மம்மர் அறுக்கும் மருந்து (14) – உள் ஒதுக்கீடு என்பது வெளியேற்றுவது அல்ல: பெருமாள்முருகன்

முந்தைய பகுதிகள்: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13

விஜயகுமார்: கலைக்கல்லூரி மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு தொடர்பாக வேறு ஏதாவது பிரச்சினை இருக்கிறதா?

பெருமாள்முருகன்: நிறையப் பிரச்சினை இருக்கிறது. பொதுப்பிரிவில் ஒருவருக்கு இடம் கிடைத்தால் இயல்பில் மகிழ வேண்டும் அல்லவா? பலரோடு போட்டியிட்டு முன்னிலையில் வந்திருக்கிறோம் என்னும் புரிதல் இன்றும் பலருக்கு இல்லை. பொதுப்பிரிவு பற்றி ஆசிரியர்களே குழம்பும்போது படிக்காத பெற்றோர், முதல் தலைமுறையாகக் கல்விக்கு வரும் சிறுவத்தின் இறுதியில் இருக்கும் பிள்ளைகளுக்கு எப்படித் தெளிவு இருக்கும்? ‘நான் எஸ்சி(ஏ)ங்க ஐயா. என்னை ஓசியில் சேர்க்கிறீர்களே? உதவித்தொகை வராதே’ என்று அஞ்சிய மாணவர்கள் உண்டு. அவர்களுக்கு விளக்கம் சொல்லி ‘உதவித்தொகைக்கு எந்தப் பங்கமும் வராது’ என்று தேற்ற வேண்டும். அப்படிக் கேட்பவர் எண்ணிக்கை இப்போது ஓரளவு குறைந்திருக்கிறது. 

இடஒதுக்கீடு பற்றி எல்லோருக்கும் தெளிவு கிடைப்பது போலப் பயிலரங்குகள் நடத்த வேண்டும். பொதுவெளியில் அதைப் பற்றி விளக்கியும் விவாதித்தும் பேச வேண்டும். அது தங்கள் உரிமை என்பதை அனைவரும் உணரும்படி செய்ய வேண்டும். மூடுமந்திரம் போல வைத்திருந்தால் இந்தக் குழப்பம் நீடித்துக் கொண்டேயிருக்கும். இடஒதுக்கீடு பற்றிய அறிவு ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும். மேலும் இடஒதுக்கீட்டுப் பலன்  முழுமையாக மக்களுக்குப் போய்ச் சேர வேண்டுமானால்  களஆய்வு அவசியம். நடைமுறையில் என்னென்ன பிரச்சினைகள் இருக்கின்றன என்பதைப் புள்ளி விவரங்களோடு கணக்கெடுத்து அவற்றைச் சரிசெய்ய முயல வேண்டும். இடஒதுக்கீடு கொடுத்துவிட்டால் போதாது. அமலாகும்போது வரும் சிக்கல்களைக் காண வேண்டும். களைய வேண்டும். நாமக்கல் கல்லூரியில் ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கையில் எதிர்கொண்ட ஒரு பிரச்சினையைச் சான்றுக்குச் சொல்கிறேன்.

நாமக்கல் மாவட்டத்தில் எட்டு வட்டங்கள் உள்ளன. அவற்றில் கொல்லிமலை ஒன்று. அது பதினாறு வருவாய்க் கிராமங்களை உள்ளடக்கியது. ஒவ்வொரு வருவாய்க் கிராமத்திலும் அதிகபட்சம் இருபது கிராமங்கள் அடங்கியிருப்பதாகக் கொள்ளலாம். மொத்தமாக முந்நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள். மக்கள் தொகை ஒருலட்சம் இருக்கக் கூடும். அதில் தொண்ணூறு விழுக்காடு பழங்குடியினர். ஒருகல்வியாண்டில் குறைந்தபட்சம் ஆயிரம் பேராவது பன்னிரண்டாம் வகுப்பு முடித்து வெளியே வருவர். பள்ளிப் படிப்பு முடித்து உயர்கல்விக்குச் செல்வோர் கிட்டத்தட்ட ஐம்பத்தைந்து விழுக்காடு என்பது பொதுவான புள்ளிவிவரம். பழங்குடியினத்தில் இன்னும் குறைவாகவே இருக்கும். குறிப்பாகப் பெண்களை அவர்கள் வெளியுலகத்துக்கு அனுப்புவதில்லை. ஆகவே ஆயிரம் பேரில்  முந்நூறு பேர் உயர்கல்வி பயிலக் கலைக்கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கிறார்கள் என்று கொள்வோம். நாமக்கல் மாவட்டத்திற்குள் மட்டுமே பயில விரும்புவார்கள். மலையிலிருந்து தரைப்பகுதிக்கு இறங்கி வருவதே பெரிது.  வேறு மாவட்டங்களுக்குச் செல்வதை விரும்புவதில்லை.

நாமக்கல் மாவட்டத்தில் அரசு கலைக்கல்லூரிகள் ஐந்து உள்ளன. நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி, நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் மகளிர் கல்லூரி, சேந்தமங்கலம் அரசு கல்லூரி, இராசிபுரம் திருவள்ளுவர் அரசு கல்லூரி, குமாரபாளையம் அரசு கல்லூரி ஆகியவை. இவற்றில் சேந்தமங்கலம் தொடங்கிச் சில ஆண்டுகள்தான் ஆகின்றன. சரி, எல்லாக் கல்லூரிகளிலும் சேர்த்து அதிகபட்சம் ஐயாயிரம் இடங்கள் இருக்கின்றன என வைத்துக்கொள்வோம். பழங்குடியினத்தவருக்கு எத்தனை விழுக்காடு இடஒதுக்கீடு? ஒரே ஒரு விழுக்காடுதான். ஐயாயிரத்திற்கு ஐம்பது இடம். ஐம்பது பேருக்கும் அவர்கள் விரும்பும் கல்லூரி, விரும்பும் படிப்பு கிடைக்கிறதா சேர்கிறார்களா என்பதிலும் பிரச்சினைகள் இருந்தாலும் சேர்கிறார்கள் என்றே கொள்வோம். உயர்கல்விக்குச் செல்ல விரும்பும் இருநூற்றைம்பது பேருக்கு வாய்ப்பு இல்லை. பக்கத்து மாவட்டங்களுக்குச் சிலர் செல்கிறார்கள் என்று வைத்துக்கொண்டு நூறு பேர் சேர்வதாகக் கருதினாலும் இன்னும் இருநூறு பேருக்கு வாய்ப்பு இல்லை.

எங்களுக்கு வரும் விண்ணப்பங்களில் பழங்குடியின மாணவர் எண்ணிக்கை அதிகம் இருக்கும். ஆனால் இடம் கொடுக்க முடியாது. நல்ல மதிப்பெண் இருந்தும் படிக்க ஆர்வம் இருந்தும் சேர்க்க முடியாது. நாமக்கல் கல்லூரியில் ஆயிரம் இடங்கள் இருக்கின்றன. பத்துப் பேருக்குத்தான் இடம் கொடுக்க முடியும். விண்ணப்பங்கள் ஏராளமாக இருக்கும். என்ன செய்வோம்? மதிப்பெண் கூடுதலாக உள்ள மாணவர்களைப் பொதுப்பிரிவில் கொஞ்சம் சேர்ப்போம். பிறகு பிசி, எம்பிசி இடங்களில் அவர்கள் சேராமல் காலியாக இருக்கும் இடங்களை  இறுதியாக மாற்றம் செய்து பழங்குடியின மாணவர்களைச் சேர்ப்போம். என்றாலும் விண்ணப்பிக்கும் பழங்குடியின மாணவர் எண்ணிக்கையோடு ஒப்பிட்டால் சேர்க்கும் மாணவர் எண்ணிக்கைப் பத்து விழுக்காடுகூட இருக்காது. அரசு நல விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைப்பதிலும் இதே பிரச்சினை இருக்கிறது. இது சமூக நீதியாகுமா?

வேறு சில மாவட்டங்களில், பெருநகரங்களில் பழங்குடியினர் பெரும்பாலும் இருப்பதில்லை. சென்னையை எடுத்துக்கொள்வோம். அங்கிருக்கும் கல்லூரிகளுக்கு வேறு மாவட்டங்களில் இருந்துதான் பழங்குடியின மாணவர்கள் வர வேண்டும். ஆகவே ஒப்பீட்டளவில் பழங்குடியின மாணவர் விண்ணப்பம் குறைவாகவே இருக்கும். சென்னை, மாநிலக் கல்லூரிக்கு இவ்வாண்டு 48,000 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாகவும் படிப்புகளைப் பொருத்தவரை இரண்டரை லட்சம் பதிவுகள் வந்திருப்பதாகவும் அறிகிறேன். இது மாபெரும் எண்ணிக்கை. 48,000 மாணவர்களில் ஒருவிழுக்காடு எனப் பார்த்தால் 480 பழங்குடியின மாணவர்கள் விண்ணப்பித்திருக்க வேண்டும். அத்தனை பேர் விண்ணப்பித்திருக்க வாய்ப்பே இல்லை. இதை எப்படிச் சரிசெய்வது? வெளியிடங்களுக்குச் சென்று படிக்கப் பழங்குடியினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு அவர்களுக்குப் போதுமான வசதிகளைச் செய்து தர வேண்டும். குறிப்பிட்ட பகுதியில் ஒருபிரிவினர் நிறைந்து வாழ்கின்றனர். ஆனால் இடஒதுக்கீடு ஒட்டுமொத்த நிலப்பரப்பைக் கணக்கில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் நேரும் சமனின்மையைச் சரிசெய்ய எந்தத் திட்டமும் கைவசம் இல்லை.

ஒற்றைச் சாளர முறை இப்பிரச்சினையை பெருமளவு தீர்க்கும் என்று நம்புகிறேன். இப்போதைய இணையம் வழி விண்ணப்பிக்கும் நடைமுறையில் எங்கெங்கே கல்லூரிகள் இருக்கின்றன என்று மாணவர்களால் அறிய முடிகிறது. அங்கே போகலாமா, போனால் இடம் கிடைக்குமா என்பதில் உறுதி இல்லை. ஒற்றைச் சாளர முறைக் கலந்தாய்வு என்றால் ஒருவர் தமக்கு எந்தெந்தக் கல்லூரிகளில் வாய்ப்பு இருக்கிறது என்பதை அறிந்து ஒருகல்லூரியைத் தேர்ந்தெடுக்க முடியும். வெளிமாவட்டங்களில் போய்ச் சேர்வது தொடர்பான முடிவை எடுப்பது அடுத்த கட்டம். முதலில் இடம் கிடைக்கும் அல்லவா? கிடைத்தால் சிலரேனும் சேர்வர். அவர்களைப் பார்த்து அடுத்தடுத்து மாணவர்கள் வருவர். இதற்கு ஒற்றைச் சாளர முறை சிறப்பாக உதவும் என்று நம்புகிறேன்.

வி: இதேபோல் கொங்குப் பகுதியில் அருந்ததியர் எண்ணிக்கை மிகுதி. எஸ்ஸி(ஏ) எனப் பிரித்து அவர்களுக்கு வழங்கியுள்ள உள்ஒதுக்கீடு போதுமான அளவு பயன் தருகிறதா? கலைக்கல்லூரிகளில் தற்போதைய நிலைமை எப்படி என்று சொல்லுங்கள்.

பெமு: அருந்ததியர் உள்ஒதுக்கீடு மிகச் சிறப்பானது. அதன் பயனைக் கண்கூடாகக் காண்கிறேன். நாமக்கல் கல்லூரியில் 2001இல் பணியில் சேர்ந்தபோது அருந்ததியர் இனத்தைச் சேர்ந்த ஒரே ஒருவர் மட்டுமே ஆசிரியராக இருந்தார். உள் இடஒதுக்கீட்டுக்குப் பிறகு இப்போது ஐவர் பணியாற்றுகின்றனர். இது ஒரு எளிய சான்று. என் மாணவர்கள் பலர் அருந்ததியர் சாதியினர். அவர்களில் கணிசமான பேர் இப்போது அரசுப் பணிக்குச் சென்றுள்ளதையும் அறிகிறேன். பட்டியலினப் பிரிவில் உள்ள அருந்ததியர் சாதி மக்களின் இயல்பு வேறுபட்டது. சம்பாதித்தல், சேமித்தல், எதிர்காலத் திட்டமிடல் ஆகியவற்றில் அத்தனை விருப்பம் இல்லாதவர்கள். இன்றும் கூடி வாழும் சமூகத்தன்மை அவர்களிடம் இருக்கிறது. கல்வி பற்றிய விழிப்புணர்வு மிகக் குறைவு. இளவயதுத் திருமணப் பிரச்சினையும் உண்டு. ஆகவே உள்ஒதுக்கீடு அவர்களை மேம்படுத்தும் நல்ல முயற்சி என்பதில் ஐயமில்லை.

கலைக்கல்லூரிச் சேர்க்கையில் கொங்குப் பகுதியைப் பொருத்தவரைக்கும் முன்னர் சொன்ன பழங்குடியின மாணவர்களுக்கு இருக்கும் பிரச்சினை அருந்ததியருக்கும் உள்ளது. இப்பகுதியில் அவர்கள் நிறைந்து வாழ்வதால் விண்ணப்பிக்கும் மாணவர் எண்ணிக்கை அதிகம். இடம் கிடைப்போர் எண்ணிக்கை குறைவு. உள்ஒதுக்கீடு பற்றிய புரிதல் குழப்பமும் நிலவுகிறது. பட்டியலினத்தில் உள்ள பிற பிரிவினர் தம் வாய்ப்பை இந்த உள் ஒதுக்கீடு மூலம் அருந்ததியர் பறித்துக் கொள்வதாகக் கருதுகின்றனர். அது உண்மையல்ல என்பதுதான் என் எண்ணம். பட்டியலினத்தில் உள்ள பிற பிரிவினரோடு போட்டியிட்டு ஒருசில இடங்களைக்கூடப் பெற முடியாத நிலையில்தான் அருந்ததியர் உள்ளனர். உள் ஒதுக்கீடு மூலம் மூன்று விழுக்காடு இடம் அவர்களுக்கு உறுதியாகியிருக்கிறது.

பட்டியலினப் பிரிவில் உள்ள பிறசாதியினரால் இந்த உள்ஒதுக்கீட்டை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒவ்வோர் ஆண்டு மாணவர் சேர்க்கையின் போதும் இப்பிரச்சினை ஏதாவது வடிவத்தில் வரும். உள் ஒதுக்கீடு மூன்று விழுக்காடு என்றால் அதில் மட்டும்தான் அருந்ததியர் இடம்பெற முடியுமா? எஸ்சி பிரிவுக்கென மீதமிருக்கும் பதினைந்து விழுக்காட்டில் அவர்களுக்கு இடமில்லையா? இது மீண்டும் மீண்டும் எழும் பிரச்சினை. பிற பட்டியலினச் சாதி மாணவர்களோடு மதிப்பெண்ணில் போட்டியிடும் அளவு மதிப்பெண் பெற்றிருந்தால் பதினைந்து விழுக்காட்டிலும் அருந்ததியர் மாணவருக்கு இடம் உண்டு என்றுதான் அரசு விதி சொல்கிறது. பதினைந்து விழுக்காடு என்பது பட்டியலினம் அனைத்துக்கும் பொது. எப்படிப் பொதுப்பிரிவில் எல்லாச் சாதியினரும் மதிப்பெண் அடிப்படையில் இடம்பெறலாமோ அப்படித்தான் அருந்ததியர் உட்பட பட்டியலினத்தின் அனைத்துச் சாதிகளும் எஸ்சி பொதுப்பிரிவில் இடம்பெறலாம். பதினைந்து விழுக்காடு என்பது அருந்ததியரை வெளியேற்றுவதல்ல. உள்ளேதான் வைத்திருக்கிறது. ஆனால் மூன்று விழுக்காட்டில் அருந்ததியர் மட்டுமே இடம்பெறுவர். அதுதான் உள் ஒதுக்கீட்டின் அடிப்படை.

இதற்கு வேறு சான்றுகளையும் சொல்லலாம்.  பிசி பிரிவில் இஸ்லாமியருக்கு 3.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு உள்ளது. மீதமுள்ள 26.5 விழுக்காடு பிசி பொதுப்பிரிவுக்கானது. அதில் பிற பிற்படுத்தப்பட்ட சாதிகளுடன் இஸ்லாமியர்களும் போட்டியிடலாம். பிசி(எம்) என்னும் 3.5 விழுக்காடு இஸ்லாமியருக்கு மட்டுமே உரியது. ஒவ்வொரு பிரிவிலும் பெண்களுக்கு முப்பத்து மூன்று விழுக்காடு இருப்பதும்கூட உள் ஒதுக்கீடுதான். அதை  ‘ஆண்கள் – பெண்கள்’ என்று பிரிப்பதில்லை.  ‘பொது – பெண்கள்’ என்றுதான் வைத்திருப்போம். பொது என்பதில் பெண்களும் வரலாம். இல்லையென்றால் அறுபத்தேழு விழுக்காடு ஆண்களுக்கான ஒதுக்கீடு என்றாகி விடுமே. பேருந்தில் பெண்களுக்கான இருக்கை ஒதுக்கீடு உள்ளது. அது போக மீதமிருப்பவை அனைத்தும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவானவை. இதே முறைதான் கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றிலும் பின்பற்றப்படுகிறது. 

நான் முதல்வராக இருந்தபோது ஒருபடிப்பில் எஸ்சி பிரிவில் காலியிடம் இருந்தது. அருந்ததியர் சாதி மாணவர் ஒருவர் சேர வந்தார். அத்துறைத்தலைவர் எஸ்சி(ஏ) பிரிவில் இடம் முடிந்துவிட்டது, எஸ்சி பிரிவில் சேர்க்க முடியாது என்று சொல்லிவிட்டார். அம்மாணவரை அழைத்துக்கொண்டு ஆசிரியர் ஒருவர் என்னிடம் வந்தார். அவர் அருந்ததியர் சாதியைச் சேர்ந்தவர். அச்சாதியில் இருந்து ஒருவர் ஆசிரியராக வந்ததால் இப்பிரச்சினையைக் கவனத்துக்குக் கொண்டு வர முடிந்தது. அம்மாணவரை எஸ்சி பிரிவில் சேர்த்துக் கொள்ளலாம் என்று அத்துறைத் தலைவருக்கு எடுத்துச் சொல்லிச் சேர்த்தேன்.  அதே போல இன்னொரு பிரச்சினை வந்தபோது அருந்ததியர் அல்லாத பட்டியலின சாதியைச் சேர்ந்த அந்தத் துறைத்தலைவர் ஒத்துக்கொள்ள மறுத்தார். ‘மூனு சதவீதமும் வாங்கிக் கொண்டு பதினைந்திலும் அவர்களுக்கு இடம் கொடுக்க வேண்டுமா?’ என்று கோபத்துடன் கேள்வி எழுப்பினார். அவருக்கும் விளக்கிச் சொல்லியும் சமாதானம் ஆகவில்லை. என் வலியுறுத்தலால் சேர்த்துக்கொண்டார்.  இவை மாணவர் சேர்க்கைக் குழுவில் பெரும் விவாதத்திற்கு உள்ளாயின. ஒருமித்த முடிவை எட்ட முடியவில்லை என்றாலும்   நாமக்கல் கல்லூரியில் காலியிடம் இருக்கும் என்பதால் வரும் மாணவர் எவருக்கும் பாதிப்பு வராமல் எல்லோரையும் சேர்த்துக் கொள்ள முடிந்தது.

இன்றும் இந்தச் சிக்கல் தொடர்கிறது. பல இடங்களிலும் இப்பிரச்சினை வருவதால் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் அருந்ததியர் உள்ஒதுக்கீட்டை விளக்கி 08-05-‘26 அன்று  ‘ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைச்’ செயலர் வழிகாட்டுதல்களை வழங்கி அனைத்து அரசுத் துறைகளுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார். அதில்  ‘எஸ்சி பொதுப்பிரிவு’ என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. மதிப்பெண் அடிப்படையில் பொதுப்போட்டியிலும் எஸ்சி பொதுப்பிரிவிலும் அருந்ததியர் வரலாம். அருந்ததியர் உள் ஒதுக்கீட்டுப் பிரிவில் காலியிடம் இருந்து தகுதியான அருந்ததியர் பிரிவைச் சேர்ந்த எவரும் வரவில்லை என்றால் அவ்விடத்தைப் பிற எஸ்சி பிரிவினருக்கு வழங்கி நிரப்பலாம் என்பதும் அவ்வழிகாட்டுதலில் உள்ளது. உள் ஒதுக்கீடு வந்து கிட்டத்தட்டப் பதினேழு ஆண்டாகிவிட்டது. புரிதல் குழப்பத்தால் இப்போதும் இத்தெளிவு தேவைப்படுகிறது. 

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைச் செயலரின் வழிகாட்டுதல் கடிதத்தின் பகுதிகள்

அதேசமயம் உள்ஒதுக்கீடு பட்டியலினச் சாதிகளிடையே முரணை மிகுவித்துள்ளது என்பதையும் மறுக்க முடியாது. அருந்ததியர் மீது தீவிரமான வெறுப்பும் வெளிப்படுகிறது. நிதானமான விவாதமும் அணுகுமுறையும் இல்லை. போட்டிக்கே வராமலிருந்த பிரிவினர் மூன்று விழுக்காட்டை முழுமையாகப் பெறுகிறார்கள் என்பதைப் பிறரால் சகித்துக்கொள்ள முடியவில்லை.  ஒருவேளை சாதிரீதியான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்து அதன் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறை வருமானால் இந்த முரண்பாடுகள் குறையலாம் அல்லது தீரலாம்.

வி: எம்பிசி பிரிவில் வன்னியருக்குப் பத்து விழுக்காடு ஒதுக்கீடு வழங்குவது பற்றி உங்கள் பார்வை என்ன?

பெமு: 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன் அ.தி.மு.க. அரசாங்கம் வழங்கிய வன்னியருக்கு 10.5 விழுக்காடு  என்பது உள்ஒதுக்கீடு அல்ல. அதைப் ‘பங்கீடு’ என்று சொல்லலாம். பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இருந்த ஐம்பது விழுக்காட்டிலிருந்து இருபதைப் பிரித்தெடுத்து எம்பிசிக்கு 1989ஆம் ஆண்டு தி.மு.க. அரசாங்கம் வழங்கியது. அதுவும் பங்கீடுதான். எனினும் தனிப்பிரிவாக வகைப்படுத்திச் சட்டச் சிக்கல் வராதபடி வழங்கப்பட்டது. இந்த 10.5 விழுக்காட்டில் அப்படிப்பட்ட தெளிவில்லை. எம்.பி.சி.க்குரிய இருபது விழுக்காட்டை மூன்று பகுதியாகப் பிரித்து முதல் பிரிவாகிய வன்னியருக்கு 10.5, இரண்டாம் பிரிவில் சீர்மரபினர் உட்படக் கிட்டத்தட்ட தொண்ணூறு சாதிகளுக்கு ஏழு, மூன்றாம் பிரிவில் ஏறத்தாழ இருபது சாதிகளுக்கு 2.5  எனப் பங்கிட்டு வழங்கினர். இதில் எம்.பி.சி. பொது என்று எதுவும் இல்லை. அப்பிரிவில் உள்ள சாதிகளை மூவகையாகப் பிரித்து ஒவ்வொரு பிரிவுக்கும் இத்தனை என்று வழங்கியதால் இதைப் பங்கீடு என்று சொல்கிறேன். ஒரே ஒரு கல்வியாண்டு மட்டும் இது நடைமுறையில் இருந்தது. அதன்பின் இதற்கு உச்சநீதமன்றம் தடை விதித்துவிட்டது.

இப்பங்கீடு வன்னியருக்குப் பயன் தருகிறதா இல்லையா என்பதைப் பற்றி விவாதங்கள் உள்ளன. ஏற்கனவே எம்.பி.சி.க்கு இருக்கும் இருபது விழுக்காட்டில் வன்னியர்கள் 10.5 விழுக்காட்டுக்கும் மேல் இடம்பெற்றுள்ளனர் எனச் சில புள்ளிவிவரங்கள் வெளியாகின. அதன் மூலம் 10.5 என்பது வன்னியர்களுக்குப் பாதிப்புத்தான் என்னும் வாதம் வைக்கப்பட்டது. அப்புள்ளிவிவரத்தைத் தி.மு.க. அரசு திட்டமிட்டு வெளியிட்டுத் திசை திருப்ப முயல்கிறது எனவும் விவாதம் சென்றது. நீதிமன்றம் தடை விதிக்கும் முன் 2021 – 2022ஆம் கல்வியாண்டு மட்டும் 10.5 + 7 + 2.5 என்னும் பங்கீட்டின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தினோம்.  அந்த அனுபவத்தில் சிலவற்றைச் சொல்ல முடியும்.

தமிழ்நாட்டில் குறிப்பிட்ட பகுதியில் ஒருசாதியினர் அடர்த்தியாகப் பரவி வாழ்வதை அறிவோம். அவ்வாண்டு  வன்னியருக்கான 10.5 விழுக்காடு பல படிப்புகளில் முதல்நாள் சேர்க்கையிலேயே நிறைவு பெற்றுவிட்டது. நாமக்கல் மாவட்டத்தில் பரமத்தி வேலூர், மோகனூர் உள்ளிட்ட சில பகுதிகளில் வன்னியர் தொகை கூடுதல். ஆகவே அடுத்தடுத்த நாட்களில் அம்மாணவர்களைச் சேர்க்க முடியவில்லை. ஆனால் சீர்மரபினர் உட்பட்ட சாதிகளுக்கான ஏழு விழுக்காட்டில் ஒருமாணவர்கூடச் சேரவில்லை. அதற்குரிய இடங்கள் அப்படியே இருந்தன.  வன்னியர் அதிகம் வாழும் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டக் கல்லூரிகளிலும் இதே பிரச்சினை என நண்பர்கள் மூலம் அறிந்தேன். சில கல்லூரிகளில் பெற்றோர்கள் போராட்டம் நடத்தியதாகவும் தகவல் வந்தது.

ஏழு விழுக்காட்டில் இருந்த காலியிடங்களில் உடனடியாகப் பிற பிரிவு மாணவர்களைச் சேர்க்க முடியாது. அதற்குரிய மாணவர்களுக்காகக் காத்திருக்க வேண்டும். இறுதியாகத் தான் மாற்றம் செய்து சேர்க்கலாம். அதற்குக் கிட்டத்தட்ட இருமாதம் ஆகும். இடம் கிடைக்காத மாணவர்கள் அதுவரை பொறுத்திருப்பர் என்று சொல்ல முடியாது. இருபது சாதிகளைக் கொண்ட 2.5 விழுக்காடு அம்மாணவர்களுக்கு நன்மையாக அமைந்தது. நாவிதர், வண்ணார், குயவர், போயர், ஒட்டர் முதலிய சிறுபான்மை இடைச்சாதிகளைக் கொண்ட தொகுப்பு அது. வழக்கமாக அம்மாணவர்களுக்கு ஓரிரு இடம் கிடைப்பதே கஷ்டமாக இருக்கும். வன்னியர் மாணவர்களுடன் போட்டியிட்டு அவர்கள் இடம் பெற வேண்டும். இப்போது அந்தப் பிரச்சினையில்லை. அப்பிரிவிலிருந்து வந்த மாணவர்களுக்கு எல்லாம் இடம் கிடைத்துச் சேர்ந்தனர்.

இந்த நடைமுறை அனுபவத்திலிருந்து நான் இருமுடிவுக்கு வந்து சேர்ந்தேன். இந்த ஒதுக்கீட்டுப் பலன் முழுமையாக மக்களுக்குப் போய்ச் சேர வேண்டும் என்றால் மாணவர்கள் கல்விக்காக இடம்பெயர வேண்டும். பெற்றோர் அதற்குத் தயாராக இருக்க வேண்டும். வெளியூருக்குப் போனால் தம் மகன், மகள் கெட்டுப் போய்விடுவார்கள், காதலித்து வேறு சாதியில் மணம் செய்து கொள்வார்கள் என்னும் பயத்திலிருந்து விடுபட வேண்டும். அப்படி இடம் பெயர்ந்து செல்ல அவர்களுக்குக் கல்வி வாய்ப்புகளை அறிவித்துத் தூண்டுவது அரசின் வேலை. அதற்கு ஒற்றைச் சாளர முறை பெரிதும் உதவும். கலந்தாய்வுக்குச் செல்லும் நாமக்கல் மாணவர் ஒருவர் மதுரை, தேனி மாவட்டத்தில் உள்ள கல்லூரி ஒன்றைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பு வரும். திருவண்ணாமலை, வேலூரிலிருந்து வரும் மாணவர் நாமக்கல், கோவைப் பகுதிக் கல்லூரியையோ விருதுநகர், திருநெல்வேலிப் பகுதிக் கல்லூரியையோ தேர்வு செய்யலாமே. ஒருபகுதியில் ஒரே சாதியினர் அடர்ந்து வாழ்வதால் பெறும் ஆதிக்கம், அதிகாரம் இப்படிக் கல்விக்காகவும் வேலைக்காகவும் இடம்பெயர்ந்தால்தான் உடையும்.

சாதி அடர்த்தி குறைவது சாதியவாதிகளுக்கு வேண்டுமானால் கெடுதலாக இருக்கலாம்.  அரசியல்வாதிகளுக்கு நல்லது. ஒவ்வொரு மாவட்டத்திலும் சாதி பார்த்துச் செயலர்களை நியமிக்க வேண்டியதில்லை. சாதி பார்த்து வேட்பாளர்களை நிறுத்த வேண்டியதில்லை. எத்தனையோ வகையில் நன்மைகள் உண்டு. எம்.பி.சி. இடஒதுக்கிட்டைப் பங்கிட்ட அதே ஆண்டு ஒற்றைச் சாளர முறைச் சேர்க்கையையும் அரசு கொண்டு வந்திருந்தால் அது சிறப்பாக அமைந்திருக்கும். ஒரு திட்டத்தைக் கொண்டு வரும்போது நடைமுறைச் சிக்கல்களை யோசித்தும் எதிர்காலப் பயன்களைப் பரிசீலித்தும் அதனுடன் தொடர்புடையவற்றில் சில மாற்றங்களைச் செய்து அமல்படுத்த வேண்டும். நம் அரசுகள் அப்படிச் செய்வதில்லை. கலைக்கல்லூரி மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீட்டின் பலன் மக்களுக்கு முழுமையாகப் போய்ச் சேர வேண்டுமானால் ஒற்றைச் சாளர முறை அவசியம் என்பது என்னுள் வலுப்பட்டது.

இரண்டாம் முடிவு சாதிவாரிக் கணக்கெடுப்பு நல்லது என்பது. மக்கள் தொகையின் அடிப்படையில் இடங்களைப் பிரித்து வழங்கிவிட்டால் ஒருவருடையதை இன்னொருவர் பறித்துக்கொள்ளுதல் என்னும் குற்றச்சாட்டு இல்லாமல் போகும். சாதியற்றோர் எனத் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புவோருக்கும் சாதிமறுப்புத் திருமணம் செய்து கொண்டோருக்கும் குறிப்பிட்ட விழுக்காடு இடஒதுக்கீடு வழங்குவதும் சாதிவாரிக் கணக்கெடுப்பில் சேர்க்க வேண்டிய அம்சமாக இருக்க வேண்டும்.

வி: கல்வி, வேலைவாய்ப்புகளில் உங்களுக்கு இடஒதுக்கீடு பயன்பட்டதா? அதுசார்ந்த அனுபவத்தைச் சொல்லுங்கள்.

பெமு: நான் கொங்கு வேளாளர் சாதியில் பிறந்தவன். பிறந்தபோது இச்சாதி முற்படுத்தப்பட்ட பிரிவில் இருந்தது. இடஒதுக்கீட்டுப் பிரிவில் வரவில்லை. 1975ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் கலைஞர் கருணாநிதியால் பிற்படுத்தப்பட்ட பிரிவில் சேர்க்கப்பட்டது. அது நடைமுறைக்கு வரச் சில ஆண்டுகள் எடுத்துக்கொண்டது  என நினைக்கிறேன். 1980 – 1981ஆம் கல்வியாண்டில் நான் பத்தாம் வகுப்பு முடித்தேன். அப்போது என்னைப் போன்றவர்களை எல்லாம் பிசி சான்றிதழ் வாங்கிக் கொடுக்கச் சொல்லி எஸ்.எஸ்.எல்.சி. புத்தகத்தில் ‘பிசி’ என்று பதிவு செய்தனர். அப்போதுகூட அதன் பலன் என்னவென்று எனக்குத் தெரியாது. ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் இளங்கலை படித்தபோது விவரம் இல்லாததால் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்காமல் விட்டுவிட்டேன். இரண்டாம் ஆண்டு விண்ணப்பித்து உதவித்தொகை பெற்றேன். இளங்கலையில் இரண்டாண்டு, முதுகலையில் இரண்டாண்டு, எம்.பில். படிப்பில் ஓராண்டு என ஐந்தாண்டு பிசி மாணவர்களுக்கான உதவித்தொகை பெற்றேன்.

ஐந்தாண்டு உதவித்தொகை கிடைத்தது பிசி பிரிவில் இடம்பெற்றதால்தான். தந்தை இறந்து தாயின் உழைப்பில் கல்வி கற்க வேண்டிய நிலை இருந்ததால் உதவித்தொகை எனக்குப் பெரிதும் பயன்பட்டது.  மற்றபடி கல்வி, வேலை இரண்டிலும் பிசி இடஒதுக்கீடு எனக்குத் தேவைப்படவில்லை. குறைவான மதிப்பெண் எடுத்தவர்களே தமிழ் இலக்கியப் படிப்புக்கு வரும் நிலை இருந்தது. அதிகம் பேர் சேராத படிப்பும்கூட. பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றுத் தமிழ் இலக்கியம் படிக்கச் சேர்ந்ததால் எனக்குப் பொதுப்பிரிவிலேயே இடம் கிடைத்தது. முதுகலை, எம்.ஃபில். படிப்புகளிலும் பொதுப்பிரிவிலேயே இடம் பெற்றேன். பல்கலைக்கழக மானியக் குழு நடத்தும் இளநிலை ஆய்வாளர் உதவித்தொகைக்கான தேர்விலும் பொதுப்பிரிவிலேயே தேர்ச்சி பெற்றேன். அதன் மூலம் முனைவர் பட்டம் பெற்றேன். ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அரசு கல்லூரி ஆசிரியர் பணிக்குத் தேர்வானதும் பொதுப்பிரிவில் தான்.

பொதுப்பிரிவில் பணிக்குத் தேர்வானதால் எனக்கு இழப்புத்தான். மதிப்பெண் அடிப்படையில் இடஒதுக்கீட்டில் தேர்வாகிறோம். அதிக மதிப்பெண் பெற்றதால் பொதுப்பிரிவில் எனக்கு வேலை கிடைத்தது. பிசி பிரிவில் என்னை விடக் குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் அப்பிரிவுக்கான இடஒதுக்கீட்டில் தேர்வானார்கள். பணியாளர்களின் பணிமூப்புப் பட்டியலைத் தயாரிக்கும்போது சுழல்முறையை (Roster system) அரசு பின்பற்றும். அதன் வரிசை முறையில் OC, BC, MBC, SC, ST  என ஒவ்வொரு பிரிவிலும் ஒவ்வொருவர் இடம்பெறுவர். பெண்கள், மாற்றுத் திறனாளரும் அவரவருக்குரிய வரிசையில் வருவர்.  நான் OC பிரிவில் தேர்வானதால் அதில்  முன்னிருந்தோர் பெயர்கள் முடிந்து என் பெயர் பின்னால்தான் வருகிறது. என்னைவிடக் குறைந்த மதிப்பெண் பெற்று BC ஒதுக்கீட்டில் சேர்ந்தோரில் பலர் பணிமூப்பில் எனக்கு முன்னால் வந்துவிடுகின்றனர். அதுவே நான் BCயில் தேர்வாகியிருந்தால் அப்பிரிவில் முதலில் வந்திருப்பேன். பணிமூப்பிலும் முன்வரிசையில் இடம்பெற்றிருப்பேன். OC பிரிவில் சேர்ந்தால் உதவித்தொகை கிடைக்காது என்று மாணவர்கள் பயப்படுவார்கள் என்று முதலில் சொன்னேனே, அந்த நிலை இங்கே இருக்கிறது. OC பிரிவில் தேர்வானதால் BC பிரிவைச் சேர்ந்த எனக்கு அதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

அதிக மதிப்பெண் வாங்கியவருக்குத் தண்டனை போல அல்லவா இது அமைகிறது? அதிக மதிப்பெண் பெற்றும் பணிமூப்பில் பின்னால் போனதால் துறைத்தலைவர் ஆகும் வாய்ப்பு பெரிதும் தள்ளிப் போயிற்று.  முதல்வர் பதவி உயர்வும் முதல் பட்டியலில் வரவில்லை. இரண்டாம் பட்டியலில்தான் என் பெயர் வந்தது. ஓராண்டு பதவி உயர்வு எனக்குத் தள்ளிப் போயிற்று. சுழல்முறையில் பணிமூப்புப் பட்டியல் தயாரிக்கும் போது OC, BC, MBC, SC, ST  என்று தயாரிக்கக் கூடாது. FC, BC, MBC, SC, ST என்றுதான் அமைய வேண்டும். OCஇல் தேர்வான ஒருவர் BCஆக இருந்தால் சுழல்முறைப் பட்டியலில் அவரை BCஆகக் கொண்டு அந்த வரிசையில் வைக்க வேண்டும். OCஇல் தேர்வான ஒருவர் SC அல்லது STஆக இருந்தால் சுழல்முறைப் பட்டியலிலும் அவர் அந்த வரிசையில்தான் இடம்பெற வேண்டும். இது சாதாரணத் தர்க்கம் உள்ளவருக்கே பிடிபடும் விஷயம். ஆனால் OCயை விளக்குவதில் உள்ள குழப்பம் காரணமாக இது நேர்கிறது. OC என்றாலே other caste என்று மனதில் பதிய வைக்கப்பட்டு FCயை மட்டுமே அதில் பொருத்திப் பார்க்கும் நிலை இன்று வரை மாறவில்லை என்பதற்கு இது சான்று.

என் நண்பர்கள் இதற்காக நீதிமன்றத்திற்குச் செல்லலாம் என்று சொன்னார்கள். துறைத்தலைவர், முதல்வர் எல்லாம் நிர்வாகம் சார்ந்தவை. அவற்றில் எனக்கு விருப்பம் இல்லை என்பதால் அதை அப்படியே விட்டுவிட்டேன். நான் மட்டுமல்ல, இதனால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். தேர்வாணையம் மூலம் தேர்ச்சி பெறும் எல்லாப் பணிகளுக்கும் பணிமூப்புப் பட்டியல் இப்படித்தான் தயாரிக்கப்படுகிறது. சிலருக்கு இந்த நுட்பம் புரிந்தும் பேசாமல் இருக்கிறார்கள். பலருக்கு இது புரிவதேயில்லை. இடஒதுக்கீட்டில் சரிசெய்ய வேண்டிய சிறுசிறு பிரச்சினைகளில் இதுவும் ஒன்று. பொதுவில் சரிசெய்ய வேண்டிய விஷயம் என்பதால் இங்கே பதிவு செய்கிறேன்.

வி: உங்கள் குடும்பத்தினர் (மனைவி, பிள்ளைகள்) ஆகியோர் இடஒதுக்கீட்டால் பெற்ற பலன் எத்தகையது?

பெமு: ஒவ்வொருவரும் தாம் இடஒதுக்கீட்டால் பெற்ற பலன்களைப் பொதுவில் பதிவு செய்ய வேண்டும்; அப்போதுதான் இடஒதுக்கீட்டுக்கு எதிரான கருத்துக்கள் மாறும் என்னும் எண்ணத்தில் இக்கேள்விக்குப் பதில் சொல்கிறேன். இடஒதுக்கீட்டுப் பயன் பெற்று வேலைக்கு வருவோர் பலரும் அதற்கு எதிராகப் பேசுவதைப் பார்க்கிறேன்.  ‘கோட்டாவில் வந்தவர்’ என்றெல்லாம் இழிவாகப் பேசுவதையும் கண்டிருக்கிறேன். எல்லோரும் ஏதோ ஒரு கோட்டாவில் தான் வந்திருப்பர் என்னும் தர்க்கம்கூட அறியாமல் பேசுகிறார்கள். பொதுப்பிரிவையும் இடஒதுக்கீட்டின் ஒருகூறு என்றே காண்கிறேன். அதை நோக்கி எல்லோரும் நகரும் காலத்தில் இடஒதுக்கீடு முடிவுக்கு வந்துவிடும். ஒருவகையில் நம் இலக்கைச் சுட்டுவது அல்லவா அது? சரி, என் குடும்பத்திற்கு வருவோம்.

என் மனைவி எம்.பி.சி. பிரிவைச் சேர்ந்தவர். அதற்குரிய உதவித்தொகை உள்ளிட்ட பலன்களைப் பெற்றவர். அரசுப் பள்ளி ஆசிரியராக எம்.பி.சி. பொதுப்பிரிவில் தேர்வானார். பின்னர் அரசு கல்லூரிப் பேராசிரியராக வந்த போது எம்.பி.சி. பெண்கள் பிரிவில் தேர்வானார். எங்களுடையது சாதி மறுப்புத் திருமணம் என்பதால் பிள்ளைகளுக்கு எந்தச் சாதியைக் கொடுப்பது என்பதில் குழப்பமாக இருந்தோம். சாதிச் சான்றிதழ் வாங்காமல் விட்டுவிடலாம் என்றும் நினைத்தோம். சாதியற்றவர்கள் என்று அடையாளம் இருக்கட்டும் எனக் கருதினோம். அவர்கள் வளர வளர கருத்து மாற்றம் ஏற்பட்டது. சாதிப் பற்று இல்லாமல் வளர்த்தால் போதும். இடஒதுக்கீட்டு மூலம் அவர்களுக்குக் கிடைக்கும் பலன்களை ஏன் தடுக்க வேண்டும் என்றும் தோன்றியது. சாதிச் சான்றிதழ் வாங்கவில்லை என்றால் முற்படுத்தப்பட்டவர் எனக் கொண்டு பொதுப்பிரிவில் மட்டும் போட்டியிட முடியும்.

பொதுவாகச் சாதிமறுப்புத் திருமணம் செய்துகொள்வோர் தம் பிள்ளைகளுக்கு பெற்றோர் இருவரில் யாராவது ஒருவர் சாதியைக் கொடுக்கலாம் என்று அரசு விதி உள்ளது. பொதுவாகத் தந்தையின் சாதியையே கொடுப்பது வழக்கம். ஒருவகையில் அது ஆணாதிக்கத்தின் வெளிப்பாடுதான். நாங்கள் தாயின் சாதியைப் பிள்ளைகளுக்குக் கொடுக்கலாம் என்று முடிவு செய்தோம். பி.சி. பிரிவை விட எம்.பி.சி. பிரிவுக்குக் குறைவான விழுக்காடுதான் இடஒதுக்கீடு உள்ளது என்றாலும் எம்.பி.சி.யில் போட்டி குறைவாக இருக்கும் என்று சுயநலமாகவும் யோசித்தோம். பிள்ளைகளுக்குப் பலன் கிடைக்க வேண்டும் என்பதில் பெற்றோர் சுயநலமாக இருக்கலாம். நாங்கள் இருவரும் அரசு ஊழியர்கள் என்பதால் பிள்ளைகளுக்கு உதவித்தொகை பெறவில்லை. மகள் பொதுப்பிரிவிலேயே உயர்கல்வி வாய்ப்பைப் பெற்றார். மகன் தான் விரும்பிய கல்லூரியைப் பெறுவதற்கு எம்.பி.சி. ஒதுக்கீடு உதவியது. இருவரும் அரசுப்பணிக்குச் செல்லவில்லை. அதனால் அதில் இடஒதுக்கீட்டுப் பிரச்சினை எழவில்லை. 

                                                                                                                   தொடரும்

விஜயகுமார்

வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.  தற்போது டோக்கியோ அறிவியல் நிறுவனத்தில் (Institute of Science, Tokyo) ஆய்வாளராக உள்ளார். நவீனத் தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் உள்ளவர். தமிழிலிருந்து மலையாளத்துக்கு கவிதைகள் மொழிபெயர்த்துள்ளார்.


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

1 Comment உரையாடலுக்கு

  1. உள் ஒதுக்கீடு அருமையான விளக்கம்.

உரையாடலுக்கு

Your email address will not be published.

கடந்தவை

திரட்டு

சேகரம்

Go toTop

Don't Miss