விட்டு விடுதலையாகி- சுதா ஸ்ரீனிவாசன்

பாவம், எங்கொழந்தை! நெறைய பட்டுட்டான். நாலு வருஷத்துல இது என்னோட ஏழாவதோ எட்டாவதோ முயற்சி. இந்த தடவை நான் விட்டுட மாட்டேன். இதுவரை அவன் பிடிச்சு நின்னுட்டான். ஆமாம், பிடிச்சுதானே நின்னிருக்கான் இத்தன வருஷமா! எப்போலேர்ந்து? அவனுக்கு நாலு வயசு இருக்குமா அப்போ?

வாணி மருத்துவமனை காத்திருப்போர் அறை. “இல்ல, எப்பவும்போல சாப்டுட்டு பேசிண்டிருந்தா. சின்னவன் கிட்ட மாத்ஸ் போர்ட் எக்ஸாம்ல நீ சென்டம்தான், நான் இருக்கேன்னு சொல்லிட்டு படுத்துக்கப் போனா. நான் பத்து தேச்சிண்டிருந்தேன். தொப்புன்னு சத்தம் கேட்டு ஓடிவந்தேன். கீழ விழுந்திருக்கா. என்னப்பான்னா எப்பவும் போல கையமத்தி ஒண்ணுமில்ல ஒண்ணுமில்லன்னா. பாத்தா நெத்தில அடிபட்டிருக்கு, ரத்தம் கொட்டறது…” மீண்டும் மீண்டும் கூறும் அலுப்பு குரலில் விஜி கைபேசியில் யாருக்கோ சொல்லிக்கொண்டிருந்தாள்.

“சக்ரபாணி அட்டண்டர் யாரு?”

“நாந்தான்” பாதியில் பேச்சை துண்டித்துவிட்டு எழுந்து ஓடினாள்.

“டாக்டர் கூப்பிடறாரு.”

அறைக்குள் சென்றவளை நாற்காலியில் அமரும்படி கைகாட்டிவிட்டு  டாக்டர் ஒரு ஃபிலிமை பார்த்துக்கொண்டிருந்தார்.

“சக்ரபாணி…”

“எங்கப்பா, டாக்டர்.”

“ஓ!”

“டாக்டர், அப்பாவுக்கு…”

“வேற யாரும் கூட வந்திருக்காங்களா? உங்க அம்மா, சிஸ்டர், ப்ரதர்…”

“இல்ல, டாக்டர். எங்கம்மா போய் ரெண்டு வருஷம் ஆச்சு. அவங்களுக்கு நான் ஒரே பொண்ணு. டாக்டர், அப்பாவுக்கு ஒண்ணும் ஆபத்தில்லையே?”

அவள் குரல் அழுகையை நெருங்கியது.

“லுக். அவர் மூளையில ரத்தம் க்ளாட் ஆயிருக்கு. நீங்க இங்க கூட்டிட்டு வரவே லேட் பண்ணியிருக்கீங்க போலருக்கே.”

“இல்ல, டாக்டர். ராத்திரி பத்து மணி இருக்கும் அவரு விழுந்தப்போ. ஹாஸ்பிட்டல் போற அளவு ஒண்ணும் பெரிசா இல்லன்னுட்டாரு. மருந்து ஏதாவது போட்டு நல்லா ப்ளாஸ்டர் போடு போதும்னாரு. அப்படி பண்ணினதும் ப்ளீடிங் நின்னுடுச்சு. ஆனாலும் பக்கத்துல உள்ள க்ளினிக்குக்கு வற்புறுத்தி கூட்டிட்டு போனோம். அவங்களும் பாத்துட்டு ஒண்ணும் பிரச்சினை இல்லன்னு சொல்லி அனுப்பிட்டாங்க. நடுராத்திரிக்கு மேல எதோ மாதிரி சத்தம் கேட்டுது. நான் எழுந்து பாக்கும்போதே பேச்சு வரலை. கையால என்னவோ ஜாடை காமிச்சாரு. உடனே இங்க கூட்டிட்டு வந்துட்டோம்…”

“ம்ம்…”

“இப்போ எப்படி இருக்காரு, டாக்டர்? நெனவு…”

“ஸீ, ப்ளட் க்ளாட் நல்லா பெருசாவே இருக்கு… ஒரே வழி சர்ஜரிதான். அதுவும் நிச்சயம் சரியாகும்ன்னு சொல்ல முடியாது. சர்ஜரி பண்ணலேனா இப்படியேதான் நெனைவு தெரியாம இருப்பாரு. எவ்வளவு நாளோ, மாசமோ, வருஷமோ… சர்ஜரி பண்ணினா ஒரு வாய்ப்பிருக்கு. அவ்வளவுதான்.”

விம்மலை அடக்கலாம்; கண்ணீரை என்ன செய்யமுடியும்!

“யோசிச்சு சொல்லுங்க. ரொம்ப லேட் பண்ணாதீங்க!”

அவர் அறையை விட்டு வெளியே வரும்போது வாசலில் நுழைந்துகொண்டிருந்த கீதா கண்ணில்பட்டாள். பெரிதாக கேவல் வெடித்தது.

“விஜி, நிறுத்து! இது ஹாஸ்பிட்டல்… சத்தம் பெருசா கேக்கறது” அவளை அணைத்து வெளியே மரத்தடிக்கு இழுத்து வந்தாள் கீதா.

“விஜி, அழாத! என்னாச்சுன்னு சொல்லு!”

“அப்பா… மூளைல க்ளாட்… ஐயோ, ராமா! நான்…”

“ஏய்! நீ இந்த அழுகைய நிறுத்திட்டு ஒழுங்கா விஷயத்த சொல்லப்போறியா இல்லியா?”

“…”

“விஜி, சொல்லுடி! மாமாவுக்கு என்னாச்சு? வாணி ஹாஸ்பிடல், உடனே வான்னு ஃபோன வெச்சுட்ட. இப்பவும் என்னன்னு சொல்லாம அழுதா என்னடி அர்த்தம்? டென்ஷன் பண்ணாதடி!”

“அப்பா விழுந்து தலைல அடி… ப்ளட் க்ளாட்… சர்ஜரி பண்ணணுமாம்…நிச்சயம் சொல்லமுடியாதாம்…”

கோடிட்ட இடங்களை நிரப்பி புரிந்துகொண்ட கீதா “ஏய் லூஸு! அழாதடி! டாக்டர் பொதுவா அவர் வயச வெச்சு சொல்லியிருப்பார். அவருக்கு உங்கப்பாவை பத்தி தெரியாதில்லியா! சர்ஜரி நடக்கட்டும். அவர் கண்டிப்பா சரியாயிடுவார். அவர் என்னிக்காவது எதுலயாவது தோத்துப்போயிருக்காரா? அவர் அசல் ஃபைட்டர்!” என்றாள்.

வாடியம்மா, வா. அவன் எப்பவும் எல்லாத்தையும் தாங்கி தாண்டி வரணும்! விக்ரமாதித்தன் வேதாளத்த தூக்கற மாதிரி உன் சிநேகிதிய முதுகுல தூக்கிண்டே அலையணும். அவ சொகுசா சவாரி பண்ணிண்டே இருக்கணும்! போறும்! நெறைய பண்ணிட்டான். எல்லாருக்கும். இன்னும் என்ன கொழந்தையா? அவ பாட்டை இனிமே அவ பாத்துக்கட்டுமே! நாலு கழுத வயசாச்சு. இன்னும் அப்பா அப்பான்னு அவனையே நச்சரிச்சிண்டு! ஹூம்… அவனெல்லாம் தானே கையால கரணம் போட்டு முன்னுக்கு வரல? அந்த கதையெல்லாம் உன் சிநேகிதிக்கு நன்னா தெரியும்தானே!

லக்ஷ்மிக்கும் ஜெகன்னாதனுக்கும் வாக்குவாதம் வராத நாளொன்று இருந்ததில்லை. ஆனால் அன்று நாக்கு கொஞ்சம் நீண்டுவிட்டதோ? சிந்திய சொல்லை அவளும் எடுக்கவில்லை; அவரும் துடைத்து எறியவில்லை.

“நீ கஷ்டப்பட்டுண்டு என் கூட இருக்கணும்னு யாரும் சொல்லல. வேண்டாட்டா விட்டுட்டு போகலாம்.”

சொல்லில் மட்டுமின்றி பார்வையிலும் நஞ்சு ஊற, அது நொதித்து வழிந்த கணம் மகனெனும் செல்வத்தை மட்டும் கைக்கொண்டு வெளியேறினாள். கால்களில் அலை வந்து மோதியதில்தான் கடற்கரைக்கு வந்துவிட்டதை உணர்ந்தாள்.

இப்படியே நீரில் இறங்கிவிடலாமா? ‘இவ்வளவுதானா நீ?’ என்று நீரில் தோன்றியது ஜெகன்னாதனின் ஏளனம்.

வெறிபிடித்தவள்போல திரும்பி நடந்தாள். அவள் உடலின் உறுப்பென உடன்வந்த குழந்தை கல் தடுக்கி விழுந்தான். பிடித்திருந்த கை இழுபட தானும் தடுமாறி நின்றாள். கால் முட்டிகளின் ரத்தத்தால் கிளம்பிய அழுகை.

“ம்ம்!”

அந்த உறுமல் கண்ணீரை உட்செலுத்தியது.

பார்த்தசாரதி பெருமாள் சந்நிதியில் சென்று நின்றாள்.

“அம்பி, சத்தியம் பண்ணு!”

“அம்மா!”

“என்னைவிட்டு ஒருபோதும் போகமாட்டேன்னு எனக்கு சத்தியம் பண்ணிக்குடு.”

நீட்டிய தாயின் கையை பற்றிக்கொண்டான்.

பாவம்! நாலு வயசுல என்ன புரிஞ்சுதோ! ஆனா, அவன் பண்ணின சத்தியத்தை கடைசிவரை மீறலையே!

மேற்கு மாம்பலத்தில் தன் தம்பியின் வீட்டிற்கு சென்றுசேர்ந்தாள்.

“வா, அக்கா! டேய் பயலே, வா, வா, வா! ஐயோ! கொழந்த கால்ல என்ன ரத்தம்? என்னாச்சு? ஏன் இப்படி வேர்கறது ஒனக்கு?”

தம்பியின் மனைவி கொடுத்த நீரை ஒரே மூச்சில் குடித்துவிட்டு “சீமா, நான் மொத்தமா வந்துட்டேன்” என்றாள்.

“ஏய்! வாய்பாத்துண்டு நிக்கறியே! கொழந்த கால்ல அடிபட்டிருக்கு, பாரு. உள்ள கூட்டிண்டு போ. போயி எதாவது மருந்து கிருந்து போடு, போ.”

“அவள ஏண்டா வெரட்டற? எப்படியும் எல்லாருக்கும் தெரியத்தான போறது.”

தம்பியிடம் சொல்லி அருகிலேயே ஒரு வீடு பார்த்துக்கொண்டாள், ஒண்டுக்குடித்தனம். கணவனை பிரிந்துவந்தவளுக்கு அது கிடைத்ததே அதிர்ஷ்டம்தான்.

“எதுக்குக்கா தனியா போற? எங்களோடையே இரேன்! கொஞ்சமோ நெறையவோ வாடகை தேவையில்லாத செலவுதான.”

“இல்ல, சீமா! இப்ப நீ வான்னு சொல்ற பாரு, இந்த மரியாதைய கடைசிவரை காப்பாத்திக்கணும். அதுதான் ரெண்டு பேருக்கும் நல்லது. ஆனா, உன் உதவி எனக்கு கண்டிப்பா வேணும்.”

இரண்டு வீடுகளில் சமையல். பின்னர் தையல். ஓய்ந்த வேளையில் இருக்கவேயிருக்கிறது அப்பளம், வடாம்.

மாதம் பத்து ரூபாய் தருவதாக ஜெகன்னாதன் தன் தங்கையின் மூலம் சொல்லியனுப்பினார். மறுத்துவிட நினைத்தவள் மகனின் பொருட்டு ஏற்றுக்கொண்டாள். அவனது கல்விக்கன்றி அதிலிருந்து ஒரு பைசா அவள் எடுத்ததில்லை. பட்டினியில் வயிறு கூவினாலும் அந்த உண்டியல் ஒருநாளும் உடைந்ததில்லை. மகன் வயிறு வாடாமல் பெரும்பாலும் பார்த்துக்கொள்வாள். முடியாது போனால்…

“அம்பி, மாமா ஆத்துக்கு போனா முகம் வாடாம இருக்கணும். சாப்பிடச்சொன்னா சாப்பிட்டுட்டுதான் வந்தேன்னு சொல்லணும். தெரிஞ்சுதா?”

மருமகன் எவ்வளவு திறமையாக நடித்தாலும் தமக்கையை அறியாதவரா சீமா!

“அக்கா, நீ பண்றது உனக்கே நியாயமா? அவன் கொழந்தை.”

அவள் கடக்கத் துணிந்தவற்றின் முன் இந்த கேள்வி ஒரு பொருட்டா!

பள்ளிக்கல்வி முடிந்தவுடன் வேலைக்குச் செல்ல துடித்த மகன் தாய் சொல்லை மீறாது கல்லூரி சென்றான். ஆனால் உள்ளூறிய லக்ஷ்மியின் உதிரம் அவனை நான்கு குழந்தைகளுக்கு டியூஷன் எடுக்கவைத்தது.

என்ன கருத்தான கொழந்த எம்புள்ள! என்ன அறிவு! என்ன குணம்! எல்லாரையும் அரவணச்சுண்டு போகத்தெரிஞ்சவன். பெரியவா, சின்னவான்னு ஒரு வித்யாசம் கெடையாது. இப்படி நெனவில்லாம கெடக்கானே – இல்லாட்டா இந்த ஆஸ்பத்திரியே கலகலன்னு ஆயிடாதா!

“அம்பி…”

….

“அம்மாடா. நான் பேசறது கேக்கறதா?”

“அம்மா, நெஜமா நீதானா? உன் குரல் கனவுல மாதிரி இருந்தது!”

“கனவுமில்ல, கத்தரிக்காயுமில்ல. நானேதான். உன்ன கூட்டிண்டுபோகத்தான் வந்தேன். வா, கெளம்பு!”

“அம்மா! விஜி பாவம்மா! கொழந்த! நான் இல்லாட்டா அவளால சமாளிக்க முடியாது. அவளே இப்போதான் கொஞ்சம்கொஞ்சமா ஒரு நிலைக்கு வந்திண்டிருக்கா.”

“டேய், அவ பிள்ள பெரியவன் காலேஜ் முடிக்கப்போறான்! அவ இன்னும் கொழந்தையா?”

“இல்லம்மா, அவ கல்யாணம் ஆகி பட்டதெல்லாம்…”

“அந்தக் கல்யாணம் நீ பண்ணின பைத்தியக்காரத்தனம். ஏண்டா, போயும் போயும் உங்க அத்தை குடும்பம்தானா கெடச்சுது உனக்கு சம்பந்தம் பண்ண?”

“அம்மா, அலமேலுவ நீதானே எனக்கு பண்ணிவெச்ச! அவ அண்ணா பிள்ளைக்குத்தான நான் பொண்ணு குடுத்தேன்…”

“டேய் டேய் பைத்தியக்காரா… அதுவும் இதுவும் ஒண்ணாடா? ஒனக்கு  பொண்ணு தேடறச்சே வேற அமையல. புருஷன விட்டுட்டு தனியா வந்தவ கிட்ட சம்பந்தம் பண்ண யோசிக்கற காலம் அது. அலமேலுவுக்கும் ஒரு வரனும் தகையல. அதான் உங்க அத்தை உனக்கு பொண்ணு குடுத்தா. விஜிக்கு பண்ணறச்சே அப்படியா நெலமை? நீயும் நாலு காசு சேத்து வீடுவாசல் கட்டிண்டு நன்னா செயலா இருந்த. அவளும் அழகும் அறிவுமா கிளியாட்டமான்ன இருந்தா. அவளப் போயி…”

“இல்லம்மா…”

“சரி, விடு. இனிமே அதப் பேச வேண்டாம். அவதான் ஒரு வழியா அதவிட்டு வெளில வந்துட்டாளே! சுந்தரை பண்ணிண்டு முத்து முத்தா ரெண்டு பிள்ளைகளும் ஆச்சு. இன்னும் என்ன?”

“நீ ரொம்ப சாதாரணமா ஒரு வரில சொல்லிட்ட, அவ பட்டதெல்லாம்…”

சக்ரபாணியின் கேவல் ஒலி கேட்டு நர்ஸ் பதறி ஓடிவந்தாள்.

“தாத்தா, என்னாச்சு? வலிக்குதா? ஏன் அழறீங்க? தாத்தா, தாத்தா!”

“……”

இண்டர்காமில் அவள் அழைக்க டாக்டர் வந்தார்.

சக்ரபாணியின் சகல உறுப்புகளும் தம் வேலையை சரியாகச் செய்வதை அவருக்கு பொருத்தியிருந்த கருவிகள் அறிவித்துக்கொண்டிருந்தன.

 “நார்மலாதான இருக்காரு? ஏன் சிஸ்டர் அப்படி பதறிப்போய் கூப்பிட்டீங்க?”

“இல்ல, டாக்டர். திடீர்ன்னு கேவினாரு. கண்ணுல தண்ணி வந்துச்சு. கூப்பிட்டா கண்ணு அசைஞ்சுச்சு…”

“ஓகே! நானே வர்றதாதான் இருந்தேன். இப்பதான் அவரு பொண்ணு வந்து சர்ஜரிக்கு கன்ஸென்ட் குடுத்தாங்க. பேஷண்ட ஓ.டி.க்கு ரெடி பண்ணுங்க. ஷீலா சிஸ்டர், சர்ஜரி டீம் இன்னும் 15 நிமிஷத்துல ஓ.டி.க்கு வரணும். ப்ளட் பாங்க்ல கூப்பிட்டு…” ஆணைகள் பிறப்பித்தவாறு அவர் வெளியேறினார்.

நான்கு மணி நேரமாகும் என்று சொன்ன அறுவைசிகிச்சை முடிய ஆறு மணி நேரத்திற்கும் மேலே ஆனது. வெளியே வந்த டாக்டரின் களைத்த முகம் அறுவைசிகிச்சையின் தீவிரத்தை உணர்த்தியது. பதைத்து நின்றிருந்த விஜியையே அவர் ஆசுவாசமடையட்டும் என்று காத்திருக்கச் செய்தது.

“சர்ஜரி நல்லவிதமா முடிஞ்சதும்மா. சரியாயிடுவாருன்னுதான் நெனைக்கிறேன். மயக்கம் தெளிஞ்சு அவருக்கு நெனவுவர வரைக்கும் சி.சி.யு.ல அப்ஸர்வேஷன்லதான் வெச்சிருப்போம். எப்படியும் ஏழெட்டு மணி ஆகும். அப்பறம் ஐ.சி.யு.க்கு மாத்துவோம். அதுவரைக்கும் யாரும் பாக்க முடியாது. நீங்க இப்போ வீட்டுக்கு போகலாம். அவசியமிருந்தா ஃபோன் பண்ணுவாங்க.”

நான்தான் சொன்னேனே என்ற பார்வையோடு கீதா “இப்பவானும் அந்த கண்ணுல இருக்கற குழாய மூடறியா? பிடிச்சு வெச்சிருந்தா சென்னைக்கு நாலு வருஷம் தண்ணிப்பஞ்சம் இல்லாம இருந்திருக்கும்” என்றாள்.

வீட்டிற்கு போகச்சொன்ன கீதாவின் யோசனையை தீர்மானமாக மறுத்துவிட்டு அவள் வற்புறுத்தலுக்காக கேண்டீனில் அவள் ஆர்டர் செய்ததை என்னவென்றே உணராமல் சாப்பிட்டாள்.

சுந்தரையும் கீதாவையும் அனுப்பிவிட்டு காத்திருப்போர் அறையில் அமர்ந்தவள் மனம் “அப்பா, சீக்கிரம் முழிச்சுக்கோப்பா” என்ற ஜபிக்க ஆரம்பித்தது.

ம்ஹூம், இது சரி வராது. இவளாலதான் எம் புள்ள, என் பேச்சை என்னிக்குமே தட்டாத எம் புள்ள, நாலு வருஷமா நான் கூப்பிட கூப்பிட வராம இருக்கான்! அவன் பட்டதெல்லாம் காணாதா? இந்தோ, இப்போ பாரு!

“அம்பி, என்ன முடிவு பண்ணின?”

“அம்மா, விஜி தவிக்கறாம்மா…”

“அப்போ ஒனக்கு அவதான் ஒசத்தி இல்லியா? எனக்கு குடுத்த வாக்குகூட ஒனக்கு பொருட்டில்ல அப்படித்தான? பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லுன்னு சும்மாவா சொல்லியிருக்கா! சரிதான், நான் போறேன்! இனிமே நான் வரவேமாட்டேண்டா! போ!”

“அம்மா, போகாதம்மா! நில்லு! நான் உன் வார்த்தைய என்னிக்காவது…”

“அப்பா, சீக்கிரம்…” ஃபோன் ஒலியில் விஜியின் சொற்கள் அறுபட்டன.

***

சுதா ஸ்ரீனிவாசன்

இலக்கிய நூல் பிழைதிருத்துநர். சிறுகதை ஆசிரியர். பொதுத்துறை காப்பீட்டு நிறுவனத்தில் பணிசெய்து விருப்ப ஓய்வு பெற்றவர், கோவையில் வசிக்கிறார்.


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

உரையாடலுக்கு

Your email address will not be published.

கடந்தவை

திரட்டு

சேகரம்

Go toTop