொல்ல முடியாது. பெரும்பாலோர் கல்வி சார்ந்தே செலவழிக்கிறார்கள். மாணவர்கள் முகத்தில் ஒருபூரிப்பைக் காண்கிறேன். நெல்லுக்குப் பாயும் நீர் புல்லுக்கும் பாயும்தான். அதனால் எல்லாம் புல்லுக்கே போகிறது என்று சொல்லிவிட முடியாதே.
வி: கணினிப் பயிற்சித் திட்ட ஆசிரியர்கள் நிலை பற்றிக் குறிப்பிட்டீர்கள். அவர்களைப் பற்றிக் கூடுதலாகச் சொல்ல முடியுமா?
பெமு: அரசுப்பணிக்குள் ஏதாவது ஒருவகையில் நுழைந்துவிட்டால் நிரந்தர ஊழியர்களாகி விடலாம் என்னும் நம்பிக்கை இன்னும் இருக்கிறது என்பதற்கு இந்தக் கணினி ஆசிரியர்களே உதாரணம். இவர்களைக் ‘கணினிப் பயிற்றுநர்’ என்கின்றனர். கணினி அறிவியல் துறையில் ‘கணினி நிரலர்’ என்றோ ‘கணினி நிகழ்வு அமைப்பாளர்’ என்றோ பணியிடம் உள்ளது. அப்பணியில் நியமித்து நிரந்தரமாக்கிவிடுவதாக அரசு ஆசை காட்டி ஏதோ ஆணையெல்லாம் வெளியிட்டது. ஒன்றும் நடக்கவில்லை. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கூடுதல் பணியாளர்கள் இருந்ததால் அவர்களை அரசு கல்லூரிக்குக் கொண்டு வந்து அந்தப் பணியிடங்களை நிரப்பிவிட்டது. ஏதாவது ஒருவகையில் நிரந்தமாக மாட்டோமா என்று ஐந்நூறு பேர் பல ஆண்டுகளாகக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
கணினிப் பயிற்சித் திட்டத்திற்காக மாணவர்களிடம் பெறும் ஆயிரம் ரூபாய்க் கட்டணம் இருக்கிறதே, அதிலிருந்துதான் அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. நாமக்கல் கல்லூரிக்கு நான் முதல்வராக வந்த போது (2020) அவர்களுக்கு மாதம் ஆறாயிரம் ஊதியம். அதை வைத்துக்கொண்டு என்ன வாழ்க்கை வாழ முடியும்? ஊதியத்தை உயர்த்துவதற்கு ஏதாவது வழியிருக்கிறதா என்று பார்த்தேன். நிதி இருந்தால் அத்திட்டத்தை நிர்வகிக்கும் குழுவில் தீர்மானம் நிறைவேற்றி ஊதியத்தை உயர்த்தலாம் என்று விதி இருப்பதாக அலுவலகத்தில் தகவல் தந்தனர். அதன் அடிப்படையில் நான் பதவி வகித்த மூன்றாண்டுகளில் ஆண்டுதோறும் படிப்படியாக உயர்த்தி 16,500/- ஊதியம் வழங்கும்படி செய்தேன். ஆறாயிரமாக இருந்த ஊதியத்தை 16,500/-ஆக உயர்த்த முடிந்தது. எனக்கு முந்தைய முதல்வர் எவரும் இந்த முயற்சியைச் செய்யவில்லை. தனியார் கல்வி நிறுவனங்கள் மாணவர்களிடம் கட்டணம் வசூலித்து ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவது போலத்தான் இத்திட்டத்தின் நிலையும். அரசுப் பணியில் இருக்கும் பாதுகாப்பை அனைத்துத் தனியார் துறைகளுக்கும் விரிவுபடுத்துவதுதான் நோக்கமாக இருக்க வேண்டும். ஆனால் தனியார் துறையின் நிலையை அரசு பின்பற்ற முயல்கிறது என்பது தான் அவலம்.
ஆனால் நான் வழங்கிய 16,500/- அப்படியே நீடிக்கவில்லை. என்ன நடந்தது என்று தெரியவில்லை. நான் வழங்கியதை முன்னுதாரணமாகக் கொண்டு பிற கல்லூரிகளிலும் இவ்வாறு வழங்க வேண்டும் என்று கேட்டிருக்கலாம். ஒவ்வொரு கல்லூரியிலும் இருக்கும் நிதியைப் பொறுத்து ஊதிய விகிதம் மாறுபடும் நிலை ஏற்பட்டிருக்கலாம். அதைச் சரிசெய்வதற்காகவோ என்னவோ ‘கணினிப் பயிற்றுநர்களுக்கு மாத ஊதியம் பத்தாயிரம்’ என்று நான் ஓய்வு பெற்று வந்த அடுத்த ஆண்டு அரசாணை வந்துவிட்டது. நாமக்கல்லில் 16,500/- பெற்றுக்கொண்டிருந்த ஆசிரியர்களின் ஊதியம் பத்தாயிரமாகக் குறைந்துவிட்டது. ஏற்கனவே பெற்றுக்கொண்டிருந்த ஊதியத்திற்குப் பாதுகாப்பு வழங்கித்தானே ஒரு ஆணை வர வேண்டும்? குறைப்பது எப்படி நியாயமாகும்? அத்திட்டத்தில் தொகை இருப்பின் கூட்டலாம், இருபதாயிரம் வரை வழங்கலாம் என்றும் ஒருவிதி இருப்பதாகத் தெரிகிறது. ஆனால் முதல்வர்கள் அதைச் செய்ய மாட்டார்கள். தமக்கு எதற்குப் பிரச்சினை என்றுதான் நினைப்பார்கள். பத்தாயிரம் ரூபாயில் ஒருவர் வாழ முடியுமா? அடிப்படை அறிவு இருந்தால் அரசு இப்படிக் குறைந்தபட்சத் தொகையைக் கொடுக்க ஆணை போடுமா? சரி, இந்தச் சிக்கலை எப்படிச் சரிசெய்வது? அவர்களுக்கு ஏதாவது ஒருவகையில் நிரந்தரப் பணி கொடுத்துவிட்டுக் கணினிப் பயிற்சித் திட்டத்தை நிறுத்திவிடுவது நல்லது என்பதுதான் எனக்குத் தோன்றும் தீர்வு. அதனால் கணினிப் பயிற்ருநர்களுக்கும் நல்லது நடக்கும்; மாணவர்களுக்குக் கட்டணச் சுமையும் குறையும்.
வி: பல்கலைக்கழகங்களிடம் இருந்து மாணவர்களை மீட்க வேண்டும் என்கிறீர்களே, இத்தனை கடுமை தேவையா?
பெமு: பல்கலைக்கழகங்கள் செய்யும் கொடுமைகளை வரிசைப்படுத்திப் பார்த்தால் நான் சொல்வதைக் கடுமை என்று சொல்ல மாட்டீர்கள். மாணவர்களிடம் பெறும் கட்டணப் பட்டியலில் பல்கலைக்கழகம் தொடர்பாக எவையெவை இருக்கின்றன என்பதை நான் முதல்வராக இருந்தபோது சேலம், பெரியார் பல்கலைக்கழகம் வசூலித்ததைச் சான்றாகக் கொண்டு பார்க்கலாம். பல்கலைக்கழகப் பதிவுக் கட்டணம், பல்கலைக்கழக ஏற்புக் கட்டணம், மெட்ரிகுலேசன் கட்டணம், இளைஞர் விழாக் கட்டணம், பல்கலைக்கழக வளர்ச்சிக் கட்டணம், பல்கலைக்கழக விளையாட்டுக் கட்டணம், பல்கலைக்கழக நூலகக் கட்டணம், +2 மதிப்பெண் சான்று சரிபார்க்கும் கட்டணம், பட்டமளிப்பு விழாக் கட்டணம், பல்கலைக்கழக நிர்வாகக் கட்டணம், செஞ்சிலுவைச் சங்கக் கட்டணம், நாட்டு நலப்பணித் திட்டக் கட்டணம் எனப் பட்டியல் நீள்கிறது. இவற்றுக்கான தொகையை எல்லாம் கூட்டினால் ஏறத்தாழ 1500/- ரூபாய் வருகிறது. பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் ஓராண்டில் சேரும் லட்சக்கணக்கான மாணவர்களிடம் இருந்து 1500 ரூபாய் வசூலித்தால் எவ்வளவு தொகை வரும் என்று கணக்கிட்டுப் பார்க்கலாம். இவற்றால் அம்மாணவர்களுக்கு ஏதாவது பயன் உண்டா?
பல்கலைக்கழகப் பதிவுக் கட்டணம் என்று ஒன்று, ஏற்புக் கட்டணம் என்று ஒன்று. இரண்டுக்கும் என்ன வேறுபாடு? அதென்ன, பல்கலைக்கழக வளர்ச்சிக் கட்டணம், பல்கலைக்கழக நிர்வாகக் கட்டணம்? இரண்டுக்கும் வேறுபாடு? இப்படிப் பெயர்களை எல்லாம் போட்டுப் பணம் வசூலிக்கலாம் என்று யார் திட்டம் தீட்டிக் கொடுத்தார்களோ, அவர்கள் புத்திசாலிகள். சுரண்டலின் நுட்பங்களை அறிந்தவர்கள். இவற்றில் உண்மையில் அவசியமானவை எவை, மாணவர்களுக்குப் பயன்படுபவை எவை என்றாய்ந்து சீர்படுத்த வேண்டும். கலாச்சாரம் மற்றும் இளைஞர் விழாக் கட்டணம் என்று ஒவ்வொரு மாணவருக்கும் முப்பதோ நாற்பதோ வசூலித்தார்கள். என்ன விழா நடத்தினார்கள், அதில் யாரெல்லாம் பங்கேற்றார்கள், தொகை செலுத்திய மாணவர்களின் பங்கு என்ன முதலிய கேள்விகளுக்கு யாராவது பதில் சொல்வார்களா? இப்போதும் அத்தலைப்பில் பணவசூல் நடக்கிறது. அதைக் கொண்டு என்ன செய்தார்கள், என்ன செய்கிறார்கள் என்று ஏதாவது பல்கலைக்கழகம் வெள்ளை அறிக்கை வெளியிட்டால் நல்லது. மாணவர்களிடம் வெவ்வேறு தலைப்புகளில் பணம் வசூலித்து வேறுவகைச் செலவுகளுக்குப் பயன்படுத்துகின்றனர் என்பதே என் எண்ணம்.
பல்கலைக்கழகங்கள் மாணவர்களிடம் தேர்வுக் கட்டணம், சான்றிதழ் கட்டணம் வாங்குகின்றன. அவை மிக அதிகம். ஒருசான்றிதழில் பிழை நேர்ந்துவிட்டால், அது பல்கலைக்கழகம் செய்த பிழைதான் எனினும் அதைத் திருத்தம் செய்து தர மாணவரிடம் பணம் வசூலிக்கும் விந்தை தமிழ்நாட்டில்தான் நடக்கும். பல்கலைக்கழகம் செய்த தவறுக்கு மாணவர்களிடம் பணம் வசூலித்துவிட்டு அவர்களை அலைய வைப்பதும் இழிவாக நடத்துவதும் தான் செய்கின்றனர். ஒருசான்றிதழுக்காகப் பல்கலைக்கழகம் சென்று வந்த மாணவர் ஒருவரின் அனுபவத்தைக் கேட்டுப் பாருங்கள். இரத்தக் கண்ணீர் வடிக்க வேண்டியிருக்கும். யாரை அணுகுவது என்பதே தெரியாது. சரியான வழிகாட்டலே இருக்காது. ஒருதகவலைப் பெறவும் முடியாது. சில இடங்களில் இதற்கெல்லாம் புரோக்கர்களும் உண்டு. கட்டணம் செலுத்தும் மாணவர் இன்றைய சமூகவிதிப்படி நுகர்வோர் ஆகிறார். அவரை நல்லமுறையில் நடத்தி அவருக்குத் தேவையான சேவையைப் பல்கலைக்கழகம் வழங்க வேண்டும். ஆனால் இழிவாக நடத்தும் நிலைதான் இருக்கிறது.
அரசு ஒருபக்கம் கல்விக் கட்டணத்தையும் ரத்து செய்து மாணவர்களுக்கு ஆதரவு காட்டுவதாகப் பாவனை செய்கிறது. பல்கலைக்கழகம் வெவ்வேறு காரணங்களைச் சொல்லிப் பணம் பிடுங்குகிறது. முனைவர் பட்ட ஆய்வுக்குப் பதிவு செய்வோர் செலுத்த வேண்டிய கட்டணத்தை எல்லாப் பல்கலைக்கழகங்களும் பலமடங்கு உயர்த்தி வாங்குகின்றன. இவற்றை எல்லாம் அரசு நினைத்தால் குறைத்து மாணவர்களுக்கு நன்மை செய்ய முடியும். தேர்வுக் கட்டணத்தைக்கூடப் பெருமளவு குறைக்கலாம். விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்குத் தாளுக்கு இவ்வளவு என்று பணம் தருவதை நிறுத்திவிடலாம். மாத ஊதியம் பெறும் ஆசிரியர்களின் கல்வி சார் பணிகளில் ஒன்றுதான் விடைத்தாள் திருத்தம். அதற்கு ஏன் தனிக் கூலி? அதை நிறுத்தினால் மாணவர்களின் தேர்வுக் கட்டணம் கணிசமாகக் குறையும். விடைத்தாள் திருத்தத்தில் நேரும் தவறுகளுக்கு அதைத் திருத்தும் ஆசிரியரையே பொறுப்பாக்க வேண்டும். அரசு நினைத்தால் சிறுகுழு அமைத்து ஒருமாதத்தில் அறிக்கை பெற்றுக் கட்டணத்தை எவ்வளவோ குறைக்கலாம்.
அரசு கல்லூரி மாணவர் சேர்க்கையின் போது வந்து பார்த்தால் மாணவர் நிலையும் பெற்றோர் நிலையும் தெரியும். பொறுக்கிச் சேர்த்து எடுத்து வந்த பணம், கொண்டு வந்தது போதாமல் அலைதல், எங்கே போய்க் கடன் கேட்பது என்று தவித்தல், நாளைக்குக் கொண்டு வந்து கட்டுகிறோம் என்று தவணை கேட்டல் எல்லாம் நடக்கும். இத்தகைய சந்தர்ப்பங்களில் ஆசிரியர்கள் சிலர் தாமே கட்டணம் செலுத்திச் சேர்ப்பதும் உண்டு. ஆசிரியராகப் பணியாற்றிய போது நான் மட்டுமல்ல, எங்கள் துறை சார்ந்த ஆசிரியர் பலரும் மாணவர்களுக்கு உதவியது உண்டு. நான் முதல்வராக இருந்தபோது பெற்றோர் ஆசிரியர் கழகக் கட்டணத்தில் இருந்து பலருக்கு விலக்களித்திருக்கிறேன். பெற்றோர் ஆசிரியர் கழக நிதியிலிருந்து சிலருக்குப் பணம் கொடுத்துக் கட்டச் சொல்லிச் சேர்க்கையை உறுதிப்படுத்தியதும் உண்டு. பின்னர் கொண்டு வந்து அம்மாணவர்கள் செலுத்திவிடுவார்கள். அதற்கு அனுமதிக்க முதல்வர் கையொப்பம் வேண்டும் என்பார்கள். தாராளமாகப் போட்டுக் கொடுப்பேன். நம் சமூகம் சமச்சீரான வளர்ச்சி பெற்றதல்ல. சாதாரணக் கட்டணம் செலுத்தவே கஷ்டப்படும் ஏராளமான குடும்பங்களைக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் எதார்த்தம்.
தொடரும்…

விஜயகுமார்
வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். தற்போது டோக்கியோ அறிவியல் நிறுவனத்தில் (Institute of Science, Tokyo) ஆய்வாளராக உள்ளார். நவீனத் தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் உள்ளவர். தமிழிலிருந்து மலையாளத்துக்கு கவிதைகள் மொழிபெயர்த்துள்ளார்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.




















